Sunday, June 6, 2021

கோமகனின் தாய். - கவிதை


கோமகனின் தாய்.

-------------------------------

முன்பொரு காலத்தில்

கணபதிக்கு சாப்பிடத் தெரியாது

அவன் சிறு வயது பிள்ளை என்பதால்

அம்மா அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

 

பின்பொரு காலத்தில்

கணபதிக்கும்

சித்ராவுக்கும்

திருமணம் ஆனது.

 

சில ஆண்டு கழித்து

கணபதிக்கு உஷை பிறந்தாள்.

 

லோகாம்பிகை

கணபதிக்கு

அம்மா என்பதால்

கணபதியின் பிள்ளை

லோகாம்பிகைக்கு பேத்தி ஆனாள்.

 

கணபதியை போலவே

உஷைக்கும் சாப்பிடத் தெரியவில்லை.

உஷை சிறுமி என்பதால்

அவளுக்கும்

லோகாம்பிகை ஊட்டி விட்டாள்.

 

சித்ரா கோமானின் மகள் என்பதால்

கணபதி அவளுக்கு

பிறந்தநாள் பரிசாக

உயர் ரக நாய் ஒன்றையும்

அமர்ந்து செல்ல கார் ஒன்றையும்

காதலோடு அன்பளித்தான்.

 

சித்ராவை போல

லோகாம்பிக்கைக்கு

கார் ஓட்டத் தெரியவில்லை.

உஷை கார் ஓட்டக் கற்றுக்

 கொண்டாள்.

கணபதி ஆகாய விமானத்தில்

தேசம் கடந்தான்

கோடீஸ்வரன் ஆனான்.

 

காலம் பொல்லாதது

உடம்பும் மனதும் முன்போல் இல்லை

முன்பிருந்த ஞாபகம்

முன்பின்னாக மாறி மாறி மறைந்தது.

லோகாம்பிகைக்கு

கணபதியைத் தவிர

வேறு பெயர் நினைவில் இல்லை.

 

மூன்று வேளை உணவு

ஒரு வேளைக்கு குறைந்தது.

தண்ணீர் டம்ளர் தடுமாறி விழுந்தது

 கைகளின் நடுக்கம்

சோற்றை இறைத்தது.

 

செவிலித் தாய் பரிமாறும்

உப்பில்லா சப்பாத்தி

உளரவைத்த பழங்கள்

இரைச்சியும் மீனும்

கழுத்தை நெறுத்தது.

 

கணபதிக்காக

“சாப்பிடு… சாப்பிடு” என்ற வாய்கள்

இப்போது அவளுக்கோ

“போதும்… போதும்” என்றது.

 

ஒருவாய் கஞ்சி

ஒரு  சொல் அன்பு

அருகே இருக்க கணபதி

அது போதும் அவளுக்கு

 

 லோகாம்பிக்கைக்கு

இப்போது

தொன்னூறு வயது என்பதால்

கணபதியைப் போலவே

லோகாம்பிகைக்கும்

இப்போது 

சாப்பிடத் தெரியவில்லை.

ஊட்டிவிட கணபதியும் இல்லை.

 

கணபதி விமானத்தில் பறந்தான்.

சித்ரா நாயை குளிப்பாட்டினாள்

உஷை பந்தையக் கார் ஓட்டினாள்.

 

லோகாம்பிக்கை ஞாபகம் இருக்கிறது

அந்தக்காலத்தில்

கணபதியை வா என்றால் வருவான்

இப்போது வா என்றாலும் வரமாட்டான்.

அது என்ன கூப்பிடும் தூரமா?

கணபதி இருப்பது

குடும்பத்தோடு அமெரிக்காவில்.

அங்கே நாய் இருக்கிறது.

தாய்தான் இல்லை.

111

6.6.2021

No comments: