Saturday, November 30, 2019

வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 4


                மின்சாரம் வந்த நாள் பற்றியோகிணறு வெட்டித் தந்த ஈஸ்வரன் பற்றியோ முற்றும் முழுசுமாக தெரியாதது போலவே நெலிகத்தின் முதல் தையல்காரன் யார் என்ற விசயமும் நெலிகத்தாருக்கு தெரியவில்லை. மரப்பட்டைகளை உடுத்திய பின்நெய்யப்பட்ட உடைகளை உடுத்த ஆரம்பித்த வித்தை அங்கு யார் கொண்டு வந்தார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால்உத்தாண்டி என்ற தையல்காரனைப் பற்றியும் உத்தாண்டியின் அம்மாவைப் பற்றியும் நெலிகத்தில் சிலபேருக்கு கொஞ்சமாக விசயம் தெரிந்திருந்தது.

வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 3





                சுடுகாட்டுக்கு நடுராத்திரியில் போய் அர்த்த சாம பூசைகள் செய்து பேய், பிசாசுகுரளிரத்தக்காட்டேறிபோன்றவற்றை தன் கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி பிறகு பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை போன்றவற்றை தீத்துவிடுவதால் சூராதி சூரன் என்று பெயர் எடுத்த தாத்தாவுக்கு பேரனாகப் பிறந்தவன் சாம்பமூர்த்தி. அவன் இப்பொழுது அப்படி எதுவும் வினோத பூசைகளை தொப்பூர் சுடுகாட்டுக்குப் போய் செய்வதில்லை. காரணம் சுடுகாட்டு பயம் ஊர் மக்களுக்கு சுத்தமாக இல்லாமல் போய்இப்பொழுது சுடுகாட்டுக்கு நடுவிலேயே நான்கைந்து வீடுகள் கட்டி குடும்பமாக குடியிருக்க ஆரம்பித்து விட்டார்கள். நள்ளிரவில் பிணங்கள் எரிவதை சிறுநீர் கழிக்க வரும் சிறுபையன்களும் தகிறியமாகப் பார்த்துவிட்டு கெட்ட கனவுகள் இல்லாமல் சுடுகாட்டுக்கு நடுவீட்டில் தூங்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். சுடுகாட்டில் கொல்லிவாய்ப் பேய், குட்டை முனி போன்றவை இருக்காது என்று ஊர் ஜனங்களுக்கு அத்துப்படியாக தெரிந்துவிட்டது. அதுவும் இல்லாமல் இப்பொழுது செல்போனும், கம்ப்யூட்டரும் வைத்திருக்கும் ஒரு நவீன யந்திர மந்திர தந்திர நிபுணனாக இருக்கும் பிரபலஸ்தன் போயும் போயும் சுடுகாட்டு தலைச்சான் பிள்ளையின் கபாலத்து மை எடுத்து வெற்றிலையில் தடவி வித்தைக்காட்டி காசு சம்பாதிப்பதை அவமானம் என்றும் நினைத்தான்.

வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 2





                நெலிகம் கிராமம் தோன்றி எத்தனை வருசங்கள் ஆயிற்றுஅங்கு மனிதர்கள் துணி உடுத்துவதை எப்பொழுதிலிருந்து ஆரம்பித்தார்கள்உடல் மறைக்கும் நாகரீகம் தோன்றி எத்தனை வருசம் ஆயிற்று என்பதுமின்சாரம் வந்த நாள் அறியப்படாதது போலவே அறியப்படாத சங்கதியாக ஊரில் இருந்தது. அதே சமயம் நெலிகத்தில் இப்பொழுது உயிரோடிருப்பவர்களின் நினைவுக்கு குழப்பமற்று தெளிவாகத் தெரிந்த வரையில்காலாதி காலமாக ஊருக்குள் யாரும் உடையில்லாமல் நடமாடியதாக பேச்சு வழக்கில்கூட கதைகள் கிடையாது. இரவின் கண் தெரியாத வீட்டுச் சுவற்றுக்குள்ளும்தென்னை ஓலையின் துவாரம் மிகுந்த குளியல் தடுக்குக்குள்ளும்நடக்க முடியாத நோயாளியின் படுக்கை மீதும் மட்டுமே நிர்வாணமாக சில மனுஷ மனுஷிகள் நெலிகத்தில் இருந்தார்களேயன்றி குமரனைப் போல பலபேர் முன்னிலையில் பட்டப் பகலில் நிர்வாணமாக யாரும் அலறியபடி அத்தனை வேகமாக ஓடியதே கிடையாது. அந்தக் காட்சியை இன்றைக்குத்தான் நெலிகம் மண் கண்டிருக்கிறது.

வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 1


                கடூர்க்காரன் அதியமானோடும் அவன் ஒரு மூதாட்டிக்கு கொடுத்த சாகாப் பழம் நெல்லியோடும் தொடர்புடையது போலத் தோற்றம் கொண்ட பெயரை உடைய அந்த ஊருக்கு மின்சாரம் வெள்ளைக்காரன் நாட்டை விட்டு ஓட்டம் எடுப்பதற்கு முன்பே வந்ததாக பாவடித் தெரு டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கிழவர்கள் வெகுகாலம் பேசியபடி இருந்தார்கள். என்றாலும் திட்டவட்டமாய் மின்சாரம் வந்த அந்த நாள் யாருக்கும் தெரியாமல் இருந்தது. அது தெரிந்து ஆகப்போவதென்ன என்று அசட்டு சோம்பேறித்தனம் அனேகருக்கு இருந்ததால் அந்த முக்கிய நாள் நெலிகத்து சரித்திரத்தில் காணாமலே போயிருந்தது. அதுவுமில்லாமல் மின்சாரம் வந்த நாளை பிரயத்தனப்பட்டு அறிந்து அந்த சரித்திரத்தை பெருமாள் கோயிலின் சிதைந்த கல்சுவற்றின் கல்வெட்டாய் வெட்டும் ஆர்வத்தில் யாரும் அந்த ஊரில் கிடையாது.

வைத்தியனின் கடைசி எருமை

                                                
                ங்கார ரூபத்துடன் ஓங்காரமாய் விழி உருட்டி ஓங்காளியம்மன் ஒரு சின்ன கண்ணாடிச் சட்டத்திற்குள் அழகாய் நின்றாள். அந்த ஓங்காளியம்மன் முன் மண்டியிட்டு வேண்டிய கறுத்த நிறத்துக்காரனின் பெயர் ஓங்காளியப்பன். அவனுடைய பாட்டி பெயரும் ஓங்காளியம்மா தான். குலதெய்வத்தின் பெயரை வழிவழியாய் வைத்துக்கொண்டு பரம்பரையின் கொடித் தடமாய் வேரோடிய ஓங்காளியப்பனுக்கு ஓங்காளியம்மாவின் மேல் (பாட்டி ஓங்காளியம்மா இல்லை, சாமி ஓங்காளியம்மா) அப்படி ஒரு நம்பிக்கை!

கூர்மையான பற்கள். - ஆபத்தும் பராமரிப்பும்.



முன்பே சொல்லிவிடுகிறேன். இது நிச்சயமாக  பற்கள் பற்றிய மருத்துவக் குறிப்பு அல்ல. என்னிடம் கொஞ்சம் உப்பு மற்றும் கோபால் பல்பொடி மட்டுமே இருக்கிறது. பற்களை பராமரிக்க அவை போதுமானதல்ல. கூர்மையான பற்களால் அவதிப்படுகிறவர்கள் நல்லதொரு பல் மருத்துவரை அனுகுவதே நல்லது. 

            பற்களோடு தொடர்பில்லை என்றால் இந்தத் தலைப்பு எதற்காக?

Saturday, November 2, 2019

வியாழன் மறுவீடு புகுதல் – சில பரிகார விளக்கங்கள்.


வெளியே காக்-காவென்று ஒரே சத்தம். இன்னும் பொழுது விடியவில்லை. ஜன்னல் வழியாகத் தெரிந்த வானம் ஒரே புகைமூட்டமாக இருக்கிறது. அந்தக்காலத்தில் ஒரு பழக்கம் உண்டு. தூங்கி எழுந்ததும் முதல் காரியமாக தன்முகத்தைத் தானே பார்த்துக்கொள்வார்கள். சிறிய கண்ணாடியில்.. அன்றைய நாளை இனிய நாளாகத் துவங்குகிறார்களாம். தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல இதுவும் தொட்டுத் தொடரும் பாரம்பரியமானதொரு மூட நம்பிக்கைதான். கண்ணாடியில் தெரிவது கடவுள் இல்லை. அது ஒரு மனித முகம். தூங்கி வழிகிற அசட்டு முகம். அதில் நல்லதும் கெட்டதும் எழுதப்பட்டிருக்காது. வாயைப் பிளந்துகொண்டு எச்சில் வழிய தூங்கும் சிலருக்கு கடைவாய் ஓரத்தில் யானைத் தந்தம் அளவுக்கு வெள்ளைக் கோடுகள் வேண்டுமானால் முளைத்திருக்கலாம். அந்த முகத்தில் வேறு எந்த அதிசயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் முகத்தைப் பார்த்துக்கொள்வார்கள்.