Wednesday, August 24, 2016

புதர் வீட்டில் யாரோ வசிக்கிறார்கள் - சிறுகதை


    நாதன் தான் வசிப்பதற்காக ஒரு நூதனமான வீட்டை வெகு காலம் தேடிக்கொண்டிருந்தான். அவன் ஏகத்திற்கும் வசதியுள்ள சம்பாதிக்கும் திறமைசாலி. அந்த ஒரு காரணத்திற்காகவே நூதன வீடு, நூதன பொருட்கள், நூதன பெண்கள் இப்படி எதையும் தேடும் அறுகதை பெற்றவன். (நாதன் தேடிய நூதனப் பெண் பிறகு வருவாள்) நாதன் தேடிய வீடுதான் நூதனமே ஒழிய நாதன் நூதனமான ஆள்; கிடையாது.

பூதகணங்களால் கட்டப்படும் விசித்திர வேலைப்பாடுள்ள ஒரு வீட்டை அவன் தேடவில்லை. மாறாக மரங்கள் அற்ற பிரதேசத்தில் இருக்கும் ஒரு வீட்டை விரும்பினான். மரமோ அல்லது மரத்தின் அத்தைப் பிள்ளைகளான தாவரம், கொடி, புல், பூண்டு, புதர் இப்படி எதுவுமற்ற பிரதேசத்தில் இருக்கும் சுத்த ஜடப்பொருள் சூழ்ந்த வீட்டை விரும்பினான். அப்படி ஒரு வீடு கடும் பாலை, அல்லது நெடும் பனிக்கடல், அல்லது கண்காணா வேறு கிரகத்தில் தான் இருக்கும், இங்கே அப்படி ஒன்று கிடையாது என்று சுத்த சத்தியமாய் சொல்லிவிட்டார்கள், அவன் விசாரித்த அத்தனை ஜாம்பவான்களும்.

தோற்றபொழுதில் மனசுடைந்து குப்புறப்படுத்து புலம்புவதில் நம்பிக்கையற்ற நாதன் தனக்கான மரமற்ற பிரதேசத்தை தானே தேடிக் கண்டு அங்கே ஒரு வீட்டை தானே கட்டி எழுப்ப முடிவெடுத்தான். பிரதேசம் என்றால் அது நதி, குளம், ஏரிகள் கொண்ட பெரும் நிலமாய் விரிந்து கிடக்கவேண்டிய அவசியமில்லை, ஊருக்குள் ஒரு வீடு கட்டுமளவுக்கான நிலமும் பிரதேசமே என்று அவன் எடுத்த தீர்மானம்தான் அவனுக்கு ஆசைப்பட்டபடி வீடு கிடைக்;க வாய்ப்பளித்தது.

ஒரு அகலமான இடத்தை வாங்கி, அகலமான வீட்டைக் கட்டி, உயரமான மதில் சுவரால் அதை வெளித்தெரியாமல் மறைத்து, மதிற்சுவருக்குள் ஓரிலைத் தாவரமோ மக்கிய காளானோ புல்லோ பாசியோ கள்ளியோ முள்ளியோ காயோ கனியோ முளைப்போ துளிர்ப்போ இல்லாதபடி ஒரு மலுமலுப்பான கண்ணாடிப் பளிங்கு போன்ற வீட்டுக்குக் குடியேறினான். வீட்டின் சுவற்றிலோ கதவிலோகூட மரத்தை அடையாளப்படுத்தும் ஓவியங்களோ சிற்பங்களோ வர்ணங்களோ இல்லாமல் பார்த்துக்கொண்டான். கதவுகளும் ஜன்னல்களும் நாற்காலி மேஜைகளும்கூட மரத்தால் செய்யப்பட்டவை அல்ல.


‘மரமற்ற வீட்டுக்குள் இருந்தாலும் எப்படியும் உயிர்வாழ, சம்பாதிக்க, சில பொருள் வாங்கவாவது மரங்கள் மிக்க வீதிக்கு வந்துதானே ஆகவேண்டும், அப்பொழுது மரத்தை எப்படி தவிற்பாய்;? என்று அறிமுகமற்ற ஒருத்தன் மரத்தாலான எலிப்பொறியை விற்கவந்தபோது நாதனைக் கேட்டான்.

நாதன் கோபப்படாமல் வெகு இயல்பாக மர எலிப்பொறி விற்பவனிடம் ‘நன்றாக குளித்து முடித்து வீதியில் செல்லும்போது நரகலைப் பார்த்தால் அருவெருப்பாய் முகம் சுளித்து போவதுபோலவே மரங்களையும் ஒதுங்கிப் போவேன் என்றான். மரத்தை இப்படி ஒரு அசிங்கத்தோடு ஒப்பிட்டு எவருமே என்றுமே பேசி அறியாத எலிப்பொறி விற்பவன் மரத்தாலான பொறிகளை அருவருப்போடு தூக்கிப்போட்டுவிட்டு ஓடிப்போனான்.
மரம் தனக்கு ஏன் பிடிப்பதில்லை, எப்பொழுதிலிருந்து பிடிப்பதில்லை மரம் எந்த விதத்தல் மனுசனுக்கு ஆகாது என்று யாரோடும் வாதம் செய்வதில்லை நாதன். ஆனாலும் மரமற்ற நாதனின் பளிங்கு வீட்டுக்கு வந்த அவன் ஊரைச் சேர்ந்த கொய்யாத் தோப்பு அரசகுமாரன், “மரத்தோடு துவேசம் கொள்பவன் சுத்தப் பயித்தியக்காரன்.
என்று முகத்திற்கு நேராக அசிங்கமாக பேசியதும் ஊசிமுனையின் பாதியளவுக்கு சிரிப்பும் மீதி அளவுக்கு கோபமும் வந்தது நாதனுக்கு.

அந்த கொய்யாத் தோப்பு அரசகுமாரனை மரங்களற்ற தன் வீட்டின் ஒரு இரும்பு நாற்காலியில் உட்கார வைத்து, தின்பதற்கு பொறித்த மீன் துண்டங்களை தட்டில் வைத்துக் கொடுத்துவிட்டு அவனிடம் மெல்லக் கேட்டான், “மரம் என்றால் உனக்கு மிகப் பிடிக்குமா?
கொய்யா தோப்புக்காரனின் ஏழு பரம்பரையும், எட்டடுக்கு மாளிகையும், குதிரை மாட்டு வண்டிகளும் பரந்துபட்டு அவர்கள் பராமரித்துவரும் பரந்துபட்ட கொய்யா தோப்பினால் வந்ததுதான். அதனால்தானே அவன் கொய்யாத்தோப்பு அரசகுமாரன் ஆனான். அவன் எப்படி மரங்களை பிடிக்காது என்று சொல்வான். ‘பிடிக்கும் என்றான்.

அடுத்து நாதன் கேட்டான், “நீ புதிதாக ஒரு எட்டடுக்கு மாளிகையை கொய்யாத் தோப்புக்கு நடுவே கஷ்டப்பட்டு கட்டிய பிறகு அதன் மீது ஒரு காக்கை எச்சமிட்டால் நீ சந்தோசப்படுவாயா, துக்கப்படுவாயா?
கேள்வி சுத்த அபத்தத் தொனியில் இருப்பதை உணர்ந்த கொய்யாத் தோப்பு “காக்கை எச்சமிடுவதில் எனக்கொன்றும் ஊர் நோம்பு எடுக்குமளவுக்கு சந்தோசமில்லை, இருந்தாலும் அதை என்னால் தடுக்க முடியாதே! அதனால் துக்கமும் இல்லை. என்றான்.

நாதன் மெல்ல சிரித்துக்கொண்டு, “காக்கை எச்சத்தில்; இருக்கும் ஒரு விதை உன் வீட்டு சுவற்றின் விரிசலில் விழுந்து, ஒரு கொய்யாமரமாக வளர்ந்து வேர் விட்டு, உன் வீட்டின் விரிசல்களை பெரிதாக்கி உன் வீட்டை தகர்த்துக்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்... இப்பொழுது சொல்;, மரம் உனக்கு பிடிக்குமா பிடிக்காதா?


கொய்யாத் தோப்பு திகைத்தான். மரம் பிடிக்குமென்றால் வீடு பாழாய் போனாலும் பரவாயில்லை பிடித்த மரம் வளர்வதற்கு நீர் விடு என்பான். மரத்தை அழிப்பேன் என்றால் நீயும் மரத்தின் எதிரி என்பான். ஆக, இவனிடம் பேசுவதைவிட ஊருக்குப் போய் ‘நாதன் என்பவன் பயித்தியமாக இருக்கிறான்
என்று அவன் அம்மாவிடம் சொல்வதுதான் நல்லது என்று நினைத்தபடி கொடுத்த மீன் துண்டை பாதி வைத்துவிட்டு பேச்சில்லாமல் எழுந்து போய்விட்டான்.

எழுந்துபோன கொய்யாத் தோப்பிடம் நாதன் சத்தமாக, “உனக்கு மரம் பிடித்திருந்தால் உன் எட்டடுக்கு மாளிகையை தரைமட்டமாக்கி அங்கே எருக்கும் கள்ளியும் வை அதுவும்கூட மரம் போன்றதுதான்...
என்றான். அவமானப்பட்டுப்போன கொய்யாத்தோப்புக்காரன் ஊருக்குப் போய் நாதனைப் பற்றி நாற்பதுவித விசித்திர வாந்திகளைப் பரப்பிவிட்டான். அதற்காகத்தான் மரம்பற்றி பேசுபவர்களை நாதன் வீடு சேர்ப்பதில்லை. மரங்களைப் பிடிக்காது என்று சொல்பவர்கள் யார் இருக்கிறார்கள். அதனால் நாதனுக்கு யாரோடும் ஒட்டுமில்லை உறவுமில்லை.

நாதனுக்கு மரங்களைப் ஏன் பிடிக்காது? மண்ணில் பிறந்தவன், கோடை வெயிலில் காய்ந்தவன் யாராக இருந்தாலும் மரம் பிடிக்கத்தானே செய்யும்? உண்மைதான். ஆனாலும் மரம் பிடிக்காதென்றால் பிடிக்காதுதான் நாதனுக்கு. அதற்காக அவன் வானத்தின் எங்கோ பிரயாணப்பட்ட எரி நட்சத்திரம் ஒன்றின் உரசலில் பிறந்து பூமியில் தவறி விழுந்துவிட்டவன் என்று ஆகாது. அவன் மரங்களுக்கும் புதர்களுக்கும் மத்தியில் காளான் முளைத்த வைக்கோல் கூரை வீட்டின் அடியில் பிறந்தவன்தான்.

நாதனின் பிறந்த ஊர் அத்தியூர். ‘அத்தியூர் என்றால் அத்திமரங்கள் அதிகமிருக்கும் ஊர்
என்று அத்தியூரில் சாகக்கிடக்கும் தள்ளாட்டக் கிழவர்களும் யாரும் கேட்காமலேயே நான்குமுறை சொல்லி ஏழு முறை இறுமிச் செல்வார்கள். அவர்கள் சொன்னதுபோல அந்த ஊரில் அத்திமரதத்திற்கு பஞ்சமில்லாமல் ஏகத்திற்கும் இருந்தது. அப்படி மரமடர்ந்த ஊரில் பிறந்து, மரத்தில் விளையாடி, புதரில் பதுங்கி, செடிகளின் பூக்களைப் பிடுங்கி விளையாடியபடி தன் சிறு பருவத்தை மரங்களோடு கழித்து புழு பூச்சிகளின் கடிகளோடு வளர்ந்த நாதனுக்கு அன்று மரமும் பசுமையும் பிடித்திருந்தது.

அந்த கிராமத்தை விட்டு வெளிமண்ணுக்கு பாதத்தை எடுத்து வைக்கும்வரை மரத்தோடு மரமென இருந்தான் நாதன். ஆனால் வளர்ந்து வெளி உலகம் காணவேண்டி நகரத்திற்கு வந்த நாதனுக்கு மரத்தின் மீதான வெறுப்பை முதன் முதலில் விதைத்தவன் சடை வைத்த ஒருத்தன். அந்த வெறுப்பு வளர்ந்து இன்று மரங்களோடும் செடிகளோடும் நித்தமும் யுத்தம் செய்யும் மாவீரனாகிவிட்டான் நாதன்.

தன் நகர வாழ்வின் முதல் அனுபவத்;தை அவமானமாகவும் அசிங்கமாகவும் தன் நாட்குறிப்பில் துருபிடித்த இரும்பு எழுத்தில் பொறிக்க வேண்டியதாய்ப் போயிற்று நாதனுக்கு. படிப்பதற்காகத்தான் சொந்த மண் விட்டு வந்தான். முதல் நாள் வகுப்பறைக்குள் நுழைந்த நாதனை அந்தக்கால ஆங்கிலத்தை மைய அறைத்து படிக்கிற பையன்களின் இலக்கிய நாக்கில் தேன்போல சுவைபட பூசுவதற்காக கடவுளால் ஏவிவிடப்பட்ட திருவாளர் பிச்சாண்டி எம்.ஏ. (அந்தக்கால ஆங்கிலம்) தன் முரட்டு உடை மற்றும் நீண்ட சடையோடு தன் ஆங்கில நாக்கால், “உன் இனிமையான பெயர் என்ன?
என்று கேட்டார். இந்த பிச்சாண்டிதான் நாதனுக்குள் விருட்ச துவேசம் விதைத்த சடை வைத்த முதல் ஒருத்தன்.

இவன் தன் பெயரை சற்றேனும் அவமானப்படாமல், “வேப்பிலை நாதன்.
என்றான். (உண்மையான பெயர்) பிச்சாண்டி தன் சடையில் பேன் சொறிந்தபடி வியப்பில் ஆழ்ந்தார். அவர் தலை சொறிந்த சடை குறித்தும் அதில் ஈறுகளோடு மேயும் பேன் குறித்தும் பிச்சாண்டியின் மனைவியன்றி வேறு ஒருத்தர் கவலைப்பட அவசியமில்லாத காரணத்தால் பிச்சாண்டியைக் குறித்து கவலைப்படவில்லை நாதன், மாறாக கடைசி பெஞ்சில் தன் பெயரைக் கேட்டுவிட்டு இளக்கார ஆரவாரமாய் பெஞ்ச் தட்டி சிரித்த மாணவர்கள் குறித்தே கவலைப்பட்டான்.

கடைசி பெஞ்சை வியப்போடு பார்த்த பிச்சாண்டி, “அன்பான மாணவர்களே! நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிந்ததில்லையா?


கடைசி பெஞ்சுக்கள், “புரிந்தது, புரிந்தது...
என்றார்கள்.

“நான் என்ன கேட்டேன்?


“புதியவனின் இனிமையான பெயர் என்ன என்று!


“இந்த மதிப்புமிகு இளைஞன் என்ன பிதற்றினார்?


“வேப்பிலை நாதன் என்று.


“வேப்பிலை என்றால் இனிமையா, கசப்பா? வேப்பிலை என்றால் கசப்பென்றுதான் என்னை வளர்த்த என் பாட்டி சொன்னாள். அவள் சொன்னது சாமிக்கு விரோதமில்லாமல் உண்மையாக இருக்குமானால் வெற்றிலை என்பது காரம்; வேப்பிலை என்பது கசப்பு.
நாதன் பக்கம் வியப்பாகத் திரும்பி, “உங்களின் பெயர் வேப்பிலை நாதன் என்று சொன்னீர்கள்... கறிவேப்பிலையா இல்லை கசப்பு வேப்பிலையா, சொல்லவே இல்லையே! என்று கேட்டுவிட்டு ஜடைவிரித்து சிரித்தார்.

நாதன் வாய் கோணி தன் முதல் அவமானத்தை வெறுப்போடு ஏற்றுக்கொண்டான். தன் பெயர் இப்படியும் அசிங்கத்தை தேடித்தரும் என்பதை அவன் பிறந்ததிலிருந்தே எதிர்பார்க்கவேயில்லை.

அவமானத்தில் வெந்ததுபோன நாதன் ஊருக்குப் போய் “எந்த மடையன் எனக்கு இப்படி பெயர் வைத்தது?
என்று காரம் தின்ற கடுப்பாய் தன் அம்மாவிடம் கேட்டான்.

“உன் அப்பாதான் ராசா... அழகான பேருதானே வெச்சிருக்கார். எதுக்கு மடையங்கறே. அது சும்மா வெச்ச பேருன்னு நினைச்சுக்காதே... எட்டு நா விரதம் இருந்து, ஒன்பதாம் நா நாக்கில் வேல் குத்திக்கிட்டு, பத்தாம் நா வேலைப் பிடிங்கிட்டு நாக்குப் புண்ணோடு உனக்கு அவரு வேப்பிலைநாதன்னு பேர் வெச்சாரு.;
என்றாள்.

இன்னும் சொன்னாள், “கண்ணு, நீ வேப்ப மரம் தந்த பிள்ளை கண்ணு...! வேப்ப மரத்தோட வரம் நீ.
என்று சொல்லி அவனின் பிறவி வரலாற்றை முற்றுமாய் சொன்னதும்தான் நாதனுக்குப் புரிந்தது, தான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட அவதாரம் என்றும் தன் பெயர் வெறும் சத்தமல்ல மந்திரம் என்றும்.

அத்தியூருக்கு வாழ்க்கைப்பட்டுப்போன நாதனின் அம்மா ஏழு வருடம் தன் வயிற்றில் குழந்தை தவிர்த்து வெறும் புழுப்பூச்சி மட்டுமே உண்டாக்குபவளாய் இருந்தாளாம். புழுபூச்சிகளும் உயிர்கள்தான், அது வயிற்றில்தான் உருவாகிறது ஆனாலும்கூட அவள் மலடிதான் என்று ஊரே அவளை அவமானப்படுத்தியதாம். தினம் காலை கருக்கலில் இருந்து மறுநாள் காலை கருக்கல் வரைக்கும் ஊரில் இருப்பவர்களுக்கு நாதனின் அம்மாவை மலடி என்று சொல்வதே அன்றிலிருந்து வேலையாகப் போயிற்றாம். யாருமே வேலை செய்யாததால் அங்கு வெள்ளாமை விளைச்சல் எதுவும் இல்லாமல் ஊரே பொட்டால் காடாய் காய்ந்து போயிற்றாம்.

தன்னால் இந்த ஊர் இப்படி பொட்டல் காடாய் மாறி பஞ்சத்தில் கிடக்கிறதே என்று பதறிப்போன அவள் மாண்டு போக முடிவெடுத்து கிணறு கிணறாக விழப் போனாளாம். எல்லாக் கிணற்றிலும் யாராவது ஒருத்தர் ஒளிந்துகொண்டு இவளைப் பார்த்ததும் ‘மலடி
என்று சத்தமிட்டுச் சொன்னார்களாம். கிணற்றில் விழுவதற்கும் முடியாமல் போனதால் மனசு நொந்த அவள் கத்தி ஒப்பாறி வைத்தபடி ஓடினாள். கால்; புண்ணாகும்படி ஓடி பின் முடியாமல் ஒரு இடத்தில் மயக்கம் போட்டு விழுந்தாளாம்.

விழுந்த இடத்தில்தான் நாதன் பிறப்பின் சூட்சுமமே இருக்கிறது. அந்த இடம் ஒரு வேப்பமரத்தின் நிழல். அது வெறும் வேப்பமரம் கிடையாது, அரசமரத்தோடு கல்யாணம் செய்துகொண்ட வேப்பமரம். வெறும் கல்யாணம் கிடையாது, இரண்டு பாம்புகள் பிணைந்து பின்னி சிற்பமாய் சுழன்றிருக்கும் நடுகல்லின் சாட்சியான கல்யாணம். விழித்து எழுந்த நாதனின் அம்மா (அப்பொழுது அவள் நாதனின் அம்மா கிடையாது. நாதனே அப்பொழுது தரப்போகும் குழந்தை வரத்திற்காக உருவமற்று வேப்பமரத்தின் கிளையில் இருந்தானாம்.), “ஏ வேப்பமரமே! உனக்கு எத்தினி பழம், அதைத் தின்ன எத்தினி எறும்பு, குருவிங்க... எனக்கும் ஒரு பிள்ளை தந்து பால் குடுக்கும் பாக்கியத்தை தரமாட்டியா?
என்று கேட்டு அழுதாளம்.

அப்பொழுது மரத்தின் ஒரு கிளை உடைந்து அவள் தலைமேல் விழுந்து பிளந்து ரத்தமாய் வந்தது மயக்கமாகி மரத்தடியில் விழுந்துவிட்டாளாம். மரத்தின் மீதிருந்த நாதன் ரத்தத்தின் வழியே கற்பப் பைக்குள் குழந்தையாய் நுழைந்தானாம். அப்படி தலையைப் பிளந்துகொண்டு ரத்தத்தின் வழியாக நுழைந்து தவப் பிள்ளையாய் பிறந்தவன் நாதன் என்று அவன் அவதாரக் கதை நீளும்...

அதன்பிறகு, சதா தன் பெயர் சொல்லி கேலி செய்த நகரத்தான்களிடம் தன் அவதாரக் கதையை அடிக்கடிச் சொன்னான். அப்படிச் சொல்லும்போது மீளாத அவமானத்தில் மீண்டும் மாட்டிக்கொண்டான். ஒருநாள் வெகு பக்தியோடு மேற்படி அவதாரக் கதையை தன் சினேகிதர்களிடம் நாதன் சொல்லிக்கொண்டிருக்க கேட்டவர்கள் அனைவரும் அடக்கமாட்டாமல் சிரித்தார்கள். காரணம் அவர்கள் எல்லோரும் சில்லிட்ட பியரை நன்றாக குடித்துவிட்டு கண் சிவந்து தள்ளாடிக்கொண்டிருந்தார்கள்.

ஒருத்தன் “ஐயோ கதைய ஜீரனிக்க முடியலைடா... வாந்தியா வருது.
என்று வாந்தி எடுப்பவன்போல ஒருத்தன் நடித்தான். பிறகு இன்னொருத்தன் நிஜமாகவே வாந்தி எடுத்தான். இன்னொருத்தன் நாக்குழரக் கேட்டாலும் நன்றாக கேட்டான், “நீ வேப்பமரத்தோட பிள்ளைதானே... நான் ஒப்புக்கிறென். பிரசவம் எங்க ஆச்சி, மரத்து மேலையா இல்ல கீழயா? எல்லோரும் போதை தெளிய சிரித்தார்கள்.

நாதனின் பரிதாப நிலையைப் பார்த்து ஒருத்தன் சிரித்தவர்களை திட்டி அடக்கி நாதனை சமாதானப் படுத்தினான். குடிகாரப் பயல்கள் போதையில் பேசுவதை பயித்தியத்தின் கத்தலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். தானும் ஒரு குடிகாரன்தான் என்றாலும் தனக்கு இப்பொழுது போதை தெளிந்துவிட்டதால் தனக்கு மட்டும் ஒரு சந்தேகத்திற்கு சரியான உண்மையான பதிலை சொல்லவேண்டும் என்று கெஞ்சினான். நாதனும் தன் மானம் காத்தவனுக்கு உண்மையை சொல்வதாக தலையாட்டி என்ன சந்தேகம் என்று கேட்டான்.
அந்த நல்லவன் போதையே இல்லாமல் தெளிவாகவும் ஆர்வமாகவும் தன் சந்தேகத்தைக் கேட்டான், “நீ மரத்து மேல பொறந்ததா சொன்னியே... நீ மரத்த விட்டு கீழ இறங்கி வரும்போது உனக்கு என்ன வயசிருக்கும்...?


அன்றுதான் நாதனுக்குள்ளே ஒரு பச்சை வேப்பமரம் வேரிலிருந்து நுனிவரை கொழுந்துவிட்டு பக்கென்று பற்றி படபடவென்ற இடிச் சத்தத்துடன் எரியத் தொடங்கியது. அதன்பிறகு அவனை எல்லோரும் வேப்பிலை, கருவேப்பிலை, வெற்றிலை, புகையிலை என்று அவரவர்க்கு பிடித்த இலை தலைகளின் பெயர் சொல்லி கூப்பிட்டார்கள். சிலர் பச்சிலை நாதன், எச்சிலை நாதன் என்றும் கூட கூப்பிட்டார்கள். அவனுக்கு அது விபரீதமாய் இருந்தது. தன் பெயர் இத்தனை அசிங்கமானதா? வேப்பிலை என்ற வார்த்தை சில மனித ஊறுப்புக்களின் பெயர் போல சொல்லக் கூசும் வார்த்தையா? ஒவ்வொரு அவமானச் சொல்லுக்கும் மரத்தை வெறுக்க ஆரம்பித்தான் நாதன்.

அவன் பெயர் குறித்த கிண்டல்கள் அதிகரிக்க ஆரம்பித்தது. எப்பொழுதும் சுற்றியிருப்பவர்கள் மரத்தோடு சம்மந்தப்படுத்தியே நாதனை அவமானப் படுத்தியதால் தான் கொஞ்சம் கொஞ்சமாய் மரமாக ஆவதைப்போல உணர்ந்தான் நாதன். அதை தவிர்ப்பதற்காக அவன் மரத்தோடு வன்மமான யுத்தம் செய்தான். மரத்தை வெறுத்தான். மரத்தைக் கண்டால் சுற்றிலும் பார்த்துவிட்டு யாரும் இல்லையென்றால் எட்டி உதைக்க ஆரம்பித்தான். கை எட்டும் கிளை கிடைத்தால் உடைக்க ஆரம்பித்தான். சிறு செடிகளை மிதிக்க ஆரம்பித்தான். தன் சுபாவத்தில் இருந்து கொஞ்சமாய் கீழே இறங்கி மரங்களின் மீது எச்சில் துப்பவும், சபிக்கவும், மண் வாறி தூற்றவும் பிறகு தனியனாய் எங்காவது நின்று அழவும் ஆரம்பித்தான்.

ஆனாலும் தான் ஒரு மரமாய் மாறிக் கொண்டிருப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. காலையில்; பல் துலக்க வாய் திறந்தால் காட்டில் விழுந்து மக்கிப்போன சறுகுகளின் துர்வீச்சம் வந்தது. குளிக்கும்பொழுது உடம்பில் மகரந்த வாசனை கள்ளின் போதையோடு வீசியது. நாலு பேருக்கு நடுவில் இருக்கும்போது மற்றவர்களை விட்டு இவன் மேல் மட்டும் ஈக்கள் அதிகம் மொய்த்தன. அதுவும் தேனீக்களாக இருந்தது. முகச்சவரம் செய்யும்போழுது கத்தி பட்ட இடத்தில் வெள்ளையாய் கள்ளிப் பாலின் அடர்த்தியில் ரத்தம் வருவதைப் பார்த்தான். தன் நகங்கள் ஒரு தளர்ந்த மரத்தின் உதிரும் பட்டைகள் போலவும் தன் ரோமங்கள் குட்டை மரத்தின் விழுதுகள் போலவும் அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

அதிர்ந்து போன நாதன் தான் ஒரு மரமாக மட்டும் ஆகிவிடக்கூடாது என்ற பதைபதைப்பில் பல முயற்சிகள் செய்தான். மரங்கள் என்னென்ன செய்யுமோ அதை தவிற்கப் பார்த்தான். மரம் உணவு சாப்பிடுவதில்லை மனிதன்தான் சாப்பிடுவான். அதனால் மனிதன் என்பதற்கு அடையாளமாக நொடிக்கு ஒரு முறை சாப்பிட ஆரம்பித்தான். நொடிக்கு ஒருமுறை மரம் மட்டுமே சாப்பிடும் என்று பின்னாளில் அறிந்ததும் அதை நிறுத்திக்கொண்டான். ஒரு இடத்தில் சிரிது நேரம் நின்றாலும் பாதத்தில் இருந்து பூமிக்கு வேர் வளர்ந்து தன்னால் நகரமுடியாமல் போய்விடுமோ என்று அச்சப்பட்டு எங்கும் நிற்காமல் நடந்துகொண்டே இருந்தான்.

காற்றடிக்கும் காலத்தில் தான் ஒரு தென்னைமரம் போல தலையாட்டி ஆடுவதை அவனால் தடுக்கவே முடியவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் தான் ஒரு முழுமையான மரமாக மாறி தன் தலையில் இலைகள் விட்டு, வாயில்; பூ பூத்து, கரங்களில் காய் காய்த்து நகராமல் நின்று கனியில் கல்லடி படப்போகிறோம் என்று பயந்தான். பயத்தில் அவனுக்கு காய்ச்சல் வருவது போலத்தான் இருந்தது. ஒரு சிட்டுக்குருவி அவன் தலையில் கூடு கட்டுவதற்காக இடைவிடாமல் துரத்தியபோதுதான் அவனுக்கு உண்மையாகவே காய்ச்சல் வந்தது.

காய்ச்சல் பித்தேறி பிதற்றிக்கொண்டிருந்தவனை நான்கு பேர் தூக்கிக்கொண்டு போய் அத்திய+ரில் நட்டுவிட்டு வந்தார்கள். நான்கு பேர் என்று ஆன பின்பு அது சவ ஊர்வலமாக இருக்கட்டுமென்று ஆசைப்பட்டான் நாதன். மரங்களால் இப்படி வீழ்த்தப்பட்டு பெரிய ரணத்தோடு வீடு திரும்பிய நாதனைப் பார்த்து பதறிப்போனாள் அம்மா. பலநாள் உணவற்றுக் கிடந்தவனுக்கு குடிக்க கஞ்சி கொடுத்த அவள், “பச்ச மரமா போன எம் மகன் பட்ட மரமா வந்திருக்கானே...
என்று அழுதாள். தன் அம்மாவும் தன்னை மரத்தோடு ஒப்புமையிட்டுப் பெசியதால் அருவருப்படைந்த நாதனுக்கு வாயில் போன கஞ்சி குமட்டிக்கொண்டு வாந்தியாக வெளியே வந்தது. அவன் வாந்தியெடுத்தபோது தெரிந்த முக விகாரத்தையும், வாந்தி எடுத்த வேகத்தையும் கண்டு பதறிப்போன நாதனின் அப்பா, “ஐயோ, எம் புள்ளைக்கு வாந்தி பேதி ஆகிறதே...! என்று அலறிவிட்டார். நாதனுக்கு வாந்தி மட்டும்தான் வந்தது. பிள்ளைப்பாசத்தில் பாவம் அப்பாவுக்குத்தான் வாயில் பேதியும் தவறி வந்துவிட்டது.

அடுத்து நடந்தது இன்னும் சோகக்கதை. அம்மா மகனின் நிலமையைப் பார்த்து மனவேதனைப் பட்டு, நேராக வரம் தந்த வேப்பமரத்தடிக்குப் போய் அங்கே கல்லில் பின்னிக் கிடந்த பாம்பின் உருவங்களுக்கு பொட்டு வைத்து, ஊதுவத்தி காட்டி, “ஏ ஆத்தா, நீதானே வரமா தந்தே அந்த புள்ளைய... இன்னும் அது உம் பிள்ளைதான். அத காப்பாத்து.
என்று கும்பிட்டாள். பிறகு ஒரு சாக்குப் பை அளவுக்கு வேப்பிலைக் கொத்துகளை ஒடித்துவந்து நாதனைச் சுற்றி பரப்பி வைத்தாள்.

மரத்தின் நினைவுகளையும், அது குறித்த வார்த்தைகளையுமே தாங்கிக்கொள்ள முடியாத நாதனுக்கு தன்னைச் சுற்றி இப்படி மலையளவு வேப்பிலைக் கொத்துக்கள் குவிந்ததும் வேதனை அதிகமாயிற்று. வேப்பிலைகளை தூரத் தள்ளிவிடவோ, வாய்விட்டு அதை எடுக்கச்சொல்லவோ முடியாத அளவுக்கு பலவீனமாக நாதன் இருந்ததால் உள்ளுக்குள் வெதனை அதிகமாகி உடம்பு அதிக உஷ்ணமேற்பட்டு உடம்பெங்கும் கொப்புளங்களாக வந்தது.

அவன் உடல்நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது. வெட்டப்பட்டு விழுந்துகிடக்கும் ஒரு கிடைமட்ட மரமென அசைவற்று படுத்துக்கிடந்தான். அவன் உடம்பில் ஈரம் அதிகமாகி பூஞ்சை பிடிக்க ஆரம்பித்தது. வாயில் மக்கிய காட்டு இலைகளின் துர்வீச்சம் அதிகரிக்க ஆரம்பித்தது. பற்களின் ஈறுகளில் பச்சை நிறத்தில் காரைகள் தோன்ற ஆரம்பித்தது. உடம்பின் மீது எறும்பும் ஈக்களும் கொசுக்களும் பேன்களும் மூட்டைப் பூச்சிகளும் அதிகம் நடமாட ஆரம்பித்தது.

தான் இப்பொழுது என்னவாக இருக்கிறோம் என்பது நாதனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. சுற்றிலும் வேப்பிலை, நெற்றியில் விபூதிக் குங்குமம், கழுத்திலும் காலிலும் தாயத்துக் கயிறுகள், நகரமுடியாத நிலை, உடம்பெல்லாம் எறும்பும் பேனும்... ஆக மொத்தத்தில் தான் ஒரு வழிபாட்டுக்குரிய வேப்பமரமாக ஆகிவிட்டதை முற்றிலுமாக உணர்ந்தான். மரத்தை வெறுப்பவனையே ஒரு வழிபாட்டு மரமாக்கி குங்குமம் வைத்து தாயத்து கட்டிவிட்டார்களே. வாழும் விருப்பமற்று தளர்ந்து போய் பராமரிக்கப்படும் பலநாள் பிண்டமாக படுக்கையில் இருந்தான். ஒருநாள் அதிகாலையில் அவன் வாயில் கொட்டிய பால் வழக்கம் மாறி உள்ளே போகாமல் கழுக்கென்று வெளியே வந்தது. மகன் செத்துவிட்டதை அறிந்து ஓவென்று கத்தினாள் அம்மா. அப்பாவுக்கும் தெரிந்ததும் ஓலமிட்டார். மரம் தந்த பிள்ளை மரமாய் செத்துக்கிடந்தான்.

நாதன் மனிதனல்ல மரம். மரத்திற்கு மூக்கு கிடையாது. அது தன் இலைகளால் சுவாசிக்கிறது. அவன் உடம்பு முழுதும் சுவாசித்தான்; சாகவில்லை. அவன் உடம்பில் பால் ஊறிக்காண்டிருந்தது. விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த மிலிட்டரிக்காரன் ஒருத்தன் கூக்குரல் கேட்டு ஓடிவந்து நாதனின் நிலையைப் பார்த்தான். நாதனை புறட்டிச் சோதித்துவிட்டு உயிர் இருப்பது தெரிந்ததும் கத்திய அவர்களை கண்டமேனிக்குத் திட்டினான். கத்துவதை விட்டு மகனை மருத்துவமனைக்கு எடுத்துப்போகச் சொல்லிச் சொன்னான். நாதனின்; அப்பா அழுதபடி கேட்டார், “பிணத்தை அறுக்காமல் கொடுப்பார்களா?


மிலிட்டரிக்காரனுக்கு கோபம் வந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதும்தான் அவர்கள் அவனை மாட்டு வண்டியில் ஏற்றி மருத்துவத்திற்கு அழைத்துப் போனார்கள். அவன் மாட்டுவண்டியில் பலகை அறுப்பதற்காக கொண்டு செல்லப்படும் ஒரு முற்றிவிழுந்த மரம்போல அசைவற்றுக் கிடந்தான்.

அந்த மருத்துவமனையில் ஒரு பேச்சுக்குக்கூட மரத்தின் வாசனை கிடையாது. ஜன்னல்களும் இரும்பு, வாசல்களும் இரும்பு. மேஜைகள் பிளாஸ்டிக், விரிப்புகள் பாலியெஸ்டர். திரைச்சீலைகள் ஜார்ஜெட். தொங்கும் திராட்சைக் கொடிகளும் பழங்களும் ரப்;பர். பூக்கள் காகிதம். பட்டாம்பூச்சிகள் கனவு.

நாதன், மரங்களோ மரத்தின் வாசனையோ இல்லாத ஒரு சிமெண்ட் இரும்பு பித்தலை பிளாஸ்டிக் செயற்கை உலகத்திற்கு வந்ததை கண் மூடியே அறிந்தான். மரங்களே இல்லாத இடம் என்றதும் உடம்புக்கும் மனசுக்கும் ஆறுதலாய் இருந்தது. அதனால் அவன் உடம்பின் உள்ளே மரத்தின் நினைவுகள் தன் இலைகளை உதிர்க்க ஆரம்பித்தன. மெல்ல குணமாக ஆரம்பித்தான்.

சாகும் விளிம்புக்குப் போய் ஒரு மரமற்ற மருத்துவமனையுள்ளே வாழும் நிலைக்கு திரும்பிய பின் அவன் மிக கவனமாக தான் வாழப்போகும் இடம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டான். தன் வாழ்வின் சூழல்களுக்காக மருத்துவமனையை கவனமாய் நினைவில் வைத்தான்.

உடம்பு தேறி வந்தவன் பிறகு “கொஞ்சமா மறை கழன்ற ஆள். மத்தபடி திறமைசாலி
என்ற பேருடன் வாழ்ந்து தன் வாழ்க்கை வசதிக்கு என்னென்ன வேண்டுமோ அத்தனையும் கற்று காசு பணத்தோடு பெரிய ஆள் ஆகிவிட்டான். தான் மரம் அல்ல என்று தானே நம்புவதற்காக மரம் செய்யாத ஒன்றை நாம் தினம் செய்யவேண்டும் என்று திட முடிவோடு இருந்தான். அவனுக்கு பருவச் சேட்டைகள் இருந்ததால் காதல் குறித்த உணர்வுகள் வர ஆரம்பித்திருந்தது. மரங்கள் காதலிப்பதில்லை மனிதன்தான் காதலிப்பான் என்று அவனுக்கு தோன்றியதும் அவன் காதலிப்பதில் உவப்பு காட்டினான். ஆனால் அவனுக்கு பெண்களைக் கண்டால் முதலில் வருவது வாந்திதான். காரணம் அவர்கள் தலையில் வைத்திருக்கும் நாற்றம் பிடித்த பூக்கள். ஆனாலும் நாதனுக்கு காதலிக்க வேண்டும். அதற்காக பூ வைக்காத பூவை வெறுக்கும் ஒரு நூதனப் பெண்ணை தேடினான் நாதன்.

பூ வைக்காத பெண்கள் அனேகமாய் கிழவிகளாய் இருப்பதை அறிந்து கொஞ்சம் காலம் பெண்ணெணும் மாயப்பிசாசு என்று புலம்பினான் என்றாலும் வீட்டின் தனிப் பொழுதுகளில் தவிர்க்கமுடியாத அளவுக்கு அவனுக்கு காதல் உணர்வுகள் வர ஆரம்பித்தது. வயசும் இணை தேடும் சரி வயசாக இருந்தது.

கணவனை இளந்த ஒரு சில பெண்கள் பூ வைக்கமலும் அதே சமயம் இளமையழகோடும் இருப்பார்கள் என்பதை அறிந்த நாதன் எவளாவது ஒரு பேரழகிக்கு சிறுவயதில் கணவன் செத்துப்போனால் நன்றாயிருக்குமே அவளைக் காதலிக்கலாம் என்று ஆசைப்பட்டான். அது உண்மைதான் என்றாலும் செத்துப்போன புருசனின் பேரழகிப் பெண்டாட்டிக்களுக்காக சாகாத சில பேரழகன்கள் விருப்பமோடு அண்டையிலேயே காத்திருப்பார்களே என்ற நினைப்பு வர அதிலும் அலுத்துக்கொண்டான். அப்படியே உலகத்தின் சிறந்த விதவைப் பேரழகியை கல்யாணம் செய்து கொண்டாலும் அவளுக்குத் தான் புருசனாகிவிடும் பட்சத்தில் அவளும் இராண்டம் சுற்று சுமங்கலியாகி பூ வைக்க ஆரம்பிப்பாளே... அப்பொழுது பூ வைக்காத புனிதவதி தேடி தான் பட்ட கஷ்டங்கள் வீணாகுமே என்று பயந்தும் போனான். அதைவிட பெரிய பயம் அவள் தன்னிடமே பூ வாங்கிவரச் சொல்லி கேட்டால் என்ன செய்வது என்பதுதான்.

மரப் பசுமையின் கோர நிழல் தன் மேல் இன்னும் பதிந்த வண்ணம் இருக்கிறதே என்று மனசு நொந்து கிடந்தவனுக்குத்தான் நாகதேவி என்ற பூ வைக்காத, புருசனை இழக்காத, கல்யாணமாகாத, காதலிக்கும தகுதியுள்ள அழகிய பெண் ஒருத்தி சினேகமாய் வாய்த்தாள். நாகதேவியை முதலில் பார்;த்ததுமே நாதனுக்குள் நீண்ட பாலை மணல் பொன் நிறத்தில் விறிந்தது; முடிவற்ற பனிக்கடல் வெண்ணிறத்தில் குளிர்ந்தது. அன்றிலிருந்து நாகதேவியை அவன் விரும்பினான். காரணம் மிக எளிது. நாகா தன் தலையில் பூ வைக்க மாட்டாள். பூ வைப்பது எனக்குப் பிடிக்காது என்று நாகாவே சொன்ன பிறகு நாகா என்பவள் நாதன் அம்சம் என்று புரியவில்லையா?

நாகா என்பவள் உயரமான திரண்ட இளம் பெண். பூ வைக்காதவள், வைப்பது பிடிக்காது என்று சொல்பவள். உண்மைதான். ஆனால் நாகாவுக்கு அடிக்கடி பச்சைப் பசுமையான பிரதேசங்கள் கனவில் வரும். அது தோட்டங்களாகவோ, ஒளி நுழையா அடர்ந்த காடுகளாகவோ, குதிரை மேயும் பரந்த புல்வெளிகளாகவோ இருக்கும். அவளுக்கு பசுமையும், பசுங் கனவும் மிகப் பிடிக்கும். நாதனும் நாகாவும் நெருங்கிய நண்பர்களாகி நீண்ட நேரம் பேசத்துவங்கிய வெகு பின்னாளில் நாகா நாதனிடம் தன் அந்தரங்கத்தை ஒளிக்காமல் சொல்வது போல தனக்கு வரும் பசுமையான கனவுகள் குறித்தும் பேசினாள். ஒருமுறை இருமுறை அல்ல பலமுறை நாதனிடம் பசுமை குறித்து வெகு நெரம் பேசினாள்.

நாதனுக்கு பசுமை பிடிக்காது, அதனால் அந்த பசுமை என்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நாகவோடு சினேகத்தை தொடரவும் விரும்பினான். நாக வழக்கம்பொல பசுமை பசுமை என்று பேசியதும் நாதன் கேட்டான், “பசுமை என்றால் என்ன, நாகா! பசுவிலிருந்து எடுக்கப்படும் ஒரு வித மையா? அப்படி என்றால் அந்த மை எனக்குப் பிடிக்காது
என்றான்.

நாதனின் வாயில் இப்படி அறிவுக் கொழுந்து ஒழுகுவதை அவன் அம்மா கேட்டிருந்தால் ஓடிப்போய் வேப்பமரத்தின் மீது ஏறி கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டிருப்பாள். நல்ல வேளை அப்பொழுது அவள் பல ஆயிரம் பேர் நீண்டு படுத்தாலும் எட்டிவிடமுடியாத தூரத்து அத்தியூர் கிராமத்தில் கோழிக்கு தானியம் போட்டபடி இருந்தாள்.

தாவரங்களோடு யுத்தம் செய்யும், தாவரங்களை வெறுக்கும் மனிதனை அன்றுதான் முதன் முதலாகப் பார்த்தாள் நாகா. நாகா பூ வைக்க மாட்டாளே தவிற தாவரங்களை உயிராய் நேசிப்பாள். பூக்கள் பிடிக்கிறது என்பதற்காக அதன் தலைகளைக் கிள்ள அவளுக்கு மனசு வராது. நாதனின் பேச்சைக் கேட்டு, தாவரங்களை ஒரு மனிதன் வெறுக்க முடியுமா, சாத்தியந்தானா! என்று அதிசயத்துப் போனாள். நாதன் தன்னை வித்தியாசமாகக் காட்டுவதன் மூலம் இளம் பெண் தன்னை வசீகரிப்பதற்கா அப்படி செய்கிறான் என்றும், சூழ்நிலை சுவாரஸ்யத்திற்காக சும்மா சிரிப்பு மூட்ட அப்படி பேசியிருக்கலாம் என்றும் நினைத்தாள்.

ஆனால் நாதன் அழுத்தம் திருத்தமாய் தனக்கும் மரங்களுக்கும், பசுமை என்ற வார்த்தையும் சுத்தமாக ஆகாது என்று சொன்னான். தன் பெயர் வெறும் நாதன் கிடையாது, ‘வேப்பிலை நாதன்
என்பதுதான் முழுப் பெயர் என்று வெறுப்போடு சொன்னதுடன், அந்த பெயர் எப்படி அசிங்கமாயிற்று என்றும், மரத்தால்; எப்படி அவன் சாகக்கிடந்தான் என்றும் எதற்காக மரமற்ற வீட்ல் அவன் வசிக்கிறான் என்றும் தன்; முழுக் கதையையும் சொன்னான். கதை கேட்ட நாகா அதிர்ந்து போய் “நீ பயித்தியமா? எப்படி ஒருத்தன் மரங்களை விரோதித்துக்கொண்டு உயிர் வாழ முடியும்? என்று கேட்டாள்.

“நான் வாழ்கிறேனே... இப்பொழுது எனக்கும் மரத்திற்கும், ஒரு செடிக்கும், ஒரு புல்லுக்கும் கூட சம்மந்தம் கிடையாது. என் வீட்டில் நான் மரங்களின் எதையும் உபயோகிப்பதில்;;லை. மரச்சாமான்கள் கிடையாது. தாவரங்களை அடையாளப்படுத்தும் ஓவியங்களோ சிற்பங்களோ கிடையாது. நான்;; தாவரங்களை உண்பதில்லை நான் உன்பதெல்லாம் வெறும் மாமிசங்கள்... உடுப்பதெல்லாம் செயற்கை நூல் உடைகள். படுப்பதும் பளிங்குக் கல்மீது, விலங்குத் தோல் விரித்து
என்றான்

“மிருகத்தைத் தின்பாய், மிருகத் தோல் உபயோகிப்பாய். மிருகங்கள் எதைத் தின்று வளர்கின்றன இலைதானே... கல்லும் மண்ணையுமா? மரத்தை விட்டு மனுசன் வாழ்வது சாத்தியமா? மனிதன் காட்டில் பிறந்தவன். வனமே அவனின் வாசஸ்தலம். ஆனால் மனிதன் வனத்தை விட்டு வெளியே வந்த பிறகு வனம் அவனைவிட்டு மெல்ல வெளியேறிக்கொண்டிருக்கிறது. மனிதனின் நினைவில் இருந்து மரங்கள் மறைந்துகொண்டிருப்பதற்கு அவர்களின் கனவுகளே சாட்சி. மரங்களை கனவில் கண்டதாய் சொல்லும்; ஆட்கள் இன்று யாருமே கிடையாது. மரங்களை கனவுகானாத மனிதர்களை நான் வெறுக்கிறேன்
என்று சொல்லிவிட்டு நாகா நாதனைவிட்டு விலகி உட்கார்ந்தாள்.

தான் உயிராய் விரும்பும் அந்த நாகா தன்னை எங்கே ‘கேடுகெட்ட சகோதரா
என்று சொல்லிவிடுவாளோ என்று பயந்து போனான். நாகாவுக்கு சகோதரன் ஆவதில் நாதனுக்கு விருப்பமில்லை. நாகாவுக்காக எதையும் செய்ய சித்தமாய் இருந்தான். ஒரு பூ வைக்காத பெண், பூவை வெறுப்பவள் என்று நினைத்துதான் நாகாவை விரும்பினான். ஆனால் அவளோ தனக்கு மலர்களும் தளிர்களும் மிகப்பிடிக்கும் என்கிறாள். ஆனாலும் அவளை விலக்க முடியவில்லை. நாதன் குழம்பினான்... மரங்களை நேசிக்கும் நாகாவை மரங்களை வெறுக்கும் தான் எப்படி நேசிக்க முடியும்? ஆனால் நேசிக்கிறேன்... நாகா என்னை வெறுக்கிறாள். அவனுக்கு முதன் முதலாக வாழ்க்கை வெறுத்தது. நாகா இல்லாத வாழ்வா...?

நாகா வினொதமான நாதனின் வீட்டிலிருந்து வெளியேறப் பார்த்தாள். அப்பொழுதுதான் திட்டமிட்டே நாதன் மரத்தை தன் வசிப்பிடத்திலிருந்து விலக்கி வைத்திருந்தது புரிந்தது நாகாவுக்கு. நாகா போய்விடுவாள், போனால் திரும்பமாட்டாள் என்று தெரிந்ததும் நாதன் அவள் கையைப் பிடித்து நிறுத்தி, மரங்கள்மீது எனக்கு விருப்பம்தான் கிடையாது. ஆனால் வெறுப்பதில்லை. அதில் தவறுமில்லை என்றான். நாகா அவனை வெறுப்போடு பார்த்து “உன் வீட்டை நீயே பாரேன். இது ஒரு புள் முளைக்காத சுடுகாடு. நீ அதில் இருக்கும் பிணம். நான் சுடுகாட்டு பிணங்களை வெறுக்கிறேன்
என்றாள்.

நாதன் பயந்துபோனான். நாதன் பிணமா? அவன் குரல் தழுதழுக்க “நான் மரங்களை விரும்புகிறேன். ஆனால் அவற்றை நட்டு வளர்ப்பதில்லை. நான் மரங்களுக்கும் புதர்களுக்கும் நடுவில் பிறந்தவன். செடிகளோடு வளர்ந்தவன்; நான் ஒரு வனவாசி. நான் மரத்தின் பிள்ளை. ஒரு மரத்தால் கருவேற்றப்பட்டு பெண்ணால் பிறந்தவன். ஆனால் ஆனால்...
அவனுக்கு நாக்கு குளறியது. நாகா தன் கையை தட்டிவிட்டுப் போய்விடுவாளோ என்று பயந்து கிடந்தான் அவன்.

நாகா அவனை இன்னும் வெறுப்பாகப் பார்த்தாள். “நீ பொய் சொல்கிறாய். என்னை நம்பவைக்க எதையோ சொல்கிறாய். ஒரு மரத்திற்கு பெண்ணை கருவேற்றுமளவுக்கு திறன் இருக்கிறதா? மரம் குறித்து பொய் பேசுபவனை வெறுத்து அவனை நான் என் சகோதர...

நாகாவின் வாயை நாதன் பொத்தினான் “வேண்டாம், வேண்டாம்! பேசாதே... என்னை பிடிக்காவிட்டால் ஒரு வாத்தையும் சொல்லாமல் போ... ஒரு வார்த்தையும்...
திக்கித் தடுமாறிய நாதனின் கண்களை நாகா கவனமாய் பார்த்தாள். மரங்களை நேசிக்கும் என்னை நேசிக்கும் இவனும் என்னால் மரங்களை நேசிப்பவனாவான் என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். நாதன் அவள் ரத்தத்திலும் இருந்தான். நாதனைப்; பார்த்து “உனக்கு மரம் பிடிக்கும் என்று சொன்னாயே... என்ன மரம் பிடிக்கும்?என்று கேட்டாள்.

அவன் கண் களங்கியபடி “நாக மரம்... நாகா மரம்... நாகா... நாகா...
என்றான். அவன் பிதற்றலில் உள்ள கடுமையான அன்பும், அவன் கண்ணீரில் உள்ள நாக பித்தமும் நாகாவை உருக்குலைய வைத்தது. அவன் பக்கத்தில் நின்று “உன் கண் துடைக்கட்டுமா? என்று கேட்டாள். அதன்பிறகு நாகா அந்த வீட்டைவிட்டு வெளியே போகவேயில்லை. அவன் வேப்பமரம்; அவள் நாக ஸர்பம். மரத்தை ஸர்பம் சுழன்றேறியது.
நாகா மரங்களற்ற அந்த பளிங்கு வீட்டுக்கு வந்தபிறகு தினமும் ஒரு மரம் முளைத்தது. அந்த வீட்டை அவர்கள் ஒரு வனமாகவே மாற்றியிருந்தார்கள். நிற்க, படுக்க. நடக்க இடமின்றி எங்கும் தாவரங்களும் பூக்களுமாய் இருந்தது. எல்லா இடத்திலும் செடிகளும் புதர்களுமாய் இருந்தது. வீட்டிற்கு மேலும் சுவற்றிலும் தரையிலும் எங்கும் செடி கொடிகள்.

அவர்கள் சதா சர்வகாலமும் விதைப்பதும் பதியனிடுவதும் புதிய புதிய செடிகளை தோற்றிவிப்பதுமாய் இருந்தார்கள். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன. அந்த பிள்ளைகள் செடிப் புதர்களின் அடியில் பிறந்தார்கள். உடையற்ற அவர்கள் மகரந்த வாசனையாயோடு இருந்தார்கள். ஒரு வனமாகவே அந்த வீடு மாறிவிட்ட பிறகு நாதன் தன் செல்ல நாகாவிடம் சீண்டும் காதலோடு அடிக்கடிச் சொல்வான், “நாகாவை நான் காதலிக்க ஆரம்பித்த பிறகு செடிகளும் மரங்களும்; அழகாக இருக்கிறது.


நாகா அவன் தாடையில் இடித்துவிட்டு “நீ காதலிப்பதற்கு முன்பும் பின்பும் எப்பொழுதுமே செடிகளும் மரங்களும் அழகாய்த்தான் இருந்தது
எனறாள். அவர்களின் பொய்க் கோபங்களை, காதல் பிதற்றல்களை ரசித்தபடி கிளை கிளையாய் கிளைத்து வீடு முழுவதையும் ஆக்கிரமித்து வளர்ந்தன தாவரங்கள்.

செடிகளாலும் கொடிகளாலும் மரங்களாலும் சூழப்பட்டு மறைந்தே போயிற்று இன்று அந்த வீடு. பலவருசங்கள் உருண்டோடி விட்டது. அந்த வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர்களுக்கு வீட்டுக்குள் செடியிருப்பது தெரியவில்லை ஒரு புதருக்குள் பாழடைந்த வீடிருப்பதாய் நம்பினார்கள். உண்மையில் அந்த வீடு முள் புதரில்... ஏருக்கு கள்ளிச் செடிகளில் மறைந்து பாழடைந்து இருந்தது. இப்பொழுது அங்கே யாரும் வசிப்பதை யாரும் பார்த்ததில்லை. நாதன் என்ற ஒருத்தியும் நாகா என்ற ஒருத்தனும் அந்த வீட்டில் வருசம் பலதிற்கு முன் இருந்திருக்கலாம், இப்பொழுது அது பாழடைந்த ஒரு புதர் வீடு என்று சொன்னார்கள்.

ஆனால் ‘ஒரு செடியையோ புல்லையோ எக்காரணத்தை கொண்டும் அழிக்காத மரத்தை நேசிக்கிற மனிதர்களின் கண்ணுக்கு நாகாவும் நாதனும் தெரிவார்கள்
என்று அடிக்கடி அந்த வழியாக போகும் அழுக்கு உடைக்காரன் ஒருத்தன் சொல்வதை அங்குள்ளவர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் பயித்தியங்கள் ஆயிரம் சொல்லுமென்று கவனமற்று மறந்தார்கள்.

சில பிள்ளைகள் அந்த பாழடைந்த புதர் வீட்டுக்கு அருகே விளையாடிவிட்டு வந்து அங்கே ஒரு பெரிய புதிய வீடு இருப்பதாகவும், அதற்குள் அழகழகான பூச்செடிகள் இருப்பதாகவும், அங்கே கொஞ்சம் பிள்ளைகள் தும்பிகளை துரத்திப் பிடித்தபடி விளையாடுவதாகவும் அவர்களின் அப்பாவும் அம்மாவும் உண்ண தேன் தந்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள். அந்த குழந்தைகளை பெற்றவர்கள் அடித்து இழுத்துப்போய் மருத்துவரிடம் காட்டி மாத்திரை வாங்கித்தந்தோ, பூசாரியிடம் காட்டி தாயத்து கட்டிவிட்டோ குணமாக்கப் பார்த்திருக்கிறார்கள்.

இந்தப் புதர் வீட்டில் மட்டுமல்ல உலகத்தல் உல்ல எல்லா புதர் வீட்டிலும் ஒரு அழகான ஆணும் அழகான பெண்ணும் தன் குழந்தைகளோடு வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். மரங்களை நேசிக்கும், தவரங்களை துன்புருத்தாத மனிதர் கண்ணுக்கு அவர்கள் நிச்சயமாகத்; என்றைக்குமே தெரிவார்கள் என்று அந்த அழுக்கு உடைக்காரன் அதன்பிறகு வெகு காலம் சொல்லி செத்துப்போனான். ஒருவேளை நாமும் மரத்தை துன்புறுத்தாத நிஜமான ஆளாக இருந்தால் அவர்கள் தெரிவார்களோ என்னவோ.

ஒவ்வொரு ஊரிலும் பல புதர்வீடுகள் இருக்கிறது ஆனால், நாதனும் நாகாவும் தன் பிள்ளைகளொடு வசிக்கும் அந்தப் புதர் வீடு எது என்ற புதிர் இன்று விடுபடாமல் நின்றுவிட்டது. மரங்களை நேசிப்பவர் கண்ணுக்கு அவர்கள் தெரிவார்களென்றால் இப்பொழுது ஏன் எவர் கண்ணுக்கும் தெரியவில்லை? “எவர் கண்ணுக்கும் தெரியவிட்டாலும் அவர்கள் புதர்வீட்டில் வசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்
என்று செத்துப்போன அழுக்கு உடைக்காரன் உலகத்தின் அத்தனை புதர் வீட்டு முன்பாகவும் நின்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறான். அந்த வார்த்தை ஏன் யாருக்கும் கேட்கவில்லை என்பதுதான் இப்பொழுது புதர் வீட்டுக்கு முன்னால் இருக்கும் கேட்டறிய முடியாத புதிர்.

முற்றும்

No comments: