Saturday, November 30, 2019

வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 1


                கடூர்க்காரன் அதியமானோடும் அவன் ஒரு மூதாட்டிக்கு கொடுத்த சாகாப் பழம் நெல்லியோடும் தொடர்புடையது போலத் தோற்றம் கொண்ட பெயரை உடைய அந்த ஊருக்கு மின்சாரம் வெள்ளைக்காரன் நாட்டை விட்டு ஓட்டம் எடுப்பதற்கு முன்பே வந்ததாக பாவடித் தெரு டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கிழவர்கள் வெகுகாலம் பேசியபடி இருந்தார்கள். என்றாலும் திட்டவட்டமாய் மின்சாரம் வந்த அந்த நாள் யாருக்கும் தெரியாமல் இருந்தது. அது தெரிந்து ஆகப்போவதென்ன என்று அசட்டு சோம்பேறித்தனம் அனேகருக்கு இருந்ததால் அந்த முக்கிய நாள் நெலிகத்து சரித்திரத்தில் காணாமலே போயிருந்தது. அதுவுமில்லாமல் மின்சாரம் வந்த நாளை பிரயத்தனப்பட்டு அறிந்து அந்த சரித்திரத்தை பெருமாள் கோயிலின் சிதைந்த கல்சுவற்றின் கல்வெட்டாய் வெட்டும் ஆர்வத்தில் யாரும் அந்த ஊரில் கிடையாது.


                மின்சாரம் வந்த நாள் யாருக்கும் தெரியாவிட்டாலும் தற்போதைய நாளில் மின்சாரம் இல்லாத ஒரு நாள் வந்துவிட்டால் ஊரே பதைபதைத்து பயித்தியமாகி இருள் வீதிக்கும் பழைய வீட்டுக்குமாக சோற்றுக்கலையும் பால்மடி நாய் போல அல்லாடிப் போவார்கள். காற்றில்லாவிட்டாலும் மனுசன் உயிரோடிருக்க சாத்தியமுண்டு கரண்ட் இல்லாவிட்டால் ஒரு நாளைக்கே உயிர் தரித்திருக்க சாத்தியமில்லை என்று காலவோட்டத்தில் மாறிப்போன கிராம நகர பெருநகரங்களின் பொதுவான வாழும் பரிணாம விதிகள் நெலிகத்திற்கும் பொதுவானதாகவே இருந்தது. மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாக ஊர்காரர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கும் மேல் வீடுகள் இருக்கும் என்று வலம் சுற்றி வந்தவர்களுக்குத் தோன்றும். ஊரில் இருக்கும் வீட்டிற்கு சில வைக்கோல் கூரை வீடுகளைத் தவிர்த்து மற்ற வீடுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழல் விளக்குகளும், குண்டு பல்புகளும், டிவி, கிரைண்டர், மிக்சி போன்றவையும், மின் இயக்கம் பெற்ற தறி, தையல்மெஷின், மாவு மில் போன்றவையும் இருந்தன. அநேகப்பல மின்சாதனங்களைக் கொண்டு வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட நெலிகத்தார் மின்சாரத்தில் சாத்தியப்பட்ட அத்தனை சாத்தியப்பாடுகளையும் ருசித்தவர்களாக இருந்தார்கள். மின்சாரத்தினால் மனிதனை உயிர்ப்பிக்கும் வித்தையும், மனிதர்களின் கலவியும் மட்டுமே ஊரில் நடைபெறாமலிருந்தது. அதற்கு காரணம் அதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, அல்லது தெரியாது, அல்லது சாதனங்கள் கிடைக்காமல் இருந்தார்கள் என்று எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம்.
                மின்சார உபகரணங்கள் மிக அதிகம் கொண்ட அந்த ஊரில்; எப்படிப்பட்ட மின்சார சம்மந்தமான பொருட்களின் பழுதுகளையும் நீக்கி உயிர் காப்பாற்றிக் கொடுக்கும் கடவுளாக ஒருத்தன் இருந்தான். அவன் சுயம்புவாய் முளைவிட்டு ஊருக்குள் அவதரித்த கரண்ட் கடவுள். பெயர் குமரன். அரதப்பழசாகி சுடுகாட்டுக்கு போகும் நிலவரத்தில் இருக்கும் கிழடுதட்டிய உபகரணங்களை கொஞ்சம் ஈயமும் ஒரு சூட்டுக்கோலும் மட்டும் வைத்துக்கொண்டு ஊதுவத்தியில் பட்டாசுக்கு சூடு வைப்பது போல சூடு வைத்து புகை எழுப்பி அதை மரணத்திலிருந்து காப்பாற்றும் மிக எளிமையான கடவுளாக அவன் இருந்தான்.
                பரண், சுடுகாட்டுக்குப் போகாமல் அவனால் காப்பாற்றப்பட்ட பழம்பெரும் மின் பொருட்கள் ஏராளம் அந்த ஊரில் உண்டு. அவனால் உயிர்பெற்ற சில சாதனங்கள் சாகுங்காலத்து பெரிய மனுசர்களைப் போல இருமிக் கொண்டும் தும்மிக் கொண்டும் இப்பொழுதும் நெலிகத்து வீடுகளில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் வீட்டுக்கு ஒயரிங் செய்வது, பழுதுபட்ட எல்லாவிதமான மோட்டார்களுக்கும் காயில் கட்டுவது, புத்தம் புதுசாய் வந்த உத்தரவாதம் வழங்கப்படாத அகலத் தொலைபொம்மைப் பெட்டிகள் முதலாக எம்.பி. மூன்று ரக குறுந் தகட்டு ஓட்டுனர் (மெகா டெலிவிஷன், மற்றும் எம். பி - 3 பிளேயர் என்று தமிழ் உச்சரிக்க கடினப் படுபவர்கள் சொல்லலாம்.) வரை அவன் சரி செய்து கொண்டிருந்தான்.
                குறைப்பிரசவத்தில் அவதரித்து ஊருக்குள் வந்துவிட்ட அந்த அப்பாவி அரை வேக்காட்டு தயாரிப்புகளை வில்லேந்திய கடவுள் போல் சூட்டுக்கோல் ஏந்தி காப்பாற்றும் வேலையை குமரன் எந்த காகிதப் படிப்பின் மூலமாகவும் கற்றெடுக்காமல் சின்ன வயதில் தனக்கிருந்த சினிமாப் பாட்டை விரும்பிக் கேட்கும் ஆர்வத்தினாலேயே சுயமாகக் கண்டு கொண்டான். வெறும் பாட்டு கேட்கும் ஆர்வம் எப்படி ஒருத்தனுக்கு உபகரணத்தைக் காப்பாற்றும் கடவுள் ஞானத்தைத் தரும் என்பது ஒரு அர்த்தமுள்ள கேள்விதான்.
                ஒருமுறை ஏழாம் கை மாறி விற்பனைக்கு வந்த கிடைமட்டமாய் படுத்து பாட்டுப்பாடும் அந்தக்கால டேப் ரிக்கார்டர் ஒன்றை பத்தில் ஒரு பங்கு சில்லறை விலைக்கு வாங்கினான் குமரன். பாட்டு கேட்கும் ஒரே ஆர்வத்திற்காக வாங்கப்பட்ட அந்த டேப் ரிக்கார்டர் தனக்கு இருந்த முழு பலத்தையும் உபயோகப்படுத்தியும் ஒரு பாட்டை முழுசாகப் பாடி முடிக்க முடியாமல் தடுமாறியது. ஒரு பாட்டைப் பாட ஒரு வாரம் எடுத்துக் கொண்ட அது சிலபோது நின்று நின்று பாடியதோடில்லாமல் பாட்டு அல்லாத இன்ன பிற சத்தங்களை அதிக அளவுக்கு எழுப்புவதாகவும் இருந்தது.
                டேப் ரிக்கார்டரின் தலைவிதியை மாற்றி எழுதும் பிரம்மாக்கள் ஊரில் அப்பொழுது யாரும் இல்லாததால் அதை ஒரு அழுக்கு மஞ்சள் துணிப் பையில் போட்டு எடுத்துக்கொண்டு போய் டவுனில் இருக்கும் பிரம்மாவிடம் காட்டினான். அந்த டவுன் பிரம்மா புதிதாக வாங்கும் அளவுக்கு இரு மடங்கு அதிக காசு செலவாகும் என்று சொன்னான். மாட்டு வண்டியில் சொந்த பந்தத்தோடு போன நோய் வந்த மனுசன் மாலை மரியாதையோடு மரணமடைந்து குதிரைவண்டியில் பிணமாக திரும்பிய கதையாக, மஞ்சள் பையில் கொண்டு போன டேப் ரிக்கார்டரை வெறும் காகிதத்தில் பொட்டலம் கட்டிக்கொண்டு வந்தான் குமரன். அந்த அழுக்கு மஞ்சள் பையில் சந்தையில் வாங்கிய காய்கறிகள் இருந்ததுதான் அதற்கு காரணம்.
                அந்த டேப் ரிக்கார்டர் மூச்சு பேச்சில்லாமல் கட்டை பீரோவுக்கு அடியில் வெகு காலம் சும்மாய்த்தான் இருந்தது. ஒருநாள் வீட்டில் எதையோ தேடப்போய் அது கிடைத்ததால் ஒரு டேப் ரிக்கார்டரில் அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் ஏற்பட்டு ஒரு தேங்காய் கீறும் கத்தியின் உதவியால் அதை திறந்து பார்த்தான் குமரன். வேலை இல்லாமல் சும்மாயிருக்கிற ஒரே காரணத்திற்காகத்தான் அதை திறந்து பார்த்தான் என்றாலும் தேங்காய் கீறும் கத்தியால் திறக்கப்பட்ட டேப் ரிக்கார்டருக்குள் கெப்பாசிட்டர், டிரேன்ஸ்சிஸ்டர், ஐசி, ரெஸிஸ்டர் என்று ஒரு மின்சார மின்னனு பால்வெளி உலகம் சகல நட்சத்திர சூரியர்களோடு அவனுக்குத் தெரிந்தது. ஒரு டேப் ரிக்கார்டரை அகலத் திறந்த அந்த கணத்தில் குமரனுக்கு மின் உபகரணம் காப்பாற்றும் கடவுள் ஞானம் முதன் முதலாக கிடைத்தது.
                அவன் எதையோ தொட என்னோவோ ஆகி எப்படியோ தனக்குத் தானே பாட ஆரம்பித்த டேப் ரிக்கார்டர் ஒரு பாட்டை முழுசாக பாடி முடித்து பிறகு பரமதிருப்தியோடு உயிர்விட்டது. குமரன் அச்சப்படவில்லை. திரும்பவும் அதை தட்டி எழுப்பினான். அது ஒவ்வொரு முறை பாடலை நிறுத்தி மரணமடைந்த போதும் அதன் உலகத்தை திறந்து புது சிருஷ்டி செய்தான் குமரன். அப்படி செய்ய ஆரம்பித்ததன் விளைவாகத்தான் அவன் புதுசாக ஸ்குரு டிரைவர், சூட்டுக் கோல், ஈயம், சில கெப்பாசிட்டர்கள், டிரேன்ஸ்பார்மர், ரெஸிஸ்டர்கள் போன்றவற்றை வாங்க ஆரம்பித்தான். அதன் வழியே இன்றைக்கு ஊரின் மிகப் பெரிய மின்சார மெக்கானிக்காக ஆகிவிட்டிருந்தான்.
                அவனுக்கு தினப்படி வருமானமும் வசதி வாய்ப்புகளும் அந்த உத்யோகத்தால் சிரமமில்லாமல் வந்தது. அழகான மனைவியும், இரண்டு பிள்ளைகளும் கிடைத்ததுகூட அந்த தொழில் கவுரவுத்தினால்தான். குடும்பத்திற்கான அத்தியாவசியம் தவிர, அவன் மனைவி விரும்பும்  புதுப்புது உடைகள், சில நகைநட்டுக்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றையும் அந்த தொழில் ஈட்டித் தந்தது.
                குமரனுக்கு ஊரில் காற்றோட்டமான நல்ல வீடும், வாகன வசதியும், வீடு நிறைய அத்தியாவசிய மற்றும் அனாவசியப் பொருட்களும் இருந்தது. வீட்டில் அவன் மனைவிக்கு இருப்பதைவிட அதிகமான உடைகள் குமரனுக்குத்தான் இருந்தது. அவனுக்கு உடை என்றால் கொள்ளைப் பிரியம். விதவிதமான உடைகளை, அது உலகில் அவதரித்த நாளிலேயே வாங்கி அணிவதில் அவனுக்கு மிக விருப்பம் இருந்தது. உடைக்காக எத்தனை காசும் அவன் செலவளித்தான்.
                சின்ன படிப்பு படிக்கிற காலத்தில் தன்னோடு படித்த பையன்கள் தன்னைவிட நன்றாக படிக்கிறார்கள் என்றோ, தன்னைவிட அழகாக இருக்கிறார்கள் என்றோ அவன் பொறாமைப்பட்டதே இல்லை. மாறாக தன்னைவிட அழகாக உடை உடுத்துகிறார்களே என்று வேதனைப்பட்டு தன் கிழிந்த உடைகளின் தையல் தழும்புகளை அவமானத்தோடு மறைத்துக்கொள்வான். இத்தனைக்கும் அவன் வெகு சின்ன பிள்ளையாக இருந்த பொழுது ஊரிலேயே அழகான உடை உடுத்திய குழந்தையாக அத்தனை பேர் பொறாமையையும் வாரி இறைத்துக்கொண்டதாக அம்மா சொல்வாள். என்றைக்கோ போட்ட அழகான துணியின் ஒய்யார அழகிற்காக கர்வப்பட்டு இன்றைக்கு பழந்துணிகளின் கிழிசல்களால் மான அவமானத்தை மறைக்க முடியாது என்ற தெளிவு அவனுக்கு இல்லாவிட்டாலும் அழுதான். அம்மாவிடம் புதுத் துணி கேட்டால் உடை கிடைக்காது உதைதான் கிடைக்கும் என்று அவனின் சதுரித்து வெட்டிய தலைமுடிக்குள் இருந்த மூளைக்கு அத்தனை சின்ன வயசிலேயே தெரிந்திருந்தது. அன்று நல்ல உடை கிடைக்காத அந்த ஏமாற்றமும், அந்த ஏக்கமும்தான் இன்றைக்கு அவனை பலப்பல புது ரக உடைகளை வாங்கிக் குவித்து நன்றாக உடுத்த வைத்தது.
                கவுரவமானவனாகவும், ஒரு தப்பான வார்த்தை ஊரில் கேட்காதவனாகவும், மானஸ்தனாகவும் வாழ்ந்துகொண்டிருந்த அப்படிப்பட்ட குமரன் ஒரு வெள்ளிக்கிழமை நடுமத்தியானத்தில் ஊரில் யாருமே செய்வதற்கும், யோசிப்பதற்கும்கூட அச்சப்படும் ஒரு வினோதமான காரியம் செய்தான். விரும்பிய உடைகளை பலப்பல தினுசுகளில் உடுத்தி உள்ளத் திருப்தியோடு இருந்த குமரன் அந்த வினோத வெள்ளிக் கிழமையின் உச்சி வெயில் நேரத்தில் உடுத்தியிருந்த உடைகள் அத்தனையும் உருத்தெரியாமல் கிழித்து எறிந்துவிட்டு, உடையற்ற வெய்யிலில் உடல் மினுமினுக்க தெருவெல்லாம் வினோதமாக கத்திக்கொண்டே ஓடி முடிவாக நெலிகத்தார் அத்தனை பேரின் கண்களும் அகலத் திறந்து அதிர்ச்சியில் உறைந்து நிற்க ஒரு உயரமான மரத்தில் ஏறி பக்கத்தில் இருந்த ஊர்ப் பொதுக் கிணற்றில் தலைகுப்புற விழுந்தான்.

 தொடரும்...


No comments: