Tuesday, April 24, 2018

அழகிய லம்பன் - சிறுகதை


சில விநாடிகளுக்கு முன்பு எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. சற்று இடறியிருந்தாலும் உயிர்ப்பலி நேர்ந்திருக்கும்.  அதுவுமில்லாமல் நடந்தது ஒரு சாகசச் சம்பவம். பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற ஒரு இளம் பெண்ணை லம்பன் உயிரைக் கொடுத்து காப்பாற்றியிருக்கிறான். அது நிச்சயமாக ஒரு சாகசமேதான்.
லம்பனுக்கு இருதயம் படபடக்கிறது. அத்தனை அழகான பெண்ணை இதுவரை இத்தனை நெருக்கத்தில் அவன் சந்தித்ததில்லை. அணைத்துக் கொள்ள வேண்டும் போல அத்தனை இளமையாக. அழகான பெண் அவள். அவள் கண்கள். அந்தக் கண்களில் தெரிவது நன்றியா.. காதலா?
“உனக்கு ஒண்ணுமில்லயே.. யார் நீ? எதுக்கு சாகப் பாத்த?லம்பன் விசாரிக்கிறான்.
“ரொம்ப அழகா இருக்க.. கண் ஜாடை காட்டினா இளவரசி மாதிரி பாத்துப்பாங்க.. சாகற அளவுக்கு என்ன பிரச்சனை..?
“உன்ன மாதிரி ஆம்பளைதான்டா பிரச்சனை..
காப்பாற்றப் பட்ட பெண், காப்பாற்றிய லம்பனை, மாடியின் விளிம்பிலிருந்து எதிர்பாராத தருணத்தில் கோபத்தோடு தள்ளிவிடுகிறாள். லம்பன் அலறியபடி தரை நோக்கி வீசப்படுகிறான். எல்லாம் முடிந்துவிட்டது. லம்பன் சாகப்போகிறான். கடைசி தளம் வரும்போது, கபாலம் சிதறி சாவதற்கு சிலவினாடி முன்பு, தூக்கம் கலைகிறது. அது கனவு. ஆமாம் கனவு. ஆனாலும் பயத்தில் முகமெல்லாம் வியர்த்திருக்கிறது.
லம்பன் கணக்குப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாவை கனவில் கண்டிருக்கிறான். அவனே செத்துப்போனதும் அதற்குள் அடக்கம். செத்தது போல கனவு காணாத மனிதர்கள் உலகத்தில் இருக்க மாட்டார்கள். லம்பனுக்கு வயது வேறு கூடிவிட்டது. இப்போதெல்லாம் தின்றது செரிப்பதில்லை. வாயுக் கோளாறு, நெஞ்செரிச்சல், தூக்கமின்மை. அதனால் சற்று கூடுதலாய் கனவுத் தொல்லை.
இனி தூங்க முடியாது. விடிந்துவிட்டது. எழுந்து உட்கார்ந்தால் அநியாயத்திற்கு குளிர்கிறது. மின்விசிறியை நிறுத்துகிறான்.  கட்டிலுக்கு பக்கத்திலேயே ஜன்னல் இருந்தாலும்  எட்டிப் பார்க்காமல் சூரியன் தெரியாது. சோம்பல் முறிக்கிறான். ஜன்னலைத் திறக்கிறான். காலைப் பொழுது அழகாய்த் தெரிகிறது.
உலகத்தை ஆசீர்வதிக்க அவன் ஒன்றும் ஞானி இல்லை. ஆனாலும் முணுமுணுக்கிறான். “உலகின் எல்லா உயிர்களும் அன்பும் கருணையும் கொண்டு அமைதியோடு வாழ வேண்டும்.
 பாழாய் போன உலகம் அப்படியா இருக்கிறது. ஒன்றை ஒன்று கொன்று தின்று ரத்தம் புசித்து... இந்த உலகம் நாசமாய்ப் போகட்டும். கோபத்தில் சபிக்கிறான்.
லம்பனுக்கு ஒரு வழக்கம். காலையில் எழுந்ததும் கொதிக்கக் கொதிக்க தேநீர்  வேண்டும். இல்லையென்றால் கண்டபடி திட்டவேண்டும்வாகான ஆள் கிடைத்தால் நாள் முழுக்க திட்டினாலும் லம்பனுக்கு அடங்காது. அது லம்பன் புத்தி.
“தெனம் தெனம் ஏங்க இப்படி கத்தித் தொலைக்கறீங்க.. இப்படியே போனா பைத்தியம் முத்தி சாகப் போறீங்க.
லம்பன் மனைவி அழுத்துக் கொள்வாள். திட்டவே முடியாதபடி நல்ல மனிதர்கள் உலகில் இல்லயே.. திட்டுவதற்கு ஏதுவான, அசிங்கமான, எதாவது ஒன்றை தப்பும் தவறுமாய் செய்வதுதானே மனுச புத்தி. அவர்களை கண்டிக்காமல் கடந்து போகக் கற்றவன் மனிதன். கல்லாதான் பைத்தியம்.
லம்பனுக்கு அரசாங்க வேலை. தொடக்கத்தில் நீதிமன்ற டவாலி. இப்போதும் டவாலி. தொடக்கம் முதல் இன்றுவரை உத்யோகத்தில் சந்தோசமில்லை. சட்டமாவது நீதியாவது. எல்லாமே குப்பை. 
காலையில் சிரைக்க வேண்டும். டூட்டியில் முறைக்க வேண்டும். நீதியரசரைப் பார்த்தால் விரைக்க  வேண்டும். இந்த வேலைக்கு காலம் முழுக்க சிரைத்தே செத்திருக்கலாம்.
கன்னத்தை தடவுகிறான். நரைமுள் குத்துகிறது. எழுந்து சென்று கண்ணாடி பார்க்கிறான். முகம் விகாரமாய் தெரிகிறது. அதில் தெரிவது மனிதனா, மிருகமா? கோணல் முகம் கொடூரமாய் தெரிகிறது.  கண்ணாடிக்கு எதோ நேர்ந்துவிட்டது. தப்பாக காட்டுகிறது.
தண்ணீர் அடித்து கண்ணாடியை துடைக்கிறான். மீண்டும் பார்க்கிறான். கோணல் முகம் இன்னும் கொடூரமாய்த் தெரிகிறது. கண்ணாடியில் தப்பில்லை. முகத்தில்தான் கோளாறு. வாய் சற்று கோணியிருக்கிறது. ஒரு கண் சிறுத்திருக்கிறது. மூக்கு முட்டைபோல் புடைத்து, மண்டை நசுங்கியது போல ஆகி.. அடக் கடவுளே.. இன்றைக்கு என்ன ஆனது இந்த முகறைக்கு?
இரவானால் ஓநாய் மனிதன் ஆவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... நிஜத்தில் வாய்ப்பில்லை. ஆனால் லம்பன் முகம் ஓநாய் போல ஆகிவிட்டது. கதவில் முட்டிக்கொண்டது போல முகத்தில் அத்தனை வீக்கம். என்னாச்சி முகறைக்கு? லம்பன் பதட்டமாகிறான்.
இந்த முறை தண்ணீரை முகத்தில் அடித்து நன்றாக கழுவுகிறான். மீண்டும் கண்ணாடி பார்க்கிறான். ஒரு கண் சிறுத்து, ஒரு கண் பெருத்து, வாய் கோணி, சந்தேகமே இல்லை.. முகம் கோரமாகிவிட்டது. ஒரே இரவிலா?
இது எப்படி நடக்கும்? முகவாதம் வந்துவிட்டதா? பக்க வாதப் பிரச்சனையா? கை கால்களை சோதிக்கிறான். நன்றாக இருக்கிறது. முகத்தில்தான் பிரச்சனை.
எதிர்பாராத, நம்ப முடியாத, வாய்விட்டு கதறக்கூட முடியாத, திடீர் சம்பவம் நடந்துவிட்டால் அடுத்து என்ன செய்வது?  ஜன்னல் கதவில், மூக்கை எதேச்சையாக முட்டிக் கொண்டால் வழக்கமாய் என்ன செய்வார்களோ அதேதான் இதற்கும். லம்பன், ஸ்தம்பித்து போய் உட்கார்ந்து விட்டான்.
லம்பன் முகம், நேற்று கூட நன்றாக இருந்தது. மீண்டும் கனவுத் தொல்லையா? பொறுமையாக நிதானமாக, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பார்க்கிறான். கண்ணாடியில் கோர முகம். சந்தேகமே இல்லை. லம்பன் அகோரியாக மாறிவிட்டான். அதிர்ச்சியில் உறைந்து போகிறான்.
என்னாச்சி எனக்கு? எதனால இப்படி ஆச்சி? குழப்பம்.. கோர முகம்.. இனம் புரியாத பதட்டம்.. இதற்கு நடுவே, தற்கொலைப் பெண்ணின் அழகிய முகம் அரை நொடி வந்து போகிறது. அவள் வெறியேற்றும் அழகி. மொட்டைமாடி கொலைகாரி. குறைந்தபட்சம் அவளை, அங்கேயே வைத்து, அவள் சம்மதத்தோடு கதறக் கதற... போதும். ஏன் இப்படி விபரீதமா யோசிக்கற?  முகம் போலவே புத்தியும் கோணலாகிவிட்டதா?
இந்த முகத்தை யாருக்கும் காட்டக் கூடாது. தெரியக் கூடாது. பார்த்தால் கொடுமை. அசிங்கத்தை மறைப்பது மனிதர்களுக்கு அத்தனை சுலபமில்ல.. லம்பன் பதறிய அதே நேரம், “என்னங்க… என்று அழைத்தபடி வருவது சந்தேகமே இல்லாமல் லம்பனின் மனைவி.
லம்பன் இன்னும் பதட்டமாகிறான். நிலமை மோசமாகிறது. இப்போது என்ன செய்வது? மனைவி கதவை தட்டுகிறாள். தவிர்க முடியாது. தாமதித்தால் கதவை உடைப்பாள். வேறு வழியில்லை. லம்பன் கதவை திறக்கிறான். மனைவி, முகத்தை பார்க்கிறாள். அவள் முகத்தில் பேய் கண்ட திகைப்பு. பேரதிர்ச்சியில் வாய் பிளக்கிறாள்.
“அய்யைய்யோ.. என்னாச்சிங்க? மொகம் ஏன் கோணிக் கிடக்கு? அய்யோ கடவுளே.. பாக்கவே பயங்கரமா இருக்கே..
“அது ஒண்ணுமில்ல.. பயப்படாத.. பூச்சி எதாவது கடிச்சிருக்கும். சரி பண்ணிக்கலாம். நீ தைரியமா இரு..லம்பன் சமாதானம் செய்கிறான்.
மனைவி பதறுகிறாள். ஆபத்தான தோற்றமுள்ள வினோத மிருகமொன்றை  பக்கத்தில் பார்த்தால் பயம் வராதா? அவளுக்கு வருகிறது. அந்த அச்சத்தில், கண்கள் விரிய, வாய் கோணிக்கொண்டு மல்லாந்து விழுகிறாள். அது அதிர்ச்சி தந்த மயக்கம்.
உறுதியாக இது ஒரு பயங்கர மாற்றம்தான். லம்பனின் நீண்ட நெடிய வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை. இப்போது முகத்தை பார்ப்பதா? மயங்கி விழுந்த மனைவியைப் பார்ப்பதா?
லம்பனை அழகென்றும் சொல்ல முடியாது, அசிங்கமென்றும் சொல்ல முடியாது.  சுமாரானவன். அதுவே, போதுமென்று அந்த அழகில் மயங்கிதான் மனைவி காதல் மணம் புரிந்தாள். ஒன்றிரண்டு நரை தவிர நேற்றுவரை எந்த குறையும் இல்லை. இன்றைக்கு திடீரென்று, ஒரே இரவில் இப்படி மாறிவிட்டது, ஒருவேளை லம்பன் இறந்துவிட்டானா?
செத்திருந்தால் மனைவி கண்ணுக்கு தெரிந்திருக்க மாட்டான்.  உயிர் இருக்கிறது. மனைவியே அதிர்ச்சியில் மயங்கி விழுகிறாள். அப்படியென்றால் நிஜம். யூகிக்க முடியாத எதோ ஒரு பிரச்சனை, புலப்படாத ஒரு பாதிப்பு முகத்திற்கு வந்திருக்கிறது. அது என்ன? அதை சரிசெய்தால் முகம் சரியாகும். லம்பன் மீண்டும் கண்ணாடி பார்க்கிறான்.
பார்த்து பழகிவிட்டால் ஆந்தைகூட அழகுதான். இந்த முறை முகம் சற்று சாந்தமாய் தெரிகிறது. வாய் கூட கொஞ்சமாகத்தான் கோணியிருக்கிறது. ஒரு கண் வீங்கியிருக்கிறது. மூக்கு சற்று புடைத்திருக்கிறது. அவ்வளவுதான். பயப்பட ஒன்றுமில்லை.
இரவெல்லாம் இருமல். சளிப் பிரச்சனை. சரியாக தூங்கவில்லை. தலை நரைத்திருக்கிறது. முள்தாடி.. மொத்தத்தில், இது சாதாரண சளி பிடித்த ஒரு வயோதிகன் பிரச்சனை. முடிவெட்டி, முகச்சவரம் செய்து வெந்நீரில் குளித்து, சளிக்கு ஆவி பிடித்தால் எல்லாம் சரியாகும். பயப்பட ஒன்றுமில்லை.
மயங்கிக் கிடந்த மனைவியை கோபமாய் பார்க்கிறான். முகத்தில சின்னதாய் ஒரு வீக்கம். அதற்கே மயங்கி விழுந்து கேவலப்படுத்துகிறாள் மூதேவி. எட்டி உதைக்கலாமா? அவளே மயக்கம் தெளிந்து எழுகிறாள்..
“என்னங்க.. என்னாச்சிங்க உங்களுக்கு?
“எனக்கு ஒண்ணும் ஆகலம்மா.. சரியா தூங்கல.. இருமல் வேற. கொசுக்கடி.. இப்பவே சலூனுக்கு போய்,  ஹேர் கட், கலரிங் பண்ணி.. சுடச் சுட ஒரு வெந்நீர் குளியல் போட்டு,  லோசன் பூசி ஸ்ட்ராங்கா பவுடர் அடிச்சிட்டா எல்லாம் சரியாயிடும். நீ பயப்படாத. இப்ப வந்துடறேன்.
லம்பன் சலூனுக்கு ஓடுகிறான். மறக்காமல், ஒரு பெரிய சால்வையை  முக்காடு போட்டு முகத்தை மூடிக்கொள்கிறான்.
     ண்களுக்கான அழகு நிலையம். இழந்த அழகை மீட்கும் எண்ணத்தோடு பலபேர் வந்திருக்கிறார்கள். லம்பன், சால்வையால் முகத்தை மூடியபடி உள்ளே வருகிறான். எத்தனை பேர் வந்த கடை? நோட்டமிடுகிறான்.
நான்கு பேர் காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவராய் அமரவைத்து, பொன்னாடை போர்த்தி, முடியை வெட்டி, தாடியை வழித்து, மீசையை நறுக்கி.. இவர்கள் வேலை முடிய எத்தனை காலம் பிடிக்கும்?  லம்பனுக்கு அலுக்கிறது.
தலைக்கு மேலும் மூக்குக்கு கீழுமான மத்திய பிரதேசத்தில் ஒன்றுக்கும் உதவாத ரோமத்தைப் படைத்த விவஸ்தையற்ற கடவுளை கண்டபடி சபிக்கிறான். முடி வெட்ட வந்தவர்களை இரண்டு முறை சபிக்கிறான். கஷ்டமரை வரவேற்காமல், வேலையே கடமையென்று முடிவெட்டிய இளைஞனை மூன்றுமுறை சபிக்கிறான். காத்திருந்தவர்களுக்கு மத்தியில் முகம் காட்டாமல் அமர்கிறான்.
இப்போது, டிவி பார்ப்பதா, பேப்பர் படிப்பதா, ரகசியமாக கண்ணாடி பார்ப்பதா? யாரும் அறியாமல், அங்கிருந்த கண்ணாடியில் பார்க்கிறான். அதே கோர முகம். மாற்றமே இல்லை.. மூடிக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறான். யாராவது பார்க்கிறார்களா? யாருமே பார்க்கவில்லை.
வெகுநேரம் கழித்து லம்பன் முறை வருகிறது. சுழல் நாற்காலியில் அமர்ந்து கொள்கிறான். முடி திருத்தும் இளைஞன் மரியாதை தெரிந்தவன். அவன் பவ்வியமாக, “சார்.. சால்வைய எடுத்துடுங்க..
கண் மட்டும் தெரியும்படி  முக்காடு போட்டிருந்த லம்பன்  இளைஞனை பாவமாய் பார்க்கிறான். பொண்டாட்டியே பயத்தில் மயங்கி விழுந்திருக்கா. இவன் தாங்குவானா? அவனுக்கு இன்றைக்கு போதாத காலம். லம்பன் போர்வையை விலக்குகிறான். கோர முகம் பயங்கரமாகத் தெரிகிறது.
இளைஞன் பார்க்கிறான். சிலநொடி அதிர்ச்சி. பிறகு, இதெல்லாம் சகஜம், எத்தனையோ பார்த்திருக்கேன் என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு, “சார்.. கட்டிங்கா ஷேவிங்கா?
“ரெண்டும்தான்.
இளைஞன், லம்பனுக்கு பொன்னாடை போர்த்துகிறான்.  அதில், மெல்லிய முடை நாற்றம் வீசுகிறது. பலி ஆட்டிற்கு தண்ணீ்ர் தெளிப்பது போல தலையில் தெளித்து, இளைஞன் வேலையை தொடங்குகிறான்.
இளைஞனின் தொழில் திறமை  கத்தரிக்கோலின் சத்தத்தில் தெரிகிறது. மிக கவனமாய், தீவிரமாய், வெகுநேரம் வெட்டுகிறான். நேரம் போகப் போக அவன் முகம் மாறுகிறது. தலையில் எதோ தப்பிருக்கிறது.
அவன் கத்தரிக்கோலை மாற்றுகிறான். பிறகு சீப்பை. பிறகு இரண்டையும் மாற்றுகிறான். அதன் பிறகு சுற்றி சுற்றி வந்து, முடிந்தவரை திறமையைக் காட்டி என்னவெல்லாமோ செய்து பார்த்து கடைசியில் திகைத்துப் போய் நிற்கிறான்.
வெட்ட வெட்ட லம்பன் தலை இன்னும் இன்னும் கொடூரமாய் மாறிக் கொண்டிருக்கிறது. தளர்ந்து போன இளைஞன் கத்திரியையும், சீப்பையும் கை விடுகிறான். விரல்களைக் கொண்டு என்னென்னவோ செய்கிறான்.  அப்போதும் திருப்தி இல்லை. அவன் முகத்தில் கலவரம்.
'சார், நான் ஒரு டீ அடிச்சிட்டு வந்துடறேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க?" பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து ஓடுகிறான்.
அவன் தப்பித்து ஓடுகிறானா? திரும்ப வருவானா, மாட்டானா? லம்பனுக்கு கவலையாக இருக்கிறது.
இளைஞனை திறமையற்றவன் என்றோ, போன மாதம்  வரையில் நாய்களுக்கான குளியல் சோப்பு விற்றவன் என்றோ குறைத்து மதிக்க முடியாது. லம்பனுக்கு முன்பாக முடி வெட்டிக்கொண்ட செம்மண் நிறக் கிழவனை அவன் மன்மதன் போல மாற்றியிருந்தான். இளைஞனின் கை நேர்த்தியில் ஒரு குறையும் இல்லை. லம்பனின் தலையில்தான் பிரச்சனை.
அநேகமாய் முடி மொத்தத்தையும் வெட்டித் தீர்த்தாயிற்று. நெருப்பில் தீய்க்கப்பட்ட இறைச்சி ஆட்டின் தோற்றத்திற்கு லம்பன் வந்திருந்தான். இதற்கு மேல் இங்கே வெட்ட என்ன இருக்கிறது? லம்பன் கவலைப்பட்டு முடிப்பதற்குள் இளைஞன் மீண்டும் வருகிறான். சற்று தெம்போடு. மீண்டும் தொடங்குகிறான். எப்படியும் சரியாக்கிவிடலாம் என்கிற நம்பிக்கையோடு.
இந்த முறை.. முப்பதே வினாடி. லம்பன் தலை பயங்கரமானது என்று இளைஞனுக்கு புரிந்து போகிறது. அவன் கை நடுங்குகிறது. இதற்கு மேல் திறமை காட்ட என்ன இருக்கிறது. அவன், தீர யோசித்து ஒரு முடிவோடு கேட்கிறான்.
'சார், உங்களுக்கு இது செட் ஆகல.. லாஸ்ட் அண்ட் பைனல் சிறப்பா ஒரு மொட்டை போட்றலாமா?
மொட்டைக்கு மிஞ்சிய சிகையலங்காரம் உலகத்தில் இல்லைதான்.  அதற்காக, காது குத்தாமல், சாமிக்கு வேண்டிக்கொள்ளாமல், பேன் தொல்லைகூட இல்லாமல் ஒருத்தன் எதற்காக மொட்டை போட வேண்டும். லம்பன் கத்துகிறான்.
'உனக்கு தொழில் தெரியுமா, தெரியாதா? பரம்பரைத் தொழிலா, பஞ்சத்துக்கு செய்யறையா? சந்தோசமா செய்யறீயா, கெரகமேன்னு செய்யறீயா? வெட்டத் தெரியாத உனக்கெல்லாம் கடை எதுக்கு கத்திரிக்கோல் எதுக்கு?
கோவப்படுவது தவறென்று லம்பனுக்கு புரிகிறது. ஆறு மணி நேரம், நாலு கத்தரிக் கோல், எட்டு சீப்பு, இரண்டு வாலி தண்ணீர் இவ்வளவையும் செலவளித்த பிறகும் உருப்படியான மாற்றமில்லை. தலைக்கு மொட்டை அடிக்காமல் வேறு எதை அடிப்பது? இளைஞன்  பதிலுக்கு கோபப்படாமல் நிதானமாய் பேசுகிறான்.
“சார்.. என்ன விடுங்க.. பொறக்கறப்ப கத்தரிகோலோட பொறந்தனா, இல்லை கத்தரிகோல் உதவியால பிறந்தேனாங்கறது என்னோட ரகசியம். இப்ப பிரச்சனை, சரி பண்ணவே முடியாத உங்க தலை.“
“ஆமா என் தலை.. இத என்ன பண்ணலாம்?”

ஒரு மொட்டைய பக்காவா போட்றலாம் சார். இல்ல, மொட்டையெல்லாம் போட்டுக்க மாட்டேன் அப்படினு நீங்க அடம் பிடிச்சா, நான் உறுதியா சொல்றேன்.. இனிமே. ஜவுளிக்கடையில, பொண்ணுங்களுக்கு உள்பாவாடைய கிழிச்சி வயிறு வளத்தாலும் வளப்பேன்.. இந்த தொழில பாக்க மாட்டேன்.
இளைஞனின் பேச்சில் தெரிந்த உறுதியை பார்த்தால், அவன் உள்பாவாடை கிழிக்கப் போனாலும் போய்விடுவான். லம்பனுக்கு வழியில்லை. உன்னால் முடிந்ததை செய். சம்மதிக்கிறான்.
இளைஞன் மீண்டும் தொடங்கி, முழுதாய் மொட்டை அடிக்கிறான். அப்போதும் மாற்றமில்லை. கண்ணாடியில் தெரிவது, முகமல்ல, அது தலையுமல்ல.. அது ஒரு மண்டையோடு. மொட்டை அடிப்பதாய் நினைத்துக்கொண்டு தலை மாமிசம் மொத்தத்தையும் வலித்துவிட்டானா? தற்போதைக்கு மிஞ்சியிருப்பது ஒரு உயிருள்ள மண்டை ஓடு. காளி கை கபாலம்.  
மொட்டை போட்டவனும் மொட்டை அடித்துக்கொண்டவனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல், கன்னத்தில் கை வைத்து, இந்த உலகத்தில் எப்படி இப்படியெல்லாம் நடக்கிறது என்று கவலையோடு யோசிக்கிறார்கள். இளைஞன் நடுக்கத்தோடு லம்பனிடம் கேட்கிறான்..
'சார், நீங்க பொறக்கறப்பவே இப்படித்தானா?
லம்பனுக்கு ஆத்திரமாக வருகிறது. அடுத்து அவன் என்ன கேட்பான் என்பதையும் யூகிக்க முடிகிறது.
“சார்.. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என்று அடுத்து கேட்பான். ஆனதாய் சொன்னால் இன்னொன்றும் கேட்பான்.
“இப்ப உங்க மனைவி உங்களோடதான் இருக்காங்களா?
மனிதன் இன்னொரு மனிதனை திட்டாமலே இருப்பதென்பது சரித்திரத்தில் சாத்தியமல்லாத ஒன்று. எத்தனை இளக்காரம், எத்தனை நக்கல் பேச்சு. உன் மனைவி உன்னோடதான் இருக்காளா? எத்தனை மோசமான வக்கிரமான கேள்வி. லம்பனை இதைவிட அசிங்கப்படுத்த யாராலும் முடியாது.
சவரக்கத்தி எடுத்து அவனை வெட்டலாமா என்று வெறியேறுகிறது. அந்த கோபத்தில், லம்பன் முகம் இன்னும் கோரமாகிறது. லம்பன் அதையும் தாண்டி கொந்தளிக்கிறான்.
“நான் நேத்துவரைக்கும் நல்லாதான்டா இருந்தேன். உன் பொண்டாட்டிய என் பொண்டாட்டின்னு சொல்ல வெக்கிற அளவுக்கு அழகா இருந்தேன்டா. என்ன கருமமோ தெரியல, நீயெல்லாம் கேலி பேசற மாதிரி, என் மொகறை இன்னைக்குத்தான்டா இப்படி ஆச்சி.
இளைஞன் முகத்தில் கோபமே இல்லை. லம்பனின் வேதனை புரிந்திருக்க வேண்டும். சாந்தமாகவே பேசுகிறான்.
“சார்.. கோச்சிக்காதீங்க.. நீங்க கண்டிப்பா அழகாதான் இருந்திருப்பீங்க.. நீங்க மட்டுமில்ல.. உங்க குடும்பமே அழகான குடும்பம்தான். மண்டையோட்டு அமைப்ப வெச்சி  என்னால புரிஞ்சிக்க முடியுது. முகத்தோட அழகே கச்சிதமான மண்டையோட்டுல இருக்கு.. ஆனா என்னோட சந்தேகம்.. உங்க முகம் எதனால இப்படி ஆச்சிங்கறது. என்ன சார் பிரச்சனை?
“தெரியலடா.. எனக்குப் புரியல. நடக்கற எல்லாமே புதிரா இருக்கு.
குழப்பத்தில் லம்பன் முகம் இன்னும் மோசமாகிறது.. இனம் புரியாத கோபம். அந்த கோபத்தால், முகம் இன்னுமின்னும் விகாரமாகிறது.
. “சார்.. இப்ப எனக்கு புரிஞ்சி போச்சி.. இளைஞன், எதையோ கண்டுபிடித்தவன் போல பரபரப்படைகிறான்.
“உங்க முகம் எதனால இப்படி ஆச்சி, என்ன பிரச்சனைன்னு எனக்கு நல்லா புரிஞ்சி போச்சி.  இத சரி பண்ணிக்கலாம் சார். ரொம்ப ஈஸி.. பயப்படாதீங்க சார். பக்காவா பண்ணிக்கலாம்.
“மொதல்ல பிரச்சனை என்னன்னு சொல்லு
 “சொல்றேன் சார்.. மொதல்ல இத வாயில அடக்குங்க..
இளைஞன் ஒரு பொட்டளத்தை கொடுக்கிறான். அதை வாங்கியபடி, “என்னது?
“தம்பாக்கு சார்.. வாய்ல அடக்குங்க.. ஜிவ்னு ஏறும். எல்லா கஷ்டத்துக்கும் இதுல கொஞ்சம் ரிமடி இருக்கு.
லம்பன் தம்பாக்கை வாயில் அடக்குகிறான். ஜிவ்வென்கிறது. கொஞ்சம் போதை. கொஞ்சம் மிதப்பு. சற்று நிதானம் வருகிறது. முகம் கோணலாவதெல்லாம் ஒரு பிரச்சனையா? மூக்கு வீங்குவதெல்லாம் ஒரு பிரச்சனையா? எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம். கலக்கம் போய் ஒரு அலட்சியம் வருகிறது. தைரியம் பிறக்கிறது.
“இப்ப சொல்லு.. எனக்கு என்ன பிரச்சனை?
“பயப்படற அளவுக்கு ஒண்ணுமில்ல சார்.. நீங்க ரொம்ப நெர்வோஸா இருக்கீங்க.. உள்ளுக்குள்ள ஒரு டென்சன். படபடப்பு. எது மேலயோ கோவம்.. நாம, ரொம்ப கோவமா இருந்தா, ஆவேசப்பட்டா நம்ம முகம் நம்மாளயே பாக்க முடியாதபடி சிலநேரத்தில் கேவலமா மாறிடும்.. அதான் பிரச்சனை?
“என்னடா.. என்ன வெச்சி காமெடி பண்றீயா?
“இல்ல சார்.. நிஜமாதான் சொல்றேன்.. நம்மோட அழகுங்கறது மொகத்தில இல்ல.. மனசில இருக்கு.. பொறக்கறப்ப எல்லாருமே அழகாதான் பொறக்கறாங்க. குழந்தைகள்கிட்ட கோவம் கிடையாது, ஆத்திரம் கிடையாது, ஆவேசம் கிடையாது. அதனால குழந்தைகள் எப்பவும் அழகுதான். ஆனா, வளர வளர அழகே போயிடுது. எல்லாருக்குமே. காரணம் உணர்ச்சிகள்..
 “உணர்ச்சிகளா?
“ஆமா சார்.. நம்மோட அழக உணர்ச்சிகள்தான் மாத்துது. நாம வயசான அழக இழக்கறதுக்கு அதான் காரணம். நமக்கு வயசாயிடுச்சி, கவர்ச்சி போயிடுச்சி முன்ன மாதிரி இல்ல.. அதான் இப்படின்னு பொதுவா சமாதானம் பண்ணிக்கறோம். நிஜம் அதில்ல சார். நாம அழகை இழந்து அசிங்கமா மாறக் காரணம் வயசு இல்ல. உணர்ச்சிகள்..
“அது என்னடா உணர்ச்சி.. காம உணர்ச்சியா?
“சார். விளையாடாதீங்க.. நான் சொல்றது எக்ஸ்ட்ரீம் எமோசன்ஸ். அதாவது தீவிர, அதிதீவிர மன உணர்ச்சிகள். சார் மொறைக்காதீங்க.. புரியறபடி சொல்றேன்.. நாம எப்பவும் சந்தோசமா, சிரிச்சிகிட்டே இருந்தா முகம் குழந்தையாட்டம் அழகா இருக்கும்.  இதே,  பயங்கரக் கோவம் வந்தா மொகத்த பாருங்க.. நமக்கே சகிக்காது.. கேவலமா இருக்கும். உணர்ச்சிகள் மாத்தும் சார்.. முகத்தையே மாத்தும்.
டேய்.. இந்த மூஞ்சி ஒரே ராத்திரியில இப்படி மாறியிருக்கு
 “இது திடீர் மாற்றம் சார்.. சிலபேருக்கு ஆகும். முகலாய மன்னர் ஷாஜகான் இருந்தாரில்ல.. அவருக்கு இப்படி ஆயிருக்கு.. அவரோட காதலி மும்தாஜ் செத்தப்ப ஒரே நாள்ல அந்தாளுக்கு முடியெல்லாம் நரைச்சி… தள்ளாத கிழவனாயிட்டாருன்னு சரித்திரத்தில..
“டேய்.. நீ என் பிரச்சனைய பேசுடா.  இப்ப எதுக்கு ஷாஜகான்
 “ஓகே சார்.. நான் ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்கு வரேன். நம்மகிட்ட விரும்பத்தகாத பலவித உணர்ச்சிகள் இருக்கு. கோவம், பொறாமை, வயித்தெரிச்சல்.. வன்மம், வக்ரம், பழிவாங்கற வெறி,  ஆத்திரம், சாகணும் போல விரக்தி இப்படி பல வெரைட்டி. ஒருத்தன், மோசமான உணர்ச்சிகளால தொடர்ச்சியா பாதிக்கப்பட்டா, அந்த உணர்ச்சிகள்ல ஒன்னு அவன மொத்தமா காலி பண்ணிடும். அழகே போயிடும். இப்ப சொல்லுங்க.. உங்களுக்கு என்ன சார் பிரச்சனை..?
“பிரச்சனை இல்லடா.. கோவம்..
“யார் மேல சார்?
“எல்லாத்து மேலயும் கோவம்டா. பாழாப்போன மனுசங்க மேல சமுதாயத்து மேல. கேடுகெட்ட இந்த வாழ்க்கை மேல.. ஜந்துவா பிறந்துட்டமேன்னு என்மேலயே கூட கோவம்தான்..
“சார்.. இது கோவம் இல்ல. விரக்தி..
விரக்தி இல்லடா.. வெறி. கேவலமான இந்த மனுசன் இருக்கானே… அவன் அடிக்கிற கூத்து, பண்ற சேட்டை பாத்தாலே பத்திட்டு வருது. மனுசங்களாடா இவங்க? ஒவ்வொருத்தனும் எப்படி இருக்கான் பாத்தல்ல? குடி கெடுக்கிறான், கொலை பண்றான், பொய் பேசறான், துரோகம் பண்றான். மனுசன் சுயநலப் பிசாசா மாறிட்டான். ஒருத்தன ஒருத்தன் அடிச்சி திங்கறான்டா. மனுசன் மிருகமாயிட்டான். உலகத்தில எவனுமே சரியில்லடா.
சார்.. தப்பா நினைக்காதீங்க.. உங்களுக்கு பேமிலி பிராப்ளமா? வொய்போட எதும் சண்டையா?
லம்பன் முறைக்கிறான்.
“இல்ல சார்.. சில பேருக்கு வீட்டம்மா சரியில்லன்னா மொத்த மனுசங்க மேலயும் காண்டாயிடும். உலகமே கெட்டுப்போச்சின்னு கத்த ஆரம்பிச்சிடுவாங்க..
டேய்.. இது என்னோட பிரச்சனை இல்ல. சமூகப் பிரச்சனை. இங்க எவனுமே சரியில்லடா. உலகத்தில எல்லாருமே கரப்ட்டேட். எல்லாமே தப்பா இருக்குடா. மோசமான அரசங்கம், விலைபோன நீதி, கேடுகெட்ட பிரஜைகள்.. சோத்துக்கு போராட்டம், சுரண்டல், முட்டாள்களின் தேர்தல், திருடர்களின் ஆட்சி, திரும்ப போராட்டம்.. வாழ்க, ஒழிக.. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், என்கவுன்ட்டர்,  எல்லை தாண்டிய பயங்கரவாதம், போர், இன அழிப்பு.. டிவில பேப்பர்ல தெனம் தெனம் இதானேடா எழவெடுக்கறாங்க
“ஆமா சார்..
“என்னடா ஆமா..  இது என்னோட பிரச்சனையா? என் பொண்டாட்டியோ பிரச்சனையா? இந்த உலகம் எனக்கு பொண்டாட்டியாடா? இங்க எல்லாமே சீரழிஞ்சி போச்சிடா. கலவரம் பண்றவன், ஆயுதம் பண்றவன், மக்களை பட்டினி போட்டு கொல்றவன்னு இந்த உலகத்தில தீய சக்திகளோட ஆதிக்கம் அதிகமாயிடுச்சி..“
லம்பன் கொதிக்கிறான்.. பற்களை நறநறவென்று கடிக்கிறான். அவன் ஓநாய் மனிதன் ஆகிவிட்டான். அவன் முகத்தில் ஓநாய் பற்கள் துருத்துகிறது. முகம் இன்னும் விகாரமாகிறது. இப்போது முகம் பிரச்சனை அல்ல.. அது தனிமனிதப் பிரச்சனை. இப்போது உலகம்தான் பிரச்சனை..
“டேய்.. இந்த உலகத்த புடிச்ச பெரிய வியாதி எதுன்னு தெரியுமா? மனுசங்கடா. இந்த பூமியில வாழ அவனுக்கு தகுதியே இல்ல.. அழிக்கணுன்டா. ஒரே அடியா குண்டு போட்டு அழிக்கணும்.
 “அய்யோ சார்.. போதும் சார். அவ்ளோதானா இன்னும் இருக்கா? அடேங்கப்பா.. என்ன சார் இப்படி வெடிக்கறீங்க.. மனுசங்க மேல இத்தனை கோவமா? இது கோவம் இல்ல சார்... மன நோய். உடம்பு தாங்காது.
ஆமாடா.. நான் பைத்தியம்தான்.. தப்பு நடக்குதுன்னு பட்டவர்த்தனமா தெரிஞ்சும், அத எதுத்துப் பேச துப்பில்லாம, உன்ன மாதிரி சுவத்தில அப்புன சாணியாட்டம் இல்லாம கொந்தளிக்கறேன் பாரு.  நான் பைத்தியம்தான்டா.
“கோச்சிக்காதீங்க சார். கூல். டென்சன் ஆகாதீங்க. நீங்க கோவப்படற அளவுக்கு உலகம் ஒண்ணும் அவ்ளோ மோசமாயிடல சார். ஒருத்தர ஒருத்தர் இன்னும் நம்பறாங்க. கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கு. ரோட்ல போறப்ப மயங்கி விழுந்துட்டா தண்ணி தெளிச்சி எழுப்பிவிட ஆள் இருக்கு.
“செயின் அறுக்கவும் ஆள் இருக்கு.
“ஒருத்தன் பண்ற தப்புக்கு உலகத்தயே பொறுப்பாக்காதீங்க. மனுசன் கெட்டவனா இருக்கலாம்.. ஆனா மனுசங்க நல்லவங்க.. உலகத்த விடுங்க சார்.  உங்கள பாருங்க.. யாரோ பண்ண தப்புக்கு நீங்க ஏன் கஷ்டப்படறீங்க.. கெட்டவங்கள பழிவாங்கணுங்கற இந்த வெறி மொதல்ல உங்களதான் தாக்கும். நிம்மதியே போயிடும். உலகத்த மாத்தாதீங்க. உங்கள மாத்திக்கங்க.
“என்ன மாத்திகிட்டா எல்லாம் சரியாகுமா?
“ஆகும் சார்.. உலகத்த சரி பண்ண, அதுக்கு வேற ஆள் இருக்காங்க. போராளிங்க.. புரட்சிக்காரங்க.. அத அவங்க பாத்துப்பாங்க. வாழ முடியாத அளவுக்கு நிலமை சீர்கெட்டு போனா, அத சரி பண்ண அவங்க வருவாங்க. ஆயுதமெடுப்பாங்க. அவங்க ஆயுதமேந்திய கடவுள் சார்.. உலகத்த சரி பண்ண அவங்க இருக்காங்க.. நீங்க உங்க கடமைய பாருங்க.. உடம்பப் பாருங்க
“புரட்சிக்காரன் ரத்தம் சிந்துவான்.. ஆனா, நீ நோகாம வாழ்ந்துட்டு, சவுக்கியமா செத்துடுவ. இத சொல்ல வெக்கமா இல்ல.. என் பிரச்சனைக்காக நான்தான்டா போராடணும்.. நான்தான் ஆயுதம் தூக்கணும்..
“இப்படி எல்லாருமே கொந்தளிச்சா நாடு தாங்காது சார். நம்ம உடம்பயே எடுத்துக்கங்க.. நோய் வந்தா ஒட்டுமொத்த உடம்புமா போராடுது. அதுக்குன்னு தனிப்பட்ட போராளி இருக்காங்க. அது கண்ணுக்கே தெரியாது. அது, தன்னையும் அழிச்சிகிட்டு கிருமிகளையும் அழிக்கும். உடம்பையும் காப்பாத்தும். மத்த உறுப்புகள் அது அது கடமைய பாத்துட்டு ஒழுங்கா இருக்கணும். அதான் சார் மனுசனுக்கும்..
“ம்.. நல்லா பேசறடா.. லம்பன் பாராட்டுகிறான்.
“தேங்க் யூ சார். பொதுவா நான் அட்வைஸ் பண்றதில்ல.. இருந்தாலும் சொல்றேன்.  குற்றம் கண்டா கோச்சிக்காத. அன்பு காட்டு. எல்லாமே அழகா மாறிடும். இதான் சார் நம்ம பாலிசி.. இத பாலோ பண்ணா உங்க மொகமும் கரெக்ட் ஆகும் சார்..
“என் முகம் பழையபடி மாறுமாடா?லம்பன் ஆர்வமாய் கேட்கிறான்.
“கண்டிப்பா மாறும் சார்.. இனிமே கண்டதுக்கெல்லாம் கோவப்படமாட்டேன்னு வாக்குறுதி தாங்க. உங்க மொகத்த சொடக்கு போட்டு இப்பவே மாத்தி காட்றேன்..
“சொடக்கு பொட்டு முகத்த மாத்த நீ என்ன கடவுளா?
“என்ன. கடவுள்ன்னா நம்ப மாட்டிங்களா? என்னால முடியும் சார். உள்ள சந்தோசமிருந்தா முகம் அழகா தெரியும். நான் அத நம்பறேன். பத்து நிமிசம் டைம் குடுங்க. கண் மூடி ரிலாக்ஸ் பண்ணிக்கங்க.. உங்க முகத்த நான் மாத்திக் காட்றேன்..
லம்பனுக்கு சந்தேகம்தான். ஆனாலும் ஒப்புக்கொள்கிறான். இளைஞன் முடைநாற்றம் கொண்ட நீலநிற பொன்னாடையை மீண்டும்  போர்த்துகிறான். தண்ணீர் தெளிக்கிறான்.
“சார். ரிலாக்ஸா இருங்க.. உள்ள இருக்கிற கோபம் வெறுப்பு எல்லாத்தையும் விட்றுங்க. வருதோ இல்லயோ சிரிச்ச மாதிரி முகத்த வெச்சிக்கங்க... சிரிச்சாலும் தப்பில்ல. தூக்கம் வந்தா தூங்கிடுங்க.. வேலை முடிச்சி எழுப்பறேன்.
லம்பன் மனதை இலகுவாக்க முயற்சிக்கிறான். மிகப்பெரும் கோபத்திற்கு பிறகு ஆயாசம், அதன் பிறகு ஒரு தளர்ச்சி, அதன் பிறகு ஒரு அமைதி. அந்த அமைதி மனதில் வந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் புதிரான சம்பவங்கள் குறித்து புன்னகைக்கிறான். முக இறுக்கம் தளர்கிறது.
இளைஞன் கை தேர்ந்த மசாஜ் கலைஞன் போல, வாயை, தாடையை, மூக்கை கண்களை அழுத்திக் கொடுக்கிறான். தட்டிக் கொடுக்கிறான். இறுக்கமான இடத்தை திருகி, முறுக்கி, அழுத்திக் கொடுத்து சுழுக்கெடுக்கிறான். இறுதியாய் லோசன் பூச்சு, பவுடர் டச்சப் எல்லாம் முடித்து, போர்வையை விலக்குகிறான்.
கண்ணாடியில் தெரியும் அந்த உருவம்.. நம்பினால் நம்புங்கள்.. லம்பனின் கோரமுகம்.. பெரிதாய் ஒன்றும் மாறவில்லை. முன்பிருந்ததை விட சற்று தேவலாம் போல இருக்கிறது. இது போதும். பார்க்க மனுசன் போல தெரிவதே அழகின் உட்சபட்சம். லம்பனுக்கு அதுவே போதுமென்றிருக்கிறது. இதுவே அற்புதம். இதுவே அதிசயம். இளைஞனை பாராட்டுகிறான்.
“பெரிய ஆள்டா நீ.. கையில திறமை இருக்கு. இந்த மூஞ்ச அங்க இங்க தட்டி அழகா மாத்திட்டியே..
“நான்தான் சொன்னனே சார்.. உள்ள இருக்கிற அழகுதான் மொகத்தில தெரியும்..
“ஆனா.. தலையில முடியே இல்லயே..
“அதெல்லாம் ஒரே நாள்ல வராது சார். பத்து நாள் பொறுத்துக்கங்க.. தானே வளர்ற முடிக்கு உரம் எதுக்கு யூரியா எதுக்கு?
“ம்.. நெஜமாவே நீ கடவுள்தான்டா.. உன் பேரென்னடா?
“ஆபுத்திரன் சார்..
“ம்.. நல்ல பேர்தான்.. என்னவிட கேவலமான சிலபேர் ஊருக்குள்ள இருக்காங்க.. மனுச உடம்பு. மிருக மூஞ்சி. அவங்களையும் அனுப்பட்டுமா?
“வேணாம் சார்.. இது ஒரு நாள் அதிசயம். இதோட முடிஞ்சது. நான் பண்ணது அதிசயம்னா இத வெளிய சொல்லாதீங்க. கடவுள பாத்தவன் மத்தவங்களுக்கு சொல்றதில்ல. ஏன்னா அவன லூசும்பாங்க..
“போக்கிரி.. ரொம்ப பேசறடா..
“இது பிறவி குணம் சார்.. நான் ஸ்ட்ராங்கா ஒரு டீ அடிக்க போறேன். நீங்களும் வறீங்களா?
வேணாம்டா..
கூல்ட்ரிங்ஸ்..
வேணாம்டா.. உன்னோட செய்கூலி சொல்லு. ஆயிரமா பத்தாயிரமா?
வேணாம் சார்.. உங்க அன்பே போதும். வீட்டுக்கு போங்க சார். சந்தோசமா இருங்க..
வற்புறுத்திக் கொடுத்தும் இளைஞன் காசு வாங்கவில்லை. சிலபேரின் அன்பு வழியில் கிடைத்த பொக்கிசம். லம்பன் வீட்டுக்கு திரும்புகிறான்.. வாசலில் மனைவி.
இப்ப மொகம் எப்படிங்க இருக்கு..
ம்.. இப்ப பரவால்ல.. பாரு.. ஓகேதானே..
ம்.. முன்னைக்கு இப்ப பரவால்ல.. ஆமா என்னாச்சிங்க..?
நான்தான் சொன்னனே.. விசப் பூச்சி கடிச்சிருக்கும். ரெண்டு நாள்ல சரியாயிடும்.
சரிங்க.. அதுக்கு எதுக்கு மொட்டை போட்டிங்க.
ம்.. விசப்பூச்சி கடிச்சா மொட்ட போட்டுக்கறதா ஒரு வேண்டுதல். நீ டிபன் எடுத்து வை. குளிச்சிட்டு சாப்பிட்டு நிம்மதியா ஒரு தூக்கம் போடணும்.
மனதை உடம்பை வருத்திக்கொள்ளாமல் நிம்மதியாய் ஒரு தூக்கம் போடுகிறான். நீண்ட நாட்களுக்கு பிறகு கனவில்லாத உறக்கம். மறுநாள் அவன் முகம் சேதாரத்திலிருந்து பெருமளவு மீண்டிருக்கிறது. அது பையன் செய்த அற்புதம். ஆபுத்திரன்.. சின்ன வயசுதான். ரொம்ப நிதானம். அவனை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. லம்பன், பார்க்க கிளம்புகிறான்.
சலூன் மூடியிருக்கிறது. சுற்றிலும் பார்க்கிறான். எதிரே அயர்ன் கடை. ஒரு பெரியவர் துணிகளை தேய்த்துக் கொண்டிருக்கிறார்.
பெரியவரே.. எதிர்ல சலூன் மூடியிருக்கு. அங்க ஆபுத்திரன்னு ஒரு பையன் வேலை பாத்தானே..
சார்.. அவன எதுக்கு கேக்கறீங்க? தெரிஞ்சவனா?
இல்லப்பா..
போலீஸா..?
இல்லப்பா.. அந்த பையன எனக்கு ஒருநாள் பழக்கம்.. சும்மா பாக்கலாமேன்னு..
வேணாம் சார்.. தெரிஞ்சாலும் வெளிய காட்டாதீங்க.. பிரச்சனை ஆகும்..
என்னாச்சி..?”
“அவன் சரியான கிராக்கு சார். எப்ப பாத்தாலும் ஏழைங்க கஷ்டப்படறாங்க.. புரட்சி வெடிக்கும் புது யுகம் மலரும்னு லூசாட்டம் பேசிட்டிருப்பான்.. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு இந்திக்கார சேட்ட அவன் கொலை பண்ணியிருக்கான்
கொலையா?
ஆமா சார்.. அந்த சேட்டு கந்து வட்டி ஆசாமி. மீட்டர் வட்டி போட்டு ஜனங்கள கொடுமை பண்ணியிருக்கான். இவன் அவன கொலை பண்ணியிருக்கான். நேத்து ராத்திரி ஏகப்பட்ட போலீஸ்.. அக்கம் பக்கம் இருந்தவங்கள விசாரணை பண்ணி ஏக கெடுபிடி. அவனுக்கு யார் யார்லாம் பழக்கம்.. யாரோடல்லாம் தொடர்புன்னு அதையும் விசாரிக்கறாங்க.. கடை ஓனர கூட அரெஸ்ட்  பண்ணி கொண்டு போயிட்டாங்க..
அவர ஏன் அரெஸ்ட் பண்ணாங்க..
“அந்த பையன் தீவிரவாதியாம் சார். வடநாட்டுல கூட ரெண்டு கோடீஸ்வரங்கல கொலை பண்ணதா பேசிக்கறாங்க.. யாரையும் நம்ப முடியல சார். சின்ன பையன்தான்.. ஆனா பயங்கரமான ஆளு.
இப்ப எங்க இருக்கான்?
அவன் நேத்து ராத்திரியே செத்துட்டான் சார்..
செத்துட்டானா?
ஆமா சார்.. அவனால உலகத்த மாத்த முடியல.. கத்தியால கழுத்த அறுத்துகிட்டு அவனே செத்துட்டான்.
தனிமையில், மொட்டைப் மாடியில் இறுக்கமாய் அமர்ந்திருக்கிறான் லம்பன். ஆபுத்திரன் மனிதனல்ல ஆயுதமேந்திய போராளிக் கடவுள். உலகத்தை மாற்ற நினைத்த இளைஞனை உலகம் மாற்றியிருக்கிறது. அல்லது கொன்றிருக்கிறது. குற்றம் கண்டால் கோபிக்காதே அன்பு செய் என்றவன் உயிரைக் கொன்றிருக்கிறான். கொலைக்கு கொலை.
“அது கொலை இல்ல சார்.. தற்காப்பு. இயற்கை மனிதனை உண்டாக்குது. மனிதனோட உடம்பு கிருமிகளை உண்டாக்குது. கிருமிகள் உடம்பை அழிக்குது. அந்த உடல் திரும்பவும் கிருமிகளை கொன்றழித்து தன்னைத் தானே தற்காத்துக்குது. அதை யாராலயும் தடுக்க முடியாது. இது ஒரு தற்காப்பு சார். உயிரியல் விதி. இது மனுச வாழ்வுக்கும் பொருந்தும்
இறந்தவர்கள் பேசுவதில்லை. அவர்களின் கோட்பாடுகளை இருப்பவர்கள் பேசுகிறார்கள். ஆபுத்திரனுக்காக இப்போது லம்பன் பேசுகிறான். முகத்தில் வன்மமில்லை. கிருமிகளிடத்தில் பயமில்லை. ஒவ்வொரு மனிதனும் தன் உடலில் உயிர் காக்கும் போராளிகளை தன்னகத்தேக் கொண்டுள்ளான். அது எப்போதும் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள ஆயத்தமாய் இருக்கிறது. நேரம் வந்தால் கிளர்ந்தெழுகிறது. இது புரிந்த அழகிய லம்பன் இயல்பாய் புன்னகைக்கிறான்.
                                                                                முற்றும்.


No comments: