Saturday, November 30, 2019

வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 4


                மின்சாரம் வந்த நாள் பற்றியோகிணறு வெட்டித் தந்த ஈஸ்வரன் பற்றியோ முற்றும் முழுசுமாக தெரியாதது போலவே நெலிகத்தின் முதல் தையல்காரன் யார் என்ற விசயமும் நெலிகத்தாருக்கு தெரியவில்லை. மரப்பட்டைகளை உடுத்திய பின்நெய்யப்பட்ட உடைகளை உடுத்த ஆரம்பித்த வித்தை அங்கு யார் கொண்டு வந்தார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால்உத்தாண்டி என்ற தையல்காரனைப் பற்றியும் உத்தாண்டியின் அம்மாவைப் பற்றியும் நெலிகத்தில் சிலபேருக்கு கொஞ்சமாக விசயம் தெரிந்திருந்தது.


                உத்தாண்டியின்... (உத்தாண்டியையும்அப்பனாண்டியையும் கதை போகிற வேகத்தில் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. உத்தாண்டி வேறுஅப்பனாண்டி வேறு.) இந்த உத்தாண்டியின் அம்மாதான் நெலிகத்தில் அறியப்பட்ட முதல் தையல்காரியாகத் தெரிகிறாள். அவள் நெலிகத்தில் பிறந்தவள் கிடையாது. நெலிகத்திற்கு வெகு தூரத்தில் உள்ள ஊரில் சாப்பாட்டுக் கஷ்டத்தோடு இருந்தவள். பசிக்கிற மகனுக்காக மடி நிறைய சோளக்கதிர்களை நிலத்துக்காரனுக்கு தெரியாமல் திருடியதால் பிடிபட்டுஊர் மக்கள் முன்பாக நிறுத்தப்பட்டுகோயில் பூசாரியால் மும்முறை எச்சில் துப்பப்பட்ட அவமானத்திற்கு ஆளாகி பிறகு ஊரை விட்டுத் துரத்தப்பட்டவள்.
                அதன் பிறகு உத்தாண்டியை இடுப்பில் இறுக்கிக்கொண்டு நடை நடையாக நடந்து நெலிகத்திற்கு வந்து சேர்ந்தாள். அப்பொழுது உத்தாண்டிக்கு வயசு நாலு. உத்தாண்டியின் அம்மாவுக்காக இல்லை என்றாலும் செத்துவிடும் அழகில் இருந்த உத்தாண்டிக்காக ஒன்றிரண்டு பேர் சாப்பாடு போட்டிருக்கிறார்கள் நெலிகத்தில். பையன் போட்டிருந்த உடைக்காக இல்லாவிட்டாலும் உத்தாண்டியின் அம்மா போட்டிருந்த உடை அலங்கோலத்தைப் பார்த்து சில பெண்கள் முக்கால் பாகம் கிழிந்த சீலைகளை அவளுக்கு தந்திருக்கிறார்கள். ஒரு சீலையை உடுத்தினால் உடம்பின் பாதிகூட மறைக்காது என்பதால் இரண்டு சீலைகளை ஒன்றாக தைத்து உடுத்தலாம் என்று நினைத்திருக்கிறாள் அவள்.
                எத்தனையோ பேரிடம் அவள் சீலை தைப்பதற்காக ஊசி கேட்டும் யாருமே தரவில்லை. காரணம் ஊசி இருக்கிற வீடே அங்கு இல்லை. ஒரே ஒருத்தி மட்டும் ஊசி வைத்திருந்தாள். அவளிடம் தைப்பதற்கு நூல் இல்லை. கிழிந்த சீலையில் இருந்து நூல் எடுத்து துணிகளை தைக்க முடியும் என்று உத்தாண்டியின் அம்மா சொன்னதும் ஊசியைத் தந்த அவள் என்னுடைய சீலையையும் தைத்துத் தரவேண்டும் என்று கறாராக சொல்லியிருக்கிறாள்.
                அதன்படி ஊசியை கடனாக வாங்கிய உத்தாண்டி அம்மா தன்னுடைய சீலையை தைத்துத் கட்டிக் கொண்டு பிறகு ஊசி தந்தவளின் நைந்த சீலைகளை தைத்துக் கொடுத்தாள். அதை அறிந்துகொண்ட இன்னும் சில பெண்கள் தங்களின் சீலைகளையும் தைத்துத் தரும்படி கெஞ்ச ஆரம்பித்தார்கள். வெளியூரில் மட்டுமே கிழிந்த சீலைகளை தைக்கும் ஆள் இருக்கிறார்கள் என்று நம்பிய பெண்களுக்கு தங்கள் ஊரிலேயே சீலை தைக்க ஆள் வந்ததும் சந்தோசமாகிவிட்டது. சீலை தைத்துத் தருவதன் மூலமாக அவளுக்கும் மகனுக்கும் வேளா வேளைக்கு கூலியாக சாப்பாடும் கிடைத்தது.
                முதலில் சீலைத் துணிகளை மட்டுமே தைக்க ஆரம்பித்தவள் பிறகு பழைய சோமம்துண்டுலங்கோட்டுபாவாடைபோர்வைகொசுவலைகுடைத்துணி என்று எல்லாவற்றையுமே தைக்க ஆரம்பித்தாள். வேலை அதிகமாக கிடைத்ததால் அவள் துணிகளின் தகுதிக்கு தக்க ஊசியையும் துணிகளின் வண்ணத்திற்கு தக்க நூல்களையும் வெளியூரில் இருந்து தருவித்து தைக்க ஆரம்பித்தாள். அவளிம் புதுப் புது ஊசிகளும் வண்ண வண்ண நூல்களும் ஏராளமாக சேர்ந்தது.
                அம்மா தைக்கும் பொழுது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த உத்தாண்டி தன் பிஞ்சு விரல்களால் ஊசி எடுத்து சில துணிகளை தைக்கப் பழகினான். அப்படி தைக்கப் பழகும் பொழுது பிஞ்சு விரல்களைக் குத்தி ரத்தம் வந்திருக்கிறது. ஆனாலும் அவன் துணி தைக்கக் கற்றுக்கொண்டு ஒன்றிரண்டு துணிகளை தைத்துக் கொடுத்தான். அந்த பிஞ்சு விரல்களில் செய்யப்பட்ட தையல் நகாசையும்நேர்த்தியையும் பார்த்தவர்கள்  உத்தாண்டிதான் தங்கள் துணிகளை தைக்க வேண்டும் என்று அடம்பிடித்தார்கள். உத்தாண்டி சின்ன வசயில் பெரும் துணி தைப்பவனாக ஆனான்.
                உத்தாண்டி தினமும் விதவிதமான கலைநயம் மிக்க அழகோடு பழந்துணிகளை தைத்துத் தந்தான். பிறகு புதுத் துணிகளிலும் தன்னுடைய கலையழகை காண்பித்து புதுவிதமான உடைகளை தைக்கவும் அவன் முயற்சி செய்தான். அவன் தைத்துக் கொடுத்த புதுத் துணிகளின் அழகில் எல்லோரும் மயங்கிப் போனார்கள். நிறைய புது உடைகள் தைக்கும் வேலை அவனுக்கு வந்தது. ஒரே ஒரு ஊசியை வைத்துக்கொண்டு இரவு பகல் என்று இடைவிடாமல் தைத்தும் கேட்ட அத்தனை பேருக்கும் உடை தைத்துத் தரமுடியாமல் திணறினான் உத்தாண்டி. சீமையில் இருக்கிறவர்கள் இயந்திரத்தில் உடைகளை தைக்கிறார்கள் என்று அறிந்த உத்தாண்டி ஒரு பழைய தையல் இயந்திரத்தை வாங்கிக்கொண்டு வந்தான். அந்த இயந்திரம் கையினால் சக்கரத்தை சுற்றி இயக்குவதாக இருந்தது. பிறகு பிசிறில்லாமல் வெட்டும் கத்திரிக்கோலையும் வாங்கிக்கொண்டு வந்தான். உத்தாண்டி தைத்த உடையைத்தான் நெலிகத்தின் அத்தனை பேரும் உடுத்தினார்கள். உத்தாண்டிக்குப் பிறந்தவன்தான் ஆகாசம்.
                ஆசாசம் அப்பனைப் போலவே தையல்காரனாகத்தான் இருந்தான். உத்தாண்டியைவிட வேகமாகவும் விருவிருப்பாகவும் அதிக உருப்படிகளை தைப்பவனாக இருந்தான். அவன்தான் அளவெடுத்து தைப்பதற்கு அளக்கிற நாடாவை உபயோகப் படுத்தியவன். நெலிகத்தை தவி சுற்றி இருந்த கிராமங்களான தின்னப்பட்டி, ரெட்டிப்பட்டி, கொமத்தம்பட்டி, நார்த்தம்பட்டி, கோயிலூர், சவுளுர் போன்ற ஊரில் இருந்தும் அவனுக்கு உருப்படிகள் வந்து சேர்ந்தன.
                ஒருத்தன் ஒரு ஜதை உடுப்புகள் மட்டும்தான் வைத்திருக்கலாம்அதற்கு மேல் இன்னொரு உருப்படி இருந்தால் அவன் கொலுப்பெடுத்தவன் என்ற நெலிகத்தாரின் எண்ணம் மெல்ல மறைந்து இரண்டு ஜதை துணிகளைக்கூட வைத்திருக்கலாம் தப்பில்லை என்ற எண்ணம் வந்திருந்தது. உடுத்திய உடை கிழிந்தால் மட்டுமே அடுத்த உடை எடுக்கலாம் என்ற எண்ணம் போய் வருசமானால் புது உடை எடுக்கலாம் என்ற எண்ணமும் வந்திருந்தது. அதனால் பண்டிகைக்காக மட்டுமே உடை எடுத்து பழகியவர்கள் பண்டிகை அல்லாத தினத்திலும் உடை எடுத்தார்கள். கல்யாண காலம்பண்டிகைக் காலம்பள்ளிக்கூடங்கள் திறக்கிற காலங்கள் வந்துவிட்டால் ஆகாசத்தின் தையல் இயந்திரம் இடைவிடாமல் சுற்றிக்கொண்டே இருந்தது.
                ஒரு மாதத்திற்கு முன்பே ஆகாசத்திடம் துணி கொடுத்தால்தான் தேவையான நேரத்தில் புது உடை கிடைக்கும் என்ற நிலைமை நெலிகத்தில் வந்தது. ஆகாசமும் அதிகமான காசு புலங்கும் ஆள் ஆனான். புதிய தையல் மெஷினும் அதற்கு மின்சார மோட்டார் ஒன்றும் பொறுத்தினான்.
                ஆகாசத்திற்கும் ஒரே மகன்தான். அவனை தன்னைப் போல தையல்காரனாக ஆக்க ஆகாசத்திற்கு விருப்பம் இல்லை. வாத்தியார் ஆகவேண்டும் என்று விரும்பினான். காரணம் வாத்தியார் எப்படி ஊரில் அத்தனை பேருக்கும் பாடம் சொல்லித் தந்தாரோ அப்படியேதான் ஊரில் அத்தனை பேருக்கும் ஆகாசம் உடை தைத்துத் தந்தான். ஆனால் ஆகாசமும் வாத்தியாரும் ஒன்றாக போகும் பொழுது ஊர் ஜனங்கள் வாத்தியாருக்கு மட்டுமே வணக்கம் சொன்னார்கள். அதனால் தையல் தொழிலைவிட வாத்தியார் தொழில் மரியாதைப்பட்டது என்ற முடிவுக்கு வந்தான்.
                காசு பணம் அதிகம் சேர்ந்ததால் மகனை படிக்க வைக்க பஞ்சமில்லாமல் இருந்தது போலவே ஆகாசத்திற்கு ஊத்துப்பள்ளத்தில் காய்ச்சப்படும் சாராயத்தை குடிப்பதற்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது. அவன் குடிக்க பழகிவிட்டான்அப்படி பழகிய பிறகு சூரியன் மறையும் வரைதான் தையல் தைப்பேன் என்று நியதியும் வகுத்துக்கொண்டான். தீர்த்தம் குடிக்கப் போனதால் இரவில் தைக்கும் பழக்கம் சுத்தமாக நின்றது. மலைமலையாக தைக்க வேண்டிய துணிகள் தேங்க ஆரம்பித்தது. தீபாவளிக்கு உடுத்துவதற்காக கொடுக்கப்பட்ட துணிகள் அடுத்த பொங்கலுக்குத்தான் நெலிகத்தாருக்கு கிடைத்தது. கல்யாணத்தில் பழைய சொக்காய் போட்டு மாப்பிள்ளை தாலிகட்டிய கூத்தும் ஆகாசத்தால் ஊரில் நடந்திருக்கிறது. அப்படியும் நெலிகத்து ஜனங்கள் ஆகாசத்திடம் துணி தைக்க கொடுப்பதை நிறுத்தவில்லை. காரணம் ஆகாசம்தான் ஊரின் ஒரே தையல்காரன்.
                கொஞ்சம் நாளிலேயே ஆகாசம் பகலில் தைப்பதையும் நிறுத்திக்கொண்டான்அப்படியே தைக்க உட்கார்ந்தாலும் துணிகளை மாற்றியும்பெரிய பெரிய அளவோடும் துணிகளை தைத்துத் தர ஆரம்பித்தான். அதனால் நெலிகத்தில் எல்லோருமே பூம்பூம் மாட்டுக்கு துணி போட்டது போலவும்மாட்டு வண்டி மேல் போர்வை காயப்போட்டது போலவும் தொளதொளப்பான உடைகளை போட்டுக்கொண்டு கோமாளிகளைப்போல திரிந்தார்கள். முழங்காலுக்கு கீழ் தொங்கும்படி பெரிய டவுசர்களை மாட்டிக்கொண்டு ஆண்களும், சிறுவர்களும் திரிந்தார்கள். அதைவிட மோசம், தளர்த்தியான மோசமான பெண்களின் ரவிக்கைகள்தான்.
                இப்படி இருக்க நெலிகத்திற்கு முதன் முதலாக மோட்டார் பஸ் வந்தது. அது வந்த பிறகு நெலிகத்திலிருந்து சில பேர் வேலைக்காகவும்படிப்பதற்காகவும் பஸ் ஏறி போக ஆரம்பித்தார்கள். அப்படிப் போனவர்களில் ஒருத்தன் தயாராக தைத்து விற்கப்பட்ட புது சொக்காய் ஒன்றை வாங்கி வந்தான். வாலிபப் பையன்கள் அதைக் கண்டு அதிசயித்துப் போனார்கள். அந்த உடை கனகச்சிதமாகவும்அழகாகவும் விலை குறைவாகவும் இருக்கக் கண்டார்கள். நிறைய வாலிபப் பையன்கள் தயாராகி விற்பனைக்கு வந்த உடைகளுக்கு மாறிக்கொண்டார்கள். அதன் பிறகு கிழவர்களும்பெண்களும்கூட தைத்த உடை வாங்கினார்கள். சுடிதார்பேண்ட்நைட்டி போன்ற வினோத உடைகள் அங்கே அறிமுகமாகி சர்வ சாதாரணமாயிற்று.
                ஆகாசத்திடம் புதுத்துணிகளின் வரத்து குறைந்துபோனது. புடவை அல்லது வேட்டிகளின் ஓரத்தை தைக்க மட்டுமே சில துணிகள் வந்தது. கடைசியில் ஒரு தீபாவளி தினத்தன்று ஓரம் தைப்பதற்குகூட ஒற்றைத் துணி வராத நிலை ஆகாசத்திற்கு ஏற்பட்டது. இத்தனைக்கும் அது தீபாவளிக்கு முந்தைய சில நாள்.
                ஊரில் இல்லாத மாதிரி புதுவிதமான உடைகளைத் தைத்து தன் மனைவிக்கும் மகனுக்கும் பண்டிகைக் காலங்களில் தருவான் ஆகாசம். இந்த தீபாவளிக்கு துணி எடுக்க முடியாத அளவுக்கு காசில்லாமல் இருந்தான்.  உடையே இல்லாத இந்தக் கஷ்டத்தில் எனக்கு பட்டாசு வேணும்பலகாரம் வேணும் என்று மகன் நச்சரித்தான்.  எல்லோரிடமும் கடன் வாங்கியாயிற்று. இனி யாரும் தரமாட்டார்கள்.
                விடிந்தாள் தீபாவளி. முதல் நாள் இரவு நிறைய குடித்துவிட்டு ஒரு பெரிய சாக்குப் பை அளவுக்கு ஆட்டுக் கறியை வீட்டுக்கு கொண்டு வந்தான் ஆகாசம். பலகாரம், பட்சணம், இனிப்பு என்று பலதும் வாங்கி வந்திருந்தான். ஒரு பெரிய அண்டாவில் மணக்க மணக்க கறியை குழம்பு வைத்து வீட்டின் பின்புறமுள்ள மரத்தடியில் மனைவி மகனோடு தின்றான். மலையளவு சேர்ந்துவிட்ட ஆட்டின் கால்களை மரத்தடியில் குழிதோண்டி புதைத்தான். வானத்தை பார்த்து படுத்துக்கொண்டு தன் மகன் பெரிய வாத்தியார் ஆகணும் என்று பேசினான். தீபாவளிக்கு முந்தைய இரவென்பதால் தொலைவில் அங்கொன்றும் இங்கொன்றும் பட்டாசு சத்தம் கேட்டது. மகன் அப்பா பட்டாசு என்றான்.
                கறி வாங்க காசிருந்தது. மகனுக்கு பட்டாசு வாங்கவும்புது உடை வாங்கவும் காசு இல்லை. நாளைக்கு உனக்கு வாங்கித் தரேன் என்று மகனிடம் சொன்ன ஆகாசம் மகனையும் மனைவியையும் தூங்க அனுப்பிவிட்டு மரத்தடியிலேயே படுத்திருந்தான்.
                விடிந்துவிட்டது. புதுத்துணி கேட்க அப்பாவை தேடினான் மகன். ஆகாசம் வீட்டின் பின்னால் இருந்த மரத்திலிருந்து குப்புற விழுந்து ரத்தம் வர செத்திருக்கிறான். தீபாவளி பட்டாசு வெடிச் சத்தத்தில் அப்பன் மண்டை வெடித்தது அவனுக்கு கேட்கவில்லை. தனக்கு உடை கொடுக்க முடியாத துக்கத்தில் அப்பன் செத்தது பெரும் துக்கத்தை தந்தது குமரனுக்கு. இத்தனை நாள் பளபளப்பான உடை போட்டதற்காக மிக வருந்தினான். வியாழக்கிழமை இரவு துருத்திக்கொண்டு வெளிவந்த எலும்பு அப்பனின் துக்கத்தை அவனுக்குள் கிளறியது. அதன்பிறகு நடந்தது குமரனுக்கு தெரியாது.
                “அவன் சல்லியம் பாத்து எடுத்தது வேட்டை நாயோட எலும்பு இல்லைஎன் அப்பன் தின்ன ஆட்டுக்கால் எலும்பு” என்று இரவெல்லாம் புலம்பினான் குமரன்.
                உண்மையா பொய்யா என்று உணரமுடியாத நெலிகத்து கதையில் கிணற்றை காவல் காத்த வேட்டை நாய்களை கொன்ற குற்றத்திற்காக குமரனை ஊரைவிட்டு போய்விடும்படி சொல்லிவிட்டது ஊர். சோளக்கதிர் திருடிய குற்றத்திற்காக ஊரைவிட்டு துரத்தப்பட்டு நெலிகத்திற்கு வந்த அந்த குடும்பம், வேட்டை நாய் கொன்ற குற்றத்திற்காக முற்றாக வெளியேறியது. குமரன் பஞ்சம் பிழைக்கப் போய் சேர்ந்த ஊரிலும் ஒரு கதை இருந்தது. நாலு தலைமுறைக்கு ஒரு முறை ஊரைவிட்டு துரத்தப்படும் ஒரு குடும்பத்தின் சாபத்தைப் பற்றிய கதை அது. ஒரு வேலை அந்த சாபமுள்ள குடும்பம் குமரனின் குடும்பமாக இருக்கலாம். சோளக்கதிர் திருடி வெளியேறிய அந்த பெண் பிறந்த பூமியாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தால் என்னகுமரன் குடும்பம் துரத்தப்பட்ட அந்த நாளும் நெலிகத்து சரித்திரத்தில் எழுதப்படாமல் மறைந்து போகும் என்பது மட்டும் உண்மை.

முற்றும்


No comments: