Saturday, November 30, 2019

வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 2





                நெலிகம் கிராமம் தோன்றி எத்தனை வருசங்கள் ஆயிற்றுஅங்கு மனிதர்கள் துணி உடுத்துவதை எப்பொழுதிலிருந்து ஆரம்பித்தார்கள்உடல் மறைக்கும் நாகரீகம் தோன்றி எத்தனை வருசம் ஆயிற்று என்பதுமின்சாரம் வந்த நாள் அறியப்படாதது போலவே அறியப்படாத சங்கதியாக ஊரில் இருந்தது. அதே சமயம் நெலிகத்தில் இப்பொழுது உயிரோடிருப்பவர்களின் நினைவுக்கு குழப்பமற்று தெளிவாகத் தெரிந்த வரையில்காலாதி காலமாக ஊருக்குள் யாரும் உடையில்லாமல் நடமாடியதாக பேச்சு வழக்கில்கூட கதைகள் கிடையாது. இரவின் கண் தெரியாத வீட்டுச் சுவற்றுக்குள்ளும்தென்னை ஓலையின் துவாரம் மிகுந்த குளியல் தடுக்குக்குள்ளும்நடக்க முடியாத நோயாளியின் படுக்கை மீதும் மட்டுமே நிர்வாணமாக சில மனுஷ மனுஷிகள் நெலிகத்தில் இருந்தார்களேயன்றி குமரனைப் போல பலபேர் முன்னிலையில் பட்டப் பகலில் நிர்வாணமாக யாரும் அலறியபடி அத்தனை வேகமாக ஓடியதே கிடையாது. அந்தக் காட்சியை இன்றைக்குத்தான் நெலிகம் மண் கண்டிருக்கிறது.


                உடை உடுத்துவதுதான் மானத்தை காப்பாற்ற ஒரே உத்தமமான வழி என்று நெலிகத்து ஜனங்கள் நம்பித் தொலைத்ததால் குமரன் செய்த இந்த உடையற்ற ஓடும் சேட்டைகளை ஒருவராலுமே ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. பெண்கள் முற்றிலுமாகவும்ஆண்கள் பாதியளவுக்கும் இது குறித்து அதிருப்தி தெரிவித்தார்கள். குமரனின் உடையற்ற ஓட்டம் ஊருக்குள் ஒரு பிரச்சனையை கிளப்பியதென்றால் அவன் கடைசியாக போய் ஏறிய உயரமான மரமும் குப்புற விழுந்த கிணறும் இன்னொரு விதமான பிரச்சினையை ஏற்படுத்தியது.
                குமரன் விழுந்த அந்தக் கிணறு ஊருக்கு மேற்கில் வெகு தொலைவில் வயல்களுக்கு நடுவே இருக்கிறது. நெலிகத்தின் மொத்த பேருக்கும் அதிலிருந்துதான் குடிக்க தண்ணீர் கிடைக்கிறது. சவுள்மண் பூமி என்பதால் ஊரின் பிற அத்தனைக் கிணறுகளும் உப்பின் சுவையோடு இருக்க அந்தக் கிணறு மட்டுமே வெல்லமென தித்திக்கும் நீரை ஊருக்கு தந்து கொண்டிருந்தது. அந்தக் கிணறு தெய்வீகக் கிணறு என்றும் ஊரில் பேச்சு உண்டு. ஊரில் ஒரு முறை தண்ணீர்த் தரித்திரம் ஏற்பட்டு சொட்டு நீர் இல்லாமல் இருந்த பொழுதுஊரின் அக்னிமூலைக் கோயிலில் லிங்க வடிவில் இருக்கிற ஈஸ்வரன் வந்து அந்த கிணற்றை வெட்டிக் கொடுத்ததாக ஊரில் கதை இருக்கிறது.
                ஈஸ்வரன் கிணறு வெட்டிய அந்தக் கதையை எட்டு வருடத்திற்கு முன்பு கூட விலாவரியாக சொல்ல சுப்பன் கிழவன் இருந்தான். இப்பொழுது அவன் செத்துப்போனதால் கதை சொல்லவும் ஆள் இல்லைசொன்னால் நம்பவும் ஆள் இல்லை. உலகத்தில் பஞ்சம் பார்க்காத ஊர் எதுதண்ணீருக்கு சாகாத தேசம் எதுஉலகத்துக்கெல்லாம் பொதுவான ஈஸ்வரன் நெலிகத்திற்கு மட்டும் கிணறு வெட்டித் தந்தானா?’ என்று பரம்பரை பரம்பரையாக ஈஸ்வரனை கும்பிடும் பட்டை போட்ட நெற்றிக்காரர்களே எதிர்க் கதையாடியதால் கதையை சொல்லவும் கேட்கவும் முற்றாக மறந்திருந்தது ஊர்.
                கிணறு வெட்டக் காரணமான அந்த பஞ்சத்தை அப்பொழுது யாரும் பஞ்சாங்கத்தில் குறித்து வைத்து பஞ்சாங்கத்தை  பத்திரப்படுத்தி வைக்கவில்லை. அதனால் விளைந்த விபரீதம் என்னவென்றால் பஞ்சம் குறித்து சில வயசாலிகள் பேசிக்கொள்ளும்போதுஅந்த பஞ்சம் தாது வருசப் பஞ்சத்துக்கு முந்தைய பஞ்சம் என்றும் இல்லை அது தாது வருசத்துக்கு பிந்தைய பஞ்சம் என்றும்இல்லை அது தாது வருசத்து பஞ்சமேதான் என்றும் வாய்க்கு வாய் விவாதம் செய்யும்படி ஆயிற்று. அது எந்த வருசத்துப் பஞ்சம் என்று சரியாக இப்பொழுது முடிவெடுக்க முடியாது. காரணம் அதைப்பற்றி கடைசியாக கதை சொன்ன சுப்பன் கிழவன்தான் எட்டு வருசத்துக்கு முன்பே சொர்க்கத்துக்கு போய்விட்டானே. நெலிகத்திற்கு நவீன காலத்தின் எல்லா வசதிகளும் வந்திருந்தாலும் செத்தவர்கள் போன இடத்திற்கே போய் சந்தேகத்தை கேட்டுக்கொண்டு வரும் வசதி வாய்ப்புகள் இன்னும் வந்திருக்கவில்லை. வசதிகள் சாத்தியப்பட்டால் கிணறு வெட்டியது அக்னிமூலை லிங்கம்தானா என்பது தெரிந்துவிடும்.
                குமரன் குப்புற விழுந்த பிறகு கிணற்றுக் கதை ஊருக்குள் பெரும் கதையாக உருவெடுத்தது. மனுசன் ஏறக் கூடாத மரத்தில் அவன் ஏறி ஆள் இறங்கக் கூடாத கிணற்றில் குதித்துவிட்டானே இது ஊருக்கு கெட்டதாயிற்றே என்று அடுத்த தலைமுறைக் கிழவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாரம்பரியக் கதைகளை அடியொற்றி விசனப்பட்டார்கள். கிணற்றுக் கதை உண்மையாகத்தான் இருக்குமோ என்று கதையை நம்பாத சிலபேரும் நம்பத் தலைப்பட்டார்கள்.
                பஞ்சம் வருவதற்கு முன் நெலிகத்து ஜனங்கள் எல்லாம் அன்னாடங் காய்ச்சிகளாகவும் சிலபேர் இரண்டு நாளுக்கு ஒருமுறை காய்ச்சிகளாகவும் இருந்தார்கள். பஞ்சம் வந்த பிறகு அதே ஜனங்கள் வாரத்திற்கொரு நாள்அல்லது மாசத்துக்கு இரண்டு நாள் காய்ச்சிகளாக ஆனார்கள். (ஊரில் பாதிப்பேர் சாப்பாட்டுக்கில்லாமல் பஞ்சத்தில் செத்துப்போனதாய் சுப்பன் கிழவன் சொல்லியிருக்கிறான். ஆனால் இதுவரை குவியலாக மண்டை ஓடு கண்டெடுக்கப்படாததால் நம்பமாட்டேன் என்று அரசு கலைக் கல்லூரியில் சரித்திரம் படிக்கும் பையன் ஒருத்தன் வீம்பாகவும் விரைப்பாகவும் மறுத்திருக்கிறான்.) பாதிப்பேரை தின்ற அந்த பஞ்சம் வந்த காலத்திலும் நல்ல செல்வத்தோடும் சிறப்போடும் தினங்காய்ச்சியாக ஒரு பணக்காரன் நெலிகத்தில் இருந்திருக்கிறான். இன்றைக்கு அப்பனாண்டி என்று பெரிய மாடிவீடு கட்டிய ஒரு பணக்காரன் இருக்கிறானே அவனின் கொள்ளு தாத்தாதான் அந்த பணக்காரர் என்பார்கள். கொள்ளு தாத்தா இல்லை எள்ளு தாத்தா என்றும்இல்லைஇல்லைஅது எலிப் புளுக்கை தாத்தா என்றும் பலவிதமான குழப்பங்கள் அந்த பணக்கார தாத்தாவைப் பற்றி உண்டு.
                அப்பனாண்டியின் அந்த எலிப்புளுக்கை தாத்தா ஏகத்திற்கும் நிலம் நீச்சு வைத்திருந்தார். நெலிகத்தின் ஏரி மொத்தம் நூறு ஏக்கர் பரப்பும்இரண்டு ஆள் ஆழமும் கொண்டது. அதன் மதகுத் தண்ணீரில் விளைந்த ஏரியின் கீழ் பாசன நிலம் மொத்தம் நூத்திப் பத்து ஏக்கரும் அப்பனாண்டியின் தாத்தாவிற்கு சொந்தமானது. இல்லை அது ஈஸ்வரன் கோயில் மானிய நிலம் என்றும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.
                அப்பனாண்டியின் தாத்தாவிற்கு இரண்டு குதிரைகள் பூட்டிய ஒரு வண்டி உண்டு. நிலங்களில் வேலை செய்ய நிறைய வேலைக்காரர்கள் உண்டு. தினமும் குதிரை வண்டியில் போய்தான் நிலங்களை அவர் மேற்பார்வை செய்வார். குதிரை வண்டியில் அவர் போகும்போது வண்டிக்கு முன்பாக ஏழு வேட்டை நாய்கள் ஓடும். பக்கத்தில் காடுகளே இல்லாத ஊரில் அந்த வேட்டை நாய்கள் குதிரை வண்டிக்கு முன்பாக ஓடியதைத் தவிர வேறு என்ன வேலை செய்தன என்று யாருக்கும் தெரியவில்லை. (இப்படி கதை முழுசும் அது தெரியாதுஇது தெரியாது என்று மழுப்பிக்கொண்டே கதை நீள்வதால் நாய் வந்த இடத்திலேயே கதை போதும் என்று பலபேர் போய்விட்டதாக சுப்பன் கிழவன் அப்பனாண்டியிடம் சொல்லியிருக்கிறான். அதை அப்பனாண்டி இன்றைக்கும் குழப்பமில்லாமல் சொல்வான். அது ஒன்றுதான் குழப்பமற்ற தெளிவான கதையாக இருக்கிறது)
                பஞ்சம் வந்ததால் அப்பனாண்டித் தாத்தாவின் நிலமும் வறண்டு போனது. நெலிகத்து ஏரியில் தண்ணீர் இருந்தால்தான் அப்பனாண்டியின் தாத்தா நிலமும் விளையும்கோமேரி ஏரியில் தண்ணீர் இருந்தால்தான்  நெலிகத்து கிணறுகளில் தண்ணீர் ஊரும். இப்பொழுது இரண்டு ஏரிகளுமே வறண்டு இருந்தது. மழை பெய்து நான்கு வருடமாகிவிட்டது. நெலிகத்துக்கு மேல் இருந்த ஆகாயத்திலோ கீழ் இருந்த மண்ணிலோ எங்குமே ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் போயிற்று. நீரற்ற நிலம் சுடுகாட்டு நெருப்புபோல தகித்ததாக கதை சொன்ன கிழவன் சொல்லியிருக்கிறான். தண்ணீர் தரித்திரம் ஊருக்குள் வந்துவிட்டதால் ஊரே அழுது புலம்பியபடி அப்பனாண்டியின் தாத்தாவைப் போய் பார்திருக்கிறார்கள்.
                அப்பனாண்டியின் தாத்தா பெரிய ஈஸ்வர பக்தன். மழை வரவைப்பதற்காக அவர் ஈஸ்வரனுக்கு பெரிய அளவுக்கு பூசை செய்திருக்கிறார். பூசைக்காக வெளியூரில் இருந்து நிறைய காசு செலவு செய்து மாட்டு வண்டியில் தண்ணீர் கொண்டு வந்திருக்கிறார். அந்த தண்ணீரை அதிசயமாகப் பார்த்த மக்களின் கண் முன்பாக தண்ணீர் வீணானதுதான் மிச்சம். மழை வரவில்லை.
                அடுத்து அப்பனாண்டியின் தாத்தா ஒரு யோசனை சொன்னார். அதன்படி ஊரில்  இருந்த சில கல்யாணமாகாத கன்னிப் பெண்கள் உடை இல்லாமல் ஜாமத்தில் ஊர் சுற்றி வந்து பூசை செய்திருக்கிறார்கள். அப்பொழுதும் மழை பெய்யவில்லை.
                ‘மழையில்லாத ஊரின் உடம்பு தெரியாத இருட்டில் எத்தனையோ கன்னிப் பெண்கள் மழைக்காக நடந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இது வரையில் எந்த ஊரிலாவது மழை பெய்திருக்கிறதாஇதென்ன மூடத்தனம்’ என்று ஒரு துடுக்குப் பையன் அப்பனாண்டியின் தாத்தாவிடம் தகிறியமாகக் கேட்டிருக்கிறான். திகைத்துப்போன அப்பனாண்டித் தாத்தா ஆமாமில்லே...!’ என்று பேசமுடியாமல் வாயடைத்து தலைமட்டும் ஆட்டியிருக்கிறார்.
                அதற்காக மழை வரவைக்கிற முயற்சியை கைவிட முடியுமாஇன்னும் சில பேர் புது யோசனை சொன்னார்கள். அதன்படி எங்குமே கேள்விப்படாத புது மாதிரியாக ஊரில் இருந்த அத்தனை ஆண்களும் (ஆறு மாச சிசு உட்பட) உடை இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் ஊரைச் சுற்றி வந்திருக்கிறார்கள். அப்படியும் மழை பெய்யவில்லை அம்மணமாய்ச் சுற்றியதற்கா வெட்கத்தில் பெரிது பெரிதாக சிரிப்புதான் வந்தது.
                பெண்கள் உடையற்று சுற்றியதற்கு தர்க்கம் பேசிய அதே துடுக்குப் பையன் திரும்பவும், ‘உடையற்ற மனுசர்களுக்காக உலகத்தில் மழை பெய்யுமென்றால் உடை கண்டுபிடிக்காத காலத்தில் எல்லா மனுசர்களும் உடையில்லாமல் இருந்திருப்பார்கள். அப்பொழுது விடாமல் மழை பெய்து உலகமே அழிந்திருக்கும். உலகம் அழியாமல் இன்னும் இருப்பது உண்மை என்றால் பெண்களின் நிர்வாணத்திற்கோ ஆண்களின் நிர்வாணத்திற்கோ வானம் பெய்யாதுஅது பெய்யும் பொழுதுதான் பெய்யும்’ என்று உரக்க சொல்லியிருக்கிறான்.
                அவன் அப்படி சொன்ன பிறகு ஊரில் இருந்தவர்களெல்லாம் ஒன்றாக கூடி மூன்று நாள் இரவு பகலாக விடாமல் பேசி ஒரு முடிவு எடுத்தார்கள். இனிமேல் அந்த குதர்க்கம் பேசும் பையனை ஊருக்குள் சேர்க்கக் கூடாது என்பதுதான் அந்த முடிவு. முடிவின்படி அந்த தர்க்கம் பேசுபவனை ஊரை விட்டு விரட்டியிருக்கிறார்கள். போகும்போது அவன் ஊர் எல்லையில் நின்றுகொண்டு, ‘இந்த பனங்காட்டு மூதூரானோட உதவி இந்த ஊருக்கு ஒருநாள் தேவைப்படும்பாத்துக்கங்க’ என்று சொல்லிவிட்டு போயிருக்கிறான். பனங்காட்டு மூதூரான் மழை வரவைப்பதற்கான சூட்சுமத்தை தேடி எங்கோ மலைமீது போனதாக ஊரில் ஒரு கதை இருக்கிறது. ஆனால் அதுவும் ஆதாரமற்ற அனாமத்துக் கதைதான்.
பனங்காட்டு மூதூரான் போன பிறகு நெலிகத்து ஜனங்களெல்லாம் ஒன்றாக கூடி சந்தோசமாக ஒன்றை தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். நெலிகத்தில் ஒரு சொட்டு மழையும் இல்லபனங்காட்டு மூதூரான்னு ஒரு மனுசனும் இல்லஆகாசத்துக்கும் பூமிக்கும் நடுவில கும்பிட ஒரு சாமியும் இல்ல’ சொல்லிவிட்டு விசனத்தோடு உட்கார்ந்துவிட்டார்கள்.
                ‘இல்லைன்னு சொன்னா அப்பவே வருவான்’ என்று கடவுளைக் குறித்து பணக்காரன் அப்பனாண்டி போன வருசம் ஊரில் விழுந்த ஒரு துர்மரணம் குறித்து பேசும் பொழுது சொல்லியிருக்கிறான். அந்த வார்த்தையின்படி ஜனங்கள் இல்லை என்று சொன்ன அன்றைக்கே கடவுள் நெலிகத்திற்கு வந்திருக்கிறார். (அந்தக் காலத்தில் கடவுள் அடிக்கடி மனுசங்க மத்தியில வந்து போவாரு. அந்தக்கால மனுசங்க மனசு அப்படி என்று சுப்பன் கிழவனின் அடிக்கடி துணை தருமம் சொல்வான்.)
                ஒரே ஒரு மண்வெட்டியும் ஒரு கூடையுமாக ஊருக்குள் வந்தான் ஒரு கிழவன். அப்பொழுது அவன் ஈஸ்வரன்தான் என்று யாருக்கும் தெரியாது. நான் இந்த ஊர் தண்ணி பஞ்சம் போக்க கிணறு வெட்டித் தரேன். அதுக்கு உபகாரமா இந்த ஊர்க்காரங்க எனக்கு என்ன செய்வீங்க?” அப்படின்னு கேட்டிருக்கான்.
                ஊர் ஜனங்க அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து நீ எந்த ஊர்க் காரண்டாமண்ணை தோண்டினா இங்க நெருப்புதான் வரும்தண்ணி வராது தெரியுமில்ல?” என்று வறண்ட நாக்கை துருத்திக்கொண்டு சிரித்திருக்கிறார்கள்.
                சிரிப்பதைப் பார்த்த கிழவன் கொண்டை போட்டு வைத்திருந்த தன் சடை முடியை காற்றில் பறக்க அவிழ்த்து விட்டு இந்த இடத்தில்தான் நான் சமுத்திரம் மாதிரி கிணறு வெட்டப் போறேன்” என்று சொல்லிக் கொண்டே மண் வெட்டியில் தரை மீது ஓங்கி ஒரு வெட்டு வெட்டியிருக்கிறான். கிழவன் மண் வெட்டியில் வெட்டிய அந்த இடம் அப்பனாண்டித் தாத்தாவின் விளை நிலம்.
                மண்மீது அவன் ஓங்கி வெட்டவும் புகை புகையாய் புழுதி பறந்து கிழவன் மறைந்தே போனான். சற்றுக் கழித்துப் பார்த்தால் கிழவன் வெட்டிய இடத்தில் இடுப்பளவு குழி இருக்கிறது. மிருக பலம் கொண்டவனாக இருக்கிற கிழவன் ஒருவேளை சமுத்திரம் மாதிரி கிணறு வெட்டி நீர் வந்தாலும் வரும் என்று நம்பிய ஜனங்கள் எதைக் கேட்டாலும் தருகிறோம் கிணறு வெட்டு’ என்று சொன்னார்கள்.
                மண் வெட்டியும் கூடையுமாக வேலை ஆரம்பித்த கிழவன் முரட்டு எலிக்கு பேய் பிடித்து மலையைக் குடைவது போல அசுர வேகத்தோடு ஒரே நாளில் சூரியன் மறைவதற்குள் கிணற்றை வெட்டி முடித்தான். பதநீரின் தித்திப்பில் தண்ணீர் ஊற்றெடுக்கிறது. அத்தனை ஜனங்களும்அள்ளி அள்ளி குடித்து சந்தோசத்தில் துள்ள ஆரம்பித்தார்கள்.
                கிணற்றை வெட்டி முடித்த கிழவன் தன் விறித்துப்போட்ட சடையை சிக்கலெடுத்தபடியும்கொண்டை ஊசியை வாயில் கடித்தபடியும் சொல்லியிருக்கிறான், “இந்த கிணற்று நீர் அமிர்தம்இந்தத் தண்ணியை குடிக்கலாம் ஆனா வேறு காரியங்களுக்கு உபயோகம் பண்ணக்கூடாது. பண்ணிட்டா கிணறு வத்திப்போகும்.
                “சாகக் கிடந்த பிணத்தின் மாமிசத்திற்குள் உயிரை மீண்டும் புகுத்தியிருக்கிறாய்நீ சொன்னபடி கேட்கிறோம். வெட்டிய கிணற்றுக்கு உபகாரமாக என்ன கேட்கிறாய்” என்று ஜனங்கள் கேட்டார்கள்.
                கிழவன் கேட்டானாம், “ஊரில் இருக்கிற அத்தனை கன்னிப் பெண்களையும் எனக்கு கல்யாணம் செய்து கொடுங்கள்.” என்று.
                ஒற்றை நாளில் பதநீர் வடியும் ஒரு கிணற்றை வெட்டியவன் புஜபலத்தோடுதான் இருப்பான் என்றாலும் அத்தனை பெண்களை கல்யாணம் செய்துகொண்டு கிழவன் என்ன செய்வான் என்று ஊர்க்காரர்கள் திகைத்தார்கள். நெலிகத்து கன்னிப் பெண்கள் யாரும் கிழவனை கல்யாணம் செய்துகொள்ள ஒப்பவில்லை.
                சோறு தருகிறோம்கிடாய்க் கறி தருகிறோம்சாராயம் தருகிறோம் சந்தோசமாய் தின்றுகடித்துகுடித்துவிட்டுப் போ. கன்னிப் பெண் கிடைக்கமாட்டாள் என்று ஊரார் சொன்னதும் அவன் ஒற்றைக் காலில் நின்று, “கன்னிகளை கல்யாணம் செய்துகொள்ளாமல் நான் போகமாட்டேன். இங்கேயே ஒற்றை மரமாகி நிற்பேன். ஊரிலேயே பெரிய மரமாக நான் வளர்வேன். மரத்தில் ஒரே பூ பூக்கும். கனி இருக்காது. மரமாகி நிற்பது நான் என்பதால் எத்தனைக் காலம் ஆனாலும் மரத்தில் யாரும் ஏறக்கூடாது. மரத்தின் கிளைகளை அடுப்பெறிக்கக் கூடாது. இன்றிலிருந்து ஊருக்கு ஒரு சாபம் வரும். சாபத்தின் கொடுமை பெரிசாய் இருக்கும்” என்று கிழவன் தன்பாட்டுக்கு என்னென்னவோ சொல்லிக்கொண்டே இருக்கிறான்.
                இருட்ட ஆரம்பித்த பிறகும் அவன் பேசுவதை நிறுத்தவேயில்லை. ஊரில் இருந்து தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு வந்து அந்த வெளிச்சத்தில் அவனை சமாதானம் செய்தார்கள். அவன் சமாதானமாகவில்லை. அப்பொழுது பெரும் இடிச் சத்தத்துடன் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது. தீப்பந்தங்கள் அணைந்து போயிற்று. வெகுநாளுக்கு பிறகு மழை வந்ததால் இருட்டில் மின்னல் வெளிச்சத்தில் எகிறி எகிறி குதித்து ஜனங்கள் ஆடிப்பாட ஆரம்பித்தார்கள். கொஞ்ச நேரம்தான் அந்த ஆட்டம். மழையில் அத்தனைபேர் உடம்பும் மரணம் தரும் குளிரில் வெடவெடத்துப் போயிற்று. எல்லோரும் ஊருக்குள் போய் வீட்டில் பதுங்கிவிட்டார்கள். கிழவன் நின்றது நின்றவாக்கிலேயே இருப்பது வெட்டும் மின்னல் வெளிச்சத்தில் தெரிந்து தெரிந்து மறைகிறது.
                இரவு முழுசும் பிரளயம் வந்தது போல இடி மின்னலோடு ஆலங்கட்டி மழை பெய்கிறது. இரவு முழுதும் மழையில நின்ற கிழவன் ஒன்று இடி இறங்கி செத்திருப்பான் அல்லது எங்காவது ஓடியிருப்பான் என்று மறுநாள் வந்து ஜனங்கள் பார்த்தார்கள். துளுதுளுவென்று வளர்ந்த ஒரு செடி மட்டும் ஆளுயரத்திற்கு ஒற்றைப் பூவோடு நிற்கிறது. கிழவன் சொன்னது போல மரமாகிவிட்டான்.
                கிழவன் சொன்ன அந்த சாபம் ஊருக்குள் வந்துவிட்டது. ஊரில் எந்த பையனுக்கும் பெண்ணுக்கும் கல்யாணமே ஆகவில்லை. கல்யாணம் ஆனவர்களுக்கு கர்பம் தரிக்கவில்லை. கர்பமானவர்களுக்கு உயிரோடு குழந்தை பிறக்கவில்லை. எல்லோருக்கும் வெகு சீக்கிரமே நரைமுடியும் உடல் சுருக்கமும் வந்தது. ஆண் பெண் சேர்க்கையே ஊரில் இல்லாமல் போயிற்று.
                “அந்த பெரிய மரத்தில் என்றைக்கு ஒரு கனி விட்டு பறவைகள் பறந்து வந்து மரத்தின் கிளையில் உட்கார்கிறதோ அன்றைக்கு ஊரில் சாபம் விலகும்” என்று கிழவன் யாருமற்ற தனிமையில் பேசியதைக் கேட்டதாக கடைசியாக மழைக்கு ஓடி வந்த ஒருத்தன் சொன்னான்.
                அதன் பிறகு எப்பொழுது அந்த மரத்தில் கனிவிடும், எப்பொழுது பறவை வந்து உட்காரும் என்று நெலிகத்து மொத்தப்பேரும் அன்னாந்து பார்த்துக் கொண்டே இருந்ததாக கதை முடிகிறது. அந்த மரத்தில் எப்பொழுது கனி விட்டது, எப்பொழுது பறவை வந்து உட்கார்ந்தது, எப்பொழுது ஊரின் சாபம் விலகி எல்லோருக்கும் கல்யாணமாகி கர்பம் தரித்து சாகாத பிள்ளையைப் பெற்றார்கள் என்ற சரியான விவரணக்கதைகள் இன்றைக்கு ஊரில் கிடையாது. ஆனால் குமரன் ஏறிய மரமும் குப்புற விழுந்த கிணறும் அதுதான் என்று எல்லோருமே இப்பொழுது சொன்னார்கள்.
                அப்படியானால் ஏறக்கூடாத மரத்தில் ஏறியதற்காகவும்விழக்கூடாத கிணற்றில் விழுந்ததற்காகவும் ஊருக்கு ஒரு பெரும் கேடு வருமே என்று எல்லோரும் பயந்தார்கள். அது குறித்து அப்பனாண்டிப் பணக்காரனிடம் முறையிட்டார்கள். அவன் ஆவதைச் செய்வதாக சொன்னான்.
தொடரும்...

No comments: