Thursday, July 18, 2019

மீண்டும் “ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு“

     “ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு“ புதுப்பொழிவோடு, ரசனையான அட்டைப்படத்தோடு மறுபதிப்பாக வந்திருக்கிறது. பிரதி கிடைக்குமா என்று நேரிலும், தொலைபேசியிலும் விசாரித்த அன்பு உள்ளங்கள் சந்தியா பதிப்பகத்தாரை தொடர்புகொண்டு புத்தகத்தைப் பெறலாம். அந்தரத்தில் நடப்பதும் வளையத்திற்குள் நுழைவதும் பார்க்கும் கண்கள் நூறு உண்டு என்ற நம்பிக்கையில்தான். கலைக்கும் கலைஞனுக்கும் கை தட்டலே உந்துவிசை. 


எனது கதைகளில் இருக்கும் அப்பாவித்தனமும், அங்கதமும், பக்கத்தில் - தரையில் உட்கார்ந்துகொண்டு “குடிக்க தேநீர் கிடைக்குமா?” என்று கேட்கிற, கிராமத்து ஆசாமியைப் போன்ற உரிமையும் எளிமையும் வாசகர்களை கவர்ந்திருக்க வேண்டும். கதையோ, காவியமோ, அச்சில் வந்த பிறகு கீர்த்தியும் பெரிது.. மூர்த்தியும் பெரிது.  விற்பனையாகும் ஒவ்வொரு பிரதியிலும் ஒரு கைதட்டல் ஓசையும், எழுத்திற்கான வெகுமதியும் இருக்கிறது.  

திடமான பின்புலமும், ஏந்திப் பிடிக்கும் இலக்கியக் கர்த்தாக்களின் முட்டுக்கொடுத்தலும், சினிமா போலொரு விளம்பர யுத்தியும், ஆரவாரமான வெளியீடும், வியாபாரத் தந்திரங்களும், கட்டுடைத்த எழுத்தென்ற கதையாடல்களும், இஸத்தின் மேல் கத்தி பட்டு உருகி வழிகிற கலையின் ரஸங்களும், மண் வாசனை, மரபின் தொடர்ச்சி, எங்கள் எழுத்து, இவனே எழுத்தன் என்கிற முத்திரை அடையாளங்களும், சிபாரிசுகளும் ஏதுமின்றி வாசகனே எனது விமர்சகன் என்கிற நம்பிக்கையோடு எப்போதும் போல வந்திருக்கிறது. உங்கள் ஆதரவுக்கும், மேலான கருத்துக்களுக்கும் நன்றி சொல்ல, எப்போதும் போல நானும் காத்திருக்கிறேன்.  முடிவாக, ஒரு நாடோடிப் பாடல் -

“ஓ.. காற்றே....
நீ கடந்து போனாலும் பரவாயில்லை..
உனது மென்கரத்தால்
எனது தலையை கலைத்துவிட்டுப் போ”

நன்றி.

ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு

பக்கம்: 248
விலை:ரூ.240

தொடர்புக்கு

சந்தியா பதிப்பகம்
77, 53வது தெரு
அசோக் நகர்
சென்னை - 83
044-24896979, 9841191397



No comments: