Sunday, June 6, 2021

கடைசி கேள்வி - கவிதை


கடைசி கேள்வி

------------------------------

மூச்சு முட்டுகிறது

உயிர் தப்பிக்கப் போராடுகிறேன்.

ஆயிரம் பிறை கண்ட

கழுதைகளுக்குத் தெரியாத

அர்த்தம் எனக்கு மட்டும்

புரியப் போவதில்லை.

இடுக்கில் மாட்டிக்கொண்ட

வாழ்க்கையை

நெம்புகோள் கொண்டு

வெளியே எடுக்க முயல்கிறேன்.

பார்க்க கேவலமாய்

இருக்கிறது.

 

அடிபட்ட தவளை

பொறியில் சிக்கிய எலி

பின்னங்கால் நசுங்கிய நாய்

கொத்தப்பட்ட ஈசல்

உடைந்த முட்டை

கிழிந்த சட்டை

இப்படி இருக்கிறது வாழ்க்கை

ச்சீ போ சவமே.

 

சிறுநீர் முட்டுகிறது.

வேதனை தீர

பெய்ய வேண்டும்.

அதன் பிறகு

தாகம் தீர குடிக்க வேண்டும்.

அதன் பிறகு

கொஞ்சம் சாப்பிட வேண்டும்.

அதற்கு முன்

படைத்தவனைக் கூப்பிட்டு

சவுக்கால் அடிக்க வெண்டும்.

 

இரண்டு கால்களுக்கு நடுவே

கூர்மையான

கொம்புகளை பாய்ச்சிய

அந்த எருமையை

கடவுள் என்று

 கும்பிடமாட்டேன்.

 

கத்தி இருக்கிறது.

நெருப்பு இருக்கிறது.

கொஞ்சம் உப்பும்

நிறைய மிளகாய் பொடியும்

கைவசம் இருக்கிறது.

உண்பதற்கு முன்

ஒன்று கேட்கவேண்டும்.

‘ மனிதர்கள் என்கிற

அற்ப உயிரிணத்தை

உருவாக்குவதற்கு முன்பு

நீ எங்கே இருந்தாய்?

எதைத் தின்றாய்?’

 

 ‘தொடைக்கு நடவே

இடைக்கு கீழே

உறங்கிக்கொண்டிருக்கும்

உனது உற்பத்திக் கருவியை

முதன் முதலில்

நீ எங்கே வைத்தாய்?

முகத்திற்கு முன்புறத்திலா

இடுப்பிற்கு பின்புறத்திலா?’

 

நான் உயிர் என்பதால்

உயிர்வாழ்தல் அவசியம் என்பதால்

நீ கடவுள் என்பதால்

நான் வேட்டையாடும்

மிருகம் என்பதால்

நான் கழுதைகளின்

விட்டைகளை

உண்ணப் போவதில்லை.

மாறாக

கழுதைகளை உண்ணப் போகிறேன்.

 

எனது கடைசி கேள்வி இதுதான்

நான் பிறப்பதற்கு முன்பு

நீ ஏன் கழுதையாகப் பிறந்தாய்?

எனது கையில்

கத்தியை ஏன் கொடுத்தாய்.

மனிதன் என்ற பெயரில்

கொன்று புசிக்கும் மிருகமாய்

எனை ஏன் படைத்தாய்?

விடை இருந்தால் பதில் சொல்.

தவறிருந்தால் எனைக் கொல்.

 

ஒன்று மட்டும் உறுதி.

இறப்பதற்கு முன்பாக

உனை முழுதாக

கொன்று புசித்துவிடுவேன்.

மனிதன் என்பவன்

வெறும் உயிரல்ல.

சதையை புசிக்கும் ரத்தக் காட்டேரி.

படைத்தவன் நீதான்.

அதற்கு இரையும் நீதான்.

 

கடவுளோ மிருகமோ

கண்ணில் படுபவன்

யாராயிருந்தாலும்

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நான் கடவுள் அல்ல.

பசித்திருக்கும் மனிதன்.

கொல்லப் படுபவன் அல்ல.

கொன்று புசிப்பவன்.

சாட்சியம் வேண்டுமா?

யாராக இருந்தாலும்

எவராக இருந்தாலும்

நாற்றமெடுக்கும்

அந்த வாயை

கொஞ்சம்  அகண்டு பார்

உனக்கும் இரண்டு

கோரைப் பல் இருக்கும்.

 

வெட்கமாய் இருக்கிறதா

கத்தியை வீசிவிட்டு

துருத்திக்கொண்டிருக்கும்

உனது கோரைப் பல்லை

மறைத்துக்கொள்.

திறந்திருக்கும் அகண்ட வாயை

பிறருக்கு காட்டாவிட்டால்

அந்தக் கழுதை உனக்கு புன்னகைக்கும்.

நீயும் புன்னகைக்கலாம்.

 

சந்தேகமே வேண்டாம்

கடவுள் என்பவன்

மனிதர்களைப் போலவே

விவஸ்த்தையற்ற

வெட்கம்கெட்ட

சிரிக்கும் கழுதைதான்

111

4.06.2021

No comments: