Wednesday, April 24, 2019

ஆலமர இடையழகு - மின்புத்தகம்




இது ஒரு புதிய முயற்சி. புதிய வரவு. “ஆலமர இடையழகு“ 2007-ல் முதல்பதிப்பு கண்டு, தமிழக அரசின் விருதையும் பரவலான வாசகர் கவனத்தையும் பெற்றுத் தந்தது. அதிலிருக்கும் பனிரெண்டு கதைகளை இரு தொகுதிகளாக்கி, (கொம்புள்ள குதிரை அடுத்து வரவிருக்கிறது) மின்புத்தகமாக கொண்டு வந்தாயிற்று.

அமேஸான் கிண்டிலில் புத்தகம் போடுவது என்பது சட்டை பேண்ட் போடுவது போல எளிமையானது. பரிட்சைக்கு படிப்பது போல வழிமுறைகளை தேடிப் பிடித்துப் படித்து, யூடியூப்பில் வீடியோ பார்த்து, ஆங்கிலத்திலும் தமிழிலும் அள்ளித் தெளிக்கிற அறிமுகமற்ற நண்பர்களின் அறிவுரைகள் வழிமுறைகளை உள்வாங்கி, தனியாக ஒரு கணக்கு வழக்கு வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கி, அட்டை வடிவமைத்து, அதற்கு தனி விடியோக்கள் பார்த்து, நடுநடுவே, இந்த ஆணியை பிடுங்க வேண்டுமா என்று ஆயாசமடைந்து, திட்டத்தை ஒத்திப்போட்டு, மிண்டும் தூசு தட்டி எடுத்து, விற்கிற மா தித்தனின் விடா முயற்சியோடு புத்தகமாகப் போட்டு முடிப்பதற்குள்,
இதற்கு பதிலாக நீட் தேர்வு எழுதி டாக்டராயிருக்கலாமே என்கிற எண்ணம் வருவதை தவிற்க முடியவில்லை. அமேஸானில் ஈயென்று ஈஸியாக மின்புத்தகம் போடுவது எப்படி என்று தனிப் புத்தகம் போடலாம். போட்டிருக்கிறார்கள்.
     ஆரம்பத்தில் கண்ணைக் கட்டும். அதன் பிறகு கண்ணை மூடிக்கொண்டு வரிசையாக புத்தகமாக பதிப்பிக்கலாம். வருமானமும் வரும் என்கிறார்கள். அடுத்தமுறை “ஆடி காரில் வரும் தமிழக எழுத்தாளர்” என்று என்னைப் பற்றிய உலகச் செய்திகளுக்கு கேரண்ட்டி என்கிறார்கள். யூடியூப்பில் கூட ஜோசியர்கள் அதிகம்.
     மின்புத்தகத்தில் இருக்கும் சௌகர்யம், உலகப் புத்தகமெல்லாம் உங்கள் கையில். நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் தோன்றியபோது விடுபட்ட இடத்திலிருந்து எந்த புத்தகத்தையும் படிக்கலாம். ஆனால் படிக்க வேண்டும் என்கிற மனோபாவம் கடுகத்தனையாவது தோன்ற வேண்டும். ஆர்வமுள்ளவர்கள், கீழிருக்கும் லிங்க்கை சொடக்கி, புத்தகத்தை வாசிக்கலாம். உங்களின் மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.



No comments: