Tuesday, April 24, 2018

தரும ராஜா சபை - சிறுகதை



மனுசங்க உடம்பு கல்லால செஞ்சிருக்கா? அதுக்கு என்ன வேணா வரலாம். யாருக்கு வேணா வரலாம். ஒரு மனுசன் நோய் வந்து படுத்துட்டா கை கொட்டி சிரிப்பாங்களா? அப்பா முடியாம படுத்து ஆறு மாசம் ஆச்சி. செத்து பொழைச்சிருக்காரு. அவர பாத்து சிரிக்கறாங்க. எது உங்கள சிரிக்க வெக்குது? றெக்க முறிஞ்ச கோழிக் குஞ்ச பிச்சித் திம்பீங்களா? அப்பா என்ன பண்ணாரு? 
நாங்களும் மனுசங்கதான்.. அடிச்சா வலிக்கும். அவமானம் தாங்காது.  ரத்தம் பாத்தா கதறுவோம். கஷ்டத்த பாத்தா கருணை வேணாமா? ஈரம் வேணாமா? எங்களுக்குள்ள ஓடற அதே ரத்தம், அங்க மட்டும் வெளிய ஓடுதா? உங்களுக்கும் வரும். நீங்களும் படுவீங்க. இது சாபமில்ல.. வேதனை. எங்க மேல ஆயிரம் கல் அடிச்சா அதுல ஒண்ணு உங்க மேலயும் படும்.

இருக்கா போச்சா? இன்னைக்கா நாளைக்கா? எப்ப கண்ணீர் அஞ்சலி? எப்ப கருமாதி? காதுபட கேக்கறாங்க. எனக்கு வந்தது உனக்கும் வராதா? இன்னைக்கு நீ நாளைக்கு நான்? மனுச ஜென்மங்களுக்கு இது கூட புரியல.. அடுத்தவங்க கஷ்டத்த வெண்ணையா உருட்டி  நெருப்புல வாட்டி உருக்கி உருக்கி அது சொட்டச் சொட்டச் ரசிக்கிறது. அடுத்தவன் கஷ்டம் நெய்யா வடியுது. உங்களுக்கு அது சந்தோசம்.. எங்களுக்கு அது கண்ணீர்.
நான் பொம்பளைப் புள்ளை. இன்னும் கல்யாணம் ஆகல. அப்பாவுக்கு நான் ராஜகுமாரி. என் எதிர்கால சந்தோசத்த கனவா திரட்டி கோட்டை கட்டி வெச்சிருந்தாரு. அப்பாவுக்கு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு. அவர நம்பிதான் குடும்பமே. அவர் முடியாம படுத்துட்டாரு. மொத்த சுமையும் அம்மா மேல விழுந்திருக்கு. இப்ப அவதான் சுமக்கிறா.. அவளையும் சபிக்கிறாங்க.
வீட்டு செலவு, வைத்திய செலவு, சில்லறைச் செலவுன்னு பணத்தேவை கழுத்த நெறிக்குது. அம்மா கண்ணு முழி பிதுங்கறா. அவளால முடியல. அப்பாவ சுத்தம் பண்ணி, சாப்பாடு ஊட்டி, அவர பராமரிச்சி இந்த ஆறு மாசத்தில ரொம்பவே நொடிச்சி போயிட்டா.
எனக்கு இன்னும் படிப்பு முடியல. இளங்கலை அரசியல் ரெண்டாவது வருசம். படிப்ப முடிச்சாலும் வேலைக்கு உத்ரவாதமில்ல. குடும்பத்துக்கு உதவின்னு ஒண்ணு பண்ண முடியல. அப்பாவ நினைச்சா பாவமா இருக்கு. அம்மாவ நினைச்சா அய்யோன்னு இருக்கு. குடும்பத்த நினைச்சா அழுகையா வருது.
ஒரு குடும்பம் நொடிச்சி போயிட்டா, கஷ்டம்னு வந்துட்டா கை தூக்கி விடணும். ஆறுதல் சொல்லி பாத்துக்கணும். சொந்த பந்தம்னு வேற எதுக்கு இருக்காங்க? ஆனா, சொந்தம்ன்னாவே துரோகிங்கதான். நாம நல்லாருந்தா வயித்தெரிச்சல் முட்டிக்கும். கெட்டுப் போயிட்டா கை கொட்டி சிரிப்பாங்க. மனுசங்களோட ஒரே எதிரி ரத்தச் சொந்தம்தான். அப்பாவுக்கு வாய்ச்ச அண்ணன் தம்பிங்க சோத்துல கலந்திருக்கிற விசம். தூங்க வெச்சி கொன்னுடுவாங்க.
சித்தப்பா, பெரியப்பா, அத்தை யாருமே சரியில்ல. அப்பாவ, ஆரம்பத்தில இருந்தே ரொம்பவே கொடுமை பண்ணியிருக்காங்க. எல்லாமே சொத்துப் பிரச்சனை. பூர்வீகச் சொத்த பங்கு பிரிக்கறதில அப்படி ஒரு விரோதம். மொத்தமா எடுத்துக்கணுன்னு எல்லாருக்குமே ஆசை.  அப்பா ஒத்துக்கல.. சொத்த தரமாட்டியா? அப்படின்னா உன்னோட உறவும் வேணா நீயும் வேணா. சண்டை, சச்சரவு வாக்குவாதம் பஞ்சாயத்து.. அப்பாவுக்கு அதாலதான் வந்துச்சி.
பிடிக்கலயா, ஒரே அடியா விலகிடணும். எட்டியிருந்தா எதிரியும் நண்பன்தான். உன்பாடு உனக்கு, எங்க பாடு எங்களுக்கு. கஷ்டமோ நஷ்டமோ நிம்மதியா இருந்துக்கலாம். ஆனா, ரத்த சொந்தமாச்சே. நிம்மதியா இருக்க விடறதில்ல. சுத்தி வந்து கெடுக்கறது. மன உளைச்சல் கொடுக்கறது. பேர கெடுக்கறது. அவங்களால அப்பா ரொம்பவே பட்டிருக்காரு. தாளாத வேதனை. பக்கவாதம் வந்தாச்சி. மோசமான வியாதி. கை கால் விலங்கல. ஆறு மாசம். எல்லாமே படுக்கைதான்.
டாக்டருங்க பலபேர பாத்தாச்சி. எல்லா வைத்தியமும் பண்ணியாச்சி. இதுவரைக்கும் ரெண்டு லட்சம் கடனும் பட்டாச்சி. பெரிசா ஒண்ணும் முன்னேற்றமில்ல. எமனோட போராடி உசிர மீட்டாச்சி. அது ஒண்ணுதான் ஆறுதல். அப்பா முழுசா குணமாகறது எப்போன்னு தெரியல. கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
அப்பாவுக்கும் இது போராட்டம்தான். தன்னோட மொத்த பலத்தையும் திரட்டி நோயோட போராடிட்டு இருக்காரு. எப்படியாவது மீண்டு வரணும். குடும்பத்த கரையேத்தணும். ஒரு நோவு வந்தா, நொடி வந்தா, செத்துப்போற நிலமை வந்தா எந்த அப்பாவும் தனக்காக பதைக்கறதில்ல. குடும்பம்தான் நினைப்பில இருக்கும்.
“உங்கள அனாதையா விட்டு போகமாட்டேம்மா.. மிச்சமிருக்கிற உசிர கண்ணுல வெச்சாவது உங்கள காப்பாத்துவேன்அப்பாவால பேச முடியாது. ஆனா, அப்பா கண்ணுல இதத்தான் வெச்சிருக்காரு. அப்பா கண்ணுல நம்பிக்கை இருக்கு. ஆனா எனக்கு அவரப் பாத்து அழத்தான் வாய்ச்சிருக்கு..
உங்கள மீட்டெடுக்க நான் என்னப்பா பண்ணுவேன்? உங்கள, அம்மாவ, இந்த குடும்பத்த நான்தாம்ப்பா சுமக்கணும். ஆசை இருக்கு. ஆனா வழி தெரியலப்பா. நான் அழுதா அப்பாவுக்கு தாங்காது. கதவ அடைச்சிட்டு தண்ணிய தொறந்து விட்டு ஓன்னு அழு. சொந்தமே எதிரி ஆயிட்டா குடும்பம் தாங்காது. கண் எதிர்க்க வெளிப்படையா தெரியுது. இந்த குடும்பம் ஓட்டை விழுந்த கப்பல். அது மூழ்கிட்டிருக்கு?
எதிரியோட சண்டை போட்டா யார் வேணா ஜெயிக்கலாம். துரோகியோட சண்டை போட்டா துரோகிதான் ஜெயிப்பான். வீட்டு மேல கேஸ் போட போறாங்களாம். இழுத்துப் பூட்டி சீல் வெக்கப் போறாங்களாம். சித்தப்பா பேசிக்கிட்டதா தகவல் வீடு வரைக்கும் வந்தாச்சி.. அப்பாகிட்ட நியாயம் இருக்கு. அவங்க கிட்ட வசதி இருக்கு. வாதாட வக்கீல் வெச்சாலும் எங்களுக்கு வாய்ப்பில்ல. வீடும் போச்சின்னா அப்பாவ எங்க வெச்சி பாக்கறது? அம்மா வாய் விட்டு அழறா.. அவளும் அப்பாவுக்கு தெரியாமதான்.
“வீட்ட கூட அப்பறம் பாத்துக்கலான்டி.. மொதல்ல அப்பாவ காப்பாத்தணும்
அம்மாவுக்கு அப்பாதான் எல்லாமே. அப்பாவுக்காக என்ன வேணா பண்ணுவா? விரதமிருந்து, உடம்ப எட்டுத் துண்டா வெட்டிக்க, உன் புருசன் உசிர் தக்கும்னு சொன்னா எட்டு துண்டா வெட்டிப்பா. அப்பாவ காப்பாத்த உசிர விட்டு துடிக்கிறா.. வழிதான் தெரியல.
“அப்பாவ எப்படித்தான்டி காப்பாத்தறது?
“அதுக்கு ஒரு வழி இருக்கு தாயி.. நான் சொல்றபடி பண்ணா எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்
அப்பாவுக்கு நாட்டு மருந்து கொடுக்கிற வைத்தியர், அம்மாவிடம் மாற்று மருந்து சொல்கிறார். எந்த மருந்துக்கும் கட்டுப்படாத பக்கவாதம் ஒரு மருந்துக்கு கட்டுப்படும். அது பச்சைப் புறா ரத்தம்.
தண்ணியில் தத்தளிக்கிற உசிருக்கு மரக்கிளையும் கப்பல்தான். அம்மா ஆளாய் பறக்கிறாள். பச்சை புறா எங்க கிடைக்கும்? அது கடையில கிடைக்காது. அத்வானக் காட்டுலதான் கிடைக்கும். அப்புறம் என்ன. ஆள விசாரி. கடன வாங்கு. புறாவ கொண்டா. அப்பாவ காப்பாத்து. அம்மா பரபரக்கிறாள்.
அஞ்செட்டிக் காட்டில் வேட்டையாடி இருக்காங்க. தெரிந்தவர் மூலம் ஒரு வேட்டைக்காரரை பிடித்து, முன்பணம் கொடுத்து, புறாவுக்கு ஏற்பாடும் பண்ணியாச்சி. “தாயீ.. புறாவோட வந்திருக்கேன்.. வீடு எங்கன்னு சொல்லு.வேட்டைக்காரனிடமிருந்து போன் மூலம் தகவலும் வந்தாச்சி.
“தாயீ.. நான் இங்க கோயிலான்ட இருக்கேன்.. வழி தெரியல. இங்க தெருவெல்லாம் ஒரே புதிர்ப் போட்டியா இருக்கு. எப்படி வர்றது?
“நீங்க அங்கயே இருங்க. நான் வந்து கூப்பிட்டுக்கறேன்.
“அப்பாவை குணப்படுத்த வைத்தீஸ்வரனே மருந்தோட வந்திருக்கான்.. ஓடு.. கையெடுத்து கும்பிடு. கையோட கூட்டிட்டு வா. அம்மா விரட்டுகிறாள்.
“அப்பா, பச்சை புறா வந்தாச்சிப்பா.. கோயில் வரைக்கும் வந்தாச்சி.அப்பாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடுகிறேன். முருகன் கோயில் பக்கத்தில் சித்தப்பா வீடு. அதை ஒட்டி பெரியப்பா வீடு. எதிரே அத்தை வீடு. அது எதிரிகளின் கூடாரம். அவர்கள் இருக்கிற திசைப் பக்கம் போகவே பிடிக்காது. காலேஜுக்கு போக அந்த வழிதான் நேர்வழி. நான் சுற்றி வளைத்து மேல் தெரு வழியாக போய்விடுவது. துஷ்டர்களை கண்டால் தூர விலகு. அவர்களை பார்க்காமல் இருப்பது மனசுக்கு நிம்மதி. ஆனால் இன்றைக்கு அங்கேதான் போகவேண்டும். வேட்டைக்காரன் வந்திருக்கிறான். அவர்கள் கண்ணில் படாமல் வந்துவிட்டால் அதுவே போதும்.
என் கெட்ட நேரம், வேட்டைக்காரன் நின்றிருந்தது சித்தப்பா வீட்டுக்கு எதிரில். சித்தப்பா, பெரியப்பா, அத்தை மூன்று பேருமே வாசலில் நிற்கிறார்கள். அவர்களிடம் வேட்டைக்காரன் வழி கேட்டிருப்பான். எதிரியிடம் வழி கேட்டால் எமன் பட்டிணத்திற்கு கை காட்டுவார்கள். வேட்டைக்காரனை கூப்பிடவும் முடியாது. இது எனக்கு சோதனை நேரம். நடப்பது நடக்கட்டும். பொறுமைதான் அவசியம்.
“அய்யா.. இங்க நடராஜன்னு ஒருத்தர் மளிகை கடை வெச்சிருப்பாரே. அவர் வீட்டுக்கு எப்படி போணும்?
அப்பா பெயர்தான் நடராஜன். எங்கள் வீட்டைத்தான் விசாரிக்கிறான். அவர்களுக்கு தெரிந்துவிட்டது. கையில் புறாக் கூண்டு. அவன் வேட்டைக்காரன். எதற்கு விசாரிக்கிறான்? அதுவும் புரிந்திருக்கும். தங்களுக்குள் சிரிக்கிறார்கள்.
“அய்யா.. ஏன் சிரிக்கறீங்க.. அவர தெரியுமில்ல?
பேர் என்ன சொன்னபெரியப்பா கேட்கிறார்.
“மளிகை கடை வெச்சிருப்பாரே.. நடராஜன்
நடக்கவே முடியலயாம்.. நடராஜன்னு பேரா? நல்லாருக்கு
மூன்று பேருமே சிரிக்கிறார்கள். வேட்டைக்காரன் கையிலிருந்து கூண்டுக்குள் பச்சை புறா படபடக்கிறது.
“அய்யா என்னாச்சி.. எதுக்கு சிரிக்கிறீங்க
 “நடராஜன இப்பவே பாக்கணுமா?இது சித்தப்பா.
“ஆமாய்யா அவருக்கு கொஞ்சம் முடியல. மருந்துக்கு புறா கொண்டாந்திருக்கேன். இத குடுக்கணும்.
இதென்ன பக்கவாதப் புறாவா?இது அத்தை.
“இது பக்கவாதப் புறா இல்லம்மா. பச்சப் புறா. வாதத்துக்கு மருந்து.
இத சாப்பிட்டா கை கால் விலங்குமா? நடராஜன் நடப்பாரா?இது பெரியப்பா.
“கண்டிப்பா நடப்பாருய்யா
“அப்டின்னா குடுக்காத..இது அத்தை.
“அவன் என்ன புது வண்டியா? சாதாரண நொண்டி.. இனிமே அது ஓடாது. நொண்டிக்கு நூறு குசும்பு. அவன் நடத்து உலகத்தையா ஆளப் போறான்? செத்த பொணத்துக்கு சீர் எதுக்கு. புறாவ பறக்க விட்று. அது பொழைச்சி போட்டும். 
அடப் பாவிகளா? மனுசங்களா நீங்க.. மனிதாபிமானம் செத்துப் போச்சா? உதவி பண்ண மனசில்லயா. வர்றதையும் கெடுக்கறாங்க. அழுகையா வருது. அவங்க துஷ்டங்க. வாக்கு வாதம் பண்ணாத. அவங்களோட விரோதம் வேணா. விலகி வந்துடு. தருமம்னு ஒண்ணு இருக்கு. சத்தியம் செத்துப் போகல. அது அவங்கள பாத்துக்கும்.
அப்பா சண்டை போட கத்துத் தரல. தாழ்ந்து போ. பணிஞ்சி இரு. உன் நேர்மை உன்ன தூக்கிப் பிடிக்கும். இப்பவும், இத்தனை நடந்தும், வேடிக்கைதான் பாக்கறேன். பணிஞ்சிதான் நிக்கிறேன். வேட்டைக்காரனுக்கு கோவம். அவர்கள் புத்தி தெரிந்துவிட்டது.
“அய்யா, அவர் வீடெங்கன்னு கேக்கறேன். தெரிஞ்சா சொல்லுங்க. இல்லன்னா விடுங்க
“ஏன் தெரியாம. நல்லா தெரியும். ஆனா நடராஜன பாக்க இப்படியெல்லாம் போக கூடாது. அந்தாளுக்கு தேவை புறா இல்ல. பூமாலை. ஊதுவத்தி. வெத்தளை பாக்கு. இதெல்லாம் வாங்கிட்டு, வாய இப்படி கோணலா வெச்சிகிட்டு அழுதுகிட்டே போ. இதோ இப்படி..
சித்தப்பா, வாயை கோணலாக்கி, செத்தவருக்கு பூமாலை கொண்டு செல்வது போல நடித்தே காட்ட.. எனக்கு உள்ளே குமைகிறது. அண்ணனை தப்பாய் பேச மனசாட்சி வேணாமா? இத்தனைக்கும் சித்தப்பாவை படிக்க வைத்து ஆளாக்கியதே அப்பாதான். அந்த நன்றி இல்லாமல் எப்படி மனசு வருகிறது?
அய்யா, நான் ஊட்டுக்கு வழி கேட்டா என்னென்னமோ சொல்றீங்க.. அய்யா வீடு தெரியுமா தெரியாதா?
உங்க ங்கொய்யா வீடுதான? நல்லா தெரியுமே. அது, இங்க எங்கயோ தரையிலதான் இருக்கு. எங்க இருக்குன்னு நீயே பாத்துக்கஇது பெரியப்பா. ஒரே ரத்தம். ஒரே பிறப்பு. அப்பாவுக்கு ஒண்ணுன்னா ஓடி வந்து பாத்திருக்கணும். துடிச்சிருக்கணும். ஆனா வீட்டுக்கு வழி சொல்லவே மனசில்ல. இதுக்குதான் சொந்தமா? இவங்கதான் சொந்தமா?
வேட்டைக்காரன் அதற்கு மேல் பேசவி்ல்லை. கோபத்தோடு கோயில் பக்கம் வருகிறான். நான், அவசரமாக கண்ணை துடைக்கிறேன். அதற்குள் பார்த்துவிட்டான்.
“தாயீ.. நீதான் வனஜாவா? அய்யா இப்ப எப்படி இருக்காரு?"
“நல்லாருக்காருங்க..  வாங்க போலாம்!"
போகிற வழியில் வேட்டைக்காரன் புலம்புகிறான். “தாயீ.. அங்க கோயிலான்ட இருக்காங்களே.. அவங்கள்லாம் யாரு? வீட்டுக்கு வழி கேட்டா கண்டபடி பேசறாங்க.. அப்பாவோட பங்காளிங்களா?
ஆமாங்க.. கூட பொறந்தவங்க
நெனைச்சேன். சொத்துல வில்லங்கம் இருக்குமே?
“ஆமாங்க..
நெனைச்சேன்.. பாகப்பிரிவினைன்னு வந்துட்டாலே கூடப் பொறந்தவன். பங்காளி ஆவான். பங்காளி பகையாளி ஆவான். அதுக்காக இப்படியா? நல்லா சுத்தபத்தமா டிரஸ் பண்ணிட்டு லூசாட்டம் சிரிக்கிற பைத்தியங்கள இப்பதான் பாக்கறேன். தப்பா நினைக்காத தாயீ.. நான் கண்டத சொல்றேன். அவங்க மனுசங்களே இல்ல. காட்டுல இருக்க மிருகங்க.. ஒடம்புக்கு வந்துட்ட மனுசன பாத்து இப்படியா சிரிக்கிறது
புறா சடசடக்கிறது. நான் புறாவை பார்க்கிறேன். கூண்டில் இருப்பது புறா இல்லை. அப்பாவின் ஆரோக்கியம். அவரின் கௌரவம். குடும்பத்தின் எதிர்காலம். அப்பா குணமாகி நடக்கணும். அவர் நடந்தாதான் இழந்த எல்லாத்தையும் மீட்க முடியும்.
வேட்டைக்காரன் புறாக்கூண்டை அப்பா எதிரே வைத்துவிட்டு, கால், கை, வாய் என்று ஒன்றுவிடாமல் சோதிக்கிறான். அப்பா, கூண்டுக்குள் இருந்த புறாவை கண்கொட்டாமல் பார்க்கிறார்.
அப்பா, ஒரு நாள் இப்படி சும்மா இருந்து பார்த்ததில்லை. எப்போதும். வேலை. ஐந்து நிமிடம் உட்கார மாட்டார். ஓடியாடி ஒரே துறுதுறுப்பு. இன்றைக்கு நோய் வந்து சாய்த்துவிட்டது. ஒரே ராத்திரியில் எல்லாமே தலைகீழா மாறிவிட்டது. ஆனா அப்பாவுக்கு மகள் பாசம் அதிகம். என்ன அனாதையா விட்டுப் போக மனசில்ல. அதான் பிழைச்சிட்டாரு. ஆனா கண்ணுல மட்டும்தான் உசிர் இருக்கு. உடம்பு மரக்கட்டை.
“இத சரி பண்ணிக்கலாம் தாயீ..வேட்டைக்காரன் நம்பிக்கையோடு பேசுகிறான்.
“வாதத்தோட தீவிரம் அதிகமாதான் இருக்கு. இந்த புறா இருக்கே. இது வாத ரோக நிவாரணி. இத மருந்தா எடுத்துக்கிட்டா மாண்டு போக எழுதி வெச்சாலும் மீண்டு வருவாங்க. அப்படி ஒரு சக்தி
 “இத எப்படி மருந்தா சாப்பிடறது?அம்மா கேட்கிறாள்.
“நான் அதுக்குதானே வந்திருக்கேன்.. புறாவ அறுத்து அதோட ரத்தத்த உடம்புல பூசணும்.. உப்பு புளி எண்ணை சேக்காம கறிய பக்குவமா வறுத்து வயித்துக்கு சாப்பிடணும். ஒரு ஆள் ஒரு புறா. அதான் மருந்து. எலும்பு நரம்பு மிச்சம் வெக்காம மொத்தமா திங்கணும். அய்யா திம்பாரில்ல..
“அதெல்லாம் சாப்பிடுவாருங்க. செய்ய வேண்டியத செய்ங்க. குணமானா போதும்
குணமாயிடுவார் தாயீ.. நீ போய் அறுக்க ஒரு கத்தியும் சமைக்க ஒரு பாத்திரமும் கொண்டா.வேட்டைக்காரன் சொல்ல, புறா படபடக்கிறது.  
மனுசங்க பேசறது புறாவுக்கு புரியுமா? கத்தி, ரத்தம், சமைக்கப் பாத்திரம் என்றதும் அடித்துக் கொள்கிறது உயிர் பயம் வந்துடுச்சா. புறாவை பார்க்க பரிதாபமாக இருக்கிறது.
ஒரே ஆள் தின்ன முடியாத அளவுக்கு புறா ஒன்றும் தீக்கோழி பெரிசில்லை. பசியோடு இருந்தால் பத்து புறா சாப்பிடலாம். அப்பா புறாவை கண் கொட்டாமல் பார்க்கிறார். வேட்டைக்காரன் கத்தியை பதம் பார்க்கிறான்.
'தாயீ.. இது மொக்கையா இருக்கு. வேற இல்லயா
அம்மா வேறு கத்தி தருகிறாள். கத்தியில் நல்ல பதம். வேட்டைக்காரனுக்கு அதில் ஒரு திருப்தி.
“பச்சை புறா இருக்கே.. மருந்துக்குன்னே பொறந்திருக்கு. காப்பாத்த வந்த ஜீவனாச்சே. ஒரே வெட்டு. வலிக்காம அறுக்கணும். துடிக்க துடிக்க அறுக்கக் கூடாது
கொல்ல நினைச்சாலும் வலிக்காம கொல்லணும். அதுதான் அரம். வேட்டைக்காரனுக்கு தெரிஞ்சது சொந்தங்களுக்கு தெரியல. அப்பாவ நோகடிக்கறாங்க. யாருக்காக இல்லன்னாலும் எதிரிங்க இருக்காங்க.. அவங்களுக்காக எந்திரிக்கணும். புறா இருக்கு. உசிர குடுத்து அப்பாவ காப்பாத்தும்.
'தாயீ.. பின்கட்டுல எடமிருக்கா? அங்க சமைச்சிக்கலாம்?”
வேட்டைக்காரன் கூண்டைத் திறந்து புறாவை சடசடக்க எடுக்கிறான். நிஜமாகவே உள்ளங்கை சிறுசுதான். நாட்டு மருத்துக்கு புடம் பண்ணாத உலோகக் கலப்பு ஆகாதென்பார்கள். அது புரிகிறது. ஒரு ஆள் ஒரு புறா. இந்த கட்டுப்பாடு எதற்கு? வேட்டைக்காரனிடம் கேட்கிறேன்.
'தாயீ... புறா சாப்பிட்டா வாதம் சரியாகும்னு சொல்றாங்களே... அந்த சக்தி புறாகிட்ட இல்ல. அது சாப்பிடற மூலிகையில இருக்கு. அந்த மூலிகை உச்சி மலைக் காட்டுலதான் கெடைக்கும். இந்த புறா இருக்கே.. இது தானியத்தோட சேத்து மூலிகைய சாப்பிடும். மூலிகையோட சத்து ரத்தத்தில கலந்திருக்கும். ரத்தத்த பூசினா வாதம் குணமாகிறது அந்த மூலிகையோட சக்தியாலதான்..
“அப்ப ரத்தமே போதுமே.. புறாவை மொத்தமா எதுக்கு திங்கறது?
'நீ ஆட்டுக்கறி திம்பீயா?
“மாட்டேன்..
“சாப்பிடாட்டியும் தெரிஞ்சிக்க.. உடம்புல ஈரலுக்கு ஒரு சத்து, நெஞ்சு கறிக்கு ஒரு சத்து, தொடையெலும்புக்கு ஒரு சத்துன்னு ஒவ்வொண்ணு இருக்கு. இந்த புறாவோட எந்த பாகத்தில மூலிகையோட சத்திருக்குன்னு யாருக்கும் தெரியாது. தெரியலன்னா ஆராய்ச்சில்லாம் பண்ண கூடாது. முழுசா திங்கணும். அதான் திட்டம். நான், நூத்துக்கணக்கான ஆளுங்களுக்கு பச்சைப் புறா குடுத்திருக்கேன். எல்லாருமே சவுக்கியமா இருக்காங்க."
வேட்டைக்காரன் அனுபவப் பேச்சு நம்பிக்கை தருகிறது. அப்பா இனி குணமாயிடுவார். அம்மா முகத்தில் அப்படி ஒரு நிம்மதி. 
அய்யா.. சட்டைய கழட்டுங்க! இத அறுத்து, ரத்தத்த வெதுவெதுன்னு ஒடனே பூசணும். ரத்தம் ஆறக் கூடாது
அப்பா தலையசைக்கிறார். சரியென்கிறாரா வேண்டாமென்கிறாரா? “இது எனக்கு வேணாம்மாஅப்பா  மறுக்கிறார்.
“என்னாச்சிப்பா.. ஏன் வேண்டாங்கறீங்க? சட்டைய கழட்டுங்க.
அப்பா மறுக்கிறார். “நான் பிழைக்கிறதுக்காக இந்த ஜீவன ஏன் கொல்றீங்க? நான் நடக்காட்டியும் பரவாயில்ல... அத விட்றுங்க.  அப்பா குழறிக் குழறி பேசுகிறார். அம்மா பதறுகிறாள்.
“ஏங்க.. வேண்டாங்கறீங்க.. இத உசிரா நினைக்க வேணாம். மருந்தா நினைச்சி சாப்பிடுங்க
ஆமாப்பா.. உங்கள குணப்படுத்த இதான் கடைசி வாய்ப்பு.. மறுக்காதீங்கப்பா..
இது பாவம்மா.. எனக்கு வேண்டாம்
“அய்யா.. வேண்டான்னு சொல்லாதீங்க.. காக்கா குருவி எறும்பு கூட உசிர் வாழ புழு பூச்சி திங்குது. நாம மனுசங்க. பாவம் பாத்தா வாழ முடியாது.
“பாவம் பண்ணி ஏன் வாழணும்?
அப்பா கேள்வி செவிட்டில் அறைகிறது. பாவம் பண்ணி ஏன் வாழணும். உசிரக் கொன்னு ஏன் வாழணும். பிறர கெடுத்து ஏன் வாழணும். உனக்கும் உசிர்தான். எனக்கும் உசிர்தான். உசிரக் கொன்னு உசிர வளக்காத. அடுத்தவங்க துன்பத்தில ஆதாயம் தேடாத. பாவத்த சேக்காத.
எனக்கு உள்ளே என்னென்னவோ ஓடுகிறது. இத்தனைக்கும் அப்பா தீவிர அசைவப்பிரியர். ஆடு கோழி தின்பதில் அப்படி ஒரு பிரியம். இன்றைக்கு அப்பாவுக்கு என்ன ஆனது? புறா இடத்தில் மட்டும் ஏன் இந்த கருணை. அப்பாவுக்கு வாதம் வந்து அவரே புறாவாக மாறிவிட்டாரா? சொந்தங்கள் வேட்டையாடி, புறா போலவே அடிபட்டு, கந்தலாய்க் கிடக்கிறார். அப்பா வேண்டிய மட்டும் பட்டிருக்கிறார். அந்த வேதனைதான் வேண்டாம் என்று மறுக்கிறதா?
அய்யா, உங்கள நம்பி இந்த பொண்ணு இருக்கு.. குடும்பம் இருக்கு. இவங்கள பாருங்க.. காப்பாத்த வேணாமா? அத நினைச்சி சாப்பிடுங்க
அப்பா சமாதானமாகவில்லை. அவர் கண் புறாவைதான் பார்க்கிறது. கண்களில் அப்படி ஒரு பரிதாபம். இந்த புறாவுக்கு கூடு இருக்காதா? அந்த கூட்டுல குஞ்சுங்க இருக்காதா? அதுங்க தாய் வரும்னு காத்திட்டிருக்காதா? இத கொன்னுட்டா அதுங்க நிலமை என்னாகறது. கூடு கட்டி வாழ்ந்தாலும் அதுவும் குடுபம்தான? அத நாம சிதைக்கலாமா?
அப்பா குழறியபடி பேசுகிறார். சவுக்கடி விழுகிறது. அம்மாவுக்கு பேச்சே இல்லை. நான் கல்லாக மாறிப்போனேன். வேட்டைக்காரன் அப்பாவை பார்க்கிறான். புறாவை பார்க்கிறான். கத்தியை கிழே போட்டுவிட்டு, புறாவை கூண்டில் அடைக்கிறான்.
தாயீ.. நான் கௌம்பறேன். நல்லதோ கெட்டதோ.. முன்ன பின்ன யோசிக்காம பண்ணாதான் பாவம் கூட பண்ணலாம். அய்யோ பாவம்னு  நினைச்சிட்டா எதுவுமே நடக்காது. இனி விதி விட்ட வழி. நான் போறேன்..
அய்யா.. இருங்க அவசரப்படாதீங்க.. அவர் என்னமோ சொல்லிட்டு போட்டும்.. நீங்க புறாவ அறுத்து செய்ய வேண்டியத செஞ்சிடுங்க..அம்மா பதறுகிறாள்.
“எப்படிம்மா? புறாவுக்கு ஒரு கூடு இருக்கு, அதுக்கு குடும்பம் இருக்குன்னு சொன்னப்புறம் இத எப்படி கொல்றது? எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. பிள்ளைங்க இருக்காங்க. இனிமே இந்த புறாவ என் கையால அறுக்க முடியாது. வர்றேன் அம்மணி.. அய்யாவ பாத்துக்க..
புறாவுக்கு ஆயுல் அதிகம். அது தப்பித்துவிட்டது. வேட்டைக்காரன் கொடுத்த பணத்தை வாபஸ் கொடுக்கிறான். அப்பாவை கண் கலங்க பார்க்கிறேன். அப்படியென்றால் காலம் முழுக்க அப்பாவுக்கு இதுதான் விதியா? கட்டில்தான் கதியா?
பயப்படாத தாயீ.. அய்யாவுக்கு கால் பங்கு குணமாயிடுச்சி. நீங்க எப்பவும் போல நாட்டு மருந்து குடுங்க. கொஞ்சம் தாமசமாகும். ஆனா கண்டிப்பா குணமாகும்
இந்த புறாவ என்ன பண்ணப் போறீங்க? இனிமே நீங்க புறாவ கொல்ல மாட்டிங்களா?
தாயீ.. விதிச்சத தின்னு விதிவந்தா சாகுன்னு நமக்கு எழுதி வெச்சிருக்கு. எல்லா உசிருக்கும் குடும்பம் இருக்கு. அதுக்காக, வேட்டைக்கே போகலன்னா என் குடும்பம் எப்படி வாழும். வேட்டைக்காரன் எப்பவும் வேட்டைக்காரன்தான். இந்த புறாவுக்கு என்னால சாவு வராது. ஆனா, இத காசுக்கு வித்துடுவேன். இன்னொரு ஆள் வாங்கி இது கழுத்தறுப்பான். இது சாகும். அதுதான் விதி
இங்கே தப்பினாலும் புறா ரத்தம் சொட்ட சாகத்தான் போகிறதா? காப்பாற்றவே முடியாதா? நான் வாபஸ் பணத்தை வேட்டைக்காரனிடமே தருகிறேன்.
“புறாவ இங்கயே விட்றுங்க.. நாங்க வளத்துக்கறோம்
“தாயீ.. இது காட்டுப் பறவை. வளக்கல்லாம் முடியாது
பரவால்ல.. முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கறோம்.. இது எங்களால சாக வேணாம். விட்டுட்டு போங்க..
சரி தாயீ.. காப்பாத்தணுன்னு பிரியப்படற.. காசு கூட வேணாம். நீயே வெச்சிக்க.. ஆனா ஒண்ணு.. அய்யா மனசு மாறி புறாவ மருந்தா எடுத்துக்க முடிவு பண்ணா இதுக்கு தீவனம் வெக்காத. தீவனம் எடுத்தா வைத்தியத்துக்கு ஒதவாது. வளக்கறதுன்னு பிரியப்பட்டா தீவனம் வெக்கலாம். ஆனா இது ரெண்டு நாள் ஜீவிக்காது. அப்படியே இருந்தாலும் நாய் பூனை கண்ணுல பட்டா இதக் கொதறித் தின்னுடும்..
நான் இத பாதுகாப்பா வெச்சிக்கறேன்.. இது என்ன சாப்பிடுணும்னு சொல்லுங்க
தானியம் வை தாயி. நாய், பூனை அண்டாம பாத்துக்க! நாய் சத்தம் கேட்டாவே உசிர் தறிக்காது. கூடு கட்டாது. குஞ்சும் பொறிக்காது. இது அப்படி ஒரு பூஞ்சை. சரி.. காப்பாத்த முடிவு பண்ணிட்ட. இனி உன் பாடு புறா பாடு. வரேன் தாயீ
வேட்டைக்காரன் போனதும் அப்பாவை பார்க்கிறேன். அப்பா கண்கள் புறாவை பார்க்கிறது. அவர் கண்களில் அப்படி ஒரு நிம்மதி. புறாவை காப்பாத்தியாச்சி. அப்பாவை என்ன செய்வது?
“அது பசியோட இருக்கும். சாப்பிட எதாவது வைம்மா
 “என்னங்க.. மொதல்ல உங்கள பாருங்க.. இப்ப கூட ஒண்ணும் கெட்டுப்போயிடல.. சரின்னு சொன்னா நானே புறாவ அறுத்து..
அம்மா, சொல்ல அப்பா தீவிரமாய் மறுக்கிறார்.
“இந்த புறா சாகவே கூடாது. அது எடத்துக்கு போட்டும் பறக்க விட்று
நான் கூண்டிலிருந்து புறாவை எடுக்கிறேன். உள்ளங்கை அடக்கம். ரத்த ஓட்டமும், இதயத் துடிப்பும், வெதுவெதுப்பும் உள்ளங்கையில் தெரிகிறது. இதன் குஞ்சுகள் கூட்டில் இது வருமென்று காத்திருக்குமா?  இங்க இருக்க வேணாம். பறந்து போயிடு. உன் குஞ்சுகல பாத்துக்க.. உன் வீட்டுக்கு போயிடு. மொட்டை மாடியில் நின்று அதை பறக்கச் சொல்லி கெஞ்சுகிறேன். அது பறக்கவில்லை. பயத்தில் நடுங்குகிறது. செந்நிற வட்டம் கொண்ட கருநிறக் கண்களில் பசி மயக்கம். எத்தனை நாள் பட்டினியோ. அஞ்செட்டிக் காட்டுக்கு பறக்குமளவு சக்தி ஏது?
“இத நாமளே பாத்துக்கலாம்.. இதுக்கா எப்ப தோணுதோ அப்ப போகட்டும்அம்மாகிட்ட சொல்லியாச்சி.
இந்த நிமிசம் அப்பாவும் புறாவும் ஒண்ணு. ரெண்டு உசிர பாத்தாகணும்? எப்படி காப்பாத்தறது? யாருக்கு வழி தெரியும். நான் புறாவை பார்க்கிறேன். சின்ன உயிர். எப்போது சாப்பிட்டதோ. துவண்டு போய் கிடக்கிறது. கண்களில் மரண பயம்.
 அத கொன்னுடு. ரத்தத்தக் குடி. அப்பாவ காப்பாத்து. நானும் கல் நெஞ்சக்காரிதான். சின்ன உசிராச்சே பறவையாச்சேங்கற கருணை இல்ல. சித்தப்பா, பெரியப்பா, அத்தைகிட்ட இருக்கற அதே குரூரம். அப்பா பிழைக்கணும். குடும்பம் வாழணும். கொலை பண்ணா தப்பில்ல. எனக்கும் அதே புத்திதான். எனக்கே வெட்கமாக இருக்கு.
அப்பா, புறா ரெண்டு ஜீவனுக்கும் பத்திய சாப்பாடு. சாமை, திணை, வரகு, பச்சைக் கீரை, பழம்.. எது இருக்கோ அது. அப்பாவுக்கு மருந்து. புறாவுக்கு விருந்து. ஈ எறும்பு அண்டாம அம்மா, அப்பாவ பாத்துக்கறா. நாய் பூனை அண்டாம நான் புறாவ பாத்துக்கறேன். இப்ப, புறாவும் எங்கள்ல ஒண்ணு.
அதுக்கு மாடியில கூடு. மண் சட்டிதான் வீடு. பஞ்சும் நாறும் புறாவுக்கு மெத்தை. சல்லாத் துணிக் கதவு. அதுக்கு வந்த எடத்தில சொகுசு.  புறா சாப்டாச்சா? புறா தூங்கியாச்சா? எப்பவும் விசாரணை. அப்பா கூட கேப்பாரு.
புறாவுக்கு நான்னா பிரியம். அது என்னோட ஒட்டிக்கிச்சி. செல்லமா கொஞ்சுது. மூஞ்சு பக்கம் கொண்டாந்தா மூக்குத்திய கொத்துது. அது பொண்ணாதான் இருக்கும். பொண்ணுன்னாவே ஒரு சாபமிருக்கு.. ஒரு எடத்தில தரிக்க முடியாது. வந்து ஒரே மாசம்.. இரையெடுக்கறத நிறுத்திடுச்சி. துவண்டு போச்சி. இதுக்கும் உடம்புக்கு வந்துடுச்சா? கூட்டு ஞாபகம் வந்துடுச்சா? இனிமே இத வெச்சிக்க முடியாது.
காட்டுல இருக்கறது காட்டுல. கூட்டுல இருக்கிறது கூட்டுல. சொந்தம் இல்லாம கஷ்டப்படறது எங்களுக்கு விதி. இத ஏன் கஷ்டப்படுத்தணும்? இனத்தோட ஒண்ணா இதாவது சந்தோசமா இருக்கட்டும், றெக்கையில சக்தி வந்தாச்சி. பொறந்த எடம் ஞாபகம் வந்தாச்சி. இனிமே என்ன? பறந்து போ.. மாடியில் நின்று புறாவை பறக்க விட்டேன். ஒரு வட்டம் திருவட்டம். புறா, வீட்டை சில வட்டம் சுற்றிவிட்டு காடு நோக்கி பறக்கிறது. இனி அஞ்செட்டிக் காட்டில் சுதந்திரமாய் பறக்கும்.
புறா போயாச்சி.. எனக்குத்தான் ஆறல. ஒரு நாள் பழக்கமோ, சிலநாள் பழக்கமோ. சின்னதோ பெரிசோ. ஒரு உசிரோட பழகிட்டா பிரிவ தாங்க முடியறதில்ல. புறா பறந்தாச்சி. இனிமே அது வெறும் கூடு. கண்ணுல ஈரம். நெஞ்சு கணக்குது. என்னை அறியாமல் கண் கலங்குகிறது.
“இதென்னடி கூத்தாருக்கு.. புறா மேல அவ்ளோ பாசமிருந்தா அத ஏன் பறக்கவிட்ட. எப்பவும் போல நெஞ்சோட அணைச்சிக்கிறது?அம்மா திட்டுகிறாள்.
“நான் புறாவுக்காக அழலம்மா.. அதுக்குன்னு ஒரு கூடிருக்கு. அது பொழைச்சிக்கும். ஆனா நமக்கு என்ன இருக்கு. இருக்கிற வீடு நம்மள கை விட்டு போயிடும்மா.. அதுக்குதான் அழறேன்..
என்னடி சொல்ற? வீட்டுக்கு என்னாச்சி?
இந்த வீட்டுக்கு என்னதான் ஆகல. வீடே ஒரு வில்லங்கம். சொந்தங்கற பேர்ல வீட்ட சுத்தி சதிகாரக் கூட்டம். வேட்டை நாய் சூழ்ந்துகிட்டா என்ன வேணா நடக்கும். அப்பாவுக்கும் அவங்களுக்கும் என்னதான் பிரச்சனை? எதுக்கு இந்த வில்லங்கம்? அது ஒரு பெரிய கதை.. தரும ராஜாக் கதை.
எங்க தாத்தாதான் தரும ராஜா. அவருக்கு மூணு தம்பிங்க. தங்க ராஜா. கோயிந்த ராஜா, சின்ன ராஜா. எல்லாமே ராஜாங்க. ஊர்லயே பெரிய குடும்பம். தரும ராஜா வம்சம்ன்னா அப்படி ஒரு மரியாதை. தாத்தா, பேருக்கேத்த ஆளு. ரொம்ப சாது. உழைப்ப தவிர ஒண்ணும் தெரியாது. தம்பி ராஜாங்க இருக்காங்களே, அவங்க பாக்கத்தான் மனுசங்க. குணத்தில குரங்கு. மனசில ஓநாய். தந்திரத்தில குள்ளநரி. பிடிக்காத ஆளுங்கள கடிச்சே திம்பாங்க. அப்படிப்பட்ட கொடுமைக்காரங்க.
தாத்தாவுக்கு ரெண்டு கல்யாணம். மூத்தவங்க கௌரிப் பாட்டி. பெரியப்பா, அத்தை, சித்தப்பால்லாம் கௌரிப் பாட்டி வாரிசு. அப்பாதான் கடைசி. அவரு தாயம்மா பாட்டி வாரிசு.  கல்யாணம்தான் ரெண்டு. வீடு ஒண்ணுதான். கூட்டுக் குடும்பம். ஒண்ணா இருந்தாங்க.
தரும ராஜா தாத்தாவுக்கு சொந்தமா ஒரு மளிகைக் கடை. அதில்லாம நெல்லு மண்டி. நெல்ல கொள்முதல் பண்ணி சந்தையில வியாபாரம். வாரத்தில ஆறுநாள் சந்தையிலதான் இருப்பாரு. வருமானத்துக்கு பஞ்சமில்ல.. ஆனா குடும்பத்தில வில்லங்கம். தாத்தா இல்லாத நேரத்தில கௌரிப்பாட்டி ரொம்பவே பட்டிருக்கா..
தருமராஜா இருந்தாக்க மத்த ராஜாங்க மந்திரிங்க. அப்படி ஒரு சேவகம். அவர் வீட்ல இல்லன்னா இவங்கதான் ராஜாங்க. மூணு தம்பிங்களும் சேந்து கௌரிப்பாட்டிய ரொம்பவே இம்சை பண்ணியிருக்காங்க. நின்னா குத்தம் நடந்தா குத்தம். திட்டும் உண்டு அடியும் உண்டு. கௌரிப் பாட்டிக்கு இன்னும் கொழந்த கூட பொறக்கல. சின்ன வயசு.. மான ரோசம் இருக்காதா?
ஒரு நாள் பொங்கியிருக்கா.. “நான் தருமராஜா பொண்டாட்டி.. உங்களுக்கா பொண்டாட்டி..? என் மேல கை வெக்க நீங்க யாரு?
கௌரி பாட்டி பயந்த சுபாவம். நான் பாத்திருக்கேன். அதிர பேசத் தெரியாது. சுள்ளுன்னு கத்தத் தெரியாது. அவளால முடியல.. பேசிட்டா. காட்டு ராஜாக் கூட்டம் வேட்டையாடுது. கௌரிப் பாட்டிக்கு அப்படி ஒரு அடி. ரத்தம் கசியுது. அதுக்கப்புறம் தெனமும் நரகம்தான். நாள் தவறாம கொடுமைதான்.
வாரத்தில ஒரு நாள் தருமராஜா வீட்ல இருப்பாரு. அன்னைக்கு சபை நடக்கும். அது தரும ராஜா சபை. வரவு செலவு வந்தது போனது குடும்ப விவகாரம் எல்லாம் பேசுவாங்க.
உங்க தம்பிங்க கொடுமை பண்றாங்க.. என்னால முடியலன்னு பாட்டி முறையிட்டு அழுதிருக்கலாம். தாத்தா காப்பாத்தியிருப்பாரு. ஆனா கௌரி பாட்டி பண்ணல. தரும ராஜா சபையில ஒரு சட்டம் இருக்கு. வீட்டு விவகாரத்த வெளிய சொல்லக் கூடாது. உனக்குள்ள வெச்சிக்க.. குழிதோண்டி பொதைச்சிக்க. உசிரே போனாலும் குடும்ப மானத்த காப்பாத்து. கௌரிப் பாட்டி வாய பூட்டியாச்சி. ஒண்ணும் சொல்லல.
சாமியோ மனுசனோ பூமியில பொறந்துட்டா எல்லாருக்கும் கஷ்டம். ராமனுக்கும் கஷ்டம், பாண்டவருக்கும் கஷ்டம். சீதைக்கும் கஷ்டம், பாஞ்சாலிக்கும் கஷ்டம். உலகத்துக்கு ஒரே ராமாயணம் ஒரே பாரதம். ஆனா, தரும ராஜா சபையில ஒவ்வொரு நாளும், நாலு மகாபாரதம் எட்டு ராமாயணம்.
வீட்டுக்குள்ள மூணு ராஜாங்க. ராணி ஒண்ணு. அடிச்சி துவைக்கிறாங்க. வெளிய சொன்னா வெக்கக் கேடு. அதுக்கும் அடி. நான் தருமராஜா பொண்டாட்டி. அதுக்கும் அடி. பாட்டி உள்ளுக்குள்ள புழுங்கறா.. தனியா கெடந்து குமையுறா. கேக்க நாதியில்ல. அப்பா அம்மா யாருமில்ல. பாட்டி அனாதை. வாயில்லா பூச்சி.. வதைக்கறாங்க. மூணு கொழந்தை பொறந்தாச்சி. அப்பவும் கொடுமைதான்.
சுமைதாங்கி கல்லுன்னாலும் எத்தனை நாள் பாரம் தாங்கும். கௌரிப் பாட்டிக்கு பைத்தியமே பிடிச்சிடுச்சி. வெறி பிடிச்சி கத்தறா. சட்டி பானை உடைக்கறா. ஏ தருமராஜாவே உங்க தம்பிங்க என்ன கொடுமை பண்றாங்கன்னு அப்பவும் சொல்லல. வாயப் பூட்டிக்க. குடும்ப மானத்த காப்பாத்து. இது தரும ராஜா சபை.
கௌரி பாட்டி, பித்து பிடிச்சி, மாடியில உக்காந்துட்டா. யாரோடயும் பேசறதில்ல.. கண்ணெடுத்து பாக்கறதில்ல.. தனியா கெடந்து தவம் பண்றா. தாத்தாக்கு பாட்டின்னா உசிறு. முடிஞ்ச வரைக்கும் பாத்தாரு. வைத்தியமும் பண்ணாரு. நெலமை சரியாகல. பிள்ளைங்கல பாத்துக்க அம்மா வேணுமே. தீர யோசிச்சி தாயம்மா பாட்டிய தரும ராஜா ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டாரு.
தாயம்மா பாட்டி பிள்ளைகள பாத்துக்கிட்டாங்க. கூடவே பாட்டியவும் பாத்துகிட்டாங்க. தாயம்மா பாட்டி குணத்தில தங்கம். கோவத்தில சிங்கம்.  தரும ராஜா தம்பிங்க வழக்கம் போல ஆம்பிள்ளை பவிச காட்டறாங்க. தாயம்மா பாட்டி கொதிச்செழுந்தா வீடு தாங்காது. ராஜாவும் பாக்க மாட்டா. மந்திரியும் பாக்க மாட்டா. கோயிந்த ராஜா கன்னத்தில ஒங்கி ஒரே அறை விழுது. கன்னம் பழுக்குது. வீடே அதிறுது.
“டேய்.. நான் தருமராஜா பொண்டாட்டிடா.. சுண்டு விரல் பட்டாலும் பட்ட கை ஒடம்புல இருக்காது..
தாயம்மா கோவக்காரி. எரிமலை நெருப்பு. குப்பைங்க அண்டாது. மூணு ராஜாங்களும் மிரண்டு போனாங்க. வெளிய சொன்னா வெக்கக் கேடு. சொல்லவும் கூடாது. இது தரும ராஜா சபை. உன் கஷ்டத்த உன்னோட வெச்சிக்க.
அதுக்கப்புறம் மூணு ராஜா ஆட்டமும் முடிவுக்கு வந்தாச்சி. மானம் போயாச்சி. அதிகாரம் போயாச்சி. அண்டிப் பொழைக்க முடியல. தம்பிங்க தங்களுக்கான சொத்தை கலகம் பண்ணி வாங்கிட்டு தனித் தனியா போயிட்டாங்க. தரும ராஜா தனி ஆள் ஆயிட்டாரு.
கொஞ்ச நாள்ல தாத்தா தரும ராஜா காலமாயிட்டாரு. குடும்பத்த யார் பாத்துக்கறது? அத்தை, பெரியப்பா, சித்தப்பா எல்லாமே படிக்கறாங்க. வருமானம் நின்னுபோச்சி. சோத்து பஞ்சம் வந்தாச்சி.  குடும்ப பாரம் அழுத்துது. சுமக்க ஆள் வேணுமே. யார்தான் சுமக்கறது? அதுக்கு அப்பாதான் கெடைச்சாரு.
மளிகைக் கடைய பாத்துக்க. குடும்பத்த காப்பாத்து. அன்னையில இருந்து அப்பாதான் எல்லாமே. அவர் உழைப்பிலதான் குடும்பமே. அவர்தான் குடும்பத்தையும் பாத்துகிட்டு உடன் பிறந்ததுகளையும் படிக்க வெச்சாரு.
சித்தப்பா வக்கீல்.. பெரியப்பாவுக்கு தாலூக்காபீஸ் உத்யோகம். அத்தை டீச்சர். எல்லாமே, வீடு வாசல்னு சுய சம்பாத்தியத்தில வசதியா இருக்காங்க. அப்பாதான் பாவம். படிக்கல.. மாடா ஒழைச்சி ஓடாப் போனாரு. அவருக்குன்னு ஒண்ணுமில்ல.. மளிகை கடை. காரை வீடு இது ரெண்டுதான் பூர்வீக சொத்து.  எடுத்துக்கோன்னு விட்டிருக்கலாம்.. படிச்சவங்க பெருந்தன்மை பாகம் கேட்டு முட்டுது.
தெனம் பிரச்சனை. தெனம் சண்டை.. கௌரி பாட்டி தெளிவா இருந்தாங்க. படிச்சவங்களுக்கு வேலை இருக்கு. சொந்தமா வீடிருக்கு.. கடைசி பிள்ளைக்கு என்ன இருக்கு. காரை வீடு இவன சேந்தது. இதான் நியாயம். உறுதியா சொல்லிட்டாங்க. சரியோ தப்போ, எங்க பக்கம் பேசலயா? நீயும் எதிரிதான். தாய்கிட்டயே மல்லுக்கு நிக்கிறாங்க.
நாங்களும் தரும ராஜா வாரிசுங்கதான். சிங்கம் மாதிரி ஆண் பிள்ளைய பெத்து வெச்சிருக்கோம். பரம்பரை வீட்ட ஒரு பொட்டச்சிக்கு குடுத்துட்டு வேடிக்கை பாக்கணுமா?”
அப்பாவுக்கு நான் ஒண்ணுதான். பொட்டச்சிக்கு சொத்து இல்லை. அப்பா ரெண்டாம் தாரத்து பிள்ளை. சக்களத்தி பெற்றது. அதனால் அவருக்கும் உரிமையில்லை. தாயம்மா பாட்டி கலங்கறாங்க. தாலி கட்டி வந்தாலும் சக்களத்திப் பட்டம். சொத்துக்கு தர்ற மரியாதை பெத்ததுக்கு தரல. பெத்த தாயே எதிரி ஆனாங்க. சாகற வரைக்கும் பாக்கல.
கௌரிபாட்டி போயாச்சி. தாயம்மா பாட்டி போயாச்சி. சொந்த பந்தம் போயாச்சி. காலபைரவன் யாரைத்தான் விட்டு வெக்கிறான். எல்லாமே போயாச்சி. ஆனா பத்து வருச பகை மட்டும் முள் செடியா முளைச்சி நிக்குது. சித்தப்பா வக்கீல். நோட்டீஸ் விட்டிருக்காரு. உரிமையுள்ள சொத்து முறைப்படி கெடைக்கலன்னா கோர்ட் இருக்கு. சட்டம் இருக்கு. ஆனா உன்கிட்ட உரிமை கொண்டாட என்ன இருக்கு? ஆதாரம் காட்டு. இல்லன்னா வீட்ட விட்டு வெளிய போ.
“அப்பா.. இந்த வீட்ட சொந்தங்கொண்டாட நம்மகிட்ட என்னப்பா இருக்கு
எல்லாமே பாட்டி பேர்ல இருக்கும்மா. எனக்கப்புறம் இந்த வீடு உன்னதான் சேரும்னு, பாட்டி அப்பவே உயில் எழுதி வெச்சிருந்தாங்க. அத வெச்சி வீட்ட மீட்டுக்கோடான்னு பாட்டி உசிரோட இருந்தப்ப என்கிட்ட சொன்னாங்க. அத என்கிட்ட குடு, என்னைக்கிருந்தாலும் அது என்ன காப்பாத்தும்ன்னு அப்ப எனக்கு கேக்கத் தோணல. பாட்டியும் போயாச்சி. இப்ப உயிலையும் காணல..  உயில் மட்டும் கிடைச்சிட்டா வீட்ட காப்பாத்திடலாம்மா. ஆனா பாட்டி எங்க வெச்சான்னு தெரியலயே..
வீடு முழுக்க தேடியாச்சி. உயில் கெடைச்சாதானே? அது கெடைக்கலன்னா வீட்டை காப்பாத்தறது கஷ்டம். வீடு உன்னதில்ல வெளிய போன்னு கோர்ட்ல தீர்ப்பு வரும். அப்படி வெளிய போக சொல்லிட்டா அப்பாவ வெச்சிட்டு எங்க போறது? அம்மா புலம்பறா.
“அப்பா வீட்ட வித்துடலாம்ப்பா.. அத்தைதான் சொல்லியிருக்காங்கல்ல.. வீட்ட வித்துடுங்க, மூணு பாகம் எங்களுக்கு. ஒரு பாகம் உங்களுக்குன்னு. அத ஏத்துக்கலாம்ப்பா. வித்து வர்ற காசுல எங்கயாவது ஒரு குடிசை போட்டு உக்காந்துடலாம். இதுக்கு மேல போராட முடியாதுப்பா.
வாழ்ந்த வீட்ட விக்கிறதா? அப்பாவுக்கு மனசே இல்ல. ஆனாலும் வேறு வழியும் இல்ல. அப்பாவும் சம்மதிக்கிறார். “சரிம்மா... தருமராஜா வீடு அந்நியனுக்கு சொந்தம்னு சொவத்தில எழுதியிந்தா யாரால மாத்த முடியும். வித்துத் தொலைச்சிடலாம்..
இனி வீடு எங்களுக்கில்லை. ஆள் பிடித்து விலை பேசி முன் பணம் கொடுத்தாச்சி. மூன்று மாதத்தில் கிரயம். நான் மாடியில் உட்கார்ந்து அழுகிறேன். தருமராஜா சபையில் பெண்கள்ன்னா அழணும். அப்படிதான் எழுதி வெச்சிருக்கு. சத்தமில்லாமல் அழுகிறேன். துக்கம் தீர அழுகிறேன். அப்போது, மேலே புறா பறக்கும் சடசடப்பு கேட்கிறது. மேலே பார்க்கிறேன். அங்கே வானத்தில், நான் வளர்த்த பச்சை பறா வட்டமடிக்கிறது. இது இன்னும் காட்டுக்கு போகலையா? இங்க என்ன பண்ணுது?
அது மாடியில் உட்கார்ந்து அலகை தேய்க்கிறது. ராஜநடை நடக்கிறது. பிறகு, அரசமரம் முளைத்த சுவற்றுப் பிளவிற்குள் போகிறது. அஞ்செட்டி காட்டுப் புறா அங்கே என்னதான் செய்கிறது. நான் ஓடிச் சென்று சுவற்றுப் பிளவில் பார்க்கிறேன். அங்கே.. நான் கண்ட காட்சி..
“அப்பா இங்க வாங்களேன்.. நான் பரபரப்பில் கத்துகிறேன்.
அப்பாவுக்கு இப்போதும் நடப்பது கஷ்டம்தான். சிரமப்பட்டு அழைத்து  வந்து அப்பாவுக்கு காட்டுகிறேன்.
“அங்க என்னதாம்மா இருக்கு?
“நீங்களே பாருங்கப்பா.
அங்கே.. சுவற்றில் ஒரு விரிசல்.. ஒரு கல் பேந்திருக்கு. அதில் அரசமரம் முளைத்திருக்கிறது. சுவற்றின் பிளவில் பச்சைப் புறா கூடு. அதில் இரண்டு குஞ்சுகள். அப்பா புறாக் கூட்டையும், குஞ்சையும் அதிசயமாய் பார்க்கிறார்.
காட்டில் மட்டுமே வசிக்கும் பச்சைப் புறா இங்கே கூடு கட்டி குஞ்சு பொரித்திருக்கிறது. கத்தியை கீழே வைத்த எங்களின் அன்பு அதற்கு பிடித்துப் போனதா? நாய் பூனை இருக்குமிடத்தில் பச்சைப் புறா முட்டையிட்டு குஞ்சு பொரிக்காது என்று வேட்டைக்காரன் சொன்னது பொய்த்துவிட்டது,  அன்பானவர்கள் உறவாகக் கிடைத்தால் துன்பத்திற்கு மத்தியிலும் வாழமுடியுமா? புறாவையும் குஞ்சையும் பார்க்க எனக்கே நம்பிக்கை வருகிறது,
“அப்பா.. இந்த வீட்ட விக்க வேணாம்ப்பா.. நாமளே வெச்சிக்கலாம்
“என்னம்மா இது.. ஒரு புறா கூடு கட்டி குஞ்சி பொரிச்சிருக்கு.. அத பாத்துட்டு, நம்மாளயும் ஜெயிக்க முடியும்னு சிறுபிள்ளைத்தனமா நம்பறீயா..
“அப்படி இல்லப்பா. நான் ஒண்ணும் கொழந்தை இல்ல.. என் கையில என்ன இருக்குன்னு பாருங்க
“என்னம்மா அது.?
“கௌரி பாட்டியோட வெத்தளைப் பெட்டிப்பா. அதுக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியுமா? இத்தனை நாள் நாம தேடிட்டிருந்தமே அந்த உயில் இருக்குப்பா.
உயிலா..?.
“ஆமாப்பா.. வெத்தளை பெட்டியில பத்திரமா வெச்சி பாட்டி சுவத்தில அத பத்திரமா மறைச்சி வெச்சிருக்காங்க.. புறா புண்ணியத்தில உயிர் இப்ப கெடைச்சிடுச்சி
“அதுல என்ன எழுதியிருக்கு படிம்மா
“அப்பவே படிச்சிட்டேன்ம்ப்பா.. வீடு நமக்குதான் சொந்தம்னு பாட்டி எழுதியிருக்காங்க. நமக்கு இது ஒண்ணே போதும்ப்பா. வீட்ட மீட்றலாம். நம்மள எப்படியெல்லாம் கதறவிட்டாங்க. வீட்ட விட்டு தொரத்த பாத்தாங்க. அவங்க அட்டகாசத்துக்கு முடிவு கட்ட நமக்கு துருப்புச் சீட்டு கிடைச்சிருக்குப்பா. ஆனா அப்பா.. இதுல ஒரு சின்ன குழப்பம்?
“என்னம்மா குழப்பம்..?
“அத்தை, பெரியப்பா சித்தப்பாக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லன்னு எழுதியிருக்கு. ஆனா அப்பா பேர்லாம் தப்பா போட்டிருக்குப்பா. படிக்கறேன் கேளுங்க..
“அத்தை பேர் மல்லிகா. ஆனா தந்தை பெயர் தங்கராஜான்னு போட்டிருக்கு. பெரியப்பா செல்லமுத்து. தகப்பன் பெயர் கோயிந்த ராஜான்னு போட்டிருக்கு. சித்தப்பா சுரேஷ். தகப்பன் பெயர் சின்ன ராஜான்னு போட்டிருக்கு. இதுக்கு என்னப்பா அர்த்தம்? அத்தை சித்தப்பா பெரியப்பா எல்லாருக்கும் தருமராஜாதான் அப்பா. ஆனா பேர ஏம்ப்பா மாத்தி போட்டிருக்கு. தவறுதலா எழுதிட்டாங்களா?
நான் சொன்னதை கேட்டு அப்பா முகம் இருண்டுவிட்டது. பழங்கதை நினைவு அவரை படுத்தியிருக்க வேண்டும். பேச்சற்று நிற்கிறார். பெருமூச்சு விடுகிறார். அவர் கண்கள் கலங்குகிறது.
 “என்னாச்சிப்பா.. அத்தை, பெரியப்பா, சித்தப்பால்லாம் ஒரு தாய்க்கு பொறந்தவங்க. ஆனா அப்பா பேர் மட்டும் மூணு. எப்படிப்பா? பாட்டி தப்பானவங்களா?
“இல்லம்மா.. பாட்டிய தப்பா சொல்லாத. அவ துர்பாக்கியவதிம்மா. சூழ்நிலைக் கைதி. சந்தர்ப்பவசத்தால எதிரிகளுக்கு இறையாயிருக்கா.
என்னப்பா சொல்றீங்க?“
“ஒருமுறை, இதே மாடிமேல தனியா உக்காந்து தலைய விரிச்சிப்போட்டு அவ அழுதிட்டிருந்தாம்மா. ஏன் அழறம்மான்னு கேட்டேன்.. அதுக்கு பாட்டி
அப்பா, சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தி, மீதியை சொல்வதா வேண்டாமா என்று தயங்குகிறார்.
“சொல்லுங்கப்பா. பாட்டி என்ன சொன்னாங்க?
“நான் தருமராஜா சபையில துரௌபதியா வாக்கப்பட்டவடான்னு சொல்லி கதறி அழுதாம்மா. அதோட அர்த்தம் அப்ப எனக்கு புரியல. இப்பதாம்மா புரியுது.
“துரௌபதின்னா யாருப்பா?
“அவ துரௌபதிம்மா. பாரதக் கதையில அவள பாஞ்சாலின்னு சொல்வாங்க. அஞ்சு புருசன்களுக்கு ஒரே பொண்டாட்டியா இருக்கணுன்னு சபிக்கப்பட்டவ. நம்ம கௌரிப் பாட்டியும் தரும ராஜா சபையில பாஞ்சாலியா இருந்திருக்காம்மா. துரௌபதியா செத்திருக்கா.
அப்பா கண்கலங்குகிறார். அம்மா, பாட்டியின் கதை கேட்டு மிரண்டு போய் நிற்கிறாள். எனக்கு பேச்சே வரவில்லை. இது என்ன கொடுமை. கௌரிப் பாட்டிக்கு நடந்தது அநியாயமில்லை. மானக் கேடு. பச்சைப் படுகொலை. உயிரெடுக்காமல் கொன்றிருக்கிறார்கள். கௌரிப் பாட்டி முள்மீது படுத்து, நெருப்பில் உயிர் தரித்திருக்கிறாள்.
“அப்பா.. இதென்ன கொடுமை. வீட்டுக்குள்ள வெச்சி பாட்டிய ஆள் ஆளுக்கு..
அதெல்லாம் பேச வேணாம்மா. பாட்டியோட துக்கம் அவளோட முடியட்டும். குடும்ப ரகசியத்த வெளிய சொல்லக் கூடாதுங்கறது தரும ராஜா சபையோட கட்டுப்பாடும்மா. பாட்டி அதை சாகற வரைக்கும் மீறல. நமளும் மீற வேணாம்.
சரிப்பா.. இப்ப என்ன பண்ணலாம்? பேர் தப்பாருந்தாலும், இதுல பாட்டியோட கைரேகை இருக்கு. இந்த உயில்படி பாத்தா, தரும ராஜா தாத்தாவுக்கு நீங்க ஒருத்தர்தான்ப்பா வாரிசு. அத்தை, சித்தப்பா, பெரியப்பா யாருக்கும் எந்த உரிமையும் இல்ல. அவங்க கோர்ட்டுக்கே போனாலும், நீங்க  தரும ராஜாவுக்கு பிள்ளைங்களே இல்ல, வாரிசும் இல்ல, வீட்டுமேல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லன்னு உயில காட்டி அத நிரூபிச்சிட்டா அவங்க செத்துருவாங்கப்பா..
வேண்டாம்மா.. பாட்டி என் மேல இக்கிற பிரியத்தில, எனக்கு ஒரு நல்லது பண்ணனுங்கற ஆதங்கத்தில உயில எழுதிட்டாங்க. ரகசியத்த ஒடைச்சிட்டாங்க. பூர்வீக சொத்தா, ஒரு தாயோட கௌரவமா எது முக்கியம்னு கேட்டா ஒரு தாயோட மானம்தாம்மா முக்கியம். நாம உயில வெச்சி ஆதாயம் தேட வேணாம். அத கிழிச்சி போட்றும்மா.
எனக்கும் அப்பா சொன்னதே சரியென்று பட்டது. சொத்தை விட ஒரு தாயின் மானம்தான் பெரிது. சித்தப்பா, பெரியப்பாவை வரவைத்து வீட்டு பத்திரத்தை ஒப்படைத்து மொத்தத்தையும் எடுத்துக்கச் சொல்லிடலாம் என்று முடிவு செய்து ஆள் விட்டு வரவைத்தாயிற்று. மூன்று பேர் முகத்திலும் அப்படி ஒரு சந்தோசம். அவர்கள் ஜெயித்துவிட்டார்கள். வன்மம் சிரிப்பாய் சிரிக்கிறது.
“என்னாச்சிடி உன் அப்பாவுக்கு? கோர்ட்ல கேஸ் போட்டா, ஜெயிக்க முடியாதுங்கற உண்மை தெரிஞ்சி பின் வாங்கிட்டாரா? தோத்துடுவோம்னு பயம் வந்துடிச்சா? இது எங்க சொத்துடி. நாங்க தருமராஜா வாரிசுங்க. வீடு எங்களத்தானே சேரும். அத்தை கொத்திக் கிழிக்கிறாள்.
“அத்தே.. நாங்க ஒண்ணும் தோத்துப் போகல. என் அப்பா தரும ராஜாவோட வாரிசு. தரும ராஜா வாரிசுக்கு கெடுத்து பழக்கமில்ல. கொடுத்துதான் பழக்கம். அப்பா என்கிட்ட சொன்னத சபை நடுவே சொல்லிட்டேன். எல்லாத்தையும் எடுத்துக்கங்க..
அப்பா தருமராஜா சபையில் உட்கார்ந்திருக்க, நான் முடிவை சொல்லிவிட்டேன். அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை. தரும ராஜா சபையில ஒரு சட்டம் இருக்கிறது. வீட்டு விவகாரத்த வெளிய சொல்லத. உன்னோட கஷ்டத்த உனக்குள்ள வெச்சிக்க. குழிதோண்டி பொதைச்சிக்க. உசிரே போனாலும் குடும்ப மானத்த காப்பாத்து. நானும் அப்பாவும் அந்த முடிவோடுதான் வீட்டை விட்டுக்கொடுத்தோம். தரும ராஜா சபையில் ஒரு பெண் துரௌபதியாய் வாழ்ந்த கதை எங்களோடு முடிய வேண்டும். இந்தக் கதையை நீங்களும் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.
முற்றும்.


No comments: