Sunday, October 27, 2019

# நல்ல கவிதைகளை எப்படி அணுக வேண்டும்? #



பலபேர் ஊரவைத்து துவைத்துக் காயப்போட்ட துணிகளை மீண்டும் துவைத்துக் கிழிப்பதில் உடன்பாடில்லைதான். நான்கு வரிக் கவிதைகளை படித்துவிட்டு, சுமாராக புன்னகைத்து, அடுத்த பக்கத்திற்கு தவ்வுகிற போது மீண்டும் மீண்டும் அதே கவிஞர் அதே கவிதைகளை அதே பெயரில் எழுதி இன்புறுத்தியதால் சில வார்த்தைகள் மட்டும் சொல்லத் தோன்றியது..


கவிதைகள் குறித்து பேசுவதற்கு முன்பு நிஜமான கவிதைகள் சிலவற்றையாவது படித்திருக்க வேண்டும். அந்த அறிய வாய்ப்பு எல்லோருக்கும் வாய்க்காது. ஆயிரம் மரங்களை சோதிக்கும் தச்சனே தோதானதொரு மரத்தைக் கண்டடைகிறான். மரமென்றால் அது பாக்கா, தேக்கா? எது உன்னதம்? யார் இங்கே தச்சன்? எது கவிதை?

எனக்கும் கவிதைக்குமான உறவு சித்தப்பா பெரியப்பா போன்றது. நெறுங்கிய உறவுக்காரன். ஆனால் ஒட்டிக்கொள்வதில்லை. அதேசமயம் நேரம் வாய்க்கிற போதெல்லாம் கவிதைகளை நோட்டமிடுவேன். ஆழ்ந்து படிக்கச் சொல்லி நிர்பந்திப்பது சில கவிதைகள் மட்டுமே. மற்றவை கடந்து செல்லும் தரத்தவை.

எதிர்வாதம் பேசுகிறவர்கள், சுதந்திரமாய் சுற்றித் திரிகிற நாய்கள், உறைப்பு அதிகமுள்ள காரக்குழம்பு மற்றும் கவிதைள் போன்றவற்றை அணுகுவதற்கு முன்பு ஒரு அடிப்படை விதியை புரிந்துகொள்ள வேண்டும். எளிய விசயங்களை எதிர்கொள்கிறபோது தேவையே இல்லாமல் தீவிரமாக உணர்சிவசப்படுவது உடம்புக்கு ஆகாது. இலக்கியத்திற்கு மட்டுமில்லாமல் யதார்த்தமான வாழ்வியலுக்கும் இதுவே அடிப்படை. இங்கே, கவிதைகளில் உன்னதம் தேடுகிற மனோபாவம் கொண்டவர்கள் கடும் விமர்சனங்களை தாங்கிக்கொள்வதில்லை. குறிப்பாக படைப்பாளிகள் கடுமையாக கண் சிவக்கிறார்கள்.

எனது பாடலில் குற்றமா? எவன் சொன்னது?

நக்கீரா..ஆ..ஆ..ஆ

சுற்றி வளைத்து சட்டையைக் கிழித்துவிடுவார்கள்.

அதனால் பொதுவெளியில் கவிதைகள் குறித்து பேசவே அச்சமாக இருக்கிறது.

“உண்மையைச் சொன்னால் செத்துடுவ. அதனால சொல்லமாட்டேன்.”

இதுதான் நிஜமான விமர்சனம். ஆனால் அது பிரதியில் வராது. இணையத்தில் சொல்ல மாட்டார்கள். மனதுக்குள் நினைத்துக்கொள்வார்கள்.

கவிதைகளைப் போலவே அதற்கான விமர்சனங்களின் எண்ணிக்கையும் வியப்பளிக்கும் விதமாய் எண்ணிலடங்காதவை.

புதுவகையான எழுத்து –
அறியவகை உயிரினம்.-
துப்புரவாகப் புரியவில்லை.
ஜென் மனோநிலை.
சூப்பராகவும் சுமாராகவும் இருக்கிறது-.
இதுவே அதன் பலமும் பலவீனமும்
இதுபோல மேம்போக்காக போகிற போக்கில் பேருக்கு எதையாவது தூவிவிட்டுச் செல்வார்கள். சிலபோது கவிதைகளைவிட கவிதைக்கு வருகிற விமர்சனங்கள் பயங்கரமானவை.

இவ்வளவு பேசுகிறாயே உனக்கு கவிதை வருமா?

விமர்சனத்திற்கான எதிர்வினை இப்படித்தான் துவங்கும்.

மடைமாற்றம் செய்யாதே. குறிப்பிடும்படியாக ஒரு உருப்படியாவது எழுதிக் கிழித்திருக்கிறாயா?

நானும் கவிதையை முயன்றிருக்கிறேன். என்னைப் போலவே வாசிக்கும் பழக்கமுள்ள எல்லோருமே ஒரு முறையாவது முயன்றிருப்பார்கள். அநேகம் பேர் அதில் தோற்றிருப்பார்கள். சிலர் மட்டும் தப்பிப் பிழைத்து கரைசேர்ந்து வெற்றிக்கொடி நாட்டியுமிருப்பார்கள்.

எளிமையான உள்ளடக்கம், சிக்கனமான வார்த்தைகள், மேதமை, மேட்டிமைத் தனங்களை அதிகம் கோராத பாமர வடிவம் - இவையே கவிதை எழுதத் தூண்டுகிறது என்கிறார் கானா ரவி. பதினெட்டு வருடங்களாக தொடர்ந்து கவிதை எழுதி வருபவர். துன்பியல் கூறாக அதில் ஒன்றுகூட பிரசுரமாகவில்லை? காரணம்.. நிராகரிப்பு.

நாம் நினைப்பது போல கவிதை எளிமையானது இல்லை. அது அப்பாவி வடிவில் இருக்கிற அபாரமான போர்வீரன். பூச்செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்போதே புயல்மழையாக மாறும். எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பிரதேசத்தில் எம்பி உதைத்து பதறவைக்கும். அதிர்ச்சி வைத்தியத்தில் கவிதையும் கழுதையும் ஒன்று என்கிறார் அதே கானா ரவி. நல்ல கவிதைகள் எல்லோரையுமே உதைக்கும். ஆகவே கவிதைகளை எச்சரிக்கையாக அனுகவேண்டும் என்கிறார்.

மோனலிசா போல புன்னகைக்கும் அல்லது பல் இளிக்கும் இலக்கியத் தரமற்ற கவிதைகளை எப்படி எதிர்கொள்வது என்கிற துணைக் கேள்வியும் இதில் அடங்கியிருக்கிறது. சுமாரான கவிதைகளை சாதாரணமாக வாசித்துவிட்டு சர்வ சாதாரணமாக கடந்து செல்கிற வல்லமை வாசகர்களுக்கு உண்டு. ஆகவே, கரையோரத்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிற வாநிலை அறிக்கைகள் வாசிக்க அவசியமில்லை.

உற்பத்தி அதிகமானால் ஆனிப் பசும்பொன்னும் ஆயில் பேரலாக மாறிவிடும் என்கிறார்கள். இது கவிதைகளுக்கும் பொறுந்தும்தானே என்று அதே கானா ரவி கேள்வி எழுப்புகிறார்.

கவிஞர்களின் எண்ணிக்கை குறித்த நகைச்சுவைப் பகடிகள், சிந்துபாத் கதைகளுக்கும் முற்பட்டவை. சிந்திக்கத் தெரிந்தவன் சொந்த முயற்சியில் ஆப்பசைத்து அலறுவது அவனது பிறப்புரிமை. அதை விமர்சிக்கலாகாது. கட்டற்ற கவிதைகளுக்கும் இது பொறுந்தும்.

தேவைகள் அதிகமானால் உற்பத்தியின் அளவும் கூடும் என்பது வாணிப விதி. குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால் காலி பாட்டில்களின் கூட்டுத் தொகையும் கண்டிப்பாக உயரும்.

“சரக்கும் காலி ஆளும் காலி” என்று இதை எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

இங்கே பேசு பொருள் கவிதை என்பதால் முட்டையிடுகிற கோழிகளை உவமானமாகக் கொண்டு சிலவற்றை பேசலாம்.

உலகம் முழுக்க உற்பத்தி செய்யப்படுகின்ற முட்டைகளின் கூட்டுத் தொகையை விட அதிகமான எண்ணிக்கையில் தமிழ் மொழியில் கவிதைகள் எழுதிக் குவிக்கப்படுவது உண்மைதான். கோழிகளின் உற்பத்தி வேகம் குறித்து இங்கே வியக்காமல் இருக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கோழி. நாளொன்றுக்கு ஒரு முட்டை. மறுபக்கம், ஒரு நாளைக்கு ஒரு கவிஞன். நாளொன்றுக்கு பல கவிதைகள்.
இதை எப்படி புரிந்து கொள்ளவது?

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்றது முட்டையா, கவிதையா என்றால் முட்டைக்கே முன்னுரிமை தருவார்கள். இங்கே முட்டைகளுக்கே தேவைகள் அதிகம். நாள் ஒன்றுக்கு சில கோடி முட்டைகளை மனிதர்கள் தின்று தீர்க்கிறார்கள். முட்டை ஒரு சிறந்த உணவு. அதன் ருசிக்குப் பழகியவர்கள் வம்படியாக அதை சைவம் என்பார்கள். முட்டைகளை இடுவது மட்டுமே கோழிகளின் வேலை. முட்டைகளை எப்படி அணுகவேண்டும் என்பது..
கூமுட்டை.. கேள்விய ஒழுங்கா படிச்சிட்டு ஆம்லெட் போடு.

இங்கே பேசுபொருள் கவிதை என்பதால்.. நமக்கு கவிதையும் முக்கியம் ஆம்லெட்டும் முக்கியம். முட்டைகளைப் போலவே கவிதைகளும் எளிமையானவை. கவிதைகளை புரிந்துகொள்ள அறிவார்ந்த ரசனை மட்டும் போதாது. நெரிசல் மிகுந்த சாலைகளை கடந்து செல்கிறபோது எருமை மாடுகளுக்கு இருக்கிற அலட்சிய மனோபாவமும், தடித்தனமும், நிதானமும் இருந்தால் மட்டுமே கவிதைகளை நம்மால் சரியாக அணுக முடியும்.

சிலசமயத்தில் உன்னதமான இலக்கியப் படைப்புகள் வெகுஜன வாசகர்களிடம் வரவேற்பு பெறுவதில்லையே. இதை எப்படி புரிந்து கொள்வது?

கவிதைகள் மீது விமர்சனம் எழுதுவதற்கென்றே சிலர் அவதாரம் செய்திருப்பார்கள். அவர்கள் மருத்துவர்களை போலவே புரியாத மொழியில் எழுதுவார்கள். கட்டுடைத்தல், மீள் உருவாக்கம், மறு வாசிப்பு, காத்திரமான சொல்லாடல். என்று ஆரம்பித்தால் எனக்கே உடம்பு தாங்காது. நான் எளிமையாகவே சொல்கிறேன்.. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. அதே போல சாக்கடைக்கும்.

நூலகம், சரக்கு அங்காடி. இதில் எங்கே கூட்டம் அதிகம்? இதில் எது உன்னதம்?

வரவேற்புக்கும், உன்னத இலக்கியத்திற்கும் இங்கே ஒரு உறவும் இல்லை.

இலக்கிய உலகின் ஆரம்பப் பள்ளியில் படிக்கிற ஒரு இளைஞன், தீவிர படைப்பாளி ஒருவரிடம் அவர் யார் என்று தெரியாத அறியாமையில் கேட்ட சில கேள்விகள் இங்கே முக்கியமாகப் படுகிறது.

கே - உங்களுக்கு கவிதைகள் வாசிக்கிற வழக்கம் உண்டா?
ப -ஆம், நான் சிறு வயதிலிருந்தே...
கே -ஆம் என்றால் தற்கால கவிதைகள் குறித்த உங்களது கருதுகோள் என்ன?
ப -நான் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட...
கே -இணையப் பக்கங்கள் முழுதும் நிறைந்திருக்கும் கவிதைகளை குப்பை என்று விமர்சனம் செய்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப - கண்ணுக்கு தென்படுகிற எல்லாவற்றையுமே நான் அலட்சியமாகத்தான் பார்ப்பேன்.
கே – காரணம்
ப – நான் கவிஞன்.
கே – வளரும் கவிஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
ப – மரியாதையா போயிடு. மைக் ஒயர அத்து விட்றுவேன்.

இது போன்ற இலக்கிய சந்திப்புகளை யூடியூப் தளத்தில் தாராளமாக பார்க்கலாம். மொண்ணையான கேள்விகளை கேட்டுவிட்டு இலக்கியதாரமான பதில்களை எதிர்பார்ப்பது அசட்டுத்தனம். ஆனாலும், சிறந்த கவிதைகளுக்கான ஆரம்பப் புள்ளி இது போன்ற அதீதமான ஆர்வக் கோளாறுகளில் இருந்தே துவங்குகிறது. அந்த ஆரம்ப்ப் புள்ளிகளே உன்னத இலக்கியமாக உருவெடுக்கிறது.

இதைச் சொன்னால் மீண்டும் கண்கள் சிவப்பார்கள். மைக் ஒயர் அறுந்துவிடும். காரணம்.... இலக்கியத்தில் உன்னதங்களைத் தேடுகிற தீவிர மனோபாவம்.
கவிதைகளை எளிமையாக அனுகுவது எப்படி?

இதுவே இங்கே சரியான கேள்வி.

குழந்தைகளைப் பாருங்கள். அவர்களின் காக்கைகள் “ர“ என்ற எழுத்தில் இருந்தே உருவாகிறது. நமக்கு தலைகால் விளங்காவிட்டாலும் அதுதான் காக்கை. அதுதான் கவிதை. ஆகவே கவிதைகளை “ர“-வில் ஆரம்பித்து காக்கையில் முடிக்க வேண்டும்.
எதிர்கொள்கிற எல்லாவற்றையுமே கவிதைக்குள் கடத்திவிடவேண்டும் என்கிற ஆவேசத்தோடு இருக்கிற எல்லோருமே கவிஞர்கள்தான். கண்டதை கண்ட நிமிடமே கவிதையாக எழுதச் சொல்லி தூண்டுகிற ரசனைதான் இங்கே விதை. . அப்படிப்பட்ட கவிஞர்கள் இணையத்தின் மூளை முடுக்கெல்லாம் நிறைந்திருக்கிறார்கள். பரந்த மனப்பான்மையோடு, யார் எழுதியது என்று பார்க்காமல், திறந்த மனதோடு படித்தால் “ர” என்ற எழுத்தில் மறைந்திருக்கும் காக்கைகளை நாம் தரிசிக்கலாம்.

சிலபேர் வாசிக்கும் வசதிக்காக உரைநடைகளை உடைத்துப் போட்டு, சொற்களை ஏணி போல அடுக்கி, இதுதான் கவிதை என்று நம்பச் சொல்வார்கள். ஏனென்றால் அவர்கள் அப்படித்தான் நம்புகிறார்கள்.. ஆகவே அதுவும் கவிதைதான்.

எழுதும் ஆர்வமுள்ள, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட எல்லோருக்கும் அடைக்களம் தருவது. இணையம். முதல்நாள் 'அ' என்று எழுதி பள்ளியில் சேர்வதைப் போல இணையத்தில் எழுதுவது எளிமையானது.. கண்களை மூடிக்கொண்டு மனதில் பட்டதை துணிச்சலாக எழுதலாம். உலகின் எந்த மூலையிலிருந்து எழுதப்பட்டாலும் படிக்க நாங்கள் இருக்கிறொம் என்கிறார் அதே கானா ரவி.

ஒரு நாளைக்கு ஒரு கோழி. நாளொன்றுக்கு ஒரு முட்டை. மறுபக்கம், ஒரு நாளைக்கு ஒரு கவிஞன். நாளொன்றுக்கு ஒரு கவிதை.

கவிஞர் கானா ரவி போலவே நல்ல பல கவிஞர்களை இணையம் உருவாக்கியிருக்கிறது. தேடினால் சில நல்ல கவிதைகளும் தென்படுகிறது. சில கவிதைகள் ஆச்சரியமூட்டவும் செய்கிறது.

நான் ரசித்த சில உன்னதக் கவிதைகளை இங்கே குறிப்பிட விருப்பம் இருந்தாலும் உரிமைசார் பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருக்கும் என்பதால் உன்னதக் கவிதைகளை இணையத்தில் தேடிப் படித்து ரசித்து உய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக...

நல்ல கவிதைகளை நேர்மையாக அனுகவேண்டும். இதுவேல்லாம் கவிதையா? இதை கழுதை கூட நம்பாது என்கிற முன்முடிவோடு அனுகக் கூடாது.

முடிவாக...

இப்படி ஒரு பதிவை எழுதுவதற்கு காரணமாய் இருந்த கவிதை குறித்து சொல்லிவிடுகிறேன்.

சற்றைக்கு முன்பு, அதாவது நடுச்சாமம் எனப்படுகிற நள்ளிரவு நேரத்தில், கும்பகர்ண மனநிலையில் இருந்தபோது ஏதோ ஒரு இலக்கிய பக்கத்தில் சில உன்னதமான கவிதைகளை வாசிக்க நேர்ந்தேன்.
படிக்கப் படிக்க அருவி போல கொட்டுகிறது.
கவிதைகள்... கூடவே கண்ணீரும். 
நிஜமாகவே விழிகள் காலங்கிவிட்டது.
காரமென்றால் அப்படி ஒரு காரம்.
இனி மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டபடி கவிதைகள் வாசிக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
....
27.10.2019



No comments: