Friday, July 5, 2019

முதல் புத்தகம் - எனது ஞாபகங்களை முறுக்குப் பிழிகிறேன்.


                2004 நவம்பரில் எனது முதல் புத்தகம் வெளியாகிறது. புத்தகங்களை கூரியரில் அனுப்பிவிட்டார்கள். புராணக் கதையாடல்களில் ஒரு காட்சி வரும்...  மோகினி அமிர்தம் தருகிறாள். அசுரன் வாங்கிக்கொள்கிறான். அவன் கரங்கள் நடுங்குகின்றனவா? கூரியர்பாய் நடுக்கத்தை கவனித்துவிட்டார். “தலைசிறந்த நாட்டியக்காரி எப்போதும் ஆடுவாள். புத்தகங்கள் ஆடுமா?“ அவையின் சந்தேகங்கள் இவை. அவை ஆட்டுவித்து ஆடவில்லை. உண்மையில் புத்தகங்கள் துடிக்கின்றன. அவற்றுக்கு உயிர் இருக்கிறது.

    
அடுத்தது, History TV, 'baggage battles' William Leroy வருகிறார். மற்றுமொரு மிகை யதார்த்தக் காட்சி. ஏலத்தில் எடுத்த அட்டைப் பெட்டியை William Leroy திறந்து பார்க்கும் அதே லாவகத்தோடுஇதயத்தை எகிற வைக்கும் எதிர்பார்ப்போடு பெட்டியை திறந்து பார்க்கிறேன். உள்ளே.. ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு அச்சிட்டு அடுக்கப்பட்டு அழகாய் இருக்கிறது. எனது முதல் புத்தகம்! நான் தன்யன் ஆனேன்


    புத்தகத்தின் அட்டைப் படமும், தலைப்பும் விவரிக்க முடியாத உணர்வைத் தருகிறது. 'இன்றுமுதல் நீ எழுத்தாளன் என்று அழைக்கப்படுவாய்' என்ற குரல் எல்லாம் கேட்கவில்லை. 'மெய்யெல்லாம் சிலிர்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்து அந்தரத்தில் மிதந்தேனே... என்ன தவம் செய்தேனோ யான்' என்றெல்லாம் அதீதமாகச் சொல்லி இலக்கியப் பிரவேசத்தை மிகைப்படுத்த விரும்பவில்லை. பிரபல பத்திரிக்கையில் மூன்று வரிக் கவிதையும், அதன் கீழடிப் பெயரும் முதன் முதலில் பிரசுரம் ஆகிறபோது, எழுத்தை, அச்சுவடிவத்தில் பார்க்கிறபோது உண்டாகிற மன மகிழ்ச்சியை அனுபவித்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.
 

   நான், முழுதாக 240 பக்கங்கள் கொண்ட கதைத் தொகுப்பை இருகையாலும் அள்ளி வைத்திருக்கிறேன். பாட நோட்டில் எழுதி வைத்த பழுப்பு நிற எழுத்தெல்லாம் அச்செழுத்தாய் உருக்கொண்டு கண்களை விரிக்கிறது.  முதல் பாய்ச்சல் தொடங்கிவிட்டது. அதுவரை 'வாசிக்கும் அரக்கனாய்' இருந்தவன், 'எழுதும் பிசாசு' ஆகிறேன். அதன் பிறகு உண்டாக்கிய அதிர்வுகளை நினைத்துப் பார்க்கிறேன்.

  புள்ளி வைத்த இடங்களுக்கெல்லாம் புத்தகம் சேர்கிறது. அலங்காரத்திற்கு அலமாரியில் வைக்காமல் அதை வாசிக்கிறார்கள். எழுத்தாளர்கள் திரு.பிரபஞ்சன், திரு.எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டிப் பேசுகிறார்கள். எழுத்தாளர்கள், திரு.பாஸ்கர் சக்தி, திரு.பாவண்ணன் நூலை அறிமுகம் செய்து பாராட்டி எழுதுகிறார்கள். இயக்குநர், திரு.கரு.பழனியப்பன் தொலைப்பேசியில் அழைத்து 'எழுத்தில் புதுமையிருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்...' என்கிறார். விகடனில் தொடர் சிறுகதை எழுதக் கேட்கிறார்கள். கல்கி, சண்டே இந்தியன், குங்குமம், அவள் விகடன், மல்லிகைமகள், தீபாவளி மலர்களில் கதைகள் கேட்டு வாங்கி பிரசுரிக்கிறார்கள். வெகுஜன இதழ்கள், சிற்றிதழ்கள், இலக்கியப் பத்திரிக்கைகளில் கதைகள் பிரசுரம் ஆகிறது. எழுத்தில் மட்டுமே பார்த்த இலக்கிய ஆளுமைகளை நேரில் சந்திக்கிறேன். சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் அறிமுகம் கிடைக்கிறது. சின்னத்திரை பிரவேசம் நடக்கிறது.

 முகமறியாத வாசகர்கள் எங்கெல்லாமோ படிக்கிறார்கள். தொலைபேசியில் பாராட்டுகிறார்கள். யாருக்குமே என்னை யாரென்று தெரியாது. எழில்வரதனை தெரிந்திருக்கிறது. அன்றைக்கு எழுத ஆரம்பித்தவன் இந்தக் கணம் வரை தொடர்ந்து, தொய்வில்லாமல் எழுதியபடி இருக்கிறேன். சிரமப் பரிகாரமாக விருதுகளும் வெள்ளிக்காசும் பரிசாகப் பெறுகிறேன். இதற்கெல்லாம் ஆரம்பப் புள்ளி எனது முதல் புத்தகம். அதை அச்சிட்டு தொடங்கி வைத்தது, 'சந்தியா பதிப்பகம்'

  
ஒரு பதிப்பகத்தால் படைப்பாளியின் இலக்கிய வாழ்வில் என்னவெல்லாமோ செய்ய முடியும்.. தனிமனித வெற்றி என்பதெல்லாம் சாகச வார்த்தைகள். எல்லா வெற்றிக்குப் பின்னாலும், பின்நின்று முன் நகர்த்திய சிலரின் கரங்கள் இருக்கும். எழுத்தின் மேதமை என்பது, முன் எழுதியவர்கள் தந்துச் சென்றது. படைப்பாளியின் உயரமென்பது ஏந்திப் பிடிப்பவர்களின் தோள் வலிமை சார்ந்தது. அவனே எழுதி, அவனே அச்சிட்டு, அவனே வாசித்து, “உன்னத இலக்கியம் கண்டேன்என்று அவனே துதி பாடிக்கொண்டு எந்த படைப்பையும் தூக்கி நிறுத்த முடியாது. ஆகச் சிறந்த எல்லா படைப்பாளிகளுக்குப் பின்னாலும் பலபேரின் அன்பும் ஆதரவும் இருக்கும்.

   முதல் தொகுப்பு வராவிட்டால் என் எழுத்துக்கள் என்னவாகியிருக்கும்? எழுதிய அத்தனையும் அட்டைப் பெட்டியில் போட்டு, பரணில் ஏற்றி, பூச்சி அரித்து உதிர்ந்து போயிருக்கும். ஒரே ஒரு புத்தகமாவது அச்சில் வந்துவிடாதா என்று ஏங்குகிற பல படைப்பாளிகளை நான் அறிவேன். இணையத்திலும் சிறு பத்திரிகையிலும் நன்றாக எழுதுகிறவர்கள், அச்சுப் பிரதியில் அதை அழகு பார்க்க முடியாதா என்று ஏங்குகிறவர்கள் இருக்கிறார்கள். எழுதும் நுட்பம் வாய்த்தும், வாய்ப்பில்லாமல் பட்டுப் போனவர்கள் எத்தனை பேரோ? என்னளவில் எழுதிய எல்லாம் அச்சில் காண்கிறேன். இதுவரை வந்த ஒன்பது தொகுப்புகளில், ஆறு சந்தியா பதிப்பகத்தாரின் வெளியீடு. அந்த விதத்தில், சந்தியா பதிப்பகம் எனக்குக் கிடைத்த பேறு என்பேன்.

     இது மிகையான வார்தை இல்லை. நீங்கள்  இலக்கியத்தில் கரை கண்டிருக்கலாம். உரசினால் தீ பிடிக்கும் எழுத்து வசப்பட்டிருக்கலாம். உன்னதமான படைப்புக்களை எழுதி குவித்திருக்கலாம். ஆனால், எழுதியவை அச்சில் ஏறி புத்தகமாய் மாறாவிட்டால் எழுத்தாளன் என்கிற அடையாளம் கிடைக்காது. இங்கு இதுதான் யதார்த்தம். இங்கேதான் பதிப்பகத்தின் தேவையை உணர முடியும்.

     AMAZON KDP - யில் அரை மணி நேரத்தில் புத்தகத்தை பதிப்பித்து எழுத்தாளர் ஆக முடியுமே என்றால் ஆகலாம்தான். உள்ளுரிலேயே அடையாளம் தெரியாத சித்தப்பா மகனை, மொட்டை போட்டு திருப்பதிக்கு அனுப்பிவிட்டு தேடுவதைவிட அது சிரமமான விசயம். தனிப்பட்ட வாசக வட்டமில்லாவிட்டால் படைப்பு உப்புக்கடலில் கரைந்து போகும்.

 பதிப்பகத்தின் பணி, புத்தகத்தை அச்சடித்து அடுக்குவதோடு நின்றுவிடுவதில்லை. மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று முன் வரிசையில் அடுக்கி, 'புதிதாக எழுத வந்திருக்கிறார், படித்துப் பாருங்கள்' என்று பரிந்துரை செய்து வாசகனிடம் கொண்டு சேர்த்து ஒரு எழுத்தாளனை வளர்த்தெடுக்கும்வரை பதிப்பகத்தின் பங்களிப்பு இருக்கிறது. படைப்பாளியும் பதிப்பகமும் ஓடமும் வண்டியும் போல. சேர்ந்தே பயணம் செய்ய வேண்டியவர்கள். தரை மீது என்றால் வண்டியில் ஓடம். தண்ணீரில் என்றால் ஓடத்தில் வண்டி

  இலக்கிய உலகில், ஆதரவும் பாராட்டும் முழங்கால்வரை இருக்கும்வரைதான். தோல் உயரம் வளர்ந்துவிட்டால் சுட்டிப் பேசுவதில் மனத்தடை வந்துவிடும். 'இது போல் எழுத்தை பார்தத்தில்லை' என்பது 'இன்னும் படிக்கவில்லை.' என்பதாக மாறும். பாராமுகத்தை எதிர்கொள்ள நேரிடும். எழுத்து விமர்சனமற்றுப் போகும். புனைவெழுதும் படைப்பாளி விரக்தியில் துறவறம் பூண்டு, இலக்கிய உலகில் எழுதுபவன் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து போகும். இங்கே இதுதான் நிலை. 'ஒரு நற்சொல் சொல்லுங்கள்' என்று யாரிடமும் கேட்டதில்லை. எனது எழுத்தை எனது எழுத்தே சுமந்து சென்று வாசகனிடம் சேர்க்கிறது.

     வணிகரீதியான வெற்றி என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து என்னை தூக்கிப் பிடிக்கிற சகோதரர், திரு.சந்தியா நடராசன் அவர்களின் அன்பை நினைத்துப் பார்க்கிறேன். புத்தக வெளியீட்டின் போது முதல் முறை சந்தித்து அறிமுகமானதோடு சரி. பிறகெல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால்தான். ஆனாலும் இன்றுவரை. எனது முதல் தொகுப்பைப் பற்றி எனது கதைகளைப் பற்றி சிலகாகித்து பேசுகிறார். நான் புனைவுலகில் கொம்பன் இல்லை. உன்னத உலக இலக்கியம் எழுதிக் குவித்த ஆளுமையும் இல்லை. புத்தக சாம்ராஜ்யத்தின் மாஸ் ஹீரோ vikram seth, போல  'harry potter' j.k.rowling அளவுக்கு புத்தக விற்பனை கோடிகளில் புழங்கவுமில்லை. அதையும் தாண்டி வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் என்னைப் பற்றி பேசுகிறார் என்பது எனக்கான கவுரவம். எழுத்துகிறவனுக்கான எரிபொருள்... பாராட்டுக்களே. என்னை உயர்த்திய கரங்களில் ஒரு கரம் அவர் கரம்.  அதை இங்கே சொல்லத் தோன்றியது.

            இது, பரஸ்பரம் ஒருவரை ஒருவர், ஆதாயத்தின் பொருட்டு பராட்டிக் கொள்வதல்ல. திறந்த மனதோடு நினைத்துப் பார்ப்பது. இது, பதிப்பகத்தை மிகையாகப் பாராட்டி அடுத்த புத்தகத்திற்கு அட்சாரம் போடுகிற வேலையுமல்ல.. “ஐயகோ.. என் எழுதுகோலை பிடுங்கிக்கொண்டால் எனது வாழ்வு என்னவாகும்?” என்று தவிப்பெல்லாம் இல்லை. தகரத்தை சுமந்து, ஒட்டவைத்து இரும்பு ஊர்தியின் உதிரிகளை எப்போதும் போல செய்வேன். என் ஒரு லிட்டர் வியர்வைக்கு அரைகிராம் தங்கக் காசு  கொடுக்கிறார்கள். அதோடு துதி பாடினாலதான் புத்தகம் போடுவேன் என்று அவர்களும் சொன்னதில்லை.    இவையெல்லாம் நான் உளமார சொல்வது. நான் நாளையும் எழுதுவேன். அதுவும் அச்சில் வரும்.

      ஒவ்வொரு எழுத்தாளனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு சிறந்த பதிப்பகம் நிச்சயம் இருக்கும். எனக்கு 'சந்தியா பதிப்பகம்.' நான் சொன்னதில்  கொஞ்சமே  கொஞ்சம், மிகைப் படுத்தல் இருக்கலாம். ஆனால் அப்பட்டமான நிஜம். முதல் புத்தகம் மறுபதிப்பு காண்கிற நேரத்தில் இதை நினைத்துப் பார்ப்பதில் ஆனந்தம். சொல்வதில் ஒரு நிம்மதி.

  எழுதுவதில் ஆர்வம் கொண்ட புதியவர்கள், தங்களின் எழுத்தும் ஒருநாள் காகிதங்களில் இருந்து அச்சுப் புத்தகமாய் மாறும் என்ற நம்பிக்கை பெற்று எழுத வருவார்கள் என்கிற எண்ணத்தில் சொல்ல வந்தேன். புதியவர்களை அடையாளம் கண்டு வாய்ப்புகள் தந்தால் பலபேர் அறிமுகமாவார்கள். தமிழ் வளமையாகும் என்கிற கோரிக்கையும் இதில் அடக்கம்.

  “முதல் தொகுப்பின் பிரதி கிடைக்குமா?” என்று இப்போதும் விசாரிக்கிறார்கள். 15 வருடங்களுக்கு பிறகும் அதன் தேவை இருக்கிறது. 'ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு' மறுபதிப்பாய் வருவது மகிழ்ச்சி. என்னைப் போலவே, எழுத வாய்த்த எல்லோருக்கும், நல்ல பதிப்பகம் வாய்த்திட வேண்டும், சிறந்த இலக்கியம் வளர்ந்திட வேண்டும் என்பதே எனது விருப்பம். தொடர்ந்து வாசக நல்உள்ளங்கள் அன்பும் ஆதரவும் தரவேண்டும். அதோடு...

போதுமென்று நினைக்கிறேன்.

உங்கள் அனுமதியோடு
கண்களை துடைத்துக் கொள்கிறேன்.

புன்னகை மற்றும் நன்றி.


1 comment:

சிவகுமார் ஜெகதீசன் said...

உனது முதல் புத்தகத்தை படித்து எனது நண்பன் எழுதிய புத்தகம் என தெரிந்த எல்லா நண்பர்களிடம் மகிழ்ச்சி உடன் பகிர்ந்து கொண்ட நினைவுகள் இன்று வந்து விட்டது நண்பா