Saturday, July 6, 2019

பவுர்ணமி யுத்தம் -மின்புத்தகம்


     ஞாபக அடுக்கில் தங்கிவிட்ட சில மனிதர்களின் சிறு குறிப்பை, அவர்களை அசைத்துப்பார்த்த சில சம்பவங்களின் தெறிப்பை கதைகளாக எழுதியிருக்கிறேன். பத்து மனிதர்கள். பத்துக் கதைகள்.

     மகிழ்ச்சியோ, குமுறலோ.. அது பட்டவன் பாடு. அதை திரும்பத் திரும்ப எழுதி, அதைப் படித்து, எவன் பாடுகளையோ தன் பாடுகளாய் பாவித்து உணர்ச்சிவசப்பட்டு..., இதல்லாம் எதற்காக?  முகம் தெரியாத மனுசர்களின் கதைகளை அறியும் ஆர்வம் எங்கிருந்து கிளைக்கிறது?


    
பல்லாயிரம் வருடத்திற்கு முன்னிருந்த மூதாதைகளின் உயிர் வாழ்தலுக்கான போராட்ட அனுபவங்கள் மரபுப் பண்புகளாய் நமக்குள் இன்னமும் தொடர்கிறது. அதை நாமும் தவறாமல் சந்ததிகளுக்குக் கடத்திச் செல்கிறோம். அதுவே மனிதர்கள் எழுதிச் செல்லும், மனிதர்களுக்கான ஆதிக் கதைகள்.

     உள்ளக் குமுறலோ, சந்தோசக் கெக்களிப்போ... அது எதுவானாலும் அவையே நம்மை செலுத்துகிறது. சவால்களை சந்திக்கிறபோது, பல்லாயிரம் வருடத்திற்கு முன்பு கற்றுக்கொண்ட அவர்களின் அனுபவமே முதலில் துடித்துவந்து எதிர்கொள்ளும் ஊட்டத்தைத் தருகிறது. ஆதிமனிதன் வாழ்வதற்கான நுட்பங்களை மரபணுவில் எழுதி வைத்தான். அதுவே இன்றைக்கு இலக்கியத்திலும் தொடர்கிறது. மனிதர்களைப் பற்றிய எல்லா கதைகளுமே நாளைக்கான படிப்பினைகள்தான்.

    
ஆனந்த விகடனில் தொடர் சிறுகதைகளாக வந்து, 'மனம் மயங்கும் சிறுகதைகள்' தொகுப்பின் மூலம் பரவலான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற இருபது சிறுகதைகளின் பத்துக் கதைகள் இப்போது மின்புத்தக வடிவில். பக்கச் சிக்கனத்தை மனதில் கொண்டு முதல் பத்துக் கதைகள் வேறு ஒரு தொகுப்பாக (ஒற்றை மிகுதியானவன்) பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. நேரம் ஒதுக்கிப் படித்துப் பாருங்கள். கதைகள் கண்ணாடிகள் என்றால் அதில் தெரிவது உங்களுக்கு வேண்டப்பட்டவராகவும் இருக்கலாம்.
நன்றி!




No comments: