Sunday, August 21, 2016

வாழைக் குமரியும் வயதான எருமையும்.


தேவகி அரசாங்க மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தலைசிறந்த குழந்தைப் பேறு மருத்துவர் என்று பெயரெடுத்தவர்;. அரசாங்க சேவையில் இருக்கிறவரையில் தனியாக கிளினிக் வைத்து காசு பார்க்காதவர். ஓய்வுக்கு பிறகு, சும்மாயிருக்க சங்கடமாயிருக்கிறதென்று குட்டி மருத்துவமனை ஆரம்பித்தார். ஆரம்பித்த வேகத்திலையே இழுத்து மூடவும் செய்தார்.

காய்க்சலுக்கு வெறும் பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கிற மருத்துவர்களை யார் மதிப்பார்கள்? வெயிலில் நின்றால் வேர்க்கிறது என்று சொன்ன நிமிடமே, ரத்தத்தில் ஆரம்பித்து கண,; காது, வாய், மூக்கு என்று சகல உறுப்புகளையும் தனித்தனியாக பரிசோதித்து, சிலப் பல ஆயிரங்களை லவட்டிக்கொண்டு கடைசியில் ஒன்றும் இல்லை என்று சொன்னால்தான் திறமையான டாக்டர் என்று ஒப்புக்கொள்வார்கள். தேவகிக்கு பொய் சொல்லி பொருள் தேடுவதில் விருப்பமில்லை. நேர்மையாக, உண்மையாக, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். இது ஒன்று போதாதா வெகுஜனம் ஒருத்தியை தூக்கி குப்பைக் கூடையில் போட. இதற்கு மேல் இருந்தால், கூட்டுகிற ஆயாவுக்கு கூட சம்பளம் தர முடியாது என்ற நிலவரம் வந்ததும்;, கிளினிக்கை மூடிவிட்டார்.

இனிமேல் பணத்தின் பின்னால் மூச்சிறைக்க ஓடக் கூடாது என்று முடிவெடுத்து, ஜனப் புழக்கம் அதிகமில்லாத கிராமத்தில் அந்திமக் காலத்தை கழிக்க முடிவெடுத்தார்;. குக்கிராமத்தில் தங்கினால் சுத்தமான காற்றைச் சுவாசிக்கலாம் என்று வந்தவருக்கு, மக்களின் கிறுக்குத்தனங்களும், நம்பிக்கைகளும், அதிர்வெடி மருத்துவங்களும் பார்க்கப் பார்க்க கலவரமாய்; இருந்தது. வந்தது அரதப் பழைய கிராமம். நல்ல பசுமையான மரங்களும், பனை மரத்தில் பேய் இருக்கும் என்று நம்பும் ஜனங்களும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இங்கே யாரும் படித்த மருத்துவரை நம்புகிற மாதிரி தெரியவில்லை. மருத்துவரைவிட பூசாரியே சிறந்த வைத்தியர் என்று நம்புகிறார்கள். சீத பேதியோ, டெங்குக் காய்ச்சலோ... முதலில் வேப்பிலையும், விபூதியும்தான் கண் கண்ட மருந்து. அதன்;பிறகு, வயிறு பானை போல வீங்கி, பைத்தியம் பிடித்து பரலோகம் போய்விடுவோம் என்ற பயம் வந்தால்தான் போனால் போகிறதென்று தேவகியைத் தேடி வருகிறார்கள். அது கூட தெய்வக் குற்றம் ஆகிவிடக் கூடாதென்று மஞ்சள் துணியில் தப்பு காணிக்கை போட்டு கட்டி வைத்துவிட்டுத்தான் வருகிறார்கள்.

~இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு ஊரா?| என்று மெத்தப் படித்தவர்கள் அப்பாவி ஜனங்களை அறிவுகெட்ட மூடர்கள் என்று திட்டவும் கூடும். அது முறையல்ல. படித்த அறிவாளிகள் டாக்டர் கை விட்ட பிறகு கடவுளைத் தேடி ஓடுவார்கள். இவர்கள், கடவுள் கை விட்ட பிறகு டாக்டரை தேடி ஓடுகிறார்கள். முன் பின்னாக இருந்தாலும் செய்வதென்னவோ ஒன்றுதான். ஊருக்கு வந்த புதிதில் சுகாதாரம், தடுப்பூசி, சத்து மாத்திரைகள், சரிவிகித உணவு என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஒரு கட்டத்தில், காசுக்கு லேக்கியம் விற்கிற ரோட்டோர வியாபாரி போன்ற உணர்வு ஏற்பட்டதால் அறிவு சொல்வதை அறவே நிறுத்திக்கொண்டார்;. முடியாமல் வருகிறவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதோடு சரி. வந்தது ஓய்வெடுக்கத்தானே.

இப்பொழுதெல்லாம் தேவகி பழைய சித்த வைத்திய நூல்களை படித்து பொழுதை போக்கிக்கொண்டிருந்தார். அதுவும் ஒரு சுவாரஸ்யம்தான். வாத வைத்திய யோக ஞான நுணுக்கங்களை அறிந்துகொள்ள பல நூல்களை தேடிப் படிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களே.. தொட்டால் சிணுங்கி, தும்பை, திகைப்பூண்டு, நிலவேம்பு, ஊமத்தை, அவரை ஐந்து, கள்ளி எட்டு, முள்ளி நாலு இவற்றையெல்லாம் பூமிப் பாடமாக மண்ணில் புதைத்து வைத்து.... கொர்.. கொர்..
பழுப்பு புத்தகத்தை படிக்கும்போதே தேவகிக்கு தூக்கமாய் வந்தது.. மருந்து செய்தவற்குள் மண்டை குழம்பிவிடும் போல இருந்தது. ~நூல் அறியாமல், வயித்தியப் பயிற்சி இல்லாமல் வைத்தியனென்று பேர் சொல்லி திரிகிறவன் மீளா நரகத்திற்கு ஆளாவான்...| என்று அறைத் தூக்கத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது வீட்டு வாசலுக்கு ஒரு பெண்ணும், வயதான ஒரு பெரியவரும் வந்து நின்றார்கள். அட, நாம டாக்டருக்கு படிச்சிருக்கோமில்ல...?

தேவகி ஆர்வமாய் மருத்துவம் பார்க்கத் தயாரானார்;. வந்த முதியவன், வயிற்றுக்குள் நாய்க்குட்டி வளர்ப்பவன் போல இடைவிடாமல் இருமிக்கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு ஒன்றுமில்லையாம்.

'மூக்கிருந்தா தும்மலும் இருமலும் வரத்தான் செய்யும். இவள காட்டிட்டு போலான்னுதான் வந்தேன். இவளப் பாருங்க" என்று கிழவன் சொன்னதும், தேவகிக்கு என்னவோ போல இருந்தது. உடம்பு நிறைய ரோகமிருந்தாலும் வக்கனைக்கும் வாய்ப் பேச்சுக்கும் குறையிருப்பதில்லை. ஓயாத இருமல் காசநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். இதை கிழவன் ஒப்புக்கொள்ள மாட்டான். முதியவனை கூடத்தில் அமரவைத்து, பெண்ணை தனியறைக்கு அழைத்துச் சென்றார்;.

'உட்காரும்மா.. உடம்புக்கு என்ன பண்ணுது?"

ஆரம்பத்தில் பேந்தப் பேந்த விழித்து, பிறகு மெல்ல பேச ஆரம்பித்தாள். “எனக்கு கல்யாணமாயி மூணு வருசம் ஆகுது டீச்சர்,”

நான் டீச்சர் இல்ல. டாக்டர்.”

திருத்திச் சொல்லியும் அவள் டீச்சர் என்றே அழைத்தாள். சின்ன வயதுப் பெண்ணை. பள்ளிக்கூடத்தில் இருந்து தரதரவென்று இழுத்துப் போய் கல்யாணம் செய்து வைத்தார்களோ என்னவோ. சிவப்பாய் தெரிகிற, கண்ணாடி போட்ட, பருத்திப் புடவை கட்டிய பெண்களை டீச்சர் என்று நினைக்கிற அப்பாவித்தனம் அவளிடம் தெரிந்தது.

'என்னோட புருசன் என்னை மலடி, கட்டாந்தரை, குட்டிச் சுவருன்னு திட்டறாரு டீச்சர். இன்னமும் என் வயித்தில ஒரு புழு பூச்சி தங்கல. கொழந்தை இல்லேன்னு என்ன ரெண்டு முறை அடிச்சி அப்பா வீட்டுக்கு தொறத்திட்டாரு..." சொல்லும்போதே, சின்னதாய் கண்களில் கண்ணீர் கசிந்தது. தேவகிக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.

கிராமத்திலேயே இருந்துகொண்டு கோழிப் பண்ணை வைப்பது, மாடு வளர்ப்பது, மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்வது என்று காலம் தள்ளுபவர்கள், பெண்ணுக்கு கல்யாணம் செய்வதையும் விவசாயம் என்றுதான் நினைக்கிறார்கள். விதைத்தால் உடனே விளைய வேண்டும். சின்னப் பெண்ணிற்கு கல்வி முக்கியம் என்று இவர்களிடம் யார் சொல்வது?

'இப்பல்லாம் என் புருசன் கொழந்தை இல்லேங்கற துக்கத்தில ரொம்ப குடிக்கிறாரு. தெனமும் அடிக்கிறாரு. நானும் கும்பிடாத சாமியில்ல. போகாத கோயில் இல்ல. கடவுள் கண்ண தொறக்கலையே.." வேதனையை பாட்டு போல ஒப்பிக்கிறாள்.

நெற்றியில் மஞ்சள், குங்குமம், விபூதி, விளக்கு மை என்று வானவில் போல பொட்டு வைத்திருக்கிறாள். தாலியில் ஒரு தாயத்து, கையில் ஒரு தாயத்து என்று கட்டியிருக்கிறாள். எத்தனை தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு வந்திருக்கிறாளோ? அவள், அழுதபடி, 'எனக்கு கொழந்தையே பொறக்காது, தோசமிருக்குன்னு சொல்லிட்டாங்க டீச்சர். அதான் பயமா இருக்கு!" என்றதும் தேவகிக்கு பற்றிக்கொண்டு வந்தது!

'அதெல்லாம் மூட நம்பிக்கை. நீ நல்ல ஆரோக்கியமா இருக்கே. கண்டிப்பா பொறக்கும்."

'இல்ல.. டீச்சர். பொறக்காது. சின்ன வயசில நான் தெரியாத்தனமா கோழி முட்டைய ஒடைச்சிட்டேன். அதான் பாம்பு தோசம் பிடிச்சிடிச்சி. அதான் கொழந்தை பொறக்காதுன்னு சொல்றாங்க..."

தேவகிக்கு தலை கிர்ரென்று சுற்ற ஆரம்பித்து. உலகத்தில் லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் தினம் தினம் கோழி முட்டையை உடைத்து ஆம்லெட் போட்டு தின்றபடிதான் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் குழந்தை பிறக்கவில்லையா? கோழிமுட்டையை உடைத்தால் குழந்தை பிறக்காதென்று எந்த கூமுட்டை சொல்லியிருப்பான்?

'அய்யோ... அப்படி சொல்லாதீங்க. சாமி குத்தம் ஆயிடும். அப்புறம் உங்களையும் தோசம் பிடிச்சிக்கும். வீட்டுக்குள்ள பாம்பு வரும். ராத்திரியில தூங்க முடியாது. கெட்ட கனா வரும். நாக கன்னி பொல்லாத சாமி. அவ சாபத்துக்கு ஆளானா, வாழ்க்கையே நரகமாயிடும்..." அவள் விரிந்த கண்களோடு, அசட்டுத்தனமாய் மிரட்டிக்கொண்டிருந்தாள். தேவகிக்கு திக்கென்;றிருந்தது. ஒருவேளை இவள் சொல்வது தீக்கோழி முட்டையாக இருக்குமோ? இல்லை வான்கோழி முட்டையா? அதைக்கூட மக்கள் அவித்து தின்பார்களே. தோசம் எதனால், எப்படி வந்தது என்று விசாரிக்க, அவள் சொன்ன கதையோ, அதிர்ச்சிக்கு பதிலாக சிரிப்பைத்தான் வர வைத்தது.

புற்றின் மீது பாம்பிற்காக வைக்கப்பட்ட கோழி முட்டையை, சின்ன வயதில் கை தவறி உடைத்துவிட்டாளாம். அதை பார்த்த பூசாரி பதறிப்போய், உனக்கு பாம்பு தோசம் பிடிக்கும், கல்யாணம் பண்ணிகிட்டாலும் கொழந்தையே பொறக்காதென்று கோபத்தில சாபம் விட்டானாம். அன்று சொன்னதை இன்றும் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறாள், அதை பொய் என்று நிரூபிக்க இவளுக்கு கொழந்தை பிறக்க வேண்டும். ஆனால் இவளோ, பார்க்கவே பூஞ்சையாக இருந்தாள். உடம்பின் வெளுப்பைப் பார்த்தால் ரத்த சோகை இருக்கலாம் போல தெரிந்தது.

'காலையில் சாப்பிட்டு வந்தீயா?"

'இல்ல. விரதம் இருக்கேன். கொழந்தை பொறக்கணுன்னா நாப்பது நாள் விரதமிருந்து, மண் சோறு சாப்பிட்டா..."

'வயிறு உப்பி வாந்திதான் வரும். கொழந்தை பொறக்காது..." தேவகிக்கு பற்றிக்கொண்டு வந்ததுசரியாக சாப்பிடாமல் நோஞ்சானாகப் போன ஒரு பெண்ணால் எப்படி தாயாக முடியும்? நாப்;பது நாள் பட்டினி கிடந்து, பரிகாரமென்ற பெயரில் ஒரு வண்டி மண்ணை தின்றுவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறாள். மண் தின்றால் நோய்தான் அண்டும். குழந்தை எப்படி பிறக்கும்?

'இல்ல டீச்சர். எனக்கு சாமி மேல நம்பிக்கை இருக்கு. எனக்கு இப்போ பத்தினைஞ்சி நாள் தள்ளிப் போயிருக்கு. நீங்க வேணா சோதிச்சி பாருங்க. நான் கர்ப்பங்கறது உண்மையாதான் இருக்கும்"

தேவகி தலையை சிலுப்பிக்கொண்டு விழிக்க ஆரம்பித்தார்;. ஒருவேளை இவள் கும்பிட்டது சக்தியுள்ள கடவுளோ? மூன்று வருடமாய் இல்லாமல் இப்பொழுது எப்படி? விஞ்ஞானத்திற்கு அப்பார்ப்பட்டது எத்தனையோ நடக்கிறது. தேவகிக்கு ஆர்வமாகிவிட்டது. அந்த பெண்ணை புறக்கடைக்கு பாட்டில் கொடுத்து அனுப்பிவிட்டு. கர்ப்பச் சோதனை செய்வதற்காக, வீட்டில் இருந்த துணைப் பெண்ணிடம் டெஸ்ட் கிட்டை எடுத்துவரச் சொன்னார்;.

துணைப் பெண், தேவகியிடம் கிசுகிசுத்தாள்: 'அம்மா.. அவதான் வௌரமில்லாம பேசறான்னா நீங்களுமா? அவ கர்பமா இருக்கமாட்டாம்மா? நாப்பது நாள் விரதம் இருந்தேன்னு சொன்னாளே. இவ பட்டினி கெடந்து, பாய் கூட போடாம கட்டாந்தரையில தனியாதான் படுத்திருப்பா. அப்புறம் எப்படிம்மா? கடவுளே நெனைச்சாலும் புருசன் இல்லாம புள்ளை பொறக்கறது நடக்காதும்மா.."

'அதானே.. அதெப்படி நடக்கும்?" தேவகி புத்தி நொந்து தலையில் அடித்துக்கொண்டார்;. என்றாலும் ஆர்வக் கோளாறில் பரிசோதனையும் செய்து பார்த்தார்;. வெட்டாத கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா என்று எட்டிப் பார்க்கிற முட்டாள்தனம்தான். பரிசோதனை முடிவு என்னவோ பூஜ்ஜியமாகத்தான் இருந்தது. அவள் கர்ப்பமில்லை. முதலில் கோபமும், பிறகு அந்த பெண்ணை நினைத்து பரிதாபமும் வந்தது. நம்பிய எல்லா தெய்வமும் அவளை கை விட்டுவிட்டதே. இதை அவளிடம் எப்படிச் சொல்வது?

'நான் கர்ப்பமா இருக்கேனா டீச்சர்?" ஆர்வமாகக் கேட்டவளை தேவகி பரிதாபமாகப் பார்த்தார்;. உண்மையைச் சொன்னாள் தாங்குவாளா? கண்ணாடி போல நொறுங்கிப் போவாள். அதற்காக இன்றைக்கு செவ்வாய்க் கிழமை, நல்ல வெயில் என்று சொல்லி அவளை வெளியே அனுப்பவும் முடியாது.

                'பாரும்மா நீ சின்ன பொண்ணு. உனக்கு இன்னும் நெறைய வயசிருக்கு. நெறைய பெத்துக்கலாம்! ஆனா இப்ப நீ கர்ப்பமா இல்ல." சொல்லி முடிப்பதற்குள், அவள் கைகள் நடுங்குவதும், புதிதாக கண்ணீர் துளிர்ப்பதும் தெரிந்தது.

                'போச்சி, சாமியும் சேந்து என்ன சோதிக்குது. யாரையும் நம்ப முடியல.. எனக்கு சாகலாம் போல இருக்கு டீச்சர்!" சொல்லிவிட்டு உடைந்து அழ ஆரம்பித்தாள். தேவகிக்கு அவளை எப்படி தேற்றுவது என்று தெரியவில்லை.

                பிறந்த உயிருக்காகவும், பிறந்து பின் இறந்த உயிருக்காகவும் அழுவதென்பது மனிதர்களுக்கான சாபம். பிறக்காத உயிருக்காகவும் பெண்கள் அழ வேண்டியிருக்கிறதே...!

'என் புருசன் வாரிசு வேணும்னு நச்சரிக்கிறாரு. அவருக்கப்புறம் சொத்து பத்த பாத்துக்க ஆம்பளப் புள்ளை வேணுமாம். இப்பவும் வயித்தில ஒண்ணுமில்லேன்னு தெரிஞ்சா என்ன அடிச்சே கொன்னுடுவாரு. பொண்டாட்டியே வேணாம்னு வெலக்கி வெச்சிடுவாரு." அழுதபடி பேசுகிறாள். கர்ப்பம் தரிக்காதது பெண் செய்யும் குற்றமா?

புருசனுக்கு அறை ஏக்கர் நிலம் இருக்கிறதாம். அதை வைத்துக்கொண்டுதான் ஆண் வாரிசுக்கு ஏங்குகிறானாம். பைத்தியக்காரன். உள்ளுக்குள் எரிச்சல் வந்தாலும், அழுகிற பெண்ணை திட்டுவதால் நேர்ந்த குற்றம் நிமிர்ந்து விடாதே.

'எனக்கு அப்பாவ நெனைச்சாத்தான் பயமா இருக்கு. வயசானவரு... இதய நோவு வேற இருக்கு. இந்த வாட்டியும் வயித்தில ஒண்ணும் இல்லேன்னு தெரிஞ்;சா என் புருசன் வெலக்கி வெச்சிடுவாரு. நான் வாழாவெட்டியா வீட்டுக்கு போனா அப்பா தாங்க மாட்டார். நெஞ்சி வெடிச்சி செத்துடுவாரு... " கூடத்தில் உட்கார்ந்திருந்த கிழவனை அச்சத்தோடு பார்த்தபடி சொல்லிவிட்டுவிசும்ப ஆரம்பித்தாள்.

தேவகியும் முதியவரைப் பார்த்தார்;. வீட்டில் இருக்கிற உபயோகமற்ற பொருட்களை மூட்டை கட்டி வைத்தது போன்ற  ஒரு தோற்றம். உண்மையைச் சொன்னால் செத்துவிடுகிற அளவுக்குத்தான் ஆரோக்கியம் தெரிந்தது. அதே சமயம், கிழவனை பார்க்க எரிச்சலாகவும் வந்தது.

'எனக்கு அம்மா இல்ல. அப்பாதான். மொத தாரத்துக்கு கொழந்தை இல்லேன்னு என் புருசன் ரெண்டாவதா என்ன கல்யாணம் பண்ணிகிட்டாரு. எனக்கு கல்யாணம் பண்ணிக்கவே பிடிக்கல. அப்பாதான் கல்யாணம் பண்ணிக்கலேன்னா செத்துடுவேன்னு மெரட்டினாரு"

சாகட்டுமென்று விட்டிருக்கலாம். பாசத்தை ஆயுதங்களாக்கும் பயங்கரவாதிகள் யாராயிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். படிக்கிற பெண்ணை எதற்காக பிடிக்காத ஆணுக்கு, அதுவும் இரண்டாம் தாரமாய் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும்?

'டீச்சர். உங்களுக்கு புண்ணியமா இருக்கும். எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா? நான் கர்ப்பமா இருக்கிறதா சீட்டுல எழுதிக் குடுத்திடுங்க.. புண்ணியமா போட்டும்." என்று அவள் சொல்ல, தேவகிக்கு பகீரென்றது. பொய் சொல்வதா? அது தொழில் தருமமும் கிடையாதேசொன்னாலும் அது எத்தனை நாளைக்கு தாங்கும்? நான்கே மாதத்தில் சொன்னது பொய்யென்று தெரிந்து போகும். அதன் பிறகு?

'அதுக்கப்புறம் விதிவிட்ட வழி... இப்போதைக்கு என் தலை தப்பினா போதும்".

எரிகிற கொள்ளியில் விழுந்தாலும் பரவாயில்லை, கொதிக்கிற எண்ணையிலிருந்து தப்பித்தால் போதுமென்று நினைக்கிறாள். இவள் நாலு மாதத்திற்கு தப்பித்தால் கூட போதும்தான். புருசன் மனம் மாறலாம். ஏன், இவளே கூட அதற்குள் கர்பம் தரிக்கலாம்;. உண்மையை சொல்லி, ஒரு பெண்ணின் வாழ்கையோடு விளையாடுவதைவிட, ஒரு பொய் சொல்வதில் தப்பில்லை என்று முடிவெடுத்தார் தேவகி.

'சரி... அவர உள்ள அனுப்பிட்டு வெளிய நில்லு. நான் பாத்துக்கறேன்."

அறைக்குள் வந்த முதியவன் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு. மகள் சுமையாகிவிடுவாளோ, வாழ்க்கை நரகமாகிவிடுமோ என்ற பயத்தில் உடம்பே கூனலாகிவிட்டது. உண்மையைச் சொன்னால் செத்தாலும் சாவான். எதற்கு வம்பென்று, மனசை திடப்படுத்திக்n;காண்டு அந்த தித்திப்பான பொய்யை  பெரியவரிடம் சொன்னார்;...

கவலையே படாதீங்க பெரியவரே. தைரியமா இருங்க. நீங்க தாத்தா ஆகப்போறீங்க...”

இனிப்பான செய்தி சொன்னால் எல்லோருமே சிரிப்பார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம். தேவகி சொன்ன சந்தோச சமாசாரத்தைக் கேட்ட கிழவன் சிரிக்கவில்லை. 'தாத்தாவாஆஆஆ...." என்று வாய் பிளந்து அதிர்ச்சி காட்டினான். தேவகி மிரண்டு போனார்;. கிழவனுக்கு சொன்னது புரியவில்லையா?

'அதாங்க... உங்க பொண்ணு கர்பமா இருக்கான்னு சொல்றேன்"

'பொண்ணாஆஆஆ...? அவ.. அவ... என் பொண்ணு..." என்று திக்கித் திணறி, நாக் குழறி என்னவோ சொல்ல முயன்றான். ஆனால் சொல்ல முடியாதபடி இருமல் இம்சை செய்தது. கண் மணிகள் இரண்டும் தெரித்து கீழே விழுவது போல இருமியவனுக்கு உடம்பெல்லாம் வியர்த்துப் போனதுஓயாமல் இருமியவன் ஒரு கட்டத்தில் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்து விழுந்தான். மூச்சு பேச்சில்லை. ஒருவேளை மாரடைப்பு வந்துவிட்டதோ? சந்தோசமான விசயத்தை சட்டென்று சொல்லியிருக்கக் கூடாதோ? வெளியிலிருந்த பெண் பதறிக்கொண்டு உள்ளே ஓடிவந்தாள்.

உன் அப்பா சந்தோசப்படுவாருன்னுதான் சொன்னேன்தேவகி பரிதாபமாய் அவளிடம் முறையிட்டார்;.

'அய்யோ டீச்சர். இது என் அப்பா இல்ல, இதான் என்னோட புருசன்!"

'என்னது? புருசனாஆஆஆ?" கேட்ட நிமிடம் தேவகிக்கு நெஞ்சுவலி வந்து மயங்கிச் சரிய வேண்டும் போல இருந்தது. விழப்போன டாக்டரை துணைப் பெண் வந்து பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. தள்ளாடும் கிழவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்து இன்னமும் குழந்தை வேண்டும் என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்களா? இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது?

ஒரு பொய் சொல்லி சிறுபெண்ணை காப்பாற்ற நினைத்த குற்றம், தேவகியை பெரும் பாவம் செய்தவளாக்கிவிட்டதா? பெண்டாட்டியை மகள் என்று சொல்லக் கேட்ட அதிர்ச்சியில் இந்தக் கிழவன் செத்துத் தொலைந்தால் என்னாவது? கிழவன் செத்தால் இவள் விதவை ஆவாள். அந்த துக்கத்தில் உண்மைத் தகப்பனும் அதிர்ச்சியில் மனமுடைந்து மாண்டு போவான். இப்படி இரட்டைக் கொலை செய்து, ஒரு பெண்ணை விதவையாக்கிய பாவத்திற்கு ஆளானோமே என்று நினைக்கும்போதே தேவகிக்கு தொண்டை அடைத்தது. வேர்வை கொப்பளித்தது. பைத்தியம் பிடிப்பது போலவும் இருந்தது.

ஆனால் அச்சப்பட்டபடி பயங்கரம் ஒன்றும் நடக்கவில்லை ஒருவாளித் தண்ணீரை முகத்தில் தெளித்ததும் கிழவன் மருத்துவம் பார்க்காமலே எழுந்து நின்று சிரிக்க ஆரம்பித்தான்;.

'நான் மயக்கமாயிட்டேன்னு பயந்திட்டிங்களா?, அது மயக்கமில்லீங்க. அசதி."

'நீ கூட கொமரன் இல்லடா. கெழவன்." தேவகி கடுப்பாக நினைத்துக்கொண்டாள். வேர்ப் புழு, குருத்துப் புழு, அந்துப் பூசிசியிடமிருந்தெல்லாம் பசுந் தளிர்களைக் காப்பாற்றத் தெரிந்திருக்கிறது இந்த பாரம்பரிய மக்களுக்கு. ஆனால், கிழட்டு எருமைகளிடமிருந்து வாழைக் குருத்தைக் காப்பாற்றும் வழி தெரியவி;ல்லையே.

பிள்ளை வரம் கேட்கிறார்களாம் பிள்ளை வரம். அரை ஏக்கர் கட்டாந்தரையை வைத்திருப்பவன் தன்னை நிலச்சுவான்தார் என்று சொல்லிக்கொண்டு, அதை கட்டிக் காக்க வாரிசு கேட்ப்பானாம். அதற்காக ஒரு இளம் பெண்ணையும் பலி கொடுப்பானாம். தேவகிக்கு தலைக்குள் ஜிவு ஜிவு என்று கடுப்பேறியது. மறு பேச்சு பேசாமல் அவர்களை வெளியே அனுப்பி, கதவை இழுத்து மூடச் சொல்லிவிட்டு தேவகி படுக்கையறைக்கு வந்தார்;.

 டிவி பாட்டுக்கு தனியாக பேசிக்கொண்டிருந்தது. 'திருமண வயது பதினெட்டு. பால்ய விவாகம் சட்டப்படி குற்றம்" தேவகிக்கு எங்கிருந்துதான் வந்ததோ கோபம்.

'பால்ய விகாகம் குற்றம்னு சொல்ற நீ, பல்லு போன கிழவன் கல்யாணம் பண்ணிக்கிறத குற்றம்னு ஏன் சொல்லலே? அறுபதுக்கு மேல கல்யாணம் பண்ணி, கொழந்தையும் வேணும்னு கேக்கறது சட்டப்படி தப்புன்னு சட்டம் போட்டு ஏன் கத்தல, கதறல? ஆம்பளைக்கு ஒரு நியாயம் பொம்பளைக்கு ஒரு நியாயமா?" டிவியை பார்த்து வாய்விட்டே கத்த ஆரம்பித்தாள்.

தேவகி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல, டிவி ஒன்றும்  பிரதம மந்திரியோ, ஜனாதிபதியோ, சட்ட அமைச்சரோ, கடவுளோ கிடையாது. பெட்டிக்குள் உட்கார்ந்து அவர்கள் சொல்வதையெல்லாம் நாம் கேட்கிறோமென்றால், பெட்டியைப் பார்த்து நாம் சொல்வதையும் அவர்கள் கேட்கத்தான் வேண்டும். ஆனால் டிவியோ, அது பாட்டுக்கு சத்து மாவு குடித்தால்; குழந்தைகள் அறிவாளியாவார்கள், உயரமாவார்கள், பணக்காரர் ஆவார்கள், கடவுளாவார்கள் என்று பொய் சொல்லிக்கொண்டிருந்துடாக்டர் பச்சைத் தண்ணீரை குடித்துவிட்டு எருமைகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்தார். வளர்ந்த எருமைகள் கறுப்பாகவும், உண்மையைச் சொன்னால் முட்டுகிற மூர்க்கத்தோடும், பெரிய கொம்போடும் இருக்குமென்பதை நினைக்க அவருக்கு அச்சமாகவும் இருந்தது. ஆவேசமாகவும் இருந்தது.


முற்றும்

No comments: