Saturday, November 30, 2019

கூர்மையான பற்கள். - ஆபத்தும் பராமரிப்பும்.



முன்பே சொல்லிவிடுகிறேன். இது நிச்சயமாக  பற்கள் பற்றிய மருத்துவக் குறிப்பு அல்ல. என்னிடம் கொஞ்சம் உப்பு மற்றும் கோபால் பல்பொடி மட்டுமே இருக்கிறது. பற்களை பராமரிக்க அவை போதுமானதல்ல. கூர்மையான பற்களால் அவதிப்படுகிறவர்கள் நல்லதொரு பல் மருத்துவரை அனுகுவதே நல்லது. 

            பற்களோடு தொடர்பில்லை என்றால் இந்தத் தலைப்பு எதற்காக?


            தரமான கேள்வி. 

     நேரடியாகத் தொடர்பில்லை என்றாலும் பல்லுக்கும் தலைப்புக்கும் வேறு விதமாய் தொடர்புகள் உண்டு. இங்கே பல் என்பது பல்லைக் குறிக்காது. மாறாக, அதிகாரத்தை அடக்குமுறைகளைக் குறிக்கும். பல் என்பது வலிமையுள்ள மனிதர்களின் குறியீடு. கொஞ்சமாக தலை சுற்றுகிறதா? இதை மனதில் கொண்டுதான் தோசைகளின் துளைகளை எண்ணக்கூடாது என்பார்கள்.

            தலைப்புக்கு வருகிறென். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்... 
            இது ஒரு கவிதையின் தலைப்பு.  

            ஜீரணிக்க சிரமமாக இருந்தாலும் இதுவே பொருத்தமாக இருக்கும் என்பதால் மனதை கல்லாக்கிக் கொண்டு இதுவே அது என இறுதி செய்தேன். முன்பே சொன்னதைப் போல இது வலிமையும் அதிகாரமும் கொண்ட மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. இனி அந்த பயங்கரமான கவிதை...

கூர்மையான பற்கள்.
ஒருநாள் நீ புகழின் உச்சத்தைத் தோடுவாய்.  
மறுநாள் நரகத்தின் வேதனைகளை அநுபவிப்பாய். 

அதிகாரம் உன்னிடம் ஆயுதம் தந்திருக்கலாம்.
அதுவே கண்ணீரும் தரும்.

இங்கே சொர்க்கத்தின் பிரதிநிதிகள் யாருமில்லை.
ஒரு முதியவர்
சாகும் வரை
பலமுறை செத்திருப்பார்.

இங்கே மரணமாற்ற மனிதனும்
யாருமில்லை.
குழந்தைகள்
காலத்தால் கிழவன் ஆக்கப் படுகிறார்கள். 

இங்கே மாறியதும்
மாறாமல் இருப்பதும்
வேதனைகள் ஒன்றே. 

ஆகவே  நீ மனம் அறிந்து
குற்றம் செய்யாதே.
எளியவர்களை
இரும்புக் கால்கள் கொண்டு
மிதிக்கதே.
 
நூற்றாண்டு காலமாய்
சொல்லப்பட்டு வந்ததை
உனக்கும் சொல்கிறேன்.

இருப்பதில் வலிமையான தாய்
தனது ஆற்றலைக் கொண்டு
குட்டிகளைக் காப்பாற்றுவாள்
ஒருபோதும்
கொன்று புசிக்க மாட்டாள்.

மந்தைக் கூட்டத்தின் விதி சொல்கிறது
உலகம் முழுக்க ஒரே உயிர்தான்
தாய்மைதான் அதன் உச்சம்.

நீ மந்தையில் ஒருவன்.

இங்கே தனிப்பட்ட நாகரீகம் என்பது 
ஒரு நாய்
வழிப்போக்கனை கடிக்காமல் இருப்பது.
நீயும் கடிக்காமல் இரு.
------------------------------------


No comments: