Saturday, November 30, 2019

வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 3





                சுடுகாட்டுக்கு நடுராத்திரியில் போய் அர்த்த சாம பூசைகள் செய்து பேய், பிசாசுகுரளிரத்தக்காட்டேறிபோன்றவற்றை தன் கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி பிறகு பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை போன்றவற்றை தீத்துவிடுவதால் சூராதி சூரன் என்று பெயர் எடுத்த தாத்தாவுக்கு பேரனாகப் பிறந்தவன் சாம்பமூர்த்தி. அவன் இப்பொழுது அப்படி எதுவும் வினோத பூசைகளை தொப்பூர் சுடுகாட்டுக்குப் போய் செய்வதில்லை. காரணம் சுடுகாட்டு பயம் ஊர் மக்களுக்கு சுத்தமாக இல்லாமல் போய்இப்பொழுது சுடுகாட்டுக்கு நடுவிலேயே நான்கைந்து வீடுகள் கட்டி குடும்பமாக குடியிருக்க ஆரம்பித்து விட்டார்கள். நள்ளிரவில் பிணங்கள் எரிவதை சிறுநீர் கழிக்க வரும் சிறுபையன்களும் தகிறியமாகப் பார்த்துவிட்டு கெட்ட கனவுகள் இல்லாமல் சுடுகாட்டுக்கு நடுவீட்டில் தூங்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். சுடுகாட்டில் கொல்லிவாய்ப் பேய், குட்டை முனி போன்றவை இருக்காது என்று ஊர் ஜனங்களுக்கு அத்துப்படியாக தெரிந்துவிட்டது. அதுவும் இல்லாமல் இப்பொழுது செல்போனும், கம்ப்யூட்டரும் வைத்திருக்கும் ஒரு நவீன யந்திர மந்திர தந்திர நிபுணனாக இருக்கும் பிரபலஸ்தன் போயும் போயும் சுடுகாட்டு தலைச்சான் பிள்ளையின் கபாலத்து மை எடுத்து வெற்றிலையில் தடவி வித்தைக்காட்டி காசு சம்பாதிப்பதை அவமானம் என்றும் நினைத்தான்.


                பெரிய பெரிய புத்தகங்களும்தன் தாத்தா வைத்திருந்த ஊதினால் உடைந்து போகும் மலையால மாந்ரீக ஓலைச்சுவடிகளும் அவன் நிறைய வைத்திருந்தான் என்றாலும் அதை எதையும் படித்துப் பார்க்காமலேயே தன் தவ வலிமையால் சித்து வேலைகளைச் செய்வதாக அவன் சொன்னான். அப்படி தன் தவ வலிமையை அதிகரித்துக்கொள்வதற்காக அவன் வருசத்திற்கு ஒருதரம் கொல்லிமலைக்கு போய் ஒரு மாசம் இருந்துவிட்டும் வந்தான்.
                அவனிருக்கும் வீட்டிற்கு வெளியே காலையில் ஆரம்பித்து நல்லிரவு வரை பற்பலவிதமான வினோத சேட்டைகள் செய்கிற குட்டிப் பேய்பெரும் பேய்மோகினிபிடித்த ஆண்களும் பெண்களும் கத்திய வண்ணம் இருந்தார்கள். அவன் பழைய பாணியில் உடுக்கை அடித்து பாட்டுப்பாடி பேய்களை விரட்டுவதில்லை. சவுக்குவேப்பிலை கொண்டு பேய்களை அடிப்பதும் இல்லை. கண்மூடிக்கொண்டு பேய் பிடித்தவன் நெற்றிப் பொட்டில் கை வைத்து மந்திரத்தை மனசுக்குள் சொன்னமாத்திரத்தில் எல்லாவிதமான  பேய்களும் சத்தமில்லாமல் போய் வருகிறேன் என்று கூட சொல்லாமல் போய் விடுகின்றன. அதனால் அவன் இருக்கிற ஊரில் எந்த வேப்பமரத்திலும், புலியமரத்திலும் தலைமுடியுடன் கூடிய ஆணிகள் இருக்காது. சாம்பமூர்த்தியிடம்தான் குமரனை இன்று அழைத்து வந்தார்கள்.
                ‘குமரனுக்கு பேயும் பிடித்திருக்காது ஒன்றும் பிடித்திருக்காதுஅவனுக்கு என்னவோ மனப் பிறழ்வு. நல்ல பெங்களுர் வைத்தியரிடம் காண்பித்தால் சரியாகிவிடும்’ என்று சொன்ன சத்தியனும்,   பேய் பிசாசுகளில் அதிக நம்பிக்கை கொண்ட சக்திவேலும்தான் குமரனை ஒரு டிராக்டரில் ஏற்றி இங்கே கொண்டு வந்தார்கள். அவனுடைய மனைவி அழுதுகொண்டே வந்தாள். வருகிற வழியெல்லாம் குமரன் கத்திக்கொண்டே வந்தான். உடையோடு இருப்பதால் அவனுக்கு தாங்க முடியாத வேதனை இருந்தது. நெருப்பு போல போடப்பட்டிருந்த உடைகளை பற்களாலும் நகத்தாலும் கிழித்தபடியும் தடுத்தவர்களை கடித்தபடியும் வந்தான். பாதி வழியிலேயே தப்பித்து இன்னொரு கிணற்றில் விழப்போனவனை எருது கட்டும் கயிற்றைக் கட்டிபெரிய போர்வையால் போர்த்திக் கொண்டுவந்து சாம்பமூர்த்தி முன்பாக நிறுத்தினார்கள்.
                சாம்பமூர்த்தி ஒரு தடித்த புருவமும்பெரிய புடைத்த கழுத்தும்பட்டை கிறுதாவுமாக இருந்தான். கழுத்தில் பல வண்ணங்களில் மின்னும் மணிகளும் சுண்டுவிரல் தடிமனுக்கு தங்கச்செயினும் அதன் கீழ் பரம்பரையாக வரும் தாயத்தும் புலி நகமும் கோர்த்து வைத்திருந்தான். ஏகப்பட்ட பயமுறுத்தும் கடவுளுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த சாம்பமூர்த்தி, குமரனோடு வந்தர்களை விறைத்துப் பார்த்து, “நல்லா வாழ்ந்த ஒருத்தன் கட்டின துணிய கிழிச்சிகிட்டு கிணத்தில விழுந்திருக்கான். ஒரு பொட்டு துணி மேல பட்டாலும் கத்தி கிழிக்கிறான் அதானே விசயம்?” என்று கேட்டான்.
                அது வரை பில்லி, சூன்யங்களை நம்பாமல் இருந்த சத்தியன் ஆடிப்போனான். அப்பனாண்டி இங்கு வந்துபோன விசயம் சத்தியனுக்குத் தெரியாது.
                சாம்பமூர்த்தி கண்ணை மூடி சிறிது நேரம் வாய்க்குள் வார்த்தையை உருட்டிவிட்டு, “வீட்டு ஈசான்யத்தில சல்லியம் இருக்கு. அதை எடுத்தா சரியாயிடும்” என்றான்.
                “எடுத்துடுங்க சாமி. எம் புருசன் குணமாகட்டும். உங்களுக்கு புண்ணியமா போகட்டும் எடுத்துடுங்க சாமி” என்று காலில் விழப்போனாள் குமரன் மனைவி.
                “சரி பண்ணிடலாம் அம்மணி. காசு கொஞ்சம் செலவாகும்.
                “எவ்வளோ?”
                “ஐயாயிரம்.
                “ஐயாயிரமாஅநியாயத்துக்கு அதிகமா கேக்கறீங்களே... கொஞ்சம் கம்மிபண்ணிக்கக்கூடாதா?” என்று கேட்டாள் அவள்.
                சிரித்துக் கொண்டே பார்த்த சாம்பமூர்த்தி சரி அம்மணி. நீ அப்படியே உன் புருசனை கூட்டிக்கிட்டு வந்த தடமே போயிடு. அவன் அப்படியே இருக்கட்டும். உனக்கு குணமாக்கற செலவும் மிச்சம்உன் புருசன் இனிமேல உடையே உடுத்தமாட்டான் அதனால உடை எடுக்கிற செலவும் மிச்சம்” என்றான்.
                “ஐயோ பாவங்க. நல்ல குடும்பம். கெட்டுப்போச்சி. சரி பண்ணி விடுங்க. காசு பணத்தில என்ன இருக்கு” என்று சக்திவேல் இடையே பேசினான்.
                “ஐயாயிரத்தில் ஐம்பது காசு கொறைச்சலா இருந்தாலும் தொப்பூர் மலைக்காட்டு முனி உன் வீட்டுக்கு வந்து சல்லியம் பார்க்காது” என்று சாம்பமூர்த்தி சொல்லிவிட வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டாள் குமரனின் மனைவி.
                நான்கு உதவியாட்களை அழைத்துக்கொண்டு காரில் பிரயாணப்பட்டு நெலிகத்தில் குமரன் வீட்டு முன்பாக வந்து நின்றான். பெரிய பெரிய பூசை எதுவும் செய்யாமல் வெறும் எலுமிச்சையை உருட்டி உருட்டி வீட்டின் பின்னால் இருந்த மரத்தடிக்கு வந்து உதவியாட்களுக்கு கண் காட்டினான்.
அவர்கள் அங்கே குழி தோண்ட ஆரம்பித்தார்கள். ஒரு முழங்கால் அளவுக்கு குழி தோன்டியதுமே நிறைய எலும்புத் துண்டுகள் வெளிவர ஆரம்பித்தது. அத்தனையும் ஏதோ ஒரு மிருகத்தின் கால் எலும்புகள். எலும்புகளை தோண்டி எடுத்ததும் டிராக்டரில் கட்டப்பட்டிருந்த குமரனின் கட்டுகளை அவிழ்க்கச் சொன்னான் சாம்பமூர்த்த்தி. வேணாம்வேணாம்அவர் வெத்துடம்போட ஓடுவாரு” என்று பதறினாள் மனைவி.
                குமரனின் கட்டை அவிழ்த்தார்கள். அவிழ்த்த அடுத்த நிமிசம் குமரன் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து முதலில் கிடைத்த மனைவியின் புடவையை உடம்பெல்லாம் சுற்றிக்கொண்டு எனக்கு என்ன ஆச்சி?” என்று கேட்டான்.
                சாம்பமூர்த்தி சொன்னது போல குமரன் குணமானதால் காசை வாங்கிக்கொண்டு கிளம்பினான். போகும்போது அவன், “இந்த எலும்புங்க ஏழு வேட்டை நாய்களோட எலும்புங்க. இதை யாரோ கொண்ணு இங்க புதைச்சிருக்காங்க இதை முழுசா எரியவிட்டு கிணத்திலயோ, ஆத்துலையோ கலந்துடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
                அதன் பிறகு ஊர் முழுசும் இதே பேச்சாக இருந்தது. வேட்டை நாயை குமரனின் குடும்பத்தில் யாரோதான் கொலை செய்து புதைத்திருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். மரத்திற்கும் கிணற்றுக்கும் இருந்த புனிதத்தை கெடுத்த அந்த குடும்பத்தை ஊரைவிட்டே துரத்தவேண்டும் என்றும் பேச ஆரம்பித்தார்கள்.
                குணமாகிவிட்ட குமரன் கிழியாத உடை போட்டுக்கொண்டு தன்னுடைய அப்பாவின் போட்டோ முன்பாக போய் நின்று அழ ஆரம்பித்தான். அது வேட்டை நாயோட எலும்பு இல்ல... எனக்குத் தெரியும் அது வேட்டை நாயோட எலும்பு இல்ல...” என்று கத்தினான். அவன் மனைவி வேற என்ன எலும்பு அது?” என்று கேட்டாள். அவன் பதில் பேசாமல் அப்பாவின் போட்டோவையே பார்த்துக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
தொடரும்...

No comments: