Monday, May 27, 2019

பிறகு நான் சிறகானேன்

நான் ஒரு வழிப்போக்கன்.
பூமிக்கு
அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு முன்பே வந்தவர்கள்
எனக்கு ஒரு பெயர் இட்டார்கள்.
செய்ய வேண்டிய
கடமைகள் என்று
சிலவற்றை போதித்தார்கள்.
அதில் குற்றமும் இருந்தது,
அன்பும் இருந்தது.

Saturday, May 25, 2019

ஒற்றை மிகுதியானவன்



இந்த வாழ்க்கை மீது எனக்குள்ள விமர்சனங்களை என் கதைகளில் எழுதுகிறேன். என்னைச் சுற்றி இருக்கிற நிஜ மனிதர்களும், எனது உள்ளத்தில் உருவாக்கிய கற்பனை மனிதர்களும் சந்திக்கும் புள்ளியே எனது கதையின் பேசும் பொருள்.

Thursday, May 16, 2019

ஒரு சொல் - வெற்றியை கொண்டாடாதீர்கள்


எல்லோருமே வெற்றியை விரும்புகிறார்கள். வெற்றியை
 கொண்டாடுகிறார்கள். எல்லாவற்றிலும் எப்பொழுதும் வெற்றி பெறவே விரும்புகிறார்கள். ஆனால், வெற்றி என்பது எதிராளி மீது தோடுக்கப் படுகிற மோசமான வன்முறை. சமூகத்தின் அங்கமாக இருக்கும் ஒருவன், தான் மட்டும்
வெற்றிகரமான மனிதனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மனநோய். உங்களுக்கு நெப்போலியனை பிடிக்குமா? ஹிட்லரை கொண்டாடுகிறீர்களா?

Sunday, May 5, 2019

வறட்சியும் பிளாக் கரண்ட் ஐஸ்கிரீம் விலையும்.. இந்திய தேசமும்

Image result for forum bangaloreபெங்களுரு forum-க்குப் போனால் கடுமையான வெயில். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதெல்லாம் இந்தக் கோடை உக்கிரத்திற்கு போதாது. சற்று  குளுமை தேடி ஐஸ்கிரீம் சாப்பிட கடைதேடி, ஏறி இறங்கி, தடுமாறி, கை பிடித்து சமாளித்தபடி, சீனாக்காரியிடம் சென்று சிரித்தபடி விலை கேட்டால், கூந்தலை ஒதுக்கிவிட்டபடி, ஒரு கரண்டி ஐஸ்க்ரீம் விலை.. 欢迎先生.. 950.INR. என்கிறாள். தமிழில் தொல்லாயிரத்து ஐம்பது ரூபாயாம்.. சிரிப்பே அடங்கிவிட்டது? எந்த கரண்டியில் தருவார்கள்? பூந்திக்கரண்டியிலா? 

Friday, May 3, 2019

தாமிரநங்கையின் யாழும் சில தும்பிகளும் - மின்புத்தகம்

மின்புத்தகம் போடுவதில் சில சடங்குகள் இருக்கிறது. அதில் ஒன்று “உன் புத்கத்தைப் பற்றி நீயே சொல்..”
இதில் நான் என்ன சொல்லுவது?
அசரவைக்கும் அதிரடிச் சிறுகதைகள்.. நெஞ்சத்தை உலுக்கும் உண்மைச் சம்பவங்கள்.. உட்கார்ந்திருப்போரை ஓட வைக்கும், ஓடுவோரை பறக்க வைக்கும். மருந்தில்லை.. பத்தியமில்லை. இதை மட்டும் படித்தால் போதும். ஆடியில் அடைமழை. கோடையில் குளுகுளு.... வாங்கிவிட்டீர்களா ஆ ஆ ஆ? 
இது என்ன கதையா, மந்திரக்கோலா? ஒரு சாதாரண கதை, வாழ்வைப் புரட்டிப் போடுமா?

Thursday, May 2, 2019

வயல் பூதம் - மின்புத்தகம்

இந்த அவசர யுகத்திலும், எல்லைக்குள் அடங்காத என் சாய்சதுரக் கதைகளை ஊன்றிப் படித்து, நுணுகி ரசித்து பாராட்டுகிற பரந்துபட்ட கதா பிரியர்களுக்கு நான் தலை வணங்கியே ஆகவேண்டும். கதையின் மையம் விலகிச் சென்று வாழ்வின் வேறு கூறுகளை மின்னல் வெட்டிச் செல்கிற அத்துமீறல்களைத் தான் அவர்கள் வியப்பதும், சுட்டிக்காட்டுவதும். சிற்பத்தின் நகக் கண்களையும் நுட்பத்தோடு ஒரு சிற்பி ஏன் செதுக்குகிறான் என்பதற்கு, வந்தடைகிற பாராட்டுகளே காரணம். 
பெற்றவர்களுக்கும், மனைவிக்கும், குழந்தைகளுக்கும், கதைகளுக்கும் கூடுதலான நேரத்தை ஒதுக்கினால் வாரத்தின் ஏழாம் நாளை நாய் தின்றுவிடும் என்ற அச்சத்தை நம்பாதவன் நான். நேரம் ஒதுக்கினால் கதைகளும், உறவுகளும் சுவாரஸ்யமான ஜீவன்கள் என்பது புரிபடும்.
இன்னொரு முக்கிய விவகாரம்... மொழியின் பரிசுத்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கானது. மொழியின் இலக்கணம் என்பது அத்து மீறி பக்கத்து வீட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதில் நம்பிக்கையுள்ளவன்தான் நான். ஆனாலும் சில அத்தியாவசியமான கணங்களில் மொழி தன்னளவில் வரம்பு மீறுவதையும் தவிர்க்க ஏலாது. 'ஆயிரம் இலைகளுக்கும் ஒரே கிளை' என்பதுதான் இலக்கண வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், அக் கதை சொல்ல விழைகிற ஆதாரமான விஷயம் பிரபஞ்ச ஓர்மை; உயிர்களுக்கு நடுவில் ஒரு ஜீவ ஓர்மை. அதனால்தான் பன்மையில் இல்லாமல் 'ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை' என்று ஓர்மையில் தலைப்பிட்டேன். 
“ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும்
ஓரிடம் பிறஇடந் தழுவலும் உளவே!" என்றும், 
'ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை 
மாற்றிஓர் அடியுள் வழங்கல்மொழி மாற்றே!" 
என்றும் சொல்லப்பட்ட நன்னூல் இலக்கணத்தை நான் இங்கே மேற்கோள் காட்டுவது என் தப்பிலக்கணத்திற்கு முட்டுக் கொடுப்பதற்காக அல்ல! வாழ்வின் இக்கட்டிற்காக இலக்கணங்கள் சிலபோது மீறப்படலாம் என்பதையும் சுட்டுவதற்கே. இலக்கண வரம்பிற்கு உட்படாத இக் கதா தலைப்பை உச்சரிக்கும்போது அதில் ஓசையின்பத்தையும், ஒற்றைப் புள்ளிக்குள் இப் பிரபஞ்சம் குவிந்து நிற்கிற உணர்வின் இன்பத்தையும் நான் உணர்ந்தேன். தலைப்பின் கதையை படித்தால் நீங்களும் அதை உணர்வதற்கு சாத்தியமுண்டு. உணர்ந்து பாருங்கள்.
..
 அன்புடன்
எழில்வரதன்.