Thursday, June 25, 2020

மாயத்தில் உண்டான நீரும், நெருப்பும் -

-------------------------------------------------------------------------------------------------------------------------

காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி; காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி!வீணாகப் புலம்பினதா லறியப் போமோ? விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்!கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக் குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்துநாணாம லொருநினைவாய்க் காக்கும் பொது, நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே!

-              அகத்தியர்
பிறப்பிலிருந்து இறக்கும் வரை உயிர்கள் ஏதாவதொன்றை தினம் தேடிக்கொண்டே இருக்கிறது. ஒரு தாயின் வயிற்றில் மனித ரூபமாய் பிறக்கிற எல்லோரும் முதலில் அம்மையின் கதகதப்பைத் தேடுகிறார்கள். அன்றிலிருந்து வாழும் காலம் முழுவதற்கும் ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். உண்பதற்கு உணவை, உடுத்த உடையை, நிம்மதியை, புரியாத வாழ்க்கையை, பாலைவனச் சந்தோசத்தை, அகங்காரம் தரும் பதவியை, நிறைவு தராத பணத்தை, சுயநலமிக்க புத்தியை, சொப்பனத்தில் மிதக்கும் முக்தியை, கிட்டாத ஞானத்தை, தள்ளாடவைக்கும் புகழை, கைக்கு எட்டாத கனவை, ஓட்டைக் காலணாவை, உடைந்த உறவை, மனைவியை, பிள்ளையை, ஆடம்பரத்தை, அலங்காரத்தை, அங்கீகாரத்தை, பறவையின் சங்கீதத்தை, தனக்கான கண்ணீரை, பாசத்தை, அன்பை, அழுகையை... இப்படி ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மனிதர்களின் உயிரியக்க ஆதாரம் தேடல்தான். மனிதர்கள் தேடி அலைகிற சாபம் பெற்றவர்கள்.
அவுரங்காபாத்தில் இருந்த ஒரு செல்வந்தர் இப்படித்தான் ஒருமுறை தொலைந்துபோன ஒன்றை தேடிக்கொண்டிருந்தார். அவர் தேடிக்கொண்டிருந்தது ஒரு குதிரையை! பணம்படைத்த மனித மனத்திற்கு சின்னதாய் ஒரு குணக் கோளாறு உண்டு. மனிதனைக் காட்டிலும் மனிதனின் மிதியடியே மதிப்பு மிக்கது என்று. அது நம்பிக்கொண்டிருக்கும் ஊரில் அவரது மனைவி மக்களும், உறவுக்காரர்களும் இவரைக் காணோமென்று தேடிக்கொண்டிருப்பார்கள். இவரோ நாள் கணக்கில் தொலைந்துபோன தன் குதிரையை தேடிக்கொண்டிருந்தார். மனைவி மக்களைவிட தொலைந்துபோன அவரின் குதிரை விலைமதிக்க முடியாத ஒன்றாய் அப்போதைக்கு அவருக்கு தோன்றியிருக்கலாம்.
எஜமானன் தொலைந்து போனான் என்று எந்தக் குதிரைகளும் அழுதுகொண்டிருக்காது. அவுரங்காபாத் செல்வந்தருக்கு குதிரையைக் காணோமென்றதும் கண்ணீர் வந்துவிட்டது. தொலைந்துபோன குதிரையின் கடிவாளத்தையும், அதன் சேணத்தையும் சுமந்துகொண்டு அவர் காடு முழுக்க குதிரையை தேடிக்கொண்டே இருந்தார்.
ஷீர்டியிலிருந்து யாருக்கும் சொல்லாமல் வெளியேறி வந்த பாபா அந்த வனப்பகுதியில்தான் அப்பொழுது இருந்தார். குதிரைச் சேணத்தையும், கடிவாளத்தையும் சுமந்தபடி, கண்ணில் கண்ணீரோடு இருக்கிற அவுரங்காபாத் செல்வந்தர் நிச்சயம் குதிரையைத்தான் தேடுகிறார் என்பது பாபாவுக்கு புரிந்தது. அவர் செல்வந்தரை கூவி அழைத்தார். ஓ சகோதரனே! நீ எதற்காக அழுதுகொண்டிருக்கிறாய்? இந்த வனத்தில் எதைத் தேடிக்கொண்டிருக்கிறாய்?” என்று அவரிடம் கேட்டார்.
மரத்தடியில் உட்கார்ந்திருந்த பாபாவை பரிதாபமாகப் பார்த்தார் பணக்காரர். நண்பரே! என் பேர் சாந்த் பாட்டீல். ஒரு வேலை விசயமாக வெளியூருக்கு போகவேண்டி குதிரையில் வந்தேன். ஓய்வெடுத்த இடத்தில் என் குதிரை காணாமல் போய்விட்டது. லட்சம் காசு கொடுத்தாலும் அந்த குதிரை கிடைக்காது. அத்தனை ஜாதிக் குதிரை! கடவுளென்று ஒன்று இருந்தால் சத்தியமாய் என் குதிரை கிடைக்க வேண்டும்...என்று சொட்டுகிற கண்ணீரோடு கதை சொன்னார்.
குதிரையோ, கழுதையோ, குரங்கோ, தேவாங்கோ... காலுல்ல எதுவாக இருந்தாலும் காணாமல் போவது இயல்பானதுதான். மனிதனுக்கு அடிமையென்று எந்த விலங்கையும் இறைவன் படைக்கவில்லை. அடிமைப்பட்ட விலங்கு நேரம் வாய்க்கிறபோது சுதந்திரமாய் தப்பிப் போய்விடுகிறது. மனிதனின் கையிலிருந்து ஒவ்வொரு மிருகம் தப்பிப் போகும்போதும் கடவுள் நிச்சயம் சந்தோசம் கொள்வார். இதை அறியாமல், அந்த கடவுள்தான் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு மிருகத்தை மீட்டுக்கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார் பணக்காரர்.
 “குதிரைதானே தொலைந்தது. போனால் போகட்டும் விடு சகோதரனே! உலகத்தில் வேறு குதிரைகளா இல்லை! விசுவாசமே இல்லாமல் தொலைந்து போன குதிரைக்காக நீங்கள் ஏன் கண்ணீர் விடவேண்டும்? குதிரை தொலைந்து போனால் கொள்ளும், புல்லும் லாபமென்று சந்தோசம் கொள்ளவேண்டும்!என்றார் பாபா.
பாபாவை வினோதமாகப் பார்த்தார், பாட்டீல். கசங்கி அழுக்கெடுத்த உடை போட்டுக்கொண்டு, மரத்தடியில் உட்கார்ந்திருக்கிற இந்த பக்கீருக்கு குதிரையைப் பற்றி என்ன தெரியும். ஒரு குதிரை வாங்குகிற காசில், இந்த பக்கீரைப் போல ஆயிரம் பக்கீர்களை வாங்கலாம். காசு கொடுத்து வாங்கிய எஜமானன் தொலைந்த குதிரையை தேடாமல் இருப்பானா?
உண்மைதான் சகோதரனே! மரத்தடியில் இருக்கிற மனிதனைவிட தொலைந்த குதிரை மதிப்பு மிக்கதுதான். ஆனால் தொலைந்த எந்த குதிரையும் எஜமானனை தேடிக்கொண்டிருப்பதில்லை. இங்கே, எஜமானனோ குதிரையை தேடிக்கொண்டிருக்கிறான். அடிமைதானே எஜமானனைத் தேடவேண்டும்! இப்பொழுது உண்மையான எஜமானன் யார் சகோதரனே...? குதிரையா, குதிரைக்குச் சொந்தக்காரனா?” பாபா, பாட்டீலிடம் கேட்டார்.
தான் மனசிற்குள் நினைத்ததையும் அறிந்து சொல்லி, அதன் பேரில் ஆயிரம் பதில்கள் கொண்ட கேள்வியும் எழுப்பிய பாபாவை அதிர்ச்சியோடு பார்த்தார் பாட்டீல். நான் குதிரையை தொலைத்த துக்கத்திலும், தேடி அலைந்த அலுப்பிலும் இருக்கிறேன் நண்பரே! என்னிடம் இப்படி குழப்பியடித்துப் பேசினால் எனக்கு வேதனையாக இருக்கிறது!!பெருமூச்சு விட்டு அலுத்துக்கொண்டார்.
அப்படியென்றால் வந்து இரண்டு வாய் ஹ_க்கா பிடிக்கலாமே சகோதரனே! ஹ_க்காவின் புகை உள்ளுக்குள் போனால் புத்துணர்ச்சி வரும். புத்தி தெளிவாகும். பிறகு குதிரை இருக்கிற இடம் தானே உங்களுக்கு தெரியும்!பாபா தன்னிடமிருந்து ஹ_க்காவை, பாட்டீலிடம் நீட்டி அவரை புகைபிடிக்க அழைத்தார்.
நீட்டப்பட்ட ஹ_க்காவையும், பாபாவையும் குழப்பத்தோடு பார்த்தார், பாட்டீல். இவரென்ன பைத்தியமா? _க்கா பிடிக்கவேண்டுமென்றால் நெருப்பு அவசியம். நெருப்பு இருந்தால்கூட ஹ_க்கா பிடிப்பதற்கு தண்ணீரில் நனைத்த துணி அவசியம். தண்ணீரும், நெருப்பும் இல்லாமல் ஹ_க்கா பிடிப்பது எப்படி?
இது முட்டாள்தனமான விளையாட்டாக இருக்கிறது, நண்பரே! தண்ணீரும், நெருப்பும் இல்லாமல் ஹ_க்கா பிடித்தால் அவனை பைத்தியமென்றுதான் சொல்வார்கள்.
உண்மைதான் சகோதரனே! தண்ணீரும் நெருப்பும் இல்லாமல், வெறும் ஹ_க்காவை மட்டும் பிடித்தால் அவனை பைத்திமென்றுதான் சொல்வார்கள். ஆனால் குதிரையே இல்லாமல் வெறும் கடிவாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு சிலர் குதிரை சவாரி செய்கிறார்களே... அவர்களை நாம் என்னவென்று சொல்வது?” கேட்டுவிட்டு பாபா சிரிக்க ஆரம்பித்தார்.
பாபாவின் ஞானம் மிக்க கிண்டல் வார்த்தைகளைக் கேட்டதும், பாட்டீல் மிகுந்த கலவரமாகிவிட்டார். பாபா போன்ற ஞானிகளிடமிருந்து வருகிற உள்ளர்த்தமிக்க வார்த்தைகளின் பொருளை புரிந்துகொள்கிற அளவுக்கு பக்குவம் பெற்றவரல்ல பாட்டீல். அறிவைப் பற்றவைக்கிற பேச்சும், ஞானத்தின் நெருப்பை மூட்டுகிற வார்த்தைகளையும் கேட்டால் அப்பாவி மனிதர்கள் கலவரமாகிவிடுவது தவிர்க்க முடியாது.
சிரித்தபடியே பாபா இன்னும் சொன்னார், “கடிவாளம் மட்டும் இருந்தால் போதும், குதிரை இல்லாமலே சவாரி செய்ய முடியும், காசு பணம் இருந்தால் மட்டும் போதும், அன்பும் கருணையும் இல்லாமலே மனிதனாக வாழ்ந்துவிட முடியும் என்று சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் சகோதரனே... அவர்களை நாம் என்னவென்று அழைப்பது?”
நண்பரே! உங்கள் பேச்சு எனக்கு புரியவில்லை. தொலைந்துபோன என் குதிரைக்கும், நீங்கள் சொல்கிற அன்பு கருணைக்கும் என்ன சம்மந்தம்? நான் குதிரையைத் தேடுவது குற்றமா? தொலைந்த பொருளை தேடுவதுதானே மனிதர்களுக்கு புத்திசாலித்தனம்?” பாட்டீல் சற்று கோபத்தோடு கேட்டார்.
 “குதிரை தேடுவதை நான் குற்றமென்று சொல்லவில்லை சகோதரனே! ஆனால் அதைவிட மதிப்பு மிக்க எத்தனையோ பொருட்களை மனிதன் தொலைத்துவிட்டான். அதையேன் நீ தேடவில்லை?” பாபா கேட்ட கேள்விக்கு பதிலொன்றும் சொல்லாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டார் பாட்டீல்.
பாபா வியாக்கியானங்கள் ஏதும் பேசுவதில்லை. பாபா தர்க்கங்கள் எதையும் செய்வதில்லை. போகிற போக்கில் வாழ்விற்கான சூட்சுமத்தை ஒற்றை வார்த்தையில் சொல்வதுதான் பாபாவின் மகத்துவம். அறிவுள்ளவர்கள் தன் அடுப்பிற்கான நெருப்பை அவர் வார்த்தையிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். பாட்டீலுக்கு பாபா பேசுகிற பேச்சின் அர்த்தங்கள் புரியவில்லை.
தன்னிடம் இல்லாத அறிவைத் தேடி ஒருத்தன் ஓடினால் அதை ஞானம் என்று ஒப்புக்கொள்ளலாம். தன்னிடம் இருப்பதையே இல்லை என்று நம்பிக்கொண்டு அதை வெளியே ஒருத்தன் தேடிக்கொண்டிருந்தால் அதை அறியாமை என்றும் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் தன்னிடம் இருக்கிற மதிப்பு மிக்க ஒன்றை, தன் அறியாமையாலும், அகங்காரத்தாலும் ஒருத்தன் வேண்டுமென்றே தொலைத்துவிட்டு அற்பமான ஒரு பொருளை தேடித் தேடி அலுத்துக்கொண்டால் அவன் செய்கையை என்னவென்று சொல்வது.
உடம்பும், மனசும், மூச்சுக்காற்றும் உள்ளவனாய் பிறப்பது போலவே அன்பும் கருணையும் கொண்டவனாகத்தான் மனிதன் பிறக்கிறான். வாழ்வின் நெருக்கடியால், அலட்சியத்தால், அறியாமையால், தலைக்கணத்தால் அவற்றை பாதியில் தொலைத்துவிடுகிறான். அன்பும் கருணையும்கூட தொலைந்து போன குதிரையைப் போன்றதுதான். குதிரை இல்லாமலே சவாரி செய்யலாம் என்பது போலத்தான், அன்பும் கருணையும் இல்லாமலே மனிதர்களாக வாழ்ந்துவிடலாம் என்று மனிதர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பசித்த உயிரைக் கண்டும் கொடுக்கிற மனமற்றவனாய் மனிதனை ஆக்கிவிடுகிறது அவனுடைய வாழ்வின் முறை. வெளிச்சமில்லாத சூரியனையும், இனிப்பில்லாத தேனையும், சுடாத நெருப்பையும், கூரையில்லாத வீட்டையும், அன்பென்ற குணமில்லாத மனிதனையும் என்ன பெயர் சொல்லி அழைப்பது?
அவசியமான ஒன்று தொலைந்தபிறகு வாழ்வதற்கான அர்த்தம் மாறிவிடுகிறது. ஆனால் அப்படி வாழ்வதுதான் வாழ்க்கை என்று வாழ்வின் நெருக்கடி மனிதர்களுக்கு போதிக்கிறது. காசு, பணம், வீடு, ஆடம்பரம், பதவி புகழ் என்று ஆயிரம் வெற்றியைச் சம்பாதித்தாலும் மனிதனுக்கு கடைசியில் வறட்டு வாழ்க்கைதான் மிஞ்சுகிறது. அவன் சலித்துப் போகிறான். அதன் பிறகுதான் நிம்மதி, நிறைவு, நிஜமான அமைதி என்று உண்மையான வாழ்க்கைக்காக ஏங்க ஆரம்பிக்கிறான். கருணையிலும், அன்பிலும்தான் அது இருக்கும் என்று தெரிந்து அதைத் தேட ஆரம்பிக்கிறான்.
_க்கா பிடிப்பதற்கு நெருப்பும் தண்ணீரும் அவசியமென்று தெரிந்த பாட்டீலுக்கு, மனிதனாக வாழ்வதற்கு எது அவசியமென்று தெரியவில்லை. தொலைந்த பொருளை தேடுவது மனித இயல்புதான். தேடல் ஒன்றே உயிரை உயிராய் வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் எதைத் தேடுவது, எப்படித் தேடுவது, எங்கே தேடுவது என்பதையெல்லாம் சொல்லிக்கொடுக்க மனிதர்களுக்கு ஒரு மேய்ப்பன் தேவையாய் இருக்கிறதே! அதை காது கொடுத்து கேட்டு, சரியான பொருளைத் தேடுவதும் அவசியமாய் இருக்கிறதே! ஆனால், பாபாவின் வார்த்தையில் இருக்கிற மறைபொருளை அறியவேண்டும் என்கிற ஆர்வம் பாட்டீலுக்கு இல்லை. அவருக்குத் தேவை... தொலைந்த தன் குதிரை!
பாபா வலிந்து கட்டிய கடுமையான வார்த்தையால் எதையும் போதிப்பதில்லை. அவர் வாழ்வதற்கான அடிப்படையை வாழ்ந்தே காட்டுகிறார். பாட்டீலுக்கு புரியாத ஒன்றை புரியவைக்க வேறு மார்க்கங்கள் இருக்கிறது.
                நெருப்பும் தண்ணீருமில்லாமல் ஹ_க்கா எப்படி பிடிப்பது என்ற குழப்பத்தில் இருந்த பாட்டீலைப் பார்த்து பாபா சொன்னார்: கவலைப்படாதே சகோதரனே! நெருப்பும் தண்ணீருமில்லாமல் ஹ_க்கா பிடிப்பது எப்படி என்பதை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன்!
பாபா தன்னிடமிருந்த ஒரு சின்ன பிரம்பை எடுத்து ஓங்கி தரையில் அடித்தார். அடித்த கணத்தில் கட்டாந் தரையில் இருந்து தண்ணீர் பீறிட்டு வந்தது. பிறகு இன்னொரு இடத்தில் பிரம்பால் அடித்தார். அங்கே சட்டென்று நெருப்பு மூண்டு எரிய ஆரம்பித்தது. பாபா பாட்டீலைப் பார்த்து சிரித்தார்: இப்பொழுது தண்ணீரும் நெருப்பும் வந்துவிட்டது சகோதரனே! வா ஹ_க்கா பிடிக்கலாம்!பாபா கூப்பிட்டார்.
பிரம்பால் தரையில் அடித்து, கட்டாந்தரையில் தண்ணீரையும், நெருப்பையும் வரவைத்த பாபாவின் அற்புதத்தைக் கண்டு பாட்டீல் திகைத்து உட்கார்ந்துவிட்டார். பாபாவோ அதிசயங்கள் ஒன்றும் நடக்காதது போலவே அற்புத நெருப்பில் ஹ_க்கா பற்றவைத்து, ஆச்சரிய தண்ணீரில் துணி நனைத்து பாட்டீலுக்கு ஹ_க்காவை புகைக்கக் கொடுத்தார்.
குதிரை தொலைத்தவனுக்கு நினைப்பெல்லாம் குதிரைதான் இருக்கும். இத்தனை சித்து வேலை தெரிந்த இந்த பக்கீருக்கு நிச்சயம் குதிரை இருக்கும் இடம் தெரிந்திருக்கும் என்று நம்பினார் பாட்டீல். ஹ_க்காவை புகைத்தபடி பணிவாக பாபாவிடம் கேட்டார்: நண்பரே! வெறும் தரையில் தண்ணீரையும், காற்றில் நெருப்பையும் வரவைத்த உமக்கு என் குதிரை இருக்கிற இடமும் நிச்சயம் தெரிந்திருக்கும். உயிருக்கு உயிரான என் குதிரை எங்கே இருக்கிறது என்று சொல். இல்லை, குச்சியைத் தரையில் தட்டி தண்ணீரையும் நெருப்பையும் வரவைத்தது போலவே என் குதிரையை வரவைக்க முடிந்தால் வரவைத்து, எனக்கு உதவு!பாட்டீல் கெஞ்ச ஆரம்பித்தார்.
பாட்டீலின் பேச்சைக் கேட்டதும் பாபா சிரிக்க ஆரம்பித்தார். மனிதர்களின் அறியாமையைக் கண்டால் ஞானிக்கு வருகிற கோபம்தான் சிரிப்பாக மாறிவிடுகிறது. தொலைந்த குதிரையை தேடித் தருவதிலும், வெறும் தரையில் தண்ணீரையும், காற்றில் நெருப்பையும் வரவைப்பதிலும் என்ன அற்புதங்கள் இருக்கிறது. மந்திர வித்தை காட்டவா பாபா இதைச் செய்தார்? அறியாமையாலும், அகங்காரத்தாலும் அன்பையும், கருணையையும் தொலைத்த மனிதன் நிம்மதி இழந்து அதை எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்கிறான். உண்மையான மனசோடு உள்ளுக்குள் தேடினால், உங்களை நீங்களே உரசிப் பார்த்துக்கொண்டால், இல்லா இடத்திலிருந்து தண்ணீரும் நெருப்பும் வருவது போலவே உள்ளுக்குள் இருக்கிற அன்பும் கருணையும் பீறிட்டு வரும் என்பதைச் சொல்லத்தான் பாபா இதை செய்து காட்டினார். பாபா நீரையும் நெருப்பையும் சூன்யத்திலிருந்து உண்டாக்கவில்லை. பூமியில் இருந்துதான் உண்டாக்கினார்.
பாட்டீலின் அறியாமையைப் பார்த்து பாபா சிரிக்க ஆரம்பித்தார். அலட்சியத்தில் தொலைத்த பொருட்களை அற்புதத்தால் வரவைக்க முடியாது சகோதரனே! உள்ளன்பும், பக்தியும், அக்கறையும் இருந்தால் எந்தப் பொருளையும் நாம் தொலைக்க மாட்டோம்! உன் பிரியமான குதிரை உன் பக்கத்திலேயேதான் இருக்கும் நீயே தேடிப்பார்!பாட்டீலிடம் சொன்னார் பாபா.
என்ன நண்பரே! என் காலடிக்கு கீழே நிழலைப் போல என் குதிரை இருக்கும் என்று சொல்கிறீர்களே... இந்த வனத்தில் இத்தனை நாட்களாக நான் குதிரையைத் தேடாத இடமுண்டா? பார்க்காத புதருண்டா, எங்கேயும் என் குதிரையை காணவில்லை நண்பரே!பாட்டீல் ஏமாற்றத்தோடு சொன்னார்.
 “எல்லா இடத்திலும் தேடிவிட்டாயா சகோதரனே! கடவுள் காணாத இடத்தில்கூட தேடிப் பார்த்துவிட்டாயா? நீ பார்க்காத இடம், கடவுள் மட்டுமே அறிந்த இடமென்று ஒன்று இந்த உலகத்தில் உண்டு, அதை புரிந்துகொள் சகோதரனே! கடவுளென்பதும் கருணையென்பதும், அன்பென்பதும், ஞானமென்பதும், வாழ்வென்பதும்கூட தொலைந்துபோன குதிரை போன்றதுதான். விசுவாசமாய் அதை தேடவில்லையென்றால் அதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது!பாபா சொன்னார்.
ஆ! நண்பரே! வரட்டுத் தத்துவம் தொலைந்த குதிரையை கண்டு பிடித்துத் தராது! தத்துவங்களும் சரி, வாழ்வின் சிக்கலுக்கான வழிகளும் சரி. மிக எளிமையாக இருக்க வேண்டும். எங்கே, என் குதிரையை கண்டு பிடிக்க எளிய வழி ஒன்றை சொல்லுங்கள் பார்க்கலாம்! அப்பொழுது உங்களின் தத்துவத்தை நான் ஒப்புக்கொள்கிறேன்!பாட்டீல் தீர்மானமாகக் கேட்டார்.
பாபா சிரிக்க ஆரம்பித்தார். எளிய வழியா? தொலைந்துபோகாத குதிரையை எதற்காக தேடிக்கொண்டிருக்க வேண்டும். உன் குதிரை எங்கேயும் தொலைந்து போகவில்லை! அதோ அந்த புல்தரையின் சரிவில்தான் மேய்ந்து கொண்டிருக்கிறது. போய் பிடித்துக்கொண்டு வா!பாபா கட்டளையிட்டார்.                                                
இப்பொழுது பாட்டீல் சிரிக்க ஆரம்பித்தார். இந்த புல்தரையில் ஓராயிரம் முறை குதிரைக்காக தேடியாகிவிட்டது. நாள் கணக்கில் காணாத குதிரை, தேடிய இடத்தில்தான் இருக்குமென்றால் தேடியவன் பைத்தியமா? ஆனால் பாபாவின் முகத்தில் இருந்த சர்வ லட்சணத்தைக் கண்டதும் வேறு வழியில்லாமல் புல்தரையின் சரிவிற்கு போனார் பாட்டீல். அங்கே நிஜமாகவே தொலைந்த குதிரை, தொலையாத குதிரை போலவே வெகு இயல்பாக மேய்ந்து கொண்டிருந்தது. அற்பற்களின் கண்ணுக்கு நிஜம் தெரியாமல் போகுமென்று பக்கீர் சொன்னது உண்மைதானா? குதிரையை பிடித்துக்கொண்டு வந்த பாட்டீல் பாபாவின் காலில் பொத்தென்று விழுந்தார், “நண்பரே! நிச்சயம் நீ கடவுளின் அம்சமாகத்தான் இருக்கவேண்டும். காணாமல் போன என் குதிரையை தேடாமலேயே கண்டுபிடித்த மகான் நீ! என்னை ஆசீர்வதிக்க வேண்டும்!என்றார்.
 “எழு பாட்டீல்! எதற்காக காலில் விழுகிறாய்! சாதாரண விசயங்களுக்கு மனிதர்கள்தான் மயங்குகிறார்கள். குதிரைகளைப் பார். அது மயங்குவதுமில்லை, எவர் காலிலும் விழுவதுமில்லை!பாபா சொன்னார்.
நண்பரே! நீங்கள் கடவுளின் அவதாரமென்று நிச்சயமாகத் தெரிகிறது. பக்கத்திலிருக்கிற டூப் என்ற கிராமத்தில்தான் நான் இருக்கிறேன். நீங்கள் என் வீட்டிற்கு விருந்தாளியாக வரவேண்டும்!என்று வேண்டினார், பாட்டீல்.
குழந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்த தாய், ஏதாவது ஒரு காரணத்தை சாக்கிட்டு வீட்டிற்கு ஓடுகிற வழியைத்தான் பார்ப்பாள். ஷீர்டியை விட்டு வெளியே வந்த பாபாவுக்கு மீண்டும் ஷீர்டிக்கு செல்ல ஒரு காரணம் தேவையாய் இருந்தது. மறுப்பு ஏதும் சொல்லாமல், பாட்டீலின் வீட்டிற்கு விருந்துக்காரனாக போய் தங்கினார் பாபா. சில நாட்களிலேயே பாட்டீலின் உறவுக்காரரின் மகள் திருமணம் ஒன்று வெளியூரில் நடப்பதாய் இருந்தது. திருமணத்திற்கு நீங்களும் வரவேண்டும், நண்பரே!பணிவோடு விண்ணப்பித்தார் பாட்டீல்.

கண்டிப்பாக வருகிறேன் சகோதரனே! உங்கள் குதிரை தொலைந்ததும், நான் அதை கண்டுபிடித்துக் கொடுத்ததும், விருந்தாளியாக நான் இங்கே தங்கியதும், இப்பொழுது திருமணம் நடப்பதும் எல்லாம் அதற்காகத்தானே... கண்டிப்பாக வருவேன்!என்று சூசகமாகப் பேசினார் பாபா. பாபாவின் சூசகப் பேச்சிலும் ஒரு அர்த்தம் இருந்தது. காரணம்... பாபா போகவிருந்த திருமணம் நடக்க இருந்த இடம், ஷீர்டி!

- எழுத்தாக்கம் – வரதராஜன்
- மொழி ஆக்கம் - விஜயலட்சுமி


No comments: