Friday, May 3, 2019

தாமிரநங்கையின் யாழும் சில தும்பிகளும் - மின்புத்தகம்

மின்புத்தகம் போடுவதில் சில சடங்குகள் இருக்கிறது. அதில் ஒன்று “உன் புத்கத்தைப் பற்றி நீயே சொல்..”
இதில் நான் என்ன சொல்லுவது?
அசரவைக்கும் அதிரடிச் சிறுகதைகள்.. நெஞ்சத்தை உலுக்கும் உண்மைச் சம்பவங்கள்.. உட்கார்ந்திருப்போரை ஓட வைக்கும், ஓடுவோரை பறக்க வைக்கும். மருந்தில்லை.. பத்தியமில்லை. இதை மட்டும் படித்தால் போதும். ஆடியில் அடைமழை. கோடையில் குளுகுளு.... வாங்கிவிட்டீர்களா ஆ ஆ ஆ? 
இது என்ன கதையா, மந்திரக்கோலா? ஒரு சாதாரண கதை, வாழ்வைப் புரட்டிப் போடுமா?
சிலருக்கு போடுகிறது. மனிதன், தோல்வியிலிருந்து சில படிப்பினைகள் கற்றபடி தொடர்ந்து பயணிக்கிறான். அடுத்த அடி, எச்சரிக்கையோடு எடுத்து வைக்கிறான். அசைபோடுவதும், சிந்திப்பதும், பழுதுபார்து எதிர்காலத்தை எதிர்கொள்வதும் எப்போதும் நடப்பது. அது நமக்குள் நிகழ்ந்தால் சிந்தனை. எழுத்தாய் பிரதி செய்தால் புனைவு.. எனவே கதை என்பது வாழ்வை அசைபோட்டு நம்மை நாமே பழுது பார்த்துக் கொள்வது.. 
கற்பனைக்கு எட்டாத எதையும், எவரும் எழுதிவிட முடியாது. புனைவின் உட்சபட்ச சாத்தியம் என்பது, நடைமுறையில் நிகழாத ஒன்றை முடிந்தவரை திருகலாக்கிக் காட்டுவது. அறிவை சிறிதளவு ஏமாற்றுவது. பொய்மையை நிஜமென்று நம்பவைப்பது. கட்டுக்களற்ற சிந்தனைகளின் விகாரத்தை, வீச்சை, அதன் வசீகரத்தை புனைவில் காணலாம். ஆனாலும், வெற்றிகரமான புனைவென்பது அந்தரத்தில் தொங்காது.. அதன் மெல்லிய நூல் ஒன்று நிஜ வாழ்வின் எதாவது ஒரு கண்ணியில் கட்டப்பட்டிருக்கும். எனவே, அதீத புனைவென்பதும், நிஜ வாழ்வின் மாறு வேடமே..
கதையா? புத்தகம் படிக்கணுமா? மன்னிக்கணும்.. அதுக்கெல்லாம் நேரமேது.. சிலருக்கு படிப்பதே அலுப்பு.. என்னவோ எழுதி, என்னவோ படித்து, என்னவோ போ.. இதெல்லாம் எதற்கு? கதையாம், இலக்கியமாம் புனைவாம் பூச்சாண்டியாம்.. பிறப்பே விபத்து. உயிரோ ஆண்டவன் போட்ட பிச்சை. இதில் என்னத்த படிச்சி, என் எண்ணத்தை எழுதி.... என்னவோ போ.. இது நகராத வண்டி. சக்கரமோ சதுரம். இதுதான் வாழ்க்கை. இந்த .சதுர வண்டிச் சக்கரத்தை நீ ஓட வை பாக்கலாம். எழுத்தாம் இலக்கியமாம் புனைவாம் பூச்சாண்டியாம். உப்பில்லை, மருந்தில்லை, திரி இல்லை, நெருப்புமில்லை... எங்கே, வெடிக்க வை பாக்கலாம். வேடிக்கையாம், வெடி மருந்தாம், இலக்கியமாம், புத்துணர்வாம்.. 
பலருக்கு வாழ்வென்பதே ஒண்டிப் புலி உறக்கம். தேடலும் இல்லை ஆவலும் இல்லை. சலித்துப் போகிறது. .உசுப்பேற்ற ஒரு உபாயம் வேண்டாமா? ஒரு பச்சை மிளகாய் கடி. தண்ணீரைக் கண்ணீரோடு தேடவைக்கும். சில கதைகள் பச்சைமிளகாய்க் காரம்.
இத் தொகுப்பில் உள்ள நான்கில், இரண்டு கதைகள் காதலை பேசுகிறது. இரண்டு, காசு பற்றி பேசுகிறது. காதலும் காசுமே இப்போதைய மனித குலத்தின் தேடு பொருட்கள். இதில் ஏமாந்தவர்களே.. அதிகம். 
தாமிரநங்கையின் யாழ், சரித்திரக் கதையல்ல.. கற்பனைப் புனைவு. மனிதர்களின் மொசமான கண்டுபிடிப்பான பணத்தை தேடி அலுக்கிற மனிதர்களின் காசும் ஒரு புனைவுதான். அது பொய் மான் வேட்டை. புதை குழி. ஆனாலும் தேடவைக்கும். சைக்கிள் சம்சாரியும், குப்பைச் சேவலும் காதலை பாடு பொருளாகக் கொண்டவை. தோற்றுப்போன காதலை பலபேர் இப்போதும் பழைய சைக்கிள்களாக மாற்றி உருட்டியபடி இருக்கிறார்கள்.. மனதுக்குள். ஒரே உலகம்.. ஒரே மனிதன். அதற்கான பத்தியமருந்தே கதை. ஏங்காதே.. எழுந்து போ. குடும்பத்தைக் கவனி. 
இக்கதைகளென்பது கதைகளல்ல, இது ஒரு மந்திரச் சாவி, வாழ்வை மாற்றப் போகும் தங்கப் புத்தகம் என்று எழுத்துக்கு ஈயம் கலாய் பூசி தலையில் கட்டப்போவதில்லை. இதில் இருக்கிற எதாவது ஒரு கதையின் எதாவது ஒரு வரி உங்களுக்குள் ஒரு சலனத்தை உண்டாக்கலாம். அது, உங்கள் வாழ்வை இம்மியளவுக்கேனும் அர்த்தமுள்ளதாக்கலாம். படித்துப் பிடித்திருந்தால் ஒரு வார்த்தை சொல்லிச் செல்லுங்கள். அது எனது எழுத்தை அர்த்தமுள்ளதாக்கலாம்

நன்றி

No comments: