Wednesday, October 16, 2019

மிட்நைட் உயிரினங்கள்

மின்சாரம் மனிதர்களோட சில அடிப்படை குணங்களை மொத்தமா மாத்தியிருக்கு. ராத்திரி பனிரெண்டு மணிக்கு குளிச்சிட்டு சுடச் சுட ரவா உப்புமா சாப்பிடறவங்களப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். அவங்களோட உயிரியல் கடிகாரம் சந்தேகமே இல்லாம ஸ்தம்பிச்சி நின்னுபோயிருக்கும். பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாது. அஸ்த்தமனத்திற்கு பிறகு தீவிரமா செயல்படுவாங்க. ராத்திரி ஆனா அவங்களோட உலகம் பரபரப்பாயிடும். வீட்டுல இருக்கிற மொத்த விளக்கையும் போட்டு இரவ பகலாக்கி அப்போதான் பொழுது விடிஞ்ச மாதிரி சுறுசுறுப்பா செயல்பட ஆரம்பிப்பாங்க. சந்தேகமே இல்லாம அவர்கள் மிட்நைட் உயிரினமா மாறிட்டாங்க. அப்படின்னா பகல்ல என்ன பண்ணுவாங்க? பகல்ல செயல்படவேண்டியவங்க இரவு நேரத்த தேர்ந்தெடுக்க காரணமென்ன? இது வரமா? நோயா?
உயிரியல் விதிப்படி எது இயற்கையானதோ அதிலிருந்து மாறுபடுகிற எல்லாமே குறைபாடுகள்தான். நமக்கு அந்தக் குறைபாடுகள் இருக்கான்னு எப்படி தெரிஞ்சிக்கறது?
பொதுவா சில அறிகுறிகள வெச்சி நோயின் தீவிரத்த கண்டுபிடிக்கலாம்னு சொல்வாங்க. உதாரணத்துக்கு பல் சொத்தை ஆயிட்டா, பக்கத்தில யாரும் உட்கார முடியாது. அதிர்ச்சியா இருந்தாலும் நம்மோட பலவீனத்த ஒத்துகிட்டாதான் அதோட சேதாரத்தில இருந்து தப்பிக்க முடியும்.
நாம மிட்நைட் உயிரினமா மாறிட்டோமான்னு எப்படி கண்டுபிடிக்கிறது?
இங்க சில அறிகுறிகள் சொல்றேன். அது எந்த நோயோட தாக்கம்னு கண்டுபிடிக்க முடியுமா பாருங்க..
சாப்பிட்டது ஜீரணம் ஆகாது.
யாரப் பாத்தாலும் கடிச்சி குதறணும் போல வரும்.
கண்ணைச் சுற்றி கருவளையம் உருவாகியிருக்கும்
டாக்டர்கிட்ட போனா பட்டானி சைசுக்கு மாத்திரை தருவாரு
வெதுவெதுன்னு தண்ணி குடிச்சிட்டு ஒண்ணுல இருந்து பத்தாயிரம் வரைக்கும் எண்ண வேண்டியிருக்கும்.
யாராவது சிரிச்சி பேசினா கோவம் வரும்
ஞபாகமறதியோட ஆரம்பக்கட்ட தொந்தரவுகள சந்திப்பிங்க.
கண்ணாடியில பாக்கறப்ப குடிகாரனுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் தெரியாது.
.நைட் வாட்ச்மேன். நாப்பது வருசமா ஒரே விசில, ஒரே மாதிரி ஊதிட்டு வர்றது பழகிப் போயிடும்.
விலை உயர்ந்த கட்டிலும் மெத்தையும் வாங்கிப் போட்டிருப்பிங்க. ஆனா பயன்படுத்த மாட்டிங்க.
இது எல்லாம் இருக்கிறது உண்மைதான்.. ஆனா அது நோய் அல்ல. குறைபாடுன்னு சமாதானம் சொல்லிக்கிற அளவுக்கு தயாரிப்பா இருப்பிங்க. ஆரம்பக் குறைபாடுகள்தான் பின்னாட்கள்ல தீவிர நோயா மாறும்.  மிட்நைட் உயிரிணமாக மாறுகிற அந்த நோய்க்கு பெயர் என்ன?
ஒரு குறுங்கவிதை. கவிதை புரிந்தால் எது நோய் என்றும் புரிந்துவிடும்.
வா என்றால் வாராதே
கண்டபடி திட்டிப்பார்த்தேன்
ஆள்வைத்து மிரட்டிப்பார்த்தேன்
காசு பணம் தருவதாய்ச் சொன்னேன்
காலில் விழுந்து காதறியும் பார்த்தேன்.
கண்மணியே தங்கமே என கொஞ்சிப் பார்த்தேன்
கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்
மருந்து மாயம் செய்து பார்த்தேன்
சுவற்றில் முட்டிக்கொண்டேன்
உருண்டு பிரண்டு காதறியும் பார்த்தேன்
கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் 
வா என்றல் வராத உறக்கத்தை
எவ்விதம் வரவழைப்பேன். 

மிட் நைட் உயரினங்களாக பரிணாமம் அடைந்தவர்களைப் பற்றிய எளிய அறிமுகம் இது. நித்திரை நிம்மதி தரும் என்ற உயிரியல் அடிப்படையை மாற்றி நிம்மதியாய் உறங்குவதை குற்றம் என்று சொன்னதும் உண்டு. உறங்கிக் கெட்டது உலகு என்று விமர்சனம் செய்பவர்களும் உண்டு. சுறுசுறுப்பான மனிதர்கள் உறங்குவதில்லை என்று நம்பியவர்களும் உண்டு.
அப்படி நம்பியதன் விளைவு, எல்லோருமே மெல்ல மெல்ல மிட்நைட் உயிரிணமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். உறங்கா மனிதர்களின் முன்னேற்றம் ஆரம்பத்தில் சந்தோசம் தரலாம். ஆனால் எல்லாவற்றுக்குமே எதிர்விளைவுகளும் உண்டு. தூக்கத்தை தொலைத்து பொருள் தேடுவோர் பின்னாலில் ஒன்றை புரிந்து கொள்வார்கள். உருக்கிய தங்கத்தை கடலாளவு கொடுத்தாலும் உரக்கம் வராது உனக்கு. பலபேர் அதன் ஆரம்ப அவஸ்தைகளை இளம் வயதிலேயே அனுபவிக்கிறார்கள்.
 நின்றபடி தூங்கும் கழுதைக்கு இருக்கிற நிம்மதி மனிதனுக்கு இருப்பதில்லை என்கிற நிஜம் புரிகிறபோது படுத்தாலும் உறக்கம் வராது.
இதன் மூலம் சொல்ல வருவது.
உறக்கம் என்பது சோம்பிக் கிடப்பதல்ல. உயிரை ஆற்றுப்படுத்துவது. இது புரிந்தால் உன்னதமாய் உறங்க வரும்.
முடிவாகச் சொல்வது.
உண்பதைப் போன்றதே உறங்குவதும். போதிய நேரம் உறங்கப் பழகுங்கள்.
நன்றி வணக்க.. கொர்ர்ர்


No comments: