Wednesday, April 24, 2019

கொம்புள்ள குதிரை - மின்புத்தகம்

முன்னுரை
கண்ணுக்கு மை தீட்டும் கதைகள்

நவீனகாலத்தில் பொழுதுபோக்க எத்தனையோ வந்துவிட்டது.. கையடக்கப் போன்களில் பார்க்கவும், கேட்கவும், ஓயாமல் பேசவும், எழுதவும், எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும், கதையளக்கவும், கதறவைக்கவும் சாத்தியமாகிறது. ஒரு புகைப்படம், சில நொடிக் காணொளிக் காட்சி உலகின் குதூகலத்தை, அடர்த்தியான துக்கத்தை சொடக்கும் நேரத்தில் இண்டு இடுக்குவிடாமல் கொண்டு சேர்த்து உணர்ச்சி வசப்படவைக்கப் போதுமானது.. இன்னமும் நான் ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்..?

ஒட்டுத்திண்ணையில், நட்சத்திர வெளிச்சத்தில், உறங்கப் போகும் முன் சொல்லப்பட்ட தூக்கம் வராத பாட்டிமார்களின் கதைகளுக்கான தேவை என்ன?
    
விசய ஞானம் அறிவாகாது. சம்பவங்களின் தொகுப்பு சரித்திரமாகாது. பசும் புல் பால் ஆகாது. புடம் போடாத வேர்கள் மருந்தாகாது. போலவே.. உரசப்படாத வாழ்க்கை நமக்குப் பாடம் ஆகாது.

இலக்கியம் என்பது வாழ்வின் வரவு செலவு பார்ப்பது. குத்திக் காட்டுவது. கூர் திட்டுவது. பழுது பார்ப்பது. அறம் சொல்வது..

புனைவென்பது கண்ணாடி பார்ப்பது. கண்ணுக்கு மை திட்டுவது. கனவுகளுக்கு வர்ணம் பூசுவது. கதைகளை வாசிப்பது கடந்த காலத்தை ஆசை போடுவது. நரை முடி கோதுவது. விடுபட்ட இடத்தை கற்பனையால் நிரப்புவது.

எழுத்தென்பது நெம்புகோல். அது பாறை உருட்டும். மனதைப் பிளக்கும். சண்டையிடும். சட்டை கிழிக்கும். வேட்டையாடும். தண்டனை தரும். அழவைக்கும். சிலபோது கண்ணீரை துடைக்கும்.

அது கோமாளி.  கூத்தாடும். கொக்கரிக்கும். மரம் தாவும். அகப்படாது.

           
இத் தொகுப்பில் உள்ள ஆறு கதைகளும் உங்களுக்கு கண்ணாடி காட்டும். கண்ணுக்கு மை தீட்டும். சிரிக்கச் சொல்லும்.. சண்டையிடும். முடி கோதும். விடுபட்ட இடத்தை கற்பனையால் நிரப்பும்.

புனைவுக்கு ஆயிரம் முகங்கள். நூறாயிரம் கண்கள்.   அது வாயாடி. கலகக்காரி. அது பூக்கும் காய்க்கும் பறக்கும் உதிரும் முளைக்கும் மீண்டும் பூக்கும். அது தொடர் சங்கிலி. மனித மனங்களில் சொற்களும் சிந்தனையும் இருக்கும் ரைக்கும் இலக்கியத்தின் தேவை தீர்ந்துவிடாது.

அன்புடன்...

எழில்வரதன்.



No comments: