சிறுமிக்கும் குமரிக்குமான வித்யாசங்களை அவளிடமிருந்து மெல்ல செதுக்கிக் குறைத்துக் கொண்டிருந்தது காலம். காலத்தின் இரவில் கனவு கண்டு புரண்டாள் புஷ்பா. கனவில் படுபாதாளமாய் ஆழ்ந்திருந்தது ஒரு கிணறு. அதன் நீர் சாந்தின் பிசுபிசுப்பில் துளும்பிக் கிடக்க அதில் மெல்ல நீந்திக்கிடந்தன இரு மீன்கள். குளித்துத் துவட்டும் போது வெற்றுடம்பின் எடுப்பை வியக்காது எடுப்பின் மச்சத்தை ஒருத்தி தொட்டு வியப்பது போலவே அவள் மின்னும் மீன் குறித்து வியக்காமல் நீரின் நிறம் குறித்து வியந்தாள். வியப்பு அவளின் உதட்டையும் இமையையும் துடிக்கச் செய்தது. சுருண்டு கதகதப்பாய் உறங்கிய சிறுமி அவளை காலத்தின் உலையடுப்பும் கொதிநெருப்பும் வார்த்துக்கொண்டிருந்தது. அந்த இரவின் கனவுப் பொழுதில் அவளுக்கு வயது பதினொன்றுக்கும் சிலநாள் குறைவாகவே இருந்தது.

தன் மூப்பால் எழுபத்தியிரண்டு பெண்களுக்கு உடல் பார்த்து சமயும் நாள் சொன்ன அவள் பாட்டியைப் போல புஷ்பா அனுபவப் பட்டவள் இல்லை என்றாலும் ஒருத்திக்கு கனவில்; ஆண் பிள்ளையின் சாயலொத்த நிமித்தங்கள் வந்தால் மறுநாளே சமைந்து நிற்பாள் என்று கனவில் நினைவோடிற்று அவளுக்கு. ஆண் பிள்ளை கனவில் வருவது கள்ளத்தின் அடையாளமென்று அவள் அம்மா சொல்வதும் அவளுக்கு உறைக்காமல் இல்லை.