Saturday, November 2, 2019

வியாழன் மறுவீடு புகுதல் – சில பரிகார விளக்கங்கள்.


வெளியே காக்-காவென்று ஒரே சத்தம். இன்னும் பொழுது விடியவில்லை. ஜன்னல் வழியாகத் தெரிந்த வானம் ஒரே புகைமூட்டமாக இருக்கிறது. அந்தக்காலத்தில் ஒரு பழக்கம் உண்டு. தூங்கி எழுந்ததும் முதல் காரியமாக தன்முகத்தைத் தானே பார்த்துக்கொள்வார்கள். சிறிய கண்ணாடியில்.. அன்றைய நாளை இனிய நாளாகத் துவங்குகிறார்களாம். தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல இதுவும் தொட்டுத் தொடரும் பாரம்பரியமானதொரு மூட நம்பிக்கைதான். கண்ணாடியில் தெரிவது கடவுள் இல்லை. அது ஒரு மனித முகம். தூங்கி வழிகிற அசட்டு முகம். அதில் நல்லதும் கெட்டதும் எழுதப்பட்டிருக்காது. வாயைப் பிளந்துகொண்டு எச்சில் வழிய தூங்கும் சிலருக்கு கடைவாய் ஓரத்தில் யானைத் தந்தம் அளவுக்கு வெள்ளைக் கோடுகள் வேண்டுமானால் முளைத்திருக்கலாம். அந்த முகத்தில் வேறு எந்த அதிசயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் முகத்தைப் பார்த்துக்கொள்வார்கள்.


     உங்கள் முகத்தை நீங்களே பார்த்துக்கொண்டால் பூபாளம் கேட்குமா? பூமாரி பொழியுமா? தேனாறும் பாலாறும் தெருவில் ஓடுமா என்றால் ஓடாது. ஆனாலும் பார்த்துக்கொள்வார்கள். பத்துவருடத்துக்கு முன்பு ஒரு பெரியவர் வீட்டில், விடிகிற நேரத்தில் ஒரே கதறல்.

என்னாச்சிப்பா என்று வீடே பதறுகிறது.

“கண்ணாடியில முகம் தெரியல. என்னவோ ஆயிடுச்சி.  பயமாருக்கு. வயித்த கலக்குது”.

விடியற்காலையில் வயதான முதியவருக்கு வயிற்றைக் கலக்குவது இயற்கையான உபாதை. அது இல்லையென்றால்தான் ஆபத்து. உடனடியாக மருத்துவரிடம் ஓட வேண்டும். வயிற்றைக் கலக்கினால், அது நல்லது. அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை.

கண்ணாடியில் முகம் தெரியவில்லை என்பது ஆபத்தானது.

இக்கட்டான அந்த சந்தர்ப்பத்திலும் அவர் கேட்டது இரண்டே இரண்டு சந்தேகங்கள்.

எனக்கு கண்கள் தெரியவில்லையா? குருடாப் போச்சா?

இரண்டாவது கேள்வி.. இன்னும் பயங்கரமானது.

நான் உயிரோடுதான் இருக்கிறேனா?  இல்லை செத்துவிட்டேனா,?

இறந்துபோனவர்களின் முகம் கண்ணாடியில் தெரியாது என்பார்கள். அப்படியென்றால் அவர் பேயாக மாறிவிட்டாரா? ஆனால் அவருக்கு கால்கள் இருக்கிறது.

“அப்பா நல்லா பாருங்க. கால் இருக்கு. அதுல கருப்பு கயிறு கட்டியிருக்கு...“

அவர் உயிரோடுதான் இருக்கிறார். அப்படியென்றால் கண்ணாடியில்தான் பிழை. கண்களில் பழுதில்லை. ஏனென்றால் கால்களில் கட்டியிருக்கும் கயிறு அவருக்கு நன்றாகத் தெரிகிறது.

நேற்றுவரை கண்ணுக்குத் தெரிந்த கோயில் கோபுரம்
இன்றைக்குத் தெரியவில்லையே..ஏ.. ஏ
என்னாச்சி ராசா என் ராசா..
லா லா லோ லோ எந்தன் ராசா..ஆ.. ஆவ்..

சினிமா பாடல்கள் வரம்பற்றவை. உணர்ச்சிகளைத் தூண்டுபவை. பத்து பைசாவிற்கு உதவாத மனித சோகங்களை அது காவியமாக மாற்றுவதற்கு முயற்சிக்கும். சிலநேரத்தில் வெற்றியும் பெறும்.

மருந்துக்கு கடன் வாங்கிய வேப்பெண்ணெய் கசப்பாக இருந்தால் அது யார் குற்றம்? இப்போது இதுதான் கேள்வி.

காலையில் எழுந்து தன்முகத்தை தானே பார்த்துக்கொள்வதே முட்டாள்தனம். இதில், அந்த அழகு முகம் - கண்ணாடியில் தெரியவில்லை என்று வீட்டில் அமர்க்களம் செய்தால் வயதான முதியவர்களை எப்படி பார்த்துக்கொள்வது?

முன்பே பலமுறை சொன்னதுதான்... குழந்தைகள் எப்போதுமே புத்திசாலிகள்.

“தாத்தா... கண்ணாடிய பாரு. அது முன்னாடி இல்ல. பின்னாடி.“

குழந்தைகளுக்கு தெரிவது சிலநேரத்தில் பெரியவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் தெய்வத்தின் அவதாரம்.

“உனது முகம் உனக்கே தெரியவில்லையா? கண்ணாடியைத் திருப்பிப் பார்.“

இங்கே இதுதான் விதி.

“இப்போது முகம் தெரிகிறதா? மூச்சு வருகிறதா? உனக்கு நூறு ஆயுசு. இனிமே காலங் காத்தால கண்ணாடியில முகம் பாத்துட்டு வீட்டுல அமர்க்களம் பண்ண நல்லாருக்காது பாத்துக்க”.

நல்வினைப் பயனாக இப்போதெல்லாம் யாரும் அப்படி செய்வதில்லை. மாறாக இப்போதெல்லாம் செல்போன் பார்க்கிறார்கள்.

கிழிந்த்தது போ. ஊத்தப்பத்திற்கு பதிலாக பீட்சாவா? உப்பு சேத்துக்கப்படாது. ஆனா ஊறுகாய் திங்கலாமா? விளங்கிடும்.

கண்ணாடியில் முகம் பார்ப்பதைவிட செல்போன் பார்ப்பது பெரும் கேடு. ஆனால் தலைமுறை மாறுகிறது. விஞ்ஞானம் வளர்கிறது. மந்தைகளோடு ஓடாவிட்டால் தனி மரம் தோப்பாகாது. இது ஒரு சமூக விதி. ஒருவன் செய்தால் முட்டாள்தனம். ஊரே செய்தால் நடைமுறை வழக்கு. நான் செல்போனை பார்த்தபோது மணி ஐந்து கூட ஆகவில்லை. அதற்குள் காது கிழிகிறபடி வெளிய காக்-கா கூச்சல். இத்தனை காலையில் எழுந்து இத்தனை பரபரப்பாக காகங்கள் கத்துவதை எப்படி புரிந்து கொள்வது?

அதை எப்படியும் புரிந்துகொள்ளத் தேவையில்லை. அது காக்கைகளின் பிரச்சனை? காக்கைகளின் உரையாடல்களை புரிந்துகொண்டு இந்த மனிதகுலம் இனிமேல் இயற்கை வழிக்கு திரும்பப் போவதில்லை. போனால் நல்லது. ஆனால் போகாது. காக்கை கத்தினால் சோறு வை. வேடிக்கை பார். கடமை முடிந்தது.

     இந்த உலகம் காலை நேரத்தில் இரண்டு விதமாக மாசு படுகிறது. ஒன்று காற்று. இன்னொன்று செய்தித்தாள்கள். உலகத்தில் நடந்த குற்றச்செயல்கள் அத்தனையையும் அச்சடித்து பிரதி எடுத்து வீட்டுக்கு வீடு விநியோகம் செய்கிறார்கள். வங்கியில் கடன் வாங்கிய கார்ப்ரேட் முதலாளி வெளிநாட்டிற்குத் தப்பி ஓடுகிறான். இதை படித்துவிட்டு நாம் என்ன எதிர்வினை செய்வது? அவனை துரத்திச்சென்று பிடிக்க முடியுமா? நாம்தான் போலீசா? எதிர்க்கேள்வி கேட்க முடியுமா? இதை ஏன் என்னிடம் சொல்கிறாய்? கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள்.. இதை படித்துவிட்டு நாம் என்ன செய்யவேண்டும்? குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமா? நாம்தான் நீதிமன்றமா? தண்டிக்கும் அதிகாரமும், தடுக்கும் வல்லமையுமற்ற பொதுமக்களிடம் குற்றச் செயல்கள் குறித்து விளக்கிச்சொல்லி எதை எதிர்பார்க்கிறார்கள்? குற்றங்கள் மட்டுமே செய்திகள் என்று நம்புகிற மேதமையை ஊடகம் குறைத்துக்கொள்ளாதவரை அங்கே எதுவும் மாறப்போவதில்லை. இது காட்சி ஊடகத்திற்கும் பொறுந்தும்.

நாம் நல்லதையே நினைப்போம். நல்லதையே யோசிப்போம். இப்போது குரு பெயர்ச்சி வந்துவிட்டது.  விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு அக்டோபர் 29ம் தேதி மாறுகிறார். பொருளாதாரம், திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சிக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். சிலருக்கு யோகம். சிலருக்கு சோதனை. பரிகாரம், பூசை, வேண்டுதல் என்று ஜோதிடத் தொழில் விறுவிறுப்படைகிறது. பலரது திண்டாட்டம். சிலருக்கு கொண்டாட்டம். குரு பார்க்க கோடி நண்மை. யாருக்கு என்பதுதான் கேள்வி.

     தீதும் நன்றும் பிறர் தர வராது. இது ஒரு பொது விதி. சில இடத்தில் செல்லுபடியாகும். சில இடத்தில் அதற்கும் தண்ணி காட்டுவார்கள். ஒரு பாவமும் அறியாதவர்கள் துன்பப் படுகிறார்களே.. அப்பாவிகளுக்கு நன்று வராமல் தீது வரக் காரணமென்ன?

காசு வாங்கிட்டு ஓட்டு போட்டாங்கல்ல.. அனுபவிக்கட்டும்.

பொருளுள்ள வாதம்தான். குடிமக்கள் எவ்வழி. அரசன் அவ்வழி. மோசமான மனிதர்களால் மோசமான அரசாங்கத்தையே உருவாக்க முடியும் என்று பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே சிந்தித்து செதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்த சிந்தனை இன்றும் செல்லுபடியாகிறது. தயிர் கடைந்தால் வெண்ணை கிடைக்கும். விசத்தை கடைந்தால்?

ஒன்றை மறக்கக் கூடாது. எல்லா சர்வாதிகாரிகளும் மக்களுக்கு மத்தியிலிருந்துதான் உருவாகிறார்கள். உத்தமர்களும் அப்படியே.

இப்போது குருப் பெயர்சிக்கே திரும்பலாம்.

குருவுக்கு பரிகாரம் செய்தால் நல்லது நடக்குமா என்றால் நடக்கும். ஆனால் அந்தப் பரிகாரம் மனதளவில் நடக்க வேண்டும். கோயிலுக்கு போவது, குளத்தில் குளிப்பது, யாகம் செய்வது, தானம் தருவது, பூசை செய்வது, உண்டியலில் பணம் போடுவது இவையெல்லாம் செய்தால் நல்லதா என்று கேட்டால் அதுவும் நல்லதே. ஆனால் கடுகளவு கூட உங்களது துன்பம் மாறாது.. ஒன்பது கோள்களில் ஆளவில் பெரியது வியாழன். நெருப்பை வளர்த்து யாகம் செய்து அதில் நவதானியம் போட்டு புகை விட்டு அவ்வளவு பெரிய கோளை நகர்த்த முடியுமா என்றால் இம்மியளவும் நகறாது.

மனமே மந்திரம். செயல்பாடுகளே பரிகாரம்.

ளப்பறிய ஆற்றல் கொண்ட ஒரு இயற்கை சக்தி இருப்பதாய் சொல்கிறார்கள். அது உண்மையா தெரியவில்லை. இருந்தால் நல்லது. நான் சொல்வது இறைக் கோட்பாடல்ல. இயற்கை கோட்பாடு. இப்பிரபஞ்சம் தனக்கென்று ஒரு நியதிகளை வகுத்துக்கொண்டிருக்கிறது. தனி மனிதனுக்கான ஆற்றலை, அற்புத சக்தியை அது வழங்கும் என்கிறார்கள். வழங்கினால் நல்லது.

இந்த வாழ்க்கை பெரும் புதிர்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. எதையும் அனுமானிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளையும் கடத்த பெறும் போராட்டம் நடத்தவேண்டியிருக்கிறது. இன்பமும் துன்பமும் மனிதர்களுக்கு பொது என்றாலும் எல்லோருக்கும் அது சமமானது அல்ல. சிலருக்கு மட்டும் வாய்ப்புக்களை வாரித்தருகிற இயற்கை எனக்கு தராதா? நானும் இயற்கையின் ஓர் அங்கம்தான். எனக்கும் எல்லா உரிமைகளும் இருக்கிறது. துன்பங்களின் நிழல்கூட படியாத மனிதர்களைப்போல இயற்கையின் ஆனந்தங்களை அனுபவிக்க நானும் பாத்தியப்பட்டவனே. சர்வ வல்லமை கொண்ட ஒரு பேராற்றல் எனக்கான ஆற்றலைத் தருமென்றால் எனக்கும் தரவேண்டும் என்று கேட்கிற உரிமை எல்லோருக்கும் உண்டு. உருளைக்கிழங்கு விளைந்த நிலத்தின் மீது அமர்ந்துகொண்டு பட்டினி கிடப்பது அறியாமை. கிழங்கு விளைந்திருக்கிறது. பறித்து சமைத்து உண்ணவேண்டும். அந்த பக்குவம் தெரியாவிட்டால் பசி போகாது. இயற்கை எனக்கான வெகுமதிகளை மறைத்து வைத்திருக்குமென்றால் அதை தேடிக் கண்ட்டைவதே அறிவுடமை. தேடிப் பார்க்கலாம். தவறில்லை.

தூங்கி எழுந்தது முதல் திரும்பி வந்து படுக்கப் போகும் வரையிலும் எந்த ஆணிகளை பிடுங்கப் போகிறோமோ அதற்கேற்ற பலன்களை அனுபவிப்போம். அதுதான் விதி. கண்ணாடியில் முகம் பார்த்தாலும் அது மாறாது. பரிகாரம் செய்தால் மாறிவிடும் என்பது பொய்ச் சொல். உன்னால் சூரியனை மறைக்க முடியாது. ஆனால் குடை பிடிக்கலாம். இதுதான் வித்தை. அப்படியென்றால் எது குடை? அதை கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது இந்த புதிருக்கான விடை. தேடிப் பாருங்கள்.

1.11.2019

பயனுள்ள அடிக்குறிப்பு -
ஏடாகூடமாக யோசிக்கிறபொழுது சிலநேரம் கபாலச் சூடு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு என்பார்கள். அதாவது மூளையின் வெப்பநிலை அதிகரிக்கும். இதற்கு, நன்கு கனிந்த எழுமிச்சை பழத்தை தளதளக்கத் தேய்த்து தலைக்கு குளிக்க குளிர்ச்சி தரும் என்கிறது இயற்கை வைத்தியம். இதற்கு விஞ்ஞானப்படியான நிரூபனம் இல்லை. ஆனாலும் முயற்சிப்பது தவறில்லை.


No comments: