Thursday, August 18, 2016

தாமிரநங்கையின் யாழும் சில தும்பிகளும்.


நல்ல மன ஆரோக்கியத்தோடு இருக்கிற, வெகுநாள் பழக்கமுள்ள சினேகிதன் ஒருத்தன் வீடு தேடிவந்துவைகுண்டத்தில் நடக்கிற ஊர்வசியின் நாட்டியம் பார்க்க முன்வரிசை டிக்கெட் இரண்டு கைவசம் இருக்கிறது வருகிறாயா?” என்று கேட்டால் சட்டென்று நவீன கால மனசுக்கு என்ன ஆகும்? குடிகார ஆந்தை கும்மிருட்டில் கத்தி கலவரமூட்டியது போன்ற அவஸ்தையாகிவிடாதா?
அப்படியொரு அவஸ்தைக்கு ஒருநாள் நான் ஆளானேன். டைட்டல் பார்க்கில் வேலை பார்க்கிற கம்ப்யூட்டர் நண்பன் ஒருத்தன் ஒருநாள் மாலை வீடு தேடி வந்து, “எனக்கு வெள்ளைக் குதிரை ஏகப்பட்டது வேணும்! இங்கே கிடைக்குமா?” என்று கேட்டான்.
நான் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தேன். அவன் குதிரைத் தரகனோ, குதிரை ரேஸ் ஆடுகிறவனோ, ஜட்கா வண்டிக்காரனோ, சரித்திரக் காலத்து குதிரை ஏற்றம் தெரிந்த மகாராஜனோ கிடையாது. நெகுநெகுவென்ற நவீன ரக காரில் வந்து இறங்கிய ஒருத்தன் குதிரை வேண்டும் என்று கேட்டால் நான் சித்த சுவாதீனத்தோடு இருப்பது எப்படி சரியாகும்?
குதிரையா? அது எதுக்குடா உனக்கு?”
கம்ப்யூட்டர் நண்பன் ஆளில்லாத அறையை நன்றாக அலசிப்பார்த்துவிட்டு ரகசியமான குரலில் சொன்னான். “விசயம் இருக்கு ராம். வெள்ளைக் குதிரைக்கு இப்ப ஏக டிமாண்ட், தெரியுமா? அதோட விலை நாளுக்கு நாள் லட்ச லட்சமா கூடிகிட்டே போகுது
குதிரை விலை மட்டுமா? அரிசி விலை, பருப்பு விலை, இரும்பு விலை, கல், மண், செங்கல், இரும்பு ஏரோப்ளேன் என்று எல்லா விலையும்தான் லெட்சக்கணக்கில் கூடிக்கொண்டே போகிறது. அதற்காக வெள்ளைக் கலரில் இருக்கிற பழைய பிளாஸ்டிக் பக்கெட்டை தேடிக்கொண்டு எலிசபெத் ராணியின் புருஷன் அலைகிறான் என்பதை எப்படி ஜீரணிப்பது. அது சரி, திடீரென்று வெள்ளைக் குதிரையின் விலை ஏன் குதிக்கிறது? பெட்ரோல் விலை கூடிப்போனதால் இனி வெள்ளைக் குதிரையில் பிரயாணம் செய்கிற காலம் வரும் என்று குறுந்தாடி வைத்த ஏதாவது வழுக்கைத்தலை விஞ்ஞானி உளறித் தொலைத்துவிட்டானா? அப்படியே இருந்தாலும் வெள்ளைக் குதிரை மட்டும்தான் பெட்ரோல் இல்லாமல் ஓடுமா? பெட்ரோல் இல்லாமல் கழுதை ஓடாதா, எருது இழுக்காதா, கறுப்புக் குதிரை நடக்கவே நடக்காதா?
ராம், நான் சொல்லறது கொஞ்சம் நம்பறதுக்கு சிரமமான விசயம்தான். ஆனா... கண்டிப்பா சொல்லறேன் வெள்ளைக் குதிரை விலை கொடியத் தாண்டும். ஒரே ஒரு வெள்ளைக் குதிரை வெச்சிருக்கிற ஒரே ஒருத்தன் சட்டுனு ஒருநாள் பெரிய கோடீஸ்வரன் ஆயிடுவான். அம்பானி, மிட்டல், பில்கேட்ஸ் ரேஞ்சுக்கு
நல்லவேளை என் மனைவி ஊரில் இல்லை. இவன் பேசுவதைக் கேட்டிருந்தால் பினாயில் பாட்டிலை எடுத்து நடு மண்டையில் போட்டிருப்பாள். பைத்தியங்களைக் கண்டால் அவளுக்கு ஆகவே ஆகாது. வெள்ளைக் குதிரை வைத்திருக்கிறவன் கோடீஸ்வரன் ஆவானாம்! என்ன கிறுக்குத்தனம் இது. ஆனால் கம்ப்யூட்டர் நண்பனின் உலக அறிவு, பணம் பற்றிய ஞானம், அவன் படிப்பின் அளவு, செய்கிற வேலையின் கவுரவம் பற்றியெல்லாம் எனக்குத் தெரியும். ஒவ்வொரு நிமிடத்தையும் மந்திரம் போட்டு காசாக மாற்றிக்கொண்டிருப்பவன் அவன். நாடே தன் வாழ்க்கையை அடமானம் வைத்து ஷேர் மார்க்கெட்டில் சூதாடி தன் பொண்டாட்டி தாலியை தொலைத்துவிட்டு நிற்கையில் இவன் மட்டும் தன் செக்ரெட்டரிப் பெண் உட்பட ஏழெட்டுப் பெண்களுக்கு இடுப்பு அகலத்திற்கு தங்க நகையை, அதே சூதாட்டத்pல் சம்பாதித்திருக்கிறான். வெள்ளைக் குதிரை ஒருவேளை புது ரகமோ!
ஜெகதீஸ்... நீ வெள்ளைக் குதிரைன்னு கோட் வேர்ட்ல, குறியீடா வேற எதையாவது சொல்லறீயா? அபின், வெள்ளைப் பெட்ரோல், கோதுமை மாவு இப்படி... அதுதானே இப்ப நாட்டுல பஞ்சம்
 “நான் நிஜமான குதிரையத்தான் சொல்றேன் ராம்.”
நாலு கால், பின்னாடி ஒரு வால் இருக்கும்... கிட்ட போனா கனைக்குமே அதையா? அதை வெச்சிகிட்டு என்ன செய்யறது ஜெகதீஸ்? ஜட்கா வண்டிக்காரனே இப்பெல்லாம் தொழில் படுத்துடுச்சின்னு குதிரைகளை அனாதை ஆசிரமத்தில சேத்துகிட்டு இருக்கான். வெள்ளைக் குதிரையில என்ன இருக்கு ஜெகதீஸ்? குதிரையோட இரைப்பையில கட்டி கட்டியா ஆப்ரிக்க வைரம் இருக்குன்னு அறிவியல் பூர்வமா யாராவது நிரூபிச்சிட்டாங்களா?”

ஜெகதீஸ் கொஞ்ச நேரம் தலைகுனிந்து, கண் மூடி, மவுனமாக இருந்தான். பிறகு தீர்மானமாக தலையாட்டியபடி பேசினான், “பாரு ராம்! நான் சொல்லறதை சட்டுனு நம்ப முடியாதுதான். கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாவும்; இருக்கும். ஆனா என் பேச்சை நம்பு. குதிரையில வைரம் இருக்கிறது உண்மைதான். அதோட இரைப்பையில இல்ல. பின்னாடி தொங்குமே ஒண்ணு... வால்! அந்த வால்லதான் இருக்கு வைரமும் புதையலும்
நான் தீர்மானித்துவிட்டேன். இவன் வீட்டில் காலடி எடுத்துவைத்த நேரம் சரியில்லை. நான் லூஸாகி லுங்கி கிழித்துக்கொள்ளப்போவது சத்தியமாகிவிட்டது. ஆரம்பத்தில் இருந்தே அகல அகலமாக குழப்பத்தை அதிகரித்துக்கொண்டே போகிறான். குதிரை வாலில் புதையல் இருக்கிறதாம்! எவன் வந்தாலும் கதவைத் திறக்காதீங்க என்று என் மனைவி சொன்னதை நான் பொருட்படுத்தியிருக்கவேண்டும்.
என்னடா ஜெகதீஸ். மந்திரவாதியாட்டம் குதிரைங்கரே... குடல்ல வைரங்கரே...”
கொஞ்சம் மந்திரவாதி சமாச்சாரம்தான். ஆனா நெஜம். உலகத்தில எத்தனை ஆயிரம் வெள்ளைக் குதிரை இருக்குன்னு யாருக்கும் தெரியாது. ஆனா ஒரே ஒரு வெள்ளைக் குதிரையோட வால் பகுதியில ஒரு ஓலைச் சுவடி இருக்கிறதா சொல்லறாங்க.”
ஓலைச்சுவடியா?”
ஆமா,”
ஏய் நிறுத்து நிறுத்து... ஏதாவது போட்டுகிட்டு வந்திருக்கியா ஜெகதீஸ். ஓலைச்சுவடி, குதிரை வால்னு பினாத்தறீயே! சங்ககாலத்து ஆவி எதாவது பிடிச்சிடுச்சா உன்னை?”
 “டேய் ராம்! நீ எட்டாவது ஒம்பதாவது பத்தாவதுன்னு பெயில் ஆன சமயத்தில மொத மார்க் எடுத்து பாஸ் பண்ணி அமெரிக்கா, சுவிட்சர்லாந், ஐரோப்பான்னு சுத்திட்டு வர்ற தகுதிக்கு பெரிசா படிச்சவன் நான். ஒவ்வொரு நிமிசத்தையும் எப்படி காசா பண்ணறதுன்னு வித்தை தெரிஞ்சவன். ஒதவாக்கரை பசங்களோட பேசறதைவிட பொண்ணுங்களோட பேசறதையும், பொண்ணுங்களோட பேசறதைவிட கம்ப்யூட்டரோட பேசறதையும் உசத்தியா நினைக்கிறவன். அப்படிப்பட்ட நான் கார் எடுத்துகிட்டு வந்து உன்கிட்ட குதிரை வேணும்னு கேட்டா அதை விளையாட்டா எடுத்துப்பியா நீ?”
ஏழு எட்டு வருடமாய் என்னை பாத்ரூம் செருப்பே என்றுகூட மதித்துப் பேசாத இந்த ஜெகதீஸ் இங்கே லாபம் இல்லாமல் வரமாட்டான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். படிக்கிற காலத்திலேயே என்னோடு பேசுவதைவிட பெண்ணோடு பேசுவது நன்றென்று நினைத்து சோபிதா என்ற பெண்ணை கர்பமாக்கி, பிறகு வேறு ஒரு கம்ப்யூட்டர் பெண்ணை காசுக்காக இரண்டாம் தாரமாய் அவன் கல்யாணம் செய்துகொண்டதும் தெரியும். காசு என்று தெரிந்தால் கொழிப் பண்ணையின் மொத்தக் கழிவையும் தலையில் சுமக்கிற அளவுக்கு அவன் வெறி கொண்டவன் என்பதும் உதவாக்கரை லூசு என்று தெரிந்தால் பெற்ற அப்பனையே பாதாளச் சாக்கடையின் மூடி திறந்து உள்ளே தள்ளிவிடுகிற ராசு என்பதும் தெரியும். அதற்காக குதிரை வாலில் ஓலைச்சுவடி என்று பேசினால் மனுசனுக்கு பேஜாராகத்தான் இருக்கிறது.
நீ மொதல்ல இதை படிச்சிப் பாரு புரியும்கொண்டு வந்த சூட்கேஷ் பிரித்து அதிலிருந்து கத்தையாக ஒரு பேப்பர் கட்டை என் கையில் கொடுத்தான், ஜெகதீஸ். நான் அதை சந்தேகத்தோடு பார்த்தேன்.
இது ஒரு ராஜாவோட சரித்திரம். சோமலராஜன்னு ஒரு தமிழ் ராஜா ஆயிரம் வருசத்திற்கு முன்னாடி வாழ்ந்திருக்கான். பெரிய கோடீஸ்வரன். ரெண்டு பில்கேட்ஸ் அளவுக்கு சொத்து இருந்ததா சொல்லறாங்க. அவனுக்கு என்னவோ ஒரு விபரீத காரணத்தால பைத்தியம் பிடிச்சிருக்கு. பைத்தியம் முத்திப்போய் தன்னோட சொத்து எல்லாத்தையும் தங்கமா, வைர வைடூர்ய கற்களா மாத்தி மண்ணுக்கு அடியில புதைச்சிட்டிருக்கான். அந்த புதையல் இருக்கிற இடத்தை ஓலைச் சுவடியில எழுதி ஒரு வெள்ளைக் குதிரையின் வால்ல மறைச்சி வெச்சிருக்கான். அந்த வெள்ளைக் குதிரையதான் தேடிட்டு இருக்காங்க. அந்த ஓலைச் சுவடி கிடைச்சா கண்டெடுத்தவன் கோடீஸ்வரன்.”
டேய் எழுந்து வெளிய போடா நாயே என்று திட்டி ஜெகதீஸை வீதியில் தள்ளிவிடலாமா என்ற வெறி வந்தது எனக்கு. என்ன பினாத்தல் இது. இவன் குடித்திருக்கிறானோ, இல்லை பேயைப் பிடித்து அடித்திருக்கிறானோ தெரியாது. ஆனால் இவன் பேசுவதெல்லாம் பைத்தியக்காரத்தனம். “டேய் ஜெகதீஸ் உனக்கே நல்லா இருக்கா? ஆயிரம் வருசத்து குதிரை வால்ல ஓலைச்சுவடியோட இங்கதான் எங்கியோ மேஞ்சிகிட்டு இருக்குன்னு நீ சொல்ல வர்றீயா... ஒரு நல்ல டாக்டரா பாரு ஜெகதீஸ்
ராம், ஒண்ணு நீ என்னை நம்பணும், இல்ல சரித்திரத்தை நம்பணும், இல்ல விஞ்ஞானத்தை நம்பணும். இந்த விசயத்தை பொறுத்தவரை மூணையுமே நம்பணும். சோமலராஜன் ஒருத்தன் இருந்தான்னு சொல்லறது சரித்திரம். அவனப் பத்தின ஒரு குறிப்பு சரஸ்வதி மஹால் நூலகத்தில இருக்கு. நானே பாத்திருக்கேன். நீ நம்பலாம். ரெண்டாவது, ஓலைச்சுவடி. ஓலைச்சுவடிங்கறது உலகத்தில இருக்கிற ஒண்ணு. அதையும் நம்பலாம். வெள்ளைக் குதிரைய நீ பாத்திருப்பே. அது ஆயிரம் வருசத்து வெள்ளைக் குதிரை இருக்குமான்றதுதான் உன்னோட சந்தேகம்.. அதை நான் இப்ப தீத்து வெக்கிறேன்.
எகிப்துல பிரமிட் இருக்கு. அதுக்குள்ள மம்மிங்கற மனுசனோட செத்த உடல் இருக்கு. ஆயிரம் ரெண்டாயிரம் வருசத்து மனுசனோட பிணம். செத்த மனுச உடம்பு பத்து நாள்ள அழுகி நாறிப்போயிடணும். அதான் இயற்கை. ஆனா ரெண்டாயிரம் வருசம் மனுச உடம்பை கெடாம பதப்படுத்தற வித்தை எகிப்தியனுக்கு தெரிஞ்சிருக்கு. அதான் விஞ்ஞானம். அந்தக்கால விஞ்ஞானம். அவங்க எப்படி பதப்படுத்தினாங்கன்ற சூட்சுமம் இப்ப நமக்குத் தேவையில்லாத விசயம். அவங்களோட விஞ்ஞானத்தில குறை இருந்திருக்கு. அதான் முக்கியம். எகிப்தியர்களுக்கு மனுச உடம்பை மட்டும்தான் கெடாம பாதுகாக்க முடிஞ்சிருக்கு. ஆனா நம்மோட தமிழ் சித்தர்களுக்கு, சித்தர்களுக்கு முன்னாடியே இருந்த சில ரசவாத பித்தர்களுக்கு அதைவிட அற்புதமான ஒரு விசயம் தெரிஞ்சிருக்கு. அதான் ஆத்ம கல்பம். அதாவது உயிரை ரொம்பநாள் பாதுகாத்து வெக்கிற வித்தை. ஆயிரம் ரெண்டாயிரம் பத்தாயிரம் வருசத்துக்கு சித்தர்களால உயிர் வாழ முடியும்னு சிலபேர் சொல்லறது ஜோக் கிடையாது. நவீன விஞ்ஞானம் என்ன சொல்லுது... ஜெனடிக் என்ஜினியரிங் மூலமா, நானோ தொழில்நுட்பம் மூலமா ஜீன்ல சில கரெக்ஷன் பண்ணி ஒரு உயிரோட ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும்னு சொல்லுது. அப்பத்தான் சுடச்சுட விஞ்ஞானம் கண்டுபிடிச்ச எத்தனையோ வியத்தை நம்ம சித்தர்கள் ஆயிரம் காலத்துக்கு முன்னாடியே கண்டுபிடிச்சாங்கன்னு நாம அதிசயிக்கிறது இல்லையா அதுல இது ஒண்ணு...

ஜெகதீஸ் இங்கே நிறுத்தினான். நான் ஜீரனித்துவிட்டேனா என்று நோட்டம் விட்டான் பிறகு பேசினான். “நம் தமிழ் சித்தர்களோட ரசவாத விஞ்ஞானத்தை நீ ஏத்துகிட்டா ஆயிரம் வருசம் ஒரு குதிரை இருக்குங்கறதை நம்பலாம். இன்னும் என்ன ஃபுரூப் வேணும்? சோமலராஜன் நிஜம். ஆயிரம் வருசமா குதிரை உசிரோட இருக்கிறதும் நிஜம். ஓலைச் சுவடி நிஜம். பிறகென்ன.. மனுசனுக்கு தெரியாம எத்தனையோ சரித்திர நாகரீம் மண்ணுக்கு அடியில புதையுண்டு இருக்கு ராம். தெரியாம இருந்தா அது இல்லேன்னு ஆயிடாது.”
இத்தனை விசயம் உனக்கெப்படி தெரியும்?”
வினோதமான பொற் புதையல்களை தேடற கூட்டம் ஒண்ணு உலகம் பூரா காலா காலத்துக்கும் சுத்திகிட்டே இருக்கு. அவங்களோட வேலையே கண்ணுக்குத் தெரியாத புதையல்களை ரகசியம் விடுவிச்சி வெளிய எடுக்கிறதுதான். எத்தனையோ புதையலை அவங்க எடுத்திருக்காங்க. அவங்க மூலமா தெரிஞ்சிகிட்டேன். இந்த பேப்பர்ஸ்ல சோமலராஜன் சரித்திரம் இருக்கு. அவனோட வெள்ளைக் குதிரை பத்தி இருக்கு. எதனால அவனுக்கு பைத்தியம் பிடிச்சதுன்னு இருக்கு... படி. வெள்ளைக் குதிரை இருந்தா சொல்லு... திரும்பவும் சொல்லறேன் இது பரம ரகசியமா இருக்கணும். விவரம் வெளிய தெரிஞ்சா சோமலராஜன் புதையல் எல்லாம் அரசாங்கத்துக்குப் போயிடும்
எனக்கு தெரிஞ்ச ஜட்கா வண்டிக்காரன்கிட்ட ஒரு கிழட்டு வெள்ளைக் குதிரை பார்த்ததா ஞாபகம். ஒருவேலை அது சோமலராஜன் குதிரையா இருக்குமோ?”
ஜெகதீஸ் கரண்ட் கொடுக்கப்பட்டது போல துள்ளி எழுந்தான். “எங்கடா இருக்கான் அவன்? குதிரைய காட்டு இந்தா காசு...” அவன் சூட்கேஷின் துணி விலக்கிக் காட்ட, அதில் கட்டுக் கட்டாக ஆயிரம் ரூபாய் நோட்டுகள். லட்ச லட்சமாக! நான் திகைத்தேன். ஜெகதீஸ் விளையாடவில்லை சீரியசாகத்தான் குதிரை தேடுகிறான்.
வா ராம். உடனே வாங்கணும். எங்க அந்த ஜட்காக்காரன். உனக்குத் தெரிஞ்சவனா?”
இல்ல ஜெகதீஸ் அவன் போன மாசம் காச நோய்ல செத்துட்டான்.”
அவன் செத்தா சாகட்டும். குதிரை என்னாச்சி?”
தெரியல ஜெகதீஸ் நான் விசாரிக்கிறேன். நடு ராத்திரியில போறது ஆபத்து. சந்தேகப்படுவாங்க.”
அய்யோ ராம். நீ சீரியஸ் இல்லாம இருக்கே. சரி, நான் விடியற்காலையில வர்றேன். கார்ல போலாம் குதிரை எங்க இருந்தாலும் வாங்கலாம்.” சொல்லிவிட்டு அவன் காரில் பறந்தான். சின்ன சேலத்தில் யாரோ ஒரு சலவைத் தொழிலாளி வெள்ளைக் குதிரை வைத்திருப்பதாய் சொன்னார்களாம். தேடிக்கொண்டு ஓடினான்.
அவன் கொடுத்துச் சென்ற காகிதக் கத்தையை நான் வினோதமாய் பார்த்தேன். எல்லாம் நவீன காலத்து ஜெராக்ஸ் பிரதிகள். சில காகிதம் வண்ணத்தில். இதில் வெள்ளைக்குதிரை வாலும், புதையலும், கோடீஸ்வரன் ஆவதற்கான டிக்கெட்டும் இருக்கிறது என்றால்... என் மனைவிக்கு தெரிந்தால் விவாகரத்து செய்யக்கூட தயங்கமாட்டாள். நான் கதவை நன்றாக தாழ்போட்டுவிட்டு படுக்கையில் உட்கார்ந்து காகிதத்தைப் புரட்டினேன்.
~குயில்களை எல்லாம் கொன்று போட்டாலும், காக்கை கத்துவது ஒருபோதும் பாடல் ஆகாது~ என்ற ஒரு ஆதிக் குறிப்பும், சோமலராஜனின் பூர்வ சரித்திரமும் எழுதப்பட்ட ஓலைச் சுவடி ஒன்று ஒரு வெள்ளைக் குதிரையின் வாலில் மறைந்திருப்பதாகவும், அந்தக் குதிரை இன்றைக்கும் எங்கோ உயிரோடு இருப்பதாகவும் சொல்லும் சரித்திர வதந்தி ஒன்று தற்போது உலாவுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். குதிரையின் வால் பிடித்துத் தொங்கியாவது சோமலராஜனின் ஆதி சரித்திரத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் முதலில் வெள்ளைக் குதிரை எங்கிருக்கிறது என்று தேடவேண்டும். அல்லது, அந்தக் குதிரையின் அடையாளம் தெரிந்துகொள்ள சோமலராஜன் சரித்திரத்தையாவது அறிந்துகொள்ளவேண்டும்.
மூடனும் ஒரு கணம் பேரரிஞன் ஆவான். கோமாளி சிலநாட்கள் தத்துவ ஆசிரியனும் ஆவான். வீரன் கோழை ஆவதும், ஆண்டி வேந்தன் ஆவதும் இயற்கையின் லீலைகள். அப்படியான அதிசங்கள் இஜ்ஜெகத்தில் நடந்துகொண்டுதானிருக்கிறது. மதியூகம் கொண்ட சிலர் வீண் வம்பில் மாட்டி கடைமடையர்களாய் விழிபிதுங்கி நிற்கும் நகைப்பூட்டும் சரித்திரமும் கடைமடையர்களான சிலபேர் வீராதி வீரனாக வாழ்வதுமான சரித்திரங்கள் சிலபோது வரலாற்றில் நடக்கத்தான் செய்கிறது. சுவடியில் எழுதப்பட்ட இச் சரித்திரத்து நாயகனாம் மன்னாதி மன்னன் ராஜாதி ராஜனாய் வாழ்ந்த சோமலராஜன் என்பவனுக்கு விதிவசமாய் ஒரு சம்பவம் அப்படி நடந்திருக்கிறது. ஓலைச் சுவடியில் இருந்து எடுத்து அப்படியே பதிப்பிக்கப்பட்ட ஆயிரம் வருடத்துக்கு முந்தைய சோமலராஜன் சரித்திரம் இதோ...
... என்று ஆரம்பித்தது அந்த விபரீதக் கதை.
(பின் குறிப்பு: இது ரகசிய ஆவணம். இதை பத்திரமாக வைத்திருக்கவும். நம்பிக்கை இல்லையென்றால் நெருப்பில் எரித்துவிடவும். பிறருக்கு இணாமாக தரவேண்டாம்) நான் கதைக்குள் நுழைந்தேன்.
                பூலோகச் சொர்க்கம் என்று சொல்லப்பட்ட ரத்னபுரியை வெகுகாலத்திற்கு முன்பு ஆண்டுவந்தவன்தான் சோமலராஜன். எட்டுத் திசையும் வென்று எதிரியில்லாத வேந்தனாய் இருந்த சோமலராஜனின் குடிமக்கள் குறையொன்றும் இல்லாமல் சுகமாய் இருந்தார்கள். ஆடல், பாடல், சிற்பம், சிகையலங்காரம் என்று சகல கலைகளிலும் தேர்ச்சி கொண்ட சோமலராஜனின் பட்டத்து ராணிதான் ஸ்வர்ண தீபிகா. அவளும் கலைகள் பல கற்றவள், என்றாலும் யாழ் இசைப்பதில் பிரியம் கொண்டவள். வெல்வதற்கு பூலோகத்தில் யாருமில்லை என்று யாழிசையில் பெயரெடுத்தவள்.
சோமலராஜனுக்கு குதிரைமீது ஏறி வேட்டைக்குச் செல்வதென்றால் மிக விருப்பம். இன்றைக்கும் இதோ, வேட்டைக்கு கிளம்பிவிட்டான் அவன்.
(படிப்பதை பாதியில் நிறுத்தி நான் திறுதிருவென்று விழித்தேன். சோமலராஜன் குதிரை வெள்ளை என்று ஒன்றையும் காணோமே! கதையைப் பார்த்தால் இது ஆயிரம் வருடத்திற்கு முன்பிருந்த எழுத்து நடைபோல இல்லை. தற்கால சொற்களே இருந்தது. கொஞ்சம் ஆங்கிலக் கலப்பில்லாமல் யாரோ எழுதிய அரைகுறை தமிழ் சரித்திர நடைபோலத்தான் தெரிந்தது. ஆனாலும் தொடர்ந்து படித்தேன்.)
                வில்லும், வேளும், வாளும் ஏந்திய ஆயிரத்தெட்டு வீரர்கள் குதிரைகளில் முன் நிற்க, தனது வெள்ளைக் குதிரையில் கம்பீரமாய் உட்கார்ந்து வேட்டைக்காடு நோக்கி கிளம்பினான் சோமலராஜன். குதிரை மூன்று கால் எடுத்துவைத்து நான்காம் கால் எடுப்பதற்குள் அரண்மனையே அதிரும்படியான அலறல் சத்தத்தோடு ஓடிவந்தாள் மகாராணி ஸ்வர்ண தீபிகா.
அவள் பேரழகி. ஒல்லி இடையில் துள்ளிய மேகலையும், முத்து மாலையும், ஆபரண அணிகளும் அறுந்து விழும்படி தலைதெறிக்க ஓடிவந்த அவள் சோமலராஜனின் குதிரைக்கு முன்பாக கை விறித்தபடி தலைவிறிகோலமாய் நின்றாள். அதைக்கண்ட குதிரைக்கு வாயில் நுரைவரும்படியான அதிர்ச்சியுண்டானது.
தூக்கம் கலையாத அதிகாலைப் பொழுதில், ஒரு மகாராணி பேரழகியாகவே இருந்தாலும், அவள் பேய் போலத்தான் இருப்பாளென்ற விசயம் பாவம் அந்த அப்பாவி குதிரைக்குத் தெரியாது. கனவிலும் இதுவரை பேயை  காணாத குதிரை, பனைமரமாய் சிலுப்பிக் கிடந்த மகாராணியின் தலையைக் கண்டு, ~ஓஹோ இதுதான் குரலிப் பேயின் கோர முகமா!~ என்று அச்சப்பட்டு முன்கால் தூக்கி ஈயென்ற சத்தத்துடன் கனைத்துக் கதறியது.
குதிரையின் பிடறியை தடவி அடக்கிய சோமலராஜன் 'என்ன ஆனது தேவி? எதற்காக இப்படி பதறி ஓடிவருகிறாய்?" என்று கேட்டான்.
                'கொடுமையை நான் எப்படி சொல்வேன், ஸ்வாமி! என் உச்சந்தலை மீது சுவற்றுப் பல்லி ஒன்று சொத்தென்று விழுந்துவிட்டது...." என்று துக்கம் மூக்கடைக்க முக்கியபடி சொன்ன மகாராணி மேலே சொல்ல முடியாமல் தன் பட்டு வஸ்திரத்தால் வாயடைத்து அழ ஆரம்பித்தாள்.
                சேவகர்கள் குதிரைக்கும் தெரியாமல் முதுகு குலுங்க மெல்லச் சிரிப்பது சோமலராஜனுக்குத் தெரிந்தது. அலுப்புற்ற அவன், 'என்ன தேவி இது! தலை மீது பல்லிதானே விழுந்தது. பாறாங்கல் விழுந்தது போலவும், பாம்பு விழுந்தது போலவும் அலறியபடி ஓடிவருகிறாயே! ஒரு வேந்தனின் ராணி இப்படி செய்வது வேடிக்கையாய் இருக்கிறது!" என்று சலிப்போடு சொன்னான்.
                'பிரபோ! உச்சந்தலையில் பல்லி விழுந்தால் துர்மரணம் சம்பவிக்கும் என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?"
                'கேள்விப் படுவது என்ன தேவி! என் உச்சந்தலையில் விழுந்த பல்லியை நானே குடல் தெறிக்க அடித்திருக்கிறேனே! அப்படியென்றால் பல்லிக்கு துர்மரணம் தானே! ஆமாம், உன் மேல் விழுந்த பல்லிக்கு துர்மரணம் ஏற்பட்டதா இல்லையா?" ஆர்வத்தோடு கேட்டான் சோமலராஜன்.
                'பிரபோ, வேடிக்கைப் பேச்சை விடுங்கள். இரவெல்லாம் எனக்கு கொடுங் கனவு வந்து துன்புறுத்தியது. மரம் அடர்ந்த காட்டில், தலையில் கொம்பும், வாயில் பல்லும், உடம்பில் ரோமமும் இல்லாத வினோத விலங்கு ஒன்று உங்கள் குரல்வளை கடிப்பது போல கனவு கண்டேன். இன்றைக்கு வேட்டைக்கு வேண்டாம், ஸ்வாமி!"
                'என்ன அபத்தம் இது, தேவி! பல் இல்லாத விலங்கு என் குரல்வளை கடித்ததா! வேடிக்கைதான். ஆனால் ஒரு சுத்த வீரன் முன் வைத்த காலை பின் வைக்கமாட்டான் என்பது உனக்குத் தெரியாதா?"
                'தெரியும் ஸ்வாமி! உங்களை யார், முன் வைத்த காலை பின் வைக்கச் சொன்னது. நீங்கள் குதிரையின் மீதுதானே இருக்கிறீர்கள். குதிரை முன் வைத்த காலை பின் வைத்தால் யாரும் குற்றம் சொல்லமாட்டார்கள். குதிரையை லாயத்திற்கு திருப்புங்கள், ஸ்வாமி!" வினயமாய் கெஞ்சினாள் மகாராணி.
                'தேவி, என் வீரம் அறிந்தவள் நீ. ஏழு தேசத்து ராஜாக்களோடு ஒரே நேரத்தில் போரிட்டு ஜெயித்தவன் நான். கேவலம் கொம்பும், பல்லும், ரோமமும் இல்லாத ஒரு மிருகம் கடித்தா நான் இறந்துபோவேன். என்னிடம் ஆயிரம் தலை வெட்டிய அபூர்வ வாள் இருப்பது உனக்கே தெரியும். அச்சப்படாதே!" சொன்ன சோமலராஜன், மகாராணியின் அச்சம் தனிப்பதற்காக தன் வஜ்ர வாளை எடுத்து காற்றில் வீசிக் காண்பித்தான்.
                மகாராணி கண்ணீர் பெருக்கெடுத்து பெரும் கூப்பாடு போட்டாள். 'வேண்டாம் பிரபோ! வாள் மீதும், வாள் செய்த கொல்லன் மீதும் நம்பிக்கை வைக்காதீர்கள். நடப்பதெல்லாம் துர்சகுணம். நீங்கள் வேட்டைக்கு போகாமல் இருப்பதுதான் உத்தமம். வேட்டையாடித்தான் ஆகவேண்டுமென்றால் அரண்மனைக் குளத்தில் வாத்து இருக்கிறது. விருப்பத்தோடு வேட்டையாடுங்கள். வாத்து வேட்டையாடினாலும் வேந்தன் வேந்தன் தானே!" ராஜனை தடுத்து நிறுத்த அவள் பெரும்பாடு பட்டாள்.
                சோமலராஜன் மனசு மாறவேயில்லை. இரண்டு சிங்கங்களையாவது வேட்டையாடிக்கொண்டு வராவிட்டால் வேந்தன் என்ற பெயருக்கு அவமானம் என்று அவன் பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.
அவன் வேட்டைக்குச் செல்வதை தடுக்க முடியாது என்று அறிந்த மகாராணி, சோமலராஜனின் குதிரையிடம் கழுத்து நீவியபடி கண்ணீரோடு சொன்னாள், 'துலும்பா! எனது உயிர் உன் முதுகின் மீது உட்கார்ந்திருக்கிறது. அதை பத்திரமாக கொண்டுவரவேண்டியது உன் பொறுப்பு" அவள் சொல்லி முடிப்பதற்குள் சோமலராஜன் ஆயிரத்தெட்டு வீரர்களோடு வேட்டைக்கு புழுதி பறக்க காற்றாகச் சென்றான்.
                சோமலராஜன் வீரர்களோடு சென்றாலும் காட்டிற்குள் அவன் மட்டும் தனியாக வேட்டையாடுவதுதான் வழக்கம். வீரர்கள் காட்டிற்கு வெளியே நிற்பார்கள். இக்கணமும் அப்படியே நடந்தது.
கரடி சிங்கம் புலி காட்டெருமை என்று முரட்டு விலங்குகளை வேட்டையாடும் சோமலராஜன் கண்ணில் இன்று அப்படியொன்றும் தென்படவில்லை. மாறாக, ரோமமில்லாத வினோத மிருகமொன்று வளைந்த உருவத்துடன் பதுங்கிப் பதுங்கிச் செல்வதை அவன் கண்டான். மகாராணி கனவில் வந்த மிருகமாய் இருக்குமோ என்று ஒருகணம் அதிர்ந்துபோனான் சோமலராஜன்.
புதர் மறைவில் பதுங்கிச் சென்ற மிருகம் மெல்ல வெளிவந்து தன் உருவத்தைக் காட்டியதும் தலையில் தட்டியபடி சிரிக்க ஆரம்பித்தான் சோமலராஜன். அது மிருகமல்ல: கூன் விழுந்த ஒரு கிழவி. மண்ணில் விழுந்த பொருளை தேடுவது போல அவள் கூன் விழுந்த தேகத்தோடு காட்டுப் புல்லை அறுத்துக்கொண்டிருந்தாள்.
                வரிப் புலி இருக்கிற அடர்ந்த காட்டிற்குள் வேல் ஏந்திய வீரர்களே ஒற்றையாய் வரப் பயப்படுவார்கள். இவள் புல் அறுப்பதற்கு வந்திருக்கிறாளே என்று ஆச்சரியம்கொண்ட சோமலராஜன் 'மூதாட்டியே! யார் நீ? இங்கு என்ன தேடிக்கொண்டிருக்கிறாய்?" என்று இடக்கும் சுடக்குமாய் ஒரு கேள்வி கேட்டான்.
                “நீ யார் மகனே! சிங்கம் கரடி காட்டுப்பன்றி உலவும் காடு இது? இங்கே என்ன செய்கிறாய?”; என்று அந்த முதியவள் எதிர்க் கேள்வி கேட்டாள்.
நான் தேன் எடுக்க வந்தவன்என்று மாறுவேடத்தில் இருந்த சோமலராஜன் சொன்னதும் மெல்ல சிரித்தாள் மூதாட்டி.
'நீ தேன் எடுக்க வந்தவனா? தூங்குகிற சிங்கத்தின் வாய்க்குள் போல நீ இருக்கிறாய். ஊருக்கு திரும்பிவிடு கரடி கண்டால் காலை கடித்துவிடும்" என்று கூன் முதுகு நிமிர்த்தாமல் தலை நிமிர்த்தி சிரித்தபடி சொன்னாள்.
கரடியின் கால் கடிக்கும் வித்தை எனக்கும் தெரியும். நான் எவ்வளவு பெரிய வீரனென்று உனக்குத் தெரியுமா கிழவி! இதுபோல் ஆயிரம் காடுகளை இந்த குதிரையில் சுற்றிய வீரன் நான்
'க்கூம் உன் வீரத்தை குதிரை வாலில் கட்டு. உன்னைச் சுமந்து ஆயிரம் காடுகளைச் சுற்றியதே இந்த குதிரை. எங்கே நீ ஒரே ஒரு முறை இந்த குதிரையைச் சுமந்து இந்த காட்டைச் சுற்றிவாயேன் பார்ப்போம். அப்பொழுது ஒப்புக்கொள்கிறேன் நீ குதிரையைவிட வீரன் என்று"
ம் இடக்கு அதிகமிருக்கி மூதாட்டிதான் நீ. ஆமாம், இங்கே என்ன தேடிக்கொண்டிருக்கிறாய் மூதாட்டியே?”
 "ம்... என் பதினெட்டு வயது அழகு இங்கே எங்கேயோ விழுந்துவிட்டது. அதைத்தான் தேடுகிறேன். நீயும் வந்து தேடேன். புல் அறுப்பதை பார்த்துக்கொண்டே என்ன தேடுகிறேன் என்று கேட்கிறாய். ஆளைப் பார் ஆளை!" என்று பச்சை சிமிறில் அடிப்பது போல படபடவென்று பேசினாள் மூதாட்டி.
                'காட்டுப் புல்; அறுக்கிறாயா? அதை வைத்து என்ன செய்வாய்?"
                'என் மகள் யாழ் இசைப்பதை நீ கேட்டிருந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டாய். எங்களின் யாழில் பதனம் செய்த காட்டுப் புற்கள்தான் தந்திகளாய் இருக்கும். ஆதி யாழின் இசையை நீ கேட்டுப் பார்க்கிறாயா?" சொன்ன கூன்கிழவி, வாயில் ஒரு காட்டுப் புல்லை கடித்து, ஒருகையில் பிடித்து, இன்னொரு கைவிரலால் மெல்ல சுண்டிவிட ஆரம்பித்தாள். தேர்ந்த யாழ் இசையின் ஸ்ருதி அந்த புல்லில் வருவதைக் கண்டு அதிசயத்துப் போனான் சோமலராஜன்.
                'பிரமாதம், மூதாட்டியே! பிரமாதம்! சோமலராஜனின் தேசத்தில் புல் அறுக்கிற மூதாட்டியும் அற்புதமாய் இசைக்கிறாள். சோமலராஜனும், பட்டத்து ராணியும் யாழ் இசைப்பதில் மேதைகளாயிற்றே! குடிமக்களைப் பற்றி கேட்கவேண்டுமா? பூவோடு சேர்ந்த நாறும் மணக்கிறது" மாறுவேடத்தில் இருக்கிற தைரியத்தில் தன் புகழை தானே பாடிக்கொண்டான் சோமலராஜன்.
                '! நன்றாயிருக்கிது மகனே, நீ சொல்வது! காட்டுப்பன்றி முதுகு தேய்த்ததால்தான் சந்தனமரத்திற்கு வாசனை வந்தது என்று சொல்வாய் போல இருக்கிறது. சோமலராஜனின் முப்பாட்டன் காடை முட்டைகளை வீதி வீதியாக கூவி விற்ற காலத்திற்கு முன்பிருந்தே யாழ் இசைத்தது எங்கள் வமிசம். என் மகள் யாழ் இசைக்கக் கேட்டவர்கள், அந்த பட்டத்து ராணி யாழ் இசைப்பதைக் கேட்டால் பூனை கத்துகிறது என்று சொல்வார்கள்." கூன்பாட்டி விவரமற்று விலாவரியாக பேசினாள்.
                'ஏய் கிழவி! நாக்கை அடக்கிப் பேசு. மகாராணி ஸ்வர்ண தீபிகா யாழ் இசையில் ஆயிரம் பாணர்களை வென்றவள். அறுபத்தெட்டு பண்டிதர்களிடம் யாழ் இசை கற்றவள். அவளை யாழில் வெற்றிகொள்ள ஈரேழு லோகத்திலும் ஆள் கிடையாது. தெரியுமா?" கோபமாய் கத்தினான் சோமலராஜன்.
                ', எனக்குத் தெரியாதா அந்த கதை. உருக்கிய இரும்புடன் பொன்னாங்கன்னிச் சாற்றைக் கலந்தால் தங்கமாகும் என்று ரசவாத பொய் பேசும் செவிட்டு மந்திரிகள் இருக்கிற சபைதானே சோமலராஜனின் சபை. ராணி என்ன, ராணி வீட்டு குதிரை கத்தினாலும் ~ஆஹா பாடல் இனிமை!~ என்பார்கள். அந்த ராணி என் மகளோடு போட்டியிட்டுப் பார்க்கவேண்டும். அப்பொழுது தெரியும் விசயம்." அத்தோடு நிறுத்தவில்லை கூன்கிழவி. அதன்பிறகு சோமலராஜன் குறித்தும் மகாராணி குறித்தும் காதுபொறுக்காத அவதூறுகளை அள்ளி வீச ஆரம்பித்தாள்.
என்னதான் எச்சில் விழுங்கி முயற்சித்தாலும் கோபம் அடங்காத சோமலராஜன் கடைசியில் கர்ஜிக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். 'ஏய் கிழவி! உடனே உன் பேச்சை நிறுத்து. யாரிடம் பேசுகிறோமென்று அறியாமல் பேசுகிறாய்! நான்தான் சோமலராஜன்" என்று கம்பீரமாய் சொன்னான்.               
கூன்பாட்டி நிமிர்ந்து குதிரையில் இருக்கிறவனின் முகத்தை உற்றுப் பார்த்தாள். பிறகு பல் இல்லாத வாயை பொத்திக்கொண்டு நகைத்தாள்: 'அதுசரி! ஈரெழுபது இருபத்தியேழுவிதமான பைத்தியங்கள் உலகத்தில் உண்டென்று என் பாட்டன் சொல்லியிருக்கிறார். நீ அதில் கடைப் பைத்தியம் போலிருக்கிறது. நீ சோமலராஜனாகவே இரு. நான் வந்தனம் சொல்கிறேன்." சொன்ன கூன்கிழவி வந்தனத்திற்கு பதில் தலையில் அடித்துக்கொண்டு கேவலத்திலும் கேவலமான ஒரு பெரும் சிரிப்பை சிரித்து வைத்தாள்.
                கிழவி நம்பவில்லை என்று தெரிந்துகொண்ட சோமலராஜன் தன் இடுப்பில் இருந்து முழவு எடுத்து ஊத ஆரம்பித்தான். மறைவில் நின்றிருந்த ஆயிரத்தெட்டு வீரர்களும் குதிரையோடு வந்து கிழவியை சூழ்ந்துகொண்டார்கள். உடல் நடுக்கமெடுத்த கிழவி கடைசியில் அவன் சோமலராஜன் என்பதை ஒப்புக்கொண்டாள். அரச குற்றம் செய்தால் தலை வெட்டு நிச்சயம் என்று பயந்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாள். தன் மகளுக்கு யாழ் வாசிக்கத் தெரியாது என்றும், தனக்கு மகளே இல்லை என்றும் அதன்பிறகு பலவாறு திரித்து பேசி தப்பிக்கப் பார்த்தாள். ஆனாலும் சோமலராஜன் விடுவதாய் இல்லை.
                'கிழவி. என்னிடமா ஆணவமாய் பேசினாய்? மகாராணி ஸ்வர்ண தீபிகாவை இத்தனை அசிங்கமாய் ஜெகத்தல் யாரும் பேசியதே கிடையாது. ம்.. பார்த்துவிடுகிறேன் உன் மகள் யாழ் திறமையை! இன்றிலிருந்து மூன்றாம் நாள், உன் மகள் மகாராணியோடு யாழ் போட்டியிடவேண்டும். தோற்றுப்போனால் அவள் பத்து விரல்களையும் நான் துண்டித்துவிடுவேன். சரிதானே!”
 “வேண்டாம் மகாராஜா! கிழவியை மன்னித்து என் மகளுக்கு விரல்பிச்சை தரவேண்டும்.”
உன் மகளை போட்டியில் ஜெயித்து விரல் பிச்சை வாங்கச் சொல், போட்டிக்கு ஒழுக்கமாய் மகளோடு வந்து சேர். தப்பிக்க நினைக்காதே! தேடிப்பிடித்து, உன் தலையும் உன் மகள் தலையும் துண்டித்துவிடுவேன்."          உத்தரவிட்ட சோமலராஜன் கோபம் அடங்காமலே அரண்மனைக்கு வேட்டை மிருகமில்லாமல் வெறும் கையோடு திரும்பினான்.
மந்திரி சபையில் குழப்பம்தான் அதிகமிருந்தது. சிறுமியிடம் யாழ்போட்டி என்றால் மகாராணி சரியென்பார்களா? யாழ்போட்டி நடத்துவது சரிதானா என்று மந்திரிகள் குழம்ப, அவர்களோடு விவாதிக்க ஆரம்பித்தான் சோமலராஜன். அப்பொழுது சோமலராஜனின் மெய்க்காப்பாளன் வந்து தணிந்த குரலில் சொன்னான், 'மகாராஜா! மகாராணி கோபமாக இருப்பதாகவும் அதனால் குதிரை லாயத்திற்கு சென்றிருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது"
                'கோபம் வந்தால் எதற்காக குதிரைலாயத்திற்கு போகவேண்டும். குதிரை லாயத்து வாசனை கோபம் தணிக்குமென்று அரண்மனை வைத்தியன் கதைகட்டிவிட்டானா?"
                'இல்லை, மகாராஜா! கோபமாக சென்ற மகாராணி உங்கள் குதிரையின் பின்புறத்தில் பழுக்கக்; காய்ச்சிய கம்பியால் சூடு போட்டதாகத் தெரிகிறது!"
                'அட, மங்களமே! குதிரை என்ன குற்றம் செய்தது?"
                'மகாராஜாவின் பின்புறத்தில் சூடு போட்டால் அது தேசத்துரோகம் ஆகிவிடும். அதனால் சொல் பேச்சு கேட்காத குதிரைக்கு சூடு போட்டேனென்று மகாராணி சொன்னார்களாம். மட்டுமில்லை, கோபம் அடங்காத மகாராணி இன்னும் ஆயிரத்தி எட்டு கம்பிகளை பழுக்கக் காய்ச்சச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறராம். வேட்டைக்குப் போன அத்தனை குதிரைக்கும் பின்புறத்தில் சூடு நிச்சயம் என்று சேடிப்பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்." மெய்க்காப்பாளன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து எழுந்த சோமலராஜன் அப்பாவிக் குதிரைகளின் பின்புறத்தை காப்பாற்றவும், மகாராணியின் கோபம் தணிக்கவும் வேகமாய் லாயம் நோக்கி ஓடினான்.
                சூடுபட்ட குதிரைக்கு மருந்து தடவிக்கொண்டிருந்த மகாராணி ராஜனை கண்டும் காணாதவள் போல குதிரையிடம் பேச ஆரம்பித்தாள். 'ஆளையும் அழகையும் பார். உனக்கெல்லாம் குதிரையென்று எவன் பெயர் வைத்தது. சொல்வதைக் காதில் வாங்காமல் வேட்டைக்குப் போவது, போன இடத்தில் வீண் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு வருவது. முழிப்பதைப் பாh,; பிடிபட்ட தேவாங்கைப் போல!"
                'தேவி! நீ குதிரையிடம் பேசுகிறாயா, என்னிடமா?”
                'குதிரையும் நீங்களும் ஒன்றுதான். இரண்டுக்குமே நான் சொல்வது புரிவதில்லை. காட்டுப் புல் அறுக்கும் கூன்கிழவியின் மகளோடு மகாராணியான நான் யாழ் போட்டியிடவேண்டும் என்று பேசிவிட்டு வந்தீர்களாமே! என்னை இப்படி அவமானப்படுத்த வேண்டுமென்று எத்தனை நாளாய் திட்டமிட்டிருந்தீர்கள்? போகிற போக்கைப் பார்த்தால் யாசகத்திற்கு பாடும் பிச்சைக்காரனிடமும் என்னை போட்டியிடச் சொல்வீர்கள் போலிருக்கிறது!" அவமானத்தில் கண்ணீர் வழிய பேசினாள் மகாராணி.
                'தேவி! அந்தக் கிழவி பேசிதைக் கேட்டிருந்தால் நீ தண்ணீர் குடிக்காமல் உயிர் துறந்திருப்பாய். ~தன் முதுகை ஆள் வைத்து சொரிந்து கொள்கிற மேனா மினுக்கிக்கு மகாராணி என்று பெயர். அவளுக்கெல்லாம் யாழ் மீட்டுகிற சூட்சுமம் எங்கே தெரியப்போகிறது!~ என்று உன்னைப் பற்றி அவதூறாக அவள் பேசினாள். அது உண்மையாய் இருக்குமோ என்று எனக்கே சந்தேகம் வந்துவிட்டது" சோமலராஜன் அவசரக் கோபம் வரவழைத்துக்கொண்டு சொன்னான்.
                'கேடுகெட்டவள் அப்படியா சொன்னாள்? அவளை ஒன்றும் செய்யாமலா வந்தீர்கள்?" சினத்தோடு பதறினாள் மகாராணி.
                'விட்டுவிட்டு வருவேனா? அவளை யாழ் போட்டிக்கு வா என்று அழைத்துவிட்டுத்தானே வந்திருக்கிறேன். யாழ் போட்டியில் தோற்றால் அவள் மகள் விரலை நாம் துண்டிக்கப்போகிறோம். துண்டிப்பதும் தண்டிப்பதும் ஒன்றாகிவிடுமில்லையா?"
                'ஒருவேளை நான் தோற்றுப்போனால்? என் விரலை துண்டித்துவிடுவீர்களா?"           
                'அது எப்படி தேவி? போட்டிக்கு அழைத்தது நான்தானே! நான் என் கால் கட்டை விரல்களை துண்டித்துக்கொள்வதாய் சொல்லியிருக்கிறேன். சரிதானே!"
                'அதுதான் சரி. வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் சொல்பேச்சு கேளாமல் வேட்டைக்குச் சென்று கிழவியின் வம்பை வாங்கி வந்து நிற்கிறீர்கள். கால் கட்டை விரலை அல்ல, காலையே முழங்காலோடு துண்டிக்க வேண்டியதுதான். அப்பொழுதுதான் வேட்டைக்குப் போகாமல் இருப்பீர்கள்." ஸ்வர்ண தீபிகா உத்தேசமாக தலையாட்டியபடி பேசினாள்.
                'நீ பேசுவதைப் பார்த்தால் திட்டமிட்டே நீ போட்டியில் தோற்றுவிடுவாய் போலிருக்கிறதே தேவி! வேண்டாம் மங்களமே! வீரன் என்பவனுக்கு முழங்கால் அவசியம். நான் இப்பொழுதே போட்டி வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்" குறும்பாகச் சொன்னான் சோமலராஜன்.
                அப்பொழுது அங்கு வந்து பணிந்த ஒரு ஒற்றன், 'மகாராஜா, நாம் நினைத்தாலும் இனி போட்டியை நிறுத்த முடியாது. அந்த கூன்கிழவி தன் மகளுக்கும் மகாராணிக்கும் யாழ் போட்டி நடக்கப்போகிறது என்று செய்தியை காட்டுத் தீ போல ஊர் முழுக்க பரப்பிவிட்டாள். அது தேசத்திற்கு தேசம் பரவி, கடைசியில் நம் அரண்மனை காவலர்கள் வரை வந்துவிட்டது."
                'இரவோடு இரவாக பயந்து ஓடுவாள் என்று நினைத்தேன்! கிழவிக்கு அத்தனை திமிரா?"
                'இருக்காதா மகாராஜா! கிழவியின் மகள் பெயர் தாமிரநங்கை. அவள் யாழ் இசைப்பதை நாங்கள் கேட்டோம். மகாராணி வெற்றிபெற ஆண்டவன் அருள் வேண்டுமென்றுதான் எங்களுக்குத் தோன்றுகிறது"
                'கடவுளே! ஒற்றன் சொல்வதைக் கேட்டால், என் உச்சந் தலையில் பல்லி விழுந்த பலன் பலித்துவிட்டது என்று தெரிகிறது. மானம் போவது மரணத்திற்கு சமமானதுதான்." மகாராணி வாயில் கை வைத்து புலம்ப ஆரம்பித்தாள்.
                'அமைதியாய் இரு தேவி! எலி வால் என்றுதான் நான் வளையில் இருந்து இழுத்தேன். அது மலைப்பாம்பாக இருக்குமென்று எனக்கென்ன தெரியும். ஒற்றரே! அந்த பெண்ணை வெல்லவே முடியாதா?"
                'முடியும் மகாராஜா! வித்தையால் அல்ல சூழ்ச்சியால்."          
ஒற்றன் அது என்ன சூழ்ச்சி என்பதை குசுகுசுப்பாய் சோமலராஜன் காதில் சொன்னான். அதைக் கேட்டு மகிழ்ந்து போன ராஜன் மகிழ்ச்சியோடு கத்தினான், “இந்த தேசத்தின் மகாராணி ஸ்வர்ண தீபிகாவுக்கும், தாமிரநங்கை என்ற சிறுமிக்கும் பவுர்ணமி கழிந்த மூன்றாம் நாளில் அரசவை கலா மண்டபத்தில் யாழ் போட்டி என்று தேசமெங்கும் அறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள்.” தேசமெங்கும் போட்டிக்கான முரசு சத்தமும், மகாராணி ஜெயிப்பாள் என்ற எக்காளச் சத்தமும் கேட்க ஆரம்பித்தது. வீட்டு வாசலில் கார் ஹார்ன் சத்தமும், பூட்ஸ் காலின் டொக் டொக் சத்தமும், காலிங் பெல்லின் கிர்ரீங்ங் சத்தமும் அதைத் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தது. பிறகு கதவு தட்டும் சத்தமும், “டேய் ராமுஎன்று யாரோ கத்துகிற ஓசையும் கேட்டது.
கதவைத் திறந்து பார்த்தால் வெளியே ஜெகதீஸ்!
என்னடா, கண்ணு இப்படி சிவந்திருக்கு! தூங்கினியா இல்லையா? சரி சீக்கிரம் வாடா போகலாம்
எங்கடா?”
                “எங்கயா? ஜட்கா கிழவன்கிட்ட குதிரை இருக்குன்னு சொன்னியே!”
என்று நான் நினைப்பதற்குள் அவன் காரில் என்னை அள்ளிப் போட்டுக்கொண்டு காலம் சென்ற ஜட்காவண்டிக்காரன் வீட்டு முன் நின்றான். ஜட்காவின் மனைவி ரொம்பக் கிழவியாக இருந்தாள். “ஆமாங் சாமி! குதிரை இருக்கு. ஆனா அதை விக்க மனசு வரல. என் புருசன் செத்த பின்னாடி அவருக்கு பதிலா நான் குதிரையத்தான் வெச்சிருக்கேன்
கிழவி சொன்னதை இரட்டை அர்த்தப்படுத்திக்கொண்டு ஜெகதீஸ் சிரித்தான். டேய் அவ கிழவிடா! புருசன் நினைப்பா வெச்சிருக்கா! நான் அவனை முறைத்தேன். அவன் சரி சரி என்பது போல தலையாட்டிக்கொண்டு நைச்சியமாக பேசினான். பெரிய வியாபாரி ஜெகதீஸ்: “பாட்டி, வெலூருக்கு பக்கத்தில தங்கத்திலயே பெரிய கோயில் கட்டியிருக்காங்க தெரியுமா? போயிருக்கியா? சீரங்கம், திருப்பதி, காசி, ராமேஸ்வரம்னு போய் பாக்க ஆசை இருக்கா உனக்கு. அபூர்வா புடவைன்னு பட்டுப் புடவை கட்டியிருக்கீங்களா? பனாரஸ் பட்டு எத்தனை நெகுநெகுன்னு இருக்கும் தெரியுமா? சுத்த செம்பொன்ல தோடும், வைரம் வெச்ச மூக்குத்தியும் உனக்கு போட்டுப்பாக்க ஆசையில்லையா? காடை ரோஸ்ட், வான்கோழி பிரியானி சாப்பிட்டு கும்பகோணம் வெத்தளை போட ஆசை இருக்கா உனக்கு...” ஜெகதீஸ் அடுக்கிக்கொண்டே போனான்.
இதையெல்லாம் எதுக்குசாமி என்கிட்ட கேக்கறே!”
உன் புருசன் குதிரைய என்கிட்ட காட்டு. நான் சொன்னதில ஒன்னு உனக்கு கிடைக்கும். வைர மூக்குத்திக்கு இப்பவே காசு தரேன்
கிழவி கண்ணில் வைரம் மின்னியது. அவள் வீட்டின் பின்புறம் குதிரை காட்டினாள். ஏய் என்று மிரட்டினால் செத்து விழுந்துவிடுகிற தள்ளாத வயதில் அது நின்றிருந்தது. நூறு ரூபாய் கட்டு இரண்டு எடுத்து கிழவியின் முன் நீட்டினான் ஜெகதீஸ். அதிகபட்டம் ஏழு வருடங்கள் வான்கோழி பிரியாணி சாப்பிடலாமே என்று என் மனசு பொறாமையில் உப்பி வெடித்தது. கிழவி ஆச்சரியத்தோடு கை நீட்டியவள் கையை திருப்பிக்கொண்டு, “வேணாம் சாமி! என் புருசனுக்கப்பறம்...”
அவன் ஐநூறு ரூபாய் கட்டு ஒன்றை நீட்டிஐம்பதாயிரம்!” என்றான். கிழவி யோசித்தாள்.
ஆயிரம் ரூபாய் கட்டு ஒன்றை நீட்டி, “ஒரு லட்சம்?”  என்றான். எனக்கே மனசு பதறிது. காசை வாங்கிட்டு குதிரைய தள்ளிடு கிழவி. இரண்டு நாளில் சாகப்போகிற குதிரை நூறு ரூபாய்க்கு கூட போகாது. கிழவி புத்திசாலி. வாங்கிக்கொண்டாள். “என் புருசன் ஞாபகமா...” என்று கிழவி ஆரம்பிக்க, ஜெகதீஸ் கடகடவென்று சிரித்து, “இந்த காசுல புருசனைவிட பெரிசா வேற என்னென்னமோ வாங்கலாம் பாட்டிஎன்றான்.
குதிரையை பக்கத்தில் நின்று தடவிக்கொடுத்தான். எனக்கு ஜெகதீஸை பார்க்க பரிதாபமாக இருந்தது. சாகிற குதிரைக்கு லட்ச ரூபாயா? குதிரையை ஒரு போக்கு லாரியில் ஏற்றி அட்ரஸ் சொல்லி அனுப்பி வைத்தான் அவன்.
ரெண்டு நாள்ல இந்த குதிரை செத்துடுமே ஜெகதீஸ். ஒரு லட்ச ரூபாய வீணாக்கிட்டியோன்னு தோணுது!” நான் அக்கரையோடு அவனிடம் வருத்தம் சொன்னேன். கார் ஹார்ன் அடித்தபடி பாட்டுபாடிவிட்டு அவன் சிரித்தான், “நான் முட்டாள் இல்லே ராம். லட்ச ரூபாய் குடுத்து நான் வாங்கினது ஒரு குதிரை இல்ல. ரெண்டு
என்ன சொல்லற நீ!”
அந்த குதிரை கர்பமா இருக்கு ராம்
ஆம்பளை குதிரை இல்லையா அது?”
பொம்பளை குதிரைதான். அதனாலதான் கர்பமா இருக்கு?”
இந்த வயசிலையா? எத்தனை வயசு வரையிலும் குதிரைக்கு குழந்தை பிறக்கும்?’
மனுசங்க மாதிரிதான். விந்தணு இருக்கிற வரைக்கும் ஆண் குதிரைக்கு, அண்டம் உற்பத்தி ஆகிறவரையில பெண் குதிரைக்கு குழந்தை பிறக்கும். படிச்சிட்டேன் ராம். குதிரையப் பத்தி மொத்த சரித்திரத்தையும் படிச்சிட்டேன். காத்துல பறந்து வர்ற ஒத்தை முடிய வெச்சி அது குதிரையோட பிடரி முடின்னும், அதுவும் பெண் குதிரை முடிதான்னும், அதுவும் ஆண் போகம் அனுபவிக்காத பெண் குதிரை முடிதான்னும் அடிச்சி என்னால சொல்ல முடியும். அந்த அளவுக்கு குதிரைய பத்தி படிச்சிட்டேன். அதனாலதான் தள்ளி நின்று பாத்தே அந்த குதிரை கர்பம்னு என்னால சொல்ல முடிஞ்சது. குதிரை வயித்தில இன்னொரு குட்டிக் குதிரை. அதுவும் வெள்ளைக் குதிரை. நான் இதை வெச்சி எத்தனை ரூபாய் பிசினஸ் பண்ணுவேன்னு உனக்கு தெரியுமா ராம்?”
தெரியாதே!”
இப்ப பாரு!”
செல்போன் எடுத்தான். இரண்டு, நான்கு, எட்டு பேரிடம் மாறி மாறி என்னென்னவோ மொழியில் பேசினான்பிறகு நிம்மதி மூச்சு விட்டபடி என்னைப் பார்த்து சிரித்தான். “முடிச்சிட்டேன் ராம்! சிலோன்காரன். ஹைதராபாத்ல இருக்கான். நாளைக்கு குதிரை போயிடும். பணம் வந்துடும். எவ்ளோ பிசினஸ் தெரியுமா? பதினாறு லட்சம்!”
நான் மூச்சைப் பிடித்துக்கொண்டேன். “வயித்தில இருக்கிற குட்டியவும் சேத்து வித்திட்டியா?”
ச்சே ச்சே! பொன் முட்டை இடற வாத்தை வயிறு அறுப்பாங்களா? பொட்டைக் குதிரை வெச்சிருக்கிறவன் காசு அச்சடிக்கிற ஒரு மகாலட்சுமிய வீட்டுல வெச்சிருக்கான்னு அர்த்தம். நான் வித்தது வேற குதிரை. நேத்து சின்ன சேலம் போயிருந்தேன் இல்லையா... அங்க இருபதாயிரத்துக்கு ஒரு வெள்ளைக் குதிரை வாங்கினேன். அது ஒடம்புல சில இடத்தில கறுப்பு புள்ளி இருக்கு. அதனால பதினாறுக்கு தள்ளி விட்டுட்டேன். இந்த கர்பினிக் குதிரை குட்டி போட்டதும் தனித் தனியா பிரிச்சி விப்பேன். கோடி ரூபாய்க்கு நான் வித்தா நீ மயக்கம் போட்டு விழக்கூடாது?”
குதிரை அத்தனை விலை போகுமா ஜெகதீஸ்
இங்க நிறைய பேருக்கு குதிரை என்ன விலைன்னே தெரியாது ராம். பசுமாடு மாதிரி ஆறு ஏழாயிரம் போகும்னு நெனைக்கறாங்க. சாதாரண குதிரையே ஐம்பதாயிரம் அறுபதாயிரத்துக்கு போகும். நல்ல சுழி இருந்தா லட்சத்துக்கு போகும். ஊட்டி ரேஸ் குதிரை ஒண்ணு ஒண்ணரை கோடிக்கு வியாபாரம் ஆனதை நான் பாத்தேன் ராம். அற்புதம் இல்லாத குதிரையே அத்தனை விலை போனா வெள்ளைக் குதிரை விலை, அதுவும் சோமலராஜன் குதிரை கிடைச்சா என்ன விலை போகும் நினைச்சி பாரு.
எனக்கு பொறாமையில் எரியக் கூடாத இடங்கள் எல்லாம் எரிந்தது. அவன் கடைவீதியில் எனக்கு கண்டதையும் வாங்கித் தந்தான். குடித்தான். பிறகு வீட்டில் என்னை விட்டுவிட்டு போதையோடு போனான். எனக்கு வயிற்றெரிச்சல் அதிகமானது. என் கண் முன்பாகவே ஒருத்தன் பதினைந்து லட்சத்து என்பதாயிரம் சம்பாதிக்கிறான். நான் அவனுக்கு ஜட்காக்காரன் பொண்டாட்டி வீடு காட்டிக்கொண்டிருக்கிறேன். ஹாலில் உட்கார்ந்து பெரிய பெரிய சிகரெட்டாக பிடித்து நெஞ்சில் அடித்துக்கொண்டும் மனசு ஆறவேயில்லை. நிஜமாகவே குதிரை அத்தனை விலை பொறுமா? இவன் கண்கட்டு வித்தை காட்டுகிறானா? சந்தேகம் சந்தேகம்! நான் போன் போட்டு எமிலிப் பிரியாவை வீட்டுக்கு வாடி என்றேன். அவள் எழுதுகிற ரகம். எழுத்தாளினி. படிக்கிற ரகம். புராணம், சங்க காலம், குதிரை, சோமலராஜன் பற்றி சந்தேகம் கேட்டால் அழுக்காமல் சொல்வாள். வீட்ட விட்டு வெளிய போடி என்று சொன்னால்தான் போவாள்.
வீட்டிற்கு வந்து எமிலியிடம் அந்த ஜெகதீஸ் பண்டாரம் கொடுத்த சோமலராஜன் சரித்திரக் காகிதத்தை கொடுத்து, அந்த ஜெகதீஸ் புராணத்தையும் சொன்னேன். “இதெல்லாம் உண்மைதானா? ஆயிரம் வருசம் குதிரை உயிரோட இருக்குமா? கிரைண்டர்ல தலைய விட்டுக்கலாம் போல அத்தனை குழப்பமா இருக்கு. உண்மை என்னன்னு சரியா சொல்லுடி எமிலி. ஆனா எம் பொண்டாட்டிகிட்ட போட்டுக் குடுத்திடாதே!”
எமிலி காகிதங்களில் பார்வை ஓட்டியபடி முணுமுணுவென்று படித்தாள். “பூலோகச் சொர்க்கம் என்று சொல்லப்பட்ட ரத்னபுரியை... சோமலராஜன் கதையா? உச்சந்தலையில் பல்லி விழுந்தால் துர்மரணம் சம்பவிக்கும் என்று... காட்டுப்பன்றி முதுகு தேய்த்ததால்தான் சந்தனமரத்திற்கு வாசனை வந்தது... இந்த தேசத்தின் மகாராணி ஸ்வர்ண தீபிகாவுக்கும், தாமிரநங்கை என்ற சிறுமிக்கும் பவுர்ணமி கழிந்த மூன்றாம் நாளில்.... தர்பாருக்குள் சில தும்பிகள் பறந்து நுழைந்ததையும், அது தாமிரநங்கை இசைக்கும் யாழின் மீது அமர்வதையும்... திமிர் பிடித்தவளே! மகாராணின் ஒட்டியானத்தை கழுதைக்கு அணிவிப்பாயா? பல்லாயிரம் ஆண்டுகள் வாழும் அந்த வெள்ளைக் குதிரை இப்பொழுதும் எங்காவது மேய்ந்துகொண்டிருக்குமென்றுமுணுமுணுப்பதை நிறுத்திவிட்டு என்னை உற்றுப் பார்த்ததான் எமிலி.
இது எந்த நூற்றாண்டுல எழுதின கதைன்னு சொன்னே?”
பத்தாம் நூற்றாண்டா இருக்கலாம்னு சொன்னான். ஓலைச்சுவடியிலையோ கல் வெட்டுலையோ இது இருந்ததாம். அதை படிச்சிட்டு எழுபது வருசத்துக்கு முன்னாடி யாரோ காகித்தில எழுதி இதை பதிப்பிச்சிருக்காங்க. அதோட ஜெராக்ஸ் காப்பிதான் இதுன்னு ஜெகதீஸ் தந்தான்.” நான் சொல்லி முடிப்பதற்கு முன்பே உமா வயிற்றைப் பிடித்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தது. “ஓய் ராம்! இந்த சரித்திரக் கதைய ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி நான்தான் எழுதினேன்னு சொன்னா நீ நம்புவியா? கல்வெட்டுல எழுதின காலத்தில நான் பொறக்கவேயில்ல. ஆனா சத்தியமா சொல்லறேன்... நான்தான் இந்தக் கதைய எழுதினது?”
என்னடி எமிலி சொல்லறே?”
ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஆள் வீட்டுக்கு வந்து ஒரு சரித்திரக் கதை வேணும். பம்பாய் தமிழ் முரசுல போடப்போறோம்னு சொல்லி ஒத்தக் கால்ல நின்னு இதை எழுதி வாங்கிட்டுப் போனான். அதுல வெள்ளைக் குதிரைதான் வரணும். அது சாகவே கூடாதுன்னு அவன் ஏன் கன்டிசன் போட்டான்னு இப்பத்தான் தெரியுது. பம்பாய் முரசுக்கு போகவேண்டிய கதை உங்க கைக்கு வந்ததுதான் அதிசமா இருக்கு.”
அவன் உயரமா, சிவப்பா, ஒல்லியா மீசை இல்லாம இருந்தானா? அப்படி இருந்தா அது ஜெகதீஸ்தான்
இல்ல, அவன் குள்ளமா கறுப்பா குண்டா மீசையோட இருந்தான். அவன் பேரு பகுளசிங்கம்னு சொன்னான்
என்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சாகாத குதிரை, புதையுண்ட புதையல், நாலாயிரம் குதிரை ரெண்டு லட்சத்திற்கு வியாபாரம், சரித்திர காலத்து கல்வெட்டுக் கதையை நான்தான் எழுதினேன் என்று சொல்லும் இந்த நூற்றாண்டு எமிலி. எனக்குத் தெரியாமல் நான் பயித்தியமாகிக்கொண்டிருப்பதன் புற விளைவுகள்தானா இது? இல்லை ஜெகதீஸ் பைத்தியமானதன் எதிர் விளைவா? அய்யோ என் மனைவி ஊரில் இருந்திருந்தால் என் தலையில் குண்டா அடி கொடுத்தாவது சரிசெய்திருப்பாளே! அவள் இருந்திருந்தால் இப்படி ஒருக்காலும் நடந்திருக்காதே! நான் தலையைப் பிடித்துக்கொண்டு கேஸ் சிலிண்டர் மீது உட்கார்ந்தேன்.
ராம்! உலகத்தில தினுசு தினுசா மனுசங்க, தினுசு தினுசா ஏமாத்தறவங்க இருப்பாங்க! பாம்பு வித்தை காட்டறவன், குரளி வித்தை காட்டறவன், மை வித்தை காட்டறவன் பஜாருக்கு பஜார் இருக்கத்தான் செய்யறான். அதையெல்லாம் வேடிக்கை பாக்கிறது நம்ம வேலை கிடையாது. உருப்படியான சமகால உலகத்துக்கு வா. சரித்திரக் குதிரை தேடினா சங்கு ஊதிடுவாங்கசொல்லிவிட்டு உமா பேஜாராக ஒரு டீ குடிக்க முடியாத தினுசில் போட்டுக் கொடுத்து அவளும் குடித்து பிறகுபுருசன் தேடுவான். நான் வரட்டுமா? கதவை தெறந்து வெச்சிட்டு தூங்கு... எனக்கு தூக்கத்தில நடக்கிற வியாதி உண்டுஎன்று கண்ணடித்து சொல்லிவிட்டு தபதபவென்று ஓடிப்போனாள். ஆனால் மனசு ஓயவில்லை. எனக்குள் என்னவோ விபரீதம். அல்லது ஜெகதீசுக்குள் என்னவோ தப்பு. எது சரி?
அந்த நேரத்தில் எனக்கு போன் வந்தது. ஜெகதீஸ்தான் பேசினான். “ராம், கேக்க மறந்துட்டேன். உங்க ஊர் மாதேமங்களம்தானே! அங்க நிறைய குதிரை இருக்கும்னு சொல்றாங்க நிஜமா?”
எனக்கு பற்றிக்கொண்டு வந்தது. எமிலி எழுதிய சரித்திரக் கதையை ஓலைச்சுவடி சரித்திரம் என்று இவன் பயித்தியக்காரன் போல உளறுவான். கிழட்டுக் குதிரையை லட்சரூபாய் கொடுத்து வாங்கி கிராக்குத் தனம் செய்வான். மனசுக்கு தோன்றியபடியெல்லாம் கிறுக்குப் பையன் போல பேசுவான். அதற்கெல்லாம் நான்தான் கிடைத்தேனா? “டேய் ஜெகதீஸ்! சும்மா கேணையனாட்டம் பேசாத! நீ குடுத்த சரித்திரக் கதையொண்ணும் பத்தாம் நூற்றாண்டு கதை கிடையாது. அதை எழுதின பொண்ணை எனக்குத் தெரியும். எதுக்காக இப்படி விளையாடற.. இல்ல மறை கழண்ட கேஸா நீ! குதிரை வால்ல ஓலைச் சுவடின்னு நீ சொல்லறதை தெருநாய் கூட நம்பாதுடா!”
என்ன ஆச்சி ராம்? கதைய முழுசா படிச்சியா? நான் சரஸ்வதி மஹால் லைப்ரரியில சோமலராஜன் சரித்திரத்தை பாத்தேன்னு...”
நிறுத்து ஜெகதீஸ். நீ சோமலராஜனையே நேர்ல பாத்த மாதிரி பேசாத. அந்த கதைய எழுதின பொண்ணை நான் நேர்ல பார்த்தேன். ராத்திரிக்கு வர்றேன்னு சொல்லியிருக்கா... தெரியுமா?”
நம்பாத ராம்! இப்படித்தான் சிலபேர் வால்மீகி ராமாயணம் எழுதினது நான்தான், பத்துப் பாட்டுல எட்டுப் பாட்டை நான்தான் எழுதினேன்னு அதை காபி பண்ணி எடுத்து வெச்சிகிட்டு ஏமாத்துவாங்க. நானே ஆன்டான் செக்காவ் கதைய தமிழ்ல எழுதி வெச்சிகிட்டு நான்தான் எழுதினேன்னு எத்தனையோ பொண்ணுங்களை ஏமாத்தியிருக்கேன். ஒரே ஒரு நாள் உன் முன்னாடி தண்ணி அடிச்சதுக்காக என்ன பயித்தியம்னே முடிவு கட்டிட்டே பாத்தியா? ராம்! கதைய முழுசா படி. படிக்காட்டியும் பரவாயில்ல விடு. குதிரை கிடைச்சா புத்திசாலித் தனமா வாங்கிப் போடு!”
ஏன் சாகர குதிரைய கர்பினிக் குதிரைன்னு நான் வாங்க லூசா?”
ராம்! சொன்னா நம்பமாட்டே.. அந்தக் குதிரைய நான் வித்துட்டேன். பெங்களுர் ஆள்கிட்ட. என்ன விலை கேளு. இருபத்தெட்டு லட்ச ரூபாய். நீ சோமலராஜனை நம்பலேன்னாலும் பரவாயில்ல. இந்த ஜெகதீசை நம்பு. குதிரைய வாங்கு. பத்து மடங்கு லாபத்துக்கு நீ எனக்கே விக்கலாம். இல்ல குதிரை இருக்கிற இடத்தை மட்டும் காட்டு. ஒரு குதிரைக்கு பத்தாயிரம் உனக்கு கமிஷன் தரேன். சரியா!” அவன் போன் கட் செய்தான். எனக்கு திகுதிகுவென்று பற்றி எரிந்தது. பத்தாயிம்! ஒரு குதிரைக்கு பத்தாயிரம்! வாங்கி விற்றால் இருபத்தெட்டு லட்சம்! உட்கார முடியவில்லை எனக்கு. அந்த சோமலராஜனின் ஜெராக்ஸ் சரித்திரம் வசீகரமாக என்னைப் பார்த்து சிரித்தது. தாமிரநங்கை யாழ்; போட்டியில் ஜெயித்தாளா தோற்றாளா? விரல் துண்டிக்கப்பட்டதா இல்லையா? இந்தக் கதையில் சோமலராஜனுக்கு எப்போது கிராக்கு பிடித்தது.. வெள்ளைக் குதிரையின் நிஜமான புதிரென்ன? எனக்கு படிக்கிற அவகாசமில்லை குதிரை குதிரை...
நான் போன் எடுத்து ஜெகதீஸை பிடித்தேன்! “நான் உனக்கு வெள்ளைக் குதிரை தந்தா எத்தனை காசு தருவே!”
லட்சத்தில இருந்து இருபது லட்சம் வரைக்கும் உண்டு.”
ஏமாத்திடமாட்டியே?”
முன்பனமா தரவா? உன் பேங்க் அக்கவுன்ட் நெம்பர் சொல்லு. அட்வான்ஸ் பணம் அனுப்பறேன்
வேணாம் குதிரைய தந்துட்டு காசு வாங்கிக்கறேன்சொல்லிவிட்டு பரபரவென்று அறையில் நடக்க ஆரம்பித்தேன். ராம் ராம்! உன் புத்திசாலித்தனத்தை உபயோகம் பண்ணிப் பண்ணி எத்தனையோ தோத்திருக்கே நீ! கைக்குப் பக்கத்தில வந்த எத்தனையோ பிசினஸ் சாத்தியங்கள நீ உன்னோட அறிவாளித்தனத்தால தோத்திருக்கே! குதிரை எப்படி இருபத்தெட்டு லட்சத்துக்கு போகும்னு தர்க்கம் பண்ணாதே! தலைக்கு மேல மீன் பறக்குதுன்னு சொன்னா பிடிச்சி வறுத்து திங்கற வழியப் பாரு! அது எப்படி மீன் ஆகாசத்துல பறக்கும்னு கேக்காதே! கேட்டவன் கேணையன். பிடிச்சி தின்னவன் புத்திசாலின்னு எத்தனையோ முறை உன்னச் சுத்தி இருக்கிறவங்க நிரூபிச்சிருக்காங்க. காசு.. காசு வேண்டும். குதிரை வாங்க காசு வேண்டும். ஐம்பதாயிரம் கொடுத்து ஒரு குதிரை வாங்கினால் இருபது லட்சத்திற்கு குறைந்த பட்சம் விற்கலாம். எட்டு பத்து குதிரை வாங்க காசு வேண்டும்.
மனைவியின் பீரோ திறந்தேன். பத்தாயிரம்! நகைப் பெட்டியை குடைந்தேன். முப்பது நாப்பதாயிரம் மதிப்புள்ள நகை! போதாது. மனைவியின் ஏடிஎம் கார்டை எடுத்துக்கொண்டேன். ஐம்பதாயிரமாவது வைத்திருப்பாள். என்னிடம் ஒரு நாலாயிரம். போதாது. என் அப்பாவின் தரிசு நிலம் சில ஏக்கர் கிராமத்தில் இருப்பது புரிந்தது. அதை விற்றுவிடவேண்டும். ஊரில் சிலபேரிடம் குதிரை இருக்கிறது. வெள்ளைக் குதிரையை ரகசியமாகத் தேடி பதறாமல் வாங்கவேண்டும். ஜெகதீசுக்கு தரவேண்டும். நான் குதிரை வேகத்தில் தயாராகி ஊருக்கு ஓடினேன். மனைவி வர பத்து நாள் ஆகும். அதற்குள் சில லட்சங்களைப் புரட்டி...
ஊரில் அப்பா நிலம் விற்ற காசோடு சேர்த்து மூன்று லட்சம் ரொக்கமாக இருந்தது. அடுத்து வெள்ளைக் குதிரையை ரகசியமாக விசாரித்தேன். “மாமா இங்க வெள்ளைக் குதிரை யார்கிட்டையாவது இருக்குமா?”
தெரியாதே மச்சான். போனவாரம் கூட ஒருத்தன் வந்து விசாரிச்சான். நம்ம ஊர்லதான் இப்ப குதிரையே கிடையாதே!”
அக்கம் பக்கம் எங்கியாவது வெள்ளைக் குதிரை கிடைக்குமா, சித்தப்பா?”
எதுக்கு ராமு குதிரை! அன்னசாகரத்தில நெறைய குதிரை இருக்கு. வெள்ளையா? போயி பாரு
நான் அன்னசாகரத்திற்கு போனேன். இங்கே இருக்கிறது, அங்கே இருக்கிறது என்று இழுத்து இழுத்து காட்டினார்கள். குள்ளமாக இருந்தாலும் நல்ல வெள்ளை ரகக் குதிரை ஒன்று. பேரம் பேசக் கூடாது என்று நான் இருபதாயிரத்தை எடுத்து டாம்பீகமாக நீட்டினேன்.
குதிரைக்காரன் குதிரையைவிட அசிங்கமாய் சிரித்தான். “என்ன சார் நீங்க, கசாப்புக்கு போற மாட்டுக்கு தர்ற மாதிரி காசு நீட்டறிங்க. இது வெள்ளை குதிரை சார்;?”
அதனால?”
ஒரு குதிரைக்கு ஒரு லட்சம். இன்னைக்கு உலகத்திலையே ஒசத்தியானது வெள்ளைக் குதிரைதான் சார்
என்னைய்யா சொல்லறே!”
சும்மா தெரியாத மாதிரி நடிக்காதீங்க சார். எதோ அவசரத்துக்குத்தான் விக்கிறேன். நாளுக்கு நாள் வெள்ளைக் குதிரை விலை ஏறுதாம். கோடி ரூபாய்க்கு போகும்னு சொல்லறாங்க. கல்யாண அவசரத்துக்குத்தான் விக்கிறேன். இல்லேன்னா ஆறே மாசத்தில இந்த குதிரைய என்னால இருபது லட்சத்துக்கு விக்க முடியும்.”
எனக்கு பகீரென்றது. இவர்களுக்கெல்லாம் விவரம் தெரியுமா? சோமலராஜன் ஜெராக்ஸ் இவனிடமும் இருக்குமா? நாடு பூராவும் தெரிந்த ரகசியமா இது? நான் ஜெகதீசுக்கு போன் போட்டேன்.
ச்சே ச்சே! அவங்களுக்கு சோமலராஜன் ரகசியமெல்லாம் தெரியாது. குதிரை விலை அதிகமாய்கிட்டே இருக்குன்னு மட்டும்தான் தெரியும். லட்ச ரூபாய்னு பயப்படாதே! பத்து லட்சத்துக்கு நான் வாங்கிக்கறேன். பயமா இருந்தா சொல்லு. நான் குதிரை வாங்கிக்கிறேன். பத்தாயிரம் கமிஷன் தரேன்!”
நான் லட்ச ரூபாயை எண்ணிக் கொடுத்தேன்.
இன்னும் குதிரை வேணுமா சார்?”
இருக்கா?”
ம் நிறைய இருக்கு சார்.. எத்தனை வேணும்?’
இப்போதைக்கு மூணு. மத்த குதரைய விக்காதீங்க ரெண்டு நாள்ல நானே வந்து வாங்கிக்கிறேன்.”
ஜெகதீசுக்கு போன் போட்டு வரவைத்தேன். அவன் தமிழ் தெரியாத என்னவோ பாஷை பேசுகிற மூன்று பேரை கூடவே அழைத்துவந்தேன். அவர்கள் மூச்சு பேச்சில்லாமல், மூன்று லட்சரூபாய் குதிரையை அவன் முப்பது லட்சம் கொடுத்து வாங்கிக்கொண்டார்கள். அந்தப் பணம் என் கையில் இருந்தது. நான் பிரமித்துப் போனேன். தொட்டுப் பார்க்கிற பணம்தான். சரித்திரக்காலத்து பணமல்ல. எங்கே கொடுத்தாலும் மீன் வறுவலும், புட்டி சாராயமும் தருவார்கள். ராத்திரிப்பெண் மல்லிகை மணத்தோடு சிரிப்பாள். நிஜப் பணம். நடப்பது நிஜம்தான்.
மொத்த காசையும் நான் பத்திரப்படுத்தினேன். முப்பது குதிரைகள் வரும். விற்பனை செய்தால்... முப்பது கோடியா? முன்நூறு கோடியா? எத்தனைக்கு போகும்.. கணக்கு உதைக்கிறது. கோடிக்கு எத்தனை சைபர். ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், கோடி, பத்து கோடி...  கோடிக்கு அப்புறமா லட்சம்? அப்ப சொச்சம்ச்சே அதிகப் பணம் வந்தால் படிப்பு மறந்து போகிறது. ஆகலாம். கோடீஸ்வரன் ஆகலாம். முப்பது லட்சம் போதாது. இன்னும் காசு வேண்டும். வீடு இருக்கிறது வீடு. நாற்பது லட்சமாவது போகும். நான் ஒரு சேட்டுக்காரனை பார்க்க விடிவதற்கு முன்பே ஓடினேன். அறுபது லட்சத்தை சாக்கு மூட்டையில் கட்டிக்கொண்டு வந்து போட்டான். அன்றைக்கே ரிஜிஸ்டர் ஆபீசில் நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டேன். இரண்டு மாசம் வீட்டில் இருக்க வாடகைக்கு அந்த சேட்டிடமே பேசிக்கொண்டேன். குதிரை வேட்டைக்கு மீண்டும் கிளம்பினேன்.
குதிரை விலை இரண்டே நாளில் கூடியிருந்தது. ஒரு லட்சத்துக்கு குதிரை கொடுத்த அவனே இன்றைக்கு பத்து லட்சம் என்றான். நான் அஞ்சி நடுங்கவில்லை. ஏழு குதிரைகளை கூச்சமில்லாமல் வாங்கினேன். ஜெகதீஸ் சொல்லியிருக்கிறான். இருபது லட்சமென்றாலும் குதிரையை வாங்கத் தயார்!
வீட்டிற்கு டெம்போ வைத்து குதிரையை கொண்டுவந்தேன். பின்னால் இருந்த காலி இடத்தில் ஷெட் போட்டேன். குதிரைக்கு வெயில் உரைக்காமல் இருக்க அந்த ஷெட்டிற்கு குளிர்சாதன வசதிசெய்தேன். நல்ல உயர்ரக குதிரைத் தீவனமாக தந்தேன். ஏழு குதிரை வந்தது என்று தெரிந்ததும் ஜெகதீஸ் பதறிக்கொண்டு வந்தான். ஒரு கோடி ரூபாய் சத்தியமாக என் கண் முன்பாகவே காட்டினான். நான் ஒரு கோடி ரூபாயை இதுவரை முழுசாக கண்ணால் பார்க்காதவன்தான். ஆனால் என்னிடம் இருப்பது குதிரை. வெள்ளைக் குதிரை. இந்தமுறை ஏமாறமாட்டேன். வெள்ளைக் குதிரைக்கு உலகத்தில் என்ன கிராக்கி என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஜெகதீஸ் குதிரையை வாங்கி என்ன விலைக்கு விற்பான் என்பதும் எனக்குத் தெரியும். நானே நேரடியாக விற்கப்போகிறேன். கோடிகளுக்கு. குதிரை விலைக்கு கிடையாது என்று அவனை விரட்டினேன். குதிரையை அவன் பொறாமையோடு பார்த்தபடி சென்றான்.
சோமலராஜனின் ஓலைச் சுவடியை சுமந்திருக்கிற குதிரை எங்கே இருக்கிறதோ எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே ஒவ்வொரு குதிரையும் புதையல் போல ஆகியிருந்தது. குதிரை வைத்திருக்கிற ஒவ்வொருவனும் கொஞ்சம் நாளில் கோடீஸ்வரன்தான். நான் குதிரைகளுக்கு தீவனம் வைத்துவிட்டு அன்போடு தடவிக் கொடுத்தேன்.
வீடு திரும்பிய என் மனைவி வீட்டுக்குள் குதிரை பார்த்ததும் குதி குதி என்று குதிரை உயரத்திற்கு குதித்தாள். நான் சொன்ன விவரத்தை கேட்க அவள் தயாராக இல்லை. சோமலராஜன் கதை சொல்லி முடிப்பதற்குள் அவள் ஏழு முறை என் முகத்தில் காறி துப்பினாள். இப்பொழுதே குதிரையை வீதியில் துரத்து என்றாள். குதிரை மூலமாய் ஒருத்தன் கோடீஸ்வரன் ஆவான் என்பதை அவள் நகைச்சுவைக்காகக் கூட ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு குதிரை எத்தனை லட்ச ரூபாய்க்கு கை மாறுகிறது என்பதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன். நானே ஒரு குதிரைக்கு பத்து லட்சம் கொடுத்திருக்கிறேன்
என் மனைவி ஒரு பைத்தியக்காரி. அவளுக்கு குறுக்கு வழி எதுவும் பிடிக்காதாம். அவளின் பிச்சைக்கார நகையையும், அல்ப வீட்டையும் விற்று நான் பெரிய பைத்தியக்காரத்தனம் செய்துவிட்டேன் என்று குதித்தாள். குதிரையை வைத்து சூதாடுகிற நான் உறுப்படவே மாட்டேன் என்று சொன்னாள். உன்னோடு வாழ்வது மகா கஷ்டம் என்று சொல்லிவிட்டு தன் அப்பன் வீட்டிற்கு திரும்பவும் ஓடிப்போனாள். இனி திரும்ப வரமாட்டாளாம். இங்கே இருந்தால் அவளையும் நான் குதிரை வாங்குவதற்காக விற்றுவிடுவேனாம்! அவளை விற்று குதிரையின் ஒற்றை மயிரைக்கூட வாங்கமுடியாது என்று அவளுக்கு எப்படி நான் புரியவைப்பது. போகிறாள் நாய். நாளைக்கே இந்த ஏழு குதிரைளும் ஏழு கோடிகளாக மாறும். அப்பொழுது என் மனைவியே வருவாள். அல்லது எத்தனையோ பெண்கள் மனைவி என்று சொல்லிக்கொள்ள வருவார்கள். நான் குளிர்பதன லாயத்தில் சுகமாய் நின்ற என் எட்டு குதிரைகளை பரிவோடு பார்த்தேன். வீட்டிற்குள் வந்து சுகமாய் படுத்தேன்.
வெங்கலராஜனின் சரித்திரம் மீண்டும் என்னை வசீகரித்தது. அந்த தாமிர நங்கை என்னதான் ஆனாள் என்று தெரிந்துகொள்கிற விருப்பம் இந்த ஓய்வில்தான் எனக்கு வந்தது. நான் மீண்டும் வீட்டின் எல்லா கதவு, ஜன்னல்களையும் அடைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தேன்.
மகாராணி ஸ்வர்ண தீபிகாவுக்கும், தாமிரநங்கைக்குமான யாழ் போட்டி இன்றைக்குத்தான். போட்டிக்கான நாள் விழாக்கோலத்தோடு ஆரம்பமானது. போட்டியைக் காணவும், வெற்றியை அறிவிக்கவும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் கலா மண்டபத்தில் கூடியிருந்தார்கள். பாணர்களும், கூத்தர்களும் விரலிகளும் முன்வரிசையில் நின்றார்கள். மந்திரிகளும், சேனாதிபதிகளும் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள்.
சோமலராஜன் கம்பீரமாய் தர்பாருக்குள் வந்து மக்கள் ஆரவாரத்திற்கிடையே கை அசைத்து தனது ஆசனத்தில் அமர்ந்தான்.
தூவிய மலர்மேல் நடந்து வந்து அழகான மகாராணி ஸ்வர்ண தீபிகாவும் தன் ஆசனத்தில் அமர்ந்தாள்.
 மூங்கிலின் தேகமும், பிச்சிப் பூ சூடிய கூந்தலும் கொண்ட பதினாறு வயதே நிரம்பிய தாமிரநங்கை அரங்கத்திற்குள் தலை பணிந்து வந்து நின்றாள்.
அவளைக் கண்டதும் அங்கிருந்த அத்தனைபேரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். இந்தச் சிறுமியா மகாராணியை வெல்லப்போகிறவள்? தாமிரநங்கை போட்டிக்காக நாட்டிற்குள் வந்த விதம் பற்றி முன்பே ஊரில் பலவாறு பேசிக்கொண்டார்கள். தாமிரநங்கையும், அவளின் கிழட்டுத் தாயும் கிழிந்த உடை போட்டுக்கொண்டு, நொண்டி காட்டெருமை பூட்டிய வண்டியில் வரும்போது பாதி வழியில் அச்சு முறிந்ததால் கீழே விழுந்து எழுந்து பின் வந்திருக்கிறார்கள் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள்.
நேரில் தாமிரநங்கையைப் பார்த்ததும் நொண்டி காட்டெருமையின் வண்டி அச்சு முறிந்து விழுந்த சித்திரம்தர்ன அனைவருக்கும் தெரிந்தது. ஓவென்று சிரிக்க ஆரம்பித்தார்கள். சபை அடக்கினான் கட்டியக்காரன். ஒரு மந்திரி எழுந்து போட்டி விதி குறித்து அறிவித்தான். “போட்டிக்கு முன்பாக நமது மகாராஜா யாழ் இசைப்பார்கள் பிறகு போட்டி ஆரம்பமாகும்என்றான்.
                தங்கத்தில் செய்யப்பட்டு, மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட பொன் யாழ் கொண்டுவரப்பட்டது. சோமலராஜன் யாழ் இசைக்க ஆரம்பித்தான். வேந்தன் யாழிசைக்க வெறி கிளம்பிற்று மக்களுக்கு. தெருவோரப் பாடகன் இப்படி யாழ் இசைத்திருந்தால் புதர் ஓணான் வந்து அவனை உதைத்திருக்கும் என்று தாமிரநங்கையின் கிழத்தாய் நினைத்துக்கொண்டாள். யாசிக்கும் பாணன் இப்படி யாழ் இசைத்திருந்தால் அவனின் கடைசிப் பாடல் அதுவாகத்தான் இருந்திருக்கும் என்று தாமிரநங்கை நினைத்துக்கொண்டாள். மக்களோ ஒன்றும் சொல்லாமல் யாழ் ரசித்தார்கள். வாசிப்பது வேந்தனாயிற்றே. ராஜ சபைக்கு வந்தால் மொண்ணை மூக்கனையும் பேரழகன் என்று புகழவேண்டியதுதானே ராஜவிசுவாசம். சோமலராஜன் யாழ் வாசித்து முடித்ததும் சம்பிரதாயமாக கை தட்டிவிட்டு, “இப்பொழுது பாட்டி ஆரம்பமாகிறதுஎன்று ஒரு மந்திரி அறிவித்தான்.
பேரழகு மகாராணி ஸ்வர்ண தீபிகா பலவர்ண கற்கள் பதித்த தனது மரகத யாழ் எடுத்து சபை நடுவே வாசிப்பதற்காக உட்கார்ந்தாள். தாமிரநங்கை தன்னோடு கொண்டுவந்திருந்த மரத்தாலான யாழை எடுத்தாள். அடுத்த கணம் கலா மண்டபமே இடிந்து விழுகிறபடி பெரும் சிரிப்புச் சத்தம் கேட்டது. சிரிப்பு வெகுநேரம் வரையில் அடங்காமல் இருக்கவே சோமலராஜன் கண் காட்ட ஒரு மந்திரி சபை அடக்கினான்.
பொறுமை காக்கவேண்டும் சபையோர்களே! இப்பொழுது போட்டி ஆரம்பமாகிறது. முதலில் மகாராணி யாழ் வாசிப்பார்கள். பிறகு தாமிரநங்கை என்ற சிறுமி வாசிப்பாள். யார் நன்றாக யாழ் வாசித்தார்கள், யார் வெற்றிபெற்றார்கள் என்பதை சபையோர் செய்கிற ஆரவாரத்தைக் கொண்டே தீர்மானிக்கப்படும். அதனால் சபையயோர் நன்றாக வாசித்தால் கைதட்டி ஆரவாரம் செய்தும், சரியாக வாசிக்காவிட்டால் ஊளைக் கோஷமிட்டும் தங்களின் அபிப்ராயத்தை தெரிவிக்கலாம். சபையோரின் தீர்ப்பே இறுதியானது. இப்பொழுது மகாராணி யாழ் இசைப்பார்கள்.” மந்திரி அமர்ந்தான்.
மேடையில் அமர்ந்து யாழ் எடுத்து விரல் சொடுக்கி இசைக்க ஆயத்தமானாள் மகாராணி ஸ்வர்ண தீபிகா. பெருந்திரளாய் கூடியிருந்த மக்களின் கடைசி வரிசை ஆட்கள், மகாராணி இசைக்க ஆரம்பிப்பதற்கு முன்பே 'ஆஹா, அபாரம், அற்புதம்!" என்று பெரும் குரலெடுத்து கத்த ஆரம்பித்தார்கள். தாமிரநங்கை அதிர்ச்சியோடு நடப்பதை பார்த்தாள். சோமலராஜன் கண் காட்டினான். ஒரு மந்திரி எழுந்து நின்று, 'அமைதி! அமைதி! மகாராணி யாழ் இசைத்து முடித்த பிறகு உங்கள் பாராட்டை தெரிவிக்கலாம்" என்று சொல்லி அமர்ந்தான்.
                மகாராணி வெகுநேரம் அற்புதமாய் யாழ் இசைத்தாள். முன்வரிசையில் நின்றிருந்த பாணர்களும், கூத்தர்களும், விரலிகளும் தலையை நன்றாக ஆட்டி இசையை ரசித்தார்கள். யாழின் இசை கலா மண்டபம் முழுதும் நிரம்பி வழிந்தது. நதி சுழித்துச்செல்லும் ஓசைபோல மெல்ல ஆரம்பித்த யாழ் இசை பிறகு காட்டாறு கதறுவது போல பேரோசையோடு கேட்க ஆரம்பித்தது. பிறகு அந்த யாழில் இருந்து கோட்டான்களின் சத்தமும், ஆந்தைகளின் அலறலும் கேட்க ஆரம்பித்தது, மகாராணி பாதியில் யாழ் இசைப்பதை நிறுத்திவிட்டு தனது யாழை உற்று நோக்கினாள். உண்மையில் மகாராணி யாழில் பலபேரை வெற்றிகொண்டவள்தான். ஆனால் இன்று தன் கையையும் மீறி யாழில்; வினோது ஒலி வந்தைதைக் கண்டு அதிர்ச்சி கொண்டாள். யாழில் இருந்து வந்த அலறல் சத்தத்தைக் கேட்ட முன் வரிசைக் குழந்தைகள் விபரீதம் அறியாமல் காதை மூடிக்கொண்டன. பிறகு கர்பினிப்பெண்கள் சிலர் மயக்க நிலையில் சரிந்தார்கள். மீண்டும் யாழ் வாசித்தாள் மகாராணி... மீண்டும் அதே கோட்டான்களின் அலறல்.
பாணர்களும் விரலிகளும் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று முகத்தை பிரகாசமாய் வைத்துக்கொண்டு யாழ் இசை அருமை அருமை என்று பெருமையாய் சொல்ல ஆரம்பித்தார்கள். மகாராணி மீண்டும் மீண்டும் இசைத்து முயற்சித்தாள். கலா மண்டபத்திற்குள் இருந்து என்றைக்கும் இல்லாமல வவ்வால்களும், ஆந்தை, கோட்டான், காக்கைக் கூட்டங்களும் பறந்து வெளியேற ஆரம்பித்தது. அதைக் கண்ட மகாராணி அச்சமுற்று யாழ் இசைப்பதை நிறுத்திவிட்டு எழுந்து நின்றேவிட்டாள். அவ்வளவுதான் கூடியிருந்த கூட்டத்தின் அத்தனைபேரும், - குழந்தைகள் உட்பட - மண்டபம் அதிரும்படி கைதட்ட ஆரம்பித்தார்கள். அது அடங்க வெகுநேரம் ஆனது. மகாராணி பிரமாதமாக யாழ் இசைத்தார்கள் என்று எல்லா மந்திரிகளும் பிரமாதமாய் பாராட்டிப் பேச ஆரம்பித்தார்கள். சோமலராஜன் பெருமையோடு மகாராணியை பார்க்க மகாராணி இருண்ட கண்களோடு தாமிரநங்கையை பார்த்தாள். கூட்டத்தின் பின்னால் நின்றிருந்த தாமிரநங்கையின் கிழத்தாய் முகம் சுளித்து, 'என் மகள் உன் ஆணவத்தை அடக்குவாள்" என்று முணகிக்கொண்டாள்.
அடுத்து தாமிரநங்கை யாழ் இசைப்பாள்!”
                பிச்சிப் பூ சூடிய தாமிரநங்கை சபையை ஒருமுறை வணங்கி யாழ் இசைக்க ஆயத்தமானாள். அடுத்த கணம் முன்வரிசையில் இருந்த பாணர்களும், விரலிகளும் "ஐயோ, இசை நாராசமாய் இருக்கிறது! மயக்கமாய் வருகிறது" என்று சொல்லி சுருண்டு விழுந்தார்கள். அதைக்கண்டு எல்லோரும் சிரித்தார்கள். இசைக்க ஆரம்பிக்கும் முன்பே நடந்த விபரீதம் கண்ட தாமிரநங்கை அதிர்ச்சியோடு சோமலராஜனைப் பார்த்தாள்.
                'சபையோhர்களே! சிறுமி இசைத்து முடித்த பிறகு உங்கள் முடிவைச் சொல்லுங்கள்" என்று சோமலராஜன் சொன்னான்.
தங்கள் இரண்டு செவித் துவாரங்களிலும் சுண்டுவிரலை வைத்து அடைத்துக்கொண்ட சபையோர் தாமிரநங்கையின் யாழ் இசை கேட்பதற்கு தயாரானார்கள். அப்பொழுது அரண்மனைச் சேவகன் ஒருத்தன் அங்கிருந்த மக்களுக்கு பிடி பிடியாய் பொற்காசுகளை ரகசியமாகத் தருவதை கிழத்தாய் கண்டாள். அவள் கையிலும் ஒருபிடி பொற்காசு கொடுத்தான் சேவகன்.
                'இது எதற்கு மகனே! மகாராணி யாழ் இசைக்கு கை தட்டியதற்காகவா?" கூன்கிழவி கேட்டாள்.
                'அதற்கில்லை பாட்டி! இப்பொழுது யாழ் இசைக்கிறாளே தாமிரநங்கை.. அவள் யாழ் இசைத்த பிறகு கை தட்டாமல் இருப்பதற்காக. பாராட்டி ஒரு வார்த்தை பேசாமல் இருப்பதற்காக! இது ராஜனின் ரகசிய உத்தரவு! எச்சரிக்கை!" சொல்லிவிட்டு சேவகன் மற்றவர்களுக்கு காசு கொடுத்தபடி சென்றான்.
                மகளின் பிஞ்சுவிரல் வஞ்சகத்தால் துண்டாகப்போகிறது என்று தெரிந்துகொண்ட கூன்கிழவி தன் மகளை கண்ணீர்க் கண்களோடு பரிதாபமாய் பார்த்தாள். ராஜனின் சூழ்ச்சியை இந்த சபையில் சொன்னாலும் யார் கேட்பார்கள். பொற்காசு இல்லாத கையோடு யாரும் இல்லையே!
கண் மூடி யாழ் இசைக்க ஆரம்பித்தாள் தாமிரநங்கை. காது அடைத்து நின்ற சபைக் கூட்டம் கண்ணையும் மூடிக்கொண்டது. அவள் யாழ் வாசிக்கிற அழகை கண்ணால் கண்டு அதிசயித்தாலும் ராஜகுற்றம் ஆகுமே. தாமிரநங்கையும் கண்மூடி தலையசைத்து இனிமையாய் யாழ் இசைத்தாள். எத்தனை இனிமையான இசை! ஒரு மந்திரி மனசுக்குள் சொல்லிக்கொண்டான். அந்த சபைக் கூட்டத்தால் சுண்டு விரல் கொண்டு காதைத்தான் மூட முடிந்தது. மூக்கு திறந்தே கிடந்தது. நங்கை யாழ்வாசிக்க ஆரம்பித்த சற்று நேரத்தில் சபைக் கூட்டம் ஆச்சரியத்தோடு ஒருவர் முகத்தை ஒருவராய் பார்த்துக்கொண்டது. காட்டு மலர்களின் வாசனை கலா மண்டபம் முழுவதும் வீசுவதை அவர்கள் நாசியால் உணர்ந்தார்கள். கொஞ்சம் நேரத்தில் சில தும்பிகள் மண்டபத்திற்குள் பறந்து நுழைந்ததையும், அது தாமிரநங்கை இசைக்கும் யாழின் மீது அமர்வதையும் கண்டார்கள்.
அரண்மனை நந்தவனத்து அன்னப் பறவைகளும், மயில்களும் கலா மண்டபத்திற்குள் வந்து நடமாட ஆரம்பித்தன. என்றைக்கும் பார்த்திராத காட்டுப் பறவைகளும், பட்டாம் பூச்சிகளும், மாடப் புறாக்களும்  மண்டபத்திற்குள் வந்து உச்சியில் சடசடத்துப் பறப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள் சபையில் இருந்தவர்கள். அதனால் அவர்கள் காதில் இருந்த தங்களது சுண்டுவிரலை எடுக்கும்படியும், அதனால் தாமிரநங்கையின் யாழ் இசையை கேட்கும்படியும் ஆயிற்று. இசையில் மயங்கிய அவர்கள் தங்களையும் அறியாமல் 'அற்புதம், பிரமாதம்" என்று சொன்னார்கள். அடக்கமாட்டாமல் கை தட்டவும் செய்தார்கள். பிறகு யாழ் இசையையும் மிஞ்சி அரண்மனை அதிரும்படி பெரும் கரவொலி கேட்க ஆரம்பித்தது. கைதட்டும் ஓசையோடு சில பொற்காசுகள் சிதறி விழும் ஓசையும் அங்கே கேட்கத்தான் செய்தது.
சட்டென்று யாழ் இசைப்பதை நிறுத்திவிட்டு எழுந்து நின்று சபைக்கு வணக்கம் சொன்னாள் தாமிரநங்கை. அபாரம் அபாரம் என்று சிலர் கூச்சலிட ஆரம்பித்து, அது ராஜகுற்றம் என்பதை உணர்ந்து அச்சத்தோடு பாதியில் நிறுத்திக்கொண்டார்கள்.
சோமலராஜனுக்கும், மந்திரிகளுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. நடந்து முடிந்திருப்பது பேரதிசயம். மக்கள் சொன்னது தப்பென்று கொண்டாலும் பறவைகளும், தும்பிகளும் இவளின் யாழ் இசைக்கு மயங்கி மண்டபத்திற்குள் வந்ததை யாராலும் மறுக்க முடியாது. தீர்ப்பை எப்படி சொல்வது என்று புரியாமல் திகைத்தார்கள் மந்திரிகள். ஒரு மந்திரி மட்டும் கொஞ்சம் இடக்கு மதியூகியாய் இருந்தான். அவன் எழுந்து நின்று கம்பீரமாய் பேசினான். 'மகாராஜா! இவள் ஒரு சூனியக்காரி. இவள் யாழ் இசைக்கவேயில்லை. ஏதோ ஒரு மாயப் பொடி தூவி விலங்குகளையும், மக்களையும் வசியம் செய்துவிட்டாள். அதனால்தான் இப்படி விபரீதம் நடந்துவிட்டது. சூனியக்காரிக்கு உடனே தண்டனை கொடுங்கள்"
கை தட்டிய குற்றத்திற்காக பயந்து நின்ற சபைக்கூட்டம் சமய சந்தர்ப்பத்தை சரியாக உபயோகம் செய்துகொண்டது. “ஆமாம் ஆமாம்! அவள் சூனியக்கரி! எங்களை மயக்கிவிட்டாள். அவளுக்கு உடனே தண்டனை கொடுங்கள்!”
மூத்த மந்திரி ஒருத்தன் சபை அடக்கி பேசினான். “தாமிரநங்கை என்பவள் செய்துகாட்டிய காட்சிகளைப் பார்க்கிறபோது அவள் ஒரு சூனியக்காரி என்றுதான் தோன்றுகிறது.. சூனியக்காரிகளுக்கு இந்த தேசத்தில்...”
நிறுத்துங்கள் மந்திரியாரே! தாமிரநங்கை சூனியக்காரி இல்லை!” மகாராணி ஸ்வர்ண தீபிகா மண்டபம் அதிரும்படி அதிகாரமாய் கர்ஜித்தாள்.
பறவைகளையும், விலங்குகளையும், மக்களையும் வசியம் செய்துவிட்டாள் என்று பொதுமக்களே ஒப்புக்கொள்கிறார்களே, மகாராணி!”மந்திரி பணிவாய் வணங்கினான்.
அவள் சூனியக்காரி என்றால் அவளின் வசியத்தில் மிருகங்கள் கட்டுப்படலாம். மக்கள் மயங்கலாம். ஆனால், அவள் யாழ் இசைத்தபோது என் அருகில் இருந்த யாழ் தானே இசைக்க ஆரம்பித்ததை நான் என் செவியால் கேட்டேன். அது தெரியுமா மந்திரியே உங்களுக்கு? அவள் உண்மையில் வெல்லமுடியாத அளவுக்கு யாழ் இசைப்பதில் வல்லவள்தான். அதனால்தான் கை தொடாமல் ஒரு யாழை வாசிக்கிற திறமை அவளுக்கு வாய்த்திருக்கிறது. நான் ஒப்புக்கொள்கிறேன். அவளே யாழ் போட்டியில் வெற்றிபெற்றவள்." மகாராணி சபைநடுவே வந்து நின்று தாமிரநங்கையின் வெற்றியை அறிவித்தாள்.
                அதைக்கேட்ட சோமலராஜன் தனது கால் கட்டைவிரல்களை இரண்டு கையாலும் பிடித்துக்கொண்டு 'ஐயோ என்ன இது கொடுமை. கட்டைவிரல் இல்லாமல் சோமலராஜனா?" என்று கத்திவிட்டான்.
                அதைக்கண்டு சிரித்த தாமிரநங்கை, சோமலராஜன் முன்பாவ வந்து நின்று வணக்கம் செய்து பேச ஆரம்பித்தாள். 'மகாராஜா! விரல்களை வெட்டி பரிசாகப் பெற நாங்கள் பிரம்ம ராட்சசர்கள் அல்ல. மகாராணி தன் வாயால் நான் வெற்றி பெற்றதாய் அறிவித்ததே எனக்குப் போதும். வெற்றிக்கு அட்சாரமாய் எனக்கு மகாராணியின் ஒட்டியானம் மட்டும் நீங்கள் கொடுத்தால் போதும்"
                'ஒட்டியானம் அணிந்தவர்களெல்லாம் மகாராணி ஆகிவிடமுடியாது தாமிரா! உனக்கு பொருத்தமான ஆபரணங்கள் ஆயிரம் பொன்னில் செய்து தருகிறேன். பெற்றுக்கொள்." அன்போடு சொன்னாள் மகாராணி.
                'ஒட்டியானம் எனக்கில்லை மகாராணி. எங்கள் வீட்டு கழுதைக்கு. நானும் வருவேன் என்று அடம்பிடித்த கழுதையை சமாதானப்படுத்திவிட்டு வந்திருக்கிறேன். போட்டியில் ஜெயித்து மகாராணியின் ஒட்டியானத்தை வாங்கிவந்து தருவதாய் வாக்கு கொடுத்துவிட்டேன்."
                'திமிர் பிடித்தவளே! மகாராணின் ஒட்டியானத்தை கழுதைக்கு அணிவிப்பாயா?" துள்ளி குதித்து வந்த மந்திரியை அடக்கினாள் மகாராணி.
                'தாமிரா! யாழ் இசைக்கத் தெரிந்த உனக்கு பேசத் தெரியவில்லை. வெகுளிப் பெண்ணாய் இருக்கிறாய் நீ!"
                'நான் வெகுளிப் பெண் கிடையாது மகாராணி. மகாராணியின் ஒட்டியானத்தை யாழ் இசையில் வென்று அதை கழுதைக்கு போடுவேனென்று என் தந்தைக்கு நான் வாக்கு கொடுத்திருக்கிறேன். யாழ் இசைத்து பொருள்தேடி வாழ்வோட்டும் பாணர்தான் எனது தந்தை. அவரின் யாழ் திறமையில் பொறாமைகொண்ட நீங்கள்தான் ஒருமுறை வீண் போட்டிக்கு அவரை அழைத்து சூழ்ச்சியால் ஜெயித்து அவர் விரல் துண்டித்தீர்கள். யாழ் கலைஞன் விரல் நறுக்குவதும், குரல்வளை அறுப்பதும் ஒன்றுதான். குயிலைக் கொன்றாலும் காக்கை கத்துவது ஒருபோதும் பாடலாகாது என்ற உண்மையை உலகுக்குச் சொல்லவும், மகாராணியின் இசை ஆணவத்தை அடக்கவும்தான் எனக்கு ஆசானாய் இருந்து அவர் யாழ் கற்பித்தார். என்றாலும் அவர் திறமையின் தூசி அளவே நான். இசையில் தேர்ச்சிபெற்ற பிறகு உங்களை வெல்லும் காலத்திற்காக காத்திருந்தோம். வேட்டைக்கு வந்த மகாராஜாவை பொறி வைத்து வலையில் விழ வைத்தாள் என் அம்மா. இதோ என் தந்தையின் யாழ் கொண்டு உங்களை வென்றிருக்கிறேன்." தனது குட்டி மார்பு நிமிர்த்தி தனது தந்தையின் பழம் சரித்திரம் சொன்னாள் தாமிரநங்கை.
                வேதனையில் சற்றுநேரம் பேச்சற்று நின்றாள் மகாராணி, பிறகு பெருமூச்சு விட்டபடி சொன்னாள், 'நான் தோற்றாலும் ஒரு மேதைச் சிறுமியிடம் தோற்றேன் என்று பெருமை கொள்கிறேன். இனி ஒருபோதும் இசை கர்வத்தால் ஒரு கலைஞனை நான் இம்சிக்க மாட்டேன்" சொல்லிவிட்டு தன் ஒட்டியானத்தை கழற்றி தாமிரநங்கைக்கு கொடுத்தாள். தாமிரநங்கை வேண்டாம் என்று மறுத்த பிறகும் பல ஆபரணங்களையும் கழற்றிக்கொடுத்தாள். தாமிரநங்கை சபை வணங்கி வீட்டிற்கு கிழம்பினாள். சோமலராஜன் வேகமாய் வந்து தாமிரநங்கையிடம் கேட்டான்.
நீ யாழ் இசைக்க ஆரம்பித்ததும் தும்பிகளும், காட்டுப் பறவைகளும் வந்ததே அது எப்படி? ஒரு யாழை மீட்டுவதன் மூலம் இன்னொரு யாழை இசைக்க வைப்பது எப்படி சாத்தியம்?”
தாமிரநங்கை புன்னகை மட்டுமே பதிலாகச் சொன்னாள். அது தகப்பன் கொடுத்த சூட்சுமம், ரகசியம் என்று சொல்லி கண் சிமிட்டிச் சிரித்தாள்.
                ஒரு சிறுமி மர யாழ் கொண்டு மக்களை வசியம் செய்ய முடியுமா? உண்மையில் அந்த சிறுமியிடம் திறமை இல்லை, அந்த மர யாழில்தான் என்னவோ மந்திரம் இருக்கிறது என்று நம்பிய சோமலராஜன், தாமிரநங்கையிடம் கெஞ்சிக் கூத்தாடி அந்த மரயாழை வாங்கிக்கொண்டான். மர யாழை தனிமையில் உட்கார்ந்து திருப்பித் திருப்பி பார்த்த சோமலராஜன் அதை நள்ளிரவில் வாசித்தும் பார்த்தான். அப்பொழுது அதில் இருந்து எழுந்த அகோர ஓசையால் மகாராணியின் பஞ்சனைக் கட்டில் படீரென்ற சத்தத்தோடு உடைந்துபோனது. மகாராணி வளர்த்த அன்னப் பறவைகளும், பேசும் கிளியும் செத்து கீழே விழுந்தது.
இசைக்க வக்கற்ற மகாராஜனின் தவறால் பறவைகளும், பஞ்சனைக் கட்டிலும் நாசமாய்ப் போனதென்று கோபமுற்ற மகாராணி ஆத்திரம் அதிகம் கொண்டு நாடு விட்டு போவதாய் சோமலராஜனிடம் அறிவிக்க, சோமலராஜன் சமாதானம் செய்வதற்கு பல சேட்டைகள் செய்யவேண்டி வந்தது. சமாதானம் அடைவதற்காக சில தண்டனைகளை சோமலராஜனுக்கு கொடுத்தாள் மகாராணி. அதன்படி இரவெல்லாம் தலைகீழாய் இருந்த சோமலராஜன் மண்டை வீங்கி பலமாதம் துன்புற்றான். மண்டை வீக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி மதி பிரழ ஆரம்பித்தது அவனுக்கு. யாரைக் கண்டாலும் கோபத்தில் கத்திய அவன், யாழைக் கண்டால் மட்டும் வால் வால் என்று கத்த ஆரம்பித்தான். அவனை சொஸ்தப்படுத்த உலகத்தில் எந்த மருத்துவனும் இல்லாததால் மகா கீர்த்திகொண்ட அந்த சோமலராஜன் கடைசி வரையில் மண்டைக் குடைச்சலோடே வாழ்ந்து மறைந்தான்.
 இத்துடன் சோமலராஜன் சரித்திரம் முடிந்தது.
சோமலராஜன் கதை முடிந்துபோனது என்றதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆயிரம் வருடக் குதிரை, ஓலைச் சுவடி மண்ணுக்கு கீழே பெரும் புதையல் என்று ஒன்றுமே முடிவுரை இல்லாமல் சரித்திரம் முடிந்ததும் எனக்கு பித்து பிடித்தது. மண்டையைப் பிய்த்துக்கொண்டு ஜெராக்ஸ் குப்பைகளை தேடினேன். இன்னும் சில பக்கங்கள் எக்குத் தப்பான இடத்தில் இருந்து ஆரம்பித்தது. வேறு நிறம், வேறு வண்ணத்தில்...
சோமலராஜன் என்ற ஒரு ராஜாதி ராக கிறுக்க ராஜனுக்கு மண்டைக் குழப்ப நோய் வந்திருப்பதாக தேசமெங்கும் ஒரு காட்டுத் தீ வதந்தி பரவியிருக்கிறது என்பதை அறவீர்கள் மக்களே... அதை தீர்த்து வைக்கிற எப்பேர்ப்பட்ட வைத்தியனாக இருந்தாலும் அவனுக்கு தனது தேசத்தில் பாதி தருவதாகவும் அந்த ராஜன் அறிவித்திருக்கிறான். ஆனால் அவன் மாண்டு போவான் மக்களே மண்டைக் குழப்ப நோய் தீராமலே மாண்டு போவான். செத்தாலும் சிவமயம்.
சோமலராஜ சரித்திர துணைக் காண்டம் முற்றியது.
மீண்டும் நான் மண்டை பிய்த்துக்கொண்டேன். தேடினேன். ஜெராக்ஸ் காகிதத்தின் பின்புறத்தில் இன்னும் எழுத்துக்கள் இருந்தது.
சோமலராஜன் என்கிற ராஜனின் வீனோத மண்டைக் கிறுக்கு நோய் குறித்த புராணகதையை பாடலாக இயற்றிய பாணர்கள் சோமலராஜனுக்கு பிடிக்காத அண்டை நாட்டு ராஜாக்களின் சபைகளில் சிரிக்கச் சிரிக்க பாடி பரிசு பெற்று பல்யாண்டு வாழ்ந்துவர ஆரம்பித்தார்கள் என்ற சங்கதிச் சரிந்திரங்கள் அடங்கிய ஒரு சங்கேதப் குறிப்பை குறும்புப் புலவன் ஒருத்தன் தண்ணீரில் மிதக்கிற, காற்றில் பறக்கிற, கூடுவிட்டு கூட பாய்கிற ஓலைச் சுவடி ஒன்றில் எழுதி தேசாதி தேசமெங்கும் பரவிப் படறும்படி தெருவில் எரிந்தான். கண்டவர் கண்ணுக்கு சரித்திரம் மொத்தத்தையும் சொல்லுகிற சக்திவாய்ந்த அந்த ஓலைச்சுவடி யார் கண்ணிலாவது பட்டால் அது பல்லாண்டு கழித்தும் தனக்கு அவமானச் சரித்திரமாகிவிடுமே என்று அஞ்சிய சோமலராஜன், சரித்திரம் எழுதப்பட்ட ஓலைச்சுவடியை கைப்பற்றி அதை எங்கே மறைப்பது என்று வகைதொகை இல்லாமல் குழம்பினான். அப்பொழுது ஒரு குட்டைக் குறுவடிவாய் இருந்த வெள்ளை முனி ஒருத்தன் ஓலை மறைக்கிற வித்தை எனக்கு தெரியும் என்று சொல்லிக்கொண்டு வந்தான்.
அதன்படி அவன் ஓலைச் சுவடியை சோமலராஜனின் வெள்ளைக் குதிரையின் வாலில் மறைத்து வைத்தான். “இந்தக் குதிரை சாகிறவரையில் உன் சரித்திரம் வெளியே தெரியாதுஎன்றான்.
ஐயோ குதிரை செத்தால் என் அவமானச் சரித்திரம் உலகத்திற்கு தெரிந்துவிடுமே!” என்று பதறினான் சோமலராஜன்.
அதற்கு அந்த குட்டைக் குறுவடிவவெள்ளை முனி, கவலை வேண்டாம் சோமலா... இந்தக் குதிரை பல பல்லாயிணரம் ஆண்டு உயிரோடு இருக்கும்படி ஒரு யத்தனம் செய்கிறேன் என்று சொல்லி குதிரையை ஒரு மண்டலம் முழுதுக்கும் தனியே வைத்து மந்திர, தந்திர, யந்திர முறைகளிலும், பச்சிலை, வெச்சிலை, முச்சிலை முறைகளிலும் பாடம் செய்து காட்டிற்குள் ஓட்டிவிட்டான். சோமலராஜனின் குதிரைச் சரித்திரம் முற்றுகிறது.
எத்தனை முற்றுகிறது வரும் ஒரு சரித்திரத்தில். ஆத்திரத்தில் கத்த யோசித்தேன். ஆனால் ஜெராக்ஸ் பிரதியின் கடைசீ பக்கம் நினைவுக்கு வந்தது. அது தற்கால ஆசிரியர் குறிப்பாம்:
                பல்லாயிரம் ஆண்டுகள் வாழும் அந்த வெள்ளைக் குதிரை இப்பொழுதும் எங்காவது ஒரு மண்ணில் மேய்ந்துகொண்டிருக்குமென்று நிச்சயமாய் வரலாற்று, சரித்திர ஆசிரியர்கள் ரகசியமாய் சொல்கிறார்கள். எங்காவது யாராவது அந்த வெள்ளைக் குதிரைக் கண்டு அதன் வாலை உதறிப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். அதற்கு முன்பு ஒரே ஒரு எச்சரிக்கை. குதிரை உதைக்காத தூரத்திற்கு எட்டி நின்று பத்திரமாய் வால் உதறிப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் ~சோமலராஜனின் வெள்ளைக் குதிரை உதைத்த முக்கிய ஸ்தலமென்று" உங்களைப்பற்றிய சரித்திரமும் ஓலைச்சுவடியில் இடம்பெறும் ஆபத்திருக்கிறது. நன்றி! வணக்கம்.
படித்து முடித்து ஆயாசமாய் படுக்கையில் படுத்து கண் மூடிய எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை நான் கண்டே காணாத அதிசயமான வாசனையை என் மூக்கு மோப்பம் பிடித்தது. வீட்டிற்குள் வவ்வால் பறப்பது போன்ற படபடவென்ற சத்தம் என் காதில் கேட்டது. குதிரையின் குளம்படிச் சத்தம் போலவும் அது இருந்தது. ; ஆயிரம் காலத்திற்கு முன்பிருந்த தாமிரநங்கையின் சிரிப்பொலி கேட்டேன். நான் பயத்தோடு கண் திறந்து பார்த்து திகைத்து நின்றேன். இரண்டு மைனாக் குருவிகள் அறைக்குள் சடசடவென்று பறந்துகொண்டிருந்தது. தாமிரநங்கையின் யாழ் இசைத்துவிட்டேனா நான்? மொத்த கதவு ஜன்னல்களையும் மூடியிருக்கும்போது இந்த குருவிகள் உள்ளே வந்தது எப்படி? அதிசயம்தான். சோமலராஜனின் சரித்திரத்தில் ஒரு தெய்வீகம் இருக்கிறது.
நான் குதிரை இருக்கிற இடத்திற்கு ஓடினேன். அதில் ஒன்று சோமலராஜன் குதிரையாகவும் இருக்கலாம். எல்லா வெள்ளைக் குதிரைகளும் சோமலராஜன் குதிரைகள் கிடையாது. மகாராணி ஸ்வர்ண தீபிகாவால் பின்புறத்தில் சூடு இழுக்கப்பட்ட குதிரையே சோமலராஜன் குதிரை! ஆனால் எழு குதிரையின் பின்புறமும் நடிகையின் பின்புறம்போல் மாசு மறுவின்றி பளபளப்பாக இருந்தது. எனக்கு ஏமாற்றம்தான். ஆனாலும் சோமலராஜன் குதிரை உலகத்தில் இருக்கிறது. கண்டு பிடித்தே ஆகவேண்டும். அதற்கு முன்பு... நான் ஓடிச்சென்று ஒரு இரும்புக் கம்பியை நன்றாக பழுக்கக் காய்ச்சி ஏழு குதரைகளுக்கும் சூடு போட்டேன். சோமலராஜன் குதிரைகள் நூறு கோடி மதிப்பு கொண்டது. எழுநூறு கோடி சொத்தின் அதிபதி நான். களிம்பு தடவி குதிரைகளின் புண் ஆற்றினேன். ஜெகதீசுக்கு போன் போட்டேன்.
ஜெகதீஸ்... ஜெகதீஸ். நான் கண்டுபிடிச்சிட்டேன். சோமலராஜன் குதிரைய கண்டு பிடிச்சிட்டேன்
நெசமாவா? அது சோமலராஜன் குதிரைதானா?”
ஆமா ஜெகதீஸ். சோமலராஜன் குதிரைக்கு அந்த மகாராணி பின்னால் சூடு போட்டாள்னு சரித்திரத்தில இருக்கே படிச்சிருக்கியா?”
ஆமா
பின்புறத்தில சூட்டுத் தழும்போட இருக்கிற சோமலராஜன் குதிரை என்கிட்ட இருக்கு. நூறு கோடி தந்தா இப்பவே வாங்கிட்டு போகலாம்
இல்ல ராம்! எனக்கு குதிரை வேணாம்.”
என்ன ஜெகதீஸ் சொல்லறே!”
ஆமா ராம்! எனக்கு குதிரை வேணாம். நீயும் குதிரைய ஒரு நிமிஷம் வெச்சிருக்காதே! ராத்திரி பகல் எதையும் பாக்காதே! உன்கிட்ட இருக்கிற குதிரைய மொத்தத்தையும் சப்ஜாடா ராவோட ராவா வித்துடு.”
என்ன ஆச்சி ஜெகதீஸ்
குதிரைச் சூதாட்டம் ஒரு மோசடின்னு பேப்பர்ல போட்டிருக்கான். பேப்பர் படிக்கிற பழக்கமில்லையா உனக்கு. ஒரு வாரமா ஓடுதேடா! குதிரைய வெச்சி ஏறுக்குமாறா விலை ஏத்தின கும்பளை பிடிச்சிட்டாங்க போலீஸ்ல. எவனோ ஒரு பீகார்க்காரன் குளோனிங் முறையில ஆயிரக்கணக்கான குதிரைங்கள உற்பத்தி பண்ணிட்டிருக்கான். அதை என்ன பண்ணறதுன்னு யோசிச்ச அவன் சோமலராஜன்னு ஒரு பிராடு கதைய ஜெராக்ஸ் எடுத்து ரகசியம் போல கசியவிட்டு மொத்த குதிரையையும் ஆயிரம் ரெண்டாயிரம் கோடிக்கு வித்து காசாக்கிட்டு இருக்கான்.”
பொய் சொல்லறீயா ஜெகதீஸ். என்கிட்ட இருக்கிற குதிரைய சல்லி விலைக்கு வாங்க தந்திரம் செய்யறீயா? உன்கிட்ட இருந்த குதிரைங்கள நீ என்ன பண்ணே””
குதிரைக் கும்பளை போலீஸ் பிடிக்கப்போகுதுன்னு விசயம் தெரிஞ்சதுமே வித்துட்டேன். இருபது குதிரை முந்நூறு கோடிக்கு. முழுசா நஷ்டப்படறதுக்கு முந்தி நீயும் வித்துடு. குதிரை விலை சலசலன்னு குறையுது
நான் பரிதாபமாக என் குதிரை லாயத்திற்கு போனேன். பளிங்கு போல் தெரிந்த பால் வெள்ளைக் குதிரைகள் பின்புறச் சூட்டுத் தழும்புடன் அசைபோட்டபடி நின்றன. மறுநாள் அதிகாலையில் எழுந்து சந்து சந்தாக குதிரை வேண்டுமா வெள்ளைக் குதிரை என்று விசாரித்தேன். குதிரை வாங்க ஒருத்தரும் இல்லை. ஆனால் வீட்டுக்கு வீடு ஒரு குதிரை வைத்திருந்தார்கள். அதே வெள்ளைக் குதிரை. ஒரே அச்சில் செய்யப்பட்ட வெள்ளைக் குதிரை. நான் துவண்டு போய் வீட்டிற்கு வந்தேன். ஏழு குதிரைகள் வீடு முழுக்க நின்றிருந்தது.
சரியான அதிர்ஷ்டம் இருந்து விற்றிருந்தால் இதன் விலை எழுநூறு கோடி. இப்பொழுது இரண்டாயிரத்திற்கு மொத்தக் குதிரையும் விற்கிறேன் என்று சொன்னால் குதிரையே சிரிக்கும். வாங்க ஆள் கிடையாது. குதிரையை என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு விவரமற்ற ஜட்கா வண்டிக்காரனிடம் பேரம் பேசினேன். ஜட்காவண்டிக்காரன் ஏழு குதிரையா அய்யோ பாவமே என்று இச் கொட்டினான். “ரொம்ப பிராடு பண்ணிட்டாங்க சார். ஜனங்கதான் பாவம் சம்பாதிச்ச காசையெல்லாம் மொத்தமா விட்டுட்டு ஆளுக்கு ஒரு குதிரையோடு நிக்கிறாங்க. படிச்ச நீங்க ஏமாந்திருக்க கூடாது சார்!” என்றான்.
நான் குதிரைச் சாணத்தைவிட கேவலமாக உணர்ந்தேன். குடியிருந்த வீடு, கையிருப்பு ரொக்கம், என் மனைவி, எனது வாழ்க்கை, கொஞ்சமாய் இருந்த நிம்மதி எல்லாவற்றையும் முதலாகப் போட்டு குதிரையாக மாற்றிவிட்டேன்குபேர கடாட்சம் கிட்டும் என்ற என் ஏக்கம் காற்றில் கரைந்துவிட்டது. லட்ச லட்சமாய் கொட்டினாலும் கிட்டாத வெள்ளைக் குதிரையை இப்பொழுது இணாமாக தருகிறேன் என்றாலும் வாங்க அச்சப்பட்டார்கள். வெள்ளைக் குதிரை என்பது தரித்திரத்தின் அடையாளம், துரதிர்ஷ்டத்தின் பிறப்பிடம் என்றும் சிலர் சொன்னார்கள்.
வாய்தா தேதி முடிந்ததும் சேட்டு மகன் வந்து வீட்டை காலி செய் என்று உத்தரவிட்டான். நான் ஏழு வெள்ளைக் குதிரைகளை பிடித்துக்கொண்டு பரவெளியில் பிரயாணம் செய்தேன். என்னை யாரும் சூரிய நாராயணன் என்று கை தூக்கி வணங்கவில்லை.
குதிரையை நம்பி வாழ்வை இழந்தேன். என்னைப் போல எத்தனையோ பேர். ஒரு லோக்கல் டெய்லியின் நிருபர் ஒருத்தன் வந்து என்னை பேட்டி கண்டான். என்னையும் குதிரையையும் போட்டோ எடுத்தான். மறுநாள் பேப்பரில் வரும் என்று சொன்னான். குதிரையால் நான் எல்லாவற்றையுமே இழந்தது நிஜம்தான் ஆனால் சோமலராஜனின் சரித்திரக் கதைக்குள் நானும் புகுந்து அதில் ஒரு நகைச்சுவை கதாபாத்திரமாக மாறிவிட்டேன். இனி சோமலராஜன் கதை எங்கே வந்தாலும் அந்தக் கதையில் என் பெயரும் இடம்பெரும் என்பது உறுது.
சரித்திர பிரசித்திப்பெற்ற என்னையும், என் குதிரைகளையும் லோக்கல் நாளிதழில் பார்க்கிற ஆர்வத்தோடு மறுநாள் பேப்பரை பீராய்ந்து பார்த்தேன். எந்தப் பக்கத்திலும் என்னைப் பற்றியோ என் குதிரையைப் பற்றியோ சொட்டு செய்திகூட இல்லை. அரசியல்வாதி, அதிகாரி, வக்கீல், டாக்டர், என்ஜினியர், தொழிலதிபர், ஆன்மீகவாதி என்று எத்தனையோ பெரிய கைகள் இந்த விளையாட்டிற்கு பின்னால் உண்டு. செய்தியை அமுக்கியிருப்பார்கள். குதிரைச் சூது பற்றிய செய்திதான் இல்லை மாறாக இன்னொரு செய்தி இருந்தது...
தருமபுரி மாவட்டம் பதிகால் பள்ளம் என்ற ஊரில் வீடு கட்ட கடைக்கால் தோண்டும்போது சரித்திரகாலத்து பொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டன. அதை ஆய்வுசெய்த தொல்லியல் துறை அதிகாரிகள் இது ஒன்பது அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டையப் பொருட்களாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார்கள். பழம்பொருள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் சோமலராஜன் என்பவன் அரசனாக ஆண்டது குறித்த சில சரித்திர சந்தேகமுள்ள வரலாறு இருந்ததாகவும், இந்த புதைபொருள் கிடைத்ததில் இருந்து சோமலராஜன் என்ற அரசன் இருந்திருப்பது ஊர்ஜிதம் ஆகிறது என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். அங்கே கிடைத்த கல்வெட்டுக்களை பரிசோதித்துப் பார்த்த கல்வெட்டு ஆராய்சியாளர் ஒருவர், சோமலராஜனின் மனைவி பெயர் தாமிரநங்கை என்றும், அவனுக்குப் பிரியமாக இருந்த வெள்ளைக் குதிரையின் பெயர் ஸ்வர்ண தீபிகா என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தர். மேலும் கல்வெட்டில் இருந்த விவரங்களாவன...
நான் படித்த எழுத்துக்களெல்லாம் சரித்திரக் காலதர்து கொசுக்கலாக மாறி என்னை கடிக்க ஆரம்பிக்க நான் தலைகிறுகிறுத்து கீழே விழுந்தேன். என்னைச் சுற்றிலும் குதிரைகளின் கணைக்கிற ஓசை கேட்டது. அவை நான் வளர்த்த குதிரைகளின் கணைப்பொலியா? இல்லை சோமலராஜன் காலத்து குதிரைகளின் கத்தலா, இல்லை சொர்கலோகத்தில் இருக்கிற தேவகுதிரைகளின் ஊதலா என்று என்னால் சரியாக யூகிக்க முடியவில்லை.

முற்றும்.

No comments: