Sunday, June 6, 2021

பெண் உலகம் - கவிதை


பெண் உலகம்

---------------------------

சாகும்வரை

உண்பதை நிறுத்தப் போவதில்லை

உயிரோடு இருக்கும் வரை

போராட்டம் நிற்கப் போவதில்லை.

 

எனக்கு எதிரிகள் உண்டு

அவர்களோடு உரசலும் உண்டு

எனக்கு நண்பர்கள் உண்டு

அவர்களோடு மோதலும் உண்டு.

 

தூங்கும் போதும் கனவில்

பேசிக்கொண்டிருப்பேன்

காதலிக்கும் ஆண்களோடு

ரகசியமாய் உரையாடுவேன் .

 

கவிதை எனக்கு சமைக்கத் தெரியாது.

மழைக்கால சூரியனை,

அது காட்டும் வானவில்லை,

தூரல் நேர குளிரை,

சுள்ளி நெருப்பின் கதகதப்பை

ரசிப்பதில் ஆர்வமுண்டு.

 

உழைப்பும் களைப்பும்

எனது வேர்வையில் இருக்கிறது.

 

போர்வையில் உறங்குவேன்

குழந்தைக்கு தாயாவேன்

குட்டிக் குழந்தைக்கும்

அவளோடு அவனுக்கும்

பால் புகட்டுவேன்.

 

நான் மேய்ச்சல் புல்வெளியின் 

போர்க்காலக் குதிரை

என்னிடம் ஆயுதமில்லை

பதிலுக்கு நகம் வளர்ப்பேன்

ரசனைக்காக கூந்தல் வளர்ப்பேன்

அதில் மலர்களை சூடுவேன்.

 

ஆயிரம் பெண்கள்

ஆயிரம் ஆண்கள்

அங்கே நான்

தனித்திருக்கும் வேங்கைப் புலி.

காட்டுக்கு காவல் இருப்பேன்

எனக்கான சமூகம் வளர்ப்பேன்.

கோயிலின் கர்பக் கிரகத்தில்

நான்தான் மாயா தேவி.

 

நான் ராணித் தேனீ

சமயத்தில் வேட்டை மிருகம்

இது எனக்கான உலகம்

அங்கே ஆண்கள்தான் அடிமைகள்.

 

நான் ராஜநாகம்

எனக்கு பற்கள் உண்டு

அதற்குள் விஷமும் உண்டு.

 

எனக்குள் இத்தனையும் உண்டு

ஒரே ஒரு வார்த்தை

“ நீ பொட்டைச்சி ”என்கிற

ஒரு வார்த்தை போதும்

கூந்தல் மலர் வாடுவதற்கு முன்பு

கூரிய பற்களால்

குரல்வளை கவ்வுவேன்.

 

நீ எதிரியென்றால்

நான்தான் உனது இரை

நான் உண்டு உயிர் வளர்க்கும்

வேட்டையாடும் விலங்கு

சாகும்வரை

நான் உண்பதை நிறுத்தப்போவதில்லை.

 

நான் அச்சமில்லா உயிரிணம்

இந்த உலகத்தை உருவாக்க

எனக்கு ஒரே ஒரு முட்டை போதும்.

 

 

111

6.6.2021

No comments: