Thursday, October 31, 2019

# மழைக்காலத்தில் முளைக்கும் குடைக்காளான் #

     ·         நல்லிரவு நேரம். மழை தொரத்தொரவென பெய்துவிட்டு சற்றுமுன்தான் ஓய்ந்திருக்கிறது. இப்போதே குளிர்காலம் வருவதன் ஆயத்தம் தெரிகிறது. ஈரம்சாரமான இந்த இரவில் அமானுஷ்யங்கள் குறித்து எழுதலாமா என்று யோசிக்கிறேன்.
·         பேய்க் கதைகளா? நல்லிரவிலா?

· கலக்கமாக இருக்கிறது. நாய்கள்வேறு எல்லைகளை பாதுகாப்பதற்காக தீவிரமாக குறைத்தபடி இருக்கின்றது. வேறு எதாவது முயற்சிக்கலாம் என்று மடிக்கம்ப்யூட்டரை டேபிளில் விரிக்கிறேன். காரணமே இல்லாமல் ஒரு சந்தேகம் எழுகிறது..
ஐநூறு வருடங்களுக்குப் பிறகு தமிழின் உரைநடை வடிவம் எப்படி இருக்கும்?
இதற்கு பேய்க் கதைகளே எழுதியிருக்கலாம்.
·      லைப்ல எதுமே நிரந்தரமில்ல. எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கோ. என்ஜாய் பண்ணு.” என்று இப்போது பேசப்படும் மொழிவடிவத்தில் உள்ள வாழ்வியல் தத்துவங்களை ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு சரியாகப் புரிந்துகொள்வார்களா? யோசிக்கிறபோதே மூளை கிர்ரடிக்கிறது.
முதல் முதலில் பேய்க் கதைகளை எழுதியது யாராக இருக்கும்? ஆரம்பகால பேய்க்கதைகளின் உரிமையாளர்கள் சந்தேகமே இல்லாமல் பாட்டிகளின் பாட்டிகள்தான். அவர்கள் நிச்சயம் அதை எழுதியிருக்கமாட்டார்கள். ஓலைச்சுவடிகள் பண்டிதர்களுக்கானது. பாட்டிகள் பயமுறுத்தியதெல்லாம் வாய்மொழிக் கதைகள். இப்போது மீண்டும் ஒரு சந்தேகம்...
சிலநூற்றாண்டுகள் கடந்த பிறகும் அதைப் புரிந்துகொள்வதற்கு ஏதுவான ஒருமொழியை இன்றைக்கே எழுதுவது சாத்தியமா?
·   எல்ஈடி விளக்கு வெளிச்சத்தில் இரவெல்லாம் கண் விழித்து எழுதப்படும் படைப்புகளை அடுத்த நூற்றாண்டிலாவது படிப்பார்கள் என்கிற நப்பாசைதான்.
நூற்றுக்கணக்கான விளக்க உரைகளுக்குப் பிறகு சங்க இலக்கியங்களை ஒருவாரு புரிந்துகொள்கிறோம். அதேபோல தற்கால இலக்கியங்கள் ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு ஏறுக்குமாறாக புரிந்துகொண்டு வாசிக்கப்படலாம்.
·     மொழியின் வடிவம் நிரந்தரமானதல்ல. எப்போதும் மாறிக்கொண்டே இருப்பது. ஐந்து வீடு தள்ளியிருக்கிற ஒரு குடும்பம், கடலோர மாவட்டத்திலிருந்து வந்து, ஊதக்காற்று வீசுவது பொல வார்தைகளை நீள நீளமாக இழுத்து பேசுகிறார்கள். அதுவும் தமிழ்தான். கூபையென்றால் அது கூகையின் திரிபாகவும், கூகை என்பது ஆந்தையின் அத்தை மகனைக் குறிக்கும் வசவுச் சொல்லாகவும் இருக்கலாம் என்று ஒருவாறு புரிந்து கொண்டு உரையாடல் தொடர்கிறது. இதில், அடுத்த நூற்றாண்டுத் தமிழ் வடிவத்தை இப்போதே முயற்சிப்பதெல்லாம் சாத்தியமில்லைதான். ஆனாலும்....

 இக்காலத் தமிழில் எக்காலத்திற்கும் எழுதிவைப்போம். அதுவே தமிழ்த் தொண்டு. (கைதட்டல்.. விசில் சத்தம்)
இப்போது நான் எழுதப்போவது ஒரு கவிதை. அதன் வடிவத்தை வைத்து பார்க்கிற போது வார்த்தைகளுக்கு வயது தொன்னூறு இருக்கலாம்

வார்த்தை பழையதாக இருந்தாலும் கருப்போருள் எக்காலத்திற்கும் செல்லுபடியாகும்.
கவிதையை வாசிப்பதற்கு முன்பு அது குறித்த சில முன்னோட்டுக்களை சொல்லிவிடுகிறேன். இந்த முன்னோட்டும் கூட நவீனமானதில்லை. அரதப் பழைய வார்த்தைகள்தான். ஆனாலும் சுமாராகப் புரியும்.
உதவி அல்லது ஈதல் பற்றி அந்தக் கவிதை பேசுகிறது.
·        ஈதல் என்றால் உதவி செய்தல். இசைபட வாழ்தல் என்றால் எண்ணை வைத்த கதவு போல பெரிதாக உரசல் ஒன்றும் இல்லாமல் சுமூகமாய், சத்தம் சந்தடி இல்லாமல் வாழ்வைத் துய்ப்பது.
இறுதியில் துய்ப்பது வந்திருக்கிறது.
ஆகவேதுப்பார்க்குத் துப்பாய...” என்று ஆரம்பித்து பழம்பெருமை வாய்ந்த பட்டிமன்ற நடுவர் போல பிளேடுகளை பிரயோகிக்க மாட்டேன்.
·         கடுகைத் துளைத்து ஆறேழு சமுத்திரங்களை அதற்குள் புகட்டி குறுகத் தரித்த குறலில் இசைபட வாழ்வதற்கான உத்ரவாதமான வழிமுறைகள் ஏராளமாக சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரை படிக்காதவர்கள் இன்றைக்கே சில பக்கங்களையாவது புட்டிவிடுங்கள். அது நிஜமாகவே தங்கச் சாவி. விசாலமான பல கதவுகளை அது திறந்து காட்டும்.
நான் சொல்வது அறிவெனும் கதவு. அல்லது ஜன்னல். அல்லது ஓலைத் தடுக்கு. அல்லது முகத்தை மூடியிருக்கும் நடுக்கமுற்றக் கைகள். தினப்படி ஆயிரக்கணக்கில் பிறக்கிறார்கள். எப்படி வாழ்வதென்று தெரிவதில்லை. குறல், வாழும் வகை சொல்கிறது.
இங்கே சொல்லப் புகுந்தது, அல்லது வந்தது, வாழ்தல் பற்றி அல்ல.. ஈதல் பற்றி.
இல்லாதவனுக்கு இருப்பவன் கொடுக்க வேண்டும். இது ஒரு அறம்சார் மனோபாவம். இங்கே ருப்பவன் எல்லாம் இல்லாதவன் போல நடிக்கிறான். இது ஒரு மனோபாவம்
உலகில் தீவிரமாய் பிச்சை எடுக்கின்றவர்கள் அனைவருமே பரம்பரைப் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள். இது ஒரு வினோதம். அவர்கள் எப்போதும் வாயை பிளந்தபடி இருக்கிறார்கள். அது முதலையின் வாய். கண்ணில் எது தென்பட்டாலும் லபக். ஒற்றை நெல்மணியில் தொடங்கி கட்டித் தங்கம் வரைக்கும் அத்தனையும் லபக்.
இங்கேயும் ஈதல் ஒரு அறம் என்பார்கள். அது ஒரு உயர்நிலை பண்பாடு. பணம் சேருமிடத்தில் அறம் அழிந்து போகுகிறது. ங்கே ஈதல் எடுபடுமா?
சிலர் கொடுக்கிறார்கள். சிலர் கொடுப்பது போலும் பாவனைகள் செய்து நடிக்கிறார்கள். சுரண்டிய பணத்தில் சொட்டும் நீர்ச் சிதறல்களை தருமம் என்று கொள்ள இயலாது.. கோடிகளை கொள்ளையடித்தவன் சில்லறையை சிதறவிடுவது ஈதல் அல்ல. பாவங்களுக்கு ஈயம் பூசுதல்.
சர்வதேச அளவில் இருக்கிற அத்தனை செல்வந்தர்களுமே தீவிரமான மனநோய் கொண்டவர்கள். இதைச் சொன்னால் வன்மையாக கண்டிப்பார்கள். ஆனால் உண்மை அதுதான்.
பணக்காரனெல்லாம் பைத்தியக்காரன் என்று எளிமையாகச் சொன்னால் திரும்பவும் அதிர்ச்சியாக இருக்கும். சிலருக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு அங்கமெலாம் நடுங்கும். கோபத்தில் கண்கள் சிவக்கும். ஆனாலும் அதுதான் உண்மை.
ஒருவனிடம் பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து தின்றாலும் அழியாத செல்வமிருக்கிறதுபதினோராம் தலைமுறையில் ஒருவன் பிறக்க முந்நூறு வருடங்கள் ஆகும். அவன் எப்படி இருப்பான்? யாராய் இருப்பான்?
·         அவன் பெயர் AKM 22ADP MO1247801
வருங்கால குடிமக்களின் பெயர்கள் இப்படியும் இருக்கலாம். அல்லது #%$&()67!@ என்றும் இருக்கலாம். மிஸ்டர்  #%$&()67!@ -டிடம் ஒரு கேள்வி.
பத்து தலைமுறைக்கு முந்தைய னது தாத்தாவிற்கெல்லாம் தாத்தாவின் பெயர் என்னவென்று கேட்டால் அவனால் சொல்ல முடியுமா?
அவனை விடுங்கள்.. முன்னூறு வருடங்களுக்கு பிறகு பிறக்கும் பதினோராம் தலைமுறைக் குழந்தையின் முகம் எப்படி இருக்கும் என்று இவனைக் கேட்டால் இவனாவது சொல்வானா?
அது கற்பனைக்கு அப்பாற்பட்டது.
·         கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத, முகம் எப்படி இருக்கும் என்றே தெரியாத பதினோராம் தலைமுறை உருப்படிகளுக்காக இப்போது ஒருவன் வெறி பிடித்து பணம் சேமிக்கிறான் என்றால் அவன் அறிவுத் திறனை எப்படி சந்தேகிக்காமல் இருப்பது?
கண்ணில் தென்படுகிற குப்பைகளை எல்லாம் பொறுக்கி வந்து மலைபோல குவித்து வைக்கிற சில இறை பிறவிகளை பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு அது குப்பை அல்ல. செல்வம். அதன் மீது கை வைத்தால் அவர்களும் கண்கள் சிவப்பார்கள். சிலநேரம் கையை கடித்து வைப்பார்கள்.
அவனும் இவனும் ஒன்று.
ஓடி ஓடி சேர்க்கும் பணம் உனக்கென்றால் உத்தமன்.
உன் பிள்ளைக்கென்றால் மத்திமன்.
உபரி என்றால் கடைமடையன்.
· பதினோராம் தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் மனநோயிலிருந்து தப்பித்துக்கொண்டவர்கள் பாக்கியவான்கள். நீங்களும் நானும் பாக்கியவான்கள். சுய தம்பட்டம் குற்றம்தான். ஆனாலும் சொல்வோம். வாய்ப்பில்லாதவர்கள் வாழ்க.
இருப்பவன் ஈயான்.
அதே போல இல்லாதவனும் ஈயான்.
(ஈயான் கெட்ட வார்த்தையல்ல. உதவி செய்யாதவன் என்று பொருள்)
உங்களிடம் இருப்பது ஒரே ஒரு ரொட்டித் துண்டு. பசியோடு இருப்பவன் பிச்சை கேட்கிறான். இப்போது என்ன செய்வது?
உனக்குப் பாதி. எனக்குப் பாதி.
அப்படியென்றால் நீங்கள் வள்ளல்.
மொத்தத்தையும் நீயே சாப்பிடு
அப்படியென்றால் நீங்கள் ஒரு ஞானி.
உங்கள் பிள்ளை பசியோடு அழுகிறபோது ஆலயங்களுக்குச் சென்று வட்டிக்கு கடன் வாங்கி அன்னதானம் செய்தால் உங்கள் பெயர் கூமுட்டை.
ஈதல் நன்று
ஆனாலும் அதற்கும் இலக்கணமிருக்கிறது.
இருப்பதைக் கொடுத்தால் உத்தமன்
கடன் பட்டுக் கொடுத்தால் மத்திமன்.
திருடிக் கொடுத்தால் உங்கள் பெயர் பாவமூட்டை.
ஒரு குழந்தை பசிக்கு அழுவதை கேட்கிறபோதெல்லாம் மார்பு சுரந்தால் அவள் பெயர் தாய். எந்தக் குழந்தை அழுதாலும் அன்பு சுரந்தால் அவள் இறைவி. இல்லாதவன் ஈதால் அவனை தாய் என்பார்கள்.அவனுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது.
இளிச்சவாயன்.
·      இருப்பதைக் கொடுங்கள். பிடுங்கிக் கொடுக்காதீர்கள்.
இங்கே இன்னொரு சிடுக்கும் இருக்கிறது.
பாத்திரமறிந்து பிச்சை இடு.
இதை எப்படி புரிந்து கொள்வது? உதவி கோறுகிறவன் தரம் என்ன? அது தங்கப் பாத்திரமா, அலுமினியக் குண்டானா? எப்படி தெரிந்து கொள்வது?
தின்று கொழுத்தவனுக்கு பந்தியில் சோறு போட்டு பஞ்சப்பராரிகளை எட்டி நின்று பார்க்க வைப்பது அநாகரீகம்.. அங்கே பசி மயக்கம். இங்கே உண்ட மயக்கம். யாருக்கு சோறு? எது நியாயம்?
தங்கப் பாத்திரத்தில் கறிச் சோறும், அலுமினியக் குண்டாவில் பழைய சோறும் போடாதே. தேவைகளறிந்து தருமம் செய். இது ஒரு பண்பாடு.
இல்லாதவனுக்கு கொடுத்தால் நீங்கள் உத்தமர்
இருப்பவனுக்கு கொடுத்தால் நீங்கள் மத்திமர்
உணவுக் கிடங்குகளுக்குப் பிச்சை வழங்கினால் உங்கள் பெயர் கூமுட்டை.
·         ஈதல் நன்று. யாருக்கு ஈதல் என்று புரிந்து ஈதல் அதனினும் நன்று.
தமிழில் சொல்வதென்றால் ஆளப் பாத்து தருமம் பண்ணு. வேண்டிய ஆளா பாத்து தருமம் பண்ணாதே.”
ஈதல் சிறப்பு. புரிகிறது. த்தல் சிறப்பா? அருவெருப்பா?
த்தல் என்றால் செத்துப் போவதல்ல. பிச்சை எடுத்தல்.
இல்லாதவன் கேட்பான். அவனுக்கு கொடு. இருப்பவன் இல்லை என்று பொய்சொல்லிக் கேட்டால் அவன் இறப்பதே நல்லது.
·         இப்போது கவிதை..
அட்சயப் பாத்திரத்தில் பிச்சை போடாதே
தெய்வமே தங்கமே திருப்பால் கடலே என்பான்
கை கட்டி சேவகம் செய்வான்
காலைப் பிடிப்பான்
கண் கலங்க நிற்பான்
போகும் இடமெல்லாம்
நிழல் போல வருவான்
வால் ஆட்டுவன்
பல் காட்டி ஈயென்று இளிப்பான்
வானும் மண்ணும் உள்ளவரை
உமது  பெயர் மங்காது என புகழ் பாடுவன்
மணி ஆட்டுவன் பூசைகள் செய்வான்
காரியம் ஆகும்வரை
கருணைக் கடலே என்பான்.
காரியம் முடிந்தபின்
கூந்தல் மயிரே என்று
உதிர்த்துவிட்டுப் போவான்.
குப்பையில் போட்டாலும்
இச்சகம் பேசி வயிறு வளர்க்கும்
ஈனப் பிறவிகளுக்கு
ஒற்றைப் பைசா
உதவி என்று ஈயாதே.
(ஆஹா.. அற்புதம். அபாரம். – கைகள் தட்டும் ஓசை)
·         இதுதான் கவிதையா? இதை எழுதுவதற்குத்தான் இத்தனை பெரிய முன்னோட்டா? (பற்கள் நரநரக்கிற ஓசை)
இதுவரை படித்து ஒன்றுமே விளங்கவில்லை என்றால் சுறுக்கமாக சொல்கிறேன். - 
“உதவி செய்வது நன்று
அதற்கு முன்பாக
ஆள் யார், உதவிக்குத் தகுதியானவனா என்று 
விசாரித்து அதன் பிறகு உதவுதல் சாலவும் நன்று
·         இதுவும் புரியவில்லை என்றால்,  கிரிட்டினகிரி மாவட்டம், கிருட்டினகிரி குறுக்குச் சந்து, கதவு எண் நூத்திப் பத்தில் வசிக்கும் திரு பரிமேலரிகிரி என்பவரிடம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள். அவர் ஆயிரடம் வருடத்திற்கு முந்தைய தமிழை இப்போதும் மாற்றமில்லாமல் பேசி வருகிறார். வெள்ளத்தணைய மலர் நீட்டம் என்று அவர் பேசியதைக் கேட்டபிறகு இப்படித்தான் எழுத வருகிறது. 
   மீண்டும் கவிதைச் சுறுக்கம் 
  “இச்சகம் பேசி 
 வயிறு வளர்க்கும் ஈனப் பிறவிகளுக்கு 
  ஒற்றைப் பைசா ஈயாதே.“ 
   (கைதட்டல் விசில் சத்தம்)
·         31.10.2019


No comments: