Sunday, August 6, 2017

புத்தகம் - புதுவரவு

புதிய வரவு


“செம்புலி வேட்டை” – “அழகிய லம்பன்” என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் புதுவரவாய் வந்திருக்கிறது. நண்பர்களோடு மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறேன். இரண்டு தொகுப்புக்களை ஒருசேர பார்த்ததும் பழைய நினைவுகள் பின்னுக்கு இழுக்கிறது. வேலைபார்ப்பது கணரகவாகன உற்பத்தி நிறுவனத்தில். இன்றைக்கும் இரும்படிக்கும் வேலைதான். இதன் நடுவே எழுதவும் வாய்த்திருக்கிறது. பொதிசுமக்கும் கழுதை, உணவு இடைவேளையில், வயலின் வாசிப்பது போல இதுவும் ஒரு இடுக்கனில் இன்புறும் நிகழ்வு. தூண்டல் இல்லாமல் துலக்கம் இல்லை. யார் என்னை தூண்டினார்கள் எது என்னை எழுதவைத்தது?
.
நிச்சயமாக அவை புத்தகங்கள்தான். ஆனால் எழுதியவை எல்லாம் இலக்கியமல்ல. சபையில் ஆடாமல் கூத்தனுக்கு என்ன பெருமை? அதற்கு ஒரு களம் வேண்டாமா? அந்த களம் அமைத்துக் கொடுத்தவர்கள் யார்?. யோசித்துப் பார்க்கிறேன்.

.
வேலைக்கு சேர்ந்த புதிதில், துண்டு துக்கடா கவிதை எழுதி, படிக்க ஆள் இல்லாமல் நானே படிக்கவும் வேட்கப்பட்டு அதை பதுக்கி வைப்பது என் பழக்கம். எல்லா கதை கவிதைக்காரர்களும் இங்கிருந்துதான் தொடங்குகிறார்கள். பெ.வீரக்குமார் என்றொரு நண்பன். என்னை ஒரு எழுத்தாளரிடம் அறிமுகப்படுத்தினான். (நண்பேன்டா) நம்மகூடதான் வேலை பாக்கறாரு,. ஒண்ணும் சொல்ல மாட்டாரு, மூஞ்சியில துப்ப மாட்டாரு. கேவலமா பாக்க மாட்டாரு. இப்படி உறுதியளித்து என் கவிதையை அவரிடம் காட்ட, அதை படித்துப் பார்த்துவிட்டு.. “ஆமா இது கவிதைதான்” என்று ஒப்புக்கொண்டது எனக்கான முதல் தூண்டல். கைநிறைய கத்தையாக A4 பேப்பர் கொடுத்து, இன்னும் நிறைய எழுதணும் என்றார். அன்றைக்கு எழுத ஆரம்பித்தது இன்றைக்கு எழுதியபடி.. புத்தகங்களை அடுத்து என்னை எழுதத் தூண்டிய அந்த ஆளுமை.. அண்ணன் போப்பு. Poppu Purushothamanமுளைத்துவந்த எழுத்திற்கு தண்ணீர் ஊற்றியவர்.
.
அண்ணன் போப்பு மூலமாக ஓசூர் தமுஎச அறிமுகமானது. சிறுகதைப் பட்டறை, கவிதை முகாம், கலை இரவு என்று அதன் நிகழ்வுகள் அத்தனையும் எழுதுவதற்கான தூண்டல்கள். எழுதியதை கொண்டு சேர்க்கும் சபையும் அதுதான். அங்கே கிடைத்த பாராட்டுக்கள், அரவணைப்புகள் எழுத்திற்கான உரம். நான் எழுதிய புலிக்குடும்பம் என்கிற கவிதையை பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி, என்னை கூச்சப்படவைத்து பல இலக்கிய ஆளுமைகளுக்கும் அறிமுகம் செய்து, என்னையும் எழுத்தாளன் என்று எண்ணிக்கொள்ளும்படி உசுப்பேற்றியவர் அண்ணன் ஆதவன் தீட்சன்யா.(@
Aadhavan Dheetchanya) பற்றிக்கொண்ட பதியனை பொத்திப் பாதுகாத்தவர். இங்கே கவனிக்க வேண்டியது இதுவரை நான் எழுதிய எதுவும் அச்சில் வரவில்லை.
.
“ஓசூர் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து ஒரு புத்தகமாக போடலாம், பதிப்பகத்தில பேசியாச்சி. ஒரு மாசத்தில தொகுப்பு வந்துடும். நீயும் உனது ஒரு கதையை கொடு” என்று அண்ணன் ஆதவன் சொல்ல, நானும் என்னிடமிருந்த ஐந்து கதைகளை கொடுத்து, இதில் கதை போல இருப்பதை எடுத்துக்கொள்ளுங்கள் என்றேன்.
.
எழுதுகிற எல்லாமே இலக்கியமென்று ஒப்புக்கொள்கிற மனோபாவம் எழுதுகிறவர்களுக்கு லேசில் வராது. எனக்கு வரவே வராது. மூன்று மாதம் போனது.
.
“தொகுப்பு எப்பங்ண்ணா வரும்?” என்று தயக்கத்தோடு கேட்டேன்.
.
“மொத்தம் ஏழு கதை வந்திருக்கு. அதுல அஞ்சி உன்னோடது.. ஏழு கதைய ஒரு தொகுப்பா போட முடியாது. உன்கிட்ட எத்தனை கதை இருக்கு?
.
- நெறைய இருக்குங்ண்ணா -
.
ஒண்ணு பண்ணலாம்.. ஒரு பதினைஞ்சி கதைய, உனக்கு பிடிச்சத, எடுத்துட்டு வா. அதையே தொகுப்பா போட்றலாம்..
.
இங்கே மீண்டும் கவனிக்க வேண்டியது. என்னுடைய ஒற்றை எழுத்தும் அப்போதுவரை அச்சில் வரவில்லை. பத்திரிக்கையில் மூன்று வார்த்தை கவிதைகூட வந்ததில்லை. ஒரு எழுத்தாளன், சிறுபத்திரிக்கைகளின் துணுக்குக் கவிதையிலிருந்துதான் துவங்குவான். அதன் பிறகு இலக்கியப் பத்திரிக்கை. அதன் பிறகு வாய்ப்பிருந்தால் வெகுஜனப் பத்திரிக்கை. அதன் பிறகு தொகுப்பு. அதுதான் மரபு.
எடுத்தஉடனே டாப் கியரில் சிறுகதைத் தொகுப்பா? விளையாட்டா? ஆனால் அது நிஜம். அண்ணன் சொன்னால் ஆம் என்பது என் குணம். நான் பதினைந்து சிறுகதைகளை தூசு தும்பு நீக்கி அவரிடம் சேர்த்தேன். ஒரே மாதத்தில் புத்தம் புதிய சிறுகதைத் தொகுப்பு என் கையில். ரதிப்பெண்கள் திரியும் அங்காடித் தெரு. – அதன் வீச்சு அது தந்த அங்கீகாரம் இன்றைக்கும் புது ரத்தம்.
.
பல ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும், சிறப்பாய் எழுதும், இலக்கியமே மூச்சு, எழுத்தே வாழ்வு என்று இருப்பவர்கள் கூட எழுதியதை தொகுப்பாய் கொண்டு வர முடியாமல் உள்ளுக்குள் தவிப்பதுண்டு. எழுதியது அச்சில் வந்தால்தான் எழுத்தாளன் என்கிற மனோபாவமும் இலக்கிய வட்டத்தில் உண்டு. கைக்காசு போட்டு தானே பதிப்பித்துக்கொள்வதும் எழுத்தாளர்களும் உண்டு. பொதுவாக புதியவர்களின் எழுத்தை புத்தகமாகப் போட பதிப்பகங்கள் தயங்கும். விற்காது. விலையாகாது. பத்து புத்தகம் விற்று மற்றவை தூங்கப் போய்விடும் என்று புறம் தள்ளுவார்கள். நான் அறிமுகமற்றவன். ஒற்றை எழுத்தும் பிரசுரமாகாதவன், ஆனாலும் என் சிறுகதைகளை தொகுப்பாக கொண்டு வந்து இலக்கிய உலகிற்கு என்னை அறிமுகப் படுத்தியது.. சந்தியா பதிப்பகம். Sandhya Pathippagam சாத்தியமாக்கியவர் நண்பர் சந்தியா நடராஜன். முளைத்த பதியனை மரமாக்கியவர்.
.
முதல்தொகுப்பின் கதைகளை படித்துவிட்டு விகடனில் இருந்து போன். முதலில் பாராட்டுக்கள். பிறகு, “பாஸ் விகடனில் ஒரு தொடர் எழுதுங்கள்.. ஆசிரியரிடம் பேசிவிட்டேன்” என்று இன்ப அதிர்ச்சி. நிஜமாகவே எனக்கு அது அதிர்ச்சிதான். கவிதை எழுதியிருக்கிறேன். கதை எழுதியிருக்கிறேன். தொடர் என்றால் எனக்கு வருமா வராதா? எடுத்த எடுப்பில் எனக்கு தொடர் எழுத வராது என்றேன். விகடனில் தனது படைப்புக்கள் வந்துவிடாதா என்று ஏங்காத இளம் படைப்பாளிகளே கிடையாது. இலக்கிய ஜாம்பவான்களுக்கும் இது பொறுந்தும். எனக்கோ, வாய்ப்பு கதவைத் தட்டுகிறது. நான் வராது என்கிறேன். சரி போ என்று விட்டிருக்கலாம். ஆனால் எனக்கு எது வருமோ அதுவே தொடர் என்று முடிவு செய்து கதைகளையே தொடராக எழுத வாய்ப்பு தந்தார்கள். 19 வாரம் 19 சிறுகதைகள். நான் விசாரித்தவரை அத்தனை தொடர் சிறுகதைகளை வாரா வாரம் போட்டது ஜெயகாந்தனுக்குப் பிறகு நானாகத்தான் இருப்பேன். அவருடையது பனிரெண்டு சிறுகதைகள் என்று சொன்னார்கள். ஒற்றைத் தொகுப்பில் அறிமுகமானவனை தமிழ்கூறும் நல்லுலகம் முழுமைக்கும் அறிமுகப்படுத்தியது விகடன். “தயங்காம எழுதுங்க பாஸ்.. சிறப்பா வரும்” என்று தட்டிக் கொடுத்து விகடனில் தடம் பதிக்க வாய்ப்பை உண்டாக்கித் தந்தவர், நண்பர் ரா.கண்ணன். Ra Kannan விருட்சத்தை வனமாக்கியவர்.
ஏழு சிறுகதைத் தொகுப்புக்கள், ஒரு நகைச்சுவை நாவல், ஒரு கவிதைத் தொகுப்பு, அதன் பிறகு தென்றல், ஆதிரா என்று சின்னத்திரை நெடுந்தொடர்கள் என்று என் எழுத்து தொடர்ந்தபடி இருக்கிறது.. தமிழக அரசின் சிறந்த சிறுகதை ஆசிரியர் விருது – (ஆலமர இடையழகு) சன் குடும்பத்தின் சிறந்த வசனகர்த்தா விருது – (தென்றல்) – இப்போது தமிழக அரசின் சிறந்த உரைநடை ஆசியர் விருது – (தென்றல்) இப்படி விருதுகளால் கவுரவிக்கப்படடிருக்கிறேன். இலக்கிய வட்டம், திரைத்துறை, சின்னத்திரையில் எனக்கு பல நண்பர்களை அள்ளித் தந்திருக்கிறது என் எழுத்து.
.
இப்படியெல்லாம் வாய்க்க ஆரம்பக்காரணமாய் இருந்தவர்களை மனம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும். இயல்பில் நான், நன்றிப் பெருக்கால் உணர்ச்சிவசப்பட்டு கண் கசிந்து சட்டையை ஈரமாக்கிக்கொள்ளும் இயல்பைக் கொண்டவன். இங்கே, முடிந்தவரை, மிகை உணர்ச்சி, மிகை நவிழ்ச்சி எதுவும் இல்லாமல், உணர்ச்சிவசப்படாமல் மனதில் பட்டதை பதிவிட்டிருக்கிறேன்.
.
அண்ணன் போப்பு, ஆதவன் தீட்சண்யா, நண்பர், சந்தியா நடராஜன், நண்பர் ரா கண்ணன் போன்றவர்கள் முன்னெடுப்பென்றால், என் உயரத்திற்கு உந்துவிசையாய் இருந்த கவிஞர் நண்பர் நா.பெரியசாமி Periyasamy Periyasamynatarajanபோன்ற நண்பர்களின் பல கைகள் உண்டு. அவர்களைப் பற்றியம் சொல்ல வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நல்லுறவாய் வாய்த்தவர்களைப் பற்றி சொல்லிச் செல்வதே சந்தோசம். .
தொகுப்பை படித்து உங்கள் கருத்தைச் சொன்னால் தண்யனாவேன்.
நன்றி
எழில்வரதன்.


No comments: