Monday, October 7, 2019

சொல்லிசைப் பிரதிகள் - இதெல்லாம் ஒட்டகமா?


இது நியாயமில்லைதான். வாசிப்பவர்களின் நேரத்தோடும், ரசனையோடும் விளையாடக் கூடாதுதான். மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதிவிட்டு, “இனி இது படிப்பவன் பாடு” என்று வீட்டுக் குப்பையை வீதியில் இறைக்கிற மனோபாவம் தவறான ஒன்றுதான். அந்தத் தவறு தொடர்ந்து உலகமெங்கும் நடந்தபடிதான் இருக்கிறது.. பாவம் வாசக நெஞ்சங்கள்.


பரிதாப உணர்ச்சியை மானசீகமாக ரத்து செய்துவிட்டு இங்கே நானும் ஒன்றை முயற்சித்திருக்கிறேன். அந்த நிமிடம் மனதில் தோன்றியதை, மனசாட்சி இல்லாமல் எழுதிவிட்டேன். சந்தேகமே இல்லாமல் அது கவிதைதான். ஆனால் கவிதை போல இருக்காது.

கவிதை போல இல்லாத ஒன்றை கவிதையாக எழுதுவதற்கு காரணமாக அமைந்தது நான்கு கேள்விகள். அந்த கேள்விகளுக்கு அடித்தளமாய் அமைந்தது ஒரு தெய்வீகக் கீர்த்தனை. இசையும் இறையும் நம்பிக்கை சார்ந்த ரசனைகளின் கலவை. என்பதால் குறிப்பிட்ட அந்த கீர்த்தனையை குறிப்பிடுவது நியாயமில்லை. இங்கே கேள்விகளே முக்கியம்.

.பாரம்பரியமான சாஸ்திரிய சங்கீதங்களை கேட்கிறபோதெல்லாம், 'இந்த சட்டைக்குள் அந்த மனுசன் எப்படி நுழைந்தான்.' என்பது போன்ற சில அடிப்படைக் கேள்விகள் மனதில் எழும். குளிர்சாதனப் பெட்டிக்குள் நன்கு வளர்ந்த ஒரு ஒட்lகம் கச்சிதமாக அமர்ந்திருப்பதைப் பார்த்தால், 'இது எப்படி சாத்தியம்?' என்ற வியப்பு எழாதா? இனி அந்த நான்கு கேள்விகள்...

1 தாளக்கட்டுக்குள் ஒரு கவிதையை அடைப்பது எப்படி?
2 இசைக்குள் கோர்க்கப்பட்ட கவிதைகள் செத்துப்போகக் காரணமென்ன?
3 உடைந்த நாற்காலியில் உட்கார முடியுமா?
4 பிய்த்துப் போட்ட வார்த்தைகள் கவிதை ஆகுமா?

இங்கே சினிமாப் பாடல்களை வம்புக்கு இழுக்கவில்லை. திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையைச் சொல்லி, அதை ராகமாயிழுத்து, மீண்டும் இழுத்து, அதன் பின் சொற்களை உடைத்து. வளைத்துப், பிரித்துக், கோர்த்து என்னவெல்லாமோ செய்து இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மிதக்க விடுகிற அந்த அதிசயத்தை இங்கே வியக்கலாம். உடைக்கப்பட்ட சொல்லுக்காக வருந்தவும் செய்யலாம்.

பலர் இங்கே இசையில் தற்குறி. காது இருப்பதால் ரசிக்கிறார்கள். அந்த ஆயிரத்தில் நானும் ஒருவன். இசைக்குள், அதன் தாளக் கட்டுக்குள் அடக்குவதற்காக ஒரு ஒட்டகத்தை கால் மடக்கி உள்ளே அமர வைத்திருக்கிறார்களே.. அது பாடலா, கவிதையா?

இசை அருமை.
பாடல் தெய்வீகம்
கேட்க சுகமாயிருக்கிறது.

அந்தத் தெய்வீக ராகத்தை எழுத்தாக படித்தால் எப்படி இருக்கும்? துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கீழே உள்ள உருப்படியை வாசித்துவிடுங்கள்..
எத்தனா பித்தனா என்று தன் மீதே சந்தேகம் கொண்ட ஒருவன், அந்த கேள்வியை இசை வடிவில் கேட்கிறான்.

சந்தே கித்தேன்
நானே சந்தே கித்தேன்
எத்தன் எனை நானே
சந்தே கித்தேன்.
நானே எனை ஏன் சந்தேகித்தேன்
பித் தேன்
மனதி லந்த பித்தேன்
என் மீ தந்த பித்தேன்
உயிர் பித்தேன்
முடிவிலாத பித்தேன்
உயிர்ப் பித்தேன்
மீண்டும் உயிர்ப் பித்தேன்
ஏனோ உயிர் பித் தேன்
பித்தோ உயிர்ப் பித்தோ
உயிர் பித்தோவென
சந்தே கித்தேன்
நானே எனை சந்தேகித்தேன்.

என்ன குப்பைடா இது? இதை வாந்தி எடுக்கத்தான் ஒட்டகத்தை எப்படி உள்ளார உட்கார வெச்சாங்கன்னு ஆரம்பிச்சியா? மாடு.. எருமை மாடு.

சிலருக்கு கோபம் உச்சத்தைத் தொட்டிருக்கும். ஆனால், கவிதையில் இருக்கிற அபத்தங்களைத் தாண்டி இதையே இசை வடிவத்தில் கேட்டால் சந்தேகமே இல்லாமல் அது நெஞ்சை வருடும்.

“எழுதிய குப்பைக்கு இசை ஒரு கேடா?” என்று அலட்சியப்படுத்தாமல் இசை ஞானம் உள்ளவர்கள் மேலே உள்ள பாடலை உன்னதமான இசையாக்க முயற்சிக்கலாம்.

இங்கே பாரம்பரிய சங்கீதத்தை வம்புக்கு இழுக்கவில்லை. நாட்டுப்புறப் பாடலாக இருந்தாலும், திரை இசைப் பாடலாக இருந்தாலும் கேட்க இனிமையாக இருக்கும். இசையும், சொல்லும், அது தரும் பொருளும் மனதை அள்ளும். ஆனால் அதையே எழுத்து வடிவத்திற்குக் கடத்தினால் மேல உள்ளதைப் போலத்தான்... தலைவிரி கோலமாக இருக்கும்.

இசை வடிவத்தில் முன்பே கேட்டவர்களுக்கு உடைத்துப் போட்ட வார்த்தையிலிருக்கிற அபத்தங்கள் வித்தியாசமாகத் தெரியாது. கேட்ட இசையோடு அதை பொறுத்திக்கொள்வார்கள். பாடல் வரி அச்சிலிருக்கும்.. இசை மனதில். இருக்கும். எந்த சிக்கலும் இல்லை. ஆனால் முதல்முறை படிப்பவர்கள் அதை எப்படி உள்வாங்கிக் கொள்வார்கள்? உடைத்துப் போட்ட வார்த்தைகள் திரும்பத் திரும்ப வந்து பூச்சி காட்டி, பாயாசத்தை பூயாசம் ஆக்கிவிடும்.

சிறப்பான நாட்டுப்புறப் பாடல்களை புத்தக வடிவத்தில் கொண்டுவர விரும்புகிறவர்கள் அதன் இசை வடிவத்தையும், - சாத்தியமென்றால் - சேர்த்தே தருவது நலம். அச்சுப் புத்தகம், கூடவே இசை வட்டு. இரண்டையும் கேட்டுவிட்டுப் படிக்கலாம். அல்லது படித்து விட்டும் கேட்கலாம். அது சாத்தியமில்லை என்றால் மேலே உள்ள கவிதைக்கு நேர்ந்ததே பிரதிக்கும் நேரும்.

இது ஒட்டகமா? நம்பவே முடியவில்லை.


No comments: