Thursday, August 11, 2016

வீடு - சிறுகதை



வீடு

சபித்து சாபம் விட்டு சூன்யம் வைத்தாலும் சரி, வெடிகுண்டு வீசி மண்டையை பிளந்தாலும் சரி, விடுமுறை நாட்களில் வாழ்வை சந்தோசமாய் கொண்டாடியே தீருவோம் என்று அத்தனை பேரும் கிளம்பிவிட்டார்கள். கூலிக்கு மட்டுமே வேலை என்பவர்கள் அப்படி போகலாம். மணிகண்டனால் அப்படி முடியாது. மூக்கை அடைத்தாலும், நாக்கை என்னவோ போல செய்தாலும், உடம்பு உஷ்ணமேறி தின்றதெல்லாம் திரவமாக வெளியேறினாலும் அன்றைய வே
லையை அன்றைக்கு அவன் முடித்தே ஆகவேண்டும்.ஆபீஸில், இன்னும் பிடுங்க வேண்டிய ஆணிகள் எவ்வளவோ பாக்கி இருக்கிறது. அதை பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது. அன்றைக்கு சம்பாதிப்பதை அன்றன்றைக்கே அனுபவித்து தீர்க்க வேண்டும் என்ற வெறி சமீபமாய் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. காபி ஷாப், ஷாப்பிங் மால், பீச், சினிமா, தீம் பார்க் என்று வாரத்தின் இறுதி நாளை கொண்டாடாவிட்டால் கடவுள் சபித்துவிடுவார், அது ஒரு சரித்திரப் பிழை ஆகிவிடும் என்பது போன்ற உத்வேகத்தில் எல்லோரும் வெறிகொண்டு, வேலைகளை துறந்து ஆனந்தமாய் வாழ்வை கொண்டாட கிளம்பிவிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட வெற்றுக் கொண்டாட்டங்களில் மணிகண்டன் என்றைக்குமே ஆர்வம் காட்டியது கிடையாது. அவனுக்கு பொறுப்புகளும் அதிகம், செய்து முடிக்க வேண்டிய வேலைகளும் அதிகம். ஓய்வில் இருப்பதும் ஒன் டு த்ரீ சொல்லி ஓடிப் போய் சவக் குழியில் படுத்துக் கொள்வதும் ஒன்றுதான் என்று நினைப்பவன். செத்த பிறகு கிடைப்பதே உண்மையான ஓய்வு என்று நம்புபவன். மூக்கும், மூளையும், இருதயமும் போல மனிதனும் ஒரு நொடி ஓய்வில்லாமல் துடித்தபடி இருக்க வேண்டும், அதுதான் அவன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கான அத்தாட்சி என்று தத்துவம் சொல்வான். மணிகண்டனின் இந்த அனாமத்து தத்துவங்களை அம்மா ரசிப்பதுமில்லை, அவளுக்கு அது பிடிப்பதுமில்லை.

'பெத்தவள அம்போன்னு விட்டுட்டு போய் அப்படி என்னதான்டா சம்பாதிக்கற? பணங்கறது மனுசனா பாத்து கண்டுபிடிச்சது. பாசங்கறது கடவுளா பாத்து கொட்டிக் குடுத்தது. அம்மான்னு அன்பா ரெண்டு வார்த்தை பேசு. காசு பணத்தில இல்லாத சந்தோசம் அதுல கெடைக்கும்."

அம்மா வெறுத்துப்போய் பேசும்போது மணிகண்டன் சிரித்தபடி நழுவிக்கொள்வான். முற்றும் துறந்ததாய் சொல்லிக்கொண்டிருக்கிற சாமியார்களே திட்டம் போட்டு காசை வேட்டையாடி கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, 'சீச்சி இந்த காசு கடிக்கும்" என்று காசை வெறுக்குமளவுக்கு அம்மா ஒன்றும் பைத்தியம் கிடையாது. அவளுக்கு காசையும் பிடிக்கும், கடவுளையும் பிடிக்கும், பணத்தையும் பிடிக்கும். பாசத்தையும் பிடிக்கும். இருக்கும் ஒரே பிள்ளை, கல்யாணம் கூட பண்ணிக் கொள்ளாமல் காசின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறான். வீட்டில் பேச்சுத் துணைக்கும் யாரும் கிடையாது. தனிமையில் இருந்து தவிக்கும் வேதனை. அதனால் புலம்பிக்கொண்டிருக்கிறாள்.

கலெக்சன் பணத்தை சரசரவென்;று எண்ணிக்கொண்டிருக்க அம்மாவிடமிருந்து போன். போனை எடுத்தால் புலம்பித் தீர்ப்பாள். போனின் குரல்வளையை நெறித்துவிட்டு மணிகண்டன் வேலையைத் தொடர்ந்தான். பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம்.... கடைசியாக எண்ணியதை ரப்பர் பேண்ட் போட்டு மற்ற கட்டுக்களோடு வைத்துவிட்டு காபி டம்ளரை பார்த்தான். அது என்றைக்கோ ஆறி உறுமாறி நாறிப் போயிருந்தது. நேரத்திற்கு சாப்பிடாமல், சரியாக தூங்காமல், உடம்பைக் கெடுத்துக்கொண்டு இப்படி கடுமையாய் வேலை பார்த்தால் எந்த தாயும் கவலைப்படத்தான் செய்வாள்.

'டே.. மணிகண்டா. நீ பொறந்தது, படிச்சது, சம்பாதிக்கிறது இதெல்லாம் எதுக்கு? கல்யாணம் பண்ணி கொழந்தை பெத்து அதுங்களோட நீ சந்தோசமா இருந்தானே அம்மாவுக்கும் சந்தோசம். இப்படி ஒரே அடியா ஒழைச்சி ஒண்ணுமில்லாம சாகறத பாக்கவாடா நான் உன்ன பெத்தேன்..?"

அம்மா கண் கலங்க பேசுவதை பார்க்க கஷ்டமாகத்தான் இருக்கும். இவனுக்கு ஒரு கல்யாணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்பதுதான் அம்மாவின் நீண்ட நாள் ஆசை. அதற்காக மெனக்கெட்டு தரகரிடம் சொல்லி பெண்ணும் தேடிக்கொண்டுதான் இருக்கிறாள். இதுவரை பெண் பார்க்கும் அந்த ஆபத்தான காரியத்திற்கு இவன் ஒப்புக்கொள்ளவில்லை. அவசரப்பட்டு கல்யாணம் செய்து, ஒரு குழந்தை பெற்று, குழந்தைகளுக்காகவே மொத்த வாழ்வையும் தியாகம் செய்து, கிழவனாய் போன பிறகு, 'எதற்கடா என்னை பெற்றாய்?" என்று பிள்ளையிடம் வசவு வாங்கி சாவதற்கு மனிதன் என்ன பிள்ளை வளர்க்கும் எந்திரமா?
மணிகண்டன் கல்யாணத்தை வெறுக்கவில்லை. எல்லோரும் செய்கிறார்கள் என்று ஒன்றும் தெரியாததை நாமும் செய்தால் விளைவு கோமாளித்தனமாகிவிடுமே என்ற பயந்தான். சரியான காலத்தில் முறையாக திட்டமிட்டு செய்துகொள்கிற கல்யாணத்தில்தான் சந்தோசமிருக்கும். அவசரப்பட்டு தலை கொடுத்து தலையை பேய்க் கூந்தலாக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் மணிகண்டன் உறுதியாக இருந்தான்.

அம்மா மீண்டும் போன் செய்தாள். மணிகண்டன் எடுக்கவில்லை. ஆடிட்டருக்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம், சிமென்ட் ஏஜென்சிக்கு மூன்று லட்சம், லேபர் காண்ட்ராக்டருக்கு ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம்.. எண்ணிய எல்லாவற்றையும் பட்டுவாடா செய்து மிச்சத்தை பேங்கில் போட்டு, நாளைக்கு எங்கே வேலை, எத்தனை பேர் தேவை என்று என்ஜீனியர், காண்ட்ராக்டரிடம் சொல்லி, சைட்டிற்கு சென்று அதற்கான ஏற்பாட்டை செய்து முடித்துவிட்டுதான் இவனால் வீட்டிற்கு போக முடியும். அதுவரை மூச்சு விட அவகாசம் எடுத்தாலும்  அடிவயிற்றில் அல்சர் அலற ஆரம்பிக்கும்.

மனிதர்களுக்கான கனவு இல்லங்களின் மதிப்பு இப்பொழுது லட்சத்தை தாண்டி கோடியை தொட்டுக்கொண்டிருக்கிறது. அடுக்கடுக்காய் கனவு இல்லங்களை கட்டிக்கொடுக்கிற இடத்தில் காசு கொட்டியிருப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் ஒற்றை ஆளாய் எத்தனை லட்சத்தை தனி ஒருவனாக எண்ணுவது? கரன்சி கவுன்ட்டிங் மெசின் வேறு இன்றைக்கு பார்த்து உடம்பிற்கு முடியாமல் படுத்துக்கொண்டது.  அதை கம்பெனி சர்வீசுக்கு அனுப்பிவிட்டு கட்டு கட்டாக வந்து குவிந்த பணத்தை அவனே எச்சில் தொட்டு வரட் வரட் என்று எண்ண ஆரம்பித்தான். எண்ண எண்ண விரல் நரம்புகள் வலியோடு சுண்டி இழுக்க ஆரம்பித்தது. உதவிக்கு இருக்கச் சொன்னால் அக்கவுண்ட்ஸ் பார்க்கும் பெண் முறைத்துக்கொண்டு ஓடுகிறாள். ஆபீஸ் பாய், அலறிக்கொண்டு ஓடுகிறான்.

'டேய்.. நாள் முழுக்க பணத்தையே எண்ணிட்டிருந்தா மனுசன் பாழாத்தான்டா போவான். என்னைக்கும் சந்தோசமா இருக்கவே முடியாது." அம்மா கோபத்தில் ஆதங்கப்பட்டு பேசினாலும் அந்த வார்த்தையிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. எத்தனை சம்பாதித்தாலும் நிம்மதியில்லை என்பதை அவனும் சமீபமாய் உணர்ந்திருக்கிறான். என்றாலும் பழனி மலைக்கு அரோகரா என்று இடுப்பில் துண்டோடு சாமியாராக போகிற அளவுக்கு அவனுக்கு துணிச்சல் கிடையாது. வாங்கி வந்த வரம் அப்படி. செய்கிற வேலை அப்படி.

லட்சங்களை முன் பணமாக கொடுத்து, இப்படி ஒரு அற்புதமான வீட்டை கட்டிக் கொடு என்று கட்டளையிடுகிறார்கள். ஒப்பந்தமிட்டு, ஒப்புக்கொண்டு பணத்தை வாங்கிவிட்டால் அந்த புராஜெக்ட் முடியும் வரை இவனால் ஓய்வைப் பற்றி யோசிக்கவே முடியாது.

குறித்த காலத்திற்குள், நல்லபடியாக ஒரு புராஜெக்ட் முடிந்தால் பத்து நாள் விடுமுறை எடுத்து எங்காவது போய்த் தொலையலாம். அப்படி தொலைகிற காலம் வருடத்திற்கு ஒரு முறை அமையும். அப்படி அமைந்தால் கோயில் குளம் என்று அம்மாவை கூட்டிக் கொண்டு போய் குஷிப்படுத்துவான். அம்மாவிற்கு அந்த சந்தோசமே போதுமானதுதான். அவள் சொல்வது போல பாசமே பெரிதென்று வீட்டிலிருந்தால் பணம் கிடைக்காது.

ஆடிட்டர், காண்ட்ராக்டர், பிளம்பர் அட்வான்ஸ், லேபர் கூலி, மணல், ஜல்லி, செங்கள்ளுக்கானது என்று தனித் தனியாக கணக்கிட்டு பணத்தை எண்ணி பிரித்து கட்டு கட்டி, அதை கணக்கில் எழுதி, கம்ப்யூட்டரில் ஏற்றிவிட்டு சரி, அம்மாவிடம் பேசலாம் என்று போனை எடுத்தால்... சிவப்பாய், அழகாய், ஒல்லியாய் சிரித்தபடி இரண்டு பேர் வந்து 'எக்ஸ்க்யூஸ்மீ சார்!" என்கிறார்கள்.

புதிதாய் கல்யாணம் ஆனவர்கள். கனவு இல்லத்திற்கு முன்பணம் கொடுக்க வந்திருக்கிறார்கள். எத்தனை மணி நேரம் தங்களது கனவு இல்லத்தை பற்றி அவர்கள் பேசிச் சாகடிப்பார்களோ தெரியாது. மணிகண்டன் வீட்டிற்கு போக இன்னும் சில மணி நேரங்கள் கூடுதலாக ஆகலாம்...

'சார் எத்தனை மாசத்தில வீட்ட முடிச்சித் தருவீங்க..?" முன் பணம் பதினைந்து லட்சத்திற்கான செக்கை பக்தியோடு கொடுத்துவிட்டு புத்தம் புது மனைவி வெட்கத்தோடு கேட்டதும் மணிகண்டனுக்கே என்னவோ போல இருந்தது.

அம்மாவும் இப்படி ஒரு அழகான பெண்ணை கட்டிக்கொண்டு வாழ்க்கையில் சந்தோசமா இருடா என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறாள். வந்தவர்கள் இருவருமே ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். காதல் கல்யாணம் செய்து கொண்டவர்கள். வயது முப்பதை தாண்டியிருக்காது. நன்றாக படிக்கிறார்கள்... ஆனந்தமாய் சம்பாதிக்கிறார்கள். கவிதை போல காதலிக்கிறார்கள். பிறகு குருவி போல ஆனந்தமாய் கல்யாணம் செய்துகொண்டு தங்களுக்கான கூட்டை கட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். கூட்டை அலங்கரித்து ஓவியமாக்கி, இசையால் நிரப்பி, குழந்தை பெற்று ஒன்றாக சந்தோசமாக கடைசிவரை சேர்ந்து வாழ்ந்து.. வாழ்வென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். அந்த பெண்ணின் முகத்தில் தெரிவது சந்தோசமல்ல. எதிர்கால கனவு.

மணிகண்டன் ஜன்னலின் ஸ்கீரீன் விளக்கி அவர்களுக்கு வெளியே காட்டினான். மாடியிலிருந்து பார்க்க, பிரம்மாண்;டமான அப்பார்ட்மென்ட் ஒன்று அசுரன் போல வளர்ந்துகொண்டிருந்தது. அதை சாதாரண கட்டடம் என்று சொன்னால் பூமியை படைத்த கடவுளே கோபித்துக் கொண்டு தலையில் கொட்டுவான். அது ஹாலோ பிளாக்கினால் கட்டப்பட்ட வெறும் கட்டடம் கிடையாது. ரீங்கரித்து பறக்கிற பல நூறு தேனிக்கள் வந்து தங்கி வாழப் போகும் ஒரு அற்புதமான கூடு. ஒரே வருடத்தில் அங்கே பல நூறு குடும்பங்கள் வந்து தங்கி பூத்துக் குலுங்கப் போகிறது. நெடுநெடுவென்று நின்ற கட்டடத்தை பார்க்க மணிகண்டனுக்கு பெருமிதமாக இருந்தது.

'பாருங்க மேடம்..  இது மாதிரி பல புராஜெக்ட் நாங்க முடிச்சி கொடுத்திருக்கோம். வீடு தரமா இருக்கணும். ரொம்ப நாள் நெலைச்சி இருக்கணும். அதுக்காக கொஞ்சம் கூடுதலா செலவு பண்றதில தப்பே கெடையாது. எங்ககிட்ட ஏமாத்து வேலை கெடையாது. என்னோட பத்து வருச அனுபவத்த வெச்சி சொல்றேன். கஷ்டப்பட்டு வீடு வாங்கறீங்க.. வேலை கொஞ்சம் கூடுதலா இருந்தாலும் இங்க வில்லங்கம் இருக்காது. நீங்க ஆயுசுக்கும் சந்தோசப்படற மாதிரி நல்ல வீடு வாங்கின திருப்தி இருக்கும். நமக்கு அதுதானே மேடம் முக்கியம்..."

மணிகண்டன் சொல்ல, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து திருப்தியாய் சிரித்துக்கொள்கிறார்கள்.

நிச்சயமா. உங்களோட மொத கொழந்தை உங்க சொந்த வீட்டுல சந்தோசமா விளையாடும். உங்களோட சந்தோசம்தான் எங்களோட சந்தோசம். எங்கள நம்புங்க." மணிகண்டன் சொன்னது விபாபாரத்திற்கே உரித்தான சாதாரண வார்த்தைதான். அந்த வார்த்தையே அவர்கள் சந்தோசப்பட போதுமானதாக இருந்தது. புது மனைவி தன் காதல் கணவனை வெட்கமாய் பார்த்து, ஆனந்தமாய் சிரிக்கிறாள். புருசன் பொண்டாட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஒத்துப் போய் ஒன்று போலவே யோசிக்கிறார்கள். குறுக்கிடாமல், வெட்டிக் கத்தறிக்காமல் அனுசரித்து நிதானித்து ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்கும்படி பேசுகிறார்கள். வீடு என்பது ஆசீர்வதிக்கப்பட்ட இவர்களைப் போன்ற தம்பதிகள் வாழ்வதற்காகவே கட்டப்படுகிற சாம்ராஜ்ஜியம்.

கணவனும் மனைவியுமாக காரில் அருகருகே அமர்ந்து சந்தோசமாய் செல்வதை பார்க்க மணிகண்டனுக்கு என்னவோ போல இருந்தது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் தனி மரமாக இருப்பது. அம்மா சொன்னது போல கல்யாணம் செய்து மனைவி குழந்தைகளோடு ஏன் சந்தோசமாக இருக்கக் கூடாது..? இவனே சரியென்றாலும், அம்மாவே ஆசைப்பட்டாலும் கல்யாணமென்பது கடவுள் நினைத்தால் மட்டுமே நடக்கிற ஒன்று. தள்ளித் தள்ளி போகிறதே என்று அம்மா வேதனைப்பட்டு நின்றபோது, மணிகண்டனின் நண்பன் அதற்கும் ஒரு வழி சொன்னான்...

கடவுளைத் தொழு கல்யாணம் நடக்குமென்று நண்பன் சொன்னதை நம்பி அம்மா, ஒருமுறை மணிகண்டனை சாமியிடம் இழுந்து வந்தாள். வலுக்கட்டாயமாக.  நண்பன் சொன்ன அந்த சக்திமிக்க கடவுள் வெந்தும் வேகாத ஒரு அரைகுறை மலையின் உச்சியில் கோயில் கொண்டிருந்தார்.  கிராமத்து தெய்வம். மண்ரோட்டை தாண்டி, ஓடை தாண்டி, ஒண்டித் தோப்பு தாண்டி, நாற்பதே வீடுகள் கொண்ட ஒரு பட்டிக்காட்டின் ஒற்றைக் டீக்கடை தாண்டி வந்து கொண்டே இருந்தால் அங்கு ஒரு மலை வரும். அங்கு வந்து உச்சியில் எதற்கு குடிபுகுந்தார் இந்த கடவுள் என்று மணிகண்டனுக்கு விளங்கவில்லை..

முட்டிப்போட்டு மூச்சுவாங்க மண்டியிட்டு மலைமீது ஏறி வந்து நின்றால் கம்ப்ரெசரைவிட அதிக காற்று மூக்கில் வருகிறது. முருகா முருகா என்று சொல்வதா, முழங்கால் முழங்கால் என்று கத்துவதா என்று புரியாதபடி ஒரு வலி. முழங்கால் வலி. ஒருவழியாக மலையேறி மேலே போய் பார்த்தால்... கோயில் சீண்டுவாரில்லாமல் அனாதையாய் நிற்கிறது. கோயிலை பார்த்ததும் மணிகண்டன் அதிர்ச்சியில் வாய் பிளந்தான். பிளந்த வாயை டாக்டர் வைத்துதான் மூட வேண்டும் என்பது போல அப்படி ஒரு அதிர்ச்சி.

சரியாக வளராத ஒரு குட்டை மனிதனின் உயரத்திற்கு கட்டடம் போல எதோ ஒன்றை கட்டி அதை கோயில் என்று சொல்வதை அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஊதினால் விழுந்துவிடுகிற பழைய கோயில். கிடைத்த கருங்கற்களைக் கொண்டு அடித்து கொத்தி ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி, சுண்ணாம்பு பூசி, சின்னதாய் எலி வளை போல என்னவோ செய்து அதற்குள் அவரா இவரா என்று தெரியாத நிழல் அடையாளத்தில் ஒரு சிலை வைத்து அதை சாமியென்றும், கட்டியதை கோயில் என்றும் யாரோ நம்பவைத்து ஏமாற்றியிருக்கிறார்கள்.

மணிகண்டன் நம்பிக்கையே இல்லாமல் கோயிலுக்குள் எட்டிப் பார்த்தான்.  வேலைகேட்டு வந்த சித்தாள் பெண் போல தயக்கமான ஒரு உருவம் உள்ளே தெரிந்தது. அனேகமாய் அதுதான் கடவுளாக இருக்க வேண்டும்.
ஜன்னலே இல்லாத அப்பார்ட்மென்ட்டின் நூற்றி எட்டாவது மாடியை, லிப்ட்டே இல்லாத படிகளில் ஏறி, வென்ட்டிலேட்டரே இல்லாத அதற்குள் உட்கார்ந்து காறறே இல்லாத அறையில், மின்சாரமில்லாத இருளில் இரு என்றால் சத்தியமாக எந்த மனிதனாலும் இருக்கவே முடியாது. ஆனால் இங்கே அதைவிட மோசமான ஒரு இடத்தில் கடவுள் இருக்கிறார். இத்தனை இருட்டில், புழுக்கத்தில், கொசுக்கடியில், தனிமையில் ஒருத்தர் இருக்கிறார் என்றால் நிச்சயமாக அவர் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் சக்தியுள்ள கடவுளென்று எப்படி நம்புவது? தனது கோயிலை சொந்தமாய் மராமத்து கூட செய்துகொள்ள முடியாத கடவுள் மற்றவர்களுக்கு செல்வம் கொடுத்து, கல்யாணம் பண்ணி வைத்து சந்தோசப்படுத்துவார் என்பதை மணிகண்டனால் நம்ப முடியவில்லை. என்றாலும் கும்பிட வந்துவிட்டு குதற்க்கம் பேசுவது சரியல்ல என்று பக்தியோடு நின்றான்.

என்னதான் கிராமத்து தெய்வமாக இருந்தாலும், உச்சி மலையில் கொதிக்கும் உஷ்ணத்தில் ஒற்றையாய் நிற்கிற கடவுளை நிந்தனை செய்வது மணிகண்டனுக்கே பாவமாகப் பாட்டது. கேட்ட வரம் கிடைத்தால், கருவறைக்கு டைல்ஸ் ஒட்டி, சுற்றிலும் மொசைக் போட்டு, கோயிலுக்கு ஒரு ஏ.சி போட்டுக் கொடுத்துவிடலாம் என்று அவன் அப்பொழுதே முடிவெடுத்தான்.

அய்யர் விளக்கேற்றி தேங்காய் உடைத்து ஊதுவத்தி காட்டி தீபாராதனை காட்ட ஆரம்பித்தார். கோயில்தான் பழையதென்றால், பூசாரிp அதைவிட அரதப் பழைய மனிதராக தெரிந்தார். இந்த வயோதிகர், தட்டுத் தடுமாறி மலையிலிருந்து புரண்டு விழுந்து விட்டால், மலையுச்சிக்கு ஆம்புலன்ஸ் வருமா? மணிகண்டன் பதட்டத்தோடு அவரையே பார்த்தபடி நின்றான். அம்மாவுக்கு சிதிலமான கோயில் குறித்தோ, சாமி படும் கஷ்டம் குறித்தோ கொஞ்சமும் அக்கறை கிடையாது. சூழ்நிலை மறந்து பக்தியோடு சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தாள். கெட்டு நின்றாலும் கேட்ட வரத்தை கொடுக்க கடவுளால் மட்டுமே முடியும் என்பது அவள் நம்பிக்கை. இருக்கிற வேலையெல்லாம் விட்டுட்டு இந்த சாமிய கும்பிடவாடா என்ன கூட்டிட்டு வந்தே.. மணிகண்டன் உடன் வந்த நண்பனை முறைத்தான்.

கடவுள்தான்டா நம்பல சோதிக்கணும்.. கடவுள நாம சோதிக்கவும் கூடாது சந்தேகப்படவும் கூடாது. ஏன்னா அது ஒரு நம்பிக்கை..

நண்பன் சொன்ன அந்த நம்பிக்கையை விடவும், அங்கு புழக்கத்திலிருந்த இன்னொரு நம்பிக்கை மணிகண்டனை அதிர்ச்சிகொள்ள வைத்தது.

வயதான ஒரு தம்பதி, அங்கிருந்த சில சரளைக் கற்களை எடுத்து ஒன்றன் மேல் ஒன்று அடுக்கிக் கொண்டிருந்தது. சாமிய வேண்டிட்டு இந்த கல்லால வீடு கட்டி வெச்சிட்டு போனா குடியிருக்க வீடும், அந்த வீட்டுல சந்தோசமான வாழ்க்கையும் கிடைக்குங்கறது ஐதீகமாம். அவர்கள் சொன்னதைக் கேட்டதும் மணிகண்டனுக்கு தூக்காமலே வாறிப் போட்டது.

அடப் பாவிகளா? இது வீடுன்னா, லட்ச லட்சமா கொட்டி செங்கல் மணல் சிமெண்ட்டெல்லாம் வெச்சி ஒசர ஒசரமா கட்டிட்டிருக்காங்களே.. அத என்னன்னு சொல்றது? மணிகண்டன் அதிர்ச்சி நீங்காமல் சுற்றிலும் பார்த்தான். மூன்று கல் அடுக்கி அதன் மீது ஒரு பலகைக் கல் வைத்தால் வீடு ரெடி. அதற்கு மேல் இன்னொரு கல் வரிசை வைத்தால் மாடி வீடு. ஆசைக்கு தக்கபடி சிங்கிள் பெட்ரும், டபுள் பெட்ரும் மாடி வீடு என்று ஏராளமான வீடுகளை ஏராளமான ஆட்கள் அங்கே கட்டிவைத்துவிட்டுப் போயிருக்காறர்கள். இன்னும் இத்தனை ஆட்கள் வீடில்லாமல் இருக்கிறார்களா? கடவுளை ஒத்தாசைக்கு வைத்துக் கொண்டு ஒரு புராஜெக்ட் ஆரம்பித்தால் பிசினஸ் பிய்த்துக்கொண்டு போகுமே.. தொடங்கினால் என்ன என்று உள்ளுக்குள் ஒரு எண்ணம் ஓடியது மணிகண்டனுக்கு..?

கடவுள் வந்து சித்தால் வேலை பார்த்து வீடு கட்டித் தருவார் என்று இவர்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருந்தால் ரியல் எஸ்டேட்காரர்கள் வேறு எதற்காக இருக்கிறார்களாம்? வீடு என்பதை மோட்சம் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொண்டாலும் வாழ்கிற காலத்திலேயே சீக்கிரம் செத்து சிவ மோட்சம் அடையவேண்டும் என்று ஏன் வேண்டிக்கொள்ள வேண்டும்? தொழில் போட்டியாக நின்ற மலையுச்சி அவதாரத்தை எதிரியாக நினைப்பதா, கடவுளாக நினைப்பதா என்ற குழப்பம் வந்துவிட்டது மணிகண்டனுக்கு.

வீடு கட்ட ஒரு சாமி, திருமணமாக ஒரு சாமி, குழந்தை பெற ஒரு சாமி, வேலை கிடைக்க ஒரு சாமி என்று தினுசுக்கு ஒரு கடவுளை கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இதுவும் நம்பிக்கைதான். மணிகண்டன் நம்பினான்.

 அந்திச் சூரியனையும், பேய் போல காற்றில் ஓடுகிற மேகத்தையும் உச்சி மலையில் நின்று சில நிமிடம் மவுனமாகப் பார்த்தான். எத்தனை பெரிய வெட்டவெளி.. இவையெல்லாவற்றையும் மனைகளாக்கி, கட்டி முடித்து காசாக்கினால் எத்தனை கோடிகள் தேறும்? கடவுள் மனது வைத்தால் மயானத்தை விட்டு மற்ற இடத்தையெல்லாம் வீடாக்கி காசாக்கலாம். ஆனால் ஜனமில்லாத இடத்தில் பணமும் இருக்காது. பிசினஸ{ம் நடக்காது. கோயிலில் குடிகொண்ட அப்பாவி சாமியை பாவமாய் பார்த்தான்.

ஆறுமணிக்கு எழுந்து எட்டு மணிக்கு சைட்டுக்கு சென்று ஆட்கள் வந்துவிட்டார்களா, லோடு வந்துவிட்டதா என்று பார்த்து என்ஜீனிரிடம் பிளானைச் சொல்லிவிட்டு, அதற்கப்புறம் ஆபீஸ் வந்து புது ஆட்களை பிடித்து, நயமாக பேசி, அக்ரிமென்ட் போட வைத்து, அட்வான்ஸ் வாங்கி, காசை வீடாக்கி, அவர்களிடம் சாவி கொடுத்து, அடுத்து எங்கே நிலம் பிடிக்கலாம், எங்கே மனை போடலாம் என்று காரில் சுற்றி கண்டு பிடித்து.. ரியல் எஸ்டேட் வேலை என்பது கடவுளைப் போல நின்ற இடத்தில் வரம் கொடுக்கிற வேலை கிடையாது. கண்ட இடத்தில் அலைந்து சுற்றி வேலை பார்க்க வேண்டும். இது கடவுள்க்கு புரிகிறது. அம்மாவுக்கு புரியவில்லை..

மீண்டும் ஒரு முறை அம்மா போன் செய்துவிட்டாள். எடுத்தால் அறை மணி நேரம் பேசித் தீர்ப்பாள். கம்ப்யூட்டரில் வரவு செலவு கணக்கை அப்டேட் செய்து. அதை பிரிண்ட் எடுத்து ஒரு போல்டரில் போட்டு, போல்டரை ஒரு பீரோவில் வைத்து பூட்டி, சாவியை வழக்கமான இடத்தில் மாட்டி, பணத்தை எடுத்துக்கொண்டு விளக்குகளை அணைத்த பிறகுதான் நினைவுக்கு வந்தது. கார் டிரைவர், அவனுக்கு கல்யாண நாள் என்பதால் கோயிலுக்கு போகவேண்டும் என்று சொல்லியிருந்தான். இப்பொழுதே மணி ஆறு. பணத்தை உரியவர்களிடம் பட்டுவாடா செய்துவிட்டு வீட்டிற்கு போக எட்டாகிவிடும். அதன் பிறகு கோயில் திறந்திருக்குமா?

கார் பக்கத்தில் நின்றிருந்த டிரைவர் அவனை விரோதியை போல பார்த்தான். பசப்பாக ஒரு புன்னகை பூத்து மணிகண்டன் காரில் அமர்ந்தும் ராக்கெட் வேத்தில் அவன் கதவை மூடியதை வைத்தே அவன் கோபத்தை புரிந்துகொள்ள முடிந்தது. இருந்த கோபத்தில் அவனாலும் பேச முடியவில்லை, சங்கடத்தில் இவனாலும் பேச முடியவில்லை. வேலை முடித்து வீட்டின் பக்கத்தில் வந்து காரை நிறுத்த, மணி ஒன்பது.

டிரைவருக்கு கல்யாண நாள் கோவிந்தா நாள் ஆகிவிட்டது. மணிகண்டன் சங்கடத்தோடு இறங்க, டிரைவர் கோபமாய் சொன்ன வார்த்தை.. 'நாளைக்கு உனக்கெல்லாம் கார் வராது.. ஆட்டோவுல போய்க்கோ.."
'ஏன் சார்..?"
'நீங்க இன்னும் கம்பெனிக்கு பேமென்ட் செட்டில் பண்ணலையாமே. ஐம்பதாயிரம் பாக்கியிருக்கு அத கட்டினாதான் கார் வரும்னு ஓனர் சொல்லச் சொல்லிட்டார்..." டிரைவர் அதற்கு மேல் நிற்கவில்லை. காரின் பின்புறத்தில் அவன் கோபம் தெரிந்தது.

கார் போன பிறகு மணிகண்டன் தனது வீட்டை பார்த்தான். தெரு வெளிச்சமில்லாமல் இருளோவென்று இருந்தது. இருட்டில் எங்கே கால் வைப்பது என்று குழப்பமாக இருந்தது. சாக்கடை வீச்சம், பன்றியின் உறுமல், பசியின் தளர்ச்சி. அவன் தட்டுத் தடுமாறி குழியிறங்கி மேடேறி தனது வீட்டை அடைந்தான். கட்டிக்கொடுப்பது அப்பார்ட்மென்ட் வீடென்றாலும் இவன் குடியிருப்பதென்னவோ சிங்கிள் பெட்ரும் வீட்டில்தான். அது கூட வாடகை வீடு.

அம்மா வீட்டு வாசலில் இருளில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு பக்கத்தில் பழைய தட்டு முட்டு சாமான்களும், பாய் தலையணை, பழைய துணிகளும் இறைந்து கிடந்தது. எல்லாவற்றையும் வெளியே போட்டுக்கொண்டு இங்கெதற்காக உட்கார்ந்திருக்கிறாள்? வீட்டிற்குள் பாம்போ, பேயோ நுழைந்துவிட்டதா?,

'ஏன்டா? அவசரத்துக்கு போன் பண்ணா எடுக்க மாட்டியாடா? நான் செந்திருந்தா என்னடா பண்ணியிருப்பே..?"

அம்மா கண் கலங்க கேட்டதும் மணிகண்டனுக்கு எதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று புரிந்தது. ஆயிரமாயிரம் வீட்டைக் கட்டிக் கொடுத்த பிரபலமான ஒரு புரமோட்டர்ஸ்ஸின் முதுகெலும்புதான் மணிகண்டன். ஆனாலும் அங்கே அவன் வேலை பார்ப்பது சம்பளத்திற்கு. ஆறு மாத வாடகை பாக்கிக்காக வீட்டு ஓனர் அம்மாவையும், இற்றுப்போன உபயோகமற்ற பாத்திரப் பண்டங்களையும் தூக்கி தெருவில் வீசிவிட்டு வீட்டை பூட்டியிருக்கிறான்.

சற்றைக்கு முன் கூட லட்ச லட்சமாக பணத்தை எண்ணி யார் யாருக்கோ பட்டுவாடா செய்துவிட்டு வந்திருக்கிறான் மணிகண்டன். ஆனால் அவனுக்கென்று அதில் ஒன்றும் கிடையாது. பத்து வருட அனுபவத்தில் அவன் எண்ணிக் கொடுத்தது எத்தனை கோடி கோடி என்பது எண்ணிய பணத்திற்கும் தெரியாது. அவனுக்கும் தெரியாது. ஆனால் அவனுக்கென்று ஆண்டவன் எழுதி வைத்தது தூசும் தும்பும் மட்டும்தான்.

ஒரு ஏழையின் அழுகை ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமானது. இந்த முறை அவன் பேசப் போவதில்லை. ஓனரிடம் அழுதாவது வாய்தா வாங்குவது என்று முடிவெடுத்து ஓனருக்கு முன்பாக கண்ணீரோடு போய் நின்றான். காசென்று வந்துவிட்டால் கருணையாவது கண்ணீராவது. அவன் கன்னம் வீங்குமளவுக்கு பளீரென்று அறைந்தான்.

'காலையில பணத்த குடுக்கறேன்னு சொல்லிட்டு ஊர் மேயப் போயிட்டியே.. வாடகைய எப்பத்தான்டா தருவே?"

'சார்.. உங்களுக்கே தெரியும்.. எனக்கு ஆக்சிடென்ட் ஆயிட்டதால நெறைய கடானாயிடுச்சி சார். அதான் டிலே. நான் அடுத்த மாசம் கேரண்ட்டியா செட்டில் பண்ணிடறேன் சார்.."

'ஏன்டா நீ வாங்கற சம்பளமே இருவதாயிரம்.. அத வெச்சி ஆறு மாச வாடகை முப்பதாயிரத்த ஒரே மாசத்தில செட்டில் பண்ணிடுவியா? இனிமே உன்கிட்ட பேச்சே  கெடையாது. நீ வேற வீடு பாத்துக்கோ"
ஓட்டை பாத்திரமொன்றை எட்டி உதைத்தபடி சொல்லிவிட்டு போன ஓனரை பரிதவித்துப் பார்த்தான் மணிகண்டன். இந்த இரவில் வீடில்லாமல் எங்கே போய் தங்குவது? மணிகண்டனுக்கு தன்னையும் மீறி அழுகை வந்துவிட்டது.. அவசரமாக தர்மாவிற்கு போன் போட்டான். தர்மா, மணிகண்டனின் முதலாளி.

'சார்.. வாடக தரமுடியாமல ஓனர் வீட்ட காலி பண்ண சொல்லிட்டான். எமர்ஜென்சிக்கு எங்கயும் போக முடியல. இன்னைக்கு ஒரு நைட் ஆபீஸ்ல தங்கிக்கறேன்;.." என சொல்லி முடிப்பதற்குள் வந்த பதில்..

'டே.. டே.. டேய். பாத்திர பண்டத்தல்லால் கொண்டு போய் ஆபீஸ்ல கொட்டி கலீஜ் பண்ணிடாதே. ஒரு நைட்தானே... பிரண்ட்ஸ் வீட்ல எங்கியாச்சும் தங்கி அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ. நான் நாளைக்கு வர்றேன.; பேசிக்கலாம்..?

மலக்காட்டில் மேய்கிற பல் விளக்காத பன்றியிடம் தின்பதற்கு எதையோ கடன் கேட்டது போல அருவெறுப்பாகிவிட்டது மணிகண்டனுக்கு. பெங்களுர் சொகுசு வீட்டில் உட்கார்ந்துகொண்டு பெரிய ரோமப் புடுங்கி போல பேசுகிறான். மணலின் ஒரு துகள் கூட திருடாமல் பத்து வருடம் அவனுக்காக உண்மையாக உழைத்திருக்கிறான். உழைப்பைத் தின்றவன் கஷ்டமறிந்து உதவியிருக்கலாம். அதுதான் நியாயம். விபத்து செலவுக்கு இரண்டு லட்சம் செலவு செய்துவிட்டாராம். அந்த வருத்தம். இரண்டு லட்சத்தை எந்த ஜென்மத்தில் அடைப்பானோ என்ற ஆதங்கம். ஆபீசை சொந்த வீடாக்கி அங்கேயே தங்கிவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம்.. குதிரை தானே புல் மேய்ந்து தானே வளர்ந்து கொழுகொழுவென்று நிற்கவேண்டும். அப்படி நின்றாள் இவர்கள் சவாரிக்கு மட்டும் அதை சவுக்கால் அடிப்பார்கள்.

மணிகண்டன் கோபத்தையும் மீறி அடுத்து என்ன செய்வதென்று புரியாத குழப்பத்தில் நின்றான். விரட்டப்பட்ட வீட்டிற்கு முன்னால் நிற்கவும் அவமானமாய் இருந்தது. தன் உடமைகளை ஓரம் தள்ளி வைத்துவிட்டு, அம்மாவை மட்டும் அழைத்துக் கொண்டு அவளை வெளிச்சமுள்ள வேறு ஒரு இடத்தில் அமர வைத்தான்.. அந்த இடம்.. சொன்னால் வெட்கக் கேடு..

மணிகண்டனின் ஓனர், ரியல் எஸ்டேட் கடவுள், தர்மமாகாப் பிரபு, ஒரு முறை புல்லாக சரக்கை ஏற்றிக்கொண்டு அவனிடம் குடிபோதையில் கேட்டது நன்றாக நினைவிருக்கிறது.

'டே பையா உன் சர்வீஸ்ல, உன் சூப்பர்வைஸிங்கல நீ சுமாரா எத்தனை வீடுடா கட்டி குடுத்திருப்பே.."

மணிகண்டன் தர்மாவிடம் சேர்ந்து பத்து வருடமாகிறது. படிப்பு குறைச்சல்தான் என்றாலும் எந்த வேலையும் அவனிடம் நம்பி ஒப்படைப்பார். வீட்டிற்கான டோக்கன் அட்வான்ஸ் வாங்குவதிலிருந்து அவருக்கான பான்பராக் பர்சேஸ் செய்வது வரையில் எல்லாவற்றையுமே விருப்பத்தோடு செய்கிற திறமைசாலி என்று அவரிடம் பேரெடுத்திருக்கிறான். சிங்கிள் பெட்ரும், டபுள் பெட்ரும், டூப்ளக்ஸ் வீடு;கள், பங்ளாக்கள், அப்பார்ட்மென்ட்டுக்கள் என்று கணக்கிட்டால் அவன் மேற்பார்வையில் கட்டப்பட்ட வீடுகள் ஆயிரத்தை தாண்டும்.. அவன் பார்த்து பார்த்து கட்டிய வீட்டில் இன்றைக்கு எல்லோரும் சந்தோசமாக குடியிருக்கிறார்கள். இன்றைக்கு அவன் இருப்பது..?

ஓராயிரம் கனவு இல்லங்களை கட்டிக்கொடுக்க முட்டுக் கொடுத்தவனுக்கு ஆண்டவன் படுக்க கை காட்டி பாய் விரித்த இடம்.. தெருவோர பயணிகள் நிழற்குடை.

'இத்தனை வருசமா நீ ஓடி ஓடி சம்பாதிச்சது என்ன இங்க ஒக்காரா வெக்கத்தானாடா?""


அம்மா வேதனையை அடக்கியபடி கண்ணீரோடு கேட்டுவிட்டு சுருண்டு படுத்துவிட்டாள். மணிகண்டன் கண்ணீரை அடக்கியபடி வெறித்துப் பார்த்தான். தூரத்தில் வானத்தை முட்டிக்கொண்டு அடுக்கடுக்காய் அப்பார்ட்மென்ட்டுக்கள் வெளிச்ச ஜோடனைகளோடு தெரிந்து.
முற்றும்

No comments: