Tuesday, October 15, 2019

கருங்கல் கோட்டை சிங்க பைரவன் - பகடிச் சரிதம்



  • “கருங்கல் கோட்டை சிங்கபைரவன் கதை“ என்கிற எனது சரித்திர நகைச்சுவைப் புதினம் எனப்படுகிற பகடிச் சரிதம்  இப்போது யார் யாரிடம் அபத்திரமான நிலையில் இருக்கிறது, எத்தனை பேர் வாசித்திருப்பார்கள், யாரெல்லாம் எதிர்காலத்தில் வாசிக்கக் காத்திருக்கிறார்கள் என்கிற தரவுகள் இல்லை. 
  • யதேச்சையாக அதைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டு சிலாகித்து பேசியதால் மீண்டும் தூசு தட்டி மீண்டும் வாசித்து சிரித்துக்கொண்டேன். 
  • சரித்திரப் பகடிகள் எப்போதுமே சாகாவரம் பெற்றவை. அதைமின்புத்தகமாக கொண்டுவர உத்தேசம். எதற்கும்அதன் வாசகச் சுவை அறிந்துகொள்ள மாதிரிக்கு மூன்றாம் அதியாயத்தை படித்துவிடுங்கள்.



  • அத்தியாயம் - 3
மறுநாள் அதிகாலையில் கருங்கல் கோட்டையின் உச்சியில் காலை முரசம் ஒலிக்கும்போது அமைச்சர்கள் அத்தனை பேரும் நன்றாக உறங்கி எழுந்து, மறக்காமல் பல் துலக்கி குளித்து, உடுத்தி உண்டு, பிறகு அவைக்கு வந்தார்கள். மன்னன் நள்ளிரவு வந்தவன் உறங்கப் போகாமல் அங்கேயே காத்திருந்தான். இரவெல்லாம் யோசித்துக்கொண்டிருந்திருப்பானோ என்று அமைச்சர்கள் விழித்தார்கள்.
அமைச்சர்கள் இறுக்கையில் அமர்ந்துகொண்டார்கள். தும்பி பைரவி மன்னனுக்கு மயிலிறகு விசிறி வீசிக்கொண்டு நின்றாள். தூண் இடித்து விழுந்த சேவகன் கூழ்மண்டி மன்னன் ஏவலுக்காக காத்து தூண் ஓரத்தில் நின்றான். சிங்கபைரவன் முகவாய்க்கு கை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் வந்தபிறகும் யோசித்தபடியே இருந்தான். அமைச்சர்கள் இப்படி சிறிது நேரம், அப்படி சிறிது நேரம் என்று மாறி மாறி உட்கார்ந்தார்கள். உட்காருமிடம் உஷ்ணமாகி வலிக்க ஆரம்பித்த பிறகும் மன்னன் யோசிப்பதை நிறுத்தாமல் போகவே, சாமரம் வீசும் தும்பி பைரவிக்கு சைகை காட்டினார் குசலகும்மர். தும்பி பைரவி மன்னன் காதருகே குனிந்து மெல்ல செருமினாள்.
'நான் ஆழந்த சிந்தனையில் இருக்கும்போது எதற்காக தவளை போல் கத்துகிறாய் பைரவி?" மிருதுவாக கேட்டான் பைரவன்.
'அமைச்சர்கள் வெகுநேரமாய் காத்திருக்கிறார்கள்"
'காத்திருந்தால் என்ன? அவர்கள் உறங்கட்டும், நீராடட்டும், உண்ணட்டும் வரட்டும் என்று மன்னன் நான் காத்திருக்கிறேன். மன்னன் சற்று சிந்தனை செய்யட்டும் என்று அமைச்சர்கள் காத்திருக்க மாட்டார்களா?"
இளைய அமைச்சர் சிப்புலு செவத்தான் உயரமான ஆசனத்தில் ஒற்றைக் காலை மடித்து வைத்துக்கொண்டு சவுகரியக் குறைச்சலாக உட்கார்ந்து, காதுக் கடுக்கண் எண்ணைப் பிசுக்கை துடைத்தபடி பேசினார், 'மன்னன் சிறிது சிந்திக்கட்டுமென்று அமைச்சர்கள் காத்திருப்பது அவசியம்தான், மன்னா. ஆனால் நீங்கள் பெரிதாக யோசிப்பீர்கள் போலிருக்கிறதே. அதிகாலையில் ஆரம்பித்து இப்பொழுது உச்சிப்பொழுது ஆகிவிட்டது. இடுப்பு வலி தாங்கமுடியவில்லை, மன்னா."
'உச்சிப்பொழுது ஆகிவிட்டதா? கொஞ்சம் அதிகமாகத்தான் யோசித்துவிட்டேன் போலிருக்கிறது. சரி, நாட்டியம் ஆரம்பமாகட்டும்..." உத்தரவிட்டான் சிங்கபைரவன்.
'நாட்டியப் பெண்கள் வரவில்லை. வேண்டுமென்றால் நான் ஆடட்டுமா?" தும்பி பைரவி குசுகுசுப்பாய் கேட்டாள்.
'உன் நாட்டியம் பார்ப்பதற்கு பேசாமல் நான் கண்ணில் மண்ணைப் போட்டுக்கொள்ளலாம்" அதே குசுகுசுப்போடு சொன்னான் மன்னன். பிறகு அமைச்சர்களை நோக்கி பேசினான், 'அறிவும் திறனும் கொண்ட அமைச்சர்களும், வீரம் மிக்க படைத் தளபதிகளும், சான்றோர்களும், ஆன்றோர்களும் நிரம்பிய சபை இது. உங்களிடத்தில் மூன்று முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கேட்கவே நான் இந்த சபையை கூட்டினேன்."
'என்ன பிரச்சனை மன்னா சொல்லுங்கள் தீர்த்துவிடுகிறோம், தீர்த்து. நாங்கள் பார்க்காத பிரச்சனைகளா, தீர்க்காத வழக்குகளா." அமைச்சர் கருஞ்சாந்து ஆர்வத்தோடும் துடிப்போடும் பேசினார்.
'பொறுமை காக்க வேண்டும் அமைச்சர்களே. முதல் பிரச்சனை என்னவென்றால், சாமரம் வீசவேண்டிய ஒரு பணிப்பெண் மன்னனின் மார்பின் மீது முகம் வைத்து உறங்குவதும், அப்படி உறங்கும்போது தன் கூந்தலை மன்னன் மூக்கில் விட்டு உறக்கம் கலைப்பதும் குற்றமா இல்லையா? குற்றமென்றால் அதற்கு என்ன தண்டனை? அமைச்சர்கள் தீர்ப்பு சொன்னால், கடமை தவறாத மன்னன் இப்பொழுதே நிறைவேற்றுவேன்."
அமைச்சர்கள் அத்தனை பேரும் மயிலிறகு ஆட்டிக்கொண்டிருந்த தும்பி பைரவியையே உற்றுப் பார்த்தார்கள். பைரவி தன் முகத்தை வீம்பாக தூக்கி வைத்துக்கொண்டு விறைப்பாக விசிறி ஆட்hனாள். ரோமம் முளைக்காத குருவிக் குஞ்சை பார்ப்பது போல அமைச்சர்கள் தன்னையே பார்ப்பதைக் கண்ட தும்பி பைரவி 'என்ன அமைச்சர்களே... கண் இமைக்காமல் பேந்தப் பெதும்ப விழிக்கிறீர்கள். மாமன்னன் கேட்கிறாரில்லையா. பதில் சொல்லுங்கள். ஒரு சிறு பெண் இரவில் சற்று கண் உறங்கியது குற்றமென்று ஒப்புக்கொண்டு தண்டனை என்னவென்று சொல்லுங்கள். என்னை நாடு கடத்தட்டும், அல்லது கழுதை வண்டியை ஒற்றையாய் இழுக்கச் சொல்லட்டும். அல்லது என் உச்சந்தலையில் முனை மழுங்கிய கத்தி வைத்து மொட்டை அடிக்கட்டும். நான் அதற்கு தயாராக இருக்கிறேன்."
எட்டு திசையும் விசிறி ஆட்டியபடி கோபத்துடன் பேசிய தும்பி பைரவியை பரிதாபமாகப் பார்த்தார்கள் அமைச்சர்கள். மூத்த அமைச்சர் குசலகும்மர் தொண்டை செருமிக்கொண்டு பேசினார், 'அதற்கில்லை பைரவி, நூறு இருந்தாலும் நீ செய்தது குற்றம்தானே. மாமன்னன் மூக்கில் கூந்தல் படும்படி உறங்கிய எந்தப் பணிப்பெண் குறித்தும் நான் என் சரித்திரத்தில் கேள்விப்பட்டதே இல்லை. குற்றமென்று நாங்கள் சொன்னால் நீ மகாராணியிடம் புகார் சொல்வாய். நீயே குற்றத்தை ஒப்புக்கொள்ளேன்."
'மாமன்னன் பெருபைரவன் அரியணை ஏறி ஆட்சி செய்த இந்த அரசவையில் என் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். இரவெல்லாம் நித்திரை கெட்டு சாமரம் வீசிய சிறுபெண் சற்றே கண் அயர்ந்தது குற்றமென்றால் இப்பொழுதே இந்த கருங்கல் கோட்டை இடிந்து தரைமட்டம் ஆகட்டும்!" பைரவி மயிலிறகு விசிறியை மன்னன் மடியில் வீசிவிட்டு கருங்கல் கோட்டைக்கு சாபம் விட்டாள்.
மடியில் விழுந்த விசிறியை எடுத்துக்கொண்டு அதிர்ச்சியோடு நின்றான் சிங்கபைரவன். 'என்ன? தப்பு செய்தது நீ, இடிந்து விழவேண்டியது என் கருங்கல் கோட்டையா...? கேட்டீர்களா அமைச்சர்களே இந்த விசிறிப் பெண்ணின் துடுக்குப் பேச்சை. இவளுக்கு வாயும், கையும், தலையின் கூந்தலும் மிக நீளமென்று நான் சொன்னால் அறிவு கொண்ட அமைச்சர்கள் நீங்கள் நம்புவதில்லை. இவள் கொட்டத்தை அடக்க மகாராணியிடம் முறையிடுங்கள் என்றாலும் நீங்கள் கேட்பதில்லை. இப்பொழுது பாருங்கள், இது அரசவை என்றும் அமைச்சர்களாகிய நீங்களெல்லாம் நாளைக்கே இறைவனடி சேர்கின்ற வயதிலிருப்பவர்கள் என்றும் பாராமல் எடுத்தெரிந்து பேசுகிறாள். அதுவும் என் பாட்டன் முப்பாட்டன் கட்டிய கருங்கல் கோட்டை இடிந்து விழவேண்டுமாம். இந்த மூதேவியாள் சாபமிடுகிறாள். என்ன அநியாயம்"
மூதேவியாள் என்ற வார்த்தை கேட்டதும் அழுகை வந்துவிட்டது பைரவிக்கு. 'ஆமாம் நான் மூதேவியாள் தான். நீங்கள் சுகமாய் உறங்குவதற்காக இரவெல்லாம் கண் விழித்து விசிறி விடுகிறேனே, நான் மூதேவியாள்தான். நித்திரை கெட்ட சிறுபெண்ணுக்கு கொஞ்சம் கண் அயற்சி வராதா? அதனால் என் தலை முகத்தில் பட்டது. அதனால் கூந்தல் மூக்கில் சென்றது. அதற்காக எனக்கு மூதேவியாள் பட்டமா?" கண்ணீரோடு பைரவன் மூக்கருகே விரல் நீட்டி நீதி கேட்டாள் பைரவி.
கண்ணீரைக் கண்டதும் அடங்க வேண்டிய சிங்கபைரவன் கோபம் இன்னும் அதிகமானது, 'இரவெல்லாம் விசிறிவிடச் சொன்னது யார்? நானா? மகாராணிக்கு போய் வீசவேண்டியது தானே நீ. சாமரமாம் சாமரம். பலநூறு வருடங்களுக்கு முன் செய்யப்பட்ட இந்த மயிலிறகில் இருந்து குதிரை லயாத்து குப்பையின் வாசம் வீசுகிறது. அதை மூக்கருகே வந்தால் எனக்கு தும்மலும் விக்கலும் வருகிறது. வேண்டாம் என்றாலும் வீம்பாய் விசிறுகிறாய். இந்த கேடுகெட்ட விசிறி இருப்பதால்தானே விசிறுகிறாய். இதை என்ன செய்கிறேன் பார்" சிங்கபைரவன் கையில் இருந்த மயிலிறகு விசிறியை துண்டும் துணுக்குமாய் உடைத்து எரிந்தான்.
'இனி எனக்கு சாமரமும் வேண்டாம், பைரவி என்ற பைசாசமும் வேண்டாம். இனி எனக்கு உக்கிரமாகி, உடம்பில் வியர்வை வடிந்தால், நானே என் உடை எடுத்து விசிறிக்கொள்கிறேன். அல்லது வாய் கொண்டு ஊதிக்கொள்கிறேன். ஏன் சும்மாயிருக்கிறீர்கள் அமைச்சர்களே, இவளுக்கு என்ன தண்டனை சொல்லுங்கள்." சிங்கபைரவன் அமைச்சர்கள் மீது பாய்ந்தான்.
அமைச்சர்கள், என்ன சொல்வது என்று விளங்காத விளக்கெண்ணைகளாகவும், அச்சமுற்ற ஆண்டிகளாகவும் கிலியோடு அமர்ந்திருந்தார்கள். இளைய அமைச்சர், சிப்புலு செவத்தான் அலுப்பான குரலில் சொன்னார், 'மன்னா இது மகாராணியார் சம்மந்தப்பட்ட பிரச்சனை. பைரவியின் மீது நாங்கள் ஒரு வார்த்தை குற்றம் சொல்ல முடியாது. சொன்னால் மகாராணி பாடுகிற துதிப்பாட்டிற்கு எங்கள் குடுமியில் இருக்கிற ஈறு பேன் அத்தனையும் இறந்துபோய்விடும். வயதான காலத்தில் எங்களை வம்பில் மாட்டிவிடாதீர்கள். மன்னனின் மாண்பு மன்னிப்பதில் இருக்கிறது. அல்லது நீங்களே மகாராணியிடம் இது குறித்து பேசுங்கள். அதுதான் அவைக்கும், அமைச்சர்களுக்கும், அனைவருக்கும் நல்லது"
'மன்னர் என்ன என்னை மன்னிப்பது! அவர் என்ன மகாராணியிடம் பேசுவது! இதுபற்றி நானே மகாராணியிடம் முறையிட்டு எனக்கு நீதி கேட்கிறேன்!" கண்ணீரோடும் கோபத்தோடும் சொன்ன பைரவி அரண்மனை நோக்கி ஓடினாள்.
அமைச்சர்கள் அத்தனைபேரும் பெரும் அதிர்ச்சியோடு அவளை பார்க்க, சமயோசிதம் அதிகமுள்ள குசலகும்மர், 'தாயே பைரவி, அமைச்சர்கள் நாங்கள் குற்றமற்றவர்கள், ஒருவரும் வாயே திறக்கவில்லை என்பதையும் மகாராணியிடம் மறக்காமல் சொல்" என்று உரக்கச் சொன்னார்.
சிங்கபைரவன் தலையில் கைவைத்துக்கொண்டு சிறிதுநேரம் உட்கார்ந்துவிட்டு, அமைச்சர்களை கோபம் கொப்பளிக்கும் குருதிக் கண்களோடு பார்த்தான். 'வண்ண ஓணானைப் போல காலத்திற்கு தக்க நிறம் மாற்றிக்கொள்கிறீர்கள் அமைச்சர்களே. குற்றம் செய்தவள் தப்பிப் போகிறாள். வீர மாமன்னன் நான் தலை கவிழ்ந் இருக்கிறான். இதுதான் அமைச்சர்கள் குற்றப்பெண்ணுக்கு அளிக்கும் தண்டனை லட்சணமா?"
'மன்னா, தும்பி பைரவி மகாராணி சாமுண்டியின் செல்லப் பிள்ளை. அதனால் எங்கள் அறிவும், நீதியும் மழுங்கிப் போயிற்று. இரண்டாவது வழக்கை சொல்லுங்கள். அஞ்சாமல் நீதி சொல்கிறோம்." அமைச்சர் அரைச்செவிடு அப்புநாதர் ஒப்புரவாக எழுந்து பேசி, ஒழுங்காக உட்கார்ந்து கொண்டார்.
'இரண்டாவது வழக்கு என்னவென்றால், ஒரு மன்னன் உத்தரவிடும்போது குற்றேவல் செய்யவேண்டிய சேவகன் ஒருவன் தரையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு மன்னனோடு பேசினால் அது குற்றமா இல்லையா? குற்றமென்றால் அதற்கு என்ன தண்டனை..."
இம்மிக் கணமும் தாமதிக்காமல் அமைச்சர்கள் அத்தனைபேரும் கலந்தடித்து சொன்னார்கள். 'அதிலென்ன சந்தேகம் மன்னா, அது நிச்சயமாக குற்றமேதான்."
'அப்படியென்றால் அதற்கு என்ன தண்டனை?"
'அவ்வளவு திமிர்பிடித்தவன் காலை உடனே வெட்டிவிடுங்கள்."
'ஆ... இது நல்ல பேச்சு. இது நல்ல தீர்ப்பு. இதுதான் அமைச்சர்களுக்கு அழகு. குற்றம் செய்த சேவகன் சட்டென்று சபை நடுவே வந்து நிற்கட்டும். யாரங்கே உடனே குற்றவாளியின் கால் துண்டிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்."
தண்டனை பெற்ற சேவகன் கூழ்மண்டி நடுங்கியபடியும், நொண்டியபடியும் சபை நடுவே வந்து பரிதாபமாக நின்றான். சபையில் நின்ற அந்த சேவகனைப் பார்த்ததும் அத்தனை அமைச்சர்களும் 'இவரா மன்னா குற்றம் செய்தவர்?" என்று பெரிதாய் அலறினார்கள். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, கருங்கல் கோட்டை உச்சியில் தங்கியிருந்த மைனாக்களும், புறாக்களும் பயத்தில் சடசடத்து பறந்தோடின.


No comments: