Thursday, August 18, 2016

வயல் பூதம்.


கனவில்லாத நிம்மதியான உறக்கம் குழந்தைகளுக்குத்தான் வரும். கனகு மீசை பருவத்து இளைஞன். பருவத்திற்குண்டானபடி அவன் துர்சொப்பனங்கள் காண்பதில்லை. தலையணையில் தலை வைத்தால் கண்களில் தூக்கம் இருக்கும். மூக்கில் சன்னமாய் குரட்டையொலி. நிம்மதியான ஆத்மா. அப்பா அவனுக்கு சைக்கிள் விடக் கற்றுக் கொடுத்ததைப் போலவே தூங்கவும் கற்றுத் தந்திருக்கிறார். அவர் கனகுவின் ஆலமரம். உணவும் அவரே, நிழலும் அவரே!

கண் விழித்ததும் கனகு வெங்கலராஜ பெருமாளை தரிசிப்பான். அது அவன் குலதெய்வம். மனைவியைத் தேடி குதிரையில் சென்ற கடவுள். ஒற்றைக் காலில் உலகலந்த நாயகன். கனகுவின் சட்டைப் பாக்கெட்டில் வெங்கலராஜ பெருமாள் நிரந்தரமாய் இருக்கிறார். தூங்கி எழுந்ததும் முதல் முக்கியமாய் வெந்நீர் வைத்து புகை பறக்கக் குளிப்பான் கனகு. அதன்பிறகு அப்பாவுக்கு தேநீர் போட்டுக் கொடுப்பான். தேநீரென்றால் சாதா ரகமில்லை. தேவாமிர்தத்தின் தங்கையைப் போன்றதொரு பஞ்சாமிர்த ரகம். எல்லோர் கையிலும் விரல் இருக்கிறது, சிலர் விரல்களில் மட்டும் மத்தளம், மிருதங்கம், வீணை, நாதஸ்வரம் என்று நாதம் இருக்கிறது இல்லையா, அப்படி கனகு போடுகிற தேநீரில் மட்டும் வினோத விசேஷம் உண்டு. குடித்தவர்கள் நாக்கு எட்டாக மடித்து சொட்டாங்குச் சத்தத்துடன் சப்பி தேவாமிர்தத்தின் தங்கையை அதிசயிப்பார்கள். ஓயாமல் மனைவியோடு சண்டையாக இருக்கும் சவுரியப்ப வாத்தியார், கனகுவின் தேநீர் பருகிவிட்டு, கண்ணில் கண்ணீரோடு சொல்லியிருக்கிறார், 'கனகு உனக்கு வரப்போற பொண்டாட்டி குடுத்து வெச்சவடா. அவ உன்னோட டீய ஒருவாய் குடிச்சா தினம் ரெண்டு வாட்டி நமஸ்கரிப்பா!"

பொண்டாட்டி என்றதும் கனகு ஜில்லிப்பானான். அவனுக்கு கல்யாண வயசு கிடையாது. இப்பொழுதுதான் கல்லூரி முதலாண்டு. கல்யாணம் எங்கேயோ தூரத்தில் இருக்கிறது. ஆனாலும் ஜிலுஜிலுவாகிவிடுகிறான். பொண்டாட்டி எங்கேயாவது பக்கத்தில் பிறந்திருக்கலாமில்லையா? எம்ராய்டரி போடுகிற நேரத்தில் கனகு கண்ணை போதை வஸ்து உபயோகித்த ஞானிபோல வைத்துக்கொண்டு, பொண்டாட்டி என்றால் என்னவென்று யோசித்துப் பார்த்திருக்கிறான். புத்திக்கு எட்டாத எக்கச்சக்கமான சந்தோஷம்தான் மனைவி என்று கிலுகிலுத்து சிரித்திருக்கிறான். அவன் மனைவியைக் கனவு கண்டபடி போட்டு அழகுபார்த்த எம்ராய்டரியை தீர்மானமான கோணங்களில் உற்றுப்பார்த்த எட்டாவது ஓவிய ஆசிரியர், 'கனகு, உன் குழந்தைதான் ஊர்லையே அழகான உடை போட்ட குழந்தையா இருக்கும். இத்தனை அழகான எம்ராய்டரி ஆம்பளையில ஒரு சோதாப் பயலுக்கும் கிட்டாத அதிர்ஷ்டம்!" என்று சொல்லியிருக்கிறார். குழந்தை என்றதும் மீண்டும் ஒருமுறை சம்மந்தா சந்மந்தமில்லாமல் குதூகலமானான் கனகு. குழந்தையைக் கொஞ்சுகிறான் கனகு! குழந்தையைக் கொஞ்சும்போது தோள்பட்டை வழியாக குழந்தையை எட்டிப் பார்க்கிறாள் மனைவி. அவன் காதறுகே கொஞ்சுகிற இனிமை வார்த்தையில் போதை இருக்கிறதுகனகுவின் எம்ராய்டரியில் எதிர்காலம் பின்னிக்கொண்டிருந்தது. கனகு ஓயார எம்ராய்டரி தச்சன் ஆகிறான்.

கறிகாய் வாங்குகிற இடத்தில் கிழவன்களும், கோயிலுக்கு போன இடத்தில் குருக்களும், கல்யாண வீடுகளில் உறவுக்காரர்களும் எல்லோரும் ஏதாவது ஒன்றின் பொருட்டு, கனகுவின் மனைவியும், அவன் குழந்தைகளும் அதிர்ஷ்டக்காரர்கள் என்றே சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேறு பிழைப்பில்லை என்று அர்த்தமல்ல. அவர்களுக்கு ஜோதிடம் பார்த்து கனகுவின் மனைவி பற்றியே சொல்லித் திரிவது பிழைப்புமல்ல. கனகு என்கிற அமரிக்கையான பையனைப் பார்த்து அவர்கள் உள்மனசுக்குள் தோன்றியதை சந்தோசமாகச் சொல்லிச் செல்கிறார்கள்.

அமரிக்கையான பெண்களை பொதுவாக அம்மாதான் வளர்ப்பார்கள். சில அமெரிக்கையான பையன்களையும் அம்மாக்கள் வளர்ப்பதுண்டு. ஆண் வளர்த்த பிள்ளை அரைத் தத்தேரி என்பார்கள். கனகு என்கிற அமரிக்கையான பையனை வளர்த்தது அப்பா! படிக்கிற பையனுக்கு அறிவியல் வாத்தியாரின் ரசாயணங்களும், கணக்கு வாத்தியாரின் சூத்திரங்களும்தான் தெரியவேண்டும்... சின்ன வயசுப் பெண்களின் ரெட்டை ஜடையும், நாக கன்னிகளின் கண்ணாடித் தொடையும், ஜிகினா கனவு தரும் ஸ்திரிகள் உள்ளுடையும் தெரியவே கூடாது என்று சீயக்காய்த்தூள் பரிசுத்தத்தோடுதான் கனகுவை அப்பா வளர்த்தார். பருவம் வருவதற்கு முன்பே கனகுவின் கல்யாணக் கனவில் சீரியல் லைட்டுகள் மினுக்கி எரிகிறதே! அப்பா குத்து டப்பாங்குத்தா! அப்பாவுக்குத் தெரியாமல் கனகு குட்டைப் பாவாடை சுற்றுகிற கரகாட்டம் பார்க்கிறானா? அப்படியல்ல சேதி. அப்பாவுக்கு தெரியாமல் ஒரு தப்பும் செய்யான் கனகு. அப்பாவேதான் கனகுவின் கல்யாணக் கனவிற்கு யூரியா வைத்து பூச்சிமருந்தும் அடித்தவர்.

அப்பாவின் ஜாதகப்படி அவருக்கு சின்ன வயசுதான் ஆகிறது. ஐம்பது இருந்தால் அதிகம். கனகுவின் கல்யாணம் குறித்து நூற்றுப் பதினாறு வருசத்திற்கு யோசிக்கக் கூடாது என்ற நீண்டநாள் திட்டத்தோடுதான் அவரும் இருந்தார். கல்யாணம் என்று பேச்செடுத்தால் பிள்ளைகள் வரலாற்றுப் புத்தகம் கிழித்து பெண்கள் மீது ராக்கெட் செய்து ஏவிவிடுவார்கள் என்ற அச்சம் காரணம். மகன் உலகப் பெரும் படிப்புக்காரன் ஆகவேண்டும் என்கிற அவரின் தீர்மானமான ஆசை காரணம். ஆனால் அப்பாவை தொங்கவைத்து அடித்தது காலம். நரைமுடி கொண்ட தன் நெஞ்சில் சின்னதாய் வலி வந்ததும் துடித்துப்போனார் அப்பா. அரை வயது ஆண்களுக்கு நெஞ்சில் வலி வந்தால் அடுத்தது எமன் நினைவு வந்துவிடுகிறது. நெஞ்சுவலிக்கு மருத்துவம் பார்த்து சரியாகிப்போன அப்பா, விரக்தியோடும், அவசரத்தோடும் சொன்னது: 'கனகு படிப்பை முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கோ!" அமிர்தாஞ்சன் தடவியபடி அப்பா சொல்வதைக் கேட்ட கனகு, இப்ப என்ன அவசரம் என்று சொல்லி மழுப்பாமல் வெட்கப்பட்டான். ஆக மொத்தத்தில் கனகுவின் கல்யாணத் திருக்கோலம் வெகு பக்கத்தில்தான் இருக்கிறது... ஆனால் அவனுக்கான மனைவி எங்கே இருக்கிறாள்.

கனகு கூடையில் வளர்க்கப்பட்ட கோழி. கன்னிப் பெண்களின் மூக்கு எத்தனை நீளம் என்று இதுவரை அவனுக்குத் தெரியாது. ஐந்தாம் வகுப்புவரை ஒரு ஆசிரமத்தில் இருந்து படித்தான். அது சிறுவர்கள் ஆசிரமம். வயதான பெண்களிடம் ~நேர் நில், ஓய்ந்து நில்!| என்று அங்குதான் ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்டான். பிறகு பெண்களே இல்லாத ஆண்கள் மேநிலைப் பள்ளியில் படித்தான். வாத்தியார்கள் வரும்போது இருக்கிற வேர்வை நாற்றம், டீச்சர்கள் வரும்போது நறுமனமாய் மாறுவதற்கு தலையில் இருக்கிற மல்லிகைப் பூ மட்டும் காரணமல்ல என்று சில பெயில் கேஸ் பெரியவன்கள் பேசுகிற தத்துவத்தை புரியாமல் கேட்டிருக்கிறான் கனகு. பெண்களுக்கு என்று வினோத வாஸம் இயற்கையிலேயே உண்டு (வாசனையை ஒரு பையன் அப்படித்தான் மூச்சு இழுத்தபடி வாஸம் என்று சொன்னான்.) அவர்களின் வாஸனையை முகர்ந்து பார்த்தால் ஏகாம்பரநாதர் கோயில் தேரில் இருக்கிற சில பொம்மைகளைப்போல நாம் ஆனதாய் கனவு வரும் என்று ஏழு குதிரை திமிரோடு இருந்த ஒரு தடியன் சொன்னதைக் கேட்டு கனகு உட்பட அத்தனை பயல்களும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்த ஏகாம்பரநாதரின் தேர் பொம்மைகள் அவ்வளவு யோக்கியமாக இல்லாததே அதற்குக் காரணம். பெண்களின் வாஸம் குறித்து கனவு காண்கிற பையன்களின் பருவம் ஒரு இருண்ட பருவம். பக்கத்து பள்ளியில் வாலிபால் ஆடுகிற நிக்கர் போட்ட பெண்களுக்கு என்ன வாஸம் வரும் என்று நின்று யோசித்துப் பார்த்தால் விளையாட்டு வாத்தியார் முழங்காலில் ரத்தம் வரவைப்பார். வாத்தியார்களின் பிரம்பு பெண் வரும் திசைக்கு எதிர் திசையில் திரும்பி நில் என்று கனகுவிற்கு போதித்திருக்கிறது. கல்லூரி என்பதும் கனகுவிற்கு பயாஸ்கோப் காட்டிவிடவில்லை. வந்து வாய்த்த பேராசிரியர் அங்கயற்கன்னியும், 'சினிமாவுக்கு போகாத கனகு... அதுல வர்ற பொண்ணுங்க டிரெஸ்ஸைப் பாத்தா மனசு நஞ்சாயிடும்" என்று சொல்லியிருக்கிறார். வாசலில் நின்று கோலம் போடுகிற பெண்களைப் பார்த்தால் அப்பா அரை மணி நேரம் ராமாயணக் கதை சொல்வார். அய்யோ, ஏவாள் கடித்த ஆப்பிளைப் பறித்த ஆதாமைப் படைத்த கடவுளே! கனகு என்கிற ஒரு அப்பாவி ஆட்டுக்கு எத்தனை மேய்ப்பர்கள். கனகுவின் பெண் பித்தில்லா நல்லொழுக்கம் என்பது கண்ட கண்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட எழுபத்தியேழு ஆசிரியர்களால் போதிக்கப்பட்டது. அதனால் கனகு துவைத்ததில் சுத்தமான பட்டு.

அதற்காக கனகுவை குரங்குத் தீவின் குள்ளமுனீஸ்வர ஸ்வாமிகள் என்று நினைக்கக் கூடாது. பெண்களைப் பார்த்தால் இதென்ன புளியமரமா என்று கேட்கிற அளவுவுக்கு கனகு தத்தியும் கிடையாது. துணி உலர்த்துகிற, கோயிலுக்கு அலங்காரத்தோடு செல்கிற, கடைவீதியில் ஒய்யாரமாய் அலைகிற, திருவிழாவுக்கு கூட்டமாய் செல்கிற, பேருந்தில் வாசனையோடு வருகிற பெண்களை பார்த்திருக்கிறான். எல்லாம் தள்ளி நின்று பார்த்தப் பெண்கள். இவர்களில் கனகுவின் மனைவி யார்? கனகுவிற்கு குடும்பம், குழந்தை மனைவி என்ற கனவெல்லாம் உண்டில்லையா. அவனுக்கு என்று ஒரு லட்சிய குடும்பமும் உண்டு. அவன் லட்சிய குடும்பத்தில் ஆர்ப்பாட்டமான புருஷனில்லை. அளவுக்கு அதிகமான குழந்தையில்லை. அவன் குடிப்பதுமில்லை புகைப்பதுமில்லை. மனசுக்கு நிறைவாய் வாழவேண்டும்... அதற்கு அமரிக்கையான ஒரு பெண் வேண்டும். கனகுவின் குடும்பக் கனகு இத்தனை எளிமையானது. இந்த கனவு பூர்ணமடைந்ததும் சட்டென்று பானுவின் ஞாகபம்தான் வந்தது கனகுவிற்கு. தாவணி கட்டமாட்டேன் ஜிப் வைத்த ஜீன்ஸ்தான் போடுவேன் என்று அந்த தேவதை பானு அடம் பிடித்தாலும் அவள் உள்ளுக்குள் இருப்பது பாரம்பரிய குடும்ப லட்சணம். 'காதலப் பத்தி நீ என்ன நெனைக்கிறே கனகு?" என்று சாமூண்டீஸ்வரி கோயில் முன்பு குரங்குக்கு பொரிகடலை கொடுத்தபடி பானு கனகுவிடம் ஒருமுறை கேட்டிருக்கிறாள்... வார்த்தைக்குள் இருக்கிற அர்த்தம் விளங்காத அளவுக்கு கனகு வாழைப்பழ குரங்கு கிடையாது. பானுவின் மனசில் கனகு பட்டாம் பூச்சியாய் பறப்பது பளிச்சென்று தெரியவில்லையா? பெண் கூச்சத்தை முடிவுக்கு கொண்டுவருபவனே சுத்த ஆண். பானு பொடி வைத்து பேசினால் கனகு பட்டாசு சத்தத்தோடு அதை வெட்டவெளிச்சமாக்கவேண்டும். கனகு தீர்மானித்தான். பானு என்பவள்தான் என் மனைவி!

கொஞ்சும் அழகுள்ள கொஞ்சம் பெண்கள் கூட்டத்திற்கு நடுவில் ஒரு அதிசயம் உட்கார்ந்திருந்தது. அதிசயம் என்றால் வங்க சமுத்திரத்தில் பிடிக்கப்பட்ட பாதி மீன் உரு கொண்ட மச்சகன்னி என்று நினைக்கக் கூடாது. பெண்களுக்கு மத்தியில் பெரும் சுடராய் மாதாஸ்ரீ உட்கார்ந்திருந்தார். அப்பழுக்கில்லாத மெழுகினால் செய்யப்பட்ட மிருதுவான முகம் மாதாஸ்ரீ ரூப்கலா தேவிக்கு. கவர்ந்திழுக்கிற அவரின் குஜராத்திக் கண்களில் பளிங்குபோன்ற ஜொலிப்பு இருந்தது. யமுனை நதிக்கரையோரம் செய்த தவத்தின் கம்பீரமும், வட இந்திய மென்மையும் அவரின் முகத்தில் தெரிந்தது. அவரைச் சுற்றிலும் தீட்சை பெறும் ஆர்வத்தோடு பெண்கள் கூட்டம் இருந்தது. கூட்டத்தில் இருந்த புதிய பெண் ஒருத்தியை ரூப்கலா தேவி கனிவோடு பார்த்தார். 'சொல் மகளே!"

'பெண்களுக்கு சந்நியாசம் என்பது கிட்டாத ஒன்று என்கிறார்களே, மாத்தாஸ்ரீ!" கேட்டவள் பெயர் மஹாசுவேதா. நாமக்கல் கோழிப்பண்ணை கோடீஸ்வரனின் ஒற்றைத் தமிழ் மகள். அடர்நீல நிறத்தில் ஜீன் பேண்ட்டும், மெல்லிய பஞ்சு சட்டையும் போட்டுக்கொண்டு பேரழகியாய் இருந்தாள்.

மாதாஸ்ரீ அபூர்வ அர்த்தத்தோடு புன்னகைத்தார். 'நாம் இங்கே எந்தப் பெண்ணுக்கும் சந்நியாசம் வழங்கவில்லை மகளே! பெண்கள் வாழவும், வாழ்விக்கவும் பிறந்தவர்கள். ஆண்களின் உலகம் அப்படித்தான் சொல்கிறது, பெண்களுக்கு சந்நியாசம் இல்லை என்று. வாலிபர்கள் பெண்களை சாக்லெட் என்கிறார்கள். சர்க்கரை வியாதி வந்தவர்களோ பெண்களை விஷம் என்கிறார்கள். பெண்கள் இரண்டுமே இல்லை மகளே!. துளிர்க்கும் இலையும், ஜீவிக்கும் வேரும் கொண்ட கரும்பாய் பெண்கள் இருக்கிறார்கள்.” மீண்டும் மாதாஸ்ரீ புன்னகைக்கிறார். கண்கள் ஏழு பிறப்பின் ரகசியத்தை ஊடுருவி நலம் விசாரிக்கிறது. அவர் மஹாசுவேதாவின் கண்களை ஊடுருவிப் பார்த்து கனிவோடு கேட்கிறார்,  “நீ தீட்சை பெற விருப்ப கொண்டு இங்கு வந்திருக்கிறாய் என்று நம்புகிறேன். நான் உன்னை சோதிக்கலாமா?"

கூடியிருந்த பெண்களுக்கு குதூகலமாயிற்று. மாதாஸ்ரீ ஒரு பெண்ணை பரிசோதிக்கிறார் என்றால் அங்கே ஒரு பாடம் போதிக்கப்படுகிறது என்று அர்த்தம். புதிதாக வந்த இன்னொருவள், இன்னும் புதிதாக வந்த இன்னொருவளிடம் குசுகுசுவென்று கேட்டாள், 'தீட்சைன்னா என்ன?" பதில் சொன்னவள் இன்னும் குசுகுசுவென்று, 'மானசீகமா குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிறது"

மாதாஸ்ரீ புன்னகையோடு எல்லோரையும் பார்த்தார். மஹாசுவேதாவிடம் பரிசோதனைக்கான முதல் கேள்வி கேட்டார், 'பெண்ணே நீ சாப்பிடும் சோற்றிலிருந்து ஒரு சோற்றுப் பருக்கை சாக்கடையில் விழுந்தால் அதை நீ என்ன செய்வாய்?"

'அசிங்கம் என்று விடமாட்டேன். ஒரு எறும்போ, ஈயோ, சிறு பூச்சியோ அதை சாப்பிடட்டும் என்று அந்த சோற்றுப் பருக்கையை உலர்ந்த மேட்டில் பத்திரப்படுத்துவேன், மாத்தாஸ்ரீ!"

மாதாஸ்ரீயிடம் மீண்டும் புன்னகை. 'அதீத பெண் மோகமும், அளவற்ற பெண் துவேசமும் கொண்ட ஆண்களும் அழுக்கு நீர் சோற்றுப் பருக்கைக்குச் சமமானவர்கள் மகளே! உலகத்திற்கே அமுது படைக்கிற பெண் ஒரு பருக்கைச் சோற்றையும் வீணாக்க மாட்டாள். தீராத மோகம் விளைவிக்கிற வெறும் நெருப்பு வயல் என்று பெண்களை தூஷிக்கிற, அல்லது மோகிக்கிற ஆண் வெறுக்கப்பட வேண்டியவன் கிடையாது. அவன் மனசுக்குள் ரசவாதம் நிகழ்ந்தால், பெண்களின் அசல் லட்சணம் குறித்தும், பெண்மையின் மேன்மை குறித்தும் அவனைவிட அதிகமாய் யாரும் போதிக்க முடியாது. சந்தர்பங்களால் சீர்கெட்ட அப்படியொரு ஆண்மகனை ரசவாதம் செய்து உருமாற்றி, ஸ்வீகரித்துக் கொண்டுவர முடியுமா உன்னால்?" மாதாஸ்ரீ வசீகரிக்கிற புன்னகையோடு மஹாசுவேதாவிடம் கேட்டார்.

'முடியும்" ஒற்றைச் சொல் கம்பீரமாய் சுவேதா சொன்னாள். சற்றைக்கு முன் குடும்பக்கட்டுபாட்டு சந்தேகம் கேட்ட புதியவளுக்கு மீண்டும் சந்தேகம். குசுகுசுவென்று கேட்டாள்: 'ஸ்வீகரிக்கிறதுன்னா என்ன?"

'ஒரு ஸ்திரி லோலனை நாய் அமுக்குற மாதிரி அமுக்கிட்டு வர்றது. அதாவது புள்ளை புடிச்சி கொண்டார்றது"

'ஸ்திரி லோலன்னா?"

'ஸ்...! மெதுவா கேளு. கொஞ்சம்; டீசன்ட்டா சொல்லனுன்னா, செவ்வாய் கிரகத்துக்கு போனாலும் வுமன்ஸ் காலேஜ் எங்கிருக்குன்னு கரெக்ட்டா கண்டு பிடிக்கிறவன்." பக்கத்தில் நின்ற இன்னொருத்தி 'ஷ்ஷ்... கொஞ்சம் சும்மா இருங்க! பிரச்சனை ஆயிடப் போகுது!" எல்லோரும் ஸ்ஸ்சென்ற அமைதிக்கு வந்து நின்றார்கள். மாதாஸ்ரீ பெருமிதத்தோடு மஹாசுவேதாவை பார்த்தார். மற்றவர்களிடம் பார்வையால் அவள் பெருமையைச் சொன்னார்.

ஸ்வேதா பணிவோடு ஒரு சந்தேகம் கேட்டாள். 'உலகத்தின் பெரும் பெண் போகியை ஸ்வீகரிக்க வெண்டும் என்கிற உங்கள் உத்தரவுக்கு கட்டுப்படுகிறேன். ஆனால் பெண்களை போகப் பொருளாய் நினைக்கிற ஆண்கள் மத்தியில் நான் எப்படிச் செல்ல வேண்டும், மாத்தாஸ்ரீ?"

'சகதியில் நீந்துகிற தங்கநிற மீனைப் பிடிக்க நீ என்ன உபாயம் செய்வாய் மகளே?"

'கலக்கமில்லாமல் சகதியில் குதிப்பேன்"

'அப்படியே செய் மகளே! பெண் பித்தம் மிக்க ரத்தம் கொண்ட ஆண்மகன் தங்கமீனுக்குச் சமமானவன். அப்படியான ஆண்களால், அவர்களின் பிரசங்கத்தால் புதிய பெண் யுகம் தொடங்கப்படவேண்டும். பெண்களின் யுகம் உன்னால் தொடங்கட்டும். சென்றுவா மகளே!" ரூப்கலா தேவி உத்தரவு கொடுக்க, ஒரு உலக மகா பெண் பித்தனைத் தேடிக் கிளம்பினாள், மஹாசுவேதா.
கல்லூரிக்கு போகிற கனகுவிற்கு ஓடுகிற பஸ்செல்லாம் பானுவின் ஞாபகமாக இருந்தது. பானுவிடம் சொல்வதற்கு அவனிடம் ஒரு பயங்கரம் இருக்கிறது. அதை கேட்கிற பானு வெட்கப் பட்டாலும் படலாம், இல்லை ஊர் கூட்டி பஞ்சாயத்து வைத்தாலும் வைக்கலாம். என்ன ஆனாலும் ஞாயிற்றுக் கிழமைக்குள் பானுவிடம் மனசில் உள்ளதை சொல்லிவிடவேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்தான் கனகு.

'கனகு நீ டைப்ரைட்டிங் முடிச்சிட்டா சமயபுரத்தில மொட்டை போடறதா வேண்டியிருக்கேன். வர்ற ஞாயிறு போயிட்டு வந்துடுவோம்!" அப்பா சொல்லியிருக்கிறார். தலையில் மொட்டை போட்டுக்கொண்டு சந்தன மாத்திரை பிடித்திருப்பதாய் கடைக்காரனிடம் சொல்ல முடியும். காதலிக்கப் பிடித்திருப்பதாய் பெண்ணிடம் சொல்ல முடியுமா? அதனால்தான் ஞாயிற்றுக் கிழமைக்குள் சொல்லிவிட உத்தேசம். ஒரு பெண்ணிடம் கனகு பாதரசம் காய்ச்சப்போகிறானா? இது நடக்குமா... உள்நாக்கு வெளித்தள்ளி வேர்வையில் செத்துப்போகிற அளவுக்கு பயங்கரமான சங்கதியாயிற்றே பெண்ணிடம் காதல் சொல்வதென்பது... கனகு அதற்கான மொத்த ஏற்பாட்டையும் கச்சிதமாக செய்திருந்தான்.

நாக்கு உளறக் கூடாது, தொடை நடுங்கக் கூடாது என்று விடியற் காலையிலேயே துர்கா தேவியிடம் வேண்டிக்கொண்டுதான் வந்திருக்கிறான் கனகு. ஆனாலும் ஓடுகிற பேருந்து நடுங்குகிறதா, தன் தொடை நடுங்குகிறதா என்று குழப்பமாய் இருந்தது அவனுக்கு.
இரண்டாவது நிறுத்தத்தில் பானு பஸ் ஏறினாள்.

யாருமே ஆசைப்படுகிறபடி சுமார் ரக  மனைவிக்கான தோற்றம் அவளுக்கு. கனகுவின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள். அவளிடம் சோப்பு வாசம். கனகு போடும் அதே சோப்பு.

பானு கொஞ்சம் குங்குமம் வைத்த குத்துவிளக்கு ரகம். சாகிற கிழவனாக இருந்தாலும் அவன் பக்கத்தில் உட்காரமாட்டாள். கல்யாணமான பரம யோக்கியனாக இருந்தாலும் பக்கத்தில் உட்காருவதற்கு அனுமதி தரமாட்டாள். பானுவின் பக்கத்தில் உட்காருகிற ஒரே யோக்கியன் கனகு மட்டும்தான். 'ஏன் பானு என்னை மட்டும்?"

'உன் கண்ணுல ஒரு பரிசுத்தம் தெரியுது கனகு. உன்னோட முழங்கை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!"

பானுவின் வார்த்தைக்காக கனகு பெருமிதத்தில் மிதந்தான். ஒரு ஆணை ஒரு பெண் எப்பொழுது நம்புகிறாள்? எதனால் நம்புகிறாள்? ஒரு நைட்டி எடுக்கணும் கூட வருவியா கனகு! கோயிலுக்கு போகும் போது நானும் வர்றேன் கனகு! அவனை நம்பி பானு கோவிலுக்கு வருவாள். எந்த ஆணின் பக்கத்தில் ஒரு பெண் பாதுகாப்பாய் உணர்கிறாளோ அந்த ஆண்மகனிடம் அவளுக்கு காதலிருக்கும். இந்த இடத்தில்தான் கனகு அப்பாவை நினைத்து உருகினான்.

எத்தனை அற்புதமாய், பரிசுத்தமாய் வளர்த்திருக்கிறார் மகனை! கன்னிப் பெண்கள் நம்பும் பரிசுத்தன். அதனால்தான் பானு போன்ற பதிவிசான, அமரிக்கையான, அடக்கமான பெண் அவன் பக்கத்தில் உட்காருகிறாள். எந்தப் பெண்ணையும் இத்தனை அருகில் கனகு பார்த்தது கிடையாது. 'பாக்கற பொண்ணுங்க எல்லாம் உன் தங்கச்சி கனகு!" அப்பா சொன்ன அறிவுரை அதற்குக் காரணம். அப்பாவுக்கு நடுத் தெருவில் சிலை வைத்து நமஸ்கரித்தால் அது தப்பே இல்லை என்று பெரியமனுசனாய் யோசித்தான் கனகு. பானுவின் வாஸம்... ச்சே.. தேர் பொம்மை குறித்து கல்யாணத்திற்கு பிறகுதான் யோசிக்க வேண்டும். தங்கச் செயின் கடிக்கிற பானுவின் தேவதைப் பரிமானத்தை ரகசியமாய் (காக்கைப் பார்வை என்றாலும் தவறில்லை) பார்த்தான் கனகு. தலைதாழ்ந்து, கூந்தல் பறக்க, மோகினியாய் இருந்த பானு, 'கனகு எனக்காக ஒண்ணு செய்வியா நீ?" என்று விரல் நகம் பார்த்தபடி மெல்லக் கேட்டாள்.

'சொல்லு பானு... கண்டிப்பா செய்யறேன்!" புதிய மனைவிக்கு ஏவல் செய்ய காத்திருக்கிற புருசனின் ஆர்வத்தில் கூவினான் கனகு.

'இல்ல கனகு.. எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம். அவன்கிட்ட நீ சொல்லணும்... என்னை மாப்பிள்ளை பார்க்க வந்துகிட்டு இருக்காங்க, சண்டை போதும், சமாதானமாகிடலாம்னு சொல்லணும். அவன கல்யாணத்துக்கு பேசச் சொல்லு. அவன் யாருன்னு கேக்க மாட்டியா கனகு? உனக்கு தெரிஞ்சவன்தான்.. துரைசாமி! தெரியும்தானே?"

பானு சொன்னதைக் கேட்டதும் கனகு ஓடுகிற பேருந்தின் தற்காலிக கண்டக்டராகி பீதியின் உச்சத்தில் ஓங்கி பிகில் ஊதினான். ஓடிக்கொண்டிருந்த பேருந்து நின்றது. வீசிக்கொண்டிருந்த காற்று நின்றது. சுற்றுகிற உலகம் நின்றது. ஸ்திரமாக இருந்த அவன் தலை சுற்ற ஆரம்பித்தது. துரைசாமியா? அவனுக்கும் இவளுக்கும் நடுவில் இப்பொழுது நான் யார்? என் வேலை என்ன? துரைசாமியா? அவனா? அவன் பழுத்த அயோக்கியர்கள் மத்தியில் ஒரு புழுத்த அயோக்கியன். அவனிடம் பானு என்னத்தைக் கண்டாள்? அவனைப் பற்றி பானுவிற்கு தெரிந்த கருமாந்திரம் என்ன? பெண்களைப் பற்றிய நல்ல மொழி அவனிடம் இல்லை. அவன் சொல்கிற ~ஏழு பெண் குதிரைகளின் கதை| ஆபாசத்தின் உச்சம். அவன் அகராதியில் இருக்கிற பெண்களுக்கு வஸ்திரமே கிடையாது. அவனைப் போயா இந்த பானு... உயரமாய் இருப்பவனை உத்தமனென்று நினைத்துவிட்டாளா பானு. பதறினான் கனகு.

'பானூஊ.. அவன் மோசம் பானு!” தெரிந்த பெண்ணை குப்பைக் குழியில் விழாமல் தடுக்கவேண்டிய பதற்றம் இருந்தது கனகு கத்தலில். “அவன் வேணாம் பானு. வேற நல்ல பையன், என்னைய மாதிரி ஒரு பையன் உனக்கு கிடைப்பான்... உங்கம்மா அவசரபட்டா... வேணுன்னா எங்கப்பாகிட்ட பேசலாம்.. அவர் ஒத்துப்பாரு." கனகு சிந்தாமல் சிதறாமல் சொல்லி முடித்தான். பெண் அருளால் திக்குவாய் திருவாய் ஆன வித்தை இது!

பானு திகிலோடு கனகுவை நிமிர்ந்து பார்த்தாள். 'கனகு... நீயா கனகு! பக்கத்தில உட்கார்ந்துக்கோ அண்ணன் மாதிரின்னு அம்மா சொன்னதனாலதானே கனகு நம்பினேன். கோயில்ல வெச்சி எங்கம்மாவ நீயும் அம்மான்னு கூப்பிட்டியே...."

ஒருநாளும் ஒரு பெண்ணின் ஒரு சொல்லும் அறியாத கனகு, பானுவின் பேச்சில் இருந்த உள்ளர்த்தம் புரிந்துகொண்டு துடித்துப்போனான். தள்ளாடி ஓடுகிற டபராப் பேருந்தின் மானசீக டிரைவர் ஆகி அழுத்தமாய் ஹார்ன் அடித்தான். ஊர்வன, நடப்பன, பறப்பன, நிற்பன, நீந்துவன என்று உலகத்தின் சகல ஜீவராசிகளும், உயிரில்லா ஜட ராசிகளும், ஜாதகத்தின் பன்னிரெண்டு ராசிகளும் அவன் காதில் ஹோவென்று ஏக கால ஹார்ன் சத்தம் எழுப்பின. இரு காதையும் மூடிக்கொண்டான் கனகு.

பேருந்து தள்ளாடி நின்றது.

பானு இறங்கி கிழக்கில் நடக்க,
கனகு மேற்கில் நடந்தான்.

~செத்தும் நடக்கறான்டா சீக்கெட்ட சித்தப்பா மகன்!| என்று பங்காளிப் பரதேசி சாராயம் குடித்துவிட்டு உத்தமமாய் சொல்வானே ஒரு வார்த்தை, அப்படியொரு அகோரமான தோற்றத்தில்தான் இருந்தது உசிரில்லாத ஜீவன் போல கனகு தள்ளாடியபடி நடந்த நடை.

கனகுவால் நடந்து முடிந்த அவமானக்கேட்டை நம்பவே முடியவில்லை. அடக்க ஒடுக்கமாய் தலைகுனிந்து நடப்பனுக்கு துன்பம் வருவதில்லை என்று அப்பா சொல்லியிருக்கிறார். கனகு அப்படி நடப்பவன்தான். தலைகுணிந்து பெண் போல அடக்க ஒடுக்கமாய். அப்படி நடக்கிறபோது சில ஆட்டோ இடித்திருக்கிறது. சைக்கிள் மோதியிருக்கிறது. பசுமாடுகூட முட்டியிருக்கிறது. தலைகுணிந்து நடந்தால் இது சகஜம்தான். ஆனால் பெண் அவமானத்தை இப்படி நேருக்கு நேர் கனகு ஒருபோதும் கண்டதில்லை. தானுண்டு, தன் தகப்பணுன்டு என்று வாழந்தவனுக்கு இன்றைக்கு என்ன விபரீத ராஜ புத்தியோ.. கேட்கக் கூடாத கேள்வியை கேட்கக் கூடாதவளிடம் கேட்டு மானம் மூணும் போய்விட்டது.

சட்டைப் பையில் இருந்த வெங்கலராஜ பெருமாளே கண்மூடிக்கொண்டு அவனை கைவிட்டுவிட்டார் என்றால் அவன் செய்த பாவம் எவ்வளவு பெரியதாக இருக்கும்! கனகு முடிவெடுத்தான். இனி பெண் இருக்கிற திசைகூட நடக்கக்கூடாது. பெண் சுவாசித்த காற்றைக் கூட சுவாசிக்கக் கூடாது! பாவம் கனகு. முடிவு எடுப்பதுதான் மனுசன் வேலை, அதை முடித்துக் கெடுப்பது ஒரு குரங்காட்டியின் லீலை என்று அவனுக்குத் தெரியாது. (கடவுளை குரங்காட்டி என்றால் கனகு அப்பா சும்மாயிருக்கமாட்டார்.) ஆற்றில் குதித்துவிட்ட ஒருத்தன் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி மூக்கில் தண்ணீர் நுழையாமல் இருக்க நீந்தித்தான் ஆகவேண்டும் என்ற விசயத்தை கனகு தன் வாழ்நாளில் அறிந்துவைத்திருக்கவில்லை. அவனுக்கு கண்டதையும் சொல்லிக்கொடுக்க வழி நெடுக வாத்தியார்களை காலம் அவனுக்காக உட்காரவைத்திருக்கிறது என்பதையும் அவன் தெரிந்து வைத்திருக்கவில்லை.


2

~நடெஸ் தேணீர் கடெய்| என்று சுத்தமான தமிழில், விரல்கொண்டு எழுதப்பட்ட டீக்கடை பெஞ்சிற்கு காலை நேரத்தில் கொஞ்சம் கிராக்கி அதிகம்நடேச அண்ணன்தான் டீ மாஸ்டர், ஓனர், எச்சில் டம்ளர் பையன் எல்லாம்மூன்று ரூபாய்க்கு கண்ணாடி டம்ளர் நிறைய வஞ்சனை இல்லாமல் நுரை, காற்று, திருப்தி மூன்றையும் நிரப்பி, டீ என்று நம்பும்படி கொடுப்பார்.

கனகு வந்தால் நடேச அண்ணனுக்கு மஹா சந்தோசம். நடேச அண்ணன் சொல்வதை நம்புகிற உலகத்தின் ஒரே மனுசன் கனகுதான். பக்கத்து டீக்கடையில் வேப்பெண்ணை குடித்த முக லட்சணத்தோடு வந்த கனகுவை பார்த்து அதிர்ந்தார் நடேச அண்ணன். 'என்ன ஆச்சி கனகு?"

காதல் தோல்வி கண்டால் டீக்கடையில் உட்கார்ந்து அழவேண்டும் என்கிற மரபெல்லாம் கனகுவின் மூளை அறியாத ஒன்று. தத்துவங்களும், தவப் பயன்களும் அறியாத சிறியவன் அவன். பேதைகளுக்கும் பெரும் பேதையான அவன் சொன்னான், 'எனக்கு பொண்ணுங்கன்னாவே வெறுப்பா இருக்கு அண்ணே!" பெண்களின் மூச்சுக் காற்றே வேண்டாம் என்று சற்றைக்கு முன் சபதம் செய்தவன் அவன்தான்.

ஏகப்பட்ட எச்சில் டம்ளர்களுடன் நடந்த நடேச அண்ணன் நடக்க எடுத்த காலை அடுத்து தரையில் வைக்க முடியாமல் தவித்து நின்றார். என்ன எளவெடுத்த வார்த்தை பேசினான் இந்த கனகு? அப்பாவி செம்மறியாடு பீப் பிரியாணி பற்றி பேசுமா? 'என்னா சொன்ன.. கனகு? பொண்ணுங்களா,,,? எப்பத்தில இருந்து இந்த பேச்சி...” கனகு என்கிற உத்தமக்கோட்டை சடீரென்று சரிந்து விழுந்துவிட்டது நேரில் கண்ட அதிர்ச்சியோடு பேசினார் நடேச அண்ணன்படிக்கிற வயசில இதென்ன பேச்சி கனகு? நல்லபடியாதானே வளத்தாரு உங்கப்பா! இப்ப ஏன் உன் புத்தி இப்படி போகுது.. தப்பு கனகு தப்பு."

'சும்மா அறிவு சொல்லி சாகடிக்காதீங்க அண்ணே! பொண்ணுங்கள புடிக்கலேன்னு சொன்னாலும் குத்தமா?"

'நீங்க புடிக்கலேன்னு சொன்னா, கெடைக்கலேன்னு அர்த்தம் கனகு. யாரோட சகவாசத்தால நீ இப்படி கெட்டுப்போனேன்னு தெரியாது. நல்ல வாழ்க்கைக்கு நல்ல சிநேகிதங்க அவசியம் கனகு. உன் வயசில எனக்கும் ஒரு மகன் உண்டு. துரைசாமின்னு பேரு. உங்க காலேஜ்தான். அவனுக்கு புத்தகத்தையும், காலேஜையும் விட்டா வேற தெரியாது கனகு. தங்கம் மாதிரி வளத்திருக்கேன். எதுக்கு சொல்றேன்னா உங்கப்பாவும் அப்படித்தான் உன்னை வளத்தாரு..."

கனகு கடுப்பாகிவிட்டான். துரைசாமி என்கிற அந்த மகனின் யோக்கியதைக்குப் பெயர் பானு - அது டவுன் பஸ்சில் டிக்கெட் எடுத்துக்கொண்டு போகிறது என்று தெரிந்தால் அண்ணாச்சி இங்கே டீட்டம்ளரில் நுரை அளந்துகொண்டிருக்க மாட்டார். தெருக்கோடி பிள்ளையாருக்கு டம்ளரை எல்லாம் சூறைத் தேங்காய் போட்டுவிட்டு, பிள்ளை பெற்ற பாவத்திற்கு பரதேசம் போயிருப்பார். துரைசாமி புத்தகம் மட்டுமே தெரிந்த நல்லவனாம்! பாவம் அண்ணன். கல்லூரியின் கழிப்பறை சுவர் பக்கத்தில் அந்த துரைசாமி பேசுகிற ஆபாசப் பேச்சை ஒருநாள் இந்த அண்ணனுக்கு காட்டவேண்டும், 'பாருங்க அண்ணே, உங்க மகன் காட்டற பயாஸ் கோப்பை பாருங்க!" என்று. அவன் பேசுவதைக் கேட்டால், கர்பிணிப் பெண்போல சாப்பிட்டதையெல்லாம் வாந்தியெடுத்துவிட்டு படுக்கையில் படுத்துவிடுவார். பெற்றது தறுதலையை. பேசுவது தங்கமென்று. அவரிடம் பேசவே பிடிக்கவில்லை கனகுவிற்கு. ஒன்றுமே பேசாமல் கடையைவிட்டு வெளியே வந்து கால் போன போக்கில் நடக்கத் துவங்கினான்.

'கனகூ... சொல்லறதைக் கேளு கனகூ... சங்கு அனுமாருக்கு வடைமாலை போட்டு வேண்டிக்கோ! கெட்டது நடக்காம அவரு காப்பாத்துவாரு" உலகமெல்லாம் கேட்கிறபடி உரக்கச் சொன்னார், நடேச அண்ணன். நடப்பதை நிறுத்தி, வெறுப்போடு திரும்பிப் பார்த்தான் கனகு. மொதல்ல நீ உன் மகனுக்கு வடை போடுங்க அண்ணே! சொல்ல நினைத்ததை அடக்கிக்கொண்டு எரிச்சலோடு நடந்தான் கனகு.

நல்லவன் யோக்கியன் கெட்டவன் அயோக்கியன் என்று வகைபிரிக்கிற புன்யாத்மாக்களை யாருக்கும் தெரியாமல் செருப்பால் அடித்தால் என்னவென்று எரிச்சலோடு நினைத்தான் கனகு. அவர்களால் வழங்கப்பட்ட நல்ல பையன் என்கிற விளக்கெண்ணை பெயரை சுமந்துகொண்டு சுமந்ததால் கனகுவிற்கு என்ன லாபம். அரைகுறைப் பேரழகி பானுவே ~கனகு வேண்டாம், எனக்கு துரைசாமிதான் வேண்டும்| என்கிறாள். ஆபாசத்தின் உச்சமான துரைசாமிக்கு பானு வசப்படுகிறாள். கனகு என்கிற புளித்த தயிரை வேண்டாம் என்கிறாள். துரைசாமி என்கிற தூயவனுக்கு இவன் தூதுவேறு போகவேண்டுமாம்.

நல்லவனுக்கு போஸ்ட்மேன் உத்தியோகம்!

கெட்டவனுக்கு புருச உத்தியோகம்!

உலக லட்சணம் இப்படி இருக்கிறது.

கல்லூரியின் மரமடர்ந்த புல்வெளியில் துரைசாமி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான் கனகு. அவனைச் சுற்றி இளைஞர்கள். அவன் பேச்சில் நிச்சயம் பூப்படைந்த தேவதைகள் இருப்பார்கள், ரம்பைகளும் ஊர்வசிகளும் நாட்டியமாடுவார்கள். ஒரு கணம் இல்லையென்றாலும் ஒரு கணம் ஒரே ஒரு ஸ்திரியாவது வஸ்திரமில்லாமல் நடமாடிச் செல்வாள். இளைஞர்களின் ஆர்வத்திற்கு காரணம் அது ஒன்றேதான்.

'அவன் பக்கத்தில கூட போயிடாத கனகு! பாம்போட மூச்சுக் காத்துலையும் விஷம் இருக்கும்," அப்பா எச்சரித்திருக்கிறார். 'பெரிய பசங்க கூட்டமா இருக்கிற இடத்துக்கு நீ போகாத கனகு! கெட்ட பழக்கம் பேசிகிட்டு இருப்பாங்க" நிற்கவா போய்விடவா என்ற குழப்பத்தில் கனகு சற்று விழித்தான். ஆமா, நல்ல பெயர் எடுத்து நாசமாய்ப் போனது போதும்! அப்பாவின் சொல்லை முதல்முறையாக எல்லை மீறினான் கனகு. துரைசாமி நோக்கி நடந்தான்.

துரைசாமி மிக வசீகரமான குரலில் பேசிக்கொண்டிருந்தான்.

'ஆதியில் மன்மதன், பெண்கள் என்றால் என்னவென்றே அறியாதவனாய் இருந்தான். கல்யாண வயது கடந்தும் பெண் ஆர்வம் இல்லாத மகனைக் கண்டு அவன் அம்மா துக்கம் கொண்டாள். மன்மதன் இப்படி இருந்தால் உலகத்தில் மனித குலம் குழந்தையற்று அழிந்துபோகுமே! பூலோகம், பாழ் லோகம் ஆகிவிடுமே என்று பயந்தாள். ரதிதேவியிடம் ஓடினாள்.

ரதிதேவி நீதான் என் மகனுக்கு ஒரு நல்ல வழி காட்டவேண்டும். மன்மதன் இப்படி மாமிச வஸ்துவாய் சலனமற்றிருப்பது எனக்கு அச்சமாயிருக்கிறது. அவனுக்குள் உயிர்ப்பையும், துளிர்ப்பiயும் உண்டாக்கி ஒரு தீப்பந்தத்தின் சுடரை நீதான் ஏற்றவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். ரதிதேவி அவளை தேற்றினாள். மன்மதனின் மனசுக்குள் பெண் விருப்பத்தை உண்டாக்கி, அவனை காதலின் கடவுளாய் ஆக்குகிறேன் என்று அவளுக்கு வாக்கும் கொடுத்தாள்.

'பன்றி வேட்டை ஒன்றை மட்டுமே அறிந்த மன்மதனை கரும்பு வயலில் வளைத்துப் பிடித்தாள் ரதி. பன்றி வேட்டையாடுகிற உனக்கு அன்னப் பறவைகளை வேட்டையாடும் வித்தையை கற்றுத் தருகிறேன் வருகிறாயா என்று ஆர்வமூட்டி அழைத்தாள். பறவை வேட்டைக்கு ஆசைகொண்ட மன்மதனும் ரதி சொன்னபடி கரும்பு வில் ஏந்தி அன்னப் பறவை கொல்கிற அம்புவிடத் தயாராக நின்றான்.

'மன்மதா உன் கண்களுக்கு பறவை மட்டும்தான் தெரிகிறதா?" ரதிதேவி கேட்டாள்.

ரதிதேவியின் விரல் பட்ட மன்மதனுக்கு உடம்பெல்லாம் புது ரத்தம். 'இல்லை ரதியே! பறவையும், பறவையைப் பிடித்திருக்கிற பெண்ணும், அவளின் அழகும் தெரிகிறது. அவள் மட்டுமல்ல, அவளைச் சுற்றிலும் இருக்கிற ஆயிரமாயிரம் பெண்களும், உலகத்தில் இருக்கிற எல்லாப் பெண்களுமே என் கண்களுக்குத் தெரிகிறார்கள்" என்றான்.

ரதிதேவி போதையூட்டும் புன்னகை செய்தாள். 'அது அப்படித்தான் மன்மதா! சுத்தமான ஆணுக்கு சுற்றியிருக்கிற எல்லா பொருட்களிலும் பெண் மட்டுமே தெரிவாள். ஒற்றைப் பார்வையால் உன்னிலும் அதிகமாய் பெண்களைப் பார்த்தவன் எவனும் கிடையாது. இன்றிலிருந்து நீயே உலகத்தின் காதல் கடவுளாக இருப்பாய். அம்பு விடு மன்மதா! என்றாள்."  துரைசாமி கதை சொல்லி முடித்ததும் இளைஞர்கள் பரவசமானார்கள். அதைவிட அதிகமாய் கனகு பரவசமானான்.

பதினேழு வருசமாய் இந்தப் பாழாய்ப்போன அப்பா, சோற்றைத் தின்று தின்று சொல்லித்தந்த அத்தனை ஈசாப் எறுமைக் கதைகளும் துரைசாமியின் ரதி - மன்மதக் கதை முன்பு மண்டியிட்டு வால் ஆட்டியது. துரைசாமி தகப்பனுக்கெல்லாம் தகப்பன் என்று கண்டுகொண்டான். அவனே தன் வாழ்வின் குருவாக இருக்கட்டும் என்று அவசரமாக முடிவெடுத்தான். அவசரத்தில் தேர்ந்தெடுக்கிற பாதை ஆஸ்பத்திரியில் போய் முடியுமென்று அப்பொழுது அவனுக்குத் தெரியாது.

இன்செர்ட்
உபதேசக் கதைகளை ஓதி முடித்துவிட்டு, சிகரெட் பிடித்தபடி தனிமையில் நின்றிருந்தான் துரைசாமி.

'பானு உங்ககிட்ட ஒண்ணு சொல்லச் சொன்னாங்க..." கனகு குருமரியாதையோடு பேசினான்.

துரைசாமி புகைமூட்டத்தின் வழியே கண் இடுக்கியபடி பார்த்து, 'உம் பேரு என்ன? பானுவை எப்படித் தெரியும்?"

'என் பேரு கனகு!"

'... கனகு! நீதானா அது? வா, வா, வா... உன்னத்தான் தேடிகிட்டு இருந்தேன். கனகு ரொம்ப சுத்தபத்தமான பையன், பழைய சோப்பு போட்டு நல்லா குளிப்பான்னு பொண்ணுங்க சொன்னாங்க. சொல்லு கனகு, நீ கேர்ல்ஸ்; பத்தி என்ன நெனைக்கிறே?"

'நான் நெனைச்சதெல்லாம் தப்பு பிரெண்ட். நீங்க சொன்ன கதை ரொம்ப பிடிச்சிருந்தது. சுத்தமான ஆண்மகனுக்கு திரும்பின பக்கமெல்லாம் பொண்ணுங்கதான் தெரிவாங்களா, பிரெண்ட்? காதலிக்காத மனுசன் ஜடம்னு சொல்லறது சரிதானா பிரெண்ட்?"

' மை கடவுளே! இத்தனை கேள்விய வெச்சிகிட்டு எப்படி தூங்கினே கனகு? இங்க உட்கார்! உனக்கொரு அறிவியல் உண்மைய சொல்றேன். அறிவியல் என்ன சொல்லுது... ஜடப் பொருட்களுக்கு ஆண் பெண் பேதம் கிடையாதுன்னு சொல்லுது. எங்கயாவது லாரி கல்யாணம் பண்ணி குட்டி போட்டிருக்கா? லாரியில ஆம்பள லாரி, பொம்பள லாரி உண்டா? அது ஓடும், கத்தும், மோதும், முறுக்கிகிட்டு நிக்கும், சாப்பாடு போட்டா குதிக்கும். இல்லேன்னா படுத்துக்கும். பாக்கறதுக்கு உயிர் உள்ள ஜீவன் மாதிரி இருக்கும். லாரிக்கும் ஜனனமும் மரணமும் உண்டு. ஆனா அது காதல் செய்யாது கனகு! ஏன்னா அது ஜடம். பொண்ணுங்கள உணர்ச்சியே இல்லாம சமமா பாக்கறதுக்கு நாம லாரியா கனகு?"

கனகுவிற்கு இது புதிதாய் இருந்தது. கனகு, துர்கை கோயிலில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகிறவன். சஷ்டி விரதமிருப்பவன். கிரி வலம் வந்தால் புண்ணியமென்ற அப்பா பேச்சை நம்புகிறவன். இத்தனைநாள் இதைச் செய்தும் ஞானம் வரவில்லையே கனகுவிற்கு. ஆனால் துரைசாமி சொல்கிறான், பெண்களை கிரிகிரி வலம் வந்தால் சொர்க்கம் நிச்சயம் என்று. எது சரி?

துரைசாமி ஒன்றும் சந்நியாசி கிடையாது. கழுத்தில் ஒற்றை உத்திராட்சம் இருக்கிறது. ஃபேஷனுக்காகஸ்படிக மாலை அணிந்திருக்கிறான். கனவு தரும் உஷ்ணத்தில் இருந்து தப்பிப்பதற்காக. கடவுள் என்றால் எத்தனையாவது சித்தப்பா என்று கேட்கிற அவன் நெற்றியில் தீட்சண்யமான விபூதி. அதை வைக்காவிட்டால் அம்மா டிபன் தரமாட்டாள். கையில் மாரியம்மன் மஞ்சள் கயிறு கட்டியிருக்கிறான். ஷோபனா வேண்டிக்கொண்டு வந்து கட்டியது. கண்டதையும் படித்த ஞானம் அவன் வாயில் இருக்கிறது. இத்தனை புத்திசாலியாய் இருப்பவனையா பாம்பு என்றார் அப்பா? அப்பா ஒருவேலை தப்பானா அப்பாவா? கனகு சந்தேகமாய் கேட்டான், 'எங்க அப்பா என்னை நல்லவனா, பத்திரமா வளத்திருக்காரு... ஆணையும் பொண்ணையும் சமமா பாக்கணும்னு சொல்லியிருக்காரு. அது தப்பா பிரெண்ட்?"

'பெற்றவர்கள் பத்திரப்படுத்தி வைக்க நாம ஒண்ணும் ஜாடிக்குள் இருக்கிற ஊறுகாய் இல்லை, கனகு! வாழ நமக்கு உரிமை இருக்கு! அதைச் செய், இதை செய்யாதேன்னு சொல்ல அவர்கள் யார்? உன் அப்பா கலீல் ஜிப்ரான் படிச்சிருக்காரா?"

வெள்ளெழுத்து கண்ணாடியோடு அப்பா கந்தசஷ்டி கசவம்தான் படித்திருப்பார். கலீல் ஜிப்ரான் படித்திருக்கவே மாட்டார். 'இல்லை, பிரெண்ட்!"

'அதுதான் மோசம். அவரை ஜிப்ரான் படிக்கச் சொல். பிள்ளைகளைப் பொறுத்தவரை பெற்றவர்கள், பிறப்பிற்கு ஒரு கருவிதான். அவர்கள் குழந்தைகளின் எஜமானர்கள் கிடையாது. நீ சுதந்திரமானவன் கனகு!"

கனகுவின் மனசு காற்றில் கரைந்தது. துரை நல்லவன். நல்லவர்களுக்கெல்லாம் நல்லவன். பானுவோடு அவன் காதல் வாழவேண்டும். கனகு குருவிற்கு தரும் காணிக்கையாக நினைத்து பானு சொன்ன விசயத்தை தூதாகச் சொன்னான். பானு என்றதும் துரைசாமி உவ்வேக் என்றான். 'அவள பத்தி பேசாத கனகு! அவ அரிசி மாவுல கோலம் போடற பொண்ணு. நமக்கு சரிப்பட்டு வரமாட்டா!"

'அவ எறும்புக்கும் உணவு தர்ற பொண்ணாச்சே...  கருணை மனசு நல்லதுதானே பிரெண்ட்!"

'எறும்பும் ஈயும் அரிசி மாவத்தான் தின்னுமா கனகு? அதுக்கு பசி எடுத்தா செத்த கரப்பான் பூச்சியக் கூட சாப்பிடும். பசிச்ச ஏழைங்க பல பேர் இருக்காங்க உலகத்தில. அவங்களால செத்த கரப்பான் பூச்சிய சாப்பிடமுடியுமா கனகு? நீயே சொல்லு, அரிசிமாவை ஏழைக்கு தர்றது கருணையா, கோலம் போடறது கருணையான்னு நீயே சொல்லு கனகு!"
கனகு வாயடைத்துப் போனான்.

'கனகு, பைபிள்ல என்ன சொல்லியிருக்கு தெரியுமா?"

'அப்பா பைபிள் படிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க, துரை"

'அய்யோ! தப்பு தப்பு தப்பு... தலையில போட்டுக்கோ! நாம பைபிள் படிக்கணும். குரான் படிக்கணும். ஜென் படிக்கணும். சுஃபி படிக்கணும். கொக்கோகம் படிக்கணும்... எல்லாம் படிக்கணும் கனகு. பைபிள்லதான் சொல்லியிருக்கு ஆதியில்; ஆண்டவர் மனிதனின் விலா எலும்பெடுத்து அவனுக்கான பெண்ணை படைச்சாருன்னு. அப்ப பொண்ணுன்றது யாரு? நம்மோட பாதி. பாதின்னா என்ன அர்த்தம் கனகு? செமி.. செமின்னா.. லூஸ்னு அர்த்தம். தனக்கான பெண்ணை தேடிப் பிடிக்காதவன் எல்லாம் லூஸ்ன்னு எங்க சொல்லியிருக்கு பாரு.. அதனாலதான் சொல்லறேன் கனகு நமக்கான விலா எலும்பை நாம தேடி கண்டு பிடிக்கணுன்னு. ஆனா கவனமா இருக்கணும். நமக்குச் சரியான விலா எலும்பைத்தான் நாம கண்டு பிடிக்கணும்.. சரிப்படாத விலா எலும்பை எடுத்தோம்... நாம முழு லூஸ் ஆயிடுவோம்.. புரிஞ்சதா?"

புரிந்தது.. புரிந்தது... புரிந்தது... கோயில் உண்டியலில் போட்ட காசு போல, சுவற்றில் போட்ட நாமம் போல பட்டை பட்டையாக எல்லாம் புரிந்தது. கனகு தனக்கான சரியான விலா எலும்பை தேடுவது என்று அந்த இடத்திலேயே தீர்மானித்தான். ”இன்னையிலே இருந்து என்னோட விலா எலும்பை நான் தேடி கண்டுபிடிக்கிறேன், பிரெண்ட்துரையிடம் ஒரு சபதம் போல தன் முடிவைச் சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்று மறைந்தான் கனகு.

'எலும்பைத் தேடுகிற வியாதி நாய்களுக்கு எப்பவும் உண்டு. இதுவும் ஒரு விலா எலும்பு தேடற நாய்தான் பாத்துக்கங்க...!" கனகு போனபிறகு பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தான் துரைசாமி.
டீக்கடை நடேச அண்ணனை அய்யோ பாவத்தே என்று முதல் முறையாக பார்த்தான் கனகு! எத்தனையோ லட்சம் டீ ஆற்றிக்கொடுத்து அவர் வாழ்வே ஆறிப்போயிருக்கும். மீசை இல்லாத அவரின் பெண் முகத்தைப் பார்க்க இளக்காரமாகத் தெரிந்தது. துரைசாமி என்ற அறிவாளியை பெற்ற தகப்பன் இதுதான் என்றால் கல்லூரியை சுற்றிப்பார்க்க வந்த கூட நம்பாது. துரைசாமி டீக்கடைக்கு வருவதுமில்லை, இது என் அப்பா என்று எவரிடமும் சொல்லியதுமில்லை. நடேச அண்ணனிடம் இருப்பது மாபெரும் ஒழுக்கம். ஒழுக்கச் சீலனான தன் தகப்பனைப்பற்றி துரைசாமி என்ன நினைக்கிறான்?

'ஒழுக்க சீலனுக்கு உபத்திரவம் அதிகம். உலகத்துக்கெல்லாம் டீ கொடுப்பவன் அல்ல, கடனுக்கு டீ குடிப்பவன்தான் ஜென் ஆகிறான்" துரை சொன்னது நூற்றில் ஒரு வார்த்தை என்று கனகு நினைத்தான். துரைசாமி சொன்னதை அவன் அப்பாவிடமே பரிசோதிக்க வேண்டும். இன்றைய தேநீர் கடனுக்கு குடிக்க வேண்டும். தேநீர் கடன் ஜென்மத்திற்கும் தீராமல் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தான் கனகு. கடன் காசை திருப்பிக் கேட்கிற அப்பாவி நடேச அண்ணனின் முகத்தை நினைத்ததும் சிரிப்பு வந்தது கனகுவிற்கு.

கனகு முகத்தில் தெரிந்த பிரகாசத்தை நடேச அண்ணன் கவனித்தார். 'சொன்னேன் இல்ல கனகு. அனுமனுக்கு வடை மாலை போடு சரியாயிடும்னு. எத்தனை அமைதி பாரு முகத்தில... "

'நான் செல்போன் வாங்கியிருக்கேன் அண்ணே! ஒரே நாள், ஒரே வார்த்தை சொன்னேன். அப்பா வாங்கித் தந்தாரு!" தன் அப்பாவிடம் மூக்கால் அழுது பெற்ற செல்போனை பெற்ற குழந்தை போல அண்ணனிடம் காட்டி சந்தோஷப்பட்டான் கனகு.

'உன் அப்பா ஒரு தெய்வம் கனகு! பிள்ளைக்கு வேண்டியதையெல்லாம் மறக்காம செய்வாரு."

'அண்ணே! செல்போன் வெச்சிருக்கிற பசங்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்னு சொல்லறது உண்மையா அண்ணே!" கனகு கேட்டதும் நடேசனின் கை நிறைந்த டீ டம்ளர் கடகடவென்று ஆட ஆரம்பித்தது. இதென்ன கிரகம் பிடித்த கதை! இப்படியெல்லாம் அவிழ்த்துவிடுகிறவர்கள் யார்?

'எங்க படிச்சே கனகு?"

உன் மகன் துரைசாமிதான் அப்படி சொன்னான் என்று சொன்னால் நடேச அண்ணன் ஆதியில் செய்த குற்றத்திற்கு மனைவி மீதே வருத்தப்படுவார். அதை மறைத்துவிட்டு, 'ரொம்ப புத்திசாலி பையன் சொன்னான் அண்ணே! செல்போன் வெச்சிருக்கிற பசங்ககிட்ட நிறைய பொண்ணுங்க பேசுவாங்க. நிறைய பொண்ணுங்க குரல் கேட்டா ஆண்மை பெருகுமாமே!" என்று விஸ்தாரமான விவரம் கேட்டான்.

அன்றைக்கு சிட்டுக்குருவி லேக்கியம். இன்றைக்கு செல்போனா? அழுத்துக்கொண்டார் நடேச அண்ணன்.

'அவன் சொன்னா அது சரியாத்தான் கனகு இருக்கும்!" நடேச அண்ணன் தீர்மானித்துவிட்டார். கனகு லுங்கியை மடித்துக்கட்டி தயாராகிவிட்டான் சேற்றில் குதிப்பதற்கு. பக்கத்தில் நின்று அறிவு சொன்னால் மூஞ்சில் சேறடிப்பதுதான் மிச்சமாகும். தள்ளி நிற்பதுதான் நல்லது என்று முடிவெடுத்தார் அறிவாளி அண்ணன்.

நடேச அண்ணனின் முகத்தை பார்த்தான் கனகு. முகத்தில் நம்பிக்கையில்லை. உலகத்தில் செல்போனை நம்பாத ஒரே ஜடம். பிள்ளைகளின் திறமை பெற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது. இவருக்கெல்லாம் துரைசாமி போன்ற மேதை மகனாகப் பிறந்தது மகா பெரிய அசிங்கம் என்று நினைத்த கனகு மறக்காமல் குடித்த டீக்கு கடன் சொல்லிவிட்டு கல்லூரிக்கு நடக்க ஆரம்பித்தான்.

கல்லூரிச் சாலை முழுதும் பெண்களின் கூட்டம். துரைசாமி ஒரு தீர்க்கதரிசி என்பதை உலகம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.. இத்தனை நாள் பெண் கண்களுக்கு தெரியவே தெரியாத கனகு இன்றைக்கு தெரிந்தான்.

எதிரில் வந்த மூன்று பெண்கள் கனகுவை ஆச்சரியமாக பார்த்தார்கள்.

'அய்யோ மயக்கம் வருதே!" நடுவில் நடந்து வந்த பெண்களில் ஒருத்தி கனகுவின் பக்கத்தில் வந்ததும் தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தாள்.

மற்ற இருவரும் 'என்னடி ஆச்சி நிம்மி?" என்று பதறினார்கள்.

'அங்க பாருங்கடி நம்ம கனகு கையில செல்போனு..."

கனகுவை ஒரு மக்காச்சோள கதிரே என்றுகூட எந்த பெண்ணும் இதுவரை மதித்தது கிடையாது. இன்று நடப்பது அற்புதம். ' லவ் யூ அப்பா!" என்றான் கனகு. ஒரே ராத்திரியில் ஒன்பதாயிரம் துட்டு அவிழ்தது செல்போன் வாங்கிக்கொடுத்தது அவர்தான்.

' லவ் யூ துரை!" என்றான்செல்போன் தேய்த்தால் ஏகப்பட்ட மோகினிகள் வந்து கனகு கனகு என்று காதில் மொய்ப்பார்கள் என்ற ரகசியத்தைச் சொன்னவன் அவன்தான்.

'ஏது கனகு செல்போன்? ரொம்ப அழகா இருக்குஒரு பெண் கனகுவிற்கு முத்தம் தருகிற அருகாமைக்கு வந்து செல்போனை பார்த்தாள். அவள் பெயர் ஆஸா தி கிரேட்.

என்ன மாடல் கனகு? கலரா, கறுப்பு வெள்ளையா...?” இன்னொரு பெண் அவன் புஜத்தை பற்றி இழுத்தபடி விசாரித்தாள். இவள் பெயர் சுபிக்ஷா.. சுடிதார் சொர்கமென்ற வடக்கத்திப் பெண்.

புது செல்போன்... புது ஆளு. அட்டகாசம் கனகு. இதுக்காக எங்களுக்கு நீ ட்ரீட் தரணும் கனகு... இன்னைக்கு சினிமாவுக்கு போலாமா?" நிம்மி என்ற பேர் கொண்டவள் இனிப்புக் கட்டளையிட்டாள். அவள் கனகுவின் பக்கத்துத் தெருவாம். டூத் பேஸ்ட்டில் பல் விளக்கத் தெரியாதவன், செல்போனில் பேசத் தெரியாதவனிடம் பழக்கம் வைத்துக்கொள்வதில்லை என்கிற பண்பாடு உள்ளவளாம். கனகுவை மதிக்காத காரணத்தை ஏகப்பட்ட பேரிடம் இதுநாள்வரை சொல்லித் திரிந்தவள். இன்றைக்கு நிம்மி கனகுவின் கைப்பிடிக்கு கொஞ்சம் கம்மி. அடக்கமாகிவிட்டாள், கனகுவின் கைப்பிடிக்குள் அடக்கமாகிவிட்டாள். தலைகிறுகிறுக்கிற ஆனந்தம் வந்துவிட்டது கனகுவிற்கு.

'கனகு சினிமாவுக்கு வருவானா? நம்மோடையா... அய்யோ!” கத்தினாள் ஆஸா தி கிரேட்.

அதானே! கனகு வருவானா? அப்பாவ கேட்டுட்டு தான் கனகு முட்டையே வெப்பான். அவன் பிராய்லர் கோழி நிம்மி!" ஜெயா என்கிற பெண் அதிரடியாய் ஒரு உண்மையைச் சொன்னாள். பானுவை அவளுக்கு நன்றாகத் தெரியுமாம். பானு சொன்னது உண்மையென்றால் கனகுவுக்குத் தெரிந்ததெல்லாம் முறுங்கைக்காய் முத்தல், கத்திரிக்காய் சொத்தை, வேகாத கொள்ளு சாப்பிட்டால் சீதபேதி நிச்சயம் என்பதுதானாம்.

கனகுவிற்கு பற்றிக்கொண்டு வந்தது. அவன் பன்னிரெண்டாவது வரையில் பெண்கள் இல்லாத பள்ளியில் படித்தவன்தான். அதற்காக பெண்கள் கூப்பிட்டாலும் சினிமாவிற்கு போகமாட்டேன் என்று சொல்கிற அளவுக்கு அவன் கூமுட்டை கிடையாது. கனுகுவை பிராய்லர் கோழி என்று சொல்வது... ச்சே... அவனை முட்டை வைக்கச் சொல்லி எந்த தகப்பனும் அதட்ட முடியாது. வெள்ளரிப் பிஞ்சு வாங்குவதென்றால்கூட அப்பாவிடம் பர்மிசன் கேட்கிற அடிமைத்தனம் ஒழியணும் கனகு என்று துரைசாமி சொல்லியிருக்கிறான்.

கனகு முதல் முறையாக தகப்பனிடம் கேட்காமல் தானே ஒரு பெரிய முடிவெடுத்தான். 'நாம சினிமாவுக்கு போலாம் பொண்ணுங்களா... இன்னைக்கே.. இப்பவே..."

பெண்கள் சரியென்ற அவிழந்த கூந்தல் காற்றில் பறக்க ஒப்புக்கொண்டார்கள். நான்கு பெண்களுக்கு நடுவில் உட்கார்ந்து சினிமா பார்த்தால் அங்கே என்ன தெரியும்? யாருக்குமே தெரியாத சொர்க்கம் தெரியும். கனகுவின் உடம்பில் புது ரத்தம் ஓடியது. சினிமா முதல் ஆட்டம்.. நான்கு பெண்களுக்கு நடுவில். சொர்கமடா கனகு, அது சொர்க்கம்.

துரைசாமியிடம் இந்த புதையல் அதிசயத்தை சொல்வதற்காக ஓடினான் கனகு.

துரைசாமி முட்டைக் கண் தரையில் விழுகிறபடி அதிசயப்பட்டு கத்தினான். ';ய்ய்யோ... நிம்மியோட சினிமாவா! நெசமாவா கனகு? ஆயிரம் வாட்டி கூப்பிட்டும் முடியாதுன்னு சொன்னவளாச்சே... டேய் கனகு நானும் கூட வர்றேன்டா"


கனகு முடியவே முடியாது என்றான். குருவாகப்பட்ட துரைசாமிக்கே கிட்டாத பெரும் பாக்கியமா இது? குருவே காணாத கடவுள் அனுபவம் சீடனுக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. துரைசாமியை செத்த எலியாய் பார்த்துவிட்டு கனகு வீட்டிற்கு அவசரமாய் ஓடினான். அப்பாவிடம் சொல்லி அனுமதி பெறவேண்டும். நான்கு பெண்களுக்கு நடுவில் அகலமாய் தெரியப்போகிறது சொர்க்கம். அதன் பெயர் சினிமா!

No comments: