Monday, May 16, 2016

நெருப்பின் நிழல் - சிறுகதை

நெருப்பின் நிழல்
தூக்கம் என்பது மரணத்தைவிட புனிதமானது. கோடி கொடுத்தாலும் சில பாவிகளுக்கு அது கிட்டாப் பொருள்.  அன்றைய நாளின் மொத்தப் பிரச்சனைகளை நாலால் வகுத்து, அதற்கு ஈவு என்ன என்று தெரிந்த பிறகுதான் எனக்கு தூக்கமே வரும். இன்றைக்கு நடுச்சாமம் வரையில் அதுவும் வரவில்லை.. 

வழுக்கைத் தலையில் தெய்வீக எண்ணை பூசி, அதன் பிறகு போனால் போகிறது என்று முளைத்த நான்கு முடிபோல கீற்றாகத்தான் எனக்கு தூக்கமே வந்தது. அதுவும் நடுச் சாமத்திற்கு பிந்தி.. இது தெரியாமல் என் மனைவி என்னை அரைத் தூக்கத்தில் எழுப்பித் தொலைத்தாள்.

பாதித் தூக்கத்தில் தட்டி எழுப்பி, கடுப்பேற்றும் இந்த அசிங்கம் பிடித்த அநாகரீகத்தை இந்த மனித குலம் என்றைக்கு விடுமோ தெரியவில்லை. பணம், பழைய சோறு, இன்ன பிற அத்யாவசியங்களுக்காக, பகல் முழுவதும் யுத்தம் செய்துவிட்டு வந்து, இரவில் படுத்தால் தூக்கத்திற்கு பதில் கெட்ட கனவுகள்தான் வருகிறது. அதுவும், வாழ்வதற்காக மனிதர்களோடு நடத்தும் போராட்டம் என்பது செந்நிற ஆப்பிளை சாக்கடையிலிருந்து தேடி எடுத்து தின்பதற்கு சமமானது.  இந்த துப்புக் கெட்ட வாழ்கையில், தூங்குவதே தப்பென்பது போல தட்டி எழுப்பினால் கொந்தளிக்காமல் என்ன செய்ய.. நான் கோபத்தோடு மனைவியை முறைத்தேன்.

ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் அவள் நள்ளிரவுப் பிசாசு போல பயங்கர அழகோடு இருந்தாள். இது சொப்பனமல்ல. நிஜம்! நான் எரிச்சலோடு 'என்னடி?" என்றேன். யாரோ கதவைத் தட்டுகிறார்களாம்.. மனைவி திகில் படம் பார்த்த பாவனையோடு சொன்னாள்.

மணி பார்த்தேன். அதிகாலை நான்கு. புத்தம் புதிய கெட்ட வார்த்தை ஒன்றை கண்டுபிடித்து கதவு தட்டியவனை திட்டவேண்டுமென்ற ஆத்திரத்தோடு நான் படுக்கையிலிருந்து எழுந்தேன். அப்பொழுதுதான் அதி முக்கிய விவகாரம் ஒன்று நினைவுக்கு வந்தது. இடுப்பில் எனக்கு லுங்கி இல்லை. அதே நேரத்தில்தான் மின்சாரமும் போய்த் தொலைந்தது. ஜீரோ வாட்ஸ் பல்ப் எரியாமல் போனால் உலகமே இருளாகிவிடும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் உலகம் இருளாகத்தான் இருந்தது. பாதி தூக்கத்தில் எழுப்பிய அந்த புண்ணியவான், அதைவிட மோசமான ஒரு செய்தியை சொன்னான். 

'சென்னப்பா செத்துப் போயிட்டாருடா..!" 

நானும் என் மனைவியும் இருப்பது கும்மிருட்டில். சொல்லப்பட்ட செய்தி மரணச் செய்தி. சொன்னவன் என் நண்பன். இறந்து போனது எங்கள் தெருவில் இருக்கிற கடைசி வீட்டுக்காரர். நான் பீதியோடு சுற்றிலும் பார்த்தேன். வீடு அச்சமூட்டுகிற இருளோடுத்தான் இருந்தது. மனிதர்களின் எதிர்காலம் போல!

சென்னப்பாவை எனக்கு நன்றாகத் தெரியும். 'ஹாய் அங்கிள்"  என்று நலம் விசாரித்தால் 'டேய், இன்னைக்கு குளிச்சியா?" என்று கேட்கிற முரட்டு மனிதர் அவரை கிழவர் என்று சொல்ல முடியாது. வயது அறுபதுக்கு மேல் இருக்கலாம். கண்டிப்புக்கும் கறார்த்;தனத்திற்கும் பேர் போனவர். அதிகாலை வாக்கிங், மொட்டை மாடியில் உடற்பயிற்சி, மதியத்தில் செய்தித் தாள், ஓய்வு நேரத்தில் சமூக சேவை என்று அவர் வாழ்க்கை மிக சிக்கனமானது.

சென்னப்பா ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த தெருவுக்கு குடி வந்தார். வந்த முதல் காரியமாக அவர் செய்தது, தெருவில் இருக்கிற பெண்களை கண்டபடி திட்டியதுதான். அவர் பைத்தியமோ, குடிகாரனோ கிடையாது. ஆனாலும், ஜீரணிக்க முடியாத அளவுக்கு மிக மோசமாக திட்டினார். பிரத்தியார் வீட்டுப் பெண்களை நாகரீகம் இல்லாமல் ஒரு அந்நிய மனிதன் திட்டியது எனக்கு அதிர்ச்சியாக இல்லை. அவர் திட்டியதில் ஒரு வார்த்தை கூட கெட்ட வார்த்தை கிடையாது. நாக்கை பிடுங்கி நாய்க்கு போடலாம் என்ற அவமானத்தை தருகிற நாசுக்கான வார்த்தைகள். 

புருசன் திட்டினாலே வாசலில்; நின்று பஞ்சாயத்து கூட்டுகிற பெண்கள், சென்னப்பா திட்டியதைக் கேட்டு அமைதியாகத்தான் இருந்தார்கள். காரணம் அவர் பேச்சில் இருந்த நியாயம். மண்ணும் மனிதர்களும் மனசும் உடம்பும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று அவர் இரண்டு நாள் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தார். இன்று எங்கள் தெரு சுத்தமாக இருக்கிறதென்றால், அதற்கு காரணம், சென்னப்பா. ஒழுக்கத்தின் திரு உரு. அப்படிப்பட்ட சென்னப்பாதான் இப்பொழுது இறந்து போனார்.

இருட்டில் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. மரண வீட்டிற்கு முக்கால் டவுசரோடு போவது மரபு கிடையாது. லுங்கியைத் தேடி எடுக்கலாம் என்றாலும் எனக்கு அச்சமாக இருந்தது. ஆத்திரத்தில் தேடி எடுத்தால் கைக்கு லுங்கிதான் வருமென்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவசரத்தில் உடுத்திக்கொண்டு துக்க வீட்டிற்குப் போய், பாவாடையோடு நின்று அவமானப்பட நான் தயாராக இல்லை.

என் மனைவி எப்பொழுதுமே என்னைவிட புத்திசாலிதான். நான் இருளில் நின்று யோசிப்பதற்குள் அவள் மெழுகுவர்த்தியை பொறுத்தி, லுங்கியும், சட்டையும் என் கையில் கொடுத்திருந்தாள். நான் சென்னப்பாவை பார்ப்பதற்காக அவசரமாக ஓடினேன்.

சென்னப்பாவின் வீட்டிற்கு முன்பாக சிலபேர் டார்ச் அடித்தபடி நிற்பது தெரிந்தது. துக்கம் என்று தெரிந்தால் மனிதர்கள் இருட்டைக்கூட பொருட்படுத்துவதில்லை. ஓடி வந்துவிடுகிறார்கள். வீட்டை நெருங்க நெருங்க எனக்கு சென்னப்பாவை நினைத்து வருத்தமாக இருந்தது. போர் வீரன் போல மிடுக்காக இருந்த மனிதர். இப்படி பொசுக்கென்று செத்துப்போனது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சென்னப்பா இங்கு வருவதற்கு முன்பு எங்கிருந்தார், அவர் என்ன வேலை செய்தார், அவர் பூர்வீகம் எது என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. கம்பீரத்தையும், மிடுக்கையும் வைத்து அவரை சிலபேர் ராணுவ வீரர் என்றார்கள். சிலபேர், ரிட்டயர்டு கான்ஸ்டபிள் என்றார்கள். இன்னும் சிலர் கிளை வங்கியின் துப்பாக்கிப் போலீசு என்றார்கள். விளையாட்டு வாத்தியார், வாட்ச்மேன், கண்டக்டர், கத்திக்கு சானை பிடிக்கிறவர் என்று ஆள் ஆளுக்கு ஒன்று சொன்னார்கள். எல்லாம் ஒரு யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டவைதான். அவர் என்ன தொழில் செய்து ஓய்வு பெற்றார்; என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவர் தமிழ், உருது, மலையாளம,; இந்தி என்று ஏகப்பட்ட மொழிகள் பேசியது எனக்குத் தெரியும். சற்று முன்புவரை தெருவை மிரட்டுவதையே தொழிலாக வைத்திருந்த சென்னப்பா இப்பொழுது செத்துப்போய்விட்டார் என்பது மட்டும்தான். இப்பொழுது அவரைப் பற்றி தெரிந்த உறுதியான தகவல்.

சென்னப்பா ஒன்றும் சிங்கமோ, கடுவன் பூனையோ கிடையாது. ஆனாலும் அவர் முகத்தைக் கண்டால் எல்லோரும் அச்சப்படத்தான் செய்தார்கள். தவறு செய்கிறவர்களை அவர் கத்தி காட்டி மிரட்டுவதுமில்ல, தண்டிப்பதுமில்லை. பதிலுக்கு, நீதி போதனைகளை நிறையச் சொல்லி, தவறு செய்கிறவர்களை சாகடிப்பது எப்படி என்று அவருக்கு தெரிந்திருந்தது. அவர் போதனைக்கு பயந்து திருந்தியவர்கள் தெருவில் பலபேர். அதில் நானும் ஒருவன்.  அதைச் சொல்வதில் எனக்கு வெட்கம் உண்டு. சொன்னால், நான் செய்த அற்பத் தவறும், அதனால் நான் பட்ட அவமானமும் வெளிச்சத்திற்கு வரும்.

சென்னப்பா வீதியில் நடந்தால் விளையாடுகிற பிள்ளைகள் வீட்டிற்கு ஓடிப்போய் வீட்டுப் பாடம் படிப்பார்கள். ஒழுக்கம் என்று வந்துவிட்டால் பிள்ளைகளும் பெரியவர்களும் அவருக்கு ஒன்றுதான். அடுத்தவன் பிள்ளையை அஞ்சி நடுங்க வைக்கிற சென்னப்பா, தன் பிள்ளையை என்ன செய்திருப்பார் என்று எல்லோரும் அச்சத்தோடுதான் யோசித்துப் பார்த்தோம். 

அவருக்கு ஒரே ஒரு மகன் என்று சொல்லக் கேள்வி. யாரும் பார்த்ததில்லை. அவனும் அப்பாவின் உறுதியான வாழ்க்கை முறையால் கவரப்பட்டு,  தன்; பத்தொன்பதாவது வயதில் தேச சேவை செய்வதற்காக ராணுவத்தில் சேர்ந்துவிட்டான் என்று சிலபேர் சொன்னார்கள். சென்னப்பாவின் டிசிப்ளின் கொடுமை தாங்காமல்தான் அவன் மிலிட்டரிக்கு ஓடிப்போனான் என்றும் சிலர் சொன்னார்கள். எல்லாம் உத்தேசமான தகவல்கள்தான். சென்னப்பா முரட்டு ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர் என்பது மட்டும் உறுதியான தகவல்.

ஒருத்தன் ஏழையாக இருக்கலாம், பசியோடு இருக்கலாம், பல துன்பங்களை அனுபவிக்கலாம். எந்த மனிதன் எப்படி இருந்தாலும், அவன் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் மீறக் கூடாது என்பதில் சென்னப்பா உறுதியாக இருந்தார். அவர் விரைப்பான சல்யூட்டுக்கு மட்டுமல்ல கத்தி போன்ற கறார்த்தனத்திற்கும் பேர் போனவர். டிசிப்ளின், டிக்னிட்டி என்று அவர் பேச ஆரம்பித்தால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு, ரத்தம், வியர்வை அத்தனையும் காது வழியாக நிச்சயம் வந்துவிடும். சென்னப்பா முரட்டுக் கிழவர் மட்டுமல்ல, பக்கம் நெருங்க முடியாத முள் மரமுமாகவும் இருந்தார். அப்படிப்பட்ட சென்னப்பாதான் இப்பொழுது இடிச் சத்தம் கேக்காமலேயே இறந்து போயிருக்கிறார்.

வீட்டிற்கு முன்பாக அவசரமாக விறகு போட்டு நெருப்பு கொளுத்தியிருந்தார்கள். மரண வீட்டின் அடையாளம். மரணச் செய்தியை என் வீட்டிற்கு வந்து சொன்ன நண்பன், வேப்பெண்ணையை முகர்ந்து பார்த்தவன் போல முகத்தை வைத்துக்கொண்டு நின்றான். 'பாத்துட்டியாடா?" என்று கேட்டேன். நான் வந்த பிறகு பார்க்கலாமென்று காத்திருப்பதாய் சொன்னான். இருவரும் ஒன்றாக சென்னப்பாவின் வீட்டிற்குள் போனோம். 

எமர்ஜென்சி வெளிச்சத்தில் ஆணும் பெண்ணுமாக உள்ளே கூடியிருப்பது தெரிந்தது. சென்னப்பா தனது படுக்கையில் படுத்திருந்தார். சற்று முன்புதான் அவர் இறந்துபோனார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எழுந்து அதட்டிவிடுவாரோ என்று நினைக்கத் தோன்றுகிற அதே முரட்டு முகம். 

சென்னப்பாவின் மனைவி நெஞ்சில் கை வைத்து விசும்பிக்கொண்டிருப்பது தெரிந்தது. சில பெண்கள் அவளுக்கு ஆறுதல் சொல்கிற வார்த்தையும் காதில் கேட்டது. சென்னாப்பாவை பற்றியாவது ஒன்றிரண்டு தகவல்கள் தெருவில் இருப்பவர்களுக்கு தெரியும். அவர் மனைவியைப் பற்றி சொல்லவே வேண்டாம். கடவுள் கறுப்பா சிவப்பா என்பதைக் கூட கண்டுபிடித்து சொல்லிவிடலாம். ஆனால் சென்னப்பா மனைவி பற்றி அந்த கடவுளுக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான். 

சென்னப்பாவின் மனைவி எப்பொழுதாவது ஒரு முறை வாசலில் நின்று உலகத்தை அச்சத்தோடு பார்ப்பாள். வாரத்திற்கு ஒரு முறை காய்கறி கடைக்குப் போவாள். சூரியனுக்கு முன்பாக வாசலில் கோலம் போடுவாள். அவசியமிருந்தால் பக்கத்து வீட்டுக்காரர்களோடு பத்து நாளைக்கு ஒரு முறை பேசுவாள். வேறு வழியே இல்லை என்ற நிலவரத்தில்தான் மனிதர்களைப் பார்த்து சிரிப்பாள். மற்ற நேரமெல்லாம் சென்னப்பா சொல்கிற வேலையை செய்தபடி வீட்டிற்குள்ளேயே இருப்பாள். சென்னப்பா மனைவி ரொம்ப திமிர் பிடிச்சவ என்று என் மனைவி என்னிடம் சொல்லியிருக்கிறாள். எதற்காக அப்படிச் சொன்னாள் என்று நான் கேட்கவில்லை. சென்னப்பா மனைவி இப்பொழுது அழுதுகொண்டிருப்பதை மட்டும் நான் வினோதமாக பார்த்தேன். அவள் அழுகிறாளா, இல்லை புருசன் முகத்தை உற்றுப் பார்த்து ஆராய்ச்சி செய்கிறாளா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. 

நண்பனிடம் ரகசியமாக கேட்டேன். 'நல்லாத்தானேடா இருந்தார்.. என்னாச்சி?" 

ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனதாக தகவல் சொன்னான்.  கண்டிப்பும் கறாருமாக வாழ்கிறவர்களுக்கு அது வரவேண்டிய ஆபத்துதான். எனக்கு இறந்து போன சென்னப்பாவை பார்க்க அய்யோ பாவமென்றிருந்தது. 

சென்னப்பா தனக்கென்று சில தீர்மானமான வாழ்க்கை வரைமுறைகளை வைத்திருந்தார். தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும், மூன்று வேலை சாப்பிட வேண்டும், இரவு நன்றாக உறங்க வேண்டும், காலையில் எழுந்ததும் முதலில், தேசத்திற்கும் பிறகு பார்க்கிற அத்தனை பேருக்கும் சல்யூட் வைக்க வேண்டும் என்று அவர் எப்பொழுதும் சொல்வார். அந்த சென்னப்பா பார்க்கிறவர்களுக்கெல்லாம் சல்யூட் அடிப்பதில் எனக்கோ, என் நண்பனுக்கோ எந்த அட்சேபமும் இருந்ததில்லை. ஆனால் அவர் எங்களையும் சல்யூட்; அடிக்கச் சொல்லியிருக்கிறார். ஒருவிதத்தில் அந்த கோபம் சென்னப்பா மீது எனக்கு எப்பொழுதுமே உண்டு..

ஒழுக்கம் என்பது ஒருவிதமான தொத்து நோய். தானும் ஒழுக்கமாய் இருந்துகொண்டு அடுத்தவர்களையும் ஒழுக்கமாக இருக்கச் சொல்லி சாகடிக்கிற பழக்கம் வழிவழியாக பெரியவர்கள் மூலமாக பரவிக்கொண்டேதான் இருக்கிறது. கண்ட நேரத்தில் தின்று, கண்ட நேரத்தில் தூங்கி, கண்ட இடத்திற்கு போய், கால் காசு சம்பாதிக்கிற என் போன்ற தாறுமாறான பிழைப்புக்குச் சொந்தக்காரர்கள் நித்திய கடமைகளை எப்படி தினப்படி சரியாகச் செய்ய முடியும்? காலக் கணக்கிற்கு கட்டுப்படாத அவசர உலகத்தில், வினோத பிழைப்பு நடத்துகிறவனிடம் வந்து, அதிகாலையில் துயில் எழு, நள்ளிரவில் தூங்கு, தேகப் பயிற்சி செய், தெய்வம் தொழு என்று சொன்னால் அது நடக்குமா? ஆனால் அவர் அப்படித்தான் இருந்தார்.. அப்படியே இறந்தும் போனார்.. 

பொழுது விடிந்துகொண்டிருந்தது. மரண வீட்டிற்கான உதவிகளைச் செய்ய அசோசியேசன் மெம்பர்கள் ஆளாய் பறந்துகொண்டிருந்தார்கள். ஆண்டறிக்கையில் எழுதிப்போட நல்ல சந்தர்ப்பம். சென்னப்பாவை படுக்கையிலிருந்து எடுத்து சுவற்றோரம் சார்த்தி உட்காரவைத்து, மாலை போட்டார்கள். தேங்காய் உடைத்து ஊதுவற்றி ஏற்றினார்கள். யாருக்கெல்லாம் தகவல் சொல்ல வேண்டும் என்று சென்னப்பாவின் மனைவியிடம் கேட்டார்கள். பதில் சொல்கிற நிலையில அந்த வயதானவள் இல்லை. நெஞ்சில் கை வைத்து கண்ணீரோடு நின்றவள் நின்றபடியே இருந்தாள். 

எத்தனை காலமாய் ஒன்றாக வாழ்ந்தார்களோ. எத்தனை பாசப் பிணைப்பு இருந்ததோ. இப்பொழுது பொசுக்கென்று அனாதையாகிவிட்டாள். சென்னப்பாவின் மனைவியை பார்க்க எனக்கு அய்யோவென்றிருந்தது.

மற்ற பெண்கள் கால் வலி தாங்காமல் சென்னப்பாவின் பூத உடல் அருகே உட்கார்ந்துகொள்ள, சென்னப்பா மனைவி மட்டும் நின்றபடியே அழுதாள். உட்காரச் சொன்னாலும்; உட்காரவில்லை. 'ஆம்பளைங்களுக்கு முன்னாடி பொம்பளைங்க உட்கார்றது அவருக்கு பிடிக்காது.!" சென்னப்பா மனைவி கண்ணீரோடு சொன்னதும் எனக்கு திகீரென்றது. இது மரியாதையா, மடத்தனமா? செசத்துப்போன சென்னப்பா, இப்பொழுதும் எழுந்து நில் என்று அவளை அதட்டப் போகிறாரா? அச்சத்திற்கும் ஒரு அளவில்லையா?

எதனால் சென்னப்பா மாண்டு போனார் என்று பெண்கள் அவளிடம் விசாரித்தார்கள். தருதலையாய்த் திரிந்த சென்னப்பாவின் மகன் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருக்கிறான். சொத்தில் பங்கு கேட்டு தகறாரு செய்திருக்கிறான். வாய்த் தகறாரு கைத் தகறாராக மாறியிருக்கிறது. சென்னப்பா கன்னத்தில் அடித்திருக்கிறார். அதற்கு அவனும் திருப்பி அடித்திருக்கிறான். எந்த பொருளைக் கொண்டு சென்னப்பாவை அடித்தான் என்பதை என்னால் சொல்ல முடியாது. சொல்வது இறந்து போன சென்னப்பாவிற்கு அவமானம். தகறாரு நடக்கும்போது அவர் மகன் முரட்டு பழைய செருப்பை அணிந்;திருந்தான் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

மகன் அடித்த அவமானம் தாங்காமல்தான் சென்னப்பா நெஞ்சு வெடித்து செத்திருக்கிறார். ஒழுக்கமாய் வாழ்ந்த மனிதருக்கு இப்படியொரு தருதலைப் பிள்ளை பிறந்திருக்க வேண்டாம்தான். என்னதான் சென்னப்பா முரட்டுக் கிழவராக இருந்தாலும் அவர் பேச்சில், நடத்தையில் ஒரு நேர்மை, வாழ்க்கையில் ஒரு கட்டுப்பாடு இருந்திருக்கிறது. பெற்ற மகன் சீர்கெட்டுப் போனால் யாரால்தான் தாங்க முடியும்? 

விடிந்து மணி ஆறு ஆக, சென்னப்பாவின் படுக்கைக்கு பக்கத்திலிருந்த அலாரம் சத்தமெழுப்ப ஆரம்பித்தது. எல்லோரும் அலாரத்தையே விபரீதமாய் பார்த்தோம். இரவு தூங்கப் போவதற்கு முன்பு சென்னப்பா வைத்த அலாரம். அலாரச் சத்தம் கேட்டதும் சென்னப்பா எழுந்துவிடுவாரா? தினமும் வாக்கிங் போகிற பழக்கம் அவருக்கு உண்டு. இப்பொழுதும் பழக்க தோசத்தில் வாக்கிங் போவதற்காக எழுந்துவிடுவாரா? 

நான் மடத்தனமாக யோசித்தபடி, சென்னப்பாவின் முகத்தையே பார்த்தேன். அலாரச் சத்தம் கேட்டு அவர் எழவில்லை, பதிலாக, அவர் மனைவிதான் அதறப் பதற ஓடினாள். ஓடிப்போய் அலாரத்தை நிறுத்தினாள், உள்ளறைக்கு சென்று, ட்ராக் ஷ_ட், வாக்கிங் ஸ்டிக், ஜாக்கிங் ஷ_ எல்லாம் கொண்டுவந்து வாசலில் வைத்துவிட்டு, சமையலறைக்குச் சென்று பால் காய்ச்ச ஆரம்பித்தாள். நாங்கள் ஸ்தம்பித்துப் போனோம்.

இறந்து போன சென்னப்பா வாக்கிங் போகப் போகிறாரா? இவள் கொடுத்தால்; அவர் பால் குடிப்பாரா? அந்த முதியவளுக்கு புத்தி பேதலித்துவிட்டது என்றுதான் நான் நினைத்தேன். பல வருசத்திற்கு முன்பே புருசனை இழந்த கிழவி ஒருத்தி, வேதனை தாங்காமல் ஓடிப்போய், சென்னப்பாவின் மனைவியைப் பிடித்துக்கொண்டு கதறினாள்: 'அடியேய். உன் பருசன் செத்துப் போயிட்டான்டி.. யாருக்காக இத செய்யறே" 

'என்ன விடுங்கோ! அலாரம் அடிச்சதுமே அவருக்கு எல்லாம் தயாரா இருக்கணும். பால் குடுக்க கொஞ்ச லேட்டானாலும் கோச்சிப்பார். மூணு நாள் சாப்பிட மாட்டார். ஒழுங்கா பேசமாட்டார். நாப்பத்தி ஏழு வருசமா இதத்தான் பண்ணிட்டு இருக்கேன். இன்னைக்கு ஒருநாள் பண்ணிட்டு போறேன் விடுங்கோ!" 

தலையில் அடித்துக்கொண்டு அழுத சென்னப்பாவின் மனைவியை நான் அதிர்ந்து போய் பார்த்தேன். ஒரு பெண் இப்படியும் செய்வாளா? இதுவும் நடக்குமா? எந்த மரண வீட்டிலும் நான் காணாத காட்சி. இறந்த பிறகும் ஒரு மனிதனின் அதிகாரமும், அச்சமூட்டலும் முரட்டு மிருகம் போல ஒரு பெண்ணை மிரட்டுகிறது என்றால் அது என்ன வகையான ஒழுக்கம்? இறந்தும் இப்படியென்றால், இருக்கிற காலத்தில எத்தனை வேதனை அனுபவித்திருப்பாள்? கண்டிப்பு, கறார்த்தனம் என்கிற பெயரில் ஒரு உயிரை காயப்படுத்திருக்கிறார். இத்தனை நாள் இந்த பெண் இருந்தது நான்கு சுவர் வீட்டுக்குள் அல்ல. கொடும் நரகத்தில்.. 

அர்த்தமற்ற மனிதர்களின் வழக்கத்தை பழக்கத்தை எல்லாம் ஒரு பெண் மீது பாறை போல ஏற்றி வைத்து நரகத்தின் சாற்றை அவளுக்கு குடிக்கக் கொடுத்த சென்னப்பாவின் இறந்து போன முகத்தை இன்னும் அதிர்ச்சியோடு பார்த்தேன். சென்னப்பா இப்போதுதான் இறந்து போனார். ஆனால், உடன் இருந்த ஒரு அப்பாவி ஜீவனை எப்போதோ கொன்றிருக்கிறார். சென்னப்பாவிற்கான நெருப்பு வெளியே எரிந்து கொண்டிருந்தது. அவர் மனைவியோ, கட்டளைககுக கட்டுப்பட்ட எந்திரம் போல, என்ன செய்கிறோம் என்ற பிரங்ஞை சிறிதும் இல்லாமல் அவருக்கான இறுதிப் பாலை அழுதபடி ஆற்றிக் கொண்டே இருந்தாள்.. 
முற்றும்.