சைக்கிள்
சம்சாரியின் பழைய உயிரியல்.
அய்யோ சொல்லி உட்கார்ந்து,
அய்யோ சொல்லி எழவைக்கும் வினோத
நோய் ஒன்று எனக்கு வந்துவிட்டது.
முழங்கால் வலி என்பது உண்மையில்
உயிர் எடுக்கிற நோவுதான். காட்டு பூனையொன்று முழங்காலை
எப்பொழுதும் கடித்துக்கொண்டே இருப்பதற்குப் பெயர்தான் முழங்கால் வலி. பொறுக்கமுடியாத வலி
தாங்கமுடியாத எல்லைக்குப் போனதால் நான் ~லேக்கியத்
திலகம்| லோகநாதனிடம் சித்த வைத்தியம் செய்துகொள்ளப்
போனேன். சித்தவைத்தியனைவிட அவன் வைத்திருந்த சைக்கிள்
எனக்கு மிகவும் பிடித்தமானதாய் இருந்தது.
முட்டி முழங்காலை தொட்டுப்
பார்க்காமலே வைத்தியமும், பத்தியமும் சொன்னான் அந்த லேக்கியத் திலகம்.
எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. 'முழங்காலை பார்க்காமல் பார்க்கிற வைத்தியம் பலிக்குமா?" என்று நான் கேட்டேன்.
'ஆயிரம் முழங்காலைப் பார்த்தவன்
நான். எனக்கு, உன்னோட முழங்காலும்,
கன்னிப் பொண்ணோட முழங்காலும் ஒண்ணுதான்"
என்று சிரித்தபடி சொன்னான் லேக்கியத் திலகம். அவன் சொன்ன
கன்னிப் பெண் முழங்காலைவிட, சுவற்றோரத்தில்
நின்றிருந்த சைக்கிள் எனக்கு கவர்ச்சிகரமாய்த் தெரிந்தது.
இத்தனை பழைய சைக்கிள் உலகமெலாம்
தேடினாலும் கிடைக்காது. மனிதர்களின் மூதாதை என்பது ஒரு
குரங்குதான் என்றால், சைக்கிள்களின் குரங்கு இந்த லொடக்கு
டப்பா சைக்கிளாகத்தான் இருக்குமென்று நான் தீர்மானித்தேன். 'முழங்கால்
எழும்பு தேய்ந்து போன ஒருத்தன் கோழி
மாமிசத்தை கடைவாய்ப் பல்லில் தின்னக் கூடாது"
என்று லேக்கியம் உருட்டிக் கொடுத்து வைத்தியன் பத்தியம் சொல்லி முடிப்பதற்குள் நான்
எழுபத்தி இரண்டாவது முறையாக சைக்கிள்களின் குரங்கை
தடவிப் பார்த்தேன். இந்த சைக்கிளை முதன்
முதலில் ஓட்டியது ஒரு பெண்ணாகத்தான் இருக்குமென்று
எனக்குள் ஒரு குருவி சொன்னது.
இத்தனை நேரம் வைத்தியன்
எனக்கு தொழில் திறமை காட்டினான்.
இப்பொழுது நான் அவனுக்கு என்
தொழில் திறமை காட்டவேண்டுமென்று தீர்மானித்தேன்.
என் முழுங்கால் நோவுக்கு ஆதியந்த காரணங்களை சொல்லிக்கொண்டிருந்த
வைத்தியனை பாதியில் நிறுத்தி, 'உன் சைக்கிளின் சரித்திரம்
சொல்கிறேன் கேளுமைய்யா!" என்று என் பிரசங்கத்தை
ஆரம்பித்தேன். அந்த சைக்கிளுக்கு வயது
இருபத்தி எட்டு என்றும், அது
நான்கு கை மாறிய பட்சி
என்றும், அதன் பற்சக்கரங்கள் மூன்று
முறை உடைந்து போனது என்றும்,
அந்த சைக்கிள் சித்தவைத்தியனிடம் வரும்போது அதன் முன் சக்கரம்
கோழி முட்டை போல நீண்டு
கிடந்தது என்றும், அது ஓடுவதை நிறுத்தி
பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகிறது என்றும் சைக்கிளின்
மொத்த சரித்திரத்தையும் முழுதாகச் சொன்னேன். கேட்ட சித்தவைத்தியன் அசந்து
போனான்.
'இத்தனை அத்துப்படியா சொல்லறியே...
இந்த சைக்கிள் உன் தாத்தாவோடதா?" சித்தவைத்தியன்
வியப்பாகக் கேட்டான்.
'தாத்தாவையும், பழைய சைக்கிளையும் தேவையில்லேன்னு
விக்கிற பரம்பரையில நான் பொறக்கலே. நான்
தொட்டே பாக்காத இந்த சைக்கிளோட
சரித்திரம் உண்மையா, பொய்யா? நீ முழங்காலைப்
பாக்காம வைத்தியம் சொல்லுவே. நான் சைக்கிளைப் பார்த்ததுமே
சரித்திரம் சொல்வேன். பற்சக்கரத்தை மாத்தி, பழைய கம்பிய
நீட்டி, ஒரு மடக்கு, ஒரு
எடக்கு பண்ணா, ஓடாத இந்த
சைக்கிள் ஒரே ஓட்டமா ஓடும்"
என்று சொன்னேன் நான். வைத்திய லேக்கியனுக்கு
என் பேச்சின்மேலிருந்த ஆர்வமும், நம்பிக்கையும் அதிகமானது. அந்த சைக்கிளுக்கு இருந்த
ஆகப் பெரும் கோளாறுகளையெல்லாம் எப்படி
நீக்குவது என்று சகலத்தெட்டு விவரத்தையும்
அவனுக்கு சொல்லிவிட்டு வந்தேன். ஓடாமல் நின்ற அவன்
சைக்கிள் குணமாகி ஓட ஆரம்பித்தது.
ஆனால் ஆடாமல் வலித்த என்
முழங்கால் வலி அப்படியேதான் இருந்தது.
சித்தவைத்தியம் இனி சரிப்படாது என்று
நான் ஒரு எலும்பு டாக்டரிடம்
போனேன். முழங்காலை சுத்தி கொண்டு தட்டிப்
பார்த்த அவர், 'எலும்பு மொத்தமும்
தேஞ்சி போச்சி. இனி நீ
நடக்கக் கூடாது. ஓடக்கூடாது. நிற்கக்கூடாது.
கஷ்டமான ஒரு வேலையும் செய்யக்கூடாது.
ஓய்வா எப்பவும் படுத்துகிட்டே இருக்கணும்." என்று சொன்னார்.
நாலு வயதுப் பிள்ளையை
பெற்றெடுத்து வளர்க்கிற என்னைப் போன்ற சம்சாரி
நிற்காமல், நடக்காமல், ஓடாமல் இருக்க முடியுமா? 'ஓடி
உழைக்கிற சம்சாரி சுடுகாட்டில் படுக்கும்பொழுதுதான்
ஓய்வு எடுக்க முடியும்" என்று
பிணத்து கால்மாட்டு ஊதுவத்தி ஒன்று என்னிடம் சொன்னதில்
ஒரு அர்த்தம் இருக்கிறது. அதேசமயம், கண்ணுக்குத் தெரியாத உறுப்புகளுக்கு வைத்தியம்
பார்க்கிற டாக்டர் எதைச் சொன்னாலும்
கேட்டுக்கொள்வதும் அவசியமாகத்தான் இருக்கிறது. அவர் சொல்பேச்சு கேட்க
முடிவெடுத்த நான் ஒரே ஒரு
சந்தேகம் மட்டும் கேட்டேன். 'சைக்கிள்
மட்டும் கொஞ்சம் ஓட்டிக்கட்டுமா?"
'பைத்தியமா உனக்கு? நீ செத்தாலும்
சைக்கிள் ஓட்டக்கூடாது. ஓய்வுதான் எடுக்கணும்" டாக்டர் கறாராக சொல்லிவிட்டார்.
ஆக மொத்தத்தில் நான் முற்றிலும் கிழிந்துபோன
பழைய செருப்பாகிவிட்டேன். இனி நான் ஒரு
முடவன். எதற்கு பிறந்தோம், எதற்கு
வாழ்ந்தோம், எதற்காக சாகப்போகிறோம் என்ற
குழப்பம் தீர்வதற்குள்ளே நான் முடங்கிப் போனேன்.
ஓடி ஆடி இத்தனை நாள்
வாழ்ந்து நான் சாதித்தது என்ன?
உப்பு மிட்டாய்களை உதட்டில் வைத்திருக்கும் மனைவிகளின் சிரிப்பில் மத்தாப்பு வெளிச்சம் தெரிகிற வரையில் ஒரு
சம்சாரி வாழ்வின் லாப நட்டக் கணக்குகளை
பார்ப்பதில்லை. ஓட்டை மண் சட்டியாய்
மண்டை உடைந்து இருட்டு அறைக்குள்
அவன் தள்ளப்படும்போது, வாழ்ந்த வாழ்க்கையின் கடைசீ
லாப நட்டத்தை அவன் கணக்கிட்டு பார்க்கிறான்.
அனேகமாய் எல்லா சம்சாரிகளுக்கும் வருகிற
விடை பூஜ்ஜியமாய் இருக்கிறது. இதோ இப்பொழுது எலும்பு
டாக்டர் என் வாழ்வின் லாபம்
பூஜ்ஜியம் என்று சொல்லிவிட்டார்.
எனக்கு
பெரிய வேதனை வந்துவிட்டது. வாழ்வு
பூஜ்ஜியமானால் பூனைக்கு வால் ஆயிற்று! அதைப்பற்றி கவலை இல்லை எனக்கு.
சைக்கிள் ஓட்டக்கூடாது என்று சொன்னதுதான் எனக்கு
திகில் கொடுத்தது. நான் சைக்கிள் ஓட்டுவதை
என்றைக்கு நிறுத்திவிடுகிறேனோ அன்றைக்கு இறந்து போவேன் என்பது
இந்த டாக்டருக்குத் தெரியாது. மற்றவர்கள் நினைப்பது போல சைக்கிள் என்பது
எனக்கு உலோக எந்திரமல்ல. சைக்கிளுக்கு
உயிர் இல்லை, தசை இல்லை,
ரத்தமும் நரம்பும் இல்லை என்று மற்றவர்கள்
போல என்னால் சொல்ல முடியாது.
சைக்கிள் என்பது என் கனவுக்
குதிரை. அல்லது எனக்கு இருக்கிற
செயற்கைக் கால். அது இல்லாமல்
என்னால் வாழ முடியாது.
சைக்கிள் என்றால் எனக்கு கொள்ளைப்
பிரியமென்பது என் அம்மாவுக்குத் தெரியும்.
சைக்கிளை குளிப்பாட்டி, துடைத்து, எண்ணை தடவி, தலை
சீவி, பூ வைத்து அலங்கரித்து,
ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி யாரும்
பார்க்காமல் திருட்டுத் தனமாய் முத்தம் கொடுத்து
ஒரு ஓரமாய் நிறுத்திவைத்து அதற்கு
தின்பதற்கு சோறு கொடுத்த என்
சிறுபிள்ளைத் தனத்திற்கு சின்ன வயதிலேயே அம்மா
சிரித்திருக்கிறாள். நிறுத்தி வைத்த சைக்கிள் மீது
சிறுநீர் பெய்த தெருநாயை இழுத்து
வந்து அதன்மீது பழிக்கு பழியாக நானும்
நீர் பெய்ததைப் பார்த்து என் அப்பா மிரண்டு
போயிருக்கிறார். நான் சைக்கிளோடு பிறக்காவிட்டாலும்
சைக்கிளோடு இறப்பேன் என்று என் பாட்டி
நம்பி இறந்திருக்கிறாள். சைக்கிளுக்கும் எனக்குமான பந்தம் அத்தனை நெறுக்கமானது.
எதனால் அந்த பந்தம்? அதை
நான் சொல்லப்போவதில்லை. ரகஷியங்கள் என்பது காதலி போன்றது.
சைக்கிளுக்கும் எனக்குமான ரகஷியங்களின் தரிசனங்களைக் கண்டால் சில புதியவர்கள்
அரண்டு போகிறார்கள். கல்யாணமாகிவந்த புதிதில் என்; மனைவியே மிரண்டிருக்கிறாள்.
என் வீட்டில் இரண்டு சைக்கிள்கள் உண்டு.
கணவனும் மனைவியும் போல. இரண்டு கால்
உள்ள ஒரு ஆளுக்கு இரண்டு
சைக்கிள் எதற்கு என்று கல்யாணமாகி
வந்த புதிதில் என் மனைவி குழம்பிப்
போயிருக்கிறாள். நான் சிரித்தபடி மழுப்பலாய்
சொல்லியிருக்கிறேன். 'ஒன்னு பகல்ல ஓட்ட
இன்னொன்னு கனவுல ஓட்ட. அது
சாதாரண சைக்கில் இல்ல. சைய்க்கீளுஊஊ" என் பிரும்மாண்ட உச்சரிப்பைப்
பார்த்து அவள் விழந்து சிரித்திருக்கிறாள்,
'ய்யோய், மாமா! பேரீச்சம்பழத்து பழைய
இரும்பை கூச்சமே இல்லாம சைக்கிள்ன்னு
சொல்லற தைரியம் உனக்குத்தான்ய்யா வரும்.
அதை தூக்கி கடாசிட்டு புல்லட்டு
வாங்குயா. சும்மா புடுபுடுன்னு போகலாம்."
கர்பமாய் இருந்த என் மனைவி
சொன்னபோது நான் சிரித்தேன். சைக்கிள்
என்பது பழையதானாலும் தாத்தா பாட்டி போல
உறவும், சொந்தமும் என்று அவளுக்கு நான்
சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அவள் புரிந்துகொள்ளாமல் 'போய்யா
மாமா லூசு.. சைக்கிளு எப்படி
தாத்தா பாட்டி ஆகும். அதுக்கு
உசிர் இருக்கா?" கேட்டிருக்கிறாள். ஒரு
நாயை உதைத்தாலும், சைக்கிளை உதைத்தாலும் இரண்டுமே ஓடும். அதனால் நாய்க்கும்
சைக்கிளுக்கும் உயிர் உண்டு. மூக்கில்
காற்றிருக்கிற வரையில் மனுசனும், டியூப்பில்
காற்றிருக்கிற வரையில் சைக்கிளும் ஓடியாடி
வேலை செய்வார்கள். இரண்டுக்குமே காற்று அவசியம் என்பதால்
மனுசனுக்கும் சைக்கிளுக்கும் உயிர் உண்டு என்று
சொல்லி அவளிடம் நான் நிருபித்திருக்கிறேன்.
'சைக்கிளுக்கு உசிர் இருக்கா? என்னய்யா
மாமா இது கிறுக்குத்தனம். ரெண்டு
சைக்கிளை ஒரே வீட்டுல வருஷக்
கணக்கா நிறுத்தி வெச்சிருந்தாலும் அது குடும்பம் நடத்தி
குட்டி போடுமா? சொல்லு!" என்று
என் மனைவி அறிவாளி போல
பேசியிருக்கிறாள். என்னிடம் இருக்கிற இரண்டாவது சைக்கிள் யாருடைய சைக்கிள் என்று
அவளிடம் நான் சொல்லியிருந்தால், சைக்கிளுக்கு
என்ன, எனக்கே குழந்தை பிறந்திருக்காது.
மீனாட்சியை நான் கல்யாணம் செய்துகொள்ளாதது
சைக்கிளுக்கு செய்த துரோகம்தான்.
கர்பிணி
மனைவியைவிட காய்லாங்கடை சைக்கிள் மேல் எனக்கு பிரியம்
அதிகமென்று அவளுக்குத் தெரிந்ததும் சைக்கிளை அவள் சக்களத்தியாய், ஓரகத்தியாய்,
புருசனின் கள்ள மனைவியாய் நினைக்க
ஆரம்பித்தாள். சைக்கிள் என்பது பெண்களுக்கு காதலன்
கிடையாது. அது ஒரு போட்டி
ஆட்டக்காரி. சைக்கிளின் சிங்காரம் கூடக் கூட பெண்களுக்கு
அதன்மீது ஒரு வெறுப்பு வரும்.
சைக்கிள் ஒரு மகாராணி. அது ஒரு
இளவரசி. அது கன்னியாகவும், நங்கையாகவும்,
சிறுமியாகவும் ஆண்களோடு இருக்கிறது. சைக்கிளின் பொய்க்கோபத்தையும், சிணுங்களையும் கண்டால் பெண் கோபப்படுவாள்.
சைக்கிளுக்கு பிறப்பு உண்டு, இறப்பு
உண்டு, வாழ்வு உண்டு சரித்திரம்
உண்டு, மறுபிறப்பும், பாவம், புண்ணியமும் எல்லாம்
உண்டு என்று இமயமலை அடிவாரத்து
துறவி போல நான் பேசுவதை
கேட்டுவிட்டு யார் வேண்டுமானாலும் பைத்தியக்கார
ஆஸ்பிடலுக்கு தைரியமாக போன் செய்யலாம். சைக்கிளைப்
பொறுத்தவரை நான் கொஞ்சம் கிராக்கு
ஆசாமிதான். கிணற்று நீரை குடத்தில்
எடுத்துக்கொண்டு ஒற்றையடிப் பாதையில் தளும்ப நடந்து வந்த
பதினேழாம் பருவத்து மீனாட்சி என்பவள் என்னிடம் மனசை
பறிகொடுத்ததாய் ஒப்புக்கொண்ட அன்றே நான் முடிவெடுத்தேன்,
மிருதுவான இடத்தில் மீன் மச்சம் கொண்ட
மீனாட்சிக்காக வருசமெல்லாம் நான் கிறுக்கனாக இருக்க
விருப்பம் கொண்டேன். மீனாட்சிக்கும் எனக்கும் இருந்த பிறப்போடு ஒட்டிய
உறவின் கதையை நான் சொன்னால்
சைக்கிளுக்கும் எனக்கும் நடுவில் இருக்கிற விடுகதைகளும்
விடுபட்டுவிடும். மீனாட்சி...
மீனாட்சிக்கு நடு முதுகில் ஒரு
மீன் மச்சம் இருப்பதை அவள்
அம்மா கண்டுபிடிப்பதற்கு முன்பே நான் கண்டுபிடித்திருக்கிறேன்.
மீனாட்சியை பிரசவித்துவிட்டு அவளின் அம்மா கண்
விழிப்பதற்கு முன்பே அந்த பிஞ்சு
மீனாட்சியை கையில் சுமந்து அதிசயப்பட்டவன்
நான். எனக்கு அப்பொழுது வயது
இரண்டு. சைக்கிளின் முன் பிறப்பு சரித்திரத்தையே
நினைவில் வைத்திருப்பவனுக்கு இரண்டு வயதில் பார்த்த
மீனாட்சியின் மீன் மச்சம் நினைவில்
இருப்பது அதிசயமான ஒன்று கிடையாது.
பத்து மாத சிசுவாக
இருந்தபோதே மீனாட்சி சைக்கிள் ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டாள். மூன்று சக்கரங்கள் கொண்ட
அந்த சைக்கிள் மீனாட்சியின் சகோதரன் என்றே அறியப்பட்டது.
முகம் பார்த்து சிரிக்கத் தெரிந்த மீனாட்சியை மூன்று
சக்கர சைக்கிளில் உட்காரவைத்து பின்னால் இருந்து அலுங்காமல் தள்ளிவிடும்
சாரதியாக நான் இருந்தேன். சைக்கிள்
என்பது உறவு ஏற்படுத்தும் உயிர்
என்பதை அன்றுதான் கண்டுகொண்டேன்.
எல்லா குழந்தைகளுக்குமே மூன்று
சக்கர சைக்கிள் என்பது ஒரு கனவுதான்.
எனக்கு சொந்தமாய் ஒரு சைக்கிள் பாப்பா
வேண்டும் என்று அன்றைக்கு நான்
அழுதேன். தின்கிற சோற்றுக்கு சம்பாதிக்கும்
அளவுக்கு மட்டுமே உடம்பில் தெம்பிருந்த
என் அப்பனால் எனக்காக ஒரு சைக்கிள்
பாப்பாவை சம்பாதித்து தரவே முடியவில்லை. மாறாக
என் அம்மாவின் உதவியோடு எனக்கு நிஜமான பாப்பாவை
பெற்றுக்கொடுத்தார். சைக்கிள் என்பது கைக்கு கிட்டாத
கடவுள் என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன்.
மீனாட்சியை கொஞ்சவும், மீனாட்சிக்கு முத்தமிடவும், மீனாட்சியை இருகையால் கட்டிப்பிடித்து எடுத்து தோளில் போட்டுக்கொள்ளவும்
அனுமதி தந்த அவளின் அம்மா,
மீனாட்சியின் மூன்று சக்கர சைக்கிளை
ஓட்டுவதற்கு மட்டும் என்றைக்கும் அனுமதி
தந்ததே கிடையாது. சைக்கிள் என்பது தொட இயலாத
நெருப்பு என்பதை தெரிந்துகொண்டேன். தன்
இரண்டாம் வயதில் சைக்கிளோடு கீழே
விழுந்த மீனாட்சிக்கு கை கால் எல்லாம்
அடிபட்டபோதும் அவள் தனக்காக அழவில்லை.
தன் மூன்று சக்கர சைக்கிளின்
முன் சக்கரம் உடைந்துபோனதே என்றுதான்
அழுதாள். அன்றைக்கு மீனாட்சி சொன்னதுதான் 'சைக்கிளுக்கும் அடிபட்டால் வலிக்கும்" என்கிற செய்தி.
தன் ஒன்பதாம் வயதில்
மீனாட்சியால் குட்டி சைக்கிளில் உட்கார
முடியாமல் போனது. அவள் உடம்பு
ஒரு பூவின் மலர்ச்சி போல
பூரித்து நிற்பதை அந்த சைக்கிள்
எனக்கு ரகசியமாய் சொன்னது. ஒரு மழைக்காலத்தில், மேகங்கள்
தாழப் பறந்த நேரத்தில் அந்த
குட்டி சைக்கிள் பரணிற்கும், சமைந்த மீனாட்ச்சி தென்னை
ஓலை மறைப்புக்கும்; ஓய்வெடுக்க போனதை நான் வியப்போடு
பார்த்தேன். மெருகுக் குமரியாய் ஆன மீனாட்சியை மீண்டும்
நான் பார்த்தபோது அவள் புத்தம் புது
சைக்கிளோடு இருந்தாள். நல்ல நிறமும், மினுமினுப்பும்
கொண்ட அந்த சைக்கிளை பார்த்தபிறகுதான்,
சைக்கிளுக்கு பெண்ணின் வெட்கமும், குறும்பும் உண்டு என்பதையும் கண்டுகொண்டேன்.
சைக்கிள் என்பது ஒரு காதலி
என்று நான் முதல் முதலில்
அறிந்ததும் அப்பொழுதுதான்.
படிப்பை பாதியில் நிறுத்தி,
தயிர் சாதத்தை டிபன் பாக்ஸில்
அடக்கி, ஒரு மெக்கானிக் வேலைக்கு
நான் போக ஆரம்பித்த பிறகு
எனக்கு உலோகத்தின் சத்தமும், அதன் திடமும் ஒரு
உயிரைத்தான் நினைவூட்டியது. ஒற்யைடிப் பாதையில் படிப்பதற்காக சைக்கிளில் சென்று வந்த மீனாட்சி
யாருமில்லாத போது எனக்கு சைக்கிள்
ஓட்ட கற்றுக்கொடுத்தாள். சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து கதைபேசியபடி வெகு தூரம் வரவும்
சம்மதித்தாள். சைக்கிள் என்பது இரண்டு ஜீவன்களுக்கு
இடையிலான நரம்பு என்பதை மீனாட்சிதான்
எனக்கு புரியவைத்தாள்.
சம்பாதிக்கும் வக்கிருக்கிற ஒரு இளைஞன் தகப்பன்
சொல் கேட்கக் கூடாது என்கிற
எண்ணம் எனக்கு கிடையாது. என்றாலும்
என் அப்பன் சொல் பேச்சு
கேட்காமல் நான் எனக்காக ஒரு
சைக்கிளை வாங்கினேன். அது திருட்டு சைக்கிள்
என்பதும். அது யாருக்கு சொந்தம்
என்பதும் எனக்கு தெரிந்திருந்தாலும் அதை
நான் குறைந்த விலைக்கு வாங்கி,
அதன் வண்ணம் மாற்றி, வடிவம்
மாற்றி என் சைக்கிள் போல
ஆக்கிக்கொண்டேன். ஒரு சைக்கிளின்; ஆதியும்,
முடிவும், பிறப்பும் இறப்பும் அறிந்திருக்கிற ஒரு முனிவனின் சூட்சுமம்
தெரிந்தது அன்றுதான்.
நானும் மீனாட்சியும் இரண்டு
சைக்கிளில் ஒரே உயிராய் அமர்ந்து
சுற்றித் திரிந்தது ஒற்றையடிப் பாதையில் மட்டுமல்ல. சொர்க்கம் நரகத்தையும், ஈரேழு உலகத்தையும், கடக்கிற
- இருக்கிற - முடிவுற்ற காலத்தையும் சைக்கிள் கொண்டு சுற்றிப் பார்த்தோம்.
யாருமற்ற தனியிடத்தில் உயிர் பிஞ்சாய் நாங்கள்
உருகி இருந்தபோது, மரத்தடியில்
ஒன்றாய் நிறுத்தப்பட்ட எங்களின் சைக்கிள்களும் காதலித்தபடிதான் இருந்தது என்பதை சைக்கிள்களின் தேவதைகளால்
மறுக்க முடியாது.
எல்லா கன்னிப் பெண்களுக்கும்
சைக்கிள் ஓட்டும் பருவம் ஒருநாள்
முடிந்து போகிறது. மீனாட்சிக்கும் சைக்கிள் ஓட்டும் பருவம் ஒருநாள்
முடிந்துபோனது. அன்னசாகரத்து எருமை வியாபாரிக்கு மீனாட்சியின்
சைக்கிள் விற்கப்பட்டதை அதிர்ச்சியோடு நான் பார்த்தபோதுதான், கல்யாணம்
செய்துகொண்ட மீனாட்சி காரில் ஊர் விட்டு
செல்வதையும் கண்டேன். அவள் அழுத கண்ணீர்
எனக்கானதுதான் என்று நன்றாகத் தெரிந்தது.
மீனாட்சியை மீட்கும் வழி தெரியாவிட்டாலும் எருமை
வியாபாரியிடமிருந்து நான் அவள் சைக்கிளை
மீட்டேன். எருமை வியாபாரியிடம் நான்
வாங்கியது ஒரு உலோக சைக்கிளை
அல்ல. என் பழைய உயிர்
ஒன்றை. மீனாட்டி முடிந்துபோனால் வாழ்வும் முடிந்துபோவதில்லை. அதன்பிறகு நான் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.
ஓடுவது, ஆடுவது, கல்யாணம் செய்துகொண்டது,
பிள்ளை பெற்றது, இருப்பது, நடப்பது எல்லாம் அறுவடைக்குப்
பின் பெய்கிற மழையைப் போல...
நடக்கிறபடி நடக்கிறது நமக்கென்ன வந்தது என்கிற ஒரு
உஷ்ணமில்லாப் பெருவாழ்வு. ஆனாலும் ஓயாமல் வாழ்வதற்காக
ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
சம்சாரிகளின் ஓட்டப்பந்தயம் கொஞ்சம் வினோதமானது. வாழ்நாள்
முழுவதும் அவன் ஓடிக்கொண்டே இருப்பான்.
ஆனால் விரும்பிய இடத்திற்கு சென்று சேராமல் அவன்
கடைசி வரையில் ஒரே இடத்தில்தான்
இருப்பான். அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பை
ஆட்டுவது போல, தன் இளமை
வசீகரத்தைக்கொண்டு சம்சாரிகளுக்கு வானவேடிக்கை காட்டுகிற மனைவிகள் மட்டும் இல்லையென்றால் தோல்வியுற்ற
சம்சாரி வாழ்ந்தான் என்பதற்கு அடையாளமாக ஒரு குழந்தைகூட இருந்திருக்காது.
இறந்த பிறகும் நான் உயிரோடு
இருப்பது இப்படித்தான். இதோ நான் துருபிடித்து,
பழுதுபட்டு, கிறீச்சிடும் சத்தமெழுப்பும் ஒரு கிழட்டு சைக்கிள்
போல நான் துவண்டு இருக்கிறேன்.
சக்கரம் சுழன்றிருக்கிறது. வண்டி நகரவில்லை.
அந்த எலும்பு டாக்டர்
சைக்கிளைப் பிரிந்து மீண்டும் இறந்து போ என்கிறான்.
சைக்கிள் என் உடம்பில் இருக்கிற
எலும்பு. அதை எடுத்தால் நான்
மாமிசப் பிணம் ஆகிவிடுவேன் என்பது
அவனுக்குத் தெரியாது. ரத்தமும் சதையுமான மனுஷிக்கும், அவள் மேல் பித்தாய்
இருக்கிற மனுசனுக்கும் நடுவில் இருப்பது என்ன
உறவென்றே அறியாத மனிதர்களுக்கு, சைக்கிளுக்கும்
மனுசனுக்கும் இடையில் ஒரு ரத்த
உறவு சாத்தியம் என்பதை யார் சொல்வது?
இனி, மிதி சைக்கிளை
ஒரு மிதி மிதித்தால் உன்
முழங்கால் வெறும் அடுப்பெரிக்கும் விறகாகி
விடும் என்று டாக்டர் எச்சரித்திருக்கிறார்.
உலகம் வைத்தியர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டது. நான் மவுனமாக வீட்டோடு
முடங்கிக் கிடந்தேன். நடக்காத உடம்பு என்ன
உடம்பு? என்னுடைய, அவளுடைய சைக்கிள் இரண்டும்
சொல்வதற்கு கதையற்று துக்கத்தோடு சுவற்றோரம் நின்றிருப்பதை வேதனையோடு பார்த்தேன். சைக்கிள் ஒரு மிருகம். கீழே
தள்ளும். முறுக்கிக்கொள்ளும். சிணுங்கும். அடம் பிடிக்கும். குதிக்கும்
நொண்டும். அது குழந்தையாய் நம்மை
சீண்டிக்கொண்டே இருக்கும். சைக்கிள் பிரிவென்பது என்னை பைத்தியமாக்கியது. 'நான்
வெற்று இரும்பா? நான் உயிரில்லா ஜடமா?
மொட்டை முழங்காலுக்காக என் உறவை நீ
துறப்பாயா? நீ துறவியா?" சைக்கிள்
கண்ணீரோடு முறையிட்டது.
'மூட்வலி அதனால் சைக்கிள்
ஓட்டாதே என்று காசுக்கு ஊசி
போடும் வைத்தியன் சொன்னால் நீ ஒப்புக்கொள்வாயா? மூக்குச்;சளி அதனால் உன்
மனைவி மக்களை பராமரிக்காதே என்று
அவன் சொன்னாலும் அப்படியே செய்வாயா? மண்டைவலி, தொண்டைவலி என்று பதறுகிறாயே உன்
மனதின் வலிக்கு மருந்து யார்
போடுவார்கள்? என்னைவிட்டால் உனக்கு ஆறுதல் தர
யார் இருக்கிறார்கள்? நீ தொட்டுப் பழகியதால்தான்
நான் இற்று விழுந்துவிடாமல் இன்னமும்
இருக்கிறேன். நீ தொடாத பட்ச்சத்தில்
நான் துருப்பிடித்து உதிர்ந்துபோவேன்." சொன்னது சைக்கிளா, என்
மனசாட்சியா தெரியாது. ஆனால் அந்த வார்த்தை
முடிவடைந்தபோது சுவற்றோரம் நிறுத்தப்பட்ட இரண்டு சைக்கிள்களும் தொபீரென்று
தன்னால் விழுவதை என் கண்ணால்
கண்டு அதிர்ந்து நின்றேன்.
இனி முடியாது. சைக்கிளுக்கும்
முதுமை உண்டு. சைக்கிளுக்கும் மரணம்
உண்டு. நானே ஒரு சைக்கிள்.
ஓடாமல் இருக்க முடியுமா? ஓடுகிற
வரையில்தான் சைக்கிளும் மனிதனும் உயிரோடு இருக்க முடியும்.
யார் என்ன சொன்னால் என்ன?
குளிக்கும்போது முது தேய்த்து விடும்
மனைவி சொன்ன பேச்சையே கேட்காத
நான் முதுகுக்கு சோப்பு போடாத ஒரு
டாக்டர் சொல்லியா கேட்க வேண்டும்.
நட்சத்திரம் மிகுந்திருந்த ஒரு நல்லிரவில் யாருக்கும்
தெரியாமல் நான் சைக்கிளை எடுத்துவிட்டேன்.
வலி மிகுந்தாலும் வெறி கொண்டு சைக்கிளை
மிதிக்க ஆரம்பித்தேன். சில்லிட்ட காற்று என் முகத்தில்
மோதியபோது, மீனாட்சி என்ற கன்னிக்குச் சொந்தமான
சைக்கிள் எனக்கு சுகமான பழங்கதையை
சொல்லியபடி வந்தது. நான் மட்டுமா
கதை கேட்கிறேன். இதோ, இந்த வெட்ட
வெளியில் தெரிகிற வானத்தில் கொட்டிக்கிடக்கிற
விண்மீன்களில் ஒன்று, எங்கோ இருக்கிற
மீனாட்சிக்கு என் தேடியலுக்கிற வாழ்வின்
மீதிக் கதையை சொன்னாலும் சொல்லும்.
முற்றும்.
No comments:
Post a Comment