Friday, August 12, 2016

வெங்கலராஜனின் குதிரை வால்.

வெங்கலராஜனின் குதிரை வால்.

அரக்கு நிற சேலை கட்டிய சிவப்புக் கலர் பொண்டாட்டிக்கு எந்த அளவுக்கு அதிகாரம் கொடுக்கலாம் என்பதில் குழப்பமாக இருந்தது வெங்கலராஜனுக்கு. குதிரை வால் தடிமனுக்கு மீசை வைத்திருக்கிற வெங்கலராஜன் வீதியில் போனால் பதினெட்டு லெட்ச ரூபாய் காரில் போகிற ஜெர்மன்காரன் பொண்டாட்டியே புளியமரத்தோரம் வண்டியை ஒதுக்கி நிறுத்திவிட்டு பயந்தோடு பார்ப்பாள். பதினாழு டயர்கொண்ட பயங்கர லாரியை தாறுமாறாக ஓட்டும் பயங்கர டிரைவர் என்று பெயர் சம்பாதித்து வைத்திருக்கிற அப்படியாகப்பட்ட வெங்கலராஜனை, ரிப்பேரான ஸ்குரு டிரைவரே என்று கூட அவன் மனைவி மதிப்பதில்லை.

நட்டு போல்ட்டு, நாலு கட்டு பீடி, சக்கரம், கிரீஸ், முனியாண்டி விலாஸ் பரோட்டா என்று பாதி வாழ்க்கையை லாரி சக்கரத்தில் தொலைத்திருந்த அவனுக்கு பொண்டாட்டி என்றால் பாயாசம் போல அப்படி ஒரு பாசம். அந்த காரணத்தால்தான் பொண்டாட்டிக்கு அதிக செல்லம் கொடுத்திருந்தான். அதை சாக்காக வைத்துக்கொண்டு அவளும், மூக்கு குடைவதில் ஆரம்பித்து, முக்கா டவுசர் போடுவது வரையில் குற்றம் கண்டுடித்து குயுக்தி பண்ணிக்கொண்டிருந்தாள். 'இதென்னா மாமா, எலிப்பொந்துல ஒட்டடை அடிக்கிறமாதிரி அப்பிடி பல் வெலக்கறது! ஒழுக்கமா நாலு இழுப்பு இழுப்பீயா...!" என்று பல் துலக்குவதற்கும் வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுக்கிற அவளின் அழகைக் கண்டால், பல் விளக்காத பயித்தியக்காரனுக்கும் கோபம் வரும். பல் துலக்கச் சொல்லித் தருகிறாளாம் பல் துலக்க! முப்பத்தி ஏழு வருசமாக ஒருத்தன் பல் துலக்கத் தெரியாமல் வாய் மணக்கவா இருந்திருப்பான்? இந்த விவகாரத்தை சொன்னால்தான் குய்யோ புய்யோவென்று குடும்பத்தில் சண்டை வந்துவிடுகிறது.

பழைய இரும்பில் செய்த ஒட்டகத்தைப் போல கடுப்பானதொரு முரட்டு விலங்கு லாரி என்பது. புண் வந்த புருசோத்தமன் முள் வைத்த கத்திரிக்காயின் மேல் கதறியபடி உட்கார்வது போல கஷ்டமானதொரு காரியம் வெயிலில் லாரி ஓட்டுவது. அப்படி கஷ்டப்பட்டுவிட்டு, நாலு வெள்ளிக்கிழமைக்கு ரெண்டு வெள்ளிக்கிழமைதான் வீட்டிற்கே வருவான் வெங்கலராஜன். எதற்காக வருகிறான்? என்னவோ தாம்பத்தியத்தில் ஒரு ஆர்வம், மனைவியிடம் ஒரு எதிர்பார்ப்பு. பஜனையும், சுண்டலும் இல்லையென்றால் கோயிலில் சின்ன பிள்ளைகளுக்கு என்ன வேலை? கோயில் பக்கம் வருவார்களா அவர்கள்? வீட்டில் ஒரு கவர்ச்சி இருப்பதால்தான் வருகிறான் வெங்கலராஜன். ஆனால் புருசனின் ஆர்வத்தை புரிந்துகொள்கிற பக்குவம் அவளுக்கில்லை. கொஞ்சம் ராங்கிக்காரி. பத்திருபது நாள் கழித்து வீட்டிற்குத் திரும்பிய புருசன் வாசல் படியேறி, தன் மூக்கைத் தானே சொரிந்து, முண்டா பனியனை முழுசாக கழட்டுவதற்குள் கச்சேரியை ஆரம்பித்துவிடுவாள். சண்டைக் கச்சேரிதான். கல்யாணமாகி பத்து வருசத்து இரண்டு குழந்தைகள் ஆனபிறகும் இதே வழக்கம்தான். சரி... தலையென்று இருந்தால் கொண்டையும், பொண்டாட்டி என்று இருந்தால் சண்டையும் சகஜம்தான் என்று வெங்கலராஜனும் மானம் மரியாதையோடு சண்டை பிடித்துக்கொண்டு சகஜமாகத்தான் வாழ்ந்துகொண்டிருந்தான். ஆனால் போன வாரத்து சனிக்கிழமைச் சண்டை கொஞ்சம் ஆபாசமாக அமைந்துவிட்டது.

~சனிக்கிழமையில் சவரம் பண்ணக்கூடாது!| என்கிற அவளின் கிழக்குரங்கு அறிவுரையோடு ஆரம்பித்த அந்த சண்டை வெள்ளிக்கிழமை விளக்கு வைக்கும் நேரத்திலேயே குமுற ஆரம்பித்துவிட்டது. அதையும் மீறி சனிக்கிழமை சவரம் செய்து, சரித்திரம் படைத்தான் வெங்கலராஜன். வீரத்தின் அடையாளமாக தன் பெரிய மீசையை சின்ன கத்திரிக்கோலால் மும்முறமாய் நறுக்கியவனுக்கு அவமானம் காத்திருந்தது. கயிற்றுக் கட்டிலில் குப்புறப் படுத்திருந்த அந்த மகா பெரிய மீனாட்சி என்பவள், 'ஏய்யா மாமா, சும்மாத்தானே நிக்கிறே... நடு முதுகுல புறுபுறுங்குது கொஞ்சம் சொறிஞ்சி விடேன்" என்று அக்கிரமத்திற்கு அவனை உசுப்பிவிட்டாள்.

திமிர்கொண்டு எகிறும் எத்தனையோ இரும்பு லாரிகளை ஆயிரம் திருப்புத் திருப்பி அடக்கிய மாவீரனவன். அவனைப் போய் கேவலம் முதுகு சொறியச் சொல்கிறாளே! ஆத்திரமாக வந்தது அனுக்கு. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு போனால் போகட்டுமென்று பொத்தம் பொதுவாக கத்திரிக்கோலால் அவள் முதுகை மெல்லமாக சொறிந்துவிட்டான். ரவிக்கைத் துணிகளுக்கு மரியாதை என்பதே தெரிவதில்லை. அது டர்ரென்று இரண்டு அங்குலத்திற்கு கிழிந்துபோனது. இது யார் குற்றம்? இதுதான் சாக்கென்று வெங்கலராஜனின் உலகப் புகழ்பெற்ற பெரிய மீசையை, கேவலம் பூனை வாலை இழுப்பது போல பிய்த்து இழுத்தபடி சண்டைக்கு வந்துவிட்டாள் மீனாட்சி. பெண்ணின் கையைப் பிடித்து இழுப்பதைவிட ஆணின் மீசையைப் பிடித்து இழுப்பது மகா பெரிய குற்றமென்று மாமூல் கேட்ட பெண் போலீஸ்க்காரியிடமே சவடால் அடித்த வெங்கலராஜன், 'ஏய், மீசையில மட்டும் கை வெக்காதே! எனக்கு கெட்ட கோவம் வரும். டெல்லி செங்கோட்டையில பாரா போயிட்டிருந்த மிலிட்டரிக்காரனே இந்த மீசையப் பாத்து சலாம் அடிச்சிருக்கான்." என்று ஓங்கி அதட்டினான்.

'என்னாய்யா மாமா பெரிய பிசாத்து மீசை. எங்க அப்பாவுக்கு உன்னவிட பெரிய மீசை தெரியுமா?" மீனாட்சியும் எதிர்ச் சவடால் அடித்தாள்.

'... உங்கப்பனுக்கு அவ்ளோ பெரிய மீசையா? ராஜஸ்தான் ஓட்டல்ல மீன் கொழம்பு ஊத்தின ஒருத்தி இந்த மீசைய மோந்து பாத்துட்டு எட்டு பரோட்டாவ ஓசியில தந்திருக்கா. உங்கப்பன் மீசைக்கு என்ன கெடைச்சுதாம்? அதைச் சொல்லு பாக்கலாம்!" வந்த ஆத்திரத்தில் ஆம்பிளை புத்தியை அல்பத்தனமாய் காட்டிவிட்டான் வெங்கலராஜன். விவகாரம் கூறுகெட்டத்தனமாய் இருக்கிறதே! மீனாட்சியை அடக்க முடியுமா? பற்றிக்கொண்டது. குத்துவிளக்கு ரெண்டையும், வெங்கலக் குண்டையும் களவு கொடுத்தவள் போல 'யெப்பெப்பே.." என்று அர்த்தமில்லாமல் அழ ஆரம்பித்தாள் மீனாட்சி. பிறகு சுதாரித்துக்கொண்டு தெளிவாக கத்த ஆரம்பித்தாள்: 'நீ ஆட்டுக் கிடாயாட்டம் மீசை வளத்த காரணம் இப்பத்தான்யா மாமா புரியுது! லாரியோட போறவரு யாரோடையும் போவாருன்னு எனக்குத் தெரியாம போயிடுமா? நாலு பேரு முன்னாடியே நின்னுகிட்டு பெய்யறவரு, ஆளில்லாத எடத்துல ஆட்டிகிட்டுதான் பெய்வாருன்னு பெரியவங்க சொன்னது சரியாத்தான் போச்சி..." என்று அசிங்க அசிங்கமாய் வெங்கலராஜனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தாள். பிறகு விட்டதில் இருந்து அழவும் ஆரம்பித்தாள்.

மீனாட்சியின் உள்ளங்கை தவிர வேறு ஒருத்தியின் புறங்கையையும் சீண்டிப் பார்க்காத வெங்கலராஜனுக்கு வந்தது கோபம். சுவற்றில் ஆணி அடிப்பது போல மீனாட்சி கன்னத்தில் நன்றாக ஊணி அடித்தான நாலு அடி. மாட்டுக்கு லாடம் அடித்த சத்தம்போல என்னவோ சத்தம் கேட்டதாய் அக்கம் பக்கத்திலிருந்த எட்டு வீட்டு ஆட்கள் சாட்சி சொன்னார்கள். வீங்கிய கன்னத்தோடு இருந்த மீனாட்சி எருமைக்கு தவிடு வைப்பதுபோல புருசனுக்கு புண்ணாக்கு ஆக்கி வைத்துவிட்டு திரும்பிநின்றபடி பேசாத சண்டை போட்டாள். எட்டு நாள் சண்டைக்குப் பிறகு சமாதானமாகாமலே லாரிக்கு திரும்பினான் வெங்கலராஜன்.

லாரிக்கார ஆம்பளைக்கு வீட்டில் சண்டையென்றால் தெருவில் நடக்கிற நாய்களுக்கெல்லாம் கிரகம்தான். வெங்கலராஜன் ஆத்திரத்தில் லாரி ஓட்டியதில் எட்டு பத்து எருமையை இடித்து அதற்கு வைத்தியம் பார்த்ததுதான் மிச்சம். வெங்கலராஜனுக்கு மீசைதான் பெரியதே ஒழிய மனசு ரொம்ப இளசு. கொசுவை அடித்தால்கூட குடம் குடமாய் அழுகிறவன் மீனாட்சியை அடித்தால் மனசு கேட்குமா? நோக்காட்டை போக்கிக்கொள்ள பதினைந்து நாள் லீவு சொல்லிவிட்டு, ரசகுல்லா, ரப்பர் வளையல், சீனா ரவிக்கை, காராபூந்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி என்று ஏகப்பட்ட சமாச்சாரங்களை வாங்கி பையில் நிரப்பிக்கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

தெருவுக்குள் நுழைந்ததுமே மனைவி, வீட்டுத் திண்ணையில் அரக்கு நிற சேலை கட்டிக்கொண்டு திரும்பி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அவள் அழகைப் பார்த்து சொக்கிப்போனான். அக்கம் பக்கத்தில் யாராவது அசிங்கமாக பார்க்கிறார்களா என்று நோட்டம் விட்டபடி மெதுவாய் அவள் பின்னால் நெருங்கினான். எதிர்பார்க்காத நேரத்தில் இடுப்பை கட்டிப்பிடித்து கலாட்டா பண்ணி அவளை சமாதானம் செய்துவிட வேண்டுமென்கிற பெரிய யோசனை அவனிடமிருந்தது. மூச்சு விடாமல் அவள் அருகே சென்று கையை நீட்டி இடுப்பை பிடிப்பதற்குள் கிளிப்பச்சை நிற சேலை கட்டிக்கொண்டு இன்னொரு மனைவி வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தாள்....

பெப்பரித்துப் போனான் வெங்கலராஜன். ஒரே கல்யாணம் கட்டிக்கொண்டவனுக்கு இரண்டு பொண்டாட்டி எப்படி இருப்பாள்? பதினைந்து நாள் லாரியில் ஓடிவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, வீட்டில் இருக்கிற ஒரு குழந்தை இரண்டு குழந்தை ஆவது லாரி டிரைவர்களுக்கு சகஜமான ஒன்றுதான். பொண்டாட்டி கர்பமாக இருந்தால்தான் அப்படியும் நடக்கும். பதினைந்தே நாளில் ஒரு பொண்டாட்டி எப்படி இரண்டு பொண்டாட்டி ஆக முடியும்? இருபத்தெட்டு வயசுள்ள பொண்டாட்டியை பதினைந்தே நாளில் பெற்றுத்தருகிற திடமும் தகிரியமும் எந்த மாமியாருக்கு இருக்கிறது? புரியாத குழப்பத்தோடு கொழகொழவென்று நின்றான் வெங்கலன்.

                'என்னாய்யா மாமா, புளிச்ச கீரைய அப்படி மொரைச்சி பாத்துகிட்டு நிக்கிற?" வாசலில் நின்ற கிளிப்பச்சை மீனாட்சி பேசிய பிறகுதான் அவனுக்கு விவரமே விளங்கியது. திண்ணையில உட்கார்ந்திருக்கிற அரக்குச் சீலைக்காரி அவன் பொண்டாட்டி கிடையாது. தினமும் வீட்டிற்கு காய்கறி கொண்டுவரும் பத்மா என்கிற கீரைக்காரி. ~அடச் சீ... இவளப் போயி நான் எப்படி மீனாட்சின்னு நெனைச்சேன்! மஞ்சா பெயின்ட்; அடிச்சதெல்லாம் லாரின்னு நெனைக்கிற அளவுக்கு நம்ம நெலமை சீரழிஞ்சி போச்சே!| வருத்தப்பட்டு நெளிந்தபடி நின்ற வெங்கலராஜன், 'இந்த பொண்ணு கட்டியிருக்கிற சீலைய நான் எங்கியோ பாத்திருக்கேனே..." என்று மீனாட்சியிடம் கேட்டான்.
                இளந்தளிர் போல பசபசவென்றிருந்த கீரைக்காரி பத்மா அவன் சொன்னதைக் கேட்டு மிளுமிளுவென்று சிரித்தாள். 'உங்க ஊட்டம்மாவோட சீலைதான். பழசா போச்சின்னு என்கிட்ட குடுத்தாங்க" வெட்கத்தில் நெளிந்த பத்மாவை முறைத்தான் வெங்கலன். கொஞ்சம் விட்டிருந்தால் இப்பொழுது குஷாலாக பேசுகிற கீரைக்காரி இடுப்பை பிடித்துக்கொண்டு ஓகோவென்று கத்தியிருப்பாள். பட்டப்பகலில், நட்ட நடுவீதியில் அக்கிரமம் செய்தான் வெங்கலராஜன் என்று நாடே நாறிப்போயிருக்கும். பஜ்ஜி என்று சொன்னாலே ~யாரந்த புஜ்ஜி?" என்று புருசனை சந்தேகப்படுகிற மீனாட்சிக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகி குடுமிப்பிடி சண்டையாகியிருக்கும். தப்பித்தான் வெங்கலன். தப்பித்த சந்தோசத்தில் தாறுமாறாக பேச ஆரம்பித்தான்.
                'ஆஹா..! எம் பொண்டாட்டி குடுத்த சீலையா? ரொம்ப அழகா இருக்கு! எம் பொண்டாட்டிக்கு அப்பிடி ஒரு நல்ல மனசு, தெரிஞ்சிக்கோ! புது சேலைய எடுத்து தருமத்துக்கு தர வேற யாருக்கு மனசு வரும்!" என்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிழியப் பிழிய பொண்டாட்டி மகத்துவத்தை எடுத்துவிட்டான். சாயம்போன தருமச் சீலையின் கிழிந்த முந்தானையில் விரல் விட்டுக்கொண்டிருந்த கீரைக்காரியும், 'ஆமாமா! அப்பிடியொரு நல்ல மனசு!" என்று ஒத்து பாடினாள்.    
                மீனாட்சிக்கு பெருமை பிடிபடவில்லை. தருமக்காரி, அருமைக்காரி என்று புருசன் புகழ்ந்ததில் மீனாட்சியும் குளிர்ந்து போனாள். பழைய ரவிக்கை கிழிபட்ட சண்டையெல்லாம் மறந்துவிட்டு அன்று முழுவதும் அவனுக்கு நல்ல சவரட்சணை செய்து சாப்பாடெல்லாம் போட்டாள். பொண்டாட்டியிடம் நல்ல பெயர் எடுத்ததில் வெங்கலராஜனுக்கும் குதூகலம் ஆகிவிட்டது. தெருத் தெருவாக திரிந்து பார்க்கிறவர்களிடமெல்லாம் ~சவுக்கியமா, நல்லாயிருக்கியா?| என்று கேட்டுக்கொண்டிருந்தான். அவனைத்தான் யாரும், 'எப்படியிருக்கே வெங்கலராஜா?" என்று கேட்கவில்லை. கேட்டிருந்தால் ஒரு நாள் முழுக்க குடும்பத்தில் சண்டையில்லை என்று உலகரிய சொல்லியிருப்பான். அந்த குதூகலமும் மறுநாள் காலை வரையில்தான் உயிரோடிருந்தது.
                மாம்பழக் கலரில் சீலை கட்டிக்கொண்டு மறுநாள் வீட்டு வாசலில் நின்ற கீரைக்காரி பத்மாவை பார்த்ததும் கடுப்பாகிவிட்டான் வெங்கலராஜன். அந்த சீலையை போன மாசம்தான் கடனுக்கு எடுத்து மீனாட்சியிடம் ஆசையாய் கொடுத்திருந்தான். புதுச்சீலை தருகிற தருமக்காரி என்று சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னால் நிஜமாகவே புத்தம் புது சீலையை எடுத்து கொடுத்திருக்கிறாள். எவன் பொண்டாட்டி சீலைய எவன் பொண்டாட்டிக்கு எவன் பொண்டாட்டி எடுத்து தானமா தர்றதுன்னு நான் கேக்கிறேன்... அக்குரமத்தில பெரிய அக்குரமன்டா சாமி என்கிறபடி கலவரமான, தாறுமாறான கோபம் வந்துவிட்டது அவனுக்கு. ஆயிரம் கோபத்திலும் அறிவாளியாய் இருப்பான் வெங்கலராஜன். கோபத்தை மனைவியிடம் காட்டினால் கச்சேரி கந்தலாகிவிடும் என்று அப்பாவி கீரைக்காரியிடம் காட்டினான் கத்தியை.
                'அடிப் பாவீ மகளே! எம் பொண்டாட்டியோட மொத்த சீலையவும் வாங்கிட்டு போயிட்டியா நீ? தா பாரு பத்மா... நேத்து என்னமோ மனசு சரியில்லாம பேசிட்டேன். எங்க குடும்பத்துல சீலைய தானமா குடுக்கிறது பழக்கமில்ல. நீ வாங்கின சீலைய எல்லாம் திருப்பி குடுத்துடு. அதான் நல்லது" என்று கடுப்பாக ஒரு தீர்ப்பு சொன்னான்.
                குதிரை தின்பதற்கு கொள்ளைக் கொடுத்த வள்ளல் ஒருபோதும் லத்தியை வட்டியாக கேட்க்கமாட்டான் என்கிற நீதிக்கதைகளையே கேட்டு வளர்ந்த பத்மாவுக்கு வெங்கலராஜன் பேச்சு கிண்டல் பேச்சென்றுதான் தோன்றியது. 'திருப்பி குடுக்கணுமா? ஹீ..ஹீ... எப்பவும் தமாசுதான் உங்களுக்கு. வெந்தயக் கீரை வேணுமான்னு அக்காகிட்ட கேளுங்க... " வெகுளியாய் சிரித்தபடி வெங்களராஜனுக்கு நெருப்பு வைத்தாள்.
                'ஒரு வெங்காயக் கீரையும் வேணாம். தாமாசு பண்ணறாங்கலாம் இந்த மொகறைகிட்ட. யாரு எதை குடுத்தாலும் வாங்கிப்பியா நீசீலை குடுத்தா கட்டிப்பியா? நான் பல் வெளக்கி வெச்ச வேப்பங்குச்சிய தர்றேன்... உன் பல்லை வெளக்கிப் பாக்கறீயா?" வெங்கலராஜன் நெருப்பு லேசுப்பட்டதல்ல. வெங்காயமென்று சொன்னதும் பத்மாவின் தளிர் முகம் சட்டென்று வாடிப்போனது. சிரித்த சிரிப்பு உதட்டில் இருக்கும்போதே கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. ஒன்றுமே சொல்லாமல் கூடையை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்.
வீட்டிற்குள் இருந்தபடி இத்தனையும் பார்த்த மீனாட்சிக்கு ஆங்காரமாகிவிட்டது. 'யோவ் மாமா, இப்ப என்னாத்துக்கு அந்த பொண்ண அப்படி ரேங்கிப்புட்டு வந்திருக்கே.. நல்ல சீலை இல்லாம இருக்காளேன்னு நாந்தான் பழசா போன சீலைய குடுத்தேன். அது தப்பா?"
'நான்கூட பழசாதான் போயிட்டேன்... மோர் விக்கிறவ புருசன் இல்லாம இருக்கான்னு அவளுக்கு எடுத்து தந்துடுவியா?" கேள்வியை கேட்டுவிட்டு சட்டென்று நாக்கை கடித்தபடி, ~அய்யோ... தப்பா பேசிட்டியேடா தருமா| என்று தலையில் கை வைத்துக்கொண்டான்.

'வேணாய்யா மாமா... நீ அசிங்க அசிங்கமா பேசற. இது நல்லால்ல, ஆமா!"

'அதுக்கில்ல மீனாச்சி... ஒருத்தர் போட்ட உடுப்பை இன்னொருத்தர் போட்டா நல்லாவா இருக்கு. அதும் நீ கட்டின சீலைய அவ கட்டிகிட்டு போனா எம் பொண்டாட்டியே தெருத் தெருவா காய் விக்கிற மாதிரி பாக்க கஷ்டமா இருக்கு" சமாதானத்தை மெல்ல அவிழ்த்துவிட்டான்.

'! சும்மா பேச்ச மாத்தாத. உன்னோட பழைய பேண்ட் சட்டை, பிள்ளைங்களோட துணி, உங்க அம்மாவோட சீலையெல்லாம் நீயே அடுத்தவங்களுக்கு தந்திருக்கே..."

'ஆமா. அது வேற விசயம். புள்ளைங்க துணிய மத்த புள்ளைங்க போட்டுட்டு வர்றதப் பாத்தா நம்ம புள்ளைங்கல பாத்த மாதிரி சந்தோசமா இருக்கு. எங்கம்மாவோட சீலைய இன்னொரு பெரியமனுசி கட்டிகிட்டு வந்தா இன்னொரு தாய பாத்த மாதிரி இருக்கு.."

'ஓகோன்னாங்களாம்! அப்படி போகுதாய்யா மாமா, உம் புத்தி? அப்ப என்னோட சீலைய இன்னொருத்தி கட்டியிருந்தா அவ உம் பொண்டாட்டி மாதிரியே தெரிவாளா?"

'அய்யே... உம் புத்தி ஏன் அப்பிடி போவுது. கரிச்சட்டியாட்டம் இருக்கிற கீரை விக்கிறவ எப்படி எம் பொண்டாட்டி மாதிரி தெரிவா?"

'அப்ப கோழி அமுக்குற மாதிரி கைய வெச்சிகிட்டு அவ இடுப்பு பக்கமா நேத்து போனீயே அதுக்கு என்னா அர்த்தம்?"

மீனாட்சி கேட்ட கேள்வியால், கட்டிய லுங்கியை தரையில் இருந்து எடுக்கும்படி தடுமாறிப்போனான் வெங்கலராஜன். அவள் பார்த்திருக்கமாட்டாள் என்று நினைத்துக்கொண்டிருந்தால் நேற்றே பார்த்திருக்கிறாள். இப்பொழுது அதை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?

'சொல்லுய்யா, மாமா. ஏன் முழிக்கிறே! அரக்கு கலர் சீலை கட்டினவ எல்லாம் உம் பொண்டாட்டி மாதிரியே தெரியுதா?"

வெங்கலராஜன் மவுனமாக நிற்பதைப் பார்த்து மீனாட்சி 'வவ்வவ்வவ்வே..." என்று வாயில் அடித்துக்கொன்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள், 'அய்யோ.. மோசம் போயிட்டனே... ஆத்தா! குப்பத் தொட்டிய சுத்தி சுத்தி வர்ற நாயி ஒரு நா அதுல வாய் வெக்குமுன்னு நான் சந்தேகப்பட்டது சரியாதான் போச்சி. எம் புருசன் தருமரு.. எம் புருசன் ராமருன்னு நெனைச்சது தப்பா போச்சே..." ஆத்திரமாக கத்திக்கொண்டே அடுப்படிக்குப் போனவள் சுடச்சுட செய்து வைத்திருந்த சோறு, மீன்குழம்பு, முட்டைப் பொரியலை எல்லாம் கொண்டுவந்து எச்சில் பானையில் கொட்ட ஆரம்பித்தாள்.

'ஏய் மீனாச்சி... ஆக்கின சோத்த எதுக்கு எச்சப்பானையில கொட்டறவ? பைத்தியமா உனக்கு?"

'பயித்தியந்தான் மாமா. ஊர் மேயிற ஆளுக்கு பத்து வருசம் சோறாக்கிப் போட்டு ரெண்டு புள்ளையும் பெத்திருக்கனே.. எனக்கு பைத்தியமேதான்" தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். பெரிசாய் கோபம் வந்துவிட்டது வெங்கலராஜனுக்கு. முக்காலியை எடுத்துக்கொண்டு அடிக்க ஓடினான். அப்பொழுது கீரைக்காரி பத்மா நான்கைந்து சீலைகளை திண்ணையில் வைத்துவிட்டு கண் துடைத்தபடி ஓடினாள். வெங்கலராஜன் தலையில் கை வைத்துக்கொண்டான்.

தானம் தருவதையும், தருமம் தருவதையும் வேண்டாமென்று யார் சொன்னது? யாருக்கு எதைத் தரவேண்டும் என்று ஒரு தராதரம் இல்லையா? சமாதானமாகலாம் என்று வந்தவனுக்கு இப்பொழுது அதைவிட பெரிய சண்டைதான் மிச்சம். இந்த சண்டையும் பெண் விவகாரமாய் இருப்பதுதான் பெரிய கொடுமை. எட்டு நாளாய் வீட்டில் உருளாத பொருளில்லை, கிழியாத துணியில்லை. ஆனது ஆகட்டுமென்று ஒரு முடிவெடுத்த வெங்கலராஜன். மீனாட்சியின் அவிழ்ந்த கூந்தலை கொத்தாக பிடித்து இழுத்து சுவற்றில் மோதி, அவள் முகத்தை பார்த்துச் சொன்னான்: 'பாருடி மீனாச்சி... என்ன ரொம்ப சந்தேகப்படாத நீ. நானும் மனுசன்தான். அந்த பொண்ணுக்கு சீல தரக்கூடாதுன்னு சொன்னதுக்கு ஒரு காரணம் இருக்கு. அந்த பொண்ணு எப்படிப்பட்டவன்னு உனக்கு தெரிஞ்சா..."

'வேணாய்யா மாமா, அந்த பொண்ணு மேல அபாண்டமா பழி எதையும் சொல்லிப்புடாத..."

'நான் எதுக்கு பழி சொல்லறேன். எங்கூட நீ வா. அவ வீட்டுக்கு போலாம். அப்ப நீயே புரிஞ்சிப்பே.." சொன்னவன் அவளை குண்டுக்கட்டாக சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு கீரைக்காhரி பத்மாவின் வீட்டிற்கு வண்டி விட்டான்.

வீட்டு வாசலில் ஒரு முற்றிய கிழவி மீன் கழுவிக்கொண்டிருந்தாள். வெங்கலராஜனை பார்த்ததும், 'வாய்யா கண்ணு... எப்ப வந்தே! சவுக்கியந்தானே.." என்றாள். அது பத்மாவின் அம்மா! பத்மாவைக் காணோம்.

'நாஞ் சவுகரியம்தான், ஊட்டுலதான் ஒரே தகறாரு. சீலைய திருப்பித் தரச்சோல்லி பத்மாகிட்ட..."

'அட, அத நானே திருப்பித் தரச்சொல்லியிருந்தனே! அதென்னத்துக்கு அடுத்தவங்க சீலைய ஒருத்தி வாங்கி கட்டிக்கிறது." கிழவி சொல்லி முடிப்பதற்குள் ஆக்ரோசமாகிவிட்டாள் மீனாட்சி, 'ஏன் கட்டிகிட்டா என்ன? நோவு நோக்காடு வந்துடுமா? ஏன் நான் கட்டின பொடவையில ஈறும் பேனும் இருக்கா? எனக்கு சொறி செரங்கு எதுனா வந்திருக்கா இல்ல குஷ்டம் வந்தவளா நானு" கிழவியை பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டாள்.

கிழவி இரண்டு கன்னத்திலும் படபடவென்று போட்டுக்கொண்டாள். 'யம்மாடீ... நீ மகராசி! உன்ன நான் அப்படி நெனைக்கல. ஆனா... ஆனா... தாயீ, நீ புருசனோட இருக்கிறவ. அந்த சீலைய கட்டிகிட்டு ஒண்ணுமண்ணுமா இருந்திருப்பீங்க.. அந்த ரொணம் எம் பொண்ணு மனச கெடுத்துடக்கூடாதில்லையா?"

'அடத் தூ... வாய மூடு ஆத்தா! பெரிய மனுசியா இருந்துகிட்டு இப்படி பயித்தியக்காரி மாதிரி பேசாத. சீலையில ஒட்டிகிட்டு வந்துடுமா ரொணமும் பொணமும். எதுக்கு உனக்கு இந்த சந்தேக புத்தி?"

'அய்யோ ஆத்தா.. நாஞ் சந்தேகப்படல. எம் பொண்ணு நெலமை அப்பிடி

பெத்த பொண்ண சந்தேகப்படறீயே நீயெல்லாம் ஒரு மனுசியா?

தாயீ நான் என்னத்த வெலங்கவெப்பேன் உனக்கு? எம் பொண்ணு புருசன் இல்லாத பொண்ணு தாயீ. கல்யாணமாயி எட்டு மாசத்துல புருசனை தொலைச்சி தாலி அறுத்துகிட்ட பொண்ணு.."

கிழவி சொல்லச் சொல்ல மீனாட்சி தலையில் கிறுகிறுவென்று ஏறிற்று பித்தம். 'மாமா, என்னாய்யா சொல்றா இந்த பெரிய மனுசி? புருசன் செத்த பொண்ணா? என்னாய்யா மாமா அநியாயம் இது..."

தினமும் காயும், கீரையும் கொண்டுவந்து பச்சை பிள்ளைபோல் சிரித்துக்கொண்டு நின்ற பத்மாவை கல்யாணமாகாத பெண் என்றுதான் இத்தனை நாள் நினைத்திருந்தாள். அவளின் உடம்பும், முகமும் அப்படித்தான் இருந்தது. சிரிக்கச் சிரிக்க பார்த்த பத்மாவின் முகத்தை யோசித்தபடி பிதற்றினாள்: 'ஆனா அந்த பொண்ணு நெறமா சீலை கட்டிகிட்டு நெத்தியில குங்குமத்தோடதானே தெனமும் வந்தா?" கிழவியிடம் சந்தேகம் கேட்டாள்.

'இருவது வயசு புள்ள தாயீ அது! வெறும் நெத்தியோட இருக்கிறது காணச் சகிக்கலன்னு நாந்தான் கோயில் குங்குமத்தை வெச்சிக்கோ தப்பில்லேன்னு சொன்னேன்" கிழவி தலை குனிந்தபடி அழுதாள்.

"பெறகு ஏன் நாங் குடுத்த சீலைய வேண்டாம்னே!"

'எம் பொண்ணுக்கு சீலைய குடுத்த நீ மகராசியா இரு. அதை கட்டிகிட்டு அவளும் மகராசியா இருக்கட்டும்! ஆனா சீலைய கட்டிகிட்டா எம் பொண்ணுக்கு துக்கமா போயிடுதே! உப்பு காரம் வெலக்கி, ஒரு வேலை சாப்பாட்டு இறுக்கி பத்தியமா இருக்கிறவளுக்கு புருசன் நெனப்பு வராம இருக்கலாம். ஆனா புள்ளைங்க நெனப்பு வரத்தானே செய்யும். புருசன் செத்தப்ப அவ மூணு மாச கர்ப்பம். அவன் செத்த மறாவது வாரமே அது கலைஞ்சி போச்சி. கரு சொமந்த வயிறு தாயீ அது. புள்ளை ஏக்கம் இல்லாம இருக்குமா அதுக்கு."

'என்னா ஆயா சொல்ற நீ?"

'நீ குடுத்த சீலைய கட்டிகிட்டு நேத்து எம் மக கோயிலுக்கு போயிருக்கா. உம் மகன்... ஆறு வயசாவுமா அதுக்கு? பின்னாடி பாக்கறதுக்கு இவ உன்னய மாதிரியே தெரிஞ்சாளோ என்ன எளவோ... அந்த புள்ள ஓடிப்போயி அம்மான்னு இவ காலை கட்டிபிடிச்சிருக்கான். ஆறு வயசு பையன் அம்மான்னு கூப்பிட்டதும் இவளுக்கு என்ன தோணுச்சோ ஏது தோணுச்சோ... அந்த புள்ளைய எடுத்துகிட்டு நேரா வீட்டுக்கு வந்துட்டா. இந்த புள்ளை என்ன அம்மான்னு கூப்பிட்டுச்சி, அம்மான்னு கூப்பிட்டுச்சின்னு அப்படி உருகிப்போயிட்டா. நானும், ~ஏங்கண்ணு இவளைப் பாத்தா உங்கம்மா மாதிரி இருக்கான்னு?| கேட்டேன். பச்சை புள்ளைக்கு என்ன தெரியும், ~அய்யே! எங்கம்மா செவப்பா இருப்பாங்க... இது கர்ரேன்னு இருக்கு. நல்லவேயில்ல|ன்னு சொல்லிபிட்டு எழுந்து ஓடிப்போச்சி. இவ கண்ணுல தண்ணி உட்டு அழறா. நீ குடுத்த சீலைத் துணியால எம் பொண்ணுக்கு புள்ளை பாசம் ஒட்டிகிச்சே நான் என்ன பண்ணட்டும் சொல்லு" கிழவி துக்கம் தாங்காமல் உதடு துடிதுடிக்க அழ ஆரம்பித்தாள்.

'ஆமா மீனாட்சி. நேத்து நம்ம பையன் ஓடிப்போய் அவ காலை கட்டிகிட்டதை நானும் பாத்தேன். அவ மொகத்துல தெரிஞ்ச சந்தோசத்தையும் பாத்தேன். இது தப்பாயிடுமேன்னுதான் நான் சீலைய திருப்பி வாங்கினேன்..." வெங்கலராஜன் சன்னமான குரலில் மீனாட்சியிடம் சொன்னான்.

'அய்யோ யம்மாடீ! இந்த வௌரம் தெரியாம பாவி மக நானும் பேசக்கூடாததை எல்லாம் அவகிட்ட பேசினேனே. கல்யாணமாகத பொண்ணுன்னு நெனைச்சி, கல்யாணம் எப்ப, கல்யாணச் சோறு எப்ப? எந் தம்பிய கட்டிக்கிறியா.. இல்ல வேற பையனை பாக்கட்டுமான்னு கூறு கெட்டத்தனமா கேட்டேனே. அப்பவும் அது சிரிச்சிகிட்டே நின்னுச்சே! அது மனசு என்ன பாடு பட்டிருக்கும்." மீனாட்சி புருசனிடம் புலம்பித் தள்ளினாள்.

'சரி விடு மீனாட்சி, விசயம் தெரியாம பேசினதுதானே" வெங்கலராஜன் சமாதானம் செய்தான். அவளும் கண்ணை நன்றாக துடைத்துக்கொண்டு, 'ஏய்யா மாமா, புருசன் செத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வெச்சா போலீஸ்ல புடிச்சிட்டு போயிடுவாங்களா?" என்று விளக்கமாக ஒரு கேள்வி கேட்டாள்.

கிழவி ஆவென்று வாயைப் பிளந்தபடி சண்டைக்கு வந்தாள். 'யம்மாடியோவ்... இந்த மாதிரி பேசினா எம் பொண்ணு ரொம்ப நொந்து போயிடுவா. தம் புருசனையே நெனைச்சி நெனைச்சி இத்தனை நாள் வாழ்ந்துட்டா... இன்னொருத்தனை அவ மனசாலையும் நெனைக்க மாட்டா, ஆமா!"

'அதும் சரிதான். எட்டு மாசம் வாழ்ந்தாலும் புருசன் நெனைப்பு போவுமா?" தன் தம்பிக்கு பத்மாவை கல்யாணம் கட்டலாம் என்ற யோசனையை அவள் முடித்துக்கொண்டாள். அப்பொழுது கீரைக் கூடையோடு பத்மா வந்தாள். வெங்கலராஜனை பார்த்துவிட்டு வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.

மீனாட்சி பத்மாவின் இரண்டு கையையும் பிடித்துக்கொண்டு ஆதரவாய் பேசினாள்: 'உன்னை பாக்கத்தான் நாங்க வந்தோம் கண்ணு. சீலைய திருப்பிக் கேட்டாரேன்னு அவரை நீ தப்பா நெனைச்சிக்காதே! பழைய சீலைய ஏங் குடுத்தே, புது சீலை வாங்கிக்குடுன்னு அவருதான் சொன்னாரு. நல்ல மனுசரு அவரு..." சொல்லிவிட்டு வெங்கலராஜன் சட்டைப்பையில் இருந்து முந்நூறு ரூபாயை அவனிடம் கேட்காமலே எடுத்துக்கொண்டு வந்து பத்மாவின் கையில் திணித்தாள்.

பொண்டாட்டியிடம் நல்ல பெயரெடுக்க இதுதான் சமயம் என்று காரியத்தில் இறங்கினான் வெங்கலராஜன். பத்மாவுக்கும், மீனாட்சியின் தம்பிக்கும் ஒரு கல்யாண ஏற்பாடு செய்துவிட வேண்டியதுதான் என்று பக்குவமாக பேச்சை ஆரம்பித்தான். 'நா அப்படி ஒண்ணும் அப்படி பெரிய மனுசனில்ல. என்னவிட எம் பொண்டாட்டிதான் ரொம்ப நல்லவ. அவ குடும்பமே அப்படி நல்ல குடும்பந்தான். அவளுக்கு ஒரு தம்பி இருக்கான்... எல்லாத்தை விட அவந்தான் நல்லவன். நல்லம்பள்ளியில சைக்கிள் கடை வெச்சிருக்கான். பரமேசுன்னு பேரு." பத்மாவை நோட்டம் விட்டபடி சொன்னான் வெங்கலன்.

'தெரியும்" வெய்யில் வியர்வையை முந்தானையால் துடைத்தபடி பத்மா சொன்னாள்.

'ம், பாத்திருப்பே பாத்திருப்பே! அவனுக்கு ஒரு கெட்ட பழக்கம் கெடையாது. ஆள் நல்ல ஒசரம்..."

'ஒசரமெல்லாம் ஒண்ணுமில்ல... குள்ளம்தான்" பத்மா தலை குனிந்தபடி சொன்னாள்.

'ஆமாமா, கொஞ்சம் குள்ளம்தான்... ஆனா நல்ல செவப்பு..."

'செவப்பெல்லாம் இல்ல... காக்கா கறுப்புதான்."

'காக்கா கறுப்பா? சரி கறுப்புதான். ஆனா அவனுக்கு ரோஸ் கலர்ன்னா ரொம்ப பிடிக்கும். நீ இந்த காசுல ஒரு ரோஸ் கலர் சீலை வாங்கி..."

'ரோஸ் கலர்லாம் புடிக்காது... பாக்கு கலர்தான் ரொம்ப புடிக்குமாம்... இதா நான் கட்டியிருக்கிற இந்த சீலை கலர்.." தன் முந்தானையை விரித்துக் காட்டியபடி தலை கவிழ்ந்து நின்றாள் பத்மா.

பேசுகிற பேச்செல்லாம் தெருநாய்போல அடிவாங்கி சுருண்டு விழுந்ததில் ஆடிப்போனான் வெங்கலராஜன். அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல் திகைத்தான். பொண்டாட்டியை முறைத்தான். பிறகு லபோ திபோவென்று கத்த ஆரம்பித்தான், 'ஏய், என்னாடி பேசுது இந்த புள்ள? இதுக்கு அர்த்தமென்னான்னு கேக்கறேன்? ஒழுக்கமா ஒரு மகன வளக்கத்தெரியாதா உங்கம்மாவுக்கு? எங் குடும்பம் யோக்கியக்கார குடும்பம்னு பீத்தின்னே.."

'மாமா, அசிங்கமா இப்படி பீயத் தின்னே ஈயத்தின்னேன்னு பேசாத... இது நல்லாயில்ல...”

'ஏய் என் கோவத்தை அடக்கப் பாக்காதே! பீத்தனேன்னு சொன்னேன் ஆமா! செரி, உங்க தம்பிக்காரன் யோக்கியம் எப்படி இருக்கு பாத்தியா? நல்லம்பள்ளியில சைக்கிள் பஞ்சர் ஒட்டறவன் இங்க கீரை விக்கிறவளுக்கு சீலை எடுத்து குடுத்தா என்னாடி அர்த்தம்? உங்கம்மாவுக்கு ஒரு மகனை ஒழுக்கமா வளக்கத் தெரியலையா?" இந்தமுறை மீனாட்சியைவிட வெங்கலராஜனுக்குத்தான் குரல் பெரிசாக இருந்தது. அவனை சமாதானம் பண்ணி வீட்டிற்கு கொண்டு செல்வதற்குள் மீனாட்சியின் உடம்பெல்லாம் மீசை குத்தி குறுகுறுபு;பாகிவிட்டது. ஒரு விதவைப் பெண்ணுக்கு கல்யாணம் செய்துவைத்து பெரியமனுசன் ஆகலாமென்று அவன் யோசனை பண்ணி வைத்திருந்தால் இவர்களே சீலை வாங்கிக் கொடுத்து சிங்காரமாய் நிற்பார்களாம். கோபமம் வராதா அவனுக்கு. ராத்திரியெல்லாம் வெங்கலராஜன் கத்து கத்து என்று கத்தியான். காது பொறுக்கமாட்டாமல், 'சும்மா கத்தாத வாய மூடு மாமா!" என்று மீனாட்சி சொன்ன பிறகுதான் அடங்கினான்.

'பாருய்யா மாமா, சின்னஞ் சிறுசுங்க முடிவெடுத்தாலும் பெரிய மனுசன் நீதான் அந்த கல்யாணத்தை பண்ணி வெக்கணும். கல்யாணச் சீலை, மாலை, மஞ்சத் தாலியில ஆரம்பிச்சி கல்யாண சோறு போடற வரையில உஞ்செலவுதான் சொல்லிட்டேன்" என்று சமாதானத்திற்கு வந்தாள் மீனாட்சி. எழுபது எம்பதாயிரத்திற்கு செலவு வெச்சாலேடா யப்பா! கொஞ்சம் அடக்கமாய் கத்தியிருக்கலாமோ என்று அப்பொழுதுதான் யோசித்தான் வெங்கலன். கல்யாணம் பண்ணிக்கொள்கிறவனெல்லாம் பெரியமனுசன் ஆவதில்லை. ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கிறவன்தான் பெரியமனுசன் ஆகிறான் என்கிற நினைப்பில் வெங்கலராஜனும் அதற்கு சரியென்றான்.

தம்பியிடம் தகவல் சொல்லி, தாலியும் வாங்கிவருவதற்காக மறுநாள் காலையிலேயே நல்லம்பள்ளிக்கு கிளம்பினாள் மீனாட்சி. பந்தல்காரன், ரேடியோக்காரன், அச்சாபீஸ்காரன், மேளக்காரன் எல்லோரிடமும் ஒரு முன் வார்த்தை சொல்வதற்காக வெங்கலராஜனும் போனான். எல்லோரிடமும் சொல்லிவிட்டு வீட்டிற்கு வெங்கலன் திரும்பிய வெகுநேரம் கழித்தும் அவள் வரவில்லை. வெயில் தாளும் நேரத்தில் வீட்டிற்கு திரும்பினாள். தலையெல்லாம் கலைந்துபோய், பேய் பிடித்தவள் போன்ற விகாரத்தோடு இருந்த அவளைப் பார்த்து, ~என்னாச்சி மீனாட்சி?” என்று கேட்டான் வெங்கலன்.

'அவன் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லறான் மாமா? அவளுக்கு தாலி கட்டினா அவனும் எட்டு நாள்ல செத்துடுவானாம்... அந்த பொண்ணுக்கு பாம்பு தோசம் இருக்குதாம்."

'சீலை எடுத்து குடுக்கிறதுக்கு முன்னாடி அவனுக்கு தெரியலையா இது... அவன் தலையில ஒரு போடு போட வேண்டியதுதானே!" கத்தினான் வெங்கலன்.

'போட்டேன் மாமா, அதான் பயமா இருக்கு. ஆனா அவன் பண்ணது அக்கிரமமில்லையா மாமா? போலீஸ்ல ரொம்ப அடிப்பாங்களா மாமா..." மீனாட்சி இரண்டு கன்னத்திலும் கை வைத்துக்கொண்டு விசனமாய் கேட்டாள்.

'எலும்பு ஒடையற மாதிரி அடிப்பாங்க.. சாவட்டும் உடு அந்த நாயீ... போலீஸ் அடிபட்டாத்தான் அவனுக்கு புத்தி வரும்."

'அவனுக்கு புத்தி வராது மாமா! எனக்குத்தான் வரணும். நான்தான் தலையில ஒரே போடு...."

'பெரிசா அடிச்சிட்டியாடி.?"

'இல்ல மாமா சின்னதாதான் அடிச்சேன்... பின் மண்டையில... பெரிய சுத்தியாலே... அதுக்கே மயக்கமடிச்சி விழுந்துட்டான். மூச்சி வரலேன்னு யாரோ சொன்னாங்க... " அவள் சொல்லி முடிக்கும் பொழுது வெங்கலராஜன் அரைவாசி தரையில் விழுந்து அய்யோ அய்யோ என்று அடித்துக்கொண்டான்.

வாய் வார்த்தைதானே பேசுகிறாள் போகட்டுமென்று வளரவிட்டால் இப்பொழுது சுத்தியால் - அதுவும் சொந்தத் தம்பியை அடிக்கிற அளவுக்கு கொலைகாரியாகிவிட்டாள். பாவம் அந்த சின்னப் பையன். சீலை வாங்கிக் கொடுத்தான் என்பதற்காக பிடிக்காத விதவைப் பெண்ணை கல்யாணம் பண்ணி வைப்பது எப்படி நியாயமாகும்? அதற்காக அவனை தலையில் அடித்து சாகடிப்பாளா ஒரு ராட்சசி. ஆகாயத்தை பார்த்தபடி கண் சிமிட்டாமல் நின்ற மீனாட்சியை பயத்தோடு பார்த்தான் வெங்கலராஜன். எந்த நேரத்தில் போலீஸ் ஜீப் வருமோ, இவள் ஜெயிலுக்குப் போனால் பிள்ளைகளை எப்படி வளர்ப்போமோ என்கிற கவலையில் சிலையாகி நின்றான் வெங்கலன். அப்பொழுது ஒரு ஆட்டோ கதறிக்கொண்டு வந்து வாசலில் நின்றது.

ஆட்டோவில் இருந்து மீனாட்சியின் தம்பி கழுத்து நிறைய மாலை போட்டுக்கொண்டு இறங்கினான். தலையைவிட பெரிதாக தலையில் கட்டு போட்டிருந்தான். சுத்தியால் மண்டை உடைத்த பிறகும் சாகவில்லையா அவன்? அவனுக்கு பின்னால் அந்த பத்மா இறங்கினாள். பாக்குக் கலர் சீலை கட்டிக்கொண்டு கழுத்தில் மாலையோடு அவள் இருந்தாள். 'நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்! எங்கள ஆசீர்வாதம் பண்ணுக்கா.." என்று மீனாட்சியின் காலில் எழாமல் விழுந்துவிட்டான் தம்பி.

'அடக் கெரகம் புடிச்சவனே... இன்னைக்கி சனிக்கிழமைடா.. கல்யாணம் பண்ணிக்க நல்லநாள் கெட்ட நாள் பாக்கமாட்டீயா நீ?" கத்தினாள் மீனாட்சி.

'ஆமா, நல்ல நாள் பாத்துட்டுத்தான் நீ என் மண்டைய ஒடைச்சியா? கெட்டது நடக்கிறதே நாள் கிழமை பாக்காம நடக்குது. அப்புறம் நல்லது நடக்கிறதுக்கு எதுக்கு நேரம் காலம் பாக்கணும்?' படுத்துக்கொண்டே பதில் சொன்னான் மீனாட்சி தம்பி. வெங்கலராஜனுக்கு லபலபவென்று வாயில் சிரிப்பு வந்துவிட்டது.

மூன்று நாள் மூச்சு விடாமல் சிரித்த வெங்கலராஜன் அதன்பிறகுதான் ஒரு பெரிய சந்தேகத்தை கேட்டான்: 'ஏம் மீனாட்சி. உந் தம்பிக்கு புடிக்காத பொண்ணை கட்டி வெச்சிருக்கியே... தப்பில்லையா? ஆயிரம் இருந்தாலும் தம்பி மண்டைய சுத்தியால அடிக்கிறது குத்தமில்லையா? உனுக்கு ஏன் இப்படி ஒரு ஆங்காரம்...?"

'மாமா, சும்மா ஒண்ணும் ஆத்திரப்படறதில்ல நானு. என் ஆங்காரத்துக்கு காரணம் எங்கப்பன்தான். எங்கப்பனோட யோக்கியதைய சொன்னா நீ சோறு தண்ணி திங்காம வெசனப்பட்டுப் போயிடுவே.

சரி போறேன் சொல்லு... நல்லபுத்தியில் இருந்த வெங்கலராஜன் ஆர்வமாய் கதை கேட்டான்.”

அறுபத்ரெண்டு வயசில எங்கப்பன் சாகும்போது கெழவிங்க ரெண்டு பேரு, சின்ன வயசுக்காரி ஒருத்தி ஆக முழுசா மூணு பேர தாலி அறுத்து விதவை ஆனாங்க.”

அடிக்கெரகமே உங்கப்பனுக்கு மூணூவது ஒண்ணும் உண்டா?”

பாதிக் கதையில பேசினா பல்லை ஒடைச்சிப்புடுவேன்ய்யா மாமா... தாலி அறுத்த கணக்குதான் அது. தாலி அறுக்காம அரைக்கால் விதவை ஆனவங்க பலபேருன்னு ஊருக்குள்ள பேசிகிட்டாங்கசின்ன வயசுக்காரி ஒருத்தி இருந்தா இல்லையா அவளுக்கு எங்கப்பன் செத்தப்ப பதினெட்டுதான் வயசு. அப்பன் செத்து நாலு வருசம் கழிஞ்ச பெறகு, அந்த சின்ன வயசுக்காரிக்கு பொறந்தவன் தான் எந் தம்பி.”

வெங்கலராஜன் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக்கொண்டாலும் பல் பத்திரமாக இருக்கவேண்டுமென்று பாதியில் பேசவில்லை. மீதியை மீனாச்சியே சொன்னாள்.

 “கணக்கு பண்ணிப் பாத்தா, எனக்கு ஒரு அப்பா. எந் தம்பிக்கு ரெண்டு அப்பான்னு ஆகுதுதன்னோட இன்னொரு அப்பன் யாருன்னு இன்னைக்கி வரைக்கும் எந் தம்பிக்கி தெரியாது! அவங்கொம்மாவ மயக்கி ஏழு மாசம் திருட்டுக் குடும்பம் நடத்திட்டு ஓடிப்போன மகராசன எங்க போயி தேடறது? முண்டச்சி மொகத்தப்பாத்தா கையில விட்ட தேனாட்டம் தெரியுமாட்டம் இருக்கு இந்த ஆம்பளைக் கம்னாட்டிங்களுக்கு. நக்கிப்பாக்க நாயா அலையறானுங்க. இப்படி புருசன் செத்த வெதவைப் பொண்ணுக்கு பொறந்த அப்பாவிப் புள்ள மாமா எந் தம்பி. இருந்தாலும் அவனை பாவப்பட்ட பையன்னு சொல்லக்கூடாதுய்யா மாமா... அவன் என்ன காரியம் பண்ணியிருந்தான் தெரியுமா?”
கேட்டுவிட்டு பெரிது பெரிதாய் மார்பில் கைவைத்து மூச்சுவிட்டு கோபப்பட்டாள் மீனாச்சி.”பீர்க்காலிப் பய. பத்மா இப்ப நாலு மாச கார்பமா இருக்காய்யா மாமா. சின்னத்தனம் பண்ணிப்புட்டு வந்து சின்ன புள்ளையாட்டம் முழிச்சா கோவம் வருமா வராதா? நாம பொறந்த பொறப்பு என்ன, பட்ட கஷ்டம் என்ன.. நம்ம கதை என்னன்னு தெரிஞ்சும் இன்னொருத்திய ஏமாத்தினா அது அக்குருமமில்லையா... அநியாயமில்லையா... அதர்மமில்லையா... கொடுமையில்லையா..." என்று மீனாட்சி அடுக்கடுக்காய் விலங்காக் கதையும், விடுபடா தருமமும் சொல்லிக்கொண்டே போக, கதையை கேட்டுக்கொண்டிருந்த வெங்கலராஜனுக்கு கண் இரண்டும் உள்ளுக்குள் நட்டுக்கொண்டது. நாலாபக்கமும் கை காலை கிளப்பிக்கொண்டு, மயக்கம்போட்டு மல்லாக்க விழப்போனான். ஆயிரம் பேசினாலும் அவனை கீழே விழாமல் காப்பாற்றியவள் மீனாட்சிதான். அதன்பிறகு எத்தனை தினுசாய் பார்த்தாலும் சரி, சீலை கட்டிய உசிர்களுக்கெல்லாம் ஒரே பத்ரகாளிபோல மீனாட்சி தெரிந்தாள். பெண் என்கிற வார்த்தையும், பெண் போகிற திக்கையும் பயத்தில் விலக்கினான் வெங்கலராஜன். அடிப்பது என்னதான் பொண்டாட்டியாக இருந்தாலும், உச்சந்தலையில் சம்மட்டியடிபட்டு சாவதற்கு அவன் தயாராக இல்லை.

குதிரைவால் போல மீசை வைத்துக்கொண்டு வீரதீரமாய் இருந்துகொண்டு தொட்டதெற்கெல்லாம் அதிர்ச்சியடைகிற தன் புருசனை அதன்பிறகு மீனாட்சி அதட்டிப் பேசுவதேயில்லை. விதவைப் பெண்களின் துக்கக் கதைகேட்டாலே தாங்கமுடியாமல் மயக்கம் போட்டு விழுகிறான் என்றால் அவன் எத்தனை இளகிய மனசுக்காரனாக இருப்பான்? 'எம் புருசனுக்கு மீசைதான் பெரிசு. ஆனா ஒரு பொண்ணோட கஷ்டத்தைச் சொன்னா இன்னைக்கும் மயக்கம்போட்டு விழுந்துடுவாரு" என்று வெங்கலராஜனின் புருஷ லட்சணத்தை மீனாட்சி பார்க்கிரவர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். தன் பொண்டாட்டி புன்னியத்தில் நாலு பெண்களிடம் நமக்கு நல்ல பெயர் கிடைத்தால் சந்தோசம்தான் என்று நினைத்தான் வெங்கலராஜன். ஆனால், பெரிய கடைவாய்ப் பல்கொண்ட ஒரு கிழவி, 'கஷ்டத்தை சொன்னாவே மயக்கம்போட்டு விழற ஆளுக்கு இம்மாம் பெரிய மீசை எதுக்கு?" என்று கேட்டபிறகு தன் பெரிய மீசையை என்னசெய்வது என்று தெரியாமல் பரிதாபமாய் பார்த்துக்கொண்டான். ராஜஸ்த்தான் ஓட்டல்காரியிடம் எட்டு பரோட்டாவை ஓசியில் பெற்றுத்தந்த புகழ்பெற்ற மீசை இதுவென்றால் இனி யாரிதை நம்பப்போகிறார்கள் என்ற வருத்தம் மீசை நரைக்கும்வரை வெங்கலராஜனுக்கு இருந்துகொண்டே இருந்தது.


முற்றும்.

No comments: