Monday, May 27, 2019

பிறகு நான் சிறகானேன்

நான் ஒரு வழிப்போக்கன்.
பூமிக்கு
அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு முன்பே வந்தவர்கள்
எனக்கு ஒரு பெயர் இட்டார்கள்.
செய்ய வேண்டிய
கடமைகள் என்று
சிலவற்றை போதித்தார்கள்.
அதில் குற்றமும் இருந்தது,
அன்பும் இருந்தது.

இம்மைக்கும் மறுமைக்கும்
நானே பொறுப்பு என்றார்கள்.
இரண்டு வயதில் கல்வி.
விளையாட மறுத்தார்கள்.
பத்து வயதில் லட்சியம்.
பெண்களை ஆண்களை விலக்கி வைத்தார்கள்.
கடிவாளம் பூட்டினார்கள்.
நீ முழுமையான மனிதன்
இலக்கை நோக்கி ஓடு என்றார்கள்.
பூ இல்லா நந்தவனம்.
வானம் இல்லை,
நட்சத்திரம் இல்லை.
தங்கவாள் கொடுத்தார்கள்.
இவன்தான் எதிரி என்றார்கள்.
போரிட்டேன்.
கண்ணில் கண்டதெல்லாம் வெட்டி வீசினேன்.
மா வீரன் என்று
பட்டயம் கொடுத்தார்கள்.
கனவை திருடிவிட்டார்கள்.
எனது பூமி எங்கே?
தண்ணீர் எங்கே?
பறவைகளின் பாடல் எங்கே?
கடவுளுக்கு நன்றி சொல்,
அவை உனது காணிக்கை
என்றார்கள்.
கடமை முடிந்தது
திரும்பி வா என்றார்கள்.
நான் ஒரு யாத்ரீகன்.
முதுமையில் இருக்கிறேன்.
முதுமை என்பது
முடிவு என்றார்கள்.
நான் இன்றுதான் பிறக்கிறேன்.
குழந்தைகளை அமரவைத்து
ஆயிரம் கதை சொல்கிறேன்.
நானே உருவாக்கிய
அந்தக் கதையில்,
மனிதன்
மனிதனாகவே வாழ்கிறான்.
வீண் ஆசைகளும் இல்லை.
அவதிகளும் இல்லை.




No comments: